புதன், 8 அக்டோபர், 2014

ஆசை யாரைத்தான் விட்டது?!.....

சமீபகாலமாகத் தில்லைஅகத்தார்களுக்கு ஒரு ஆசை வந்துவிட்டது!  என்ன ஆசை? சற்றுப் பொருங்கள்!  அது ஒரு வினோதமான ஆசை!  தில்லைஅகத்தார்கள் கூகுள் அக்ஷய பாத்திரத்தைத் தோண்ட, அலாவுதீனின் அற்புத விளக்கு போல எண்ணற்ற வலைத்தளங்களை அள்ளிக் காட்டியது!  அப்படித் தாவித் தாவிப் போன போதுதான் தெரிந்து கொண்டனர், எத்தனை எத்தனைக் கவிதைகள், இலக்கியங்கள், இலக்கணங்களைச் சொல்லும் வலைத்தளங்கள்!  தில்லைஅகத்தார்களுக்கு அப்படியே மனம் எழுச்சியுற்றது!

விஜு ஆசான், சகோதரிகள் அம்பாள் அடியாள், இனியா, இளமதி, தேன்மதுரத் தமிழ் க்ரேஸ், அருணா செல்வம், மைதிலி,  நம் புலவர் ஐயா, ரமணிஜி, மாயவரத்தான், தளிர் சுரேஷ், கவியாழி,  இன்னும் நிறைய சகோதரர்கள் எல்லோரும், கவிதையை அருவியாகக் கொட்டி விடுகின்றார்களா?!. அதுவும் இந்த ஊமைக் கனவுகள் விஜு ஆசான் அவர்களின் வலைத்தளத்தைக் கண்ட பின் ரொம்பவே துடித்தல் தில்லைஅகத்தார்களுக்கு! .அதையெல்லாம் வாசிக்கும் போது தில்லைஅகத்தார்களுக்கும் சிறிது ஏக்கம்! .அதுலயும் இந்த மைதிலி சகோதரியும், பாண்டியன் சகோதரரும் கணக்குப் பயிற்சி பத்தி பதிவு போட்டாலும் போட்டார்கள் நம் விஜு ஆசான் இருக்கின்றாரே உடனே அந்தக் கணக்கைப் பற்றி, இரட்டுற மொழிதல் என்றெல்லாம் சொல்லி கவி, இலக்கியம் பேசுகின்றார்! அதன் நடுவில் இலக்கணம் வேறு! அதில் மயங்கிய இந்தத் தில்லைஅகத்தார்கள், “நாம் நம் தூர்தர்ஷன் போன்று அப்படியே இருக்கக் கூடாது” என்று ஒரு ஞான ஒளி ஏற்பட வந்தது வினை!  தமிழுக்கும், வாசிப்பவர்களுக்கும்! 

“அடடா, நம் வலைத்தளத்தில் கவிதை எதுவுமே எழுதவில்லையே, கவிதை என்று தலைப்பு மட்டும் பந்தாவாகப் போட்டு வைத்திருக்கின்றோம்” என்ற ஒரு ஆதங்கத்துடன் “சரி நாமும் கவிதை எழுதினால் என்ன” என்ற வேகம் எழ, உடனே எழுதுகோல், காகிதம் என்று கீதா உட்கார்ந்தாள்.  ஒரு பால்பாயின்ட் பேனா தீர்ந்து, குப்பைக் கூடை காகிதச் சுருள்களால் நிரம்பியதே ஒழிய கவிதை பிறக்கவில்லை! சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! (அந்த எழுது கோல் ஒரு மாயக் கோலாக இருந்திருக்கக் கூடாதோ?!)

“நமக்கெதற்கு இந்த வீண் ஆசை? நமக்கு எது எழுத வருகின்றதோ அதை எழுதிவிட்டுப் போவோமே!” என்று துளசி சொல்ல, கீதாவுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது! 

“அதெப்படி வராது என்று நீ சொல்லுவாய்? எப்பொழுதும் “நீ எழுது” என்று தானே சொல்வதுண்டு? பார் இன்றைக்கு இல்லையென்றாலும் ஒரு நாள் எழுதுவேன்” என்று வீர சபதம் வேறு! நல்ல காலம்! தமிழ் படத்தில் வருவது போல் மின்னல், இடி ஒன்றும் எழ வில்லை!  அசரீரி எதுவும் கேட்கவில்லை! நேரம் சரியில்லை போலும்!  யாருக்கு? தில்லைஅகத்தாருக்கோ? இல்லை வாசகர்களுக்கோ?

