புதன், 20 அக்டோபர், 2021

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி – சியமளா மாமியின் கதை; மாமியார் மெச்சிய மருமகள்

 

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி……

முதியவர். முதுமையை எளிதாகக் கடப்பது என்பது எளிதல்ல. அதுவும் 90 வயதைக் கடந்தவரை, சுய நினைவுடன் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட அவரது உடல்நலத்தைப் பேணிக் கவனித்துக் கொளல் என்பது சாதாரண காரியமல்ல. 96 வயதான அம்மாவை எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும், அதுவும் இந்தக் கோவிட் சமயத்தில் என்பதற்கு அரிதான முன்னுதாரணமானவர்களில் ஒருவர்.

தன் தேவைகளைச் சுருக்கி, வயதான அம்மாவின் கோணத்திலிருந்து ஒவ்வொன்றையும் சிந்தித்து அதை ஒட்டியே தன் பணிகளை மேற்கொண்டு அம்மாவின் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப அம்மாவின் சௌகரியத்திற்கேற்ப, அம்மாவின் செயல்களை, நித்தியக் கடமைகளை எளிதாக்கிக் கொடுத்தும், உதவியும் பார்த்துக் கொண்டார் அந்த அம்மாவின் கடைசி மகன் தன் முதுகுவடத்தின் வால் பகுதிப் பிரச்சனையினால் ஏற்பட்ட இடுப்பு, முதுகுவலியினிடையில். அம்மாவிற்கு எப்படிச் செய்தால் அவருக்குப் பாதிப்பு இருக்காது, சௌகரியமாக இருக்கும் என்ற கோணத்தில் ஆராய்ந்து அதற்கேற்ப பல விஷயங்களையும் பார்த்துப்  பார்த்துச் செய்தார். 

அம்மாவின் வயதிற்கான சிறிய பயிற்சிகள், கூடியவரை தன்னைத்தானே பார்த்துக் கொள்வதற்கான உதவி மற்றும் பயிற்சி, நினைவுத்திறன் அதிகம் மங்கிவிடாமல் இருக்க சில பயிற்சிகள் (வாசிக்க வைத்தல், அவ்வப்போது கேள்விகள் கேட்டல், உறவினர் பெயர்கள் கேட்டல், அன்று அவர் சாப்பிட்ட உணவு, டிவி நிகழ்ச்சி பற்றி என்று), உணவைக் கூடத் தன் விருப்பம் பார்க்காமல் அம்மாவுக்கு ஏற்ற உணவு செய்தது உட்பட.

வயதான காரணத்தினால் அம்மா இயற்கை உபாதை கழிக்கச் சிரமப்பட்ட போது அருவருப்பு பாராமல், அம்மா கிரமப்படாமல் இயற்கை உபாதை கழிக்க உதவியது; வாக்கர் அல்லது சக்கரநாற்காலி உதவியுடன் வீட்டில் கைத்தாங்கலாய் வளைய வர வைத்தது; அம்மாவின் செவித்திறனுக்கேற்ப எழுதிக் காட்டி, அருகில் இருந்து ஒவ்வொரு தேவையையும், சிறு சிறு தேவையையும் கூடக் கவனித்து மிகவும் பொறுமையுடன் பதிலளித்து, அன்புடன் கவனித்துக் கொண்டது; எல்லாம் மிகையல்ல. இப்படிச் செய்பவர்கள் அரிதானவர்கள்! அந்த அரிதானவர்களில் ஒருவராய்...

எனது கடைசி மைத்துனர்!

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி இவன்தாய்

என்நோற்றாள் கொல்எனும் சொல்.

 *****************************************************************************************

சியமளா மாமி எழுதிய கதை: மாமியார் மெச்சிய மருமகள்

மாமியைப் பற்றி: மாமியும் அவரது  குடும்பமும் எங்களுக்குத் திருவனந்தபுரத்திலிருந்த போது மலர்ந்த நட்பு. நாங்கள் தாமசமிருந்த வீட்டின் கீழ்ப் பகுதியில் நாங்கள். மாடியில் மாமியின் குடும்பம். கணவர், இரு மகன்கள், ஒரு பெண். பெரிய மகன் அப்போது மருத்துவப் படிப்பில் ஹவுஸ் சர்ஜனாக இருந்தார். இரண்டாவது மகன் பொறியியல் படிப்பிலும், மகள் வேளாண்மைக் கல்லூரியிலும் படித்து வந்தனர்.

