நான்கு மாதங்களுக்கு முன்பு நல்ல குளிர் சமயத்தில் பந்திப்பூரில், தமிழ்நாடு, கேரளா எல்லையின் அருகில், கர்நாடகாவின் எல்லைக்குள், 1450 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஹிமவத் கோபாலசுவாமி பெட்டா (மலை) எனும் மலைக்கோயிலுக்குச் சென்றோம்.
கேரளத்தையும், தமிழ்நாட்டையும், கர்நாடகாவையும் இணைக்கும், முதுமலை, பந்திப்பூர், கூடலூர், ஊட்டி/கோழிக்கோடு வரை செல்லும் நெடுஞ்சாலையில், எங்கள் பகுதியான எடக்கராவிலிருந்து சுமார் 90 கிமீ தூரத்தில் 2 1/2 - 3 மணி நேரப் பயணத்தில் இருக்கிறது இந்தக் கோயில்.
கூடலூர் தாண்டியதும், முதுமலை, பந்திப்பூர் காடுகள் இரு புறமும்
என்பதால் மான் கூட்டமும், யானைக் கூட்டமும் காண முடிந்தது. (காணொளியில் காணலாம்)
குண்டுலுபெட் வரை நம் வண்டியில் செல்ல முடியும். மலையில்
தனியார் வண்டிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் கோயில் இருக்கும் மலைக்கு அங்கிருந்து
கர்நாடகா அரசுப் பேருந்து ஷட்டிலில் தான் செல்ல வேண்டும். நாம் வண்டியில் சென்றால் வண்டியை நிறுத்துமிடம் சென்று
அங்கு வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து மலைக்குச் செல்லும் கர்நாடகா அரசுப்
பேருந்தில் செல்ல வேண்டும்.
சென்று வர ஒருவருக்கு டிக்கெட்
விலை ரூ 60.
குளிர்
சமயம் என்பதால் மஞ்சு படர்ந்திருந்தது. சுற்றிலும்
மஞ்சு சூழ்ந்த மலைகள் மரங்கள் என்று இயற்கையின் அழகு காணக் கண் கொள்ளாக் காட்சியாக
இருந்தது. கோயிலுக்குச் சென்ற போது பனியுடன் கூடவே மழைச்
சாரலும் இருந்தது. கீழே காணொளியில் காணலாம்.
கோயிலில்
நல்ல தரிசனம் கிடைத்தபின், மதியம்
பிரசாதமாக அன்று பொங்கல் கிடைத்தது.
மலையிறங்கி வீட்டிற்கு வரும்
வழியில் ஒரு அழகான பூந்தோட்டம்.
கூடலூரில் டிஃபன் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். போகும் வழியும், இந்தக் கோயில் அமைந்துள்ள
இடமும் இயற்கையின் அழகும் மனதிற்கு இனிய நினைவுகளையும் மகிழ்வையும் தந்தது.
மைசூரிலிருந்து
இக்கோயில் 78.4 கிமீ தூரத்தில் 1.45 - 2 மணி நேரப் பயணம் என்று கூகுளில் தெரிந்து கொள்ளலாம். மைசூர் - குண்டுலுபெட். அங்கிருந்து பந்திப்பூர் செல்லும்
வழியில் 8
கிமீ தூரத்தில் இக்கோயிலின் வளைவு இருக்கிறது.
பேருந்து
என்றால் மைசூரிலிருந்து குண்டுலுபெட்டிற்கு நிறைய பேருந்துகள் இருப்பதாகவும்
தெரிகிறது. அங்கிருந்து பேருந்துகள் கோவில் மலைக்கு
இருக்கின்றன. இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
படங்களை விட காணொளிகள் எடுத்ததால் எல்லாம் இணைத்து ஒரு சிறிய காணொளியாகக் கொடுத்திருக்கிறேன். முடிந்தால் பாருங்கள். 4 மாதங்களுக்கு முன் சென்றதும், சமீபத்தில் சென்றதும் என்று வித்தியாசமான காலநிலையையும் இந்த இடத்தின் அழகையும் பார்க்கலாம்.
அருமை காணொளி முழுவதும் ரம்மியமான காட்சி சிறப்பு.
பதிலளிநீக்குகில்லர்ஜி, நன்றி. நீங்களும் கோவை வரும் போது ஊட்டி, முதுமலை, கோபாலசாமி பெட்டா, மைசூர் என்று ஒரு ட்ரிப் போய் வரலாம்.
நீக்குதுளசிதரன்
வித்தியாசமான இடங்களுக்கு அவ்வப்போது சென்றுவருகிறீர்கள்.
பதிலளிநீக்குபுது பதிவா இருக்கே... கீதா ரங்கன் சேச்சியோடதா என்று நினைத்தேன்.
ஓரு நாள் பயணம் தான். ஊட்டிக்குப் போகும் தூரம் தான் இந்த இடத்திற்கும் எங்கள் இடத்திலிருந்து.
நீக்கு//கீதா ரங்கன் சேச்சியோடதா என்று நினைத்தேன்.//
ஒருவகையில் சரிதான்.
நான் சென்ற இடம். பதிவிற்கான குரலும், காணொளிக்கான குரலும் கொடுத்து படங்கள் வீடியோக்களை கீதாவிற்குஅனுப்பினேன். அவர்தான் டைப் செய்து காணொளி எடிட் செய்து வெளியிட்டுக் கொடுத்தார்.
அடுத்த பதிவில் வழக்கமான இடத்தோடு மற்றொரு வித்தியாசமான இடமும் வரும்.
நன்றி நெல்லைத் தமிழன்
துளசிதரன்
கீதா ரங்கன் சேச்சியோடதா என்று நினைத்தேன்.//
நீக்குஹாஹா நெல்லை இப்ப துளசிதான் பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கிறார். நான் இன்னும் தொடங்கவில்லை. போட நிறைய இருக்கு ஆனா மூட் செட் ஆகவில்லை.
கீதா
காணொளி கண்டேன். ஆஹா மூடுபனியுடன் இடம் அட்டஹாசம் (சாதா காலநிலையில் சென்றதையும் காணொளியில் பார்த்தேன்)
பதிலளிநீக்குபோனாப் போகுதுன்னு யானைக்கூட்டம் வண்டியைத் துரத்தவில்லையா? மான்கள் அழகு. ஒற்றை யானை என்றால்தான் ஜாக்கிரதையா இருக்கணும்.
இடத்தைப் பார்க்கும்போது போகத் தோன்றுகிறது. பார்ப்போம்... கீதா ரங்கன் சேச்சி ஏதேனும் திட்டம் போடுகிறாரா (இந்த இடத்துக்குப் போக) என்று பார்ப்போம்.
ஆனைகள், முதுமலை பந்திப்பூர் பாகங்களில் பெரும்பாலும் பிரச்சனை செய்வதில்லை. யானைக் கூட்டத்திற்குப் பெரும்பாலும் பயப்படத் தேவையில்லை. கூட்டமாகத்தான் இருந்தன. தனியாக யானை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் பார்த்த அந்தக் கூட்டத்தில் ஓரிரு குட்டியானைகள் இருந்தன. எனவே ஒரு சின்ன பயம் இருக்கத்தான் செய்தது.
நீக்குஇந்தக் கோயிலுக்கும் சில நேரங்களில் ஒரு யானை வந்து போகிறதாகச் சொல்கிறார்கள். ஆனால் அது பக்தர்களை ஒரு விதத்திலும் பயமுறுத்துவதோ, அல்லது உபத்திரவிப்பதோ இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஓரிரு காணொளிகளில் கண்டுமிருக்கிறேன்.
கீதா ஒரு நாள் பயணமாக இங்கு வந்து போக முயற்சி செய்ய வாய்ப்பு இல்லாமல் இல்லை.
நன்றி நெல்லைத் தமிழன்
துளசிதரன்
//இடத்தைப் பார்க்கும்போது போகத் தோன்றுகிறது. பார்ப்போம்... கீதா ரங்கன் சேச்சி ஏதேனும் திட்டம் போடுகிறாரா (இந்த இடத்துக்குப் போக) என்று பார்ப்போம்.//
நீக்குலிஸ்டில் இந்த இடமெல்லாம் ஏற்கனவே போட்டு வைத்த ஒன்று. இதுவும் இன்னும் சில (நிறைய) இடங்களும். இதுக்கு ஒரு நாள் வேண்டும். சாட்டில்லைட் பஸ் ஸ்டாண்டிலிருந்து நேராக காலை 6 மணிக்கு குண்டலுபெட்டுக்கு பஸ் இருக்கு...மைசூர் வழி....குண்டலுபெட்லருந்து இந்தக் கோவிலுக்கு மட்டும் போகும் பஸ். விவரங்கள் எல்லாமே மூணு வருஷமா எடுத்து வைச்சிருக்கேன். ஆனா இன்னும் ப்ளான் பண்ணலை. யோசிச்சு செய்யணும். பந்திப்பூர், முதுமலை சஃபாரியும் போக முடியுமான்னு. அவ்வளவு தூரம் போய்ட்டு அதைப் பார்க்காம வரதா!!!!!! என் நெடுநாள் ஆசை. துளசி வீட்டுக்கு இந்த ரோட் வழியாதானே போகணும் அப்படி இங்கு வந்த பிறகு போய் வந்தப்ப போறப்ப ராத்திரி ஆகிடுச்சு...திரும்ப வரப்ப பகல்...அப்ப பஸ்ல ஜன்னல் கிடைக்கலை...ஸோ ரோட்ல விலங்குகளைப் பார்த்ததோடு சரி.
ஆனா கண்டிப்பா குளிர்காலத்துலதான் ப்ளான்....
கீதா
கோபாலசாமி கோயில் பயணக் கட்டுரையும், படங்கள், மற்றும் காணொளியும் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குவீரப்பனின் அடிச்சுவடு ஏதாவது இன்றும் மிச்சம் இருந்ததா? "வீரப்பன் உபயம்" என்பது போல்.
Jayakumar
நன்றி ஜெயகுமார் சார்.
நீக்குவீரப்பன் ஒரு முறை பந்திப்பூர் சுற்றுலா பயணிகளைக் கடத்திச் சென்றிருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களை அவர் ராஜ்குமார் சாரை, சில போலீஸ் அதிகாரிகளை உபத்திரவித்தது போல அல்லாமல் சில நாட்களில் விடுவித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இருந்தது இன்னும் கொஞ்சம் பந்திப்பூரின் உட்பகுதி. சத்தியமங்கலம் பகுதி. ஆனால் இங்கு வந்த சுற்றுலாபயணிகளை ஒரு முறை கடத்தியிருந்தார் என்றுதான் செய்தி.
துளசிதரன்
இப்பகுதியில் வீரப்பனின் அடிச்சுவடு என்று எதுவும் மிச்சம் இருப்பதாகச் சொல்லப்படுவதில்லை.
நீக்குதுளசிதரன்
அழகான இடம் துளசி அண்ணா .. 15வருடங்களுக்கு முன் சென்றது, ஆனால் இன்னும் பசுமை மாறாமல் அழகாய் இருக்கிறது அதுவும் பனி படர்ந்த கோவிலின் முகப்பும் அந்த இடத்தின் காணொளியும் மிக சிறப்பு
பதிலளிநீக்குஓ! 15 வருடங்களுக்கு முன் என்றால் 2010 ல் போனீர்கள் இல்லையா? அன்றும் இப்படி மேலே செல்ல KSRTC பஸ்தான் இல்லையா? இப்போதும் கடைகள் பெரிதாக எதுவும் இல்லை. அதனால் சுற்றுப்புழச் சூழல் பாதிக்கப்படாமல் சுத்தமாக இருக்கிறது.
நீக்குநன்றி சதோகரி அனு பிரேம்
துளசிதரன்
ஆமாம் பனி படர்ந்திருந்தது நன்றாக இருந்தது. அதன் பின் சென்ற போதும் தெளிவாக எடுக்க முடிந்தது. காணொளி பற்றிச் சொன்னதற்கு நன்றி சகோதரி. நீங்களும் நிறைய காணொளிகள் போடுவது தெரிகிறது.
நீக்குதுளசிதரன்
தணுப்பு.... கதகதப்பு என்று சொல்லலாமா? அதானே அர்த்தம்? தக்காளி சாதமெல்லாம் கூட பிரசாதமாக தருகிறார்களா?
பதிலளிநீக்குதணுப்பு என்பது மலையாளத்தில் சுகமான குளிர். ஏசியில் இருப்பது போன்ற உணர்வு. உண்மையிலேயே தக்காளி சாதம் போன்ற ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வேளை சாம்பார் சாதமா என்று தெரியவில்லை. தனித்தனியாகக் கொடுக்காமல் சாம்பாரும் சாதமும் ஒன்றாகக் கலந்து கொடுக்கிறார்களோ என்று நினைக்கிறேன். பொங்கலும் இருக்கிறது. அங்கு கடைகள் எதுவுமே கிடையாது. போவோருக்குப் பிரசாதம் மட்டுமே. அது ஒரு பெரிய அனுக்கிரகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
பனிபடர்ந்த மலை பார்க்க அழகாக இருந்திருக்கும். நிச்சயம் ரசிக்கக் கூடியது. பந்திப்பூரில் ஒரு மிருகங்கள் சரணாலயம் இருக்கிறது இல்லை?
பதிலளிநீக்குஆமாம் அழகாக இருந்தது. ஆமாம் மிருகங்கள் சரணாலயம் இருக்கிறது. பந்திப்பூரில் பறவைகள் சரணாலயம் என்றும் சொல்வதுண்டு. பந்திப்பூரில் மற்றும் முதுமலை தெப்பக்காடு எனும் இடைத்திலும் வனத்துறை வாகனங்களில் காட்டிற்குள் பாதுகாப்பாகக் கொண்டு போய் காண்பிக்கிறார்கள். மட்டுமல்ல அங்கு முன்பதிவு செய்து க்வார்ட்டர்ஸில் ஒரு நாள் தங்கவும் செய்யலாம்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு அனுமதி இல்லை என்பது பாராட்டவேண்டிய செயல். காணொளியில் யானைகளைக் கண்டதும் சட்டென ஒரு பரவசம், சந்தோஷம்...
பதிலளிநீக்குஇப்பகுதி முழுவதுமே பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை. ஊட்டு உள்பட. இங்கு பகலில் பேருந்தில் பயணித்தாலும் யானைகள், மான் கூட்டங்களைக் காண முடியும்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
காணொளியில் ஒரு பெண் ஒரு மரத்தை மாய்ந்து மாய்ந்து புகைப்படம் எடுக்கிறார். அப்படி என்ன விசேஷமோ அந்த மரத்தில்! கூடலூர் என்பது உடலூர் என்று டைப் ஆகி இருக்கிறது காணொளியில்!
பதிலளிநீக்குநீங்கள் காணொளி குறித்து சொன்ன அந்தப் பெண்ணை நான் இதுவரை கவனிக்கவே இல்லை. எந்த இடத்தில் என்று போய்ப் பார்க்கிறேன்.
நீக்குகூடலூர் என்பது ஊடலூர் ஆய்விட்டது என்பதை கூடலூரில் சாப்பிட்டோம் என்பது பற்றி சொல்லிவிட்டு ஃபோட்டோ எதுவும் வரவில்லை என்பதால் ஊடல் கொண்டுவிட்டதா என்று தெரியவில்லை!
நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
(ஸ்ரீராம், துளசி அதை (கூடலூர் - ஊடலூர்) கரெக்ட் செய்து விடுகிறேன் என்று லிர வழி பதிலில் சொல்லியிருந்தார். நான் அப்புறம் விளக்கினேன் அது ஏஐ சொல்வது....நாம் எழுத்தில் எதுவும் போடவில்லை காணொளியில் என்று....எனவே அந்தவரியை இங்கு கொடுக்கவில்லை! - கீதா)
குரல் வழி பதிலில் -----லிரன்னு வந்திருக்கு
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இயற்கை சூழ்ந்த இடங்களும், பனி படர்ந்த இடங்களும் நன்றாக உள்ளது. கோவிலுக்கு செல்லும் பாதைகள் குறித்தும் மலை மேலே செல்லும் பஸ்ஸின் கட்டணங்கள் குறித்தும் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். தெரிந்து கொண்டேன். கோபலசுவாமி தரிசனம் நல்லபடியாக கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் படங்களின் வாயிலாக நானும் தரிசித்துக் கொண்டேன். மூன்று மாநிலங்களை இணைக்கும் பகுதி என்பதால் அந்தந்த பார்டரில் பசுமைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
காணொளியில், மான்களும், யானைகளும் கண்டேன். பசுமை மிகுந்த இடங்களையும் பார்த்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கோயிலின் உள்ளே கேமரா அனுமதி இல்லை. அதனால் வெளிப்புறம் மட்டும்தான் காண்பிக்க முடிந்தது.
நீக்குகாணொளி படங்களை ரசித்ததற்கு நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்
துளசிதரன்
கோபாலசுவாமி பெட்டா மலைக்கோயில் மிக அழகு.
பதிலளிநீக்குபனி படர்ந்து இருக்கும் கோயில் படங்கள் அழகு.
காணொளி மிக அருமை. யானை கூட்டம், மான்கள் பார்க்க அழகு.
இரண்டு கால நிலைகளும் அருமை. சாரல் மழையும், பனி மூட்டமும் ஒரு அழகுதான்.
நன்றி சகோதரி கோமதி அரசு. ஆமாம் நீங்கள் சொல்வது போல் அழகான அருமையான காட்சிகள். எத்தனை முறை போனாலும் மீண்டும் மீண்டும் போகத் தோன்றும் ஓரிடம் தான் அது. அருமையான இடம்.
நீக்குதுளசிதரன்