ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

கொக்கரேபெல்லூர் - பறவைகளும் மனிதர்களும் இயைந்து வாழும் கிராமம் - 4 - நிறைவுப்பகுதி

சென்ற பதிவின் தொடர்ச்சி - எங்களை ஏற்றிக் கொண்ட புதிய ஆட்டோகாரர், கிராமத்தின் பேருந்து செல்லும் சாலையில் செல்லாமல் வேறொரு வழியில் சென்றார். இந்த வழி வித்தியாசமாக இன்னும் பசுமையாக இருந்திட நான் அவரிடம் கேட்க, இது "பசுலு பசுலு Road" (பசுமையான சாலை) என்றார். அதே ருத்ராக்ஷிப்பூர்-ஹலகுரு சாலை பேருந்து செல்லாத கிராமத்துச் சாலை. ரொம்பவே வேகமாகச் சென்றார். எனக்கு ஃபோட்டோ எடுப்பது சிரமமாக இருந்தது. "ஐயா கொஞ்சம் மெதுவா போங்கய்யா". ஆனால் மனுஷர் கேட்கத் தயாராக இல்லை. ஏற்கனவே அறிமுகமாயிருந்த ஆட்டோ நண்பர் கிரணிற்கு என் விருப்பம் தெரியும் என்பதால் நிதானமாக ஓட்டிக் கொண்டு வருவார்.

நெல்லையும் அவர் மனைவியும் வந்த வண்டியைக் காணலையே என்றால், 'அவங்க வருவாங்க' என்று சொல்லி வேகமாகச் சென்றார். 'ப்ளீஸ் நிறுத்துங்க, என்று சொல்லி, அந்த ஆட்டோகாரரைக் கூப்பிடுங்க" என்றேன். ஆட்டோ நண்பர் கிரண்  முந்தைய பயணத்தில் சென்ற பேருந்து செல்லும் சாலையில் சென்றது தெரிந்திட, அவரிடம் இந்தச் சாலையில் வருமாறு சொல்லச் சொன்னேன். அடுத்த 10 நிமிடங்களில் அவர்களும் வந்து சேர்ந்தனர்.

நெல்லையும் அவர் மனைவியும் வந்து கொண்டிருந்த ஆட்டோவிற்காகக் காத்திருந்த போது இறங்கி எடுத்த ஒரு படம். மீதி கிராமத்துக் காட்சிகளை வேறொரு பதிவில் படங்கள் காணொளிகள் உலாவில் பகிர்கிறேன். 

சென்று கொண்டே இருந்தப்ப, வயலில் நிறைய பறவைகளைப் பார்த்து பரவசமானேன்.  "ஓ மை கடவுளே" என்று சொல்லி நிறுத்தச் சொன்னாலும் நம்ம ஆளு போய்க் கொண்டே இருந்தார். ஆட்டோ சத்தத்தில் கேட்கவில்லை போலும் என்று சத்தமாகச் சொல்லி நிறுத்தச் சொன்னேன். கிரண் ஓட்டி வந்த ஆட்டோவும் நின்றது. வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களோடு நிறைய வண்ண நாரைகளும், வெள்ளை அரிவாள்மூக்கன்களும், வெள்ளைக் கொக்குகளும் பயமில்லாமல் இரை தேடிக் கொண்டிருந்தன. காணக் கண்கொள்ளாக் காட்சி. நாங்கள் இறங்கியதும் பறந்தன பாருங்க! என் கேமரா திரை வருவதற்குள் விடிந்துவிடும். எனவே டக்கென்று மொபைலில் கொஞ்சம் எடுத்தேன். ஜெ கே அண்ணாவிற்காகப் படங்களைப் ஒரிஜினல் சைஸில் கொடுத்துள்ளேன்.

பனி விலகாத இளம் வெயில் வீசிய காலை நேரம் தெரிகிறதா? சூரிய வெளிச்சம். எனவே கொஞ்சம் பக்கவாட்டில் நின்று படம் எடுத்தேன். வெள்ளை அரிவாள்மூக்கன் பறவைகள் பறக்கின்றன

வண்ண நாரைகளும் அரிதாகி வருகின்றனவாம்
 வண்ண நாரைகள் பறக்கின்றன 

அரிதாகிவரும் வெள்ளை அரிவாள்மூக்கன்கள்/தலைக்கத்தி சுண்டன்/Black-Headed Ibis தெரிகின்றனரா!! அரிவாள்மூக்கன்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. இலக்கியங்களில் அன்றில் பறவை என்று சொல்லப்படுவன. போன பதிவில் கறுப்பு அரிவாள்மூக்கன் போட்டிருந்தேன்.