“சரி! என்ன செய்யலாம், நம் வாத்தியார் பாலகணேஷ், தனது வலைத் தளத்தில் “கவிதை எழுதுவது எப்படி” என்று  ஒரு இடுகை முன்பே போட்டிருக்கின்றார்!.  அதில் எத்தனை எளிமையாகச் சொல்லி இருக்கின்றார் தெரியுமா? அவருக்கும் கவிதை எழுதவாராது என்று சொல்லி விட்டு ரொம்பவே அழகாக எழுதுகின்றார்!. அதைப் படித்துவிட்டு எழுதினால் ஆயிற்று” என்று துளசி சொல்ல

"எதை?  அவருடைய பதிவையா? சுடச் சொல்கின்றாயா?"

"ஐயோ! நீ புரிந்து கொண்டது அவ்வளவுதானா?  நான் சொல்லியது அதைப் படித்துவிட்டு நாமே கவிதை எழுதலாமே என்றுதான்." 

"அது எல்லாம் சரிதான் துளசி! எழுத ஆசை இருந்தாலும், பயமும் கூடவே எழுகின்றது! சமீபத்தில் வாத்தியார் அவர்கள் ஒரு போஸ்டர் (எங்கள் அபிப்பிராயத்தில நல்ல ஒரு போஸ்டர்த்தான்) வடிவமைத்து இட, அது விமர்சிக்கப்பட்டது போல், நாமும் கவிதை என்று எழுதப் போக அது எல்லோருக்கும் உரைநடை என்று புரிந்து விட்டால்?! வேறு விதமான விமர்சனமாகிவிடுமே!"

என்று தில்லைஅகத்தார்களுக்கு ஒரு பயம் எழுந்தது உண்மைதான்! என்றாலும் வீறு கொண்டு எழுந்து, வந்தது வரட்டும்!  வேறு விதமாக வந்தாலும் அதையும் நல்ல விதமாக எடுத்துக்கொள்ளலாம் என்று ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட விரைந்தார்கள்! ஒருவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு பின்வாங்கிவிட்டார்!

வலைஅன்பர் படைக்கின்ற கவிதைகள்
சிலை வடித்திடும் சிற்பியைப் போல்
தமிழ்த் தாயை அழகிய வார்த்தைகளால்
தகதகவென அலங்கரிப்பது போல்
அலங்கரிக்க இயலவில்லை!
புலமை இல்லை என்பதனால்!
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்று
ஏதோ புனைந்திட முனைந்தோமே!
--------------------------------------------------------------
எண்ணங்கள் எழுந்தன
சுண்ணாம்பாய் எரித்தது
அவனது பிரிவு!
-------------------------------------------------------------
வருவேன் என்றான்
கருகிப் போனான்
கருவாய் வந்தான்.
----------------------------------------------------------------------
அவளும் நோக்கினாள்
அவனும் நோக்கினான்
நோக்கியாவை.
-----------------------------------------------------------------
ஆகஸ்ட் 15
தலைநகரில் கொடியேற்றம்
தென்கோடி கிராமத்தில்
குடியானவன் தற்கொலை!
----------------------------------------------------------------


மின்னல்

வானம் பூமியின் அழகில் 
மயங்கி எடுக்கும்
ஃபோட்டோ ஃப்ளாஷ்.

ஏழையின் குடை

விண்ணில் மட்டும்தான்
நட்சத்திரங்களா
என் குடையிலும்தான்
நட்சத்திர பங்களா!


பூமித்தாய் பொறுமையானவள்!

விண்வெளியில் சூரிய குடும்பம்
சூரியத் தலைவனிடம்
பூமியின் புலம்பல்
நம் குடும்பத்தில்
நான் மட்டும்தான்
குழந்தைகளைச் சுமக்கின்றேன்
மற்றவர்களும் சுமக்கலாமே!
செவ்வாய் கோளுக்குக் கோபம்!
என்னிடம் வசதியில்லை என்றேன்!
உன் குழந்தைகள் நம்பவில்லை!
சந்தேகப் பிராணிகள்!
இன்று மங்கள்யாண் வந்திருக்கிறது!
வேவு பார்க்க!
மற்ற கோள்களும் ஆமோதிக்க
பூமித் தாய் பொறுமையானவள்தான்
சூரியனிடம் எடுத்துரைத்தது!
என் குழந்தைகளுக்கு
இருப்பிடம் கொடுத்தேன்!
சொத்துகள் சேர்த்தேன்!
சொத்துகளைச் சுரண்டி அழிக்கின்றனர்!
குழந்தைகள் எழுப்பும் புகையினால்
மூச்சுத் திணறுகின்றது!
வயதானத் தாயானேன்!
அவர்கள் என்னைக் கவனித்தாரில்லை!
பூமித்தாய் பொறுமையானவள்தான்!
சூரியன் பகன்றது!
நீதான் அவர்களை எச்சரிக்கின்றாயே!
சுனாமி, பெருங்காற்று, புயலென்று
சீறுகின்றாயே!
நிலநடுக்கமென்று நடுங்குகின்றாயே!
எரிமலையாய் பொங்குகின்றாயே!
பூமித் தாய்க்கு ஆதங்கம்!
சீறிப், பொங்கிப் பயனில்லை!
என் குழந்தைகளுக்குப் பயமில்லை!
தாய் என்று உணர்ந்தாரில்லை!
சுயநலவாதிகளாய் மாறிவிட்டனர்!
பூமித்தாய் பொறுமையானவள்தான்!
தாயின் கண்ணீர் பெருகுகின்றது!
பெருகும் கண்ணீர் பொசுக்கிடும் நாள்
அருகில்தான் என்றாலும்
பொசுக்கிட மாட்டாள்!  அவள் தாய்!

பூமித்தாய் பொறுமையானவள்தான்!
--------------------------------------------------------------------------------

குளித்து விட்டு வந்து
கண்ணாடி தேடினேன் 
முகம் பார்த்து பொட்டு வைக்க - என்
முன் வந்தாய் நீ
முன் நெற்றியில் பொட்டும் வைத்தாய்
உன் இதழும் பதித்தாய்
உன்னில் என்னைக் கண்டேன்
உன்னில் என் முகம் பார்த்த பிறகு
கண்ணாடி எதெற்கு?
-----------------------------------------------------------------------------------
கம்பங் காட்டு கொல்லையில
கண்மாயில காத்திருக்கேன்
சமயத்துல வருவியளா
சாதி சனம் வாரதுக்குள்ள

கஞ்சித் தண்ணி வெச்சுத் தாரேன்
கொஞ்சி கொஞ்சி ஊட்டித் தாரேன்
எஞ்சி இருக்கும் கஞ்சித் தண்ணிய
வஞ்சி எனக்கு ஊட்டுவியளா

சோலியெல்லாம் செஞ்சுகிட்டு
சிரிச்சி சிரிச்சி பேசிக்கிடுவோம்
சாதி சனம் பாத்துபுட்டா
பாதியில ஒளிஞ்சிகிடுவோம்

கண்ணு பேசுற சேதியெல்லாம்
ஒண்ணு விடாத சேப்பியளா
கருக்கையில சனம் போன பொறவு 
பொறுமையா காதுல பேசிக்கிடுவோம்

பம்புசெட்டு பக்கத்துல
வம்பாயிட்டு நிக்கிறதுகள
பம்மவைச்சு வெரட்டிடுவோம்
நம்ம கதைய வளத்துக்குவோம்

குளத்தங் கரையில பாத்துக்கிடுவோம்
களனியில திரிஞ்சுகிடுவோம்
ஆத்தோரமா நடந்துகிட்டே கருப்பு
காத்து படாம கட்டிக்கிடுவோம்

சத்தமில்லாம ஒட்டிகிட்டு
முத்தமெல்லாம் கொடுத்துகிட்டு
காவாளிங்க வரதுக்குள்ள
கவனமா பிரிஞ்சுக்கிடுவோம்

காட்டுல நாம சுத்துகையில
போட்டுக் கொடுத்தாய்ங்க களவாணிங்க
கறுவி கறுவி சனங்க செலது
அறுவாளத் தூக்கிட்டு அலயுதுங்க

மச்சான் நீங்க இருக்கயில
அச்சாரம் போடுதுங்க வீட்டில
கிறங்கி மயங்கி கெடக்குறன் நான்
உறக்கம் இல்லாத விசனத்துல

சேதி சொல்லி அனுப்புறேன்
கெதிகலங்கி போறதுக்குள்ள
காத்துக் கெடக்கேன் ஒங்களுக்கு
பத்திரமா வாரியளா

ஒத்தயடிக் கொல்லையில
செத்த நேரம் பேசிக்கிடுவோம்
பத்தவெச்ச கதைய பத்தி
பதவிசா முடிக்கிற சோலிய பத்தி.

பயப்படாத வீட்டுக்கு வாரிகளா
ஐயப்படாத கண்ணாலம் பேசுரிகளா
ஒங்களோட என்னய கூட்டிட்டுப் போறீகளா
ஒங்களுக்காக பொறந்து காத்துருக்கேன் நான்

வானத்தைத் தொட நினைக்கும் 
உயர்ந்த தென்னை மரங்களே
நீங்கள் தொட்டது வானமெனில்
இப்புல் நுனியில் படுவதும் ஆகாயமே!

   ஹப்பா! எப்படியோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை தயாராகிவிட்டது!  தில்லைஅகத்தார்களும் கவிதை (?) படைத்துவிட்டார்கள்! பின்னூட்டத்தில் அழுகிய தக்காளிகளும், முட்டைகளும் பறந்து வராது என்ற நம்பிக்கையில்! 

-கீதா


     


43 கருத்துகள்:

 1. ஹஹஹா அருமை அருமை.. "ஏழையின் குடை" மிகவும் பிடித்தது.. மற்ற எல்லாவற்றையும் ரசித்தேன்..! தொடர்ந்து எதிர்பார்க்கலாமா? ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஆவி ரசித்ததற்கு! தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?// ம்ம்ம்ம் பார்ப்போம்....சட்டியில் வந்தால் அகப்பையில் வராமலா போகப் போகின்றது!? அங்குதானே பிரச்சினை!! ஹஹஹஹ

   நீக்கு
 2. பதில்கள்
  1. மிக்க நன்றி தம்பி! தாங்கள் எழுதுவதை விடவா?!!! எத்தனை அருமையாக எழுதுகின்றீர்கள்!

   நீக்கு
 3. தொடர்ந்து எழுதுங்கள்.

  பூமித்தாய் பொறுமையானவள்..... அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! தங்களது ஊக்கத்திற்கு! எழுத முயற்சிக்கின்றோம்!

   நீக்கு
 4. எல்லாமே அருமை. குறிப்பாக, தலைப்பில்லாத கடைசிக் கவிதையும், பூமித்தாய் பொறுமையானவளும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப நன்றி! நண்பரே! அதை ஏன் கேட்கின்றீர்கள்! கீதா இந்த இடுகையை எழுதி , அவ்வப்போது, துளசிக்கு வாசித்துக் காட்டி எடிட்டிங்க் செய்த போது, கவிதை எழுது என்று கீதாவை ஊக்கப் படுத்திவிட்டு, கவிதையா என்று பின்வாங்கிய துளசிக்கும் கீதாவின் ஆர்வம் தொற்றிக் கொள்ள தான் 1982 ல் எழுதிய அந்தத் தலைப்பில்லாத கவிதையைச் சொல்ல கீதா அதையும் அதில் சேர்த்து, பதிவேற்றம்.

   நீக்கு
 5. கவிதைகள் சூப்பர் ,அடுத்து சமையல் பக்கமும் தலையைக் காட்டலாமே ..அதில் நீங்கள் ஒரு எக்ஸ்பெர்ட் ஆச்சே )
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜி! என்னது அடுத்து சமையல் பக்கமா? அதுவும் எக்ஸ்பர்ட்? யார் சொன்னது ஜி?!!! யாரோ தப்பானத் தகவல் கொடுத்துருக்காங்கனு நினைக்கறோம் ஜி!! அது சரி அந்த எக்ஸ்பர்ட் யாரு? துளசியா?, கீதாவா?

   நீக்கு
 6. பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி! ஹப்பா ரொம்ப பிச்சி போல! விரைவில் சந்திப்போம்! நண்பரே!

   நீக்கு
 7. ஐயா வணக்கம்!...:)

  இப்படி அசத்திட்டீங்களே!.. எதுக்கு இத்தனை பீடிகை போட்டீங்க..
  சும்மா அருவி மாதிரியெல்லோ கொட்டியிருக்குக் கவிதைகள்!

  ஒவ்வொன்றும் கூறிச் சென்ற பொருளும் கவிவரிகளும்
  மிக மிகச் சிறப்பு! உண்மையில் ஆழ்ந்து ரசித்தேன்!

