வியாழன், 7 அக்டோபர், 2021

நினைவோ, ஒரு பறவை…

 


நினைவுகள் பின்னிலிருந்து தள்ள கனவுகள் முன்பிருந்து இழுக்க, இப்படியாகத்தானே நம் வாழ்க்கைப் பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையே ஒவ்வொரு சூழலிலும்  நாம்  இறையருளால் கவனமாக இருந்து செயல்பட்டு ஓரளவு சுகமாக வாழ்கிறோம், எழுதுகிறோம், வாசிக்கிறோம் என்பது இதை  எழுதும் போது எனக்கும், வாசிக்கும் போது உங்களுக்கும் உறுதியாகியிருக்கும்தானே. இது போல் எப்போதும் இறையருளால் கனவு நனவாகும் நிகழ்காலமும், நிகழ்வு நினைவாகவிருக்கும் நினைவுக்காலமும் நமக்குத் துணையாகட்டும்.

இருந்தாலும் இளமையில் கனவுகளுக்கு இருந்த வேகமும் வித்தியாசமான தோற்றமும் முதுமையை நெருங்கும் போது இருப்பதில்லை. ஆனால் எப்படியோ நம் வாழ்க்கை ஓடத்தின் சீரான பயணத்தை நினைவுக்காற்று தேவையான நேரத்தில், தேவையான அளவு வீசி எளிமையும் இனிமையும் ஆக்கி விடுகிறது. சிறகு விரித்துப் பறக்கும் எண்ணங்கள் அப்படி 40 க்கும் 50க்கும் மேல் வயது ஏற ஏற நெல்லிக்கனியாய் இனிக்கிறது.

எங்கள் ப்ளாகில் வெள்ளி தோறும் ஒவ்வொருகாலகட்ட பாடல்களை,  தான் ரசித்த பாடல்களை மையமாகக் கொண்டு அவற்றைப் பற்றிய விவரங்களுடன் ஸ்ரீராம்ஜி எழுதும் போதெல்லாம் அவர் பதிவுகள் எனக்குப் பல நினைவுகளை எழுப்பிவிடுவதுண்டு. ஆனால் அவற்றை அங்கு கருத்தில் பகிர்ந்ததில்லை. பதிவு போன்றதாகிவிடுமே என்ற காரணத்தினால். பதிவு எழுதும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று ஓரிருவரிகளில் சொல்லிச் செல்வதுண்டு. நானும் கீதாவும் அவை தொடர்பான எங்கள் அனுபவங்கள், நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால், பதிவு எழுத முடியாமல் போனது. இனி அதையும் எழுத முயற்சி.

இங்கு தேவைப்படுவதெல்லாம் நேரமும் சூழலும் தான்.  அப்படிப்பட்ட நேரமும் சூழலும் சில நாட்களுக்கு முன் அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்தது. க்வாரண்டைன் ஃப்ரம் ரியாலிட்டி (Quarantine from Reality) சுபஸ்ரீ தணிகாச்சலம் தன் தொடரில் அப்படியான ஒரு பாடலைக் கடந்த வருடம் பகிர்ந்திருந்தது இப்போதுதான் என் கண்ணில் பட்டது. என்ன செய்ய? கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் ஒரு வருடம் அதுவும் இந்த கோவிட் நாட்களில் போனது பேரிழப்புதான்.எங்கள் ப்ளாகில் அருமையாக எழுத்தில் பதிவது போல், QFR ல் சுபஸ்ரீயும் பாடல், ராகம், பாடகர்கள் மற்றும் இசைக்கருவிகள் இசைக்கலைஞர்களை அறிமுகப்படுத்தல் என்று அருமையாக க்வாரண்டைன் ஃப்ரம் ரியாலிட்டியை (QFR) கொண்டு செல்கிறார். அதில் நான் கேட்ட பாடல் ‘பிரியா’ படத்தில் ‘ஹே பாடல் ஒன்று’. இசை ஞானியின் இசையமைப்பில் பஞ்சு ஐயா எழுதி கான கந்தர்வன் ஏசுதாசும், இசைக்குயில் ஜானகி அம்மாவும் பாடியது. ஒரு கவிதையை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்குவது போல் அருமையான ஒரு விளக்கம் வேறு சுபஸ்ரீயிடமிருந்து. கூடவே அந்தப் பாடலுடன் தொடர்புள்ள நிகழ்வுகளையும் தருவது அருமை. இப்படிப் பாடல் கேட்கும் போதெல்லாம் கவிதை வரிகளும் குரல்களின் இனிமையும், கூடவே, ரஜனியும் ஸ்ரீதேவியும் மனதில் வருவது வழக்கம்தான்.

கேரளாவில் இருக்கும் எனக்கு இதெல்லாம் எப்போதாவது நிகழும் நிகழ்வுதான் பெரும்பாலும். அதனால் அப்போதெல்லாம் அப்பாடல் இடம் பெற்ற படமும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் வந்து நீண்ட நேரம் நினைவுகளில் பயணிக்க வைக்கும்.

ஆனால் சுபஸ்ரீயின் விளக்கமும், சிவாவின் எடிட்டிங்கும், புதிய இளம் பாடகர்களின் குரலும், இசைக்கருவிகளைக் கையாளும் மாயாஜாலக்காரர்களின் மந்திர விரல்களும் ஒரு புது உலகத்தையே என்னைப் போன்றவர்களுக்குக் காட்டித் தந்தது.  இது அவரால் மட்டும்தான் முடியும். (கீதா சொல்லி சுபஸ்ரீயைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்). இதெல்லாம் தமிழுக்காகத் தமிழ் உள்ளங்களால் மட்டுமே சாதிக்கக் கூடிய ஒன்று. அவரது சேவை தொடரட்டும். புகழ் ஓங்கட்டும்.

இந்த “ஹே பாடல் ஒன்று’ பாடல் என் நினைவுச் சிறகை விரிக்க வைத்தது. என்னை என் வாழ்வின் 1978, 1979க்குக் கொண்டு சென்று என்னை இன்ப வானில் பறக்கச் செய்ததை சொல்லத்தான் இந்தப் பதிவு.

போடிநாயக்கனூர் சிபிஏ (CPA) கல்லூரியில் பியுசி படித்த காலம். செனட்ரல் தியேட்டரில் படம் பார்த்து நண்பர்களுடன் நடந்து, பரமசிவன் கோவில் மலை அருகேயுள்ள கல்லூரி விடுதிக்குச் சென்ற நாட்கள். எங்களில் இனிமையாகப் பாடும் மீனாட்சிபுரம் முருகேசின் குரலில் இப்பாடல் ஒலிப்பதை இப்போதும் உணரமுடிகிறது.

கல்லூரி உதவிப் பேராசிரியரும், விடுதி வார்டனுமான முருகானந்தன் சாரின் அன்பான, ஆறுதலான வார்த்தைகள். அதையெல்லாம் அப்போது புரிந்து கொள்ளாமல் அவருடன் விரோதித்துக் கொண்ட நாட்கள். அதன்பின் பலமுறை என் ஆசிரியப் பணியிடையே, பல மாணவர்கள் சீறும் போது, ‘அன்று முருகானந்தம் சார். இன்று நான்’ என்று எண்ணி சிரித்து, என் சீற்றத்தைத் தவிர்த்ததுண்டு.

எப்போது சிபிஏ (CPA) கல்லூரி நாட்கள் நினைவுகள் வந்தாலும் அதனுடன் வருசநாடு சேகர் நினைவுக்கு வருவதுண்டு. எப்போதும் சந்தோஷமாக, எதைப்பற்றியும் வருந்தாமல் இருக்கும் சேகர்.  வெளிப்படையாகப் பேசுபவர். குற்றம் காணும் போது அதைச் சுட்டியும் காட்டுவார். ஒரு பையன் ஷோலே என்பதற்குப் பதிலாக ஜோலே என்ற போது யாருக்குமே புரியவில்லை. சேகர், “ஓ ஷோலே படத்தைப் பத்தியா சொல்ற? ஒன்னு சரியா ஷோலேன்னு  சொல்லு இல்லேன்னா அட்லீஸ்ட் சோலே ன்னாவது சொல்லு. பியுசி படிக்கிற நீ இனி இப்படிச் சொல்லாதே” என்றது இப்போதும் நினைவில் பசுமையாய் வந்து சிரிக்க வைக்கிறது. சிந்திக்கவும் வைக்கிறது. தவறை தவறென்று சொல்லி திருந்தச் செய்யும் மனம் எத்தனை பேருக்கு இருக்கிறது?

“பியுசி படிக்கிறதில 5 பேர் மட்டும்தான் பாஸாக வாய்ப்பு. பாக்கி எல்லாம் சும்மா, இந்த நான் உட்பட” என்ற சேகரின் வார்த்தை உண்மையானது. இதைவிட ஆச்சரியம் ஒரு முறை சேகர் எழுதிய ஒரு கதையை எனக்குக் காண்பித்ததுதான். முதல் வரியே “நான் ஒரு நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறேன். என் முன் பத்திக் குச்சிகளிலிருந்து வரும் மணமுள்ள புகை. என் முன் எல்லோரும் அழுது கொண்டும், தேம்பிக் கொண்டும் இருக்கிறார்கள்” என்ற வரிகள். நான் அதிர்ந்தே போனேன்.

சிரித்த சேகர், “இதும் நடக்கப் போற ஒன்னுதான்”.  என்றதும், அப்படி எல்லாம் பேசக் கூடாது என்று சொல்லி சமாதானப்படுத்தினாலும், சேகரின் பக்கத்து ஊர் பழனிச்சாமி, “சேகர் இதுக்கு முன்னாடி ஒரு தடவ தற்கொலை முயற்சி செய்திருக்கான்” என்று சொன்னது எனக்குப் பயத்தை ஏற்படுத்தியது. பியுசி ஒரு வருடம் தான். பிரிந்த நாங்கள் எல்லோரும் பல வழிகளில் பயணித்தோம்.

சில வருடங்களுக்குப் பின் தேனி பேருந்து நிலையத்தில் பழனிச்சாமியைச் சந்திக்க நேர்ந்த போது, பலதும் பேசினோம். அப்போது நான் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். பேச்சினிடையே பேரிடியாய், “சேகர், போனவருடம் தற்கொலை செய்து கொண்டான்” என்ற செய்தி. அதன் பின் இன்று வரை எப்போதெல்லாம் என் வாழ்வில் என் சிபிஏ(CPA) கல்லூரி வாழ்க்கை நினைவுக்கு வந்தாலும் முருகானந்தம் சாருடன் சேகரின் நினைவும் வரும்.

மரணத்தை விரும்பிய சேகர். மரணத்தை மணந்து பிணக்கோலமாய் அமர்வதைக் கதையாய் எழுதிக் காத்திருந்த சேகர். காரணம் கேட்ட போதெல்லாம் சிரித்து மழுப்பிய சேகர், கூடாது என்று அறிவுரை சொன்ன போதெல்லாம் “அதெல்லாம் நான் சும்மா சொல்றது” என்று விசயம் மாற்றிய சேகர். நாற்பது வருடங்கள் கடந்தாலும், நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு வலி.

இனிய நினைவுகளுடன் நமக்கு வேதனை தந்த/தரும் நினைவுகளும் வருவது இயல்புதானே. “பிரியா” படம் பார்க்கப் போன போது சேகரும் எங்களுடன் வந்திருந்தார். இந்தப் பாடலைக் கேட்டதும் என் மனம் அந்த நாட்களை வட்டமிட்டது. இப்போதும் புரிந்துகொள்ள முடியாத டீன் ஏஜ் மனதை எனக்கு நினைவூட்டியது.

பயமறியாத காலம். ஓடும் பாம்பினை மிதிக்கத் தூண்டும் மனதைத் தரும் பருவ்ம். தவறை தவறென்று யார் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத பருவம். எல்லோரும் அல்ல, சிலர். இப்படி சில அல்லது பல பாடல்கள், தொடர்புடைய ஏதேனும் பொக்கிஷம் போன்ற நிகழ்வு, நினைவுகள், நாட்கள் உங்களுக்கும் நினைவுக்கு வரலாம். பகிர்ந்து கொள்ளுங்கள்.  வேதனயான நிகழ்வுகள் என்றால், பகிர்ந்தால் அந்த வேதனையே பாதியாகும். இன்பத்தைப் பகிர்ந்தால் இன்பம் இருமடங்கு இன்பமாகும்.


-----துளசிதரன்

32 கருத்துகள்:

 1. ஹே பாடல் ஒன்று... நான் கேட்டது +1 ஹாஸ்டலில்.. அந்தப் பாடலைக் கேட்டதும் நான் அந்த வயது, சூழலுக்குச் சென்றுவிடுவேன். இது பற்றி இன்று எழுதுகிறேன். உங்கள் அனுபவப் பகுதியை மட்டும் இனித்தான் படிக்கணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தீர்களா நெல்லைத்தமிழன், உங்களுக்கும் அந்த வயது நினைவுகள் வருவது மகிழ்ச்சி. முடிந்த போது எழுதிப் பகிருங்கள் நெல்லைத்தமிழன். மெதுவாக வாசித்துவிட்டு வாருங்கள்.

   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   துளசிதரன்

   நீக்கு
 2. ஆமாம்.  பல பாடல்கள் நாம் அந்தப் பாடலை முதலில் கேட்டா காலத்துக்கு, அல்லது அடிக்கடி  ஆரம்ப காலத்துக்கு அழைத்துச் செல்லும்.  காலயந்திரம் செய்ய எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்...  இதோ இருக்கிறது கால யந்திரம்!  எளிமையான கால யந்திரம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் வரக்கூடும் என்று எனக்குத் தோன்றியதுண்டு. வெள்ளி தோறும் நீங்கள் எத்தனைபாடல்கள் பகிர்கின்றீர்கள். உங்களிடம் இல்லாத கலெக்ஷனே இல்லை என்றே எனக்குத் தோன்றியதுண்டு.
   நான் மொபைலில் சமீபகாலமாகப் பாடல்கள் கேட்கிறேன் நேரம் கிடைக்கும் போது.

   //காலயந்திரம் செய்ய எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்... இதோ இருக்கிறது கால யந்திரம்! எளிமையான கால யந்திரம்!//

   ஆமாம் இல்லையா? நல்ல ஒப்பீடு. ரசித்தேன்.

   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

   துளசிதரன்

   நீக்கு
  2. அட! ஸ்ரீராம் //காலயந்திரம் செய்ய எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்... இதோ இருக்கிறது கால யந்திரம்! எளிமையான கால யந்திரம்!//

   ஆ ஆ...ஹைஃபைவ்...நான் ஆங்கிலத்தில் இதை ஒன்றில் எழுதியிருக்கிறேன்....டைம் மெஷின் என்று.

   மற்றொன்றும் இதோடு சேர்த்திருப்பேன் அதில்.

   சமீப காலமா என்னவோ ஒவ்வொருத்தர் பதிவிலும் நிறைய ஹைஃபைவ் ஸ் !!!!

   கீதா

   நீக்கு
 3. பொதுவாக பாடல்களினால் பழைய நினைவு வரும்.  இதுபோன்ற பழைய நினைவுகளால் ஒரு பாடல் நினைவு வருகிறது!  "அள்ளிச் சென்ற பூமி அன்னை அல்லவா..."  பள்ளி சென்ற கால முல்லைகளே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம்ஜி. நிறைய நினைவுகள் வரும்.

   // "அள்ளிச் சென்ற பூமி அன்னை அல்லவா..."// அருமையான பாடல். பிடித்த பாடலும் கூட. இதன் தொடராய் நிறைய பாடல்கள் நினைவுகள் என்று வருகிறது.

   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

   துளசிதரன்

   நீக்கு
 4. ஓரளவு சேகரை இன்னமும் முழுமையாகப் புரிந்து அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியும்.  ஆனால்....   விதியை வெல்ல முடியுமா?  மேலும் இன்னொரு கேள்வி...  பிழைத்திருப்பது சுகமா?  அதாவது இந்த உலகம் சுகம் என்று நாம் நம்புகிறோம்.  உழலும் பன்றி வாழ்க்கை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓரளவு சேகரை இன்னமும் முழுமையாகப் புரிந்து அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியும். //

   ஆம்! ஆனால் அப்போது அந்த அளவிற்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இப்பொழுதுமே அத்தனை விழிப்புணர்வு இல்லையே.

   விதியை வெல்ல முடியாதுதான்.

   //பிழைத்திருப்பது சுகமா? அதாவது இந்த உலகம் சுகம் என்று நாம் நம்புகிறோம். உழலும் பன்றி வாழ்க்கை!!//

   மனித வாழ்க்கைதானே கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி நம் மனதை நேர்மறையில் வைத்துத்தானே கடக்க வேண்டும்.

   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

   துளசிதரன்

   நீக்கு
 5. ப்ரியா படம் பார்த்தபோது ரஜினியை கணேஷாக மனம் ஏற்காததால் கோபம்தான் வந்தது.  பாடல்களைக் கூட பிற்பாடுதான் ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்து சிரிப்பை வழவழைத்தது.

   ரஜனி அந்த வேடத்திற்குப் பொருத்தமானவர் இல்லைதான். அதில் எல்லா பாடல்களுமே நன்றாக இருக்கும்

   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

   துளசிதரன்

   நீக்கு
 6. பல பாடல்கள் பழைய இனிய நினைவுகளை மீட்டுவது உண்மை... மறக்கவே முடியாதது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! டிடி. பல பாடல்கள் இதில் அடக்கம்.

   உங்கள் கருத்திற்கு மிக்க் நன்றி டிடி

   துளசிதரன்

   நீக்கு
 7. ரொம்பப் பிடிச்ச பாடல். ஆனால் ப்ரியா படம்னு தெரியாது. அருமையிலும் அருமை. சுபஶ்ரீ தணிகாசலத்தின் இந்த நிகழ்ச்சி ரொம்பவே பிரபலம் ஆகி விட்டது. மிக அற்புதமாய் ஈடுபாட்டுடன் பண்ணி இருக்காங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல் என்பது மகிழ்ச்சி. ஆம் இவர்களும் மிக நன்றாகப் பாடியிருக்கிறார்கள்.

   சுபஸ்ரீ தணிகாசலம் ரொம்பவே பிரபலம் ஆகியிருப்பதும் தெரிகிறது. ஆமாம் ரொம்ப ஈடுபாட்டுடன் செய்கிறார்.

   மிக்க நன்றி சகோதரி கீதாசாம்பசிவம்

   துளசிதரன்

   நீக்கு
 8. நண்பரின் முடிவு சோகத்தை ஏற்படுத்தி விட்டது! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல வருடங்கள் ஆனால் சில நினைவுகள் வரும் போது சிறிய வருத்தம் எழுகிறதுதான்.

   அப்போது ஸ்ரீராம்ஜி சொல்லியிருப்பது போல் எதுவும் தெரியவில்லை

   துளசிதரன்

   நீக்கு
 9. எல்லோருடைய வாழ்விலும் சில விஷயங்கள் மறக்க முடியாதது உண்டுதான்...

  எனக்கும் சரி நினைவுகள் வந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் கில்லர்ஜி. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சில மறக்க முடியாமல் ஆழமாகப் பதிவதுண்டு.

   உங்களுக்கும் நினைவுகள் வந்துவிட்டதா? பதிவு வருமோ?

   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி

   துளசிதரன்

   நீக்கு
 10. நினைவுகள் பின்னிருந்து தள்ள 
  கனவுகள் முன்னிருந்து இழுக்க 
  >>>>>>>>>>>>
  நிகழ்வுகள் நினைவுகளாக மாற 
  கனவுகள் நினைவாக மாற 
  >>>>>>>>>>>>>>>>>>
  கனவுகளும் நினைவுகளும் ஒன்றே 
  இதுவே மாயை

  ஆக அருமையான philosophy 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் தளத்திற்கு முதன்முதலில் வருகிறீர்கள் என்று நினைக்கிறேன் ஜெயகுமார் சந்திரசேகரன் சார். மற்ற தளங்களில் கண்டதுண்டு. வருகைக்கு மிக்க நன்றி சார்.

   உலகமே மாயை என்றுதானே ஆதி சங்கரர் சொல்லியிருக்கிறார். ஆனால் நாம் மனிதர்கள் கனவுகளிலும் நினைவுகளிலும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

   மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.

   துளசிதரன்

   நீக்கு
  2. எ பி தவிர மற்ற தளங்களில் பின்னூட்டம் இடுவது இல்லை. ஆகவே இது முதல் முறையன்று. ஆனால் உங்கள் தளம் வாயிலாகவே பல தளங்களுக்கும் செல்கிறேன்.

    Jayakumar

   நீக்கு
  3. எங்கள் தளம் வாயிலாகச் செல்வது கேட்டு மிக்க மகிழ்ச்சி சார்.

   உங்களை எபியில், வெங்கட்ஜி அவர்களின் தளம், சகோதரி கீதாசாம்பசிவம் அவர்களின் தளத்தில் முன்பு, என்று நினைக்கிறேன், கில்லர்ஜி தளத்தில் பார்த்த நினைவு. அதனால் குறிப்பிட்டேன்.

   மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்

   துளசிதரன்

   நீக்கு
 11. சோகமும் சுகமும் நிறைந்த இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்த விதம் அருமை. முதுமையில் இத்தகு நினைவுகள் எல்லோரையும் வருடும் அல்லது வாட்டும். சிலரால் அவற்றுக்கு இலக்கிய வடிவம் தர முடிகிறது உங்களைப் போல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா. நீங்கள் உங்கள் நினைவுகள் பலவற்றை எவ்வளவு இலக்கிய வடிவம் கொடுத்து எழுதுகிறீர்கள். அதைவிடவா!

   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா

   துளசிதரன்

   நீக்கு
 12. //இது போல் எப்போதும் இறையருளால் கனவு நனவாகும் நிகழ்காலமும், நிகழ்வு நினைவாகவிருக்கும் நினைவுக்காலமும் நமக்குத் துணையாகட்டும்.//

  நல்ல பிரார்த்தனை.

  //இளமையில் கனவுகளுக்கு இருந்த வேகமும் வித்தியாசமான தோற்றமும் முதுமையை நெருங்கும் போது இருப்பதில்லை. ஆனால் எப்படியோ நம் வாழ்க்கை ஓடத்தின் சீரான பயணத்தை நினைவுக்காற்று தேவையான நேரத்தில், தேவையான அளவு வீசி எளிமையும் இனிமையும் ஆக்கி விடுகிறது.//

  ஆமாம், அந்த மனநிலையை நாம் வளர்த்து கொள்வதால்தான் வாழ்க்கையை எதிர் கொள்ள முடிகிறது.

  பாடலும் அது தந்த நினைவுகளும் சொன்ன விதம் அருமை.

  சுபஸ்ரீ அவர்களின் நிகழ்ச்சியை அடிக்கடி கேட்பேன். பிடிக்கும் அவர்கள் தொகுத்து வழங்கும் பாடல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், அந்த மனநிலையை நாம் வளர்த்து கொள்வதால்தான் வாழ்க்கையை எதிர் கொள்ள முடிகிறது.//

   ஆமாம் சகோதரி. அதுதான் நம்மைப் பல விதங்களிலும் பல நேரங்களிலும் நடத்திச் செல்கிறது. அதிலும் நலல்தை மட்டும் நினைத்தால் நமக்கு நல்லதுதான்.

   நீங்களும் கேட்பது மிக்க மகிழ்ச்சி சகோதரி கோமதி அரசு

   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

   துளசிதரன்

   நீக்கு
 13. இளமையில் நட்பின் பிரிவு மிகவும் வேதனை அளிக்கும்.
  அவை காலத்தாலும் அழியாது மனதை விட்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அப்போது தாமதமாகத் தெரிந்த போதும் கூட மிகவும் வேதனையாக இருந்தது. ஸ்ரீராம்ஜி சொல்லியிருப்பது போல் அவரது பேச்சை நாங்கள் கருத்தாக எடுத்துக் கொள்ளவில்லை அப்போதைய அறிவும் விழிப்புணர்வும் அவ்வளவுதான்.

   மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

   துளசிதரன்

   நீக்கு
 14. பிரியா படப்பாடலை எனக்கு அறிமுகம் செய்தது அன்னை வானொலி இலங்கை பண்பலையே! சேகர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் அறியவில்லையா அண்ணா? படிக்கும் போது மனசு கவலை கொள்கின்றது! அடிக்கடி பதிவு எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலங்கை வானொலிதான் எங்களுக்கும் பல பாடல்களைக் கேட்க உதவியது. அது ஒரு பொற்காலம். பல்விதமான நிகழ்ச்சிகள் கேட்டதுண்டு. அருமையான வானொலி.

   இல்லை சேகர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் சரியாகக் கிடைக்கவில்லை.

   எழுத முயற்சி செய்கிறேன்.

   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தனிமரம் நேசன்

   துளசிதரன்

   நீக்கு
 15. பிரியா பட பாடல் நம் மனதைவிட்டு இன்னும் பிரியாமலேயே உள்ளது என்பது உண்மை. அதே வேளையில் தங்கள் வாழ்வில் நடந்த கடந்த கால சோகமான நினைவுகளும், கூடவே நண்பரின் பிரிவும் பாடலைப்போலவே மனதில் உட்கார்ந்துகொண்டு இன்றும் பிரியா சோகத்தை தந்துகொண்டிருப்பது மனதை கலங்க செய்கிறது.

  பதிலளிநீக்கு