என் மகன் அப்போது ஒன்றே கால் வயதிற்குள்தான். இவர்கள் அனைவருக்கும் செல்லப் பிள்ளை. 

தற்போது மாமியின் பெரிய மகன் திருவனந்தபுரத்தில், அரசுமருத்துவமனையில் ஆர்த்தோ சர்ஜன். இரண்டாவது மகன் அமெரிக்காவில். மகள் இங்கு இருக்கிறார். மாமா தற்போது மகளுடன். அனைவருமே எங்கள் நலம்விரும்பிகள்.  

மாமி இறைவனடி சேர்ந்து 1 ½ வருடங்கள் ஆகிறது. மாமி கற்பனை வளம் உள்ளவர். தன் ஆத்ம திருப்திக்கு அவ்வப்போது எழுதுவதை என்னிடம் சொல்லிக் காட்டுவார். தற்போது அவரது மகள் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவரிடம் இருந்த சில கதைகளைக் கொண்டுவந்தேன். மீதி சென்னையில் இருக்கிறது.

மாமி, எழுத்தாளர் தேவனின் விசிறி. சாம்பு கேரக்டரை மிக மிக ரசித்தவர் என்பது அவர் கதைகளில் தெரிகிறது. அதையொத்த கதைகள் சிறிய சிறிய கதைகளாகச் சில எழுதியிருக்கிறார்.  அவற்றில் ஒன்று இங்கு. மற்றவை பிறிதொரு சமயம்.

மாமியார் மெச்சிய மருமகள்

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த இன்ஸ்பெக்டர் சந்தானத்தை நோக்கி ஒடி வந்தார், ஊரே மூக்கில் விரல் வைக்கும் கிரிமினல் வக்கீல் வரதராஜன்.

“உட்காருமய்யா. என்ன மூச்சிறைக்க ஒடி வருகிறீர்”

“ஸார், நான் என் வீட்டிலேயே ட்ராயரில் வைத்திருந்த 4 லட்சம் ரூபா எங்க போச்சு, எப்படிப் போச்சுன்னு தெரியலையே! அதான் கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்.”

“உமக்கே தெரியலையா!? யாரெல்லாம் வந்தா உங்களைப் பார்க்க”

“மதுரையிலருந்து சாம்பமூர்த்தி, ஒரு கேஸ் விஷயமா வந்திருந்தார். அப்புறம்…அதுதான்…எதிர்க்கட்சி அம்மா அடிதடி விஷயமா கேஸ் எடுத்துண்டு வந்தா. இப்படி 5,6 பேர் வந்தா. யார் மேல எப்படிக் குற்றம் சாட்டறது? புரியலை. அதான் உங்ககிட்ட கேஸ் கொடுத்துட்டுப் போகலாம்னு….”

இன்ஸ்பெக்டர் சந்தானம் ஆட்களை விட்டு வக்கீல் சொன்ன ஆட்களைச் சல்லடை போட்டு விசாரித்துக் குழம்பி நின்றார். அவர்களுக்கு எப்போதும்  ஆபத்பாந்தவன் விச்சு தானே! உடனே அவரைப் பார்க்கக் கிளம்பினார்.

விபரத்தைக் விச்சுவிடம் சொன்னார். விச்சு எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

“என்ன ஓய் விச்சு! உமக்கு இந்த கேஸ்ல ஏதாவது பிடி கிடைத்ததா” என்றார் சந்தானம்.

அப்போது ரேடியோவில் ‘மாமியார் மெச்சிய மருமகள்’ படத்திலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. விச்சு உள்ளே பார்த்து,

“சச்சு, அந்த ‘மாமியார் மெச்சிய மருமகளை’ உரக்க வை” என்றார்.

உடனே சந்தானம், “என்ன விச்சு? நேரடியாய் சொல்ல மாட்டீரோ? இப்போதே வரதராஜன் வீட்டிற்குப் போய் விசாரிக்கிறேன்” எனப் புறப்பட்டார்.

வரதராஜன் வீட்டில் அவர் மனைவியையும், அம்மாவையும் தனித்தனியாக விசாரித்தார்.

“இத்தனைப் பேர் வந்து போற இடத்துல 4 லட்ச ரூபாயை ட்ராயர்ல பூட்டாம வைச்சுட்டுப் போனவரைக் கண்டிக்கணும்னு நான்தான் அதை எடுத்து என் மாமியார்கிட்ட கொடுத்தேன்.” – மருமகள்.

மாமியாரும் மருமகளை மெச்சி லாக்கரில் வைத்திருக்கிறாள். இதை அறியாத அந்த வக்கீல் பதறிப் போய் கேஸ் கொடுத்திருக்கிறார்.

‘விச்சுவுக்கு இதெல்லாம் எப்படிச் சட்டென உதித்ததோ’ இன்ஸ்பெக்டர் சந்தானத்துக்கு ஆச்சரியம்.  விச்சுவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார் இன்ஸ்பெக்டர் சந்தானம்.

‘எதற்கு இந்த இன்ஸ்பெக்டர் நன்றி சொல்கிறார்?’ எனத் தெரியாமல் முழி முழின்னு முழித்துக் கொண்டிருந்தார் விச்சு! - ஷியாமளா (13-6-2010)

 

------கீதா

39 கருத்துகள்:

 1. அடடே...   துப்பறியும் சாம்பு பாணியில் விச்சு-சச்சு!  நல்ல கதை.  சின்னஞ்சிறுகதையில் நல்ல கற்பனை.  இதுமாதிரி நான் ஒன்று யோசித்து வைத்திருந்தேன்.  அது அடிபட்டுப்போச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுமாதிரி நான் ஒன்று யோசித்து வைத்திருந்தேன். அது அடிபட்டுப்போச்சு!//

   ஹா ஹா ஸ்ரீராம் நான் அடிக்கடிப் புலம்புவது போல். நான் எழுத நினைத்து அல்லது பாதி எழுதி வைத்திருப்பது தாமதத்தினால் பல வெளியில் வரும் போது தோன்றும்.

   ஸ்ரீராம் அடிபட்டு எல்லாம் போகவில்லை. உங்கள் கற்பனையையும் தட்டி விடுங்கள். இப்படியானவை எவ்வளவு வந்தாலும் ரசிக்கலாம்.

   மாமி இன்னும் எழுதி வைத்திருக்கிறார். என்னிடம் உள்ளவற்றை அவ்வப்போது பகிர்கிறேன். மீதியை அவர் மகளிடம் சென்னையில் அவர்கள் விட்டிலிருந்து எடுத்து வரச் சொல்ல வேண்டும்.

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 2. உங்கள் மைத்துனருக்கு பாராட்டுகள்.  அம்மா அப்பாவை கடைசி காலத்தில் பார்த்துக்கொள்வது வரம்.  பொறுமையாய் பார்த்துக் கொண்டது வணக்கத்துக்குரிய செயல்.

  பதிலளிநீக்கு
 3. ஹை கீதாமா,
  அந்த மாமி என்ன லக்ஷணமாக இருக்கிறார்.
  என் அம்மாவின் கசின் அம்மங்கா பாப்பா இப்படித்தான் இருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இளம் வயதிலும் கூட. ரொம்ப மென்மையானவர்

   //என் அம்மாவின் கசின் அம்மங்கா பாப்பா இப்படித்தான் இருப்பார்.//

   ஓஹோ. அப்படி என்றால் உங்களுக்கும் சில நினைவுகள் வந்திருக்குமே!!

   மிக்க நன்றி அம்மா கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 4. நல்ல மாமியார் ,நல்ல மருமகள்.
  சாமர்த்திய சாலிதான்.
  இன்னோரு தடவை படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வல்லிம்மா மீதிப் பகுதியையும் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்

   மிக்க நன்றி அம்மா

   கீதா

   நீக்கு
 5. தாயை மனம் நோகாமல் பார்ப்பவர்கள் சிலரே... அவருக்கு இறையின் ஆசி கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கில்லர்ஜி. நிச்சயமாக.

   மிக்க நன்றி கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 6. அம்மாவுக்குத் தோதாக எல்லா விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்த அந்த நல்ல மனிதருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். ஆண்டவன் அவரை சிறப்பாக வைத்திருக்கட்டும்.

  சாம்பு போல விச்சு! ஆஹா.. நல்ல கதை. சிறப்பாக எழுதி இருக்கிறார் மாமி. அவரது மற்ற கதைகளையும் முடிந்த போது இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மாவுக்குத் தோதாக எல்லா விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்த அந்த நல்ல மனிதருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். ஆண்டவன் அவரை சிறப்பாக வைத்திருக்கட்டும்.//

   ஆமாம். மிக்க நன்றி வெங்கட்ஜி.

   சாம்பு போல விச்சு! ஆஹா.. நல்ல கதை. சிறப்பாக எழுதி இருக்கிறார் மாமி. அவரது மற்ற கதைகளையும் முடிந்த போது இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.//

   ஆமாம் ஜி. பகிர்க்கிறேன் கண்டிப்பாக.

   மிக்க நன்றி வெங்கட்ஜி!

   கீதா

   நீக்கு
 7. கதை நல்ல சஸ்பென்ஸ். ஒரு பக்கக் கதையாக ராம் மலரில் வெளியிடலாம்

  அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் மைத்துனர் தியாகம் பெரிது. அவரின் கடைசி காலத்தில் அவரை யார் பார்த்துக் கொள்வார். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை நல்ல சஸ்பென்ஸ். ஒரு பக்கக் கதையாக ராம் மலரில் வெளியிடலாம்//

   இன்னும் இருக்கிறது அவ்வப்போது இங்கு பகிர நினைத்திருக்கிறோம்

   அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் மைத்துனர் தியாகம் பெரிது. //

   ஆமாம். அம்மா தற்போது இல்லை ஜெகே அண்ணா.

   அவரைக் கவனித்துக் கொள்ளவும் அன்புள்ளங்கள் இருக்கின்றன.

   மிக்க நன்றி அண்ணா

   கீதா

   நீக்கு
 8. மைத்துனருக்குப் பாராட்டுகள். அம்மாவஈ இப்படிப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டதற்குப் பாராட்டுகளும் மனமார்ந்த நல்லாசிகளும். சியாமளா மாமியின் கதை சாம்புவைத் தான் ஒத்திருக்கிறது. ஆனால் சியாமளா மாமி எங்களுக்குத் திருப்பாவை கற்றுக் கொடுத்த "அத்தம்மா" ஶ்ரீமதி ராஜம்மாள் சுந்தரராஜனை நினைவூட்டுகிறார். அவர் இப்படித் தான்! ஒன்பது கஜம் மடிசாரில் இதே மாதிரி ஐயங்கார்க் கட்டில், நெற்றியில் ஶ்ரீசூர்ணத்தோடும் கைகளில் ஜால்ராக்களும் வைத்துக் கொண்டு வைரத்தோடுகள் பளபளக்கத் திருப்பாவை பாடும்போது! அடடா! சுமார் பத்து வயதில் இருந்து போயிருக்கேன் திருப்பாவை வகுப்புக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கீதாக்கா.

   //ஆனால் சியாமளா மாமி எங்களுக்குத் திருப்பாவை கற்றுக் கொடுத்த "அத்தம்மா" ஶ்ரீமதி ராஜம்மாள் சுந்தரராஜனை நினைவூட்டுகிறார். சுமார் பத்து வயதில் இருந்து போயிருக்கேன் திருப்பாவை வகுப்புக்கு.//

   ஓ!! நல்ல நினைவுகளை எழுப்பியது இல்லையா?

   ஆஅமாம் மாமியின் கதைகள் சாம்பு கேரக்டர் போலத்தான்

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
 9. மகன்தாய்க்கு ஆற்றும் உதவி இவன்தாய்

  என்நோற்றாள் கொல்எனும் சொல்.////////////////

  உங்கள் மச்சினரைப் பற்றி அறிய மிக மிக மகிழ்ச்சி.
  எல்லோருடைய முதுமைக் காலமும் சங்கடமில்லாமல் செல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வல்லிம்மா.

   //எல்லோருடைய முதுமைக் காலமும் சங்கடமில்லாமல் செல்ல வேண்டும்.//

   அதே வல்லிம்மா.

   கீதா

   நீக்கு
 10. மாமிக்கு பலே சபாஷ்.
  துப்பறியும் சாம்பு போலவே , விச்சுவும்
  யதேச்சையாகச் சொன்ன சொல்லை மந்திரமாக வைத்து
  இன்ஸ்பெக்டர் கண்டு பிடித்துவிட்டார். மிகக் கச்சிதமான கதை.
  சியாமளா மாமிக்கு
  என் அத்யந்த பாராட்டுகள். அழகான மணியான கதை.
  நன்றி கீதாமா. இன்னும் எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துப்பறியும் சாம்பு போலவே , விச்சுவும்
   யதேச்சையாகச் சொன்ன சொல்லை மந்திரமாக வைத்து
   இன்ஸ்பெக்டர் கண்டு பிடித்துவிட்டார். மிகக் கச்சிதமான கதை.//

   ஆமாம் அம்மா. இன்னும் இருக்கிறது அவ்வப்போது பகிர்கிறேன் அம்மா

   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 11. """""""""ஶ்ரீமதி ராஜம்மாள் சுந்தரராஜனை நினைவூட்டுகிறார். அவர் இப்படித் தான்! ஒன்பது கஜம் மடிசாரில் இதே மாதிரி ஐயங்கார்க் கட்டில், நெற்றியில் ஶ்ரீசூர்ணத்தோடும் கைகளில் ஜால்ராக்களும் வைத்துக் கொண்டு வைரத்தோடுகள் பளபளக்கத் திருப்பாவை பாடும்போது! அடடா! சுமார் பத்து வயதில் இருந்து போயிருக்கேன் திருப்பாவை வகுப்புக்கு."""""'நம் கீதா 10 வயதில் சென்ற வகுப்புக்கு என் 12 வயதில் சென்றிருக்கிறேன்.
  அந்த ராகங்கள் தான் மறந்து விட்டன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ வல்லிம்மா ராகங்கள் மறந்தால் என்ன? திருப்பாவை தானே முக்கியம்...

   மிக்க நன்றி வல்லிம்மா

   கீதா

   நீக்கு
 12. கதை நன்றாக இருந்தது. காக்கை உட்கார பனம்பழம் என்பதுபோள, அதிர்ஷ்டம் இருந்தால் யார் வேணுமானாலும் பெரிய ஆளாகிவிடலாம் (விச்சு கேரக்டரைச் சொன்னேன்)

  மாமி - இது குழப்பியது. மாமியாரைச் சொல்கிறீர்களா? என்று புரியலை. இதனை மட்டும் தெளிவாகச் சொல்லியிருக்கலாம், உறவு முறைகளை வைத்து guess பண்ண வைத்துவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 13. கதை நன்றாக இருந்தது. காக்கை உட்கார பனம்பழம் என்பதுபோள, அதிர்ஷ்டம் இருந்தால் யார் வேணுமானாலும் பெரிய ஆளாகிவிடலாம் (விச்சு கேரக்டரைச் சொன்னேன்)//

  ஹாஹாஹா...ஆம்...தேவனின் துப்பறியும் சாம்பு இப்படித்தான். மாமி அவரது ரசிகை. எனவே அதை ஒட்டி என்றாலும் கற்பனை வேண்டும் எழுத.

  //மாமி - இது குழப்பியது. மாமியாரைச் சொல்கிறீர்களா? என்று புரியலை.//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்மா என்று சொல்வேன் அல்லது மாமியார் என்று சொல்வேன் மாமி என்று சொன்னதில் என்ன குழப்பமோ. தலைப்பிலும் பிரித்துதான் சொல்லியிருக்கிறேன். ரெண்டாவது முதல் பகுதி முடிஞ்சதும் பிரித்து ஸ்டார் போட்டிருக்கிறேன்...

  //இதனை மட்டும் தெளிவாகச் சொல்லியிருக்கலாம், உறவு முறைகளை வைத்து guess பண்ண வைத்துவிட்டீர்கள்//

  ஹாஹாஹா ஹையோ நெல்லை என்ன குழப்பம்? இரண்டாவது பகுதியில் மாமி எங்கள் நட்பு என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். திருவனந்தபுரத்தில் என்று. மாமி என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வதாம்?

  மாமியார் என்றால் மாமியார் என்று சொல்லியிருப்பேன்!!!!!!!!!!

  மிக்க நன்றி நெல்லை!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 14. தாயை நன்கு பார்த்து கொண்ட உங்கள் கடைசி மைத்துனருக்கு இறை ஆசியும் தாயின் ஆசியும் எப்போதும் உண்டு. வாழ்க வளமுடன்.

  முதுமையை கடக்க உதவியது மிகவும் சிறந்த சேவை மைத்துனருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. //“சச்சு, அந்த ‘மாமியார் மெச்சிய மருமகளை’ உரக்க வை” என்றார்.//

  நல்ல குறிப்பு கொடுத்து மருமகளை விசாரிக்க வைத்தார்.

  கதையும் நல்லபடியாக முடிந்தது. பணம் எங்கும் போகவில்லை.

  மாமியின் கதை அருமை. மாமி தெய்வீக அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாமியின் கதை அருமை. மாமி தெய்வீக அழகு.//

   ஆமாம். மிக்க நன்றி கோமதிக்கா.

   கீதா

   நீக்கு
 16. உங்கள் மைத்துனருக்கு கடவுள் ஆசீர்வாதம் என்றும் உண்டு.. சியாமளா மாமியின் துப்பறியும் கதை கடைசியல் தப்பறியும் கதையாக நிறைவு பெற்றது கண்டு மகிழ்ச்சி!!... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ! இரு கருத்துகளுக்கும்

   கீதா

   நீக்கு
 17. வணக்கம் சகோதரி

  பதிவு மிக அருமை சகோதரி. "மகன் தாய்க்கு ஆற்றும் உதவி" முதல் பகுதி படித்தவுடன் என் கண்களில் நீர் சுரந்து விட்டது. அம்மாவை அத்தனை வயதிலும் பத்திரமாக பார்த்துக் கொண்ட தங்கள் மைத்துனருக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்த்துகள். அவர் பல ஆண்டு காலம் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ அவர் அன்னை ஆசிர்வதிப்பார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மாவை அத்தனை வயதிலும் பத்திரமாக பார்த்துக் கொண்ட தங்கள் மைத்துனருக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்த்துகள். அவர் பல ஆண்டு காலம் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ அவர் அன்னை ஆசிர்வதிப்பார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

   ஆமாம். மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 18. வணக்கம் சகோதரி

  நீங்கள் குறிப்பிட்ட மாமி மிகவும் அழகாக இருக்கிறார். அழகுடன் அவர் அறிவுபூர்வமாக பல கதைகளுக்கு சொந்தக்காரர் என்றியும் போது பிரமிப்பாக உள்ளது. துப்பறியும் விச்சு, சச்சு பெயர்கள் கேள்விப்பட்ட மாதிரி உள்ளது. ஏதேனும் பழைய கால பத்திரிக்கைகளில் இவரது கதைகள் வந்திருக்கின்றனவோ.. ? படித்த நினைவாகவே உள்ளது. நன்றாக எழுதியுள்ளார். தொடர்ந்து கதைகளை வெளியிடுங்கள்.கொஞ்சம் வேலைகள் காரணமாக நான் இன்று தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துப்பறியும் விச்சு, சச்சு பெயர்கள் கேள்விப்பட்ட மாதிரி உள்ளது. ஏதேனும் பழைய கால பத்திரிக்கைகளில் இவரது கதைகள் வந்திருக்கின்றனவோ.. ? //

   இல்லை கமலாக்கா இவர் கதைகள் எதுவும் வந்ததில்லை எனக்குத் தெரிந்து. ஆனால் பழைய கதைகளில் விச்சு சச்சு என்று கதாபாத்திரங்கள் வருமே அந்த நினைவாக இருக்கலாம்.

   இன்னும் பகிர்கிறேன் கமலாக்கா.

   கொஞ்சம் வேலைகள் காரணமாக நான் இன்று தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன்.//

   அதனால் என்ன கமலாக்கா. எப்போது வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாமே. வருத்தம் எல்லாம் வேண்டாம்.

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 19. அம்மாவை நன்கு பார்த்துகொண்ட உங்கள் மைத்துனரை இறைவன் ஆசிர்வதிப்பார். அவரைப் பற்றிப் பகிர்ந்ததற்கும் அருமையான கதையைப் பகிர்ந்ததற்கும் நன்றி. சியாமளா மாமியின் துப்பறியும் கதை அருமை

  பதிலளிநீக்கு
 20. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு