திங்கள், 24 நவம்பர், 2025

தலக்காடு - 1 - காவிரி பீச்

 

கடைசியாகப் பார்த்த தலக்காடைப் பற்றித்தான் இப்பதிவு. பின்னர் முடிந்தால், என் மனம் ஒத்துழைத்தால் இடையில் விட்ட பகுதியைப் பற்றி எழுதுகிறேன்.

தலக்காடு - தலக்காட்டைப் பற்றிச் சொல்ல கொஞ்சம் விஷயங்களும் படங்களும் இருக்கின்றன. 4, 5? பகுதி வரை போகக்கூடும்.

இந்த இடத்தில் கொஞ்சம் ஃப்ளாஷ்பேக். நாங்கள் 2002 ல் பெங்களூரிலும் சென்னையிலுமாக இருந்த போது மகனின் அரையாண்டுத் தேர்வு முடிந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில், நானும் மகனும்  கர்நாடகா சுற்றுலாத்தலங்கள் பற்றிய புத்தகம் மேப் வைத்துக் கொண்டு, இப்பகுதிகளுக்குச் செல்வதற்குத்  திட்டமிட்ட போது பொதுப்போக்குவரத்து என்பதால் மத்தியரங்கம் மட்டும் பார்க்க முடிந்தது. சிவனசமுத்திரமும், இந்த லுஷிங்டன் பாலமும் தலக்காடும் விடுபட்டுப் போனது. அப்போதிலிருந்தே இவை என் மனதில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு படுத்தியவை.

அப்போது சுற்றுலா புத்தகத்தில் தலக்காடு பற்றித் தெரிந்து கொண்ட விஷயங்கள், அதன்பின் தலக்காடு என் லிஸ்டில் பல வருடங்கள் இருந்ததால் சமீப வருடங்களில் மீண்டும் தலக்காடு  மிஸ் ஆகக் கூடாது என்று தேடிய போது கிடைத்த சில விஷயங்கள் என்று பகிர்கிறேன். 

மத்தியரங்கம் காவிரி லுஷிங்டன் பாலத்திலிருந்து தலக்காடு நோக்கிப் போகிறோம். சென்று சேர்வதற்கு முன் தலக்காடு பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.

புதிதாக இடப்பட்டிருக்கும் சாலை நல்லாருக்குல்ல? இருபுறமும் காட்சிகளுடன்...என்றாலும்....

பழைய சாலை - எனக்கு இச்சாலை பிடித்தது. படம் - நன்றி விக்கி 

மார்ச்சில் சென்றதால் இப்படிக் காய்ந்துகிடக்கிறதோ? மழைக்காலத்தில் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசை

இந்த வீடு திண்ணை, தூண்களோடு அழகாக இருக்கு இல்லையா? திண்ணை தூண்களோடு இருக்கும் வீடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிடிச்சிருக்குனா சொல்லுங்க வாங்கிடலாம்!!!!!

ஓட்டுநர் ஸ்ரீதர், தான் வேறு ஒரு வழியை எடுப்பதாகச் சொல்லி, சிறு கிராமங்கள் இருக்கும் பகுதி வழியாக ஓட்டிச் சென்றார். அப்படி இக்கிராமம் வழி சென்ற போது வீடுகள் பிடித்திட டக்கென்று ஒரு காணொளி!!

தலக்காடு காவிரி பாயும் கரையில் அமைந்திருக்கும் மிகவும் பழைய புகழ்பெற்ற வரலாற்று நகரம். சமுத்திரகுப்தர் தென்னிந்தியாவை (கிபி 350க்கு முன் என்று சொல்லப்படுகிறது) நோக்கிப் படையெடுத்து வந்த போது சில குழப்பங்கள் ஏற்பட்டபோது சிறு விஷயத்தைக் கூடத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுதானே அரசியல்? அப்படி மேலைகங்கர்கள் அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் கர்நாடக மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கிய மைசூர், அதைச் சுற்றிய பகுதிகள் மற்றும் பெங்களூரு வரை பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இப்பகுதி கங்கவாடி என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

இதற்குப் பிறகு தமிழ்நாட்டின் கொங்குநாட்டுப் பகுதி மற்றும் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் பகுதிகளையும் இணைத்துக் கொண்டனர். அதனால் மேலைகங்க மன்னர்களின் முந்தைய தலைநகரம் ஈரோட்டுக்கு அருகே இருக்கும் கஜல்ஹட்டி என்னும் ஊரில் அமைந்திருந்தது என்றும். மேயாறுக்கும் பவானிக்கும் நடுவே உள்ள அந்த ஊர் அன்று ஸ்கந்தபுரா என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுத் தகவல்கள்.