  ஆர்வம் இருந்தாற்போதும் மலையையும் பெயர்க்கலாம் என்பதற்கு
  இதைவிட உதாரணம் எங்கேனும் இல்லை!.

  தொடருங்கள்! தொடுவானம் தூரமில்லை!..:)

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதாயினி சகோதரி இளமதியிடம் இருந்து பாராட்டா?!!! ஆஹா! தாங்கள் மிகவும் ரசித்ததற்கு மிக்க நன்றி சகோதரி! அதுவும் ஆழ்ந்து என்று வேறு சொல்லியிருக்கின்றீரகள்!

   தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரி! முயற்சி செய்கின்றோம்!

   நீக்கு
 8. பதில்கள்
  1. மிக்க நன்றி தனிமரம்! தாங்கள் கவிதைகள் மழை என்று சொல்லியதற்கு ! தங்களைப் போன்றோரின் ஊக்கம்தான் எங்களை வழி நடத்துகின்றது என்றால் அது மிகையல்ல!

   மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்! தொடர்கின்றோம்!

   நீக்கு
 9. உள்ளத்து உள்ளது கவிதை
  உணர்ச்சி ஊற்றெடுப்பது கவிதை
  உள்ளமும் உணர்ச்சியும் உருவாகி கருவாகி வளர்ந்து வர வாழ்த்துகிறேன்.
  புதுவை வேலு
  kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 10. என்ன சகோ இவ்வளவு பில்டப் எல்லாம் போட்டுடிட்டு இப்படி கவுத்திட்டீன்களே சகோ இது நியாயமா? கவுத்தது எங்களைத் தான் ஆச்சரியத்தில் சகோ ! இப்படி ஒரே நாளில் விதை முளைத்து மரமாகுமா சகோ ஒரே ஆச்சரியம் தான் சகோ.
  விண்ணில் மட்டும்தான்
  நட்சத்திரங்களா
  என் குடையிலும்தான்
  நட்சத்திர பங்களா!இதுவும் அருமை அனைத்தும் நன்றாக உள்ளது சகோ. தைரியமா கலக்குங்க.
  அனைத்தும் ரசித்தேன். கீதா சபதம் எல்லாம் வேணாம்மா துணிந்து இறங்குங்க தோழி ok வா . ம்..ம்..ம்..குட் லக்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா சகோதரி?!! தங்களை எல்லாமும் ஆச்சரியப் பட வைத்ததா?!!! ஒரே நாள் அல்ல சகோதரி....சமீபத்தில் அவ்வப்போது எழுதியது! 2, 3 மிகவும் பழையது....29 வருடங்களுக்கு முன் எனலாம்......அவற்றைத்தான் இங்கு பதிவாக்கினோம்....ஒரு கன்னி முயற்சியாக...

   தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி! இறங்கிட்டா போச்சு!

   நீக்கு
 11. எள்ளுருண்டை - என்று தன்னடக்கத்துடன் சொல்லிக் கொண்டாலும் சுவையோ சுவை!..
  தவிரவும் எள்ளுருண்டை என்பது சாதாரண இனிப்பு வகையையைச் சார்ந்தது அல்ல..
  அதற்கும் மேல் - உடலுக்கு நன்மை செய்வது!..

  அல்வா கொடுக்காமல் எள்ளுருண்டை கொடுத்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா மிக அற்புதமான கருத்திற்கு, ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஐயா! ஆம் எள்ளுருண்டை உடலுக்கு நன்மை செய்வதுதான்!

   "அல்வா கொடுக்காமல் எள்ளுருண்டை கொடுத்ததற்கு மகிழ்ச்சி.. // மிக்க நன்றி ஐயா! ரசித்தோம் இந்த வரிகளை!

   நீக்கு
 12. பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர் ஜி! தேவகோட்டையானஏ! என்னாயிற்று உங்களுக்கு?!! காணவில்லையே!

   நீக்கு
 13. இந்த கணம் நீங்கள் என் எதிரில் இருந்திருந்தால் வீசியிருப்பேன்... பூச்செண்டுகளை !!! நீங்கள் குறிப்பிட்ட நம் தோழர் தோழியருக்கு இனி தூக்கம் இருக்காது ?! இன்னும் ஒரு போட்டியா ?

  அருமை ! அருமை ! அருமை !

  தொடருங்கள்

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே! அப்படியா? நன்றாக இருந்ததா?!! மிக்க நன்றி தங்களின் பாராட்டிற்கும், ஊக்கத்திற்கும்! தங்களைப் போன்று அழகாக எழுதுவோர் எங்களை ஊக்குவிக்கும் போது எத்தனை மகிழ்வாக இருக்கின்றது! மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 14. அட! இந்த பதிவை நான் பார்க்கவே இல்லையே. டாஷ்போர்ட்ல வரவேயில்லை. நல்லா காண்ணாமூச்சி ஆட்டம் விளையாடிவிட்டது.

  கவிதை எல்லாம் எழுத தெரியாதுன்னு சொல்லியே, இப்படியே கலக்கு கலக்குன்னு கலக்குறீங்களே.

  எல்லா கவிதையும் அருமை. ஆனா ஒட்டுமொத்தமா, இப்படியா ஒரே பதிவுல இத்தனை கவிதை மழையை கொட்டனும்? எதை ரசிக்கிறது ,எதை விடுறதுன்னே தெரியலை.
  அவ்வளவும் சூப்பர்.
  தொடருங்கள் உங்கள் கவிதை மழையை, நனைய காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே! ப்ளாகர் ரொம்பவே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுது!

   ஹாஹஹஹா...ஒட்டு மொத்தமா போட்டது...4 கவிதைகள் கல்லூரிக் காலத்தில் எழுதியது....கடைசிக் கவிதை துளசி எழுதியது. பூமித்தாய் பற்றி எழுதியது மறந்து விட்டது. எனவே நினைவில் இருந்ததை கொஞ்சம் தற்போதையதும்சேர்த்து எழுதியது.

   முயற்சிக்கின்றோம். பார்ப்போம்!

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 15. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்னும் பதிவைப் பார்த்ததும் கவிதைப் பதிவு எப்படி கண்ணில் படாமல் போயிற்று என்று புரியாமல் பார்த்தால் முந்தைய இடுகையே கவிப் பிரவாளம்தான். கவிதை எழுதுவது என்பது உள்ளத்தில் இருந்து எண்ணங்கள் சுரக்க வேண்டும். அப்போது எழுதினால் இன்னும் மிளிறும் எண்ண்ங்களுக்காக கவிதையா கவிதைக்காக எண்ணங்களா என்னும் சந்தேகம் எனக்கு உண்டு, ஒரு சுட்டி அனுப்புகிறேன் பாருங்கள் மீண்டும் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று கூறும் வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார். சுட்டி பார்த்து வாசித்து கருத்து இட்டோம். ஆம் சார் உள்ளதிலிருந்து எழுவதுதான் கவிதை! அப்படி வந்ததா என்று தெரியவில்லை! ஒரு சில பல வருடங்களுக்கு முன்னால் எழுதியது. நினைவில் இருந்தவற்றை எழுதினோம். உள்ளதிலிருந்து எழுவதை இலக்கண மரபு சார்ந்து எழுத வேண்டும் என்று நினைத்தால் அது கவிதைக்காக எண்ணங்கள் என்று மாறத்தானே செய்யும். அப்படியும் மனதிலிருந்து தோன்றினால் அதாவது இலக்கண மரபுடன் சந்தம் மிக்க வார்த்தைகள் மனதிலிருந்து தோன்றினால் அது மிகப் பெரிய விஷயம்.. அதற்கு தமிழ் அறிவு செழுமையாக இருக்க வேண்டும் இல்லையோ இங்கு பலருக்கும் இருப்பதாகத்தான் தெரிகின்றது சார்!

   மிக்க ந்னறி தங்கள் வாழ்த்துக்களுக்கு!

   நீக்கு
 16. கவிதைகள் பூவாய் பொழிந்து விட்டன... அருமை அருமை. பூமித்தாய் சூப்பர். குடை,கடைசி கவிதை...ரசித்தேன். கவிதைப்பூக்கள் மீண்டும் உலாவர வாழ்த்துக்கள்.

  கவிதை எழுதுறதுன்னு ஆரம்பித்து நீங்கள் எழுதினீர்களே ...அடாடா...ரசித்து மகிழ்ந்தேன்.

  நன்றி தொடர வாழ்த்துக்கள் சகோஸ்... த.ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க ந்னறி சகோதரி! தாங்களும் தான் புகுந்து விளையாடுகின்றீர்கள்! ரசித்ததற்கு மிக்க நன்றி முயற்சிக்கின்றோம்! வருகின்றதா பார்ப்போம்!

   நீக்கு
 17. உங்களிடம் முதலில் நன்றி சொல்லவேண்டும் உங்கள் அன்புக்கு. நானும் கஸ்தூரியும் வாய் ஓயாது இதை பேசிகொண்டிருந்தோம். ஆம் எங்கள் புகைப்படம் வந்த வலைப்பூவில் எல்லாம் உங்கள் மகிழ்ச்சியை பதிவு செய்திருந்தீர்கள்!! நாங்கள் செய்த பேறு(விஜூ அண்ணா ஸ்டைல்)
  அப்புறம் சகா நீங்க யாரை எல்லாம் குறிப்பிட்டிருக்கிறீர்களோ அவர்களின் சாயல் தெரியுமாறு எப்படி இத்தனை அழகாய், விதவிதமாய் கவிதை வெளியிட்டிருகிறீர்கள்!!!! நல்ல தொடக்கம், இன்னும் முயற்சித்தால் இன்னும் இன்னும் அறிய கவிதைகள் கிடைக்கும் என வாழ்த்திவிடை பெறுகிறேன், நன்றி ,வணக்கம்(இலக்கிய கூட்டத்திற்கு போய் வந்த பீல்:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி! உண்மையாகவே நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் தங்கள் இருவரையும், புகைப்படத்தில் பார்த்ததும். நாங்கள் செய்த பேறு என்றுதான் சொல்ல வேண்டும் தங்களைப் போன்ற அறிவு செறிந்த அன்புள்ளங்களின் நட்பு கிடைத்ததற்கு.

   சாயல்!...ம்ம்ம்ம்ம் பார்க்கப் போனால், மின்னல், குடை, பூமித்தாய் - கீதா கல்லூரிக் காலத்தில் எழுதியது. மற்றவை கீதா சில மாதங்களுக்கு முன் எழுதியது. இறுதிக் கவிதை துளசி கல்லூரிக் காலத்தில் எழுதியது.

   பூமித்தாய் இது ஒரிஜினல் அல்ல. அது மறந்து போய்விட்டது, அந்தக் காகிதமும் இல்லை. அதன் உள் அர்த்தம் மட்டும் நினைவிருக்க அதை கீதா மீண்டும் தற்போதைய நிலவரம் சில வரிகள் சேர்த்து எழுதியது....முயற்சிதான்....

   முயற்சிக்கின்றோம்! வருதா என்று. கமல் சொல்லுவது வார்த்தைகள் முட்டி நிற்காமல், ம்ம்ம் பார்ப்போம்....

   ஹாஹாஹ இலக்கிய கூட்டம்?!!! அது விஜு ஆசானின் வலைத்தளம் என்றால் மிகச் சரியே! நாங்க எல்லாம் எங்கேப்பா.....

   ரொம்ப நன்றி! ஊக்கத்திற்கு!

   நீக்கு
 18. தங்களைப் போன்ற அறிவு செறிந்த அன்புள்ளங்களின் நட்பு கிடைத்ததற்கு. ** யாருப்பா இது எனக்கு பின்னாடி நின்னுகிட்டு படிக்கிறது! சகாஸ் உங்களைதான் குறிபிடுகிறார்கள் போல:)) சும்மா கலாய்ச்சு விடாதிங்கப்பா!! ந்யூஸ் பார்க்கும் போதே இப்போல்லாம் கண்டுபிச்சுடுறேன். இதை பற்றி இன்னும் தெளிவா ,விரிவா நம்ம சகாஸ் சொல்ல போறாங்கனு:))

  பதிலளிநீக்கு
 19. அடடா! தினமும் தான் வருகிறேன் .இன்று தான் இந்தப்பகிர்வைக்கண்டேன். இப்படியெல்லாம் அசத்திட்டு பிறகு கவிதை எழுதத்தெரியாது என்று வேறு சொல்வது சரியா? ஹைக்கூ வடிவம் எத்தனை எளிதாக வசமாகிறது தங்களுக்கு. பூமித்தாய் பற்றிய வரிகள் சிந்திக்க வைத்தது. இறுதியான கிராமத்து பேச்ச வழக்கு அசத்தல்.

  பதிலளிநீக்கு