அரிவாள்மூக்கன்கள் வயலில் இரை தேடுகின்றன ஒரு சின்ன காணொளி.

ஃபோட்டோ ஷூட் முடிந்த பிறகு மீண்டும் பயணம். நம்ம ஆட்டோக்காரர் ஸ்பீடோ ஸ்பீட். சற்று தூரம் சென்றதும் மயில்கள் பார்த்தோம். நம்ம ஆட்டோக்காரரிடம் சொல்லி...ஸ்பாஆஆ முடியலைடா சாமி! இறங்கி கேமரா, அலைபேசி எல்லாம் ஆன் செய்வதற்குள் பறந்துவிட்டன. அதன் பின் பயணம். சற்று தூரத்தில் எங்கள் ஆட்டோவின் முன் இரு மயில்கள் ரோட்டோரத்தில் இருப்பது தெரிந்தது. நம்ம ஆட்டோகாரரிடம் சொல்லச் சொல்ல, அவர் வேகத்தைக் குறைக்காமல் சென்றிட, அவை பறந்து வயலுக்குள் சென்றுவிட்டன. நாங்கள் இறங்குவதற்குள் ஒன்று பறந்து மரங்களுக்கிடையில் சென்றுவிட்டது. மற்றொன்று நடை போட அதை மட்டும் சின்ன வீடியோ எடுத்தேன். இதோ கீழே

நீ நடந்தால் நடையழகு! அழகு!

கடைசியாக ஆட்டோ நின்றதும் தான் தெரிந்தது பறவைகள் கூடு கட்டும் கிராமத்து தெருவுக்கு வந்தாச்சு என்று. மரங்களில் பறவைகளைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அத்தனையையும் கேமராவில் சிறைப்பிடித்திட வேண்டும் என்ற பரபரப்பு. இங்கு சில படங்களையும் ஓரிரு காணொளிகளையும் பகிர்கிறேன். மீதியை பின்னர் பகிர்கிறேன்.

Nature Interpretation Centre-இயற்கை விளக்க மையத்தைப் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீ கிருஷ்ணா சொன்னார், மொபைல் கோபுரங்கள் தவிர, இப்பறவைகள் வருவது குறைவுக்கான வேறு காரணங்கள், அருகில் Express way போட்ட போதும், கிராமத்திற்குமான சாலைகள் அமைத்த போதும், ஆல மரங்கள், புளிய மரங்கள் பல வெட்டப்பட்டதாலும், அருகே உள்ள நதியில் மண் அள்ளுவதாலும், குளங்களில் இருந்தும் மண் எடுப்பதாலும்,   கிராமத்தைச் சுற்றியுள்ள சில குளங்கள் வற்றியதாலும் வரத்து குறைந்துள்ளது என்று.

இங்கு உணவும் நீரும் இல்லை என்றால் பறவைகள் ரங்கனத்திட்டுவுக்குச் சென்று விடுமாம். ஒருபக்கம் உலக வனவிலங்கு நிதியகம், வனத்துறை, பறவை இயற்கை ஆர்வலர்கள் மறுபுறம் அரசு! சலிம் அலி அவர்கள் இருந்திருந்தால்? ரங்கனத்திட்டு அமைய போராடி அமைத்தது போல இதற்கும் செய்திருப்பார்.

கீழே நின்று கொண்டிருந்த போது எடுத்த ஃபோட்டோ. வண்ண நாரை தனியாக. ஜோடியைக் காணவில்லை. பறவைகளுக்கு மின்சாரம் தாக்காமல் இருக்க கிராமத்தில் Insulated கம்பிகள்.  கம்பிகளில் இருப்பது போலத் தெரிகிறது இல்லையா? இடப்பக்கம் 3 பறவைகள் சரியாகத் தெரியலை பாருங்க.

இதுவும் கீழிருந்து கேமராவை சரிவாக வைத்து நெட்டுக்காக கொஞ்சம் ஜூம் பண்ணி எடுத்தேன். எதையாச்சும் தேடுகிறதா இப்படி ஒற்றையாக கூட்டைவிட்டுத் தள்ளி .. இந்த சீசனில் இவை இப்படி அடிக்கடி வாயைப் பிளந்து பிளந்து மூடுமாம்

பறவைகள் மரங்களின் மேல்பகுதியில்தான் கூடு கட்டுவதால் கீழிருந்து எடுப்பது சிரமம். மேலும் பல பறவைகள் மரங்களினிடையே கிளைகளில் இருந்ததால் சரியாகத் தெரியவில்லை. புளிய மரம், பூவரசு மரம், அரசமரங்களில் கூடு கட்டியிருந்தன. இலைகளுக்கிடையில் இருந்தவை சரியாகத் தெரியவில்லை. மேலும் கீழும் உள்ள மரங்கள் புளியமரம்

அடைகாக்கும் ஒரு வண்ண நாரை. அதன் ஜோடி அருகில்.  கிளைகளின் இடையில் இருப்பவை தெரியமாட்டேங்குது பாருங்க

அடைகாத்துக் கொண்டிருந்த நாரை "ஹப்பாடா என்று எழுந்து சிறகை விரித்து  ஆசுவாசப்படுத்திக்குது பாருங்க சின்ன காணொளிதான். அருகில் இருந்த கோவிலில் ஐயப்பன் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆணும் பெண்ணும் ஜோடியாகத்தான் பொறுப்புடன் இருக்குமாம். இந்தப் படம் மற்றும் கீழே உள்ள படத்தில் இருக்கும் மரம் பூவரசு மரம் 

மேலே உள்ளவை இதுவரை வண்ண நாரைகள்
இனி கீழே பெலிக்கன்
பெலிக்கன் / புள்ளிமூக்கு கூழைக்கடா

ஒரு சில மரங்களின் கீழே குஞ்சுகள் கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க இப்படி நெட் கட்டியிருந்தார்கள். குறிப்பாகப் பெலிக்கன் பறவைகள்/புள்ளி மூக்கு கூழைக்கடா கூடு கட்டியிருந்த மரங்களின் கீழ். அவை உயரமான மரங்களின் உச்சிக் கிளைகளில் தான் கூடு கட்டும். பனைமரங்களின் உச்சியில் கூட கூடுகட்டும்.

காகங்கள் போல நாரைகள், பறந்து கொண்டே இருந்தன. சின்ன காணொளி. பறப்பதை எப்படியேனும் எடுக்க வேண்டும் என்று முயற்சித்து மொட்டைமாடியில் நின்ற போது, சூரிய வெளிச்சத்தில் திரை கண்ணில் தெரியாமல் இருந்தாலும் சமாளித்து சில எடுத்து எல்லாம் கோர்த்து எடிட் செய்த காணொளி. 

அங்கிருந்த மக்கள் தங்கள் வீடுகளின் மாடியில் நாங்கள் ஏறிப் பார்க்க அன்போடு அனுமதித்ததால் அப்படிப் பார்க்க முடிந்தவற்றை எடுக்க முடிந்தது. பறப்பவற்றை எடுக்க முடிந்தது. மொட்டை மாடிக்கு வெளிப்புறமாக ஏறுவது போன்று இருந்தது. சௌகரியமாக இருந்தது.  ஆனால் மொட்டைமாடி உள்ள வீடுகளை எண்ணிவிடலாம்.  ஓடு வேயப்பட்ட வீடுகள்தான் அதிகம். 

நாங்கள் கிராமத்து தெருக்களில் நடந்து கொண்டே மாட்டுத் தொழுவம், ஆடுகள், ஓட்டில் படர்ந்திருந்த அவரைக்காய் கொடி, காய்த்திருந்த அவரைக்காய்கள், இரு வீடுகளுக்கு இடையில் கழிவு நீர் பகுதி மண் மேட்டில் காய்த்திருந்த தக்காளி, (அங்கு பாம்பு இருக்குமோ என்று நம்ம அண்ணனுக்குப் பயம்! நான் இருக்காது என்றேன். அப்புறம் அவர் அண்ணனாக முன்னே சென்று படம் எடுத்திட நானும் எடுத்தேன்), அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோற்போர் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு, பேசிக் கொண்டு, பாடல் ஒலிக்கும் கோவிலையும் அடையாளம் கண்டு கொண்டு, மரங்களில் பறவைகளையும் பார்த்துக் கொண்டு நடந்தோம். மொட்டைமாடி அதிகம் இல்லாததால் சில மரங்களில் உள்ள பறவைகளை கீழிருந்து கேமராவில் ஓரளவு தெரிந்ததை சிறைப்பிடித்தேன்.  இப்படங்கள் எல்லாம் பட உலாவில் வந்துவிடும். 

