செவ்வாய், 9 ஜூன், 2015

POET THE GREAT - முன் - பின் பயணக் குறிப்பு 2


இந்தியன் காஃபி ஹவுசில் காலை உணவை முடித்துக் கொண்டு அடுத்து படகுத் துறைக்குச் சென்றோம்....அது அடுத்த பதிவில்....தொடர்கின்றேன்.  அதன் தொடர்ச்சி இங்கே..
அதற்கு முன் ஒரு சிறு குறிப்பு ஒன்று முதல் பகுதியில் விடுபட்டுவிட்டது. குறும்படத்திற்கு முன், நான் கோவை சென்று இறங்கிய போது நம் நண்பர் ஆவி என்னை அழைத்துச் செல்ல வந்து விட்டார்.  என்னை, மருதமலை அருகில் இருக்கும் எனது தம்பியின் (அத்தை மகன்) வீட்டில் விட்டுச் செல்ல வந்தவருடன் கதைகள் பல பேசி, மதிய உணவு உண்ட பின், 3 ஆம் தேதி அன்று குறும்படத்திற்கு அவர் மொட்டை போட வேண்டி இருந்ததால், உடனே அவர் "சேச்சி நாம் மருதமலை சென்று அங்கு நான் மொட்டை அடித்துக் கொண்டுவிடட்டுமா?  குடந்தையார் பழனியில் மொட்டை போட்டுக் கொண்டார்.  நான் இங்கு! உங்களுக்குப் பிரச்சனை இல்லையே சேச்சி?" என்றார். எனக்கா?!!!! உடன் வண்டி மருதமலை நோக்கிப் பயணித்தது என் அத்தைமகனின் வீட்டைக் கடந்து. அங்கு ஆவி மொட்டைப் போட்டுக் கொண்டு, என்னப்பன் முருகனையும் வணங்கிவிட்டு என்னை அத்தை மகனின் வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார். 

எர்ணாகுளம்/கொச்சி! கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரம்தானே?! எர்ணாகுளம்/கொச்சியைப் பார்த்ததும் எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது.  ஒரு வேளை நஞ்ஞள் அறியாதே தலைநகரம் மாறிவிட்டதோ என்று! அந்த அளவிற்கு முன்னேற்றம்.  இதனை கேரளாவின் வணிகத் தலைநகரம் எனலாம். ஒரு காலத்தில் இந்த நகரம்தான் கொச்சி ராஜாக்களின் தலைநகரமாக  இருந்தது. எர்ணாகுளம் மாவட்டத்தின் தலைநகரமாகவும் இருந்தது. ஆனால், தற்போது இந்த மாவட்டத்தின் தலைநகரம் காக்கனாடு. கொச்சியின் ஒரு பகுதியான எர்ணாகுள நகரம் (எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது) கடல் நீரால், கொச்சிக் கோட்டை, வெல்லிங்க்டன் தீவு, இவைகளிலிருந்து பிரிந்து உள்ளது.  அதனால் எர்ணாகுளத்தில் நிறைய படகுத் துறைகள் இருக்கின்றன.  அதில் மிகவும் முக்கியமான, பெரிய படகுத் துறைதான் எர்ணாகுளத்தின் படகுத்துறை.  அங்கிருந்து தினமும் படகுகள், கொச்சி கோட்டை, வைப்பின், மட்டஞ்ச்சேரி (இதுவும் கொச்சியின் பகுதி) வெல்லிங்கடன் தீவு இவற்றிற்குச் சென்று வருகின்றன. இந்த இடங்களுக்கு சாலை வழிப் பயணத்தைவிட பெரும்பான்மையோர் இந்தப் படகுப் பயணத்தைதான் உபயோகப்படுத்துகின்றனர், பயணச் சீட்டின் விலையும் குறைவு, பயண நேரமும் மிகவும் குறைவு என்பதால். 


ட்ரக்குகள் வைப்பினிலிருந்து எர்ணாகுளத்திற்கு பயணிக்கின்றன 

படகுத் துறையில் சுற்றுலாத்துறை அலுவலகம் உள்ளது

நாங்களும் எர்ணாகுளம் படகுத் துறையிலிருந்து வைப்பின் வரை சென்று திரும்பினோம்.  வைப்பின் பகுதிக்குள் செல்லவில்லை.  பயணம் மிகவும் சுகமானது.  வண்டிகளின் நெருக்கடியும் கிடையாது!! பயண நேரம் குறைவு. படகில் நெருக்கடியான கூட்டம் இல்லை. அதனால்தான் பயணிகள் படகில் பயணிக்க விரும்புகின்றனர்.  ஒவ்வொரு படகும் புறப்படும் நேரம், எவ்வழி செல்கின்றது, பயணச் சீட்டின் விலை என்று அட்டவணை படகுத் துறையில் வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் சென்ற படகு, வெல்லிங்க்டன் தீவைத் தவிர, கொச்சி கோட்டை, கொச்சி, வைப்பின் வரை சென்று மீண்டும் இந்த இடங்களில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி எர்ணாகுளம் படகுத் துறையை அடைகின்றன. சென்று மீண்டும் வர 1.30 நிமிடங்கள் ஆகின்றது. தினமும் செல்வோருக்கு இது சாதாரணமாகத் தெரியலாம்.  ஆனால், நான் மிகவும் அனுபவித்த பயணம் என்று சொல்லலாம். எனது படகு, கப்பல் பயணத்தைப் பற்றி பிறிதொரு பதிவில்.  படகுத் துறையைச் சுற்றி நடை பாதையும், அதை ஒட்டிச் செடிகளும், மரங்களும், கடைகளும் இருக்கின்றன.


Lulu Mall Kochi.jpg
கூகுள் தந்த படம்
லுல்லு மால் 
லுல்லு மாலின் ஸ்கேட்டிங்க் பகுதியில் மேலிருந்த அலங்காரம்
அதன் பின் நாங்கள், துளசியின் குழந்தைகள் ஆசியாவிலேயே பெரிய மால் என்று சொல்லப்படும் லுல்லு மாலிற்குச் செல்ல வேண்டும் என்று பயணத்தின் முதலிலேயே சொல்லிவிட்டதால் அங்கு சென்றோம். ஆனால், இந்த மால் இந்தியாவிலேயே மிகப் பெரிய மால் அல்லாமல் ஆசியாவிலேயே மிகப் பெரிய மால் அல்ல. (மால் (பெரிய வணிக்ச் சந்தை? வளாகம்?) என்பதற்குத் தமிழில் என்ன வார்த்தை என்று தெரியவில்லை) கேரளாவிற்கும், வளைகுடா நாட்டிற்கும் உள்ள பந்தம் எல்லோரும் அறிந்ததே.  கேரளத்துக்காரர் எம்.ஏ யூசுஃப் அலி என்பவர் (வளைகுடாவில் இருக்கின்றார்.  பிசினஸ் மேன்) லுல்லு குழுமத்தின் மேனேஜிங்க் டைரக்டர். இந்த மாலின் சுவற்றில் ஒரு வாசகம் இருந்தது.  

இங்கு வந்து மனதைச் சந்தோஷமாக்கிக் கொள்ளுங்கள்.  எனக்குச் சிரிப்பு வந்தது. ம்ம் அங்கு போனால் சந்தோஷம்தாம், ஓசி ஏசி, வித விதமான, பல வண்ணங்களில் வேடிக்கைப் பார்க்க கடைகள், உடைகள், கலைப் பொருள்கள், தின்பண்டங்கள், நெகிழ்கூழ்கள், பல வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான பொருட்கள் என்று களை கட்டினாலும் இவை எல்லாம் வேடிக்கை பார்க்க மட்டுமே அல்லாமல் பர்சைத் திறந்தால் சந்தோஷம் பறந்துவிடும்!  அத்தனை விலை! பின்னே இத்தனைப் பெரிய மாலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டாமா?! நம் தலையில் தானே கட்ட வேண்டும்.  லுல்லு குழுமத்தின் ஹைப்பர் மார்க்கெட் என்று மிகப் பெரிய சங்கிலித் தொடர் கடை இருக்கின்றது.  இது ஆசியாவிலேயே இருக்கும் மிகப் பெரிய மார்க்கெட்களில் ஒன்று. பன்னாட்டுப் பொருள்களும் குவிந்து கிடக்கின்றன. உலகம் கையளவில், மிகச் சிறியது என்று இந்தக் கடையைப் பார்த்தால் தெரியும்.  உலகமயமாக்கலின் விளைவும் தெரியும்.  அயல் நாட்டுப் பொருட்கள், ஐஸ்க்ரீம்ஸ், பழங்கள், காய்கள், உலர் பருப்பு, பழங்கள் என்று உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் இங்கு கிடைக்கின்றன.  என்ன உங்கள் பர்ஸ் கனமாக இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்ளவும்.
  
மாலில் குழந்தைகளும், பெரியவர்களும் விளையாடுவதற்கு என நிறைய இருக்கின்றன.  கிட்டத்தட்ட கேசினோ போலவும்.  சாப்பாடு பற்றிக் கேட்க வேண்டுமா? ஓ! ஒருவாடு கடிக்கானும், திங்கானும்! இஷ்டம் போல! இஷ்டம் போல என்றவுடன் அன்லிமிட்டெடா என்று கேட்காதீர்கள்.  வெயிட்டான விட்டமின் எம் இல்லை என்றால் கஷ்டம் கேட்டோ?!
சோட்டாணி அம்மை கதவு திறந்நில்லா
மால் கதை போதும்.  இங்கு சென்னையில் இல்லாததா என்ன? அடுத்து சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றோம்.. ஆனால் நடை அடைத்துவிட்டார்கள்.  எனவே வெளியிலிருந்து எண்டே பகவதிக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு நகர்ந்தோம்.  

அடுத்து செம்மந்தட்டா.  அது திருச்சூரில் உள்ள செம்மந்தட்டா எனும் ஊரில் ஒரு அருமையான பழைய சிவன் கோயில்.  துளசி பேன்ட் ஷர்ட் அணிந்திருந்த்தால் அவரைக் கோயிலின் உள்ளே விடவில்லை.  அது போன்று பெண்கள் சுடிதார்  அணிந்தும் செல்லக் கூடாது. துளசி மனம் வருத்தம் அடைந்தார்.  இறைவனைத் தொழ எதற்கு ட்ரெஸ் கட்டுப்பாடு? எதற்கு மொழி? இறைவன் அப்படிச் சொல்லவில்லை, என்று நயமாகவும், கொஞ்சம் உறுதியாகவும் சொல்லிப் பார்த்தார் என்றாலும் எங்களைக் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இந்தக் கோயிலின் விக்ரகத்தை முதன் முதலில் பரசுராமர் தான் பிரதிஷ்டை செய்தாராம். இக் கோயில் கேரளாவில் உள்ள 108 சிவாலயங்களில் ஒன்று என்றும் சொல்லப்படுகின்றது. அங்கு ஒரு குளமும் உள்ளது. ஆனால், நாங்கள் சென்ற பொது இருட்டத் தொடங்கி விட்டதால் எடுத்தப் புகைப்படங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. இந்தக் கோயிலைப் பற்றித் தெரிந்தவர் யாரேனும்  பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
பின்னர் அன்று இரவே வீடு திரும்பினோம். அடுத்த நாள் நான் சென்னைக்குப் பயணம்.  அருமையான நாட்கள் அங்கிருந்த நாட்கள்!  மீண்டும் சில பயணக் குறிப்புகள் சொல்ல இருக்கின்றேன். இப்போது அல்ல இன்னும் சில நாட்களில்....ஒரு சில பதிவுகளுக்குப் பின்...

கீதா

23 கருத்துகள்:

 1. மிகவும் சுவாரஸ்யமான பயணக்கட்டுரை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. படங்களும் பதிவும் எங்களையும் கேரளாவுக்கே கூட்டிச்சென்றது போன்றும், படகில் நாங்களும் பயணித்தது போன்றும் ஓர் பிரமையை ஏற்படுத்தியது. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. பயணக்கட்டுரை சூப்பர். என்றாவது கேரளா போனால் உதவியாக இருக்கும்.

  படகுப் பயணம் 1:30 மணி நேரமோ ! நிமி என்றிருக்கிறது. 'நெகிழ்கூழ்கள்'னா என்னங்கோ ? மேலும் பயணக் குறிப்புகளை எதிர்பார்த்து ...

  பதிலளிநீக்கு
 4. ஸ்வாரசியமான பயணக் குறிப்புகள்.

  பல வழிபாட்டுத் தலங்களில் இப்படி கட்டுப்பாடுகள். மணிப்பூர் நகரில் கோவிலுக்குச் சென்றபோது கோவில் இருந்த மேடை மீது கூட ஏற விடவில்லை! கிட்டத்தட்ட 50 அடி தூரத்திலிருந்து தான் தரிசனம்!

  நாங்கள் சொல்வது அவருக்குப் புரியவில்லை. ஹிந்தியில் “இதர் ஆனா மனா ஹே!” என்று சொல்லி விட்டார்! சாமி சொன்னாரா என்று கேட்டு விட்டு வெளியே வந்து விட்டேன்!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  பயண அனுபவத்தை வெகு சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் நாங்களும் வந்தது போல ஒரு உணர்வு... பகிர்வுக்கு நன்றி த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. ஆவியின் புகைப்படங்கள் கனஜோர்!

  படகுப் பயணக் கட்டணம் பற்றி அந்தப் பிறிதொரு பதிவில் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

  படங்கள் நன்றாக இருக்கின்றன.

  அந்தக் கோவில் பற்றி நான் ஒன்றும் அறியில்லா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னெ அது ஆவியல்லே! கனஜோராகத்தான் இருப்பார்! இந்த "கன" என்பது உள்குத்து இல்லையே!ஹஹஹ்ஹ்ஹ் ஆவியச் சொல்லைனா என்னைப் பிடிச்சுடுச்சுனா!! ஏற்கனவே ஆவியோடதான் சென்னைல சுத்திட்டுருக்கேன்....

   படகுப் பயணம், கப்பல் பயணம் பற்றி நிச்சயமாக உண்டு!

   நாங்கள் சென்றது எர்ணாகுளம் படகுத் துறையிலிருந்து பயணிங்கள் படகு எனவே கட்டணம் ஒரு நபருக்கு ரூ3------5 ருபாய்தான். வைப்பீன் என்பதால் கடைசி ஸ்டாப்....ஒரு நபருக்கு 5 ரூபாய். செல்வதற்கு மீண்டும் திரும்ப வருவதற்கு நாம் ஏங்கு இறங்குகின்றோமொ அதற்கு ஏற்றபடி...நாங்கள் மீண்டும் எர்ணாகுளம் படகுத் துறைக்கே வந்ததால் 5 ரூபாய். ஸோ ஒரு நபருக்கு 10 ரூபாய். இது கேரளா நீர் வழி போக்குவரத்துக் கழகத்தின் கீழ் வருவது. அதனால் தான் பயணிகள் இதில் அதிகம்..அதுவும் காலை, மாலை வேளைகளில் வேலைக்கு, பள்ளிகளுக்குச் செல்வோர் என்று கூட்டம் அதிகமாகவும், அதிக படகுகளும் விடப்படும். இந்த எல்லா இடங்களையும் கவர் செய்து.

   இதே போன்று கேரள சுற்றுலாத் துறையும் படகுகள் விடுகின்றது. டூரிஸ்ட் படகுகள்...அது நாம், நம் குடும்பம் மட்டும் என்று . ஆனால், அதற்கு ரூ 2000, 3000 என்று ஆகும்....

   நீக்கு
 7. மகிழ்வூட்டும் செய்திகள்
  அருமையான படங்கள்
  கோயிலுக்குள் செல்ல, உடைக் கட்டுப்பாடு விதிப்பது
  ஏன் என்று புரியவில்லை சகோதரியாரே
  உடைகளில் கூட கடவுள் வித்தியாசம் பார்க்கிறாரா என்ன?
  நன்றி சகோதரியயாரே
  தம +1

  பதிலளிநீக்கு
 8. இங்கே சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு உரிய தகவல்களையும் சேர்த்து கொடுக்கலாமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுக்கின்றேன் நண்பரே! இது நாங்கள் சுற்றுலா என்று செல்லவில்லை, ஒரு திருமணத்திற்குச் சென்ற போது சென்றதால், அந்த விவரங்களைக் கொடுக்க முடியவில்லை. ஆனால் நான் அறிந்த விவரங்களைத் தருகின்றேன். கொஞ்சம் நண்பர் ஸ்ரீ ராம் அவர்களுக்கு கொடுத்துள்ளேன். துளசியின் காரில் சென்றதால் அதுவும் அவரது குடும்ப நிகழ்வுக்கு என்பதால் போக்குவரத்துப் பற்றிச் சொல்ல முடியவில்லை.

   தர முயற்சிக்கின்றேன்.

   மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 9. பர்சைத் திறக்காமல் இந்த பதிவு மூலமே சந்தோசம் வந்து விட்டது... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் டிடி உண்மையே! பர்ஸ் நல்ல கனமா அதுவும் பெரிய நோட்டுகளா இருந்தாதான் இந்தமாதிரி மால் எல்லாம் இல்லனா சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு வரலாம்....

   நீக்கு
 10. படங்கள், சுற்றுலா, அனுபவங்கள் அருமை. அடுத்த அனுபவத்தில் சந்திப்போம். தாங்கள் சென்றவிடங்களில் சோட்டாணிக்கரை மட்டுமே நான் சென்றது. அருமையான பகவதி அம்மன் கோயில். மற்ற இடங்கள் பார்க்காதது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. உம்...இன்னும் எங்கெங்கு பயனித்தீர்களோ, மறக்காமல் சொல்லி விடுங்கள் - படங்களுடன்! (வேலூர் பயணம் உட்பட!) - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 12. பதிவின் வர்ணனையும் படங்களும் என்னையும் பயணம் செய்ய வைத்து விட்டன

  பதிலளிநீக்கு
 13. கொச்சியிலிருந்து இரண்டு முறை படகுத்துறையிலிருந்து பயணம் புறப்பட்டு ஜ்யூ டௌன் எல்லாம் பார்த்திருக்கிறோம். மகிழ்ச்சியான அனுபவம் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் சேமித்து வைத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 14. பயணக்கட்டுரை அருமை நேற்றிரவே மொபைலில் படித்து விட்டேன் கருத்துரை இடமுடியவில்லை லூலூ மால் விடயங்கள் அருமை எம்.ஏ. யூசுப் அலியைப் பற்றியும் குறிப்பிட்டு இருந்தது கண்டு ஆச்சர்யமாக இருந்தது நன்றி.
  தமிழ் மணம் 111

  பதிலளிநீக்கு
 15. அழகான புகைப்டங்களுடன் கூடிய பயணக்கட்டுரை, நாங்களும் பார்த்தோம் உம் பதிவில், நன்றி.

  பதிலளிநீக்கு
 16. படங்களும் பயண அனுபவங்களும் சுவாரஸ்யம்! சில வாரங்கள் வலையகத் துறவு மேற்கொண்டதால் வலைப்பக்கம் வரவில்லை! முதல் பகுதியை படிக்கவில்லை! விரைவில் படித்து கருத்திடுகின்றேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. # இறைவனைத் தொழ எதற்கு ட்ரெஸ்?#
  கட்டுப்பாடு என்பதை சேர்த்தால் சரியாக இருக்கும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஜி! அந்த வார்த்தை இருக்கிறது என்று நினைத்துவிட்டேன். தட்டச்சு செய்துள்ளேன். ஆனால் எப்படி விடுபட்டது என்று தெரியவில்லை. நிறைய மாற்றங்கள் செய்த போது தவறு நிகழ்ந்துவிட்டது. மிக்க நன்றி ஜி அதைச் சுட்டிக் காட்டியமைக்கு...அர்த்தமே மாறிவிடுகின்றதே ஜி ஹஹஹ்...

   நீக்கு
 18. #அர்த்தமே மாறிவிடுகின்றதே ஜி ஹஹஹ்..#
  இறைவனைத் தொழ எதற்கு ட்ரெஸ் என்று 'முற்றும்' துறந்தவர்கள் சொன்னால் பொருத்தமாய் இருக்கும் :)

  பதிலளிநீக்கு