ஞாயிறு, 28 ஜூன், 2015

வையத்துள் வாழ்வாங்கு வாழும் அம்மையார்

 

“நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நல்ல காரியம் செய்தாலும் எல்லாத்தையும் அறுவடை செஞ்சுக்கிட்டுப் போயிடறாங்க இந்த அம்மா” என்று தன் புத்தக வெளியீட்டு விழாவில், நகைச்சுவை இழையோடும் தனது பாணியிலேயே, மிகவும் பெருமிதத்துடன், இவ்வார்த்தைகளை உதிர்த்தவர்........ வருகின்றோம் சற்று கீழே

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்பது வள்ளுவனின் வாக்கு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்தப் பதிவிற்காக அதைச் சற்று மாற்றி, ஏதோ எங்களுக்குத் தெரிந்த எழுத்தில் வெளிக் கொணர்ந்தால்? என சிந்தித்ததின் விளைவு.. – தமிழ் சான்றோரும், வள்ளுவரும் மன்னிப்பார்களாக – இது குறள் அல்ல...

அன்னையின் புகழ் கேட்ட மகன்
சொன்னான்
சான்றோராகிய - இவ்
அன்னைக்கு மகனாய் பிறந்திட
என்ன தவம் செய்தனன் நான்.

அம்மா என்பதற்கும், தாய் என்பதற்கும் ஒரே அர்த்தம் கொள்ளப்பட்டாலும், இரண்டிற்கும் இடையில் ஒரு சிறிய நூலிழை வித்தியாசம் இருப்பதாகப்படுகின்றது. எல்லா அம்மாக்களும் தாயாகிவிட முடியாது. ஏனென்றால் எல்லா அம்மாக்களுக்கும் தாய்மை உணர்வு என்பது இருப்பதில்லை.  தாய்மை உணர்வு என்பது மிகச் சிறந்த உணர்வு.  தான் பெற்ற பிள்ளைகளிடம் மட்டுமின்றி இந்த உலகத்தில் இருக்கும் அனைவரிடமும், எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி  அன்னமிடும் ஒரு அன்னைக்கு ஏற்படும் உணர்வு. ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்து தன் பிள்ளைகள் அனைவரும் தானே செம்மையாய் வளர வைத்த தாய்! அவர் வேறு யாருமல்ல, நம் நண்பர் திரு விசுவாசம் (விசுAwesome) அவர்களின் தாய், திருமதி எஸ்தர் கார்னிலியஸ்!  ஆரம்பத்தில் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் நண்பர் விசு அவர்தான். 

நண்பர் விசுவிற்கே சற்று பெருமை கலந்த பொறாமைதான்!  தன் தாயை நினைத்து. ஏனென்றால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் என்ன பேசினாலும், யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல், விசுவைக் கொஞ்சம் பின்னே தள்ளி அவரது அன்னையைப் பற்றி எல்லோரும் பேசி முன்னிருத்தி விடுவதால்! அப்படிப்பட்ட தாய்.... கணவரை இழந்த பின் விடுதியில் சேர்க்கப்பட்டக் குழந்தைகளில் ஒருவரான விசுவிற்கு, பொரி(ருள்) விளங்கா உருண்டைகளைக் கொடுத்து, வாழ்க்கையின் பொருளை விளக்கி, வாக்கையை அர்த்தமாக்கி, உன்னதமான வாழ்க்கைப் பாடத்தைப் புகட்டிய அந்த தாய்.....

எஸ்தர் கார்னிலியஸ் அவர்கள் மதுரையில், தென் இந்திய கிறித்தவ மதகுரு/பாதிரியார்/பாஸ்டர் குடும்பத்தில் பிறந்தமையால், சிறு வயது முதலே நல்ல பண்புகளையும், நல்லொழுக்கத்தையும், மதக் கோட்படுகளையும் கற்று வளர்ந்தார்.  அக்கால கட்டத்திலேயே, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர். பருவ வயதிலேயே, மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.  குறிப்பாக பார்வை இழந்த குழந்தைகளுக்கு. பல கிராமங்களுக்கும் சென்று சேவை செய்தது மட்டுமல்லாமல், பார்வை இழந்த குழந்தைகளையும், பேசும் திறன், கேட்கும் திறன் இழந்த குழந்தைகளையும் அழைத்து வந்து அதற்கான பள்ளியில் சேர்த்து கல்வி பயில வைத்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றியவர்.  கல்லூரியில் படித்த போதே, தான் செல்லும் தேவாலயத்தின் அருகில் இருந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த மக்களின் காப்பகத்தில் மனித நேயச் சேவை செய்யத் தொடங்கினார். அவரது மன உறுதியை நிரூபிக்கும் வகையில் இரு நிகழ்வுகள்.

அந்தக் காப்பகத்தில், பர்மாவிலிருந்து வந்த அகதிகளில் இருந்த, தனது வயதை ஒத்த, பார்வையற்ற ஒரு இளம் பெண், பார்வை இழந்த வயதான மூதாட்டி, மற்றும் மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் என்று எல்லோருக்கும் தனது சேவையை தொடர்ந்து செய்து வந்த நிலையில், ஒரு நாள் நடு நிசியில், சில சமூக விரோதிகள் பார்வையற்ற அந்த இளம் பெண்ணை விபச்சாரத்திற்கு விற்பதற்காகக் கடத்த முயன்ற போது, அங்கு உருவான குழப்பமான சூழலையும், குரல்களையும் தன் அறை ஜன்னலின் வழி கண்ணுற்று, உடன் தன் வாழ்வை பணயம் வைத்து, காப்பகத்தை நோக்கித் தைரியமாக ஓடி, குரல் கொடுத்து எல்லோரையும் உதவிக்கு அழைத்து, சமூக விரோதிகளிடம் இருந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறார். பின்னர் அப் பெண்ணைப் பார்வையற்றோருக்கானப் பள்ளியில் கல்வி பயில வைத்து ஆசிரியராக உதவியர்.

அடுத்த நிகழ்வு, அங்கிருந்த பார்வை இழந்த இளம் சிறுவர்களை, திருநெல்வேலியில் இருந்த பார்வை அற்றோருக்கான பள்ளியில் சேர வைத்தது. தனக்கு வந்த கனவில், கடவுள் தன்னைப் பார்வை அற்றவர்களுக்குச் சேவை செய்ய பணித்ததாகப் பொருள் கொண்டு தனது கனவில் சொல்லப்பட்ட பொருளை நனவாக்கி, தன் வாழ்வை இச் சேவைக்காக அர்பணித்துக் கொண்டவர்.

அவர், IELC – Indian Evangelical Lutheran Church  ஆசிரியராகவும், பாதிரியாராகவும் இருந்த கார்னிலியஸை மணந்து, மதுரையிலிருந்து கணவரின் ஊரான ஆம்பூர் வந்து, அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்தாலும், ஆம்பூரைச் சுற்றியிருந்த கிராமங்களில், மாற்றுத் திறனாளிகளாக இருந்த குழந்தைகளுக்குத் தன் சேவையைத் தொடர்ந்தார். 1971 ஆம் வருடம், அவ்வாறாக கிராமங்களுக்குச் சென்று வருகையில், ஒரு தினம் கணவர் கார்னிலியஸ் மாரடைப்பால் இறந்துவிட, எஸ்தர்  உறுதுணை இல்லாமல்,  தவித்தார்.  அதே வருட இறுதி நாளான டிசம்பர் 31 அன்று இரவு நேரத்தில், புதிய வருடம் பிறப்பதற்கு முன், தேவாலயங்களில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில், கணவனை இழந்து, மனமொடிந்து, வாழ்வில் அடுத்து தன் பாதை என்ன என்று தெரியாமல் தவிக்கும் தனக்கு, வாழ்க்கைப் பாதையைக் காட்டிட, கடவுள் முன் மண்டியிட்டு மன்றாடிய போது, அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு குழந்தை தள்ளப்பட்டு அம்மையாரின் மடியில் வந்து அமர, “குழந்தாய்” என்று விளித்து அந்தக் குழந்தையை உற்று நோக்கிய போது, பார்வை இழந்த குழந்தை என்று அறிந்ததும், பார்வையற்ற குழந்தைகளுக்குக் கற்பித்தல் மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு தாயாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் சித்தம் எனக் கொண்டு, தன் வாழ்க்கைப் பாதையைக் காட்டிய கடவுளுக்கு நன்றி உரைத்த அதே நேரம், ஆலயத்தின் மணி ஒலித்து புதிய வருடம் பிறந்ததாக அறிவிக்கவும், அந்த புதிய வருடத்திலிருந்து, கிடைத்த அந்த ஒரு குழந்தையை ஆரம்பமாக வைத்துக் கொண்டு, குழந்தையை தனது குழந்தையாக எண்ணிக் கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைக்கே தனது வாழ்க்கை என்று உறுதி செய்து கொண்டு, தனது அடுத்தகட்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். அன்று ஆரம்பித்த சேவை இதோ இன்று வரை, 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், தற்போது அவர் தொலை தூரத்தில் வாழ்ந்தாலும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

அன்று முடிவு எடுத்தவுடன், தனது 9 குழந்தைகளையும் வெவ்வேறு சிறந்த பள்ளி விடுதிகளில் சேர்த்துவிட்டு, குழந்தைகளைப் பிரியும் ஒரு தாய்க்கான மன பாரத்துடன் கண்ணீர் சிந்தினாலும் மறு புறம், கடவுளின் சித்தத்தை மனதில் உறுதி செய்து கொண்டு, மாற்றுத் திறனாளிக் குழந்தைகளைத் தன் குழந்தைகளாகக் கருதி அவர்களுக்காக வாழத் தொடங்கினார். பார்வையற்ற குழந்தைகளுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டு, 1972 ஆம் வருடம், பர்கூரில் இக் குழந்தைகளுக்கான பள்ளியைத் தொடங்கினார்.  ஒரு குழந்தையுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பள்ளி இன்று பல ஆயிரம் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி, அவரது சேவை ஆலமரமாக விழுதுகள் ஊன்றி வளர்ந்துள்ளது. ஏற்கனவே அம்மையாருக்கு அமெரிக்கன் கல்லூரியில் படித்த சமயமே, உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியருக்கானப் பயிற்சி அனுபவம் இருந்ததால், தான் தொடங்கியப் பள்ளியின், முதல் தலைமை ஆசிரியப் பொறுப்பேற்று அதனைச் சிறப்புற வழி நடத்தினார். சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியிலும், லண்டனிலும் சிறப்புப் பயிற்சி பெற்று, அக் குழந்தைகளுக்கு கல்வி மட்டும் புகட்டாமல், வாழ்க்கைப் பாடமாகிய, வாழும் வாழ்க்கையின் நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார்.

பல கிராமங்களுக்கும் சென்று இது போன்ற குழந்தைகளின் குடும்பத்தின் பின்புலம் அறிந்து,  கண் பார்வை, செவித்திறன், பேசும் திறன் இல்லாமல் இருப்பது தலைவிதி என்று கருதி கல்வி அறிவு புகட்டாமல் இருந்த அக்குழந்தைகளின் பெற்றோருக்குக் கல்வி அறிவின் பெருமையைப் புரிய வைத்து பள்ளியில் சேர வைத்து அக் குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாதையை வழி வகுத்துக் கொடுத்தவர். 

6 வருடங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, கண்காணிக்கும் மேலதிகாரியாகப் பணியாற்றி பின்னர் IELC மறுவாழ்வு மையத்தின் மேலதிகாரியாகப் பணியாற்றியவர். இப்பணியை இன்னும் விரிவாக்கிட, கிராமங்களுக்குச் சென்று தான் அறிந்து கொண்ட மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் குடும்ப சூழலைப் பற்றி, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் வாழ்ந்த, இக் குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நிதி உதவி செய்யும் பரந்த மனம் படைத்தோரைத் தொடர்பு கொண்டு, “ஒரு குழந்தையைத் தத்தெடுத்தல்” எனும் திட்டத்தை நிர்வகித்து, கல்வி நிறுவனத்தில் பணி புரிவோர், அமைப்பின் நிர்வாகக் குழு மற்றும் குழந்தைகளைத் தத்தெடுத்து நிதி உதவி செய்வோர்களுக்கு இடையில் பாலமாகச் செயல்பட்டு, திட்டமிடுதல் முதல், குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து வாய்ப்பு நலன்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் முதன்மை வகித்தார். பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கும் பயிற்சி அளித்து, இப்பணியில் ஈடுபடுத்தி இச் சேவை தொடர வழி வகுத்துள்ளார். இப்படிப் பல நிகழ்வுகள், அவரது முயற்சிகள், சேவைகள் என்று அவரது வாழ்வில் நிரவிக் கிடக்கின்றன. அவை எல்லாவற்றையும் இங்கு விவரிக்க வேண்டுமெனில் பல பதிவுகள் தேவை என்பதால் சுருக்கமாக, சிறிய பகுதியை மட்டுமே இங்கு பதிந்துள்ளோம்.

9 குழந்தைகளைப் பெற்றெடுத்து, கணவனை இழந்த இந்தத் தாய், ஒரு பெண்ணாக, ஒரு பெண்ணால், இந்த சமூகத்தில், இது போன்ற மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு வாழ்வளிக்கும் அமைப்பை உருவாக்கி, தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல முடியும் என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்றால் மிகையல்ல. தான் பெற்ற குழந்தைகளுக்கு சீரான வாழ்வை அமைத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், நூற்றுக் கனக்கான மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்குத் தாயாக இருந்து வழி காட்டி, அவர்கலுக்கும் நல் வாழ்வு வாழ வழி அமைத்துக் கொடுத்த ஒரு புரட்சிப் பெண்ணே.  அவரது பெயரில் அந்தப் பள்ளியில் ஒரு கட்டிடமே இருக்கிறது தற்போது.

அம்மையார் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து மனித நேயத்துடன் சேவை செய்ய வேண்டும்!  அன்று வழிகாட்டிய அந்த இறைவன் இன்றும், என்றும் வழி காட்டிடுவார், அம்மையாருக்கு!  வாழ்க! திருமதி எஸ்தர் கார்னிலியஸ் அம்மையார்! வளர்க அவரது திருப்பணி!

பின் குறிப்பு: “விசு, துளசியின் வேண்டு கோள்.....எங்களின் அடுத்த இடுகை உங்கள் தாயைப் பற்றியது.....எழுதலாம் இல்லையா?”

“என்ன நீங்க ரெண்டு பேரும் கூடவா? சேந்துட்டீங்களா.....எல்லோரடயும் சேர்ந்து இப்படி என்னையக் கவுத்துட்டீங்களே! நான் என்ன பண்ணினாலும் எல்லாரும் இந்த அம்மாவைப் பத்திதான் பேசுறீங்க...!! இப்ப கூட பாருங்க....இந்தியாவுலருந்து வந்து சரியா தூங்க கூட இல்ல......வீட்டுக்குள்ள இந்த அம்மா நுழையும் போதே, “பாவம் இந்தியாவுல இருக்கற குழந்தைங்க....ஒரு அம்பதாயிரம் கொடு” ன்னு சொல்லிக்கிட்டேதான் நுழையறாங்க......” என்று அவர் அவரது பாணியில் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவரது தாயைப் பற்றிய பெருமை மிளிர்கிறது....”

தன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த விசு, செல்லும் முன், அவரது அம்மாவால் ஆரம்பிக்கப்பட்ட, (ஆம்பூர்/பர்கூர்) இந்தியாவிலேயே முதன் முதலாகப் பார்வை அற்றோருக்காக ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்றான இந்தப் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பயணம் செய்வதிலுள்ள சிரமத்தை நேரில் கண்டு வருந்தி அவர்களுக்காக ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்ய முன் தொகை கொடுத்து பதிவு செய்துவிட்டுத்தான் சென்றார்.  பிறருக்கு உதவும் மனம் படைத்த சிலர் இதை அறிந்த உடனே ஆட்டோ வாங்கத் தேவையான 2 1/2 லட்சத்தில் மீதமுள்ள தொகையை தந்து உதவவும் முன் வந்திருக்கிறார்கள்.  இதற்குத்தான் தாயை போல் பிள்ளை நூலைப் போல் சேலை என்று சொல்வார்களோ!!!?.......

விசு அவர்களின் புத்தக வெளியீட்டு காணொளிகள். இதில் அவரது தாயாரைப் பற்றி பேசிய பகுதிகள் உள்ளன.
50 கருத்துகள்:

 1. அம்மையார் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து மனித நேயத்துடன் சேவை செய்ய வேண்டும்! அன்று வழிகாட்டிய அந்த இறைவன் இன்றும், என்றும் வழி காட்டிடுவார், அம்மையாருக்கு! வாழ்க! திருமதி எஸ்தர் கார்னிலியஸ் அம்மையார்! வளர்க அவரது திருப்பணி!

  அன்பிற்கினிய நண்பர்களே,

  இதுவரை நீங்கள் எத்தனையோ பதிவுகள் எழுதி இருந்தாலும் இந்த பதிவு உங்கள் தில்லையகத்து படைபுகளுக்கெல்லாம் ஒரு மணிமகுடமாக திகழும், இனியும் சிறக்கும் உங்கள் புகழும் இணைந்தே உலகம் உங்களை புகழும்.

  நன்றியுடன்,

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பர் கோ அவர்களே. தங்களின் வாழ்த்திற்கு! ஒரு நல்ல உள்ளத்தைப் பற்றிச் சொல்லலாமே என்ற ஒரு எண்ணம்தான்...மிக்க நன்றி !

   நீக்கு
 2. விசு அண்ணாவின் அம்மாவைப்பற்றி படிக்கும்போது சிலிர்த்துப்போகிறது!! அடேயப்பா!!!இவர்ப்போலும் வாழும் உதாரணங்கள் தான் என்னைபோன்ற சகப்பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்! நடைமுறை வாழ்வையே சிக்கலாக்கிக் கொள்ளும் இன்றைய சூழலில், இப்படி ஒரு உயர்ந்த வாழ்வை வாழும் இவரை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி சகாஸ்:) விசுவண்ணா u r so lucky!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக இவர் எல்லோருக்குமே ஒரு முன்னோடிதான் அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரி/மைதூ...

   நீக்கு
 3. அம்மாவிற்கு வணக்கங்களும் அவர்களைப் பற்றி எழுதிய உங்களுக்கு நன்றியும் சகோ.
  எவ்வளவு சிறந்த தாய்..விசு கொடுத்து வைத்தவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோதரி! உயர்ந்த உள்ளம் கொண்ட தாய்....மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. அம்மையாருக்கு என் வணக்கங்களை
  சிரம் தாழ்த்தி பணிவன்புடன்
  தெரிவித்துக் கொள்கின்றேன்
  ந்ன்றி
  தம+1

  பதிலளிநீக்கு
 6. தாயார் எஸ்தர் கார்னிலியஸ் அவர்களுக்கு வணக்கங்கள்...

  பதிவை ஆவலாக எதிர்ப்பார்த்து கொண்டிருந்தேன்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 7. விசு அவர்களின் அன்னையாரின் பெருமையை அனைவரும் சொல்லக் கேட்டு மகிழ்ந்தேன். தன மக்களை மட்டும் தாய்மை உணர்வோடு பார்ப்பவர்கள் அம்மாவாகிவிட முடியாது. தனக்கு பிறக்காத பிள்ளைகளையும் பாச உணர்வோடு பார்ப்பவர்தான் உண்மையான தாய்/ அந்த வகையில் விசு அவர்களின் தாயாருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு...

   நீக்கு
 8. கடவுள் அவர்களுக்கு எல்லா நலன்களையும் அருளட்டும். அவர்களால் இன்னும் அதனால் ஆதரவற்றோர் பயன் பெறட்டும். நல்ல மனங்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.

  நண்பரே எங்கள் பாஸிட்டிவ் பதிவுக்கு இந்தச் செய்தியை உங்கள் அனுமதியுடன் எடுத்துக் கொள்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு ...தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்...நல்லவர்களைப் பலரும் அறியவேண்டும்....

   நீக்கு
 9. நல்லுள்ளம் கொண்ட அவருக்கு எனது பணிவான வணக்கம்.....

  கடவுள் அவருக்கு எல்லா நலன்களையும் அருள எனது பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 10. எங்கள் ப்லாகில் பாசிடிவ் செய்தியாக வர வேண்டிய செய்தி என்று நினைத்தேன் ஸ்ரீராமும் கூறிவிட்டார். அம்மையார் எல்லா நலன்களுடன் நீடூழி வாழ வேண்டுகிறேன் ஆமென் .......!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சார்! நிச்சயமாக இது ஒரு பாசிட்டிவ் செய்திதான்...எல்லோரும் அறிய வேண்டிய ஒரு செய்தி.....மிக்க நன்றி சார்....

   நீக்கு
 11. விழா முடிந்ததும் நம்ம தனபாலன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அம்மையார் குறித்து விரிவாகச் சொன்னார். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்....

   நீக்கு
 12. விசு அவர்களின் தாயார் செய்துவரும் தொண்டினை அறிந்து அகமகிழ்ந்தேன்! விசு மட்டுமல்ல நாம் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள். இத்தனை சிறப்புமிக்க ஒருவர் நம் சக நண்பரின் தாயார் என்பதால்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சரியாகச் சொன்னீர்கள் சுரேஷ்....எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள்....ஆம் நம் சக நண்பரின் தாயார் என்பதால்...மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 13. மக்கள் பணியே மகேசன் பணி - என, அருஞ்செயல்கள் புரிந்த -
  அம்மையார் எஸ்தர் கார்னிலியஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்!..

  சிறந்த பணியினை நெஞ்சில் நிறுத்தியது - பதிவு!..


  பதிலளிநீக்கு
 14. இருவர் உள்ளம் படத்தின் இறுதிக் காட்சியில் நாகேஷ் ஒரு வசனம் பேசுவார்;"கடவுள் சில பெண்களை மட்டும் பிறக்கும் போதே தாயா படைச்சிர்றான்". நண்பர் விசுவின் தாயார் அப்படியானவராக இருக்கவேண்டும். அவருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சரியான காட்சியைச் சொன்னீர்கள் நண்பரே! தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி !

   நீக்கு
 15. அன்னை, இறைவன் இவ்வுலகில் மனிதனுக்கு அளித்த அற்புதமான உறவாகும். அதிலும் விசுவின் தாயார் இறைவனின் மறு உருவமாக இருந்து நம்முடன் வாழ்ந்து சேவை செய்கிறார் என்று அறியும் போது மனம் சிலிர்க்கிறது

  நண்பர் விசுமட்டும் இதற்காக பெருமைபட்டுக் கொள்ள முடியாது நாங்களும் பெருமைப்பட்டுக் கொள்கிறோம் அம்மா இல்லாத எங்களுக்கு இவரும் எங்களுக்கு அம்மாவே..


  அவரின் சேவைகள் தொடரட்டும்....கடவுள் அவருக்கு எல்லா நலன்களையும் அருள எனது பிரார்த்தனைகள்

  துளசி & கீதா அவர்களுக்கும் பாராட்டுக்கள் அவரின் சேவையை இணையம் அறிய செய்த முயற்சிகளுக்காக உங்கள் இருவரையும் நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தற்கு இறைவனுக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தமிழா....விசு மட்டுமல்ல,,நீங்கள் மட்டுமல்ல நாம் எல்லோருமே பெருமைபட்டுக் கொள்ளலாம்.......அவரின் சேவைகள் தொடர நாம் எல்லோருமே பிரார்த்திப்போம்...

   தமிழா நாங்கள் நெடுநாளாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த தங்களையும் சந்திக்க முடிந்ததற்கு எங்கள் மகிழ்வையும் சொல்லி இறைவனுக்கு நாங்களும் நன்றி உரைத்தோம்...மிக்க நன்றி தமிழா...தங்களின் அன்பைக் கண்டு நெகிழ்கின்றோம்...

   நீக்கு
 16. வணக்கங்களும் வாழ்த்துக்களும் அம்மா !
  மிக அழகான பகிர்வு ..

  பதிலளிநீக்கு
 17. அம்மையாரின் பணிகளுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்
  அம்மையாரை பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்... பணி சிறக்க வாழ்த்துக்கள் த.ம12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள் அம்மா...
  நல்ல பகிர்வு துளசி சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! வாருங்க்ள்! உங்களை மீண்டும் காண மகிழ்ச்சி..

   நீக்கு
 20. வணக்கம் அய்யா,
  நேற்றே படித்துவிட்டேன், கருத்து இட முடியவில்லை, தங்கள் பதிவுக்கு நன்றி, அன்னையின் பணி அருமை, அவரின் பாதங்களுக்கு என் பணிவாக வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 21. திரு.விசுவின் தாயார் பற்றிய உரையை கேட்டு மனம் நெகிழ்ந்தேன் !கொடுத்து வைத்தவர் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி பகவான் ஜி! ஆம் அவர் மட்டுமல்ல அவரால் தொடங்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளும் கொடுத்து வைத்தவர்கள்தான்....

   நீக்கு
 22. மனதை நெகிழ வைத்த பதிவு. விசுவை தெரியும் முன்னால் அவர் அம்மாவை அறிவேன்
  அவர்கள் நிறுவிய நிறுவனங்களை நேரில் பார்த்தவன் என்ற முறையில் எனக்கு அவர்கள் செய்திருக்கும் சேவைகளின் பரிமாணம் முழுவதுமாய் தெரியும் . சிறிது கூட சுயநலம் இல்லாமல் , பொது நல சேவையிலே தன் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்த இந்த அன்னை போன்றவர்கள் வாழ்வதால் தான் பூமி பிழைத்துக் கிடக்கிறது.
  இதையே இன்னும் விரிவாக எழுதி தனியாக புத்தகம் ஒன்றை அதுவும் அவர்கள் வாழும் காலத்திலேயே வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 23. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
  எல்லார்க்கும் பெய்யும் மழை


  என்பார்கள் ஆசானே!

  இதுபோன்ற ஆளுமைகள் அடையாளம் காட்டப்பட்டுப் போற்றப் பட வேண்டியவர்கள்.


  தங்களின் பணி மகத்தானது.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 24. ஆம் நண்பரே! நண்பர் விசு அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்! உங்களைப் பற்றியும் இங்கு நீங்கள் சொல்லி இருப்பதும். தனியாக புத்தகம் ஒன்றை கொண்டு வர நண்பர் விசு அவர்களிடம் ஆலோசனை நடந்து கொண்டு இருக்கின்றது நண்பரே! மிக்க நன்றி தங்களின் அழகான பின்னூட்டத்திற்கு.

  பதிலளிநீக்கு
 25. தோன்றிப் புகழுடன் தோன்றுக அம்மையார் போல தோன்றியதற்குப் பின் இம்மாதிரி சேவைகள் செய்து உலகத்துக்கே உன்னதமான தாயாராக இருந்து வாழ்ந்து வருகிரார். அம்மா உங்களுக்கு வணக்கங்கள். அம்மா என்ற சொல்லின் அடையாளம் நீங்கள்தான். அன்புடன்

  பதிலளிநீக்கு
 26. உங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!

  பதிலளிநீக்கு
 27. நம் பதிவர் குடும்பத்தில் இத்தகைய மகத்தான சேவையைச் செய்யும் தாய் இருப்பதில் மிகுந்த மகிழ்வே இத்தனை தாமதமாக தெரிந்து கொண்டோம் எனினும் இவர் நமக்கெல்லாம் முன்னோடி இவரைப்போன்று உதவ முடியவில்லையென்றாலும் நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்ய நாமும் முன்வரவேண்டும். நல்லதொரு பகிர்வுங்க.

  பதிலளிநீக்கு