சனி, 18 அக்டோபர், 2025

மத்யரங்கம் - சிவனசமுத்திரம் - தலக்காடு - பகுதி 1

ஸ்ரீரங்கம், ஆதிரங்கம் போயாச்சு மத்யரங்கம் போக வேண்டாமா பல வருஷமாச்சு என்று வீட்டில் சொல்லப்பட்டதும், மத்யரங்கத்தின் அருகில்தானே சிவனசமுத்திரமும் தலக்காடும். இந்த இரு இடங்களும் என் லிஸ்டில் பல வருடங்களாக, சொல்லப் போனால், 2001-2002ல் பெங்களூரில் இருந்தபோது போய், அப்போதைய வசதிகள் சரியாக இல்லாததால் - காரணம் நாங்கள் பொதுப்போக்குவரத்தை உபயோகிப்பதால் - சரியாகப் பார்க்க முடியாமல்   விட்ட இடங்களாச்சே என்று நம்மவரிடம் சொல்லி அப்ரூவல் கிடைக்குமான்னு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரி ப்ளான் என்ன, நேரம் எவ்வளவு ஆகும்னு பார்த்துச் சொல்லு, அதுக்கேத்தபடி போலாம்னு அப்ரூவல் கிடைச்சதும், விடுவனா! திட்டமிடலைத் தொடங்கினேன். நாமதான் ஊர் சுத்த காத்திட்டிருப்போமே!

பேருந்தில் சென்றால் மூன்று இடங்களையும் கவர் செய்ய முடியாது. மத்யரங்கத்தையும் சிவனசமுத்திரத்தையும் முடியும். சாட்டில்லைட் பேருந்து நிலையத்திலிருந்து கொல்லேகல் செல்லும் பேருந்தில் சென்றால் காவேரியைக் கடந்ததும் சத்யகலா ஹேன்ட் போஸ்ட் எனும் இடத்தில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் மத்யரங்கம் சென்றுவிட்டால் அங்கிருந்து சிவனசமுத்திரம் சென்று பார்த்துவிட்டு மத்யரங்கம் வந்து அல்லது ஆட்டோவில் இறங்கிய இடத்திற்கே வந்து அங்கிருந்து மீண்டும் பேருந்தில் வந்துவிடலாம்.

ஆனால் தலக்காடையும் இதோடு இணைக்க வேண்டும் என்றால் இப்படியான திட்டம் சரிவராது.

அப்பா வீட்டிற்குள்ளேயே இருப்பதால், ஒரு மாற்றத்திற்காக மத்யரங்கம் பார்க்க கூட்டிக் கொண்டு செல்லலாமா, அவரால் முடியுமா? அப்படி என்றால் கார் புக் செய்ய வேண்டும். நம்ம பட்ஜெட்டுக்கு ஒத்துவருமா என்ற யோசனைகள்.

இந்த ஒரு முறை மட்டுமென்றால் ஓகே என்றதும், எங்களுக்குத் தெரிந்த நட்பு, ஓட்டுநர் ஸ்ரீதரிடம் பேசி அவர் வண்டியை ஏற்பாடு செய்தோம்.

நான் கூகுள் உதவியுடன் தூரம், நேரம் எல்லாம் கணக்கிட்டு, காலையில் 5 மணிக்குக் கிளம்பினால் முதலில் மத்யரங்கம், அங்கிருந்து மிக அருகில் இருக்கும் சிவனசமுத்திரம் அருவிகள் இரண்டையும் 11 மணிக்கு முடித்துவிடலாம், அங்கிருந்து தலக்காடு சென்றால் 3 மணிக்குள் முடித்துவிடலாம், எனவே 7 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடலாம் என்று திட்டம் போட்டாயிற்று.

இடையில் நெல்லை கூப்பிட்டார். இந்த வாரக் கடைசியில் எங்க போறீங்க என்று கேட்டதும், சொன்னேன், தானும் சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டார். ஓகே. கூட அவருடைய ஹஸ்பண்டும் வரமுடியுமா என்று கேட்டார். ஆனால் ஏற்பாடு செய்த வண்டியில் 4 பேர்தான் செல்ல முடியும். எனவே நெல்லை, தான் மட்டும் சேர்ந்து கொள்வதாகச் சொன்னார்.

கூடவே, போகும் வழிதானே, சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆன அப்ரமேயர் கோவிலையும் கவர் பண்ணிடலாமா, திட்டம் சரியாகாது என்றால் வேண்டாம், ஆனால் கும்பாபிஷேகம் ஆகி 40 நாட்களுக்குள் தரிசித்தால் நல்லது என்றார்.

எனக்கு இப்படியான சென்டிமென்ட்ஸ் சுத்தமாகக் கிடையாது. நம்மவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றேன். நம்மவர், ஒரிஜினல் திட்டமே இருக்கட்டும் என்று சொன்னதால் நெல்லையிடம் சொன்னேன்.

என் கவலை என் லிஸ்ட். முக்கியமாகத் தலக்காடு. வழியில் கொஞ்சம் திசை திருப்பி அப்ரமேயர் கோவிலையும் சேர்த்தால் நேரம் ஆகிவிடுமோ, தலக்காடு சரியாகப் பார்க்க முடியாமல் போனால்? என் நெடுங்காலக் கனவு என்னாவது!!!

நெல்லையும், கும்பாபிஷேகம் சமீபத்தில் என்பதால் போகும் வழிதானே என்று சொன்னேன், கவர்பண்ணலாம். வேண்டாம் என்றால் பரவால்ல. என்றார். அவரிடம் திட்டம், நேரம் எல்லாம் சொல்லிட அவரும் தயாராகிவிடுவேன் என்றதும் எல்லாம் பக்கா. பயணச் செலவில் தன் பங்கைப் பகிர்ந்து கொள்வேன் என்றார். சரி.

திட்டமிட்டபடி 5 மணிக்குள் ஸ்ரீதர் வந்துவிடுவார் என்று பார்த்தால் 5.25 ஆகிவிட்டது. அப்பாவை மெதுவாக வண்டியில் ஏற்றி உட்கார வைத்து, சாப்பாடு மூட்டையை ஏற்றிவிட்டுக் கிளம்பும் போது மணி 5.40ஐ கடந்துவிட்டது. திட்டத்தில் முதல் சொதப்பல்.

நெல்லையைத் தொடர்பு கொண்டு வந்துகொண்டிருக்கிறோம் என்று தகவல் கொடுத்தாச்சு. அவ்வப்போது எங்கிருக்கிறோம் என்று தகவல் பரிமாற்றங்கள். பெங்களூர் போக்குவரத்து மிகவும் புகழ்பெற்றது. அந்தக் காலை நேரத்திலும் போக்குவரத்து நெரிசல்.

எனக்குத் தலக்காடு மனதில் ஆடிக் கொண்டிருந்தது. சரி போகிறபடி போகட்டும். என்ன செய்ய முடியும்?

நெல்லையின் குடியிருப்பை (18 கிமீ நம் பகுதியிலிருந்து) அடையவே 1 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது! அவரையும் ஏற்றிக் கொண்டதும், அப்ரமேயர் பற்றிப் பேச்சு தொடங்கியதும் நம்மவர், ஸ்ரீதரிடம், அப்ரமேயர் கோவிலும் சென்று விட்டு அப்படியே அடுத்து மத்யரங்கம் என்றார். திட்டம் பிரச்சனையாகாதே என்று நெல்லை கேட்க, நம்மவரும் போய்விடலாம்னு சொன்னதும், முதலில் ஒரிஜினல் திட்டம்தான் என்று சொன்னவர் கடைசியில் அப்ரமேயர் என்பதாலோ என்னவோ மனம் மாறி இப்படிச் சொன்னதும், ஆஹா நம்ம தலக்காடு திட்டம் என்னாகுமோன்னு எனக்குக் கவலைகண்டிப்பாக வீட்டிற்குப் போய்ச்சேர 8.30 மணி ஆகிவிடும் என்று எனக்குத் தெரிந்தது. 

காரணம் நம்மவருக்கு எங்கு சென்றாலும் 2, 3 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதன் பின் சுற்றல் இல்லாமல் வீட்டிற்கு 7 மணிக்குள் திரும்ப வேண்டும்

சரி ஆனது ஆகட்டும் என்று விட்டுவிட்டேன். இடையில் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு, நேரே அப்ரமேயர் கோவிலுக்கு வண்டி சென்றது. முன்பு கொக்கரேபெல்லூர் சென்ற அதே வழிதான். அப்போது பேருந்து. இப்ப காரில், டோல் சாலை என்பதால் காட்சிகள் எனக்கென்னவோ வித்தியாசமாக இருந்தது போன்று ஓர் எண்ணம்! சும்மா சில க்ளிக்ஸ்! இப்படங்கள் ஸோ ஸோ தான்...




சன்னப்பட்டணாவிலிருந்து தோராயமாக 2 கிமீ தூரத்தில் உள்ள தொட்டமல்லூரில் (Doddamallur) இருக்கும் ஸ்ரீ அப்ரமேயர் கோவிலுக்குச் சென்ற போது 8.20 ஆகிவிட்டது. ஸ்ரீ அப்ரமேய ஸ்வாமி கோவில் என்றும் - அப்ரமேயர்' என்றால் அளவிட முடியாதவன் - மற்றும், குழந்தை கிருஷ்ணன் தவழும் கிருஷ்ணராக 'அம்பேகாலு கிருஷ்ணன்' என்ற தனித்துவமான திருவுருவம் உள்ளது என்பதாலும் ஸ்ரீ அம்பேகாலு நவநீத கிருஷ்ணர் கோவில் என்றும் சொல்லப்படுகிறது.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில். எனவே மிகப் பழமையான கோவில். தமிழ்நாடு ஸ்டைல் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு. என்றாலும் கோவிலின் பிராகாரங்கள் விஜயநகரத்துக் காலத்தில் புதுப்பிக்கப்பட்டனவாம். முதல் முறை சென்ற போது அங்கிருந்த அர்ச்சகர் சொன்ன தகவல். புராணப்படி வியாசர், குழந்தை கிருஷ்ணனை இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்தாராம்.

இக்கோவிலுக்கு ஸ்ரீ புரந்தரதாஸர் 15-16 ஆம் நூற்றாண்டில் வந்த போது அம்பேகலு கிருஷ்ணர்’ வடிவத்தைப் பார்த்து அவர் மெய்மறந்து இயற்றிய புகழ்பெற்ற பாடல்தான் "ஜகதோதாரணா", என்பது வரலாறு. 

மிச்சக் கதைகளை நீங்க கூகுளைக் கேட்டால் சொல்லிவிடும் என்பதால் நான் அதிகம் சொல்லவில்லை. கதையிலிருந்து நடப்புக்குச் செல்வோம்.

அப்பாவிற்குச் சும்மா ஒரு வேஷ்டியை சுற்றிவிட்டு, கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்ததும், கோவிலின் எதிரில் ஓர் அழகான மண்டபம். அங்கு வாகனங்கள் அழுக்கடைந்து வைக்கப்பட்டிருந்தன. தூண்களில் அழகான வடிவங்கள்

 

 

கையில் எடுத்துச் சென்றிருந்த எங்கள் காலை உணவைச் சாப்பிட்டோம். நெல்லை, நான் கொண்டு செல்வதைச் சாப்பிடமாட்டேன் என்று சொல்லியிருந்ததால்!!!!!!!!!! அவர் தனக்கானதைக் கொண்டு வந்திருந்தார், நான் அதை டேஸ்ட் பார்த்தேன். மக்களே இதைக் குறித்துக் கொள்ளுங்கள்!

சரி அங்கிருந்து அடுத்து நாம போகப் போவது மத்தியரங்கம் பகுதிக்கு. கொஞ்சம் பொறுங்கள். நான் எழுத வேண்டும், படங்கள் தொகுக்க வேண்டும், அதை ப்ளாகரில் ஏற்ற வேண்டும். அதற்கு 4ஜி/5ஜி ஒத்துழைக்க வேண்டும் இது அன்று எழுதிய போது ...இப்ப நாங்க ஆக்டிவா ACTக்கு மாறிவிட்டோம். எனவே படங்களை எளிதாக ஏற்றிவிட்டேன்....விடலாம்... எனவே அது காரணமல்ல.  நான் அடுத்த பகுதி எழுதணும், அதற்கு மனோசக்தி வேண்டும்!!!!!

தொடர்வோம்...

-------கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக