வெள்ளி, 9 டிசம்பர், 2016

தமிழகத்திற்குத் தாயாகிய அம்மு

Image result for jayalalitha as ammu
படம் இணையத்திலிருந்து

கோமளவல்லி! பாட்டியின் பெயர் சூட்டப்பட்டவர. 1948 ஆம் வருடம், ஃபெப்ருவரி மாதம் 24 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள மேலக்கோட்டையில் பிறந்தார்.. பெற்றோர் வேதவல்லி-ஜெயராம். கோமளவல்லி, ஜெயலலிதா ஆன பிறகும், அம்மு என்று அவரது அம்மாவாலும், சுற்றத்தாராலும், பின்பு அவருடன் நடித்தவர்களாலும், நட்பு வட்டத்தாராலும் அழைக்கப்பட்டவர்.

சிறு வயதில் தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டவர். அன்னையின் அருகாமைக்கும், அன்பிற்கும் ஏங்கியவர். அன்னை வேதவல்லி, சந்தியா எனும் பெயரில் வெள்ளித் திரையில் நடித்துவந்ததால், அம்மு சென்னைக்கு வந்து அவருடன் இருந்த போதும், மிகவும் நன்றாகப் படித்து 10 வது வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்தாலும் அந்த மகிழ்வைப் பல குழந்தைகளைப் போல், தன் தாயுடன் நேரம் செலவிட முடியாததால் கொண்டாடிட முடியவில்லை. பள்ளியில் நட்புகள் வட்டத்தில் இவரை நடிகையின் மகளாகச் சற்று ஏளனமாகப் பார்த்ததால் நட்புகள் இல்லை. கல்லூரியில் தொடர்வதற்கான உதவித் தொகை கிடைத்தும் தொடர முடியவில்லை. விருப்பமானதைச் செய்ய முடியவில்லை.

பதின்ம வயதில், அவருக்குப் பிடிக்காத திரை உலகில் அவரது தாயாரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். பிடிக்கவில்லை என்றாலும், பல்வகை நடனக் கலையிலும், இசையிலும் சிறந்து விளங்கியதாலும், தான் எடுத்துக் கொண்ட தொழிலைச் சீராகச் செய்ததாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல படங்களில் நடித்து அத்துறையில், அப்போதைய காலக்கட்டத்தில், முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்.

அவரது 23 வது வயதில் தாய் சந்தியாவை இழந்திட, அதுவரை எந்தவிதப் பொறுப்புகளும் கையாண்டிராத அவர் என்ன செய்வதென்று அறியாமல் தவித்திருக்கிறார். பள்ளிக்காலம் முதல் எப்போதும் தனிமையிலேயே இருந்ததால், பல கசப்பான அனுபவங்களுக்கும் உட்பட்டு அதனால் நேர்ந்த பல அனுபவங்கள் அவரது அமைதியான,  அச்சத்துடன் இருந்த இயல்பை மாற்றத் தொடங்கியிருக்கிறது.
Image result for jayalalitha as ammu
படம் இணையத்திலிருந்து

பல படங்களில் எம்ஜிஆருடன் நடித்திருக்கிறார் என்பது மட்டுமின்றி ஜெயலலிதாவின் திறமைகளால் கவரப்பட்ட அவர், ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகம் செய்தார். ஜெயலலிதாவிற்கு அதில் விருப்பமில்லை என்றாலும் ஜெயலலிதாவிற்கும் அவரிடம் ஈர்ப்பு இருந்திருக்கிறது. விரைவிலேயே புகழ்பெறத் தொடங்கிக் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், ஆங்கிலப் புலமையினால் ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆனார். தமிழ் மொழி தவிரப் பிற தென்னிந்திய மொழிகளும் அறிந்தவர்.

மக்கள்திலகத்தின் மறைவிற்குப் பிறகு எம்ஜிஆரின் வாரிசாக அடையாளப்படுத்தப்பட்டுக் கட்சியில் பல போராட்டங்களைச் சந்தித்து, கட்சியின் தலைவராகி, முதன் முதலாக எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர், தமிழ்நாட்டின் முதல் இளம் வயது முதல்வராகி 3 முறை முழுமையாகத் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். பல தவறுகள் நேர்ந்ததும், சிறைக்குச் சென்றதும் எல்லோரும் அறிந்ததே!.

இப்போது பரவலாகப் பேசப்படும் பெற்றோர் குழந்தை வளர்ப்பு - உளவியல் வழியாகப் பார்த்தால், சிறு வயது, பருவ வயதில் எற்பட்ட தனிமை, தனது இளமைக்கால வாழ்வு குறித்து நிறைவேறாத சில ஏக்கங்கள், அம்மாவின் அன்பு, கூடப் பிறந்த சகோதர, சகோதரி என்ற குடும்ப வாழ்வு இல்லாமை (அவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார் என்ற செய்தி 2014ல், பங்களூர் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக வெளிவந்தது. இதைக் குறித்து “நமது” வலைத்தளத்திலும் உள்ளது.), சட்டசபையில் ஏற்பட்ட அவமானம்,  என்று பல காரணங்கள்தான் அவரது கர்வம், பிடிவாதம், மன உறுதி, ஆண்களின் மத்தியிலும், எல்லோரது மத்தியிலும், எல்லாவற்றிலும் தானே முன்னிற்க வேண்டும் என்ற தீவிரம் மற்றும் தன்னை யாரும் நெருங்கவிடாமல் வட்டம் இட்டது என்று அவரது இயல்பிற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், கல்லிற்குள் ஈரம் போன்று அவருள்ளும் அன்பு இருந்தது என்பதற்கான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கிறது.

தவறுகள் பல செய்தாலும், காவேரி நீர் விவகாரம், முல்லைப்பெரியாறு அணை விவகாரம், சமீப காலத்தில் தமிழீழம் என்று இவற்றில் உறுதியாகவும், சில நல்ல திட்டங்கள், அம்மா நலத்திட்டங்கள் என்று அறிமுகப்படுத்தியும் அதைச் செயலாக்கவும் செய்தார். நடுவண் அரசின் சில சட்டங்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளவும் செய்தார்.
அவரைச் சுற்றி ஒரு முகத்துதிக் கூட்டம். அவரைச் சுற்றி, அவர் நம்பிய ஒரு கூட்டம் அவருக்கு எதிராக விளையாடுகிறது என்பதை அவர் அறிவதற்கு ஏனோ தாமதமாகியது. அறிந்த நேரத்தில் காலம் கடந்து போனது. இறுதியில் எல்லோரையும் கடந்தே போனார். எதிர்க்கட்சியினர் கூட நேர்மறை எண்ணத்தில் கவிபாடினர். அவரது மரணத்தில் பல மர்மங்கள் உள்ளன என்று இப்போது பேசப்பட்டாலும், அவர் மறைந்து இதோ 4 நாட்கள் ஆகிவிட்டன.
Image result for jayalalitha as ammu
படம் இணையத்திலிருந்து

குன்றின் மேல் வைத்த விளக்காய்த் திகழ்ந்து வரலாறாய் மாறிய ஜெயலலிதாவை, அம்முவை அம்மாவாக மாற்றிய தமிழ் இதயங்கள் உண்மையிலேயே அவ்விளக்கை ஒளிர உதவிய குன்று என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். தமிழினத்தின் பண்பும். அன்பும் அப்படி என் நாட்டவராயினும், எவினத்தவாராயினும், எம்மதத்தவராயினும் அவர்களை எல்லாம் தமிழ் இனத்தின் அன்பிற்கு அடிமை ஆக்கிவிடும். 
செய்நன்றி மறவா தமிழினத்தின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - பென்னி க்விக்கிற்குத் தமிழினம் கொடுத்த இடத்தைப் பாருங்கள்! குல தெய்வத்திற்கும், திருவள்ளுவருக்கும் இணையான ஓரிடம்!!! குமுளிக்குச் சென்றிருந்த போது அண்ணன் வீட்டில் கிடைத்தது இந்த அழைப்பிதழ்.

அதனால்தானே, இங்கிலாந்திலிருந்து வந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் பொறியியலாளரான பென்னி க்விக், ஆங்கிலேய அரசு வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் தன் சொந்தச் சொத்துக்களை விற்று பாலைவனமாய் மாறவிருந்த அன்றைய மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களை விளைநிலமாக்க முல்லைப்பெரியாறு அணையைக் கட்டி முடிக்க முடிவு செய்தார்.

நடிப்பார்வத்தில் கேரளாவிலிருந்து வந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அதனால்தானே மரணம் வரை தமிழ் இனத்தின் இதயக்கனியாய் நின்று ஆட்சி புரிந்தார். அப்படித் திறமை உள்ளவர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்களைத் தன்னலமில்லா பொது நலவிரும்பிகளாக்கி, உலகளாவிய பேரையும், புகழையும் அவர்களுக்குத் தேடிக் கொடுத்துத் தானும் பயன் பெறும் இனம்தான் தமிழினம். வந்தாரை வாழவைக்கும் இனம்தான் தமிழ்னம். ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைகள் தானே வளரும் என நம்பும் இனம் தான் தமிழினம். அதுமட்டுமல்ல, நன்மையும், உண்மையும் எங்கிருந்தாலும் எவரிடத்திலிருந்தாலும் அவர்களை எல்லாம் தலை மேல் ஏற்றிக் கொண்டாடும் இனம்தான் தமிழினம்.

அப்படித்தானே “கல்விச் சாலையைத் தந்த ஏழைத் தமிழனாம்” பெருந்தலைவர் காமராசரை அரியணை ஏற்றியது. அப்படித்தானே சாதியும் மதமும் தீண்டாமையும் இறைவனின் தோளிலேறி அட்டகாசம் செய்த போது, சாதிக்கும், மதத்திற்கும் முன் மௌனமாகும் இறைவன் திராவிடர்களுக்குத் தேவை இல்லை என்ற புரட்சித் தலைவர் பெரியாரின் பின்னால் தமிழினத்தவர் அணிவகுத்தார்கள். அதனால்தானே அவ்வழி வந்த அண்ணாவையும், கலைஞரையும், எம்ஜிஆரையும், ஜெயலலிதா பார்ப்பனர், ஐயங்கார் என்பதையும் புறம்தள்ளி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பித்து முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட்டு அரியணை ஏற்றி அரசாள வைத்தார்கள். தமிழினத்திற்குத் தெரியும் பிறப்பால் பிராமணக் குலத்தவரான அவர் தமிழினத்துடன் திராவிட வாழ்க்கை வாழ்ந்து இறப்பால் திராவிடக் குலத்தவர் ஆவாரென்று.

அதன் பின், பொறுக்க முடியாதவை நிகழும் போது மட்டும் அரசாளும் பொறுப்பை மாற்றி மாற்றி கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் கொடுத்ததும் அதனால்தானே. ஆனால், இப்போது இருவரில் ஒருவர் தமிழகத்தை விட்டுச் சென்று விட்டார். மற்றொருவரின் உடல் நலன் குன்றி வருகிறது. இனி யார்? எப்படி என்ற குழப்பம் தமிழ் இனத்தின் இதயத்தைத் துளைக்கிறது. இதே குழப்பம் பேரரறிஞர் அண்ணாவின் மரணத்தின் போதும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் மரணத்தின் போதும் உண்டானதுதானே. அரியணை ஏற தகுதி உள்ளவர்களைத் தமிழினம் கூடியவிரைவில் கண்டெடுக்கும். கண்டெடுத்து, பாறையிலும் வேர் இறக்கி கல்லுக்குள்ளும் ஈரம் காணும் தமிழினம், அவர்களைப் புடம் செய்து, தமிழினத்திற்கும் அவர்களுக்கும், நன்மையும், பேரும், புகழும் சேர்க்கும் வகையில் மாற்றியெடுக்கும் என்பது உறுதி.

(பின் குறிப்பு: சிற்றின்ப விரும்பிகளே நீங்கள் பேரின்ப விரும்பிகளாகத் தயாராக இருந்தால் மட்டும், செல்வம் சேர்ப்பதை விட - அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போல, அப்படியே சேர்த்தாலும், மக்களுக்கும் சேவை செய்து, மக்கள் திலகம் எம்ஜிஆர், அம்மா போன்றவர்களைப் போல மக்களை ஈர்க்கும் சக்தியும், நாடே அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் ஆட்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் அரியணைப் பக்கம் செல்லுங்கள். இல்லையேல், அவ்வரியணை உங்களை அதிகக்காலம் சுமக்காது. அப்படிச் சில காலம் உங்களைச் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் உங்கள் மறைவு இது போல் வரலாற்றுச் சம்பவமாக ஆகாது.)






25 கருத்துகள்:

  1. "மக்களை ஈர்க்கும் சக்தியும், நாடே அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் ஆட்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் அரியணைப் பக்கம் செல்லுங்கள். இல்லையேல், அவ்வரியணை உங்களை அதிகக் காலம் சுமக்காது." என்ற உண்மையை ஏற்றவர் அடுத்த தமிழக முதலமைச்சர் என்பேன். அடுத்தடுத்துத் தொடர்ந்தும் முதலமைச்சர் ஆகலாம் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவலிங்கம் யாழ்பாவாணன் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  2. சிறு வயது, பருவ வயதில் எற்பட்ட தனிமை, தனது இளமைக்கால வாழ்வு குறித்து நிறைவேறாத சில ஏக்கங்கள், அம்மாவின் அன்பு, கூடப் பிறந்த சகோதர, சகோதரி என்ற குடும்ப வாழ்வு இல்லாமை////

    உண்மை தான். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர். இது அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும். இவரைப்போல் சாதிக்கவும் வேண்டாம். சோதனைகளும் வேண்டாம் என சொல்லும் படியாய் ஆரம்ப காலத்தில் எத்தனை பேரின் வெறுப்பை சம்பாதித்து ஆணவக் காரியாக தன்னை காண்பிக்த்து கொண்டாரோ அத்தனை பேரின் இரக்கத்தையும், பரிதாபத்தையும் பெற்று பல வித மர்மங்களுடன் மறைந்தும் போனார்.செல்வங்களை விட சொந்தங்கள் முக்கியம் என உணர செய்திருக்கின்றது இவர் மரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நிஷா சகோ தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  3. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையார் நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  4. மக்களின் மனங்களில் அவர் எந்த அளவு இடம் பெற்றிருந்தார் என்பதை இப்போது மக்களின் உணர்வுகளில் காணமுடிகிறது. இனி அதிமுக என்ன ஆகும் என்றும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! அதுவும் எனக்குத் தமிழகம் என்றால் கொள்ளைப் பிரியம். மிக்க நன்றி ஸ்ரீராம் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  5. மிக மிக அருமையான
    நினைவாஞ்சலி ..
    மனமார்ந்த நல்வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  6. பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  7. மக்களின் மனதில் இடம் பிடித்தவர் என்பதைவிட மக்களின் குனிந்து கொடுக்கும் பக்தியில் நம்பிக்கை கொண்டவர் ஆனால் அவரையும் கைக்குள் போட்ட பாவையும் இருந்தாரென்பதுதானே உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  8. திருமதி இந்திரா காந்திக்குப் பிறகு இரும்புப்பெண்மணி என்ற சொல்லுககு ஏற்ற பொருளைத் தந்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  9. கடைசியில் மக்களின் மனங்களை ஈர்த்துக் கொண்டார்.. தமிழகம் கலங்கிப் போனது உண்மை.. அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  10. அருமையான கட்டுரை அண்ணா/கீதா. என்னுடைய கருத்துகளும் இப்படியே. மனரீதியான தாக்கம் எப்பேர்ப்பட்ட விளைவுகளைச்செய்யும் என்பதற்கான உதாரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஸ் சகோ தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  11. நல்லதொரு பகிர்வு...
    ஜெயலலிதா அவர்களுக்கு நிறைவான அஞ்சலி.
    பென்னி குக் ஆஹா...
    பணமும் பதவியும் விரும்புவோர் மத்தியில் அந்தம்மா உறவுகளைத் துறந்து வாழ்ந்ததுஅவரின் மரணத்தில் தெரிந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  12. அரியதொரு பொன்மணி. கடைசி காலத்தில் எந்த ஒரு மக்களையும் பார்க்கக் கூட கொடுத்து வைக்காத சிறையில் இருந்து விட்டாரே. உள்மனம் தவித்திருக்கும். திரும்ப ஒருநாள் தமிழகத்தைப் பார்த்து மனதால் யாவருடனும் பேசிவிட்டுப் போ அம்மா. மேலும் சாந்தி கிடைக்கட்டும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. நல்ல பதிவு!

    //அரியணை ஏற தகுதி உள்ளவர்களைத் தமிழினம் கூடியவிரைவில் கண்டெடுக்கும். கண்டெடுத்து, பாறையிலும் வேர் இறக்கி கல்லுக்குள்ளும் ஈரம் காணும் தமிழினம், அவர்களைப் புடம் செய்து, தமிழினத்திற்கும் அவர்களுக்கும், நன்மையும், பேரும், புகழும் சேர்க்கும் வகையில் மாற்றியெடுக்கும் என்பது உறுதி// - மிகவும் ரசித்த வரிகள்! உங்கள் உள்ளார்ந்த ஏக்கமும் நம்பிக்கையும் அப்படியே தெரிகின்றன.

    பின் குறிப்பு உண்மைக் குடிமகளின் சீற்ற முழக்கம்! அருமை சகா!

    பதிலளிநீக்கு
  14. மிக அருமையான பதிவு. மக்கள் மனதில் இடம்பெற்றிருந்த ஓர் அருமையான பெண்மணி மறைந்து விட்டார். அவர் விட்டுச் சென்றிருக்கும் வெற்றிடத்தை எவராலும் நிரப்ப முடியாது!

    பதிலளிநீக்கு