பாலக்காட்டில், நான் ஆசிரியராகப் பணியாற்றிய மாத்தூர் CFDVHS பள்ளியில் 2000-2002 ல் வணிகவியல் படித்த மாணவ மாணவியர் ஒரு சந்திப்பு நிகழ்வை, 2025, ஃபெப்ருவரி மாதம் 2 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தார்கள். தற்போது பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அந்த Batch ல் படித்த மாணவியான ராதிகா என்னைத் தொடர்பு கொண்டு பங்கெடுக்க வேண்டும் என்று சொன்னார்.
முந்தைய சில சந்திப்புகளுக்குச் செல்ல முடியவில்லை என்பதால் இந்தச் சந்திப்பை ஒட்டி, குடும்பத்துடன் இரு நாட்கள் பயணத்தைத் தீர்மானித்தேன். கோவையில் படிக்கின்ற என் மனைவியின் தங்கையின் மகன் விவேக் படிக்கும் கல்லூரிக்கு இதுவரை செல்ல முடியவில்லை. அங்கும் சென்று அப்படியே மருதமலை முருகனையும் தரிசித்து முருகனின் அருள் பெற்று வரலாம் என்று முடிவு செய்தேன்.
ஃபெப்ருவரி (2025) 1 ஆம் தேதி காலை கிளம்பி, மனைவியின் தங்கை மற்றும் கணவருடன் மதியம் 1 மணிக்கு, விவேக் படிக்கும் சின்னவேடம்பட்டி CMS கல்லூரியை அடைந்தோம். விவேகையும் அழைத்துக் கொண்டு மருதமலைக்குப் பயணமானோம்.
வழியில் மூங்கில் காடு எனும் ஒரு உணவகத்தில் மதியச் சாப்பாடு. ஒரு சிக்கன் ஃப்ரையும் ஆர்டர் செய்தோம். அது அபத்தம் என்பது சாப்பிட்டு பில் தந்த போதுதான் தெரிந்தது. 6 சாப்பாட்டிற்கு 600 ரூ. சிக்கன் ஃப்ரை ஒன்றிற்கு 600 ரூ! இது போன்ற பயணங்களில் இது போன்ற சிறிய ஷாக்குகள் இயல்புதானே!
அங்கிருந்து மருதமலை. மலை மேல் செல்ல பேருந்து வசதி உண்டு. அதற்கு க்யூவில் நின்று டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். காரிலும் நேராகச் செல்லலாம். எனவே காரில் பயணித்தோம்.
ஷண்முகக் கடவுள் போற்றி! சரவணத்(து) உதித்தோய் போற்றி!
கண்மணி முருகா போற்றி! கார்த்திகை பாலா போற்றி!
தண்மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி!
விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி! போற்றி!
மதிய நேரம் என்பதால் அதிகம் கூட்டம் இல்லை. இறையருளால் நல்ல தரிசனம் கிடைத்தது.
புளியோதரை பிரசாதம் கிடைத்தது. அதோடு முருக பகவானின் பஞ்சாமிருதமும், லட்டு மற்றும் அதிரசமும் வாங்கினோம். ஒவ்வொன்றும் ரூ 50 மட்டும்.
அதன் பின் நேராகப் பாலக்காடு வந்தடைந்தோம். அங்கு PWD தங்கும் விடுதியில் ஏற்கனவே அறைக்குப் பதிவு செய்திருந்ததால் செக்கின் செய்தோம்.
அதன் பின் பாலக்காடு கோட்டை மைதானத்திலுள்ள ஹனுமான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம். பிரசாதமும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, அறைக்குச் சென்று நல்ல ஓய்வும் உறக்கமும்.
மறு நாள் காலை 7 மணிக்கு எல்லோரும் குளித்து ரெடியானோம். அறை 11 மணிக்கு செக்கவுட் செய்ய வேண்டும்.
கொல்லங்கோடு மற்றும் சீதார்குண்டு காட்சிகளைக் காணொளியில் காணலாம்
மகள், கொல்லங்கோடு செல்ல வேண்டும் என்று சொன்னதால் கொல்லங்கோடு நோக்கி பயணம். அங்கு கொல்லங்கோடு வியூபாயின்ட் மற்றும் சீதார்குண்டு கண்டு திரும்ப முடிவு செய்தோம். கொல்லங்கோட்டுக்குச் செல்லும் அழகான சாலை. இருபுறமும் பாலக்காட்டுக்கே உரித்தான வயலும் பனைமரங்களும். அருமையான காட்சிகள்.
8 மணிக்கு அங்கு சென்றடைந்தோம். அப்போதே அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள். அழகிய வயல் வெளிகள். தூரத்தில் தெரியும் மலைகள்.
அதனிடையே எல்லோரது கவனத்தையும் ஈர்த்த அந்த ஓடு வேயப்பட்ட ஒற்றை வீடு. அந்த வீட்டின் முன்பு அந்த வீட்டுடைமையாளர் வேசு அம்மா நின்று கொண்டிருந்தார். அவர் பஞ்சாயத்தில் தன் வீட்டை மேம்படுத்திக் கட்டிக் கொள்ள நிதி உதவிக்கு விண்ணப்பித்திருக்கிறாராம். அது கிடைத்து அங்கு ஒரு நல்ல வீடு உருப்பெறலாம். ஆனால், அதன் பின் கொல்லங்கோட்டின் வயல் வீடாய் மக்கள் மனதில் பதிந்த அந்த வீடு ஒரு பழைய நினைவாக மாறிவிடும்.
அங்கிருந்து சீதார்குண்டு (அருவி) நோக்கி ஒரு சாகசப் பயணம். பாறைகள் நிறைந்த பாதையில் பயணித்தோம். அதன் பின் மலைஅடிவாரத்தில் காரை பார்க் செய்து, 300 மீட்டர் தூரம் மலை ஏறி சீதார்குண்டை அடைந்தோம். அங்கு சென்றடைந்த போது வசீகரமான சீதார்குண்டு அருவி. பெரியதல்ல. சிறிய அருவிதான். அருமையான காட்சி.
அதன்பின் அங்கிருந்து பாலக்காடு நோக்கிப் பயணமானோம். அறைக்குச் சென்று செக்கவுட் செய்து டிஃபன் சாப்பிட்டோம். மற்றவர்கள் ஷாப்பிங்க் மற்றும் மலம்புழா கண்டு என்னை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வது என்று முடிவு செய்து, நான் மாத்தூர் பள்ளிக்குப் பேருந்தில் பயணமானேன்.
1995 முதல் 2018 மார்ச் வரை என்னுடைய ஒரு பாகமாக இருந்த பள்ளி. இப்போது இப்படி எப்போதாவது விருந்தாளியாய் சில மணி நேரங்கள் வந்து போகும் ஓரிடமாய் ஆகிவிட்டது.
என்னுடன் பணியாற்றிய சக ஆசிரியர் முன்னாள் முதல்வர் உன்னிக் கிருஷ்ணன், பள்ளி மேலாளர் வந்திருந்தார்கள். 2000-2002 ல் ஒளிவீசும் கண்களும், பாசத்துடனும், புன்னகையுடனும் எப்போதும் வலம் வந்த அந்த மாணவ மாணவியர் இப்போது நல்ல திறன்படைத்த, அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், சொந்த நிறுவன உரிமையாளர்கள், குடும்பத் தலைவிகள், என்று எல்லோரும் அங்குக் கூடியிருந்தார்கள்.
ராதிகா, எல்லோரையும் வரவேற்றுப் பேசி எனக்கு Memento வழங்கினார்.
அதன் பின் ஒவ்வொருவரும் தங்களது இனிய அனுபவங்களைப் பகிர்ந்தனர். மிகவும் மகிழ்ச்சியான தருணம். சிரித்த அவர்களது முகத்தில் முந்தைய பள்ளிப் பருவ முகங்கள் பிரதிபலித்தது. பின் எல்லோரும் உணவருந்தி ஒரு குரூப் ஃபோட்டோவும் எடுத்தோம்.
நான் நிகழ்விற்குச் செல்ல தாமதமானதால் வனத்துறையில் பணிபுரியும் மோகன் தாஸின் புல்லாங்குழல் இசையும் ராதிகா மற்றும் சக ஆசிரியர் சரோஜ் குமார் அவர்களின் பாடல்களையும் கேட்க முடியவில்லை. ஆனால் வாட்சப் குழுவில் பகிரப்பட்ட அவற்றைப் பின் கண்டு களித்தேன். அப்படி பழைய நாட்களை நினைவுக்குக் கூட்டி வந்த அந்த நாளும் ஓர் நினைவாய் மாறிவிட்டது. இனி இந்நாளும் நினைவில்தான்.
இங்கு எனக்கு ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதை நினைவுக்கு வருகிறது.
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before Ii sleep
കൊള്ളാം
பதிலளிநீக்குJayakumar
அடிப்பொலி என்று எழுதி இருக்கிறீர்கள்! சரியா?!!
நீக்குபதிவு அருமை.
பதிலளிநீக்குமருதமலை முருகன் கோயில் படங்கள் இல்லையே என நினைத்தேன், காணொளியில் இருக்கிறது. தாங்கள் பணிபுரிந்த பள்ளியில் முன்னாள் மாணவர் கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்து இருக்கும். அந்த பள்ளியில் பயின்ற இனிய அனுபவங்கள் பகிர்வு கேட்க நன்றாக இருந்து இருக்கும், அது ஒரு இனிய அனுபவம் தான். ஓடு வேயப்பட்ட பழைய ஒற்றை வீடு அழகு தான். புதுப்பித்தால் அதன் பழமை இருக்காதுதான்.சீதார்குண்டு அருவியும் சிறு ஓடை போல ஓடி கொண்டு இருப்பதும் அழகு. போகும் பாதையின் பசுமை காட்சி அருமை.
பழைய நண்பர்களைக் காண்பதே மகிழ்ச்சி. அதிலும் படித்த மாணவ மாணவியரைக் காண்பது, அதிலும் அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதைக் காண்பது பெருமிதம்தான்.
பதிலளிநீக்குஅழகான இடங்களுக்குப் பயணித்திருக்கிறீர்கள். நீங்கள் பாலக்கோடு என்று குறிப்பிட்டிருப்பது பாலக்காடா?
பதிலளிநீக்குபயணத்தின் வழியில் பார்த்த அருவி வசீகரமாக இருந்தாலும் ஜில் நீரில் குளித்திருக்கமாட்டீர்கள் (அதற்கான முன்னேற்பாடுடன் போயிருக்க மாட்டீர்கள்)
பதிலளிநீக்குஇந்தப் பதிவைப் பார்த்தபோது என் மாமனார் (அவர் கல்லூரியில் துறைத்தலைவராக, பேராசிரியராகப் பணியாற்றியவர்), கல்லூரிப் பேராசிரியர்களுடன் காணொளியில் பேசிக்கொண்டிருந்தபோது (7 வருடங்களுக்கு முன்பு), நான் யதேச்சயாகப் பார்த்தேன். அவரும் யார் யார் என்று சொன்னார், அதில் எனக்கு கணிதம் எடுத்த பேராசிரியரையும் பார்த்தேன். பேசினேன். அவருக்கு காணொளியில் பார்ப்பதால் சட் என்று தெரிந்திருக்காது. இருந்தாலும் நமக்குப் பாடம் புகட்டிய ஆசிரியர்கள் எந்த வயதாக ஆனாலும், நமக்கு அவர் பாடம் எடுத்தபோது இருந்த முகம்தான் கண் முன் நிற்கும்.
அருமையான சந்திப்பு...
பதிலளிநீக்கு