அதன் பின் கி.பி. 350 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கோலார் நகர் தலைநகராக 20 ஆண்டுகள்வரை இருந்திருக்கிறது. கடம்பர்களின் தொல்லையால், கோலாருக்குப் பதிலாக வேறு பகுதி தலைநகராக்கப் பரிசீலிக்கப்பட்டு கி.பி. 390 ஆண்டுவாக்கில் மேலைகங்க மன்னர் ஹரிவர்மன் (கி.பி. 390 – 410) இப்பகுதியை ஒன்றிணைத்து தலக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்திருக்கிறார்.

இப்படித் தலக்காடு மேற்கு கங்கர்களின் தலைநகரமாக இருந்த இடம். அதன் பின் கிபி 11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் மேற்கு கங்கர்களைத் தோற்கடித்து இப்பகுதியைக் கைப்பற்றியிருக்கின்றனர். தலக்காடு இராஜராஜபுரம் என்று பெயர் மாற்றப்பட்டதாம். இந்த நூற்றாண்டில்தான் இங்கு பெங்களூரில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. அதில் சோழர்களின் பங்கும் இருக்கிறது. அதற்கு முன் மேற்கு கங்க மன்னர்கள் இரண்டு சன்னதிகளைக் கட்டியிருக்கிறார்கள். அக்கோவிலுக்கும் நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன் படங்களும் எடுத்திருக்கிறேன் எழுதத் தொடங்கி பாதியில் இருக்கிறது. அதைப் பற்றிப் பதிவு போடுகிறேன். போடுவேன் என்று நம்புகிறேன்

சுமார் நூறு வருடங்களுக்குப் பிறகு தலக்காட்டை ஹோய்சாள மன்னன் விஷ்ணுவர்தனன் (கி.பி. 1108 – 1152) கைப்பற்றிக்கொண்டிட கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை ஹோய்சாளர்கள் ஆட்சியில் தலக்காடு. இப்படி தலக்காட்டில் ஹொய்சாளர் கட்டிடக் கலையும் சோழர்கள் கட்டிடக் கலையையும் பார்க்க முடிகிறது.

இப்பகுதி வரலாறு பற்றி இணையத்தில் நிறைய இருப்பதால் நான் அதிகம் தரவில்லை. 

இப்ப நாம் தலக்காட்டிற்கு வந்துவிட்டோம். நாங்கள் சென்ற வண்டியை - காவிரி பீச் என்று சொல்லப்படும் காவிரிக் கரையில் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, அப்பாவைக் காரில் உட்கார்த்தி வைத்துவிட்டு, நாங்கள் மூவரும் காவிரி பீச் நோக்கிச் சென்றோம்.
 
கடற்கரை போன்று முழுவதும் மணற்பாங்கும் மரங்களும் 
புதை மணலில்தான் நடக்க வேண்டும். கடற்கரை போன்று முழுவதும் மணற்பாங்கும் காடு போன்று மரங்களும் இருக்கின்றன (சென்னை ஈசிஆர்  பகுதி நினைவுக்கு வந்தது)பீச் மணல் போன்றும் ஆங்காங்கே மணல் குன்றுகள் இருந்ததையும் பார்த்த போது, பண்டைய காலத்தில் காவிரி மிகப் பிரம்மாண்டமாக அகண்ட கடல் போன்று பாய்ந்திருக்கக் கூடும் என்று தோன்றியது. 

அப்படிச் சென்ற போது இந்த மரமும் அதன் கீழே லிங்க திருஉருவங்களையும் பார்த்தோம். இங்கு ஒரு சின்ன கதை.

தலா மற்றும் காடு (இந்தப் பெயர்களை நினைவு வைச்சுக்கோங்க பின்னர் சொல்கிறேன்) என்ற இரட்டைச் சகோதரர்கள் - வேட்டைக்காரர்கள், ஒரு மரத்தை வெட்டிய போது அங்கு காட்டு யானைகள் லிங்கத்தை வழிபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கின்றனர். அதே சமயம், மரத்திலிருந்து இரத்தம் வழிவதைக் கண்டதும் அது சிவனின் உயிருள்ள உருவம் என்பது அவர்களுக்குத் தெரிந்ததாம். இந்த மரத்தையும் அதனடியில் சிவலிங்கம், நந்தி குடும்பத்தைப் பார்த்ததும் இக்கதை நினைவுக்கு வந்ததால் இங்கு. மற்றபடி இந்த மரம்தானா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது!

அப்போது அங்கு ஒரு தெய்வீக  அசரீரி ஒலித்ததாம். மரத்தின் இலைகளையும் பழங்களையும் அக்காயத்தில் பூசச் சொல்லி. பூசியதும் அந்த மரம் உடனே குணமாகி பழைய நிலையைப் பெற்றதாம்.

மேலும் அங்கு சிவனை வணங்கிக் கொண்டிருந்த இரு யானைகளும் சபிக்கப்பட்டு உருமாறிய ரிஷிகளாம். இப்படத்தில் இருக்கும் இரு சிலைகள் அந்த ரிஷிகள்? இப்படித்தான் இந்த ஊருக்குத் 'தலக்காடு' என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. வேறொரு புராணக் கதையும் இருக்கிறது. 

பாருங்க இந்த இடத்தில் எல்லாம் ஹெல்மெட்டை வைத்திருக்கிறார் ஒருவர்

அதோ காவிரி பீச் பாருங்க. அங்குதான் போகிறோம். அங்கு பாதியில் நிற்கும் பாலம் இங்கு உள்ளே புகுந்தால் இப்பக்கம் இருக்கும் அடர் மரங்கள் பகுதி கண்டிப்பாக அழியும். இப்போதைய அழகு கெட்டுவிடும் என்றும் தோன்றியது.

தலக்காட்டைச் சுற்றி மாலை போன்று பாயும் காவிரி இங்கு அமைதியாக ஆர்பாட்டம் இல்லாமல் சமதளத்தில் ஓடுவதால் இங்கு காவிரி கடற்கரை போன்று இருப்பதால் காவிரி பீச் என்று சுத்துப்பட்டுக் கிராமங்கள் முதல், சுற்றுலா பயணிகள் வரை எல்லோரும் இங்கு தண்ணீரில் விளையாடி, நீச்சலடித்து மகிழ்கிறார்கள்.

 


இங்கும் பரிசல்கள் இருந்தன. பரிசல்களிலும் பயணம் செய்யலாம் ஆனால் சும்மா நடுப்பகுதி வரை அழைத்துச் சென்று வருகிறார்கள் பார்க்க ஒன்றுமில்லை. நம்ம வீட்டவர் இங்கு பரிசலில் போலாமா என்று கேட்டதும், "இதுக்கு நாம அங்க லூஷிங்டன் பாலத்துக்குப் பக்கத்துல இருந்த இடத்திலேயே போயிருக்கலாம்"னு சொல்லிவிட்டேன்.

ஓட்டுநர் ஸ்ரீதருக்குக் குளிக்க ஆசை ஆனால் ஆழமில்லை என்பதால் அவர் குளிக்கவில்லை. எனக்கும் நீச்சலடித்துக் குளிக்க ஆசை இருந்தது, மாற்று உடையும் வைத்திருந்தேன். ஆனால் நேரத்தை மேனேஜ் செய்யணுமே. ஏற்கனவே திட்டத்தில் இல்லாத இரண்டரை! இடங்கள் சேர்ந்ததால் லேட். அப்புறம் தலக்காடு கோவில்கள் பார்க்க முடியாமல் போனால்? என் நீண்ட நாள் ஆசையே அதுதானே!

அமுல் ஐஸ்க்ரீம் வண்டியைப் பார்த்ததும் நெல்லை, 'ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா' என்றதும் நம்ம வீட்டவரும் நெல்லையும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டார்கள். நான், பெரிய "நோ"!

உணவுக் கடைகள், துணிக் கடைகள், வளையல், பொட்டு போன்ற கடைகள் என்று ஜே ஜே என்று இருக்கிறது அந்த இடம்.

 

https://youtube.com/shorts/RHjOH8faL9s


கலகலகலவென காவிரி நடக்குது காதலன் கைத்தொட 

கழிவறை, வசதிகள் பெண்களுக்கும் (சுத்தமாக இருக்கின்றன), ஆண்களுக்கும் இருக்கின்றன.

அடுத்த பதிவில் சில சுவாரசியமான விஷயங்களுடன் நாங்கள் பார்த்த கோயில்கள் (இவை ஒவ்வொரு பதிவாக) பற்றியும் அனுபவங்களையும் சொல்கிறேன்


----கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக