செவ்வாய், 12 அக்டோபர், 2021

அனுகூல்-ANUKUL

 


அனுகூல். நான் ரசித்துப் பார்த ஒரு குறும்படம்.  அதைப் பற்றிச் சொல்லும் முன் கொஞ்சம் கதைத்தல்.

 நான் ஏற்கனவே இயற்கை வலியது என்ற கதையை எழுதிய போது (எபி யில் வந்தது) அப்போது இந்தப் படம் கண்ணில் படவில்லை. அக்கதை எழுதிய பின் மேலும் சில கற்பனைகள் மனதில் ஓடியதை  வைத்து எழுதத் தொடங்கிய ஒரு கதை அப்படியே ப்ரேக் போட்டு நிற்கிறது.

செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) குறித்து கொஞ்சம் தரவுகள், புதிய ஆய்வுகள் என்று எடுக்க அவ்வப்போது இணையத்தில் தேடுவதுண்டு. சில மாதங்களுக்கு முன் அப்படித் தேடிய சமயம் கிடைத்த குறும்படம்தான் இந்த அனுகூல்.

சத்யஜித்ரே 1976ல் எழுதிய அனுகூல் எனும் சிறுகதையைத் தழுவி படத்தை இயக்கியவர் சுஜாய் கோஷ். 2017 ல் வெளிவந்திருக்கிறது.

படம் பார்த்ததும் கதையின் மூல வடிவம் கிடைக்கிறதா என்று தேடினால் பெங்காலியில்தான் கிடைத்ததே அல்லாமல் ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ கூடக் கிடைக்கவில்லை.

இதைப் பற்றி நான் எழுதத் தொடங்கிய சமயம், பானுக்கா, தான் ரசித்த கதை என்று 2003 ல் சுஜாதா எழுதிய “ரிசப்ஷன் 2010” கதையைப் பற்றி எழுதியிருந்தது எபியில் சனிக்கிழமை அன்று வந்திருந்தது. அதில் மனிதர்களைப் போலவே வித்தியாசம் தெரியாமல் இயந்திர மனிதர்கள் உலாவிக் கொண்டிருந்தார்கள் என்று வரும். நான் பதிவு எழுதத் தொடங்கியிருந்ததால் அனுகூல் பற்றி நான் கருத்தில் எதுவும் சொல்லவில்லை.

மனித வாழ்க்கைக்குள் இயந்திர மனிதர்கள் புகுந்துவிட்டால் விளைவுகள் என்ன? ஃபிக்ஷனாக 1976ல் அனுகூல் கதையில் சொல்லியிருக்கிறார் சத்யஜித்ரே.  ஆனால் இப்போது அது சாத்தியமாகி வந்து கொண்டிருக்கிறது. அவருக்கும் அறிவியல் தொழில்நுட்பங்கள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பற்றி மிகுந்த ஆர்வம் உண்டாம். அதனால் அதைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய வாசித்ததாகத் தெரிகிறது.

கதை இதுதான்…


https://www.youtube.com/watch?v=J2mqIgdae5I

ஒரு ஹிந்தி ஆசிரியர் தனக்கு உதவிக்காக ரோபோ ஒன்றை வாடகைக்கு எடுக்கிறார். ரோபோவின் பெயர் அனுகூல். இப்போதெல்லாம் வீட்டு வேலை, பிற வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜன் போன்று ரோபோவை வாடகைக்கு விடுபவர்  சொல்வார், எல்லா நாளும் அனுகூல் வேலை செய்வார், கூடுதல் மணிநேரம் வேலை செய்வதற்கு மேலதிகப் பணம் கொடுக்கத் தேவையில்லை என்று.  ஆனால் மனிதர்களை வாடகைக்கு விடும் ஏஜண்டுகள் அப்படிச் சொல்வதில்லையே! எனவே வீட்டு வேலைகளுக்கு படத்தில் சொல்வது போல் வரும் காலம் அருகில்தான்.

அனுகூல் இவரது வீட்டிற்கு வந்து உதவி செய்கிறார்/து. நிறைய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து ஆர்வம் பெற்று வாசிக்கத் தொடங்குகிறார்/து.  ஆசிரியரும் அனுகூலும் நல்ல புரிதலில் இயங்குகிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு பிணைப்பே ஏற்படுகிறது!!!!

ஒரு நாள் ஆசிரியரின் சித்தப்பா/பெரியப்பா மகன் வீட்டிற்கு வருகிறார். தனக்கு ரோபோவின் வருகையால் வேலை போனதாகச் சொல்கிறார். அப்போது ஆசிரியரின் உத்தரவுப் படி அனுகூல் அங்கு தேநீர் கொண்டுவர அனுகூல் ரோபோ என்று தெரிந்ததும் சகோதரருக்குக் கோபம் வருகிறது.  வீட்டிற்குள் செல்பவர் அனுகூல் துணி தேய்த்துக் கொண்டிருந்த போது அந்த இஸ்திரிப் பெட்டியாலேயே அனுகூலைத் தாக்குகிறார். அனுகூல் செயலிழந்துவிடுகிறார்/து.

சேவையாளர் வந்து அனுகூலை உயிர்ப்பிக்கிறார். (இதன் அடிப்படையில் எனக்கு ஒரு கற்பனை தோன்றியது. அதுவும் நான் ஆஇ ஒட்டி எழுதும, இப்போது ப்ரேக் போட்டு இருக்கும் கதையில்)

“இந்த முறை அனுகூல் எதுவும் செய்யவில்லை அதனால் உங்கள் சகோதரர் தப்பித்தார். இனி அவர் மீண்டும் தாக்கினால் அனுகூல் சும்மா இருக்கமாட்டார் எலக்ட்ரோ சார்ஜ் செய்துவிடுவார்” என்று எச்சரிக்கை செய்துவிட்டுப் போகிறார்.

இரவு ஆசிரியர் தூக்கம் வராமல் நடந்து கொண்டிருக்க, அறையில் அனுகூல் புத்தகம் வாசிப்பதைப் பார்க்கிறார். அனுகூல், ஆசிரியரிடம் ஏதாவது வேண்டுமா என்று கேட்க, தனக்குத் தூக்கம் வரவில்லை என்று சொல்லி விட்டு, “நீ தூங்கவில்லையா” என்று கேட்க அனுகூல் சொல்கிறார்/து “எனக்குத் தூக்கம் ஏது?” என்று

அனுகூல் தான் பகவத் கீதை வாசிப்பதாகவும் புரியவில்லை என்று சொன்னதும் ஆசிரியர், “நீ எனக்கு தினமும் உதவுகிறாய். இன்று நான் உனக்கு உதவுகிறேன்” என்று சொல்லி “உனக்கு என்ன புரியவில்லை? கேள்” என்று சொல்லி உரையாடுகிறார். ஆசிரியர் அனுகூல் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்.

இதை நான் இங்கு சொல்வதை விடப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். மிக மிக அழகான காட்சி. சிந்திக்க வைத்த உரையாடல்கள்.

உரையாடலின் இடையே அனுகூல் கேட்பார்/கும்

“யார் இந்த நீலமனிதர்”

“பகவான் கிருஷ்ணர்” - ஆசிரியர்.

“ஏன் அவர் நீலமாக இருக்கிறார்?”

ஆசிரியர், கிருஷ்ணர் நீலமாக இருப்பதற்கான, விஷம் குடித்த கதையைச் சுருக்கமாகச் சொன்னதும்,

 “அவர் இறக்கவில்லையா?” என்று கேட்கிறது அனுகூல்.

“அவர் பகவான். எப்படி இறப்பார்?” என்று ஆசிரியர் சொன்னதும், உடனே அனுகூல் சொல்கிறார்/து

“நானும் இறக்க முடியாது” என்று!!!!!

ஆசிரியர் கொஞ்சம் ஜெர்க் ஆகி, “இல்லை அது வெவ்வேறு விஷயங்கள். அதை விடு, உனக்கு கீதையில் என்ன புரியவில்லை அதைச் சொல்” என்று சொல்லி தர்மம், கடமை என்பதை பற்றி அனுகூல் கேட்க ஆசிரியர் பதில் சொல்கிறார்.

சரி எது தவறு எது, நியாயம் இதெல்லாம் எப்படி முடிவு செய்யப்படும் என்று அனுகூல் கேட்க ஆசிரியர் நெஞ்சைத் தொட்டு, “மனசாட்சி” என்று சொல்லும் போது அனுகூலும் தன் நெஞ்சில் கை வைத்துப் பார்த்துக் கொள்ளும்.

இதன் அர்த்தம் படத்தின் முடிவில் உங்களுக்குப் புரியும்.

இதைப் பார்க்கும் போது கிட்டத்தட்ட மனித மூளைக்கு நிகரான இயந்திர மனிதன் என்பது புரிகிறது. இப்போது இந்தக் கதையில் வரும் அனுகூல் போல கிட்டத்தட்ட வந்தாயிற்று. அனுகூல்  போலவே விரைவில் வந்து விடும் என்றே தோன்றுகிறது.

இதோ கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள். சவுதி அரேபியாவின் குடியுரிமை (சிட்டிசன்ஷிப்) பெற்ற சோஃபியாவைச் சந்தியுங்கள். (ஏன் பெண்? பெண் ரோபோதான் ஈர்க்கும் என்றோ?!!)


https://www.youtube.com/watch?v=uDoBKpTckuU

மனிதனுக்கும், மனிதனால் உருவாக்கப்படும் ரோபோவுக்கும் உள்ள வேறுபாடுகள் மனிதனுக்கு இருக்கும் சுய சிந்தனை, இரக்கம், வருத்தம், ஆசாபாசங்கள் போன்ற நுண்ணுணர்வுகள். இவை எல்லாம் ரோபோவுக்குள் சில்லு சில்லுகளாய் நிறுவப்பட்டால், ரோபோக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால், அப்படி மனித மூளைக்கு நிகராகச் சிந்தித்து முடிவு எடுக்கத் தொடங்கினால்? என்னாகும்? மனிதன் தன் சுயநலத் தேவைக்கு ஏற்ப ரோபோவை வடிவமைத்தால்…? உலகம் ரோபோ உலகமாகிவிடும் அபாயம் இருக்கிறதோ?

Artificial Intelligence is the manifestation of the failure of humanity to understand natural intelligence. It is going to snatch away the nature from everybody’s life, in second by second basis and is designed to swallow humans from nature forever. Nature wins!


-------கீதா

33 கருத்துகள்:

  1. அழகிய விளக்கம்.
    நான் என்றுமே சொல்வது அதீத விஞ்ஞான வளர்ச்சி மனித வாழ்வுக்கு வீழ்ச்சியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி

      ஆமாம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்

      கீதா

      நீக்கு
  2. சுவாரசியமான கதை...

    மனித மனம் இரக்கமின்றி இயந்திரமாக மாறிக் கொண்டு வருகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி.

      நீங்கள் சொல்லியிருக்கும் வரியை பதிவின் கடைசியில் எழுதி அப்புறம் பதிவேற்றி செக் செய்யும் போது அழித்தேன்.!!!!

      கீதா

      நீக்கு
  3. இயந்திரமாகிப் போன மனிதனுடன் கூட வாழ்ந்து விட முடியும்...சுயநல உணர்வுடன் படைக்கப்படும் இயந்திர மனிதனுடன் பயமின்றி வாழச் சாத்தியமா..நினைத்தால்.பயமாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதீதமாகிப் போனால் விளைவுகள் விபரீதம்தான்

      மிக்க நன்றி ரமணி சகோ

      கீதா

      நீக்கு
  4. மீண்டும் ஜீனோ ஞாபகத்துக்கு வருகிறது. இயந்திரனுக்கெல்லாம் முன்னோடி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். தலைவர் தலைவர்தான்!!! மீண்டும் ஜீனோ வாசிக்க வேண்டும் 1987ல் எழுதினாரோ?

      இந்த கதை சத்யஜித்ரே 1976 ல் எழுதியிருக்கிறார். அக்கதை 2017 ல் குறும்படமா எடுத்துருக்காங்க..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. குறும்படம் அனுகூல் நன்றாக இருக்கிறது.

    ஆனாலும் மனிதன் ஏற்கனவே இயந்திரங்களுடன் பழகி பழகி இயந்திரமாக மாறி வருகிறான், அவன்
    இயந்திரத்திற்கு மனித உணர்வுகளை கொடுக்க முடியுமா?

    விபரீத விளையாட்டாக தோன்றுகிறது.

    //இதோ கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள். சவுதி அரேபியாவின் குடியுரிமை (சிட்டிசன்ஷிப்) பெற்ற சோஃபியாவைச் சந்தியுங்கள். (ஏன் பெண்? பெண் ரோபோதான் ஈர்க்கும் என்றோ?!!)//

    எல்லா விளம்பரங்களிலும் பெண் தானே இருக்கிறார். அதனால் இதும் பெண்ணே இருக்கிறார் போலும்.


    காலங்கள் மாறுகிறது. இதுவும் சாத்தியம் ஆகலாம்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அக்கா படம் நன்றாக இருக்கிறது. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி

      //இயந்திரத்திற்கு மனித உணர்வுகளை கொடுக்க முடியுமா?

      விபரீத விளையாட்டாக தோன்றுகிறது.//

      விபரீத விளையாட்டுத்தான். இயந்திரன் படத்திலேயே வந்திருக்குமே. நான் முழு படமும் பார்த்ததில்லை விமர்சனம் வைத்துச் சொல்கிறேன்.

      //எல்லா விளம்பரங்களிலும் பெண் தானே இருக்கிறார். அதனால் இதும் பெண்ணே இருக்கிறார் போலும்.//

      ஹாஹாஹாஹா இருக்கலாம் கோமதிக்கா

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  6. அன்பின் கீதாமா,,
    சென்ற ஞாயிறு, பிபிசி அளிக்கும் க்ளிக் நிகழ்ச்சியில் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் தான்
    முக்கியமாக இடம் பெற்றது.

    நீங்கள் சொல்லி இருக்கும் ரே யின் கதை நான் படித்ததில்லை.
    இந்தப் படத்தையும் பார்க்கிறேன்.
    மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் வந்தால் ,அதன் வழி ஏற்படும்
    நஷ்டங்களுக்கும் தயாராக வேண்டும் என்று தோன்றுகிறது.

    மனசாட்சி உள்ள ரோபோ...பாவம் என்னதான் யந்திரமாக இருந்தாலும்

    அது சொல்லும்போது வருத்தமாக இருக்கிறது.
    நானும் இறக்க மாட்டேன் என்றால்
    அதன் அழிவில்லத் தன்மையே பாதகமாகிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற ஞாயிறு, பிபிசி அளிக்கும் க்ளிக் நிகழ்ச்சியில் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் தான்
      முக்கியமாக இடம் பெற்றது.//

      ஓஹோ...

      அம்மா ரேயின் கதை பெங்காலியில்தான் இருக்கிறது ஆங்கிலத்தில் இருக்குமாக இருக்கும் ஆனால் இணையத்தில் கிடைக்கவில்லை.

      மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் வந்தால் ,அதன் வழி ஏற்படும்
      நஷ்டங்களுக்கும் தயாராக வேண்டும் என்று தோன்றுகிறது.//

      ஆமாம் நிச்சயமாக

      மனசாட்சி உள்ள ரோபோ...பாவம் என்னதான் யந்திரமாக இருந்தாலும்

      அது சொல்லும்போது வருத்தமாக இருக்கிறது.
      நானும் இறக்க மாட்டேன் என்றால்
      அதன் அழிவில்லத் தன்மையே பாதகமாகிறதே.//

      ஆமாம். ஆனால் அது அப்படி நினைத்துக் கொள்கிறது. அதைச் செயலிழக்க வைக்கமுடியும் ஆனால் அதுவாக இழக்காது ஆனால் நமக்கு நோய்கள் வருவது போல அதற்குச் சிறு பிரச்சனைகள் வரலாம் நமக்கு மருத்துவர்கள் இருப்பது போல அதைச் சரி செய்ய அதற்கான வல்லுனர்கள் என்பதால் அந்த அர்த்தமாக இருக்கலாம் இல்லையா

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  7. சேவையாளர் வந்து அனுகூலை உயிர்ப்பிக்கிறார். (இதன் அடிப்படையில் எனக்கு ஒரு கற்பனை தோன்றியது. அதுவும் நான் ஆஇ ஒட்டி எழுதும, இப்போது ப்ரேக் போட்டு இருக்கும் கதையில்)...///////////////////////////சீக்கிரம் வெளியிடுங்கள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா முயற்சி செய்கிறேன் வல்லிம்மா நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸ்லோ கோச்!!! என்னால் டக் டக்கென்று எழுத முடியவில்லை. சூழல் ஒரு புறம் மற்றொருபுறம் எனது இயலாமை..

      சுஜாதா, இன்னும் சில எழுத்தாளர்கள் சொல்லியிருப்பது, அவர்கள் எழுதும் போது தனி அறை, வெளியுலகோடு தொடர்பில்லாமல் எந்தவித இடையூறுகளும் இல்லாமல் எழுதுவார்கள் என்று. எனக்கும் இது தேவைப்படுகிறது ஆனால் அப்படி நமக்குக் கிடைப்பதில்லையே.

      மற்றொன்று நான் எழுதியதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு மறந்துவிட்டு அதை மீண்டும் எடுக்கும் போது மெருகேற்ற முடிகிறது..(இது சுஜாதா மற்றும் சாவியும் சொல்லியிருக்கிறார்கள்) ஆனால் நான் காலம் தாழ்த்தும் போது அதே போல வேறு கதைகள் வந்திருக்கும். அப்போது நான் எழுதலாமா வேண்டாமா என்று அப்படியே விட்டுவிடுவேன். எழுதுவதில் காலம் தாழ்த்துவது என் இயலாமைகளில் ஒன்று. என்ன செய்ய...!!!!!!!!!!

      மிக்க நன்றி அம்மா

      நீக்கு
  8. அன்பின் கீதாமா, இரண்டு காணொளியும் அற்புதம் மிக மிக நன்றி. ரோபோ தன்னைதானே மாய்த்துக் கொள்ளுமோ என்று நினைத்தேன்.
    ஷாக்கிங்க்!!
    ரொம்ப ரியலிஸ்டிக். வாழ்க்கையில் உடனுக்குடன் இப்படி தண்டனை கிடைத்தால்
    பல அக்கிரமங்கள் நடக்காது. அனுகூல் பிரமாதம். ராயல் ஸ்டாக் இன் குறும்படங்கள் எப்பொழுதுமே அற்புதமாக வேறு விதமாக இருக்கும். நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா நானும் செயலிழந்துவிடுமோ என்றுதான் நினைத்தேன் ஆனால் இல்லை. இயந்திரன் படத்திலும் கூட பார்த்தீர்கள் என்றால் வில்லன் ரோபோ உருவாக்கப்படுமே ..ஆனால் செயலிழக்கச் செய்துவிடுவார்கள்...

      இது நல்ல ரோபோ தான் இவர் கதையும் சுஜாதாவின் இம்மாதிரியான கதைகளும், ஆஇ பற்றிய காணொளிகளும் பல சிந்தனைகளுக்கு வழி வகுக்கிறது.

      ரொம்ப ரியலிஸ்டிக். வாழ்க்கையில் உடனுக்குடன் இப்படி தண்டனை கிடைத்தால்
      பல அக்கிரமங்கள் நடக்காது. அனுகூல் பிரமாதம்.//

      ஆமாம். அப்படியான ஒரு சிந்தனையில்தான் நான் இப்படம் பார்க்கும் முன்னரே இயற்கை வலியது கதையிலும் சொல்லியிருந்தேன் எபியில் வந்ததே அது.

      ராயல் ஸ்டாக் இன் குறும்படங்கள் எப்பொழுதுமே அற்புதமாக வேறு விதமாக இருக்கும். நன்றி மா.//

      ஒ அப்படியா....பார்க்கிறேன் அம்மா.

      தன்னைத்தானே க்ளோச் செய்து ரோபோ வடிவமைப்பும் வந்திருக்கிறது.

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  9. செய்கிறார்/து
    அனுகூல் கேட்பார்/கும்
    இந்த "து" நிறைய இடங்களில் வந்திருக்கே! பிழை திருத்தணுமோ? அப்புறமா "கும்"! கொஞ்சம் சரி பாருங்க.

    இப்படி ஒரு படம் சத்யஜித்ரே எடுத்து வந்திருப்பதே இன்னிக்குத் தான் தெரியும். நல்ல சுவாரசியமா இருக்கும் போல! ரஜினி நடிச்ச ஒரு படம் இதை ஒட்டியே எடுத்திருப்பாங்களோ? அது என்ன கதைனு தெரியாது. சத்தம் அதிகம் என்பார்கள். நல்லதொரு விமரிசனத்திற்கும் பட அறிமுகத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா அது இயந்திர மனிதனைப் பற்றி சொல்லும் போது ர் என்றும் து என்று அஃறிணையிலும் எழுத அதைப் பிரித்து ஸ்லாஷ் கொடுத்திருந்தேன். து, கும் என்பதை சரியாகப் பொருத்தி நான் சொல்லியிருக்க வேண்டும். செய்கிறார்/செய்கிறது. அனுகூல் கேட்பார்/கேட்கும்....

      அனுகூல் தானே இதில் இயந்திர மனிதன். படம் பார்த்தால் புரியும் கீதாக்கா.

      இது சத்யஜித்ரேயின் கதை தானே தவிர அவர் படம் இயக்கவில்லை. பதிவில் சொல்லியிருக்கிறேன் பாருங்க. இது 2017ல் எடுக்கப்பட்ட குறும்படம்.

      திருத்தமும் செய்கிறேன்

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  10. உங்கள் பதிவைப் படித்தேன். இரு குறும்படங்களையும் முழுமையாகப் பார்த்தேன். மனித இனம் தன்னுடைய அழிவைத் தானே தேடிக்கொள்ளும் காலம் வந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
    அழகு மட்டுமா ஆபத்து அறிவும் கூட.
    சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா அறிவு என்ற பெயரில் நாமேதான் அழிவைத் தேடிக் கொள்கிறோம்

      மிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா

      கீதா

      நீக்கு
  11. நல்லதொரு பதிவு. நேற்று குறும்படத்தினை பார்த்தேன் ஜி. நல்ல படம். அதீதமாக எது நடந்தாலும் அது நல்லதில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி.

      ஆமாம் அதீதமாக எது நடந்தாலும் அது நல்லதில்லைதான்.

      கீதா

      நீக்கு
  12. நட்புகளுக்கு,

    எங்கள் தளத்தில் மட்டுமே கருத்துகள்/பதில்கள் கொடுக்க முடிகிறது

    நேற்று எபியில் இரு கருத்துகள் கொடுத்து டெஸ்ட் செய்த பிறகு போயிருக்கிறதே என்று பார்த்தால் அடுத்து முழுவதும் எங்கள் தளத்தைத் தவிர வேறு எந்தத் தளத்திலும் கருத்து போகவே இல்லை. ப்ளாகர் வூப்ஸ் எரர் தான் வந்தது. அல்லது கமென்ட் மாடரேஷன் இல்லாத தளங்களில் கருத்து போகவே இல்லை என்று தெரிந்தது. இன்றாவது கருத்து போகிறதா என்று எபி யில் செக் செய்தால் போகவில்லை. ஏகாந்தன் அண்ணா தளத்தில் இன்று போய்விட்டது. வேர்ட்ப்ரெஸ் என்பதால் இருக்குமோ? ப்ளாகர் தளங்களில் தொடர்ந்து செக் செய்து வருகிறேன் ஆனால் கருத்துகள் பதிவாகவில்லை. நானும் பல முயற்சிகள் செய்துவிட்டேன். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

    எல்லா பதிவுகளும் வாசிக்க முடிகிறது. மற்றவர்கள் கருத்துகள் வருகிறதே. எங்கள் கருத்துகள் தான் போகவில்லை. என்ன என்று மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இயந்திர மனிதன் குறும்படம் (அனுகூல்) பற்றி அழகாக விமர்சித்துள்ளீர்கள். இந்த மாதிரி நமக்கு உதவி பெறும் அணுகு முறை சரியா தவறா தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல் மனிதர்கள் போல் ரோபோவும் சரிசமமாக நடமாட ஆரம்பித்து விட்டால்.... நினைக்கவே சங்கடமாக உள்ளது. (ஏற்கனவே மனிதனே வாழ்க்கையில் எதையும் அனுபவித்து செய்ய இயலாமல் இயந்திரமாகத்தான் மாறி இருக்கிறான்.இதில் உண்மையான இயந்திரமும் போட்டிக்கு உலாவ வந்து விட்டால்... ) ஒரு மலையாள படத்தில் இப்படித்தான் ஒரு ரோபோ ஒரு பெரியவருக்கு உதவி செய்து, அவர் அதை முதலில் நிராகரித்து, பின் அது இல்லாமல் இருக்கவே கஸ்டமாக உணர்ந்ததாக கதை போனது. . படம் பெயர் நினைவில் இல்லை (உங்களுக்கு தெரிந்திருக்கும்) விஞ்ஞான முன்னேற்றம் தவறாக விடக் கூடாதே என மனம் நினைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நான் தாமதமாக வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கு மன்னிக்கவும். இப்போதுதான் பதிவுகளுக்கு வந்து கொண்டிருக்கிறேன். தங்களது நெட் பிரச்சனைகள் விரைவில் சரியாக பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா எப்படி இருக்கீங்க? உங்கள் பேத்தி நலமா? முதல்ல தாமதமாக வந்ததுக்கு மன்னிப்புன்னு சொல்றதெல்லாம் வேண்டாம் ஓகேயா கமலாக்கா. இதுல என்னருக்கு எப்ப வேண்டுமானாலும் வாசித்துக் கருத்து இடலாம். முதலில் உங்கள் வீட்டு நலன் அதன் பின் தான் ப்ளாக். உங்களுக்கு அடுத்தடுத்து வரும் பிரச்சனைகள் பற்றித் தெரியுமே. அக்கா... நீங்கள் நலமா பேத்திக்கு குணம் ஆகிவிட்டதா? அதுதான் முக்கியம் கமலாக்கா.

      (ஏற்கனவே மனிதனே வாழ்க்கையில் எதையும் அனுபவித்து செய்ய இயலாமல்
      இயந்திரமாகத்தான் மாறி இருக்கிறான்.இதில் உண்மையான இயந்திரமும் போட்டிக்கு உலாவ வந்து விட்டால்... ) //

      ஹாஹா ஹா உண்மைதான் கமலாக்கா...

      ஒரு மலையாள படத்தில் இப்படித்தான் ஒரு ரோபோ ஒரு பெரியவருக்கு உதவி செய்து, அவர் அதை முதலில் நிராகரித்து, பின் அது இல்லாமல் இருக்கவே கஸ்டமாக உணர்ந்ததாக கதை போனது. . படம் பெயர் நினைவில் இல்லை (உங்களுக்கு தெரிந்திருக்கும்) //

      கமலாக்கா தெரியவில்லையே. பார்க்கிறேன் நெட்டில் தேடினால் கிடைத்துவிடும். கண்டிப்பாகப் பார்க்கிறேன் பார்த்து என்ன பெயர் என்று சொல்கிறேன் இங்கு இப்போது

      பதிவு அருமை. இயந்திர மனிதன் குறும்படம் (அனுகூல்) பற்றி அழகாக விமர்சித்துள்ளீர்கள். //

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. கமலாக்கா, படத்தின் பெயர் "ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25" ?

      நல்ல கதை அக்கா படம் பார்க்கவில்லை, படத்தின் கதை மட்டும் பார்த்தேன். இது தெரிந்திருந்தால் இதையும் பதிவில் கொடுத்திருக்கலாம். ஏனென்றால் பதிவு சொல்ல வருவதே அதுதான் ரோபோட் மனிதனை மிஞ்சினால்...அதன் ரிஃப்ளெக்ஸ் அதுதான்...

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான விசாரிப்புகளுக்கு மிக்க நன்றி சகோதரி. குழந்தை நலமடைந்து வருகிறாள். வலி உள்ளுக்குள் லேசாக இருக்கிறதென்று அவள் கூறுகிறாள். ஆனால் வெளிகாயம் ஆறி வருகிறது. உங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் அவளுக்கு நலமுடன் வளம் சேர்க்கட்டும்.அது ஒன்றே நானும் வேண்டிக் கொள்வது. என் மன நிம்மதிக்காக இப்படி பதிவுகளை படித்து கருத்துக்கள் தந்து பார்த்து இருந்தால்தான் மன மாற்றம் கிடைக்கிறது. அதுவும் மன/உடல் சோர்வை அகற்ற ஒரு வழி இல்லையா?

      நீங்கள் உடனே நெட்டில் பார்த்து படத்தின் பெயரைச் சொன்னதும் எனக்கும் அந்தப் படத்தின் பெயர் நினைவுக்கு வந்தது.அதில் படத்தின் கதையும், நடித்தவரின் நடிப்பும் நன்றாக இருந்தது. உங்கள் அனுகூல் பதிவை பார்த்ததும் இதையும் சொல்ல வேண்டுமென தோன்றவே கருத்தில் அந்தப்படத்தைப் பற்றி குறிப்பிட்டேன். எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இந்த மாதிரியான ரோபோ கதைகளும் சுவாரஸ்யமாக இருக்கும்.

      விஞ்ஞான வளர்ச்சிகள் முன்னேறுகிறது ஒரு வகையில் நல்லதிற்குதான் என்றாலும், ஒரு மனிதனுக்கு பதிலாக மனிதனுக்கு சமமாக நாமே படைக்கும் அதனுடன் சரிசமமாக உறவாட சற்று தயக்கந்தான் ஏற்படுகிறது. காலப் போக்கில் நம் செரிமான எண்ணங்களில்,அதுவும் பழகி இயல்பான ஒன்றாகி விடுமோ என்னவோ! கடவுளுக்குத்தான் வெளிச்சம் எனச் சொல்லலாம். ஆனால்,அவர் மனிதனுக்கு தரும் வெளிச்சங்களின் (அறிவு கூர்மைகள்) வெளிப்பாடுகள்தாமே இவையெல்லாம் எனவும் நினைக்கத் தோன்றுகிறது. (என்னவோ.. விட்டால் என் கருத்தே ஒரு பதிவாகி விடும்.. ஹா ஹா.) நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. கமலா ஹரிஹரன் மேடம்...க்ளோனிங் மூலம் நம் உறவினரை மீண்டும் காண நேர்ந்தால் (அல்லது இருக்கும்போதே இன்னொன்றைத் தயார் செய்தால்) நம்மால் இருவருடனும் ஒரே மாதிரி பழக முடியுமா?

      நீக்கு
    5. வலி உள்ளுக்குள் லேசாக இருக்கிறதென்று அவள் கூறுகிறாள். ஆனால் வெளிகாயம் ஆறி வருகிறது.//

      அக்கா உங்களின் பதிவையும் பார்த்து தெரிந்து கொண்டேன். மகிழ்வான விஷயம். இதற்கான பதில் ரொம்ப தாமதமாகிவிட்டது கமலாக்கா..

      பதிவுகள் பார்த்து கமென்ட் போடுவது எல்லாம் ஆம் கொஞ்சம் மனம் ஆறும் விஷயம்தான். //அதுவும் மன/உடல் சோர்வை அகற்ற ஒரு வழி இல்லையா?// நிச்சயமாக மனம் டைவேர்ட் ஆக சான்ஸ் உண்டுதான்.

      அதில் படத்தின் கதையும், நடித்தவரின் நடிப்பும் நன்றாக இருந்தது.//

      ஆமாம் அக்கா. சுராஜ் வெஞ்ஜராமூடு தற்போது நல்ல வித்தியாசமான கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவர் காமெடியனாகத்தான் அறிமுகமானது ஆனால் அவரது அசாத்தியமான நடிப்புத் திறன் வெளியாகிறது. இந்தப் படத்தில் அசாத்தியமாக வயதான வேடத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு அசைவும்...

      (என்னவோ.. விட்டால் என் கருத்தே ஒரு பதிவாகி விடும்.. ஹா ஹா.) நன்றி சகோதரி.//

      உங்களுக்கு ஜோடி நானிருக்கிறேனே!!! ஹாஹாஹா

      கீதா

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  14. மனித மூளையிலுள்ள நரம்பு மண்டலங்கள் மற்றும் நியூரான்கள் ஒவ்வொரு கணநேரத்திலும் யாருடைய உதவியும் இல்லாமலேயே சுயமாகவே தன்னை புதுப்பித்துக்கொள்கின்றன அல்லது வளர்ச்சியடைகின்றன. இதன் மூலமாகவே மனிதன் புதிது புதிதாக சிந்திப்பது சாத்தியமாகிறது. ஆனால் ரோபோ - வின் நுண்ணறிவு பகுதியாக செயல்படும் மைக்ரோ சிப் தானாகவே புதுப்பித்துகொள்வதற்கோ அல்லது மனித உதவியின்றி தன்னை பெருக்கிக்கொள்வதற்கோ வாய்ப்பில்லை. எனவே மனிதனைப்போலவே ஒரு இயந்திரத்தால் சுயமாக சிந்திக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்... பதிவு அருமை ... நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாஞ்சில் சிவா சகோ (எங்கூர்ப்பக்கம்தானே??!!!)

      நீங்கள் மூளையைப் பற்றிச் சொல்லியிருப்பது சரிதான். அது போல ரோபோவால் செய்ய முடியாதுதான் என்றாலும் இயந்திரத்தால் தன்னிச்சையாகச் சிந்திக்க வாய்ப்பில்லை என்றாலும்...போகும் போக்கைப் பார்த்தால் ம்ம்ம்ம் தெரியவில்லை ...நீங்கள் சொல்லுவது போல் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

      மிக்க நன்றி சகோ கருத்திற்கு

      கீதா

      நீக்கு
    2. பதில் அளித்ததற்கு நன்றி சகோதரி!! நானும் உங்கள் ஊர் பக்கம்தான்...முக்கடலும் சங்கமிக்கும் "கன்னியாகுமரி"...
      தங்களுக்கும், துளசிதரன் சாருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!! நன்றி!!!

      நீக்கு
    3. மிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ உங்கள் இடம் சொன்னதற்கு. அட கன்னியாகுமரி!! என்ன அழகான ஊர். என்னுடன் ஹிந்துக் கல்லூரியில் படித்த நண்பர் பசும்பொன் நினைவுக்கு வருகிறார். அவரது தந்தை கூட ஒரு கோயில் பூசாரியாக இருந்தார். திடீரென்று காணாமல் போனவர் அவரைப் பற்றித் தகவலே இல்லை என்று அப்போது தெரிந்து பின்னர் தொடர்பில் இருந்தவரை அவரிடம் கேட்டும் எந்தத் தகவலும் இல்லை என்றே சொன்னார். இப்போது தொடர்பில் இல்லை

      தீபாவளி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோ

      கீதா

      நீக்கு