செவ்வாய், 21 அக்டோபர், 2014

அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்........அபஸ்வரமாகியதே!


தோழர்கள் மதுவும், விசு (visuawesome)  அவர்களும் அவ்வப்போது இனிமையான ஆங்கிலப்பாடல்களைப் பகிர்வதும்,  மது அவர்கள் ஒரு சில பதிவுகள் முன்பு சிறு வயதிலேயே ராகங்களைக் கண்டுபிடிக்கும் அறிவு ஜீவியான ஒரு சிறு குழந்தையின் காணொளியைப் பதிவிடவும், வெங்கட் ஜி பகிரும் அழகான பாடல்களாலும் எனக்குக் கொஞ்சம் சங்கீத ஜுரம் பற்றிக் கொண்டதென்னவோ உண்மை! நண்பர் ஸ்ரீராம், திங்களன்று, சென்னை சபாக்களில்  கச்சேரி பற்றியும், காண்டீன் சாப்பாடு பற்றியும் எழுதியதும், சென்னை டிசம்பர் சங்கீத சீசன் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையிலும் எனக்குத் தொற்றிய சாதாரண சங்கீத ஜுரம் வைரல் சங்கீத ஜுரமாக மாறி இதோ, காலை, மாலை வேளைகளில் அதிகரித்து, வீடே அல்லோகலப்படுகின்றது, எனது 5 கட்டைக் குரலாலும், ச்ருதிப் பெட்டியாலும்!  என்ன வருத்தம் என்றால் 51/2 க் கட்டைக் குரல் இப்போது சாதகம் இல்லாததால் 5 கட்டையாகிவிட்டதே என்று! பின்னே, தொடர்ந்து வந்த அசுர சாதகம் பல வருடங்களுக்கு முன்பு நின்று போக, இப்போதெல்லாம், வருஷத்துக்கு ஒரு முறை தான், அதுவும் இந்த டிசம்பர் சீசன் வரும் போதுதான் இந்த ஜுரம் வருவதால், வயதும் ஏறி வருவதால் கட்டைக் குரலாகத்தானே மாறும்! வீட்டில் யாரும் இல்லாத போதுதான் இந்த ஜுரம் வரும்! வீட்டில் கணவரோ, எனது தந்தையோ இருந்தால் என் குரல் ஆமை/நத்தை ஓட்டினுள் சுருங்குவது போல் உள்ளே போய்விடும்!  கணவர் சங்கீதம் என்றால், அல்காரிதம் பற்றிப் பேசுவார்! வெள்ளைக் கொடிதான்!  “எல்லோரும் இன்புற்றிருக்கவே அல்லாமல்......”

அப்படி யாரும் வீட்டில் இல்லாத போது, எனது இந்த சாதகக் குரல் கீழ் ஃப்ளாட்டுகளில் தேனாய் ஒலித்தது போலும்!

“எந்தா கீதே! இ வருஷம் டிசம்பரில் கீதே எவ்விடெங்கிலும் கச்சேரி செய்யாம் போகுனுண்டோ”

என்று கீழ் வீட்டு ஆண்டியும், வயனாட்டுப் பெண்ணும், மேல் வீட்டு ப்ரபையும் கேட்டார்களே ஒரு கேள்வி! என் மானம் என் பாட்டைப் போல பறந்தது!  பரவாயில்லை அதாவது! எனது நாகர்கோவில் தோழி என்னைக் கூப்பிட்ட போது, நான் சஹானாவை சுவரபேதம் செய்யாமல்??!! ஆலாபனை செய்து கொண்டே ஹலோ கூடச் சொல்லாமல், ஏதோ சங்கீதத் தாரகை போன்று, அத்தனை அசுர சாதகமாகப் பாடிக் கொண்டே எடுத்ததும்,

“ஹை!  அக்கா!  சஹானா? சூப்பர்!  கச்சேரி பண்ணப் போறீங்களா என்ன?” என்றதும் எனக்கு ஒரு புறம் சந்தோஷம்.  பின்னே நான் பாடியதைச் சரியாகச் சொல்லிவிட்டாளே! “யார் மனசுல யாரு” என்பதைப் போல் நான் சஹானா என்று நினைத்துப் பாடியது அவள் மனதிலும் சஹானா என்று தோன்றியதே! மறுபுறம், எல்லோரும் நான் வாய் திறந்தாலே கச்சேரியா என்று கேட்கிறார்களே என்ற வருத்தம்! ஏன் வருத்தம்?  எனது சங்கீத ஆசை நிறைவேறாமல் போனதற்கு!  அந்தத் தோழி என்னை அழைத்ததற்குக் காரணம், அவள் சுசீந்தரம் கோயிலில் ஒரு மணி நேரக் கச்சேரி செய்வதற்கு, என்னென்னன பாட்டுகள் தேர்வு செய்யலாம் என்றும், ராகங்கள், மெயின் பாட்டு, துக்கடா என்று ஒரு லிஸ்ட் கேட்டுத்தான்!

இப்படித்தான், என் சங்கீத அனுபவம், இலங்கை, கொழும்புவில் இருந்த போது, என்னை வளர்த்த என் பாட்டி (அப்பாவின் அம்மா) அத்தைகளின் மூலம் தொடங்கியது மிகச் சிறு வயதில்! பயிற்சி என்றால் பயிற்சி எல்லாம் இல்லை! வெறும் கேள்வி ஞானம்தான்.  அவர்கள் எல்லோரும் அங்கு கொலு சீசனில் பாட்டுப் பாடிச் சுண்டல் பெற வேண்டி சாதகம் செய்த போது, காதால் கேட்டு நான் கற்றுக் கொண்ட முதல் பாடல், சாரமதி ராகத்தில் அமைந்த “அருள வேண்டும் தாயே”!  சிறு வயதிலேயே, அதாவது 4 வயதிலேயே இந்தப் பாடலைப் பாடியதால் எனக்கு கை நிறைய சுண்டலும், மடி நிறைய சாக்கலேட்டுகளும், பரிசுகளும் கிடைத்ததால், தேய்ந்த ரெக்கார்ட் போல் இந்தப் பாடல் மட்டுமே எல்லா இடங்களிலும்! 3 ஆம் வகுப்பு  வரை கொழும்பு வாழ்க்கை.  1 ஆம் வகுப்பு படித்த போது, அங்கு வானொலியில் மிகவும் பிரபலமாக இருந்த, திரு. மயில்வாகனன் மற்றும் மறைந்த திருமதி ராஜேஸ்வரி சண்முகம், அவர்களின் முன்னிலையில், அவர்கள் மடியில் அமர்ந்து, கதை சொல்லிப், பாட்டுப் பாடி வானொலியில் பதிவானது இன்னும் மறக்க முடியாத அனுபவம்.

கொழும்புவிலிருந்து நாகர்கோவிலுக்குப் புலம் பெயர, எனது 4 ஆம் வகுப்பு அங்கு தொடங்கியது! புஷ்பமடம் எனும் வீட்டில் வாசம். (சேட்டைக்கார அண்ணா, இந்த புஷ்பமடம் உங்களுக்குத் தெரியுமா? 70களில், நீங்கள் இருந்த வடிவீஸ்வரத்தின் முன் பகுதி, இடர்தீர்த்தப் பெருமாள் கோயில் பக்கம்!) அப்போது எனக்குப் பாட்டு நன்றாக வருகின்றது என்ற ஒரு கற்பனையான எண்ணத்தில் எனது பாட்டியும், அம்மாவும் பாட்டுக் கற்பிக்க, தண்டபாணி வாத்தியாரை ஏற்பாடு செய்ய, தினமும் மாலையில் அவர் சரியான நேரத்திற்குத் திண்ணையில் ஹார்மோனியப் பெட்டியுடன் ஆஜர்!  ஆனால், சிஷ்யை? குருதட்சிணை கொடுத்து ஸ...ப...ஸ பாடியதோடு சரி! பாட்டியும், அம்மாவும் வீட்டைச் சுற்றி ஓடுவார்கள் என்னைத் தேடி! நானோ விடு ஜீட்! ஹைட் அண்ட் சீக் தான்! பாவம்! தண்டபாணி வாத்தியார் தண்டமாக இல்லாமல், சங்கீதத்திற்கேத் தண்டம் சமர்ப்பிக்கும் வகையில், மிகவும் நேர்மையாக நோட்டில் ஸரளி வரிசையிலிருந்து, கீர்த்தனம் வரை எழுதி, கீர்த்தனம் வரை வந்ததாகச் சொல்லிக் கொள்ளலாமே தவிர, அவர்தான் பாடிக் கொண்டிருப்பார். சரச சாம தானா....என்று!  நானோ இந்த சரச சாம தான பேத தண்டத்திற்கு மசிபவளாக இல்லாமல், காதில் வாங்கியதோடு சரி!  ஆனால், வாத்தியாருக்கு நல்ல சாதகம், பயிற்சி எனலாம்! என்னால்! 

பின்னர் ஏனோ என் அம்மாவிற்கு, என் அப்பாவின் அம்மாவின் இந்தப் பாட்டு, நடனக் கலைகள்  எனக்குக் கற்பித்து வளர்ப்பது பிடிக்காமல், அவரது அம்மாவின் வளர்ப்பில், அவரது சகோதரர்களின் குழந்தைகள் படிப்பு மட்டுமே போதிக்கப்பட்டு வளர்க்கப்படுவதுதான் சரி என்று தீர்மானித்து என்னை அந்த மிலிட்டரி வாழ்க்கைக்கு மாற்றிச் சென்றார்.  7 ஆம் வகுப்பிலிருந்து நாகர்கோவிலிலேயே அம்மாவின் அம்மா வீட்டில், கிராம வாழ்க்கை! கிராம வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் மிலிட்டரி வாழ்க்கைதான் பிடிக்கவில்லை! நான் சங்கீதம் கற்கவில்லையே தவிர என் காதுகளில் அது விழுந்து கொண்டுதான் இருந்தது.  கோயில் கச்சேரிகள், வானொலி என்று! பாட்டிக்கும், மாமாக்களுக்கும், அம்மாவிற்கும் தெரியாமல் என் அப்பா வானொலியில் சங்கீதம் கேட்டதாலும்! அப்பாவுக்கு அபார ஞானம் உண்டு!  ஆலாபனை செய்யும் அளவு! ஆனால், பயிற்சி கிடையாது!

இப்படியாகப் போன எனது வாழ்வில் 9 ஆம் வகுப்பு வந்த போது, கோயில் திருவிழாவில், திரு சேஷ கோபாலன் அவர்கள் சங்கீத உலகில் வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயத்தில், அவரது கச்சேரி! எங்களுக்குத் தூரத்துச் சொந்தம் என்றும் சொல்லுவதுண்டு. எங்கள் ஊர் கோயிலில் தான் அவரது முதல் பொதுக் கச்சேரி என்றும் சொன்னார்கள். ஆனால், அது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை! திரு. சந்திரசேகரன் அவர்களும், அவரது மகள் பாரதியும் வயலின். அவர்கள் இருவரும் தனியாக வயலின் கச்சேரி செய்தார்கள் மற்றொரு நாள். இவர்கள் எல்லோருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு! எனவே, நான் கச்சேரிக்கு ஆஜர்! அவர்களை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் ஆதலால்!



கச்சேரி செய்பவர் எங்களுக்குச் சொந்தம், எங்கள் வீட்டிற்கு சாப்பிட வருகிறார் என்று அங்கு வந்தவர்களிடம் எல்லாம் பெருமை பீற்றிக் கொண்டே, மணலில் கீச்சு, கீச்சுத் தாம்பாளம் விளையாடிக் கொண்டு கச்சேரி கேட்கவும், முதன் முதலாக என்னுள் மறைந்து, உறைந்து இருந்த அந்த சங்கீத உணர்வை, சேஷுவின் குரலும், அவரது அபார சங்கீத ஞானமும், ஸ்வரக் கோர்வைகளும், சந்திரசேகர் அவர்களின் உற்சாகமான வயலின் வாசிப்பும், அவர் இடையிடையே மிகவும் ரசித்து, லயித்துச் சொல்லும் சபாஷ் போன்றவையும், உருக்கி மேலெழச் செய்தது!  அன்றுதான் முதன் முதலாக நான் மிகவும் வருந்தியது! எனது அப்பாவின் அம்மா, அத்தைகள், தண்டபாணி வாத்தியார் ஆகியோர் எனக்குக் கற்பிக்க எடுத்துக் கொண்ட அந்த முயற்சியை நான் வீணாக்கி விட்டேனே/னோ என்று! கிராமத்திற்கே கமாண்டர், இந்திராகாந்தியாக இருந்த என் பாட்டியிடம் பேசுவதற்கே எல்லோரும், வீட்டில் உள்ளவர் உட்பட அஞ்சிய போது, பாட்டியிடம் தைரியமாகப் பேசும் ஒரே நபர் நான், அவர்கள் முன்னால் சென்று “எனக்குப் பாட்டுக் கற்க வேண்டும். அதுவும் திரு. சேஷகோபாலனிடம்” என்றேன். பாட்டியின் பதில் என்னவாக இருந்திருக்கும்?...

.நாளை .தொடரும்....... அபஸ்வரமாகிப் போன எனது அபூர்வ ராகம்!!

-கீதா 

படங்கள் - நன்றி கூகுள்.

அன்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

-துளசிதரன்-கீதா

45 கருத்துகள்:

  1. நாளை .தொடரும்....... அபஸ்வரமாகிப் போன எனது அபூர்வ ராகம்!! //

    ஆவலுடன் காத்திருக்கிறோம் தங்களின் கான வகுப்பு என்ன ஆயிற்று..? என அறிய...சுவாரஸ்யமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி நாளைதான் பதிவு! இன்று முடியவில்லை! தீபாவளி என்றெல்லாம் இல்லை! துளசி நாளை இடலாமே என்று அதனால் வியாழன் வரும் அடுத்த பதிவு!

      மிக்க ந்னறி சகோதரி!

      நீக்கு
  2. வணக்கம் ...
    ஒரு நீண்ட பதிவு...
    உங்கள் குழந்தைப் பருவம் ஆசிர்வதிக்கப் பட்டது...
    சின்ன வயதில் சங்கீத அறிமுகம் எல்லோருக்கும் கிடைக்காது...
    எங்கள் ஊரில் ஒருமுறை நானும் நண்பர் மாரியப்ப பிள்ளையும் சைக்கிளில் போகும் பொழுது பேசிக்கொண்டே சென்றோம். அப்போது தான் ஒரு தனியார் பள்ளியில் வேலை கிடைத்திருந்ததால் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு சொன்றோம். பிள்ளை ஒவ்வொரு தவறாக பார்த்து திருத்திக் கொண்டே வந்தார்.

    நண்பர் ராஜ கோபால் அவர்களை சந்தித்துவிட்டு திரும்பி எங்கள் சைக்கிளை எடுக்க பார்க்கிறோம் ...
    அவை ரோட்டில் தள்ளிவிடப்பட்டு இருந்தன.
    எங்கள் பின்னால் எங்கள் ஆங்கில உரையாடலைக் கேட்ட ஒரு சிறுவனின் கோபம் அது.
    தங்களால் பேச முடிவில்லை என்பதற்காக ஆங்கிலத்தை வெறுப்பவர்கள் நிறயப்பேர்..
    அது போல என்னால் கர்நாடக சங்கேதத்தை முறையாக ரசிக்க முடிவில்லை என்கிற இயலாமை இருக்கிறது...
    சைக்கிளில் ஏதும் வந்துவிடாதீர்கள்..

    மற்றபடி வாழ்த்துக்கள்

    தீப ஒளித் திருநாளுக்கு
    நண்பர்களின் முகநூல் தகவல்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! என் குழந்தைப் பருவம் அப்பாவின் அம்மா வீட்டில் இருந்த வரைதான் ஆதிர்வதிக்கப்பட்டது! அதன் பின் மிக மிக மிலிட்டரி வாழ்க்கை! எனது குழந்தைப் பருவம் மட்டுமல்ல ......ம்ம்ம்....... பல வேதனைகளும், துயரங்களும் நிறைந்தவை! கொழும்பு வாழ்க்கை முதல்கொண்டு.....நான் நல்ல பக்கம் மட்டுமே எழுதுகின்றேன்! கெட்டதைக் கொஞ்சம் நகைச்சுவை கலந்து எழுதுகின்றேன்! வாழ்க்கையைப் பாசிட்டிவ் ஆக பார்ப்பதால் ...கொழும்பு வாழ்க்கையில் அந்தச் சிறு வயதில்....நடந்த சில சம்பவங்களைப் பதிவிடலாம் என்று துளசியும் சொன்னார். ஆனால் அதைப் பதிவிட நான் விரும்பவில்லை!....சொல்லக்கூடாது என்றில்லை! ஆனால், எனக்குச் சிரிப்புதான் மிகவும் பிடிக்கும் அதனால்தான்.....

      தங்கள் அனுபவம் செம...கண்டிப்பாக சைக்கிளில் வரவில்லை...வந்தாலும் பாடிக் கொண்டேதான் வருவேன்.....

      கர்நாடக சங்கீதம் என்று ஏன் நினைக்க வேண்டும் கஸ்தூரி? ஆங்கிலப் பாடல்கள் பெரும்பாலும் சங்கராபரணமும், மோஹனம் பேஸ்தான்.....எந்த இசையாக இருந்தாலும் இசையை ரசிக்கத் தெரிந்தால் போதுமே ஆது ஆங்கில இசையாக இருந்தாலும், திரை இசையாக இருந்தாலும்.....

      பாடறியேன் படிப்பறியேன் பள்ளிகூடம் தானறியேன்....ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்.....இந்தப் பாட்டின் சரணங்களின் அர்த்தத்தைத்தான் நான் இங்கு சொல்ல விரும்புகின்றேன்....எல்லாமே சங்கீதந்தான்...
      எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
      சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான் ஸோ நோ இயலாமை ப்ளீஸ்!

      நீக்கு
  3. அந்த பதில் என்னவாய் இருந்து இருக்கும்.. மிகவும் ஆவலோடு தொடர்விர்க்காக காத்து கொண்டு...
    அருமையான பதிவு... நடத்துங்கள், நடந்துங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் நாளை வரும்! ஹஹ ஆனால் அது எவ்வளவு தூரம் தங்கள் எதிர்ப்பார்புகளை ஈடு செய்யும் என்று தெரியவில்லை.....

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  4. அபஸ்வரமா இல்லையா என்பதை நாங்க முடிவு செய்துக்கிறோம் ,உடனே ஒரு பாட்டைப் பாடி youtubeல் போட்டு link கொடுக்கவும் !
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் பகவான்ஜீ. நல்ல கேள்வியை தான் கேட்டிருக்கீங்க.

      நீக்கு
    2. ஹாஹஹ்ஹ ஜி! என்ன ஜி! கொஞ்சம் பயமா இருக்கு ஜி! அப்புறம் நம்ம இசையமைப்பாளர்கள் எல்லோரும் வரிசை கட்டி வந்துடுவாங்களோன்னு......எல்லாரையும் எப்படிச் சமாளிக்கறதுனு.....ஹஹாஹ்ஹ் அதான் போடத் தயக்கம்....

      நீக்கு
  5. வழக்கம் போலவே வசீகரிக்கும் நடையில் ஹாஸ்யமாய் ஒரு பதிவு ! நமக்கும் சங்கீததுக்கும் காத தூரம்ங்க ! ( நண்பர் காரிகனோட " வார்த்தைவிருப்பம் " தளத்துல நான் போடற பின்னூட்டத்தை படிச்சிட்டு பெருசா நினைச்சிடாதீங்க ! )

    இப்பகூட பாருங்க... இந்த பதிவுல சஹானா ராகத்தை படிக்கும்போதெல்லாம் சட்டுனு " சாரல் தூவுதோன்னு " மனசுக்குள்ள ஹம்பிங் ! நமக்கு தெரிஞ்ச சஹானா சிவாஜி சஹானா மட்டும்தாங்க !!!

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நண்பரே! பரவாயில்லைங்க! அந்த சஹானாவும் மிக அழகான பாடல்! ரசனை இருந்த போதுமே! அதற்கு ராகம் தெரிவதும், மொழியும் அவசியமில்லையே! நண்பரே!

      நண்பர் மதுவுக்குச் சொன்ன அதே பதில்தான் நண்பரே!

      நீக்கு
  6. அருமை அக்கா ! உங்கள் பாடல் அனுபவங்கள் ..எங்க வீட்ல என் பொண்ணு ஒரு வயசு இருக்கும்போது தூங்க வைக்க பாட்டு பாடினேன் ஒரு சின்ன பட்டுக்கை வாயை மூடுச்சி :) அதோட விட்டுட்டேன் .ஆனா என் பொண்ணு அந்த பட்டுகுட்டி நல்லா பாடறா பாடகர் குழுவிலும் இருக்கா .தொடருங்கள் உங்க ராக அனுபவங்களை .
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க வாயய்த்தானே மூடுச்சி! தன் காதை மூடிக்கலையே! சூப்பர்! தங்கள் பட்டுக் குட்டி பாடகர் குழுவில் இருப்பதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி! குழந்தைக்கு எங்கள் வாழ்த்துக்கள்! அவரது இசை கொடிகட்டிப் பறக்க!

      மிக்க நன்றி தங்கைக்கு! தங்கள் வாழ்த்துக்களுக்கு!

      நீக்கு
  7. பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர் ஜி! தங்களுக்கும் குட்டீசுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

      நீக்கு
  8. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்துக்களுக்கு! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  9. அட, மயில்வாகனம் மற்றும் ராஜேஸ்வரி இருவரையும் நேரில் பார்த்து பேச வேறு செய்தீர்களா? அட! கே எஸ் ராஜா? வானொலியில் உங்கள் குரலும் வந்திருக்கிறதா? என் குரலும் மதுரை வானொலியில் வந்திருக்கிறது. (தேங்க்ஸ். நீங்களும் எனக்கு வாழ்த்து சொல்வீங்கன்னு நம்......பி முன்னாலேயே தேங்க்ஸ்!)

    தொடருமா... அபஸ்வரமாகிப் போன என்று தலைப்பிட்டிருப்பதால் ரிசல்ட் யூகிக்க முடிகிறது.

    நானும் எங்க அப்பாவைப்போலவே பெரிய சங்கீதக் கலைஞர் ஆகவேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை.

    தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே! ஹாஹஹஹ் முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் குரல் மதுரை வானொலியில் பதிவானதற்கு!

      அதன் பிறகு நாகர்கோவில் வானொலி நிலையம் தொடங்கிய முதல் நாள் முதல் நிகழ்ச்சி என் நிகழ்ச்சிதான். பூதப்பாண்டி அருள் மிகு பூதலிங்கேஸ்வரர் ஆலயம் பற்றியது....அதன் பின் 3 நிகழ்ச்கிகள் கொடுத்தேன் பின்னர் நோ! துளசியும் கொடுத்திருக்கின்றார். நாட்டு பாடல் விளக்கம்!

      அட நீங்க வேற நான் எங்க பேசினேன் அவங்களோடு?!! அவங்கதான் என்னோடு பேசினாங்க! நான் ரொம்ப சின்னப் பொண்ணு...ஜஸ்ட் 5 வயசுதான்....

      தொடரும் ...நாளை பதிவு.....அபஸ்வரமாகிப் போனது.......இன்னும் 2 பார்ட்டாகக் கூட வரலாம்.....

      நண்பரே! யார் தங்கள் அப்பா? பெரிய சங்கீதக் கலைஞர்?!!! சொல்லுங்கள் ப்ளீஸ்!

      தங்களுக்கும் எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  10. மார்கழிக் குளிரில் வரவேண்டிய சங்கீத ஜுரம் இப்போதெ வந்து விட்டது போலிருக்கிறது.

    மறக்க முடியாத அந்நாளைய இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்களான, மயில்வாகனன் மற்றும் ராஜேஸ்வரி சண்முகம் இவர்களது குரல்களை மறக்க முடியுமா?

    உங்கள் மலரும் நினைவுகள் தொடரட்டும். சகோதரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
    Tha.ma.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹாஹ் ஆமாம் எல்லாம் நம்ம பதிவர் அன்பர்கள் பண்ணும் பதிவுகளினால்தான் ஹஹஹஹ.....

      ஆமாம் ஐயா! அவர்களது குரல் ஆஹா குரல்கள்! நிகழ்ச்சிகளும் அப்படியே! அது போன்று இப்போது எல்லாம் இல்லை....

      தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  11. ஆவலுடன் காத்திருக்கிறேன்
    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. காத்திருக்கிறோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை பதிவு! எங்கல் இனிய தீபாவளி நல்வாத்துக்கள்!

      நீக்கு
  13. எனக்குச் சங்கீத ஞானம் எல்லாம் இல்லை. இருப்பினும், தங்களின் எழுத்தில் இனியதொரு இசைப்பாடலில் அனுபவிக்கும் சுகத்தைப் பெற முடிந்தது.

    பாராட்டுகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கீத ஞானம் அவசியமில்லை நண்பரே! எழுத்தை வாசிக்க! அதை ரசிக்க!! மிக்க நன்றி நண்பரே! 70 வயது இளைஞரே!

      நீக்கு
  14. தீபாவளி வாழ்த்துக்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் கீதா குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய இனியா சகோதரிக்கு! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  15. தீபாவளி வாழ்த்துக்கள்
    கீதம் சங்கீதம் இதுதானே படைப்புக்கு வேதம்
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்கள் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும்! தங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

      நீக்கு
  16. சிறுவயதில் நாம் வேண்டாம் என்று விரட்டும் சில மத்திம வயதில் நமக்குப் பிடித்துப்போகிறது! ஆனால் அதை பெறத்தான் முடிவதில்லை! சிறப்பான பகிர்வு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ! நண்பரே! சிறு வயதில் கூட பிடிக்காமல் என்றும் கூட சொல்ல முடியாது! அது அந்த வயதிற்குரிய விளையாட்டுப் புத்தியால்....விலகி நிற்பது! பின்னர் நமது மனம் முதிர்வு அடையும் போது, பெற நினைக்கும் போது நீங்கள் சொல்லுவது போல பெற முடியாமல் போகின்றது!

      தங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

      நீக்கு
  17. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    சகோதரி, தங்களுக்கு இன்னும் வேற எந்த எந்த ஞானம் இருக்குதுன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். அடுத்து துளசி சார் எடுக்க போகும் கூறும் படத்தில, நீங்க தான் பாட்டு எழுதி பாடப் போறீங்கலாம்!!

    பகவான் ஜீ சொன்ன மாதிரி ஒரு லிங்கை அனுப்புங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹாஹ் ஐயையோ! சகோதரரே! எனக்கு எந்த ஞானமும் இல்லை! ஹை இது கூட நல்ல ஐடியாவா இருக்கே! உண்மைய சொல்லணும்னா நான் துளசியிடம் சொல்வதுண்டு, நம்ம படத்துக்கு நாமளே ம்யூசிக் போட்டா என்னனு.....ஹஹஹ நண்பரே! தங்கள் நகைச்சுவையை மிகவும் ரசித்தோம்! சரி துளசியிடம் கேட்கணும் பாட்டு எல்லாம் உண்டா என்று....

      பகவான் ஜிக்கு கொடுத்த பதிலே நண்பரெ! அடக்கி வாசிக்கலாமே என்றுதான்...அஹஹஹஹஹ்....ஐயோ நீங்க வேற....ஒவ்வொருத்தரும் எப்படியெல்லாம் கலக்கறாங்க....

      ரொம்ப நன்றி தங்கள் ரசிக்கத்தக்க பின்னூட்டத்திற்கு!

      நீக்கு

  18. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தமிழா! தங்களுக்கும் தங்களு குடுமப்த்தினர் சுற்றத்தார் அனைவருக்கும் எங்கள் அன்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  19. இனிய நினைவுகள். நகைச்சுவை இழையோடிய பதிவினை ரசித்தேன்.... பதில் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை இதன் அடுத்த பதிவு இடுகிறோம். மிக்க நன்றி வெங்கட் ஜி ரசித்ததற்கு!

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  20. எழுதும் கருத்து எதுவானாலும் , அதில் ஒரு தெளிவு இருப்பது படிக்கத் தூண்டுவதாகும் அந்நிலை தங்களிடம் உள்ளது! நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி புலவர் ஐயா! தங்கள் பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும்!

      நீக்கு
  21. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இருவருக்கும் மற்றும் அவர்களின் அன்புக் குடும்பத்தார்களுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி மிக்க நன்றி தங்கள் வாழ்த்திற்கு! தங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  22. அப்பாடா இப்ப தான் எல்லாம் வாசித்து முடித்தேன் சகோ ம்..ம்..ம்.. எல்லோரும் நீண்ட நீண்ட பதிவாக இடுவதால் எதை வாசிப்பது எதற்கு கருத்து இடுவது என்று தெரியாமல் தலையை பிச்சுக்க வேண்டியதாக இருக்கிறது. நேரமோ லிமிட்டெட் அல்லவா. அதுதான் லேட் ஆக வரவேண்டியதாக உள்ளது குறை நினைக்காதீர்கள். நல்ல வேளை இதை தொடரும் என்று என்று சுருக்கியது. நன்றி சகோ ! ஆமா தோழி கீதாவின் சங்கீத ஞானத்தை மெச்சுகிறேன். அவர் ஆசை நிறைவேறுமா பதில் என்னவாக இருக்கும் என்று ஆர்வம் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது சரி நாளை தொடர்கிறேன். பதிவுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹஹ்ஹாஹ.....அதேதான் சகோதரி இங்கும். நாங்களும் நீண்ண்ண்ண்ண்ண்ட பதிவு!!! பல தளங்கள் செல்வதும் சில சமயம் கஷ்டமாகத்தான் இருக்கின்றது! அதனால் ஒன்றும் இல்லை சகோதரி! தாமதமாக வருவது ஒன்றும் குறை இல்லை! வாருங்கள் நீங்கள் உங்களுக்குச் சமயம் கிடைக்கும் போது! வந்து கருத்துச் சொல்லுங்கள்! அடுத்த பதிவும் இட்டாகி விட்டது!

      ஞானம் எல்லாம் இல்லை சகோதரி! சும்மா ஒரு ஆர்வம்தான்...மிக்க நன்றி தங்கள் பொன்னான நேரத்தில் இங்கும் வந்து கருத்திட்டமைக்கு!

      மிக்க நன்றி! மீண்டும் வருக!

      நீக்கு