நானும் நெல்லையின் மனைவியும் பல சின்ன சின்ன பறவைகளைப் பார்த்தோம் ஆனால் அவற்றைப் படமெடுக்க முடியவில்லை. பேசிக் கொண்டே நடந்தோம். அப்போது ரங்கனத்திட்டுக்கும் சென்று வரலாமா என்றும் பேசிக் கொண்டோம். செயல்படுத்த முடியவில்லை.

ருத்ராக்ஷிபுர் ஹலகுரு சாலையில் வயல் அறுவடைக்குப் பின்னான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஆர்வத்துடன் பார்த்தேன். என் கிராமத்து நினைவுகள்! என் கேமராவின் பேட்டரியும் தன் சக்தியை இழந்து கொண்டிருந்தது. இப்பத்தியின் படங்கள், காணொளிகள் பின்னர் பகிர்கிறேன். 

அதன் பின், பறவைகள் மருத்துவமனை/பாதுகாப்பகம் மற்றும் Nature Interpretation Centre - நெல்லைக்கும் அவரது மனைவிக்கும் காட்ட அங்கு சென்றோம். சென்றமுறை சிகிச்சை பெற்று நலமடைந்த பறவைகளை சீசனில் மற்ற பறவைகளோடு விட்டிருக்கிறார்கள். இப்ப புதியவை சில இருந்தன. 

ஒரு பெலிக்கன் மற்ற மூன்றும் வண்ண நாரை

 புதியவை சிகிச்சைக்கு - பெலிக்கன்
சத்தம் போட்டுக் கொண்டே இருந்த அந்த வண்ணநாரை மட்டும் (முட்டியில் தகடு க்ளிப் தெரிகிறதா) இப்பவும் இருந்தது. பாவம். எல்லாம் சீக்கிரம் குணமடைந்து மற்ற பறவைகளோடு சேர வேண்டும்.


அப்படியாக (எனக்கு மனமில்லாமல்) பறவைகளுக்கும் கிராமத்திற்கும் விடை சொல்லி அங்கிருந்து கிளம்பினோம். 11.30 மணிக்கு  மத்தூர் பேருந்து நிலையத்தை அடைந்துவிட்டோம் பொறுமையாகக் கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரம் காத்திருந்து ஒத்துழைப்பு கொடுத்த கிரண் மற்றும் புதிய ஆட்டோ நண்பருக்கு நன்றி சொல்லி, சென்ற பதிவில் சொல்லியிருந்த ரேட்தான் - கொடுத்துவிட்டு, கிளம்பும் முன் மீண்டும் Refresh செய்து கொண்டு மதிய உணவு சாப்பிடும் நேரம் ஆகவில்லை என்பதால் பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம் வந்து பெங்களூர் வரும் பேருந்தில் ஏறினோம். இருக்கைகளும் கிடைத்திட, 2 மணி நேரப் பயணம். நான் அலைபேசியில் எடுத்தவற்றைப் பார்த்துக் கொண்டே வந்தேன் அந்த நினைவுகளில் மூழ்கி.

சாட்டில்லைட் நிறுத்தத்தில் நெல்லையும் அவர் மனைவியும் இறங்கிடலாம் அங்கிருந்து அவர்கள் வீடு அருகில் என்பதால் எங்களையும் அங்கு வந்துவிட்டுப் போகலாமே என்றனர். எனக்கு ஆசைதான். ஆனால் நம்ம வீட்டவர் Tired ஆகிட அவருக்கு மேலும் சில வயிற்றுப் பிழைப்புப் பணிகள் முடிக்கவேண்டி இருந்ததால் பிறிதொரு சமயத்தில் என்று சொல்ல வேண்டியதானது. நாங்கள் மெஜஸ்டிக்கில் இறங்கினோம். அங்கு வசதியான இடம் பார்த்து உட்கார்ந்து மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு மெஜஸ்டிக் ===> (metro) பனசங்கரி. அங்கிருந்து எங்க பகுதிக்குச் செல்லும் பேருந்தில் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

(இப்பயண அனுபவங்களில் நான் தெரிந்து கொண்டவை - பறவை ஆர்வலர்களுக்கு - கிராமத்திற்குள் வீடுகள் இருக்கும் குறிப்பிட்ட பகுதியில்தான் மரங்களில் வண்ண நாரைகளும், பெலிக்கன்களும்  அதிகம் கூடு கட்டுகின்றன. ஃபெப்ருவரி மாசம் இரண்டாவது வாரம் போனால் நிறைய பறவைகளைப் பார்க்கலாம். மார்ச் ஏப்ரலில் போனால் குஞ்சுகளையும் பார்க்கலாம். அக்கிராமத்தில் குளிர்காலம் தொடங்கி ஏப்ரல் மே வரை தங்க முடிந்தால், ஒவ்வொரு தினமும் கிராமத்திலும் சுற்றுப் புறங்களிலும் அமைதியான சூழலில் நடைப்பயிற்சியுடன் வெவ்வேறு வகை பறவைகளைப் பார்க்கலாம். கூடவே சின்ன பறவைகளையும் எடுக்கும் விதமான கேமரா வேண்டும்!)



-----கீதா

19 கருத்துகள்:

  1. ​பயணக் கட்டுரை அவசர அவசரமாக முடித்தது போல் தோன்றுகிறது. பறவைகளின் படமும் காணொளியும் நன்றாக இருந்தாலும் ஒரு தனிப்பட்ட சிறப்பு இல்லை. எல்லாம் ஓகே ரகம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவசரமாக முடிக்கவில்லை ஜெ கே அண்ணா. இவ்வளவுதான் மேட்டர் அதில்.

      என்னிடம் இருக்கும் கேமராவைத்தானே நான் பயன்படுத்தமுடியும்? அங்கு ஸ்பெஷலாக எடுக்க வேண்டும் என்றால் பறவைகளை எடுக்க என்று கேமரா இருக்கிறது அதைப் பயன்படுத்த வேண்டும். அதற்கான லென்ஸ் அட்ஜஸ்ட் செய்வது என்று. அது வாங்குவது என்பது எனக்கு இயலாத காரியம். ஒரு டி எஸ் எல் ஆர் கேமரா 20k க்குள்ளாக இருப்பதை வாங்குவதே யோசிக்க வேண்டி உள்ளது. ஸோ என்னிடம் இருப்பதைத்தான் நான் பயன்படுத்தி என் திருப்திக்காகப் போடுகிறேன் அண்ணா. அவ்வளவுதான். நான் போட்டியில் எதுவும் கலந்து கொள்ளவில்லையே.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  2. ​ps சிறகொடிந்த காகம் காணவில்லை. எங்கு எப்படி போனது என்று தெரியவில்லை. பூனை கவ்வியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அண்ணா அது பாவம். நடக்க முடியாமல் இருந்ததால் அதான் நினைச்சேன் ஏதாச்சும் கவ்வியிருக்கும். சாப்பிடாதுங்க ஆனா சும்மானாலும் கவ்விவிடும்

      கீதா

      நீக்கு
  3. அருகில் இருந்த கோவிலில் ஐயப்பன் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. - இது என் மனதிற்கு ஒவ்வாததாக இருந்தது. செண்டிமெண்டெல்லாம் இங்கு கொண்டுவரக் கூடாது. பறவைகளுக்கு சப்தம் மிகுந்த இடைஞ்சலைக் கொடுக்கும். அதனால் அந்தக் கிராமத்தில் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இந்தச் சமயங்களில் ஒலிபெருக்கிகளுக்குத் தடை சொல்லலாம். இப்போதுள்ள காங்கிரஸ் அரசு செய்தால் (அது ஆர்வமாகச் செய்யும்) அதை அரசியலாக்கிவிடுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக நெல்லை உங்க கருத்துக்கு வாக்கு போடுகிறேன். அடுத்த முறை இன்னும் குறையும். கண்டிப்பாகத் தடை கொண்டு வர வேண்டும். நான் அந்த மையத்தைப் பார்த்துக் கொள்ளும் திரு ஸ்ரீ கிருஷ்ணா என்பவரிடம் வந்ததும் கூப்பிட்டுச் சொன்னேன்.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  4. //உட்கார்ந்து மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு // அடப்பாவீ.. என்ன கொண்டுவந்தார் என்பதே தெரியாதே... ரகசியமாகச் சாப்பிட்டிருப்பார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா.....சிரித்துவிட்டேன்!! நெல்லை உங்ககிட்டதான் மெனு சொல்லிருந்தேனே!!!! நாங்க மெஜஸ்டிக் போனதும்தானே சாப்பிட்டோம்.

      நன்றி நெல்லை....

      கீதா

      நீக்கு
  5. அங்குள்ள மக்கள் ரொம்பவே ஃப்ரெண்ட்லி. நாங்க பாட்டுக்கு மாடிப்படிகளில் ஏறி மொட்டைமாடியிலிருந்து பறவைகளைப் பார்த்தோம். எந்த ஒரு வீட்டிலும் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. நல்ல மக்கள். நல்ல கிராமம். ஆனால் கீதா ரங்கன்(க்கா) அந்த அழகிய வீடுகளைப் படமெடுத்துப்போட வில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ரொம்ப ரொம்ப. அங்க இருந்தது நாம போன இடத்தில் 3 வீடுகளில் இருந்ததில் ஏறினோமே...

      இங்க ஒரு படம் பகிர்ந்திருக்கிறேன். வேறு சில காணொளிகளில் இருக்கு நெல்லை. அதை வேறு ஒரு பதிவில் பகிரலாம்னு. அது போல படங்களும் இருக்கு....மாடுகள் இருந்ததெல்லாம் எடுத்திருக்கிறேன். காணொளியாக. என் கேமரா பாட்டரி குறைந்தும் போனது.

      பதிவை ஒழுங்கா வாசிக்கலைன்னு தெரியுது!!! ஹாஹாஹா....பதிவுல சொல்லியிருக்கிறேனே....கிராமத்துக் காட்சிகள் வேறு பதிவில் வரும்னு.

      மக்கள் இருந்தால் படமெடுக்கத் தயங்குவேன்.

      நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  6. சுருக்கு வழியா, குறுக்கு வழியா...  ஏன் அவர் பாதை மாறிச் சென்றார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அவர் கிராமத்துச் சாலை வழியாகச் சென்றார். நல்ல வழிதான் பசுமையான வழி என்பதால் அவர் அபப்டி அழைத்துச் சென்றால் அப்படிச் சென்றதால்தான் இபிஸ், மயில் எல்லாம் வயல்களில் பார்க்க முடிந்தது.

      அவர் அப்படிச் சென்றதுமே, எனக்குப் புரிந்துவிட்டது, மேப் ஏற்கனவே நான் பார்த்திருந்ததால் அவர் கிராமத்துச் சாலையில் செல்கிறார் என்பது. ஆனால் அவர் ஸ்பீடாகப் போனதுதான் எனக்கு ஃபோட்டோ எடுக்க முடியாமல் ஆனது .

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. பசுமையான இடங்களை பசுபசுவென படம்பிடித்து பகிர்ந்திருக்கிறீர்கள்.  நகரங்களில் காண முடியாத காட்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் அந்த வழி செம பசுமை அதான் ஆட்டோக்காரர் பசுலு பசுலுன்னு சொல்லிக் கொண்டே வந்தார். கண்டிப்பாக நகரத்தில் காண முடியாத காட்சி

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. எங்கள் ஆட்டோக்காரரிடம் கூட எதையாவது வாங்க வேண்டும் என்று சொல்லி ஓரமாக போங்கள்  என்று சொன்னாலோ, நிறுத்துங்கள் என்று சொன்னாலோ கவனிக்காதது போல செல்வார்.  அது நினைவுக்கு வருகிறது!  இவர்கள் எல்லோருக்குமே அது வழக்கம் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நானும் பலரை அப்படிப் பார்த்திருக்கிறேன்....இந்தப் புதியவர்தான் அப்படி இருந்தார் ஸ்ரீராம். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த கிரண் அப்படி இல்லை. என் ஆர்வம் அறிந்து நிதானமாகச் சென்றார். அப்ப..

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. எவ்வளவு நீளமான கால்கள்!  கால்களின் அளவில் பாதி இருக்கும்போல அலகின் அளவு!  அந்த சபரிகிரியிஸ நீலமேக சியாமா பாடல் அங்கு ஒலித்த பாடலா?  பறவைகளுக்கு அது தொல்லையாக இருக்காதா?

    பதிலளிநீக்கு
  10. கிராமத்தார் பறவைகளை பார்க்க வருபவர்களை அந்நியராகப் பார்க்காமல் அன்புடன் இடம் கொடுப்பது நெகிழ்ச்சி, பாராட்டுக்குரியது.  அழகான பறவைகள் படங்கள் மனதுக்கு மகிழ்ச்சியளித்தன.

    பதிலளிநீக்கு