திங்கள், 17 நவம்பர், 2025

நினைவுப் பூக்கள் - ஜி எம் பி ஸார் - எஸ்தர் அம்மா

 

இறைவனடி சேர்ந்த இருவரது ஆத்மாக்களின் மோக்ஷத்திற்கும், நித்ய சாந்திக்கும் பிரார்த்திப்பதுடன் தீரா துக்கத்திலாழ்ந்த இருவரது  குடும்பத்தினருக்கும் இப்பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் நல்கவும் பிரார்த்தனை செய்வோம். வேண்டிக் கொள்வோம்.

இருவருடனான எங்கள் தொடர்பு பசுமை மாறாத நினைவுகள் நிறைந்தது. முன்பு பகிர்ந்த அந்த இனிய நாட்களை மீண்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது மனதின் வருத்தம் கொஞ்சம் குறையும்தான்.

ஜி எம் பி ஸார்

மதுரையில் நடந்த பதிவர் விழாவில் பங்கெடுக்கவிருந்த அனைவரையும் காண ஆவலுடன் காத்திருந்தும், இறைவன் ஏனோ இறுதி நேரத்தில் செல்லவியலாத சூழலை ஏற்படுத்தி ஏமாற்றத்தைத் தந்தார். விழாவின் போது சந்திக்க முடியாமல் போன சிலரது பெயர்களைக் குறிப்பிட்ட ஜிஎம்பி சார் எங்கள் பெயரையும் குறிப்பிட்ட போது, மனது ஒரே நேரத்தில் துள்ளிக் குதிக்கவும், துவண்டு போகவும் செய்தது.

அதற்கு முன்பே பங்களூரில் உள்ள ஒரு பள்ளியில் எங்களது ஒரு குறும்படம் இட்டு மாணவ, மாணவியருடன் ஆங்கிலத்தில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார்.  அதுவும் நடக்கவில்லை.

அப்படி, இரண்டு முறை அவரைச் சந்திக்க முடியாத சூழலை முறியடித்து, அவரைக் கடந்த கோடை விடுமுறையின் போது பங்களூர் சென்று சந்திக்க வேண்டும் எனத் தீர்மானித்திருந்தேன். அதுவும் நடக்காமல் போகவே, வருந்தி இருந்த போது ஒருநாள் காதில் தேனாய் பாய்ந்த செய்தி கீதா மூலம் வந்தது.  ஜிஎம்பி சார் பாலக்காடு வருகிறார்! ஜூலை 15, 16 தேதிகளில்!! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் ஒரு வாய்ப்பு!

முன்பு ஒரு பின்னூட்டத்தில், நினைவலைகள் தப்பியவர்களுக்கு பணிவிடை செய்யும் ஒரு நண்பரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஜிஎம்பி சார் பாலக்காடு வருகையின் போது அவரைச் சந்திக்கப் போவதாகவும் அப்போது அவருடன் நானும் செல்ல வேண்டும் என்று சொன்ன போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அவர் திரு மதுசூதனன் அவர்கள் அவர் நடத்தும் ட்ரஸ்ட் Karunya Geriatric Care Centre is a unit of “ Palakkad Alzheimers’ Charitable Trust  http://www.karunyagcc.org/


-----துளசிதரன்

ஜி எம் பி ஸாருக்கு என் குறும்படத்தில் நடிக்க ஆசை இருந்ததையும் சொல்லியிருந்தார். அதன் பின் விவேகானந்தரைப் பற்றிய Saint The Great எனும் என் குறும்படத்தில் ஜி எம் பி சாரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன். அவரும் மிக்க மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்.  

அப்போது அவரது வீட்டிற்கு நானும் கீதாவும் சென்றோம். அங்கு ஷூட்டிங் முடித்து அவர்களோடு உணவருந்திய நல்ல இனிய நினைவுகள் இன்றும் எங்கள் மனதில் பசுமையாய்.

இனி இந்த நினைவுகள்தான் நமக்கு.

கீதா - அவர் எனக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருப்பார். முடிந்தால் வீட்டிற்கு வாருங்கள் என்று. நான் இரு முறை ஸாரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அம்மாவுடன் அவ்வப்போது ஃபோனில் தொடர்பிலும் இருந்தேன். ஸாருடனும் அவருக்குக் கேட்க முடியாத போது அம்மா பேசுவார் அவரிடம் சொல்வார். நினைவுகள்...

அவருடன் உங்களுக்கும் நிறைய அனுபவங்கள் இருந்திருக்கும்.

அவரது மறைவிற்கு நம் ஆழ்ந்த வருத்தமும், அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும். அவர் குடும்பத்தாருக்கும், குறிப்பாக அவர் மிகவும் நேசித்த அவரது மனைவி - நமக்கு அம்மா - இதிலிருந்து மீண்டு வர பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

-------துளசிதரன் மற்றும் கீதா


வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த தாய்

எஸ்தர் அம்மா


நண்பர் விசுவிற்கே சற்று பெருமை கலந்த பொறாமைதான்!  தன் தாயை நினைத்து. ஏனென்றால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் என்ன பேசினாலும், யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல், விசுவைக் கொஞ்சம் பின்னே தள்ளி அவரது அன்னையைப் பற்றி எல்லோரும் பேசி முன்னிருத்தி விடுவதால்! அப்படிப்பட்ட தாய்.... கணவரை இழந்த பின் விடுதியில் சேர்க்கப்பட்டக் குழந்தைகளில் ஒருவரான விசுவிற்கு, பொரி(ருள்) விளங்கா உருண்டைகளைக் கொடுத்து, வாழ்க்கையின் பொருளை விளக்கி, வாக்கையை அர்த்தமாக்கி, உன்னதமான வாழ்க்கைப் பாடத்தைப் புகட்டிய அந்த தாய்.....

தான் பெற்ற பிள்ளைகளிடம் மட்டுமின்றி இந்த உலகத்தில் இருக்கும் அனைவரிடமும், எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி  அன்னமிடும் ஒரு அன்னைக்கு ஏற்படும் உணர்வு. ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்து தன் பிள்ளைகள் அனைவரும் தானே செம்மையாய் வளர வைத்த தாய்! அவர் வேறு யாருமல்ல, நம் நண்பர் திரு விசுவாசம் (விசுAwesome) அவர்களின் தாய், திருமதி எஸ்தர் கார்னிலியஸ்!

மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்காக உழைத்தவர் சேவை செய்தவர்.

விசுவின் அம்மாவோடு மூன்று நாட்கள் தங்கி அவரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்துக் கொடுத்த அனுபவமும் (கீதா) அதன் பின் அவரைப் பற்றிய புத்தகவெளியீட்டு விழாவை விசு அவர்கள் ஏற்பாடு செய்த போது துளசியும் நானும் கலந்துகொண்டோம்.

சுட்டிகள் கீழே.

https://thillaiakathuchronicles.blogspot.com/2015/11/EstherCornelius-Amma-ExtraordinaryWoman.html

https://thillaiakathuchronicles.blogspot.com/2015/06/Esther-Cornelius-Missionary-India.html

எங்கள்ப்ளாகிலும் பாசிட்டிவ் செய்தியில் இடம் பெற்றவர்.  சமீபத்தில் ஆறாவது பூதம் எனும் தளத்திலும் அடையாளப்படுத்தப்படாமல் போற்றப்பட்டவர்.  

https://engalblog.blogspot.com/2015/11/blog-post_7.html

எஸ்தர் அம்மா அமெரிக்காவில் இருந்து வந்தார். விசு எனக்குத் தகவல் கொடுத்திருந்தார் அவர் அம்மா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்று.

நம் ஆழ்ந்த அஞ்சலிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

------துளசிதரன், கீதா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக