மத்தியரங்கம், சிவனசமுத்திரம் தலக்காடு என்று தொடங்கியிருந்தேன். இப்போது கடைசியில் பார்த்த தலக்காடு பற்றி எழுதி முடித்திடலாம் என்று எழுதத் தொடங்கிய போது, ஒரே ஒரு இடம் மிகவும் அழகான இடம் பற்றி மட்டும் உங்களுக்குக் காட்டிவிட்டு தலக்காடு போய்விடலாம். சரியா?
மத்யரங்கம், சிவனசமுத்திரம் போகும் வழியில் மத்யரங்கம் அருகில் இருக்கும் Sathegala/Sathyagala (ஸத்தேகலா? இந்தக் கிராமம் வைணவ குரு ஸ்ரீ வேதாந்த தேசிகனால் புகழ்பெற்ற கிராமம்) , எனும் கிராமத்தின் அருகில் இருக்கும் மிக அருமையான இடம். இப்பகுதி முழுவதுமே காவிரியின் ஆட்சிதான்.
இந்த இடத்தில் காவிரியின் குறுக்கே பிரிட்டிஷ் காலத்தில் 1700ல் கட்டப்பட்ட முதல் பாலம் என்றும், இல்லை 1818ல் கட்டப்பட்ட பாலம் என்றும் சொல்லப்படுகிறது.
லுஷிங்டன் பாலத்தின் வலப்பக்க முனை, தெரிகிறதா? சாலையிலிருந்து இறங்கியிருந்தால் அந்தச் சிறு
கோவிலின் அருகில் சென்று பாலத்தின் மீது நடந்திருக்காலாம்.
இப்படத்தில் பாதை தெரிகிறதா? போகத்தான் முடியலை படமாவது எடுப்போமே என்று க்ளோஸப்!!
1835ல் Lushington Bridge - லுஷிங்டன் பாலம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் பொதுவாக அதன் முந்தைய பெயரான Wellesley Bridge, வெல்லெஸ்லி/வெஸ்லி பாலம் என்றும் சொல்லப்படுகிறது. நான் இதை லுஷிங்டன் பாலம் என்றே வைத்துக் கொள்கிறேன். ஏனென்றால் கீழே கறுப்புநிற எழுத்தில் உள்ளதை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
லுஷிங்டன் பாலம் - முழு வடிவத்தையும் எடுக்கும் முயற்சி.
லுஷிங்டன் பாலத்தின் நீளம் 400 மீ. ஆற்றின் வெள்ள வேகத்தைத் தாங்கும் வகையில் அக்காலத்தில், கற்களை ஒரு வடிவமாக வெட்டி, செதுக்கி வடிவமைத்து, (Stone Girders) கற்களால் ஆன உத்தரம் அதைத் தாங்கி நிற்கும் வகையில் இணைத்துக் கட்டியுள்ளதால் Engineering Marvelous என்று சொல்லப்பட்டது. குறிப்பாக காவிரி பாயும் இப்பகுதியில் பாறைகளால் ஆன படுகை ஆற்றுப்படுகை. அப்பாறைப் படுகையின் மீதுதான் இப்பாலம் எழுப்பப்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் கால பாலத்தின் இடப்பக்க முனை தூரத்தில் தற்போதைய பாலத்தின் சாலையை ஒட்டி தெரிகிறதா? அந்த இடத்தில் இறங்கினால் ஒரு ஒற்றையடிப் பாதை இருக்கிறது. காரில் இருந்து க்ளிக்கினேன். ஓட்டத்தில் சரியாக வரவில்லை. இந்த இடத்திலும் சாலையிலிருந்து இறங்கியிருந்தால் பாலத்தின் மீது நடந்து வலப்பக்க முனைக்கு வந்து பாலத்தின் அடியில் இறங்கி தூண்களின் வடிவத்தை படம் எடுத்திருக்கலாம். ஆனால் அன்றைய திட்டத்தின்படி நேரமில்லை. அந்தத் தூண்களில் அழகான சிற்பங்கள் இருப்பதாக அறிய நேர்ந்தது. வேறொரு முறை நம்மவருக்கு ஐஸ் வைத்துச் சென்று வர வேண்டும். தண்ணீர் அதிகம் இல்லாத காலத்தில். அப்போதுதான் இறங்கிப் பார்க்க முடியும்.
தற்போதைய பாலம், சாலை இதற்கு முந்தைய படத்தில் தெரிகிறது இல்லையா? பாலத்தின் மறுபுறம் காவிரி
2018 ல் காவிரி வெள்ளத்தில், லுஷிங்டன் பாலத்தின், கிட்டத்தட்ட 40 அடி, பகுதி அடித்துச் செல்லப்பட்டதாம், தற்போது ஓரளவு மீட்டெடுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதும் தெரிந்தது என்றாலும்.....
பார்த்த போது எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட பாலமாகவே அழிந்து வருவதாகத் தோன்றியது.
இந்த இடத்தில் மேலே உள்ள படங்களில் ஒரு மொட்டை மரம் இருக்கிற்தே அது என்னவோ என்னைக் கவர்ந்தது. அதை ஒரு க்ளிக்
லுஷிங்டன் பாலத்தைப் பார்த்ததும் எனக்கு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள வெல்லெஸ்லி பாலத்தைப் போலவே இருக்கிறதே என்று நான் ரங்கனதிட்டு, ஸ்ரீரங்கப்பட்டினம் போனப்ப ஆட்டோவில் போய்க்கொண்டே ஒரு காணொளி எடுத்ததும் நினைவுக்கு வந்தது. அந்த வெஸ்லி/வெல்லெஸ்லி பாலம் புதுப்பிக்கப்பட்டு பார்க்க நன்றாக இருக்கிறது. அப்பதிவிலும் பகிர்ந்த நினைவு. வரலாற்றில் இதை வெல்லெஸ்லி என்று சொல்வதாலும் பதிவில் முதலில் உள்ள பாலத்தை லுஷிங்டன் என்று சொல்வதாலும் குறிப்பிட்டிருக்கிறேன். இல்லைனா குழப்பம் வந்துரும்னு.
மேலே சொல்லியிருக்கும் லுஷிங்டன் பாலத்திலிருந்து மிக அருகில் தடுப்பணை (காவிரி கட்டே - Kaveri Katte என்று சொல்கிறார்கள் இங்கு) இருக்கிறது. அணைப்பகுதியில் நிறைய நீர் இருக்கும் சமயம் பரிசல் சவாரியும் இருக்கும். நாங்கள் சென்றிருந்த போது நிறைய நீர் இருந்தது. சுற்றிலும் அழகான இயற்கைக் காட்சி. பரிசலில் சென்றிருந்தால் காட்சிகளை இன்னும் நன்றாகப் பார்த்திருக்க முடியும்.
அழகான இடம். அருகில்தான் சிவனசமுத்திரம் அருவிகளும். ஒரு நாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம்.
அடுத்து தலக்காடு போவோம். அங்கும் காவிரிதான்!!!
--------கீதா









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக