(இது கொஞ்சம் பெரிய சீரியஸ் பதிவுதான். மன்னிக்கவும். முடிந்தால், ஆர்வமிருந்தால் வாசியுங்கள். )
பயணக்கட்டுரைகள்,
நகைச்சுவை, ஜனரஞ்சகமான பதிவுகள், அனுபவப்பதிவுகள், புத்தகங்கள் பற்றிய பதிவுகள், சமையல்,
கதைகள், என்று என்னை ஈர்க்கக் கூடியவற்றின் இடையே கொஞ்சம் சீரியசான கல்வி, உளவியல்
என்று வந்தா நமக்குத்தான் உடனே ஆர்வம் மேலோங்கிவிடுமே.
இப்பதிவே
கூட கோர்வையாக, சரியாக எழுதியிருக்கிறேனா என்பது எனக்குச் சந்தேகம்தான். சரி புலம்பலை
விட்டு பதிவிற்கு வருகிறேன்…
மதிப்பெண்ணிற்கு
அப்பாற்பட்டு விரிவான அறிவு தேவை என்று அழகாகச் சொல்லப்பட்டிருக்கும் அப்பதிவு ஆசிரியர்களுக்கும்
பொருந்தும். அவர்களும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தங்களின் அறிவை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர்களும் இறுதி வரை மாணாக்கர்தாம்.
விசாலமான
அறிவுவளர, குழந்தைகளைக் கேள்வி கேட்க அனுமதிக்கவேண்டும், ஆசிரியர்களும் சரி, பெற்றோரும்
சரி. அதுதான் முதல் படி. அதுதான் சிந்தனையைத் தூண்டும். சீரியசிந்தனைகள் அதாவது தருக்கச்
சிந்தனைகள் (logical thinking) எத்தனை முக்கியமோ அதைப் போல வித்தியாசமாகச் சிந்தித்தல்
லாட்டரல்திங்கிங்க்தான் ஒருவரைத் தனித்தன்மை உடையவராகக் காட்டும்.
விடை
தெரியவில்லை என்றால் பொதுவாக, குழந்தைகளைக் குட்டி, அதிகப்பிரசங்கித்தனமா கேக்காத,
தொணதொணன்னு, அடுத்த க்ளாஸ் போறப்ப படிப்ப, தொந்தரவு செய்யாத, சொல்லிக்கொடுத்தது புரியலையா?
அப்படியே மனப்பாடம் செய், என்று சொல்லி முடக்கப்படுகிறார்கள் கட்டிப் குழந்தைகளின்
ஆர்வமும், தைரியமும் அடக்கப்படுகின்றன.
இது
ஒரு வகை என்றால் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் ரொம்ப
புத்திசாலி என்று பிரகடனப்படுத்தி ஓவராகத் தலையில் தூக்கி வைத்தும் கொண்டாடுகிறார்கள்.
குழந்தைகள் வயதுக்கு மீறி என்ன பேசினாலும் அதை ரசித்து, பெருமையாகச் சொல்லி அதுவும்
இப்போது காணொளியாக வேறு போடுகிறார்கள். முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்று.
எல்லாப் பெற்றோரும் கல்வி அறிவோ, பண வசதி படைத்தவர்களாகவோ இருப்பதில்லை என்பதால் இங்கு ஆசிரியர்களின் பங்கு மிக மிக முக்கியமாகிறது. (கல்வி அறிவும், வசதியும் உடைய பெற்றோருக்கும் இது பொருந்தும்.)
குழந்தைகள்
கேள்விகேட்கும் போது ஆசிரியரும் சரி, பெற்றோரும் சரி, விடை தெரியவில்லை என்றால், “தெரியவில்லை”
என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டு, “நான் பார்த்து தெரிந்துகொண்டு விளக்குகிறேன்” என்று
சொல்லி அதைச் செய்யவும் வேண்டும். குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மீது நம்பிக்கை, ஈடுபாடு
வரவேண்டும். கற்றலில் (இந்தச் சொல் மிக முக்கியம்) ஈடுபாடு ஏற்படும் படியான சூழலை விதைக்க
வேண்டும். இது தொடக்கப்பள்ளியில் ஒரு விதையாக மிக மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
அடுத்து இடைநிலைப் பள்ளியிலும், உயர்நிலைப்பள்ளியிலும் பராமரிக்கப்பட்டால் தானே நல்ல
பூத்துக்குலுங்கும் மரமாகும்.
ஆசிரியர்களும்
சரி பெற்றோரும் சரி, “இதுகூடத் தெரியலையா, முட்டாள், ஒண்ணுக்கும் உதவாக்கரை, என்னத்தபடிச்ச?
நீயெல்லாம் எதுக்குப் பிறந்த, எதுக்கு ஸ்கூலுக்கு வர, எருமை, நாயி, பேசாம மேய்க்கப்
போ,” இப்படியான சொற்கள் வீசப்படும் சூழலை புறம் தள்ள வேண்டும். இவை கற்கும் ஆர்வத்தையும்
கற்பதையும் முடக்குபவை.
சில
குழந்தைகள் இதை அத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் கடந்துவிடுவார்கள். ஆனால் எல்லாக்குழந்தைகளுக்கும்
மனம் ஒரே போன்று அல்ல. தொட்டாலே உடையும் கண்ணாடி போன்ற மனதுடைய குழந்தைகள் நத்தை போல்
ஓட்டிற்குள் சுருங்கிக் கொள்வார்கள். சில குழந்தைகளின் ஒழுக்கத்தையும், ஆளுமை வளர்ச்சியையும்
உரசிப்பார்க்கும்.
ஆசிரியப்பயிற்சியில்
கல்வி உளவியலின் (Education Psychology) பங்கு மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு குழந்தையின்
மனமுதிர்ச்சி ப்ளஸ் கற்றல் திறன் வேறுபடுவதால் மிக மிக அடிப்படைத் தேவையாகிறது.
ஒவ்வொரு
காலகட்டத்திலும் சமுதாயச் சூழல் மாறுபடுவதாலும், அதுவும் இப்போதைய காலகட்டத்திற்கு
ஏற்பவும் - சமூகவலைத்தளங்கள், இணையம், கையடக்க
அலைபேசி என்று தொழில்நுட்பமும், மின்னியல் பொருட்களும் சல்லிசமாக இருப்பதால், பிஹேவியரல்
அடிக்ஷன் (behavioural addiction) ஏற்படுவதால் - கற்றல் உளவியலில் மேம்பாடு செய்யப்பட
வேண்டியது இன்றியமையாத அடிப்படைத் தேவை. ஆசிரியர்,
மற்றும் பெற்றோர் அவர்களைச் சிறப்பாகக் கையாளும் திறன் பெற்றிருப்பதோடு, ஒழுக்கம் மிக்கவராகவும்
இருக்க வேண்டும்.
ஒரு
குழந்தை சாதிப்பதற்குப் – புகழ் பெறவேண்டும் என்றில்லை, கல்வியில் முதலிடம் பெறவேண்டும்
என்றில்லை, எந்தத் துறையானாலும் செய்வதை செம்மையாகச் செய்வது, நேர்மையாகச் செய்வது,
நல்ல ஒழுக்கத்துடன் மனித நேயத்தை இழக்காமல் செய்வது என்பதுதான் மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கான உளவியல்,
அவர்களது ஆளுமைத் திறனை வளர்ப்பது, சூழல் என்பவை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சூழல்
சரியில்லை என்றால் கற்பது என்பது மிகக்கடினம்.
பாடங்களை மனப்பாடமாய்ப் படிக்கும் திறன் கூடுதல் உள்ளவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று
வெற்றி, மெடல் என்று வாங்கிவிட முடியும். ஆனால் அவர்கள் படித்ததை ஆழ்ந்து கற்றார்களா என்றால் அது
பெரிய கேள்விக்குறி.
மேலே
சொன்ன கருத்தில் இரு விஷயங்களைச் சொல்ல வேண்டும். சாதனை அல்லது வெற்றி (இரண்டிற்கும்
சிறு வித்தியாசம் உண்டு என்றாலும்) இவற்றிற்கு இலக்குகள் நிர்ணயிப்பது அவசியம் என்றாலும் அந்த
இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நேர்மையானதாக, நல் வழியில் எடுக்கப்படுவதாக
இருக்க வேண்டும்.
ஆம்பிஷன்
– Ambition – தவறில்லை. ஆம்பிஷியஸ் – Ambitious என்பதும் நல்லதுதான் ஆனால் எப்படியேனும் (இந்த வார்த்தை மிக மிக முக்கியம்)
அடைய வேண்டும் என்று வெறித்தனத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒரு மனிதனின் குணங்களையும்,
நல்ல பண்புகளையும் வீழ்த்தி ஆளுமைத் திறனைச் சிதைக்கவும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கவனம் மிகத் தேவை. வெற்றி, சாதனை என்பதை விட வாழ்க்கையின் எந்தச் சூழலையும் மனம் தளராமல்
எதிர்கொள்ளும் திறன் தான் முதலில் போதிக்கப்பட வேண்டும்.
இதற்குத்தான்,
பல சாதாரணக் குழந்தைகளுக்குக் கற்றலுக்கான, நல்ல ஆளுமைத் திறனை, தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள,
வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தைரியமாக எதிர்கொள்ள
சூழல் இல்லை என்பதால் பள்ளி, கல்லூரி, ஆசிரியர்களின் பங்கு மிகமிக இன்றியமையாததாக ஆகிறது.
குழந்தைகள்
உளவியல், கல்வி உளவியல் பயிற்சி பெற்று கவுன்சலிங்க் செய்து வரும் நட்பு ஒருவர் கேட்ட
கேள்வி, “எப்படி ஆசிரியர்கள் கல்வி உளவியல், குழந்தைகள் உளவியல் பயிற்சி பெறாமல் ஆசிரியர்களாகிறார்கள்
என்பது ஆச்சரியம். கூடவே வேதனை. படித்த பெற்றோரும் குழந்தைகளைக் கையாளத் தெரியாமல்….என்னிடம்
உளவியல் கவுன்சலிங்கிற்கு வரும் பல குழந்தைகளைப் பார்க்கும் போது வரும் ஆதங்கம் இது,
என்றார்.
ஆசிரியர்கள்
பலரும் பாடத்திட்ட வளர்ச்சிக்கும், காலக்கட்டத்திற்கும் ஏற்ப மேம்படுத்திக் கொள்ளாமை,
ஆசிரியப்பயிற்சி சரியான விதத்தில் கொடுக்கப்படாமை, அப்பயிற்சியை உணர்ந்து கல்லாமை,
அதை நடைமுறைப்படுத்தாமை, மதிப்பெண்களுக்கு மட்டுமே பயிற்றுவித்தல், ஸ்மார்ட்ஃபோனுக்கு
அடிமையாதல், பொறுமை இல்லாமை என்று பல காரணங்கள்.
இதில்
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைச் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களில் சாதிப்போர்
அதிகம் ஆனால் இவர்கள் முட்டாள் என்று கைவிடப்பட்டு ஒதுக்கப்படும் போது வாய்ப்புகள்
இல்லாமல் சுருங்கிப் போகிறார்கள். (கற்றல் குறைபாடு என்று நான் இங்கு குறிப்பிடுவது
ஸ்பெஷல் குழந்தைகள் அல்ல.)
ஆசிரியப்பயிற்சி
என்பதே சும்மா சான்றிதழ் பெறுவதாக, பல ஆசிரியர்களும் சான்றிதழ் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், கற்பித்தலில் பூஜ்ஜியமாக இருக்கிறார்கள், சிலர் ஒழுக்கத்திலும் மோசமாக இருக்கிறார்கள்
என்பது மிக மிக வேதனையான, ஆதங்கப்பட வேண்டிய விஷயம், என்பதை நான் இங்கு வேதனையுடன்
பதிவு செய்கிறேன். சமூகவலைத்தளங்களுக்கு, இணையத்திற்கு அடிமையான ஆசிரியர்கள் பலரின்
செயல்பாடுகள்தான் என்னை அப்படி எழுத வைத்தது. (பதிவுலகில் உள்ள ஆசிரியர்கள் என்னை மன்னிக்கவும்.)
ஆசிரியர்
என்பவர், மாணவர்களை மையமாகக் கருத்தில் கொண்டு, கருணையுடன், நட்பாக, மெய்யியலாளராக,
நல்லவ வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்கள். இது பெற்றோருக்கும் பொருந்தும். Friend,
Philosopher, Guide
இதைப்
பற்றி எழுத வேண்டுமென்றால் பெரிய கட்டுரையாக தொடராக உதாரணங்களுடன் எழுதலாம். அத்தனை
இருக்கிறது. இங்கு இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.
நன்றி மதுரைத்தமிழன்.
-------கீதா
