செவ்வாய், 30 ஜூன், 2015

வாழ நினைத்தால் வாழலாம்....வழியா இல்லை ஊரினில்....

தாயோம் தேப்/ரேடியோ ஜாக்கி டென் அவர்கள்

“இறப்பு என்பது பிறந்த எல்லோருக்கும் தவிர்க்க முடியாத ஒன்று.  ஆனால், இறப்பதற்கு முன் ஒவ்வொருவரும் அவர்களுக்கேற்ற, அவர்களால் இயல்கின்ற ஒரு சாதனையேனும் செய்யாமல் இறப்பது பரிதாபத்திற்கு உரியது.  இயலாமையும், உடல் ஊனமும் எவ்வளவு தூரம் நம்மை செயலிழக்கச் செய்தாலும், தளர்வடையச் செய்தாலும், அதை எல்லாம் வென்று நாம் நினைப்பதை முடிக்கும் சக்தியை, நாம் முயன்றால் இயற்கை (இறைவன்) நமக்குத் தரத்தான் செய்யும்/செய்வார்.  ஆனால், பலரும் அந்த சக்தி நம்முள் உண்டு என்பதை உணர்வதுகூட இல்லை.”

இவ்வார்த்தைகளை வாசித்ததும், உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு பிரபஞ்ச ரகசியங்களை “A BRIEF HISTORY OF SCIENCE” எனும் புத்தகத்தால் உலகிற்கு விளக்கிய புகழ் பெற்ற கணித மற்றும் இயற்பியல் மேதை ஸ்டீவன் ஹாக்கின்ஸ் வருவார்தானே?

ஸ்டீஃபன் ஹாக்கின்

ஆனால், இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் அல்ல...!!  கொல்கத்தாவில் பிரபலமான “ஃப்ரென்ட்ஸ் எஃப் எம்மில்” பிரபலமான “ஹால் ஷேடோ நா பொந்து” (தளராதே நண்பா) எனும் நிகழ்ச்சியை 2011 முதல் 2014 வரை சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த நிகழ்ச்சியை வழங்கி, லட்சக் கணக்கான ரசிகர்களின் மனதில்  நீங்கா இடம் பெற்ற “ரேடியோ ஜாக்கி” (ஆர் ஜே) டென் தான் அவர்.  கடந்த ஆண்டு மிகச் சிறந்த வங்க தேச வானொலி அறிவிப்பாளருக்கான விருது பெற்ற, 34 வயதான, சக்கர நாற்காலியின் உதவியால் மட்டும் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்ல முடிகின்ற தாயோம் தேப் முகர்ஜி எனும் ஆர்ஜே டென்னின் வார்த்தைகள்!


25 ஆண்டுகள் பேசும் சக்தி இன்றி, தாய் தந்தையரின் உதவியால் மட்டும் தன்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்தி, கட்டிலிலும், சக்கர நாற்காலியிலுமாக வாழ்ந்த தாயோம் தேப் முகர்ஜியின் வார்த்தைகள்தான் அது. 


கொல்கத்தா மாவட்ட மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை நிபுணரான பபித்ர தேபிற்கும், அல்பனா முகர்ஜிக்கும் மகனாய் பிறந்த தாயோம் தேபிற்கு 1 வயதானதும், டிஆர்டி என்ற அழைக்கப்படும் டோபமின், RESPONSE IN DYSTONIA எனும் கொடிய நோய் தாக்கியது.  மருத்துவரான ப்பித்ர தேப் மனம் தளராமல் நியூரோசயின்சை ஆழமாகப் படித்து ஆராய்ந்து, காரணங்களைக் கண்டறிந்து, இந்நோய்க்கான சிறந்த மருத்துவ உதவி தன் மகனுக்குக் கிடைக்க வழி செய்தார்.  அப்படி, கலிஃபோர்னியாவில் உள்ள நரம்பியல் நிபுணர் ஸாரா ஆர் செயட்டிடம் தன் மகனுக்கு சிகிச்சைப் பெற வைத்தார்.  அவரது சிகிச்சையாலும், மருத்துவ ஆலோசனையாலும் 25 வயது வரை வெளியே தள்ளி நின்ற தாயோம் தேபின் நாவை சிறிது சிறிதாக அசைத்து, வலுப்படுத்தி அவரைப் பேச வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று வருடங்கள் மேற்   கொள்ளப்பட்ட முயற்சி சிறிய அளவில் பலன் கண்டது.  தெளிவில்லாத வார்த்தைகள்! சம்திங்க் இஸ் பெட்டர் தான் நத்திங்க்! மீண்டும் முயற்சி.  முயற்சி திருவினை ஆக்கும் தானே?....இறுதியில் 5 ஆண்டுகளுக்குப் பின் தாயோம் தேப் தெளிவாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.  அடுத்த வருடம் அவரது 31 வது வயதில், பேச்சாற்றல் மட்டும் தேவைப்படும், ரேடியோ ஜாக்கிகளைச் தேர்ந்தெடுக்கும் ஒரு நேர்முகத் தேர்விற்கு, சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நம் தாயோம் தேப் சென்றும் விட்டார்.  தாயோம் தேபின் தெளிவான பேச்சும் திறமை மிகு பேச்சாற்றலும்

எல்லா புதன் கிழமைகளிலும் காலை ஆர் ஜே டென்னின் குரலைக் கேட்க கொல்கத்தா நகரம் காத்திருந்தது.  கடந்த நவம்பர் மாதம் வரை 3 ஆண்டுகளில் அவரது “ஃபோன் இன் நிகழ்க்சி” ஆயிரம் தொடர்களைத் தாண்டியது.  நூற்றுக் கணக்கான பிரபலமானவர்களுடன் நேர்முகம் உரையாடல் நடத்தி எல்லோரது  மனதையும் கவர்ந்திருக்கிறார். ஆயிரக்கணக்கானவர்களுடன் எல்லா சம்பவங்களைப் பற்றியும் விலாவாரியாக விவரித்துப் பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய தாயோம் தேப் இந் நிலைக்கு வர அவருக்கு உதவியது தன் 5 ஆண்டு காலத் சிகிச்சைக்கு இடையே அவர் மேற்கொண்ட பயிற்சிகளின் பலன் என்பதை எண்ணும் போது நாமும் வியந்துதான் போகின்றோம் இல்லையா!  முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் தானே!

ரேடியோ ஜாக்கி எனும் இந்த சிகரம் ஏறி தன் வெற்றிக் கொடியை நாட்டிய அவர், இனியும் இரண்டு சிகரங்கள் ஏறி தன் வெற்றிக் கொடிகளை நாட்டத் துடிக்கின்றார்.  முதல் சிகரம் ஒரு திரைப்படம்!.  ரூபம் சர்மாவின் புதிய திரைப்படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்! இந்த செப்டம்பர் மாதம் அதன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. பிரபல நாடகக் கலைஞரான ரிபிக் சோனியின் ஒரு நாடகத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார்.

அடுத்த சிகரம் ஒரு புத்தகம்!. ஆங்கில இலக்கிய பட்டதாரியான டென், விவரிக்கும் கதைகளை அவரது நண்பர் சுபஜித் குப்தா எழுதி தொகுக்கின்றார்.  மின் நூலாக இக்கதைத் தொகுப்பு வெளி வர இருக்கிறது.

கடந்த வருடம் எதிர்பாராமல் மாரடைப்பால் இறக்க நேரிட்ட தன் தந்தை இதை எல்லாம் கண்டு மகிழத் தன்னுடன் இல்லையே என்று நினைத்து அவர் வருந்துகிறார்.  தன் சாதனைகளை கடந்த வருடம் வரை தன்னுடன் இருந்து கண்டு மகிழ்ந்ததை எண்ணும் போது மனதின் கனம் லேசாகிறதுதான்.  இருந்தாலும் தந்தையின் இழப்பு தாயோம் தேபிற்கு பேரிழப்பே!

இனியுள்ள வாழ்வில் அவர் மீண்டும் எல்லோரையும் வியக்க வைக்கும் வித்த்தில் சாதனைகள் பல புரிந்து வாழ நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.  அதற்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.!

படங்கள் : கூகுள்

26 கருத்துகள்:

 1. தாயோம் போற்றுதலுக்கு உரியவர்
  மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்க முழுத் தகுதியும் படைத்தவர்
  போற்றுவோம் பாராட்டுவோம்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

   நீக்கு
 2. உடல் ரீதியான குறைபாடு உள்ளவர்களுக்கு மன ரீதியான வேகம் மிக அதிகமாகத்தான் உள்ளது. பலரையும் பார்த்து வியந்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் உண்மைதான் நண்பரே! மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

   நீக்கு
 3. உற்சாகமும் தன்னம்பிக்கையும் கூட்டிப் போகும்
  அற்புதமான பதிவு

  இல்லாதவைகளை எண்ணி ஏக்கமுற்றுத் திரியாமல்
  இருப்பதைக் கொண்டு மிகச் சிறப்புடன் வாழப் பழக
  உணர்த்தும் அற்புதமான பதிவைத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

   நீக்கு
 4. தன்னம்பிக்கை மனிதர்..... தன்னிலை கண்டு சுயபச்சாதாபம் கொள்ளாது சாதித்த இந்த மனிதருக்கு எனது வணக்கங்கள்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் மிகச் சரியே மிக்க நன்றி வெங்கட் ஜி. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

   நீக்கு
 5. கண்டிப்பாக பல சாதனைகள் படைப்பார்... அதில் எள்ளளவும் சந்தேகமில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

   நீக்கு
 6. ஊனம் குறையல்ல என்பதை உணர்த்திய மனிதர்!

  பதிலளிநீக்கு
 7. இவர்களைப் போன்றோரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியதுஅதிகம் இருக்கின்றது. நல்ல பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 8. தாயொம் தேப் முகர்ஜியின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது! நல்லதொரு தன்னம்பிக்கை மனிதரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

   நீக்கு
 9. சாதனையாளர், மனவுறுதி கொண்ட தாயோம் தேப் அவர்கள் பற்றி அறியச் செய்த சகோதரருக்கு நன்றி.

  த.ம.9

  பதிலளிநீக்கு
 10. இவரது சாதனை பலருக்கு உந்துதலாக இருக்கும்.அருமை

  பதிலளிநீக்கு
 11. இம்மாதிரி மனவலிமை கொண்ட இளைஞர்களின் சரித்திரமே நமது மாணவச் செல்வங்களுக்குத் தேவை. மேலும் இதுபோன்ற வரைவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். (௨) ஒருவேளை, உங்களின் அடுத்த குறும்படம் வங்காள மொழியில் வெளிவரக்கூடுமோ? - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 12. தாயொம் தேப் முகர்ஜி, ஆச்சரியம் ,ஆனால் உண்மை ! பேசவே முடியாமல் இருந்தவர் ,இன்று எல்லோரும் பேசும்படியாய் உயர்ந்து விட்டாரே :)

  பதிலளிநீக்கு
 13. ஆஹா...எவ்வளவு தன்னம்பிக்கை....நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 14. பிரமிக்க வைக்கிறார். மேலும் ஒரு பாஸிட்டிவ் செய்தி!

  பதிலளிநீக்கு