“கோந்தே, பாரு எவ்வளவு சமட்டினாலும் திடீர்னு சைக்கிள்ல லைட் ஏரியலை. டைனமோ பாக்கணும். இது டவுன் இல்லியா, போலீஸ் பாத்தா பிடிப்பா. நீ எறங்க வேண்டாம். அப்படியே உக்காந்திண்டிரு, Bar அ கட்டியா பிடிச்சுக்கோ. சைக்கிள தள்ளறேன். ஒழுகினசேரி பாலம் ஏறி இறங்கினதும் ஹைவே. போலீஸ் இருக்கமாட்டா, அப்புறம் சைக்கிள சமட்டறேன்.”
1970.
மாமாவின் ரகசிய குரல்.
“போலீஸ்
எங்க இருக்கா மாமா?” (எனக்குப் போலீஸ் என்றால் பயம்.)
“ஷ்ஷ்….சத்தம்
போட்டு பேசாத. பாலம் ஏறி இறங்கினதும் பேசலாம்”
பாலம்
ஏறி இறங்கும் முன் கொஞ்சம் உங்களிடம் பேச வேண்டும்.
என்
அப்பா வழி தாத்தா பாட்டியுடன் அப்போதுதான் இலங்கையிலிருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த
சமயம். நாகர்கோவிலில் வாசம். என் மாமாவுக்குத் தன் ஒரே செல்லமான தங்கையின் தன் ஒரே
செல்ல மருமாளை, தன் குழந்தைகளுக்குச் சமமாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை.
அப்போது
அவரது மூத்த மகள் கான்வென்டில் ஆங்கில வழிக்கல்வியில் 7 ஆம் வகுப்பு. இரண்டாவது மகள்
ஊரில் இருந்த அரசுப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வி. அவளும் நானும் ஒரே
வயது.
அப்போது
நாங்கள் நாகர்கோவிலில் கான்வென்ட் அருகிலேயே இருந்ததால் அங்கு என்னை 4 ஆம் வகுப்பில்
சேர்த்துவிட்டால், 5 ஆம் வகுப்பும் முடித்ததும், ஊரில் படித்துக் கொண்டிருந்த அவர்
இரண்டாவது மகளும் அங்கு 5 ஆம் வகுப்பு முடித்ததும் எங்கள் இருவரையும் 6 ஆம் வகுப்பில்
கான்வென்டில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்துவிடலாம் என்ற கனவு.
இலங்கையில்
டிசம்பர் விடுமுறையோடு பள்ளி வருடம் முடியும். அங்கு மூன்றாம் வகுப்பு முடித்திருந்தாலும்,
இங்கு நான்காம் வகுப்பு சேர்ப்பதில் சிரமம் இருந்தது. சேர்ப்பதற்குப் பரீட்சை வைப்பார்கள். அங்கு கற்றவை
வேறு இங்கு வேறு. அங்கு பெற்ற பள்ளிச் சான்றிதழ் இங்கு கான்வென்டில் செல்லுபடியாகாதோ
என்ற நிலை.
மாமாவுக்குத்
தன் மருமகளை மீண்டும் 3 ஆம் வகுப்பில் போட விருப்பமில்லை. எனவே, தான் தலைமையாசிரியராக
இருந்த வீரநாராயணமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் என்னை மூன்றாம் வகுப்பில் சேர்த்துக்
கொண்டு, கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியதும் என்னை காலாண்டு, அரையாண்டு
வரை பரீட்சை எழுத வைக்க வேண்டும் என்று மூன்றாம் வகுப்புப் பாடங்களை க்ராஷ் கோர்ஸ்
நடத்தினார்.
அதற்காக
நாகர்கோவிலில் இருந்து என்னை 3 மைல் தூரத்தில் அப்போது அவர்கள் இருந்த (என் அம்மா வழி
குடும்பம்) ஊராகிய திருவண்பரிசாரத்துக்கு என்னை ஒரு நாள் விட்டு ஒரு நாள் அழைத்துக்
கொண்டு வந்துவிடுவார். இல்லை என்றால் நானும் அம்மாவும் நாகர்கோவிலில் இருந்து ஊருக்குச்
செல்லும் பேருந்தில் சென்று விடுவோம்.
அப்படி
பல நாட்கள் மாமா என்னை சைக்கிளில் அழைத்துச் செல்லும் போது நடக்கும் சம்பாஷணைதான் மேலே
ஆரம்பத்தில்.
பாலம் எறி இறங்கியாயிற்று. மாமாவைப் பற்றியும் எங்கள் பிணைப்பையும் சொல்லிவிடுகிறேன். சிறு
வயதிலேயே அவருடைய அப்பா அதாவது என் தாத்தா இறந்துவிட்டதால் குடும்பப் பொறுப்பைச் சுமக்க
வேண்டியதானது மாமாவுக்கு. கூடப் பிறந்தோர் இரு தம்பிகள், என் அம்மா ஒரே தங்கை அப்போது
கைக்குழந்தை.
பாட்டி,
தன் 24 வயதில், சிவங்கங்கையிலிருந்து தன் மாமியார், தன் 4 குழந்தைகளுடன் திருவண்பரிசாரத்தில்
நிலத்தை வைத்துப் பிழைக்கலாம் என்று குடியேறி வீட்டிற்குள் இருந்து கொண்டு அப்பளம்
இட்டிட அதை என் பெரிய மாமாவும் அவர் தம்பியும் அருகிலுள்ள கிராமங்களுக்கு எல்லாம் சென்று
விற்று விட்டு வருவார்கள். பாட்டியிடம் இருந்தது ஒரே ஒரு நல்ல புடவை மட்டும்தானாம்.
வீட்டிற்குள் சும்மா துணியை உடம்பைச் சுற்றிக் கட்டிக் கொண்டு மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொண்டு இருப்பாராம்.
என்
அம்மாவுக்கும் பெரிய மாமாவுக்கும் கிட்டத்தட்ட 14 வருடங்கள் வித்தியாசம். தங்கையைத்
தோளில் சுமந்து வளர்த்தார். என் அம்மாவும் எதற்கெடுத்தாலும் பெரிய அண்ணாவின் கையைப்
பிடித்துக் கொண்டுதான் செல்வாராம் எல்லாமே பெரிய அண்ணாதான் தனக்குச் செய்ய வேண்டும்
என்று அவருடனேயே இருப்பாராம். அப்படி வளர்த்த தன் தங்கையின் மகளான என்னிடமும் அதே பாசம்
என் மாமாவுக்கு.
எல்லோரிடமும் “ஏக மருமாள்” என்று என்னை அறிமுகப்படுத்தியவர் காலையில் எழுந்ததும் குளித்து சாப்பிடும் வரை கணக்கு, அதன் பின் அறிவியல். இன்டெர்வெல் எதுவும் கிடையாது. நாள் முழுக்க புத்தகம் என்று என்னை ட்ரில் வாங்கினார்.
சைக்கிளில் வைத்துக் கொண்டு. ஏற்றம் இறக்கம் எல்லா இடங்களிலும் என்னையும் வைத்துக் கொண்டு சைக்கிளைச் சமட்டுவார். இப்படி என்னை எங்கு சென்றாலும் அழைத்துச் சென்றதெல்லாம் அந்த நிமிடங்கள் கூட அனாவசியமாகச் செலவாக்காமல் என்னைத் தயார்படுத்த.
சைக்கிளில்
செல்லும் போதே வாய்ப்பாடு சொல்லச் சொல்லுவார். கூட்டல் கழித்தல், பெருக்கல் வகுத்தல்
எல்லாம் மனக்கணக்காகவே சொல்லிக் கொடுத்துக் கொண்டு கேள்விகள் கேட்டுக் கொண்டே வருவார்.
அறிவியல், பூகோளம், சரித்திரம், தமிழ், ஆங்கிலம் எல்லாம் இப்படியே எங்கு சென்றாலும். கூடவே வீட்டுச் சரித்திரமும்.
வீட்டிலும்
வெளியிலும், குளத்திலும், திண்ணையிலும் என் கண்களில் எண்களும், எழுத்துகளும் மட்டுமே
இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்தன. ஆனால் மண்டைக்குள் நுழையவில்லை! மாமாவிற்கு என் மீது
கோபம் வரும்.
கூடவே
பொது அறிவும் ஆங்கில போதனைகளும், நிறைய நல்லொழுக்கக் கதைகளும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக.
சிறிய சிறிய தமிழ், ஆங்கிலப் புத்தகங்களைக் கொண்டு வந்து வாசிக்கச் சொல்வார். தமிழ்,
ஆங்கிலச் செய்தித் தாள்களை வாசிக்க வைப்பார். ஆங்கிலத்தில் பேச வேண்டும். அப்போதுதான்
ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க முடியும் என்று. கூடவே தமிழ்ப்பாடமும் போதிக்கப்படும்.
அவருடைய
லட்சியம், வீட்டுப் பெண் குழந்தைகள் நன்றாகப் படித்து நல்ல அரசு வேலையில் தங்கள் கால்களில்
நிற்க வேண்டும். யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது.
பள்ளிப்
பாடத்துக்கும், மதிப்பெண்ணிற்கும் ஒவ்வாத புத்தகங்கள், கலைகள் தான் என் மனதில் இடம்
பிடித்தன. தேரேகால் வாய்க்கால் ஒரு புறமும்
மற்றொரு புறம் முழுவதும் வயல்களும், சற்று தூரத்தில் மலைகள் என்று காற்று சலசலக்க சைக்கிளில் சென்ற போது என்
கற்பனைதான் சிறகடித்தது. மூன்றாம் வகுப்பிலேயே கற்பனையா என்றால் ஆம்! பள்ளிப்பாடங்கள்
மனதில் பதிய மறுத்தன.
எப்படியோ
மாமா என்னை தன் பள்ளியில் சேர்த்துக் கொண்டு என் மண்டையில் மசாலாதான் இருக்கு என்பதைத்
தெரிந்து கொண்டு, நிறைய கேள்வித் தாள்களைக் கொடுத்து அவற்றை மட்டும் படிக்க வைத்து,
காலாண்டு அரையாண்டுத் தேர்வில் பாஸ் செய்ய வைத்து மூன்றாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வையும்
பிரம்மப்பிரயத்தனப்பட்டு என்னை பாஸ் செய்ய வைத்தார். எப்படி நான் பாஸானேன் என்பதெல்லாம்
அவருக்கே வெளிச்சம்!
4
ஆம் வகுப்பு கான்வென்டில் தொடங்கியது. மாமாவுக்குச் சந்தோஷம். அங்கு சேர்ந்தாலும் மீண்டும்
சனி ஞாயிறுகளில் சைக்கிளில் திருவண்பரிசாரத்திற்குக் கூட்டிச் சென்றுவிடுவார். பாடங்கள்
போதிக்கப்படும்.
ஆனால்
மாமா நினைத்தபடி 6 ஆம் வகுப்பில் என்னை ஆங்கிலவழிக் கல்வியில் சேர்க்க முடியவில்லை.
4 ஆம் வகுப்பிற்குப் பிறகு அப்பாவழி தாத்தாவுக்கு வள்ளியூரில் ஒரு கடையில் கணக்குப்
பிள்ளை வேலை கிடைக்க அங்கு குடிபெயர்ந்தோம். அங்கு 5 ஆம் வகுப்பு, ஆறாம் வகுப்பு.
அம்மாவுக்குத்
தன் பெரிய அண்ணாவின் குழந்தைகளும் சின்ன அண்ணாவின் குழந்தைகளும் படிப்பது போல் நானும்
தம்பியும் படிக்க வேண்டும் என்று எங்களை அழைத்துக் கொண்டு திருப்பதிசாரத்தில் தன் அம்மா
அண்ணாக்களுடன் வந்துவிட, என் அப்பாவும் இலங்கையிலிருந்து வர வேண்டிய கட்டாயம் வந்துவிட
திருவண்பரிசாரத்தில் இந்தப் பாட்டியின் கீழ் ஒரே கூரையின் கீழ் நாங்கள் அத்தனை பேரும்.
மீண்டும்
எனக்கு கான்வென்டில் 7 ஆம் வகுப்பு தமிழ்வழிக் கல்வி. அம்மாவுக்குக் குறை எல்லோரும்
ஆங்கிலவழிக் கல்வி ஆனால் நான் தமிழ்வழிக் கல்வி என்று.
எல்லோரும்
ரேங்க் வாங்குபவர்கள் என்னைத் தவிர. நான் கணக்கு அறிவியலில் பெரும்பாலும் முட்டி மோதி
ஃபெயில் ஆவேன். கடைசியில் ரொம்ப முட்டி மோதி பாஸாகி ஒவ்வொரு வகுப்பும் கடந்து 10 ஆம்
வகுப்பு பாஸானேன்.
மாமாவின்
இரண்டாவது பெண்ணும் நானும் ஒரே வயது என்பதால் இருவரையும் +2 வில் அறிவியல் க்ரூப்பில்
சேர்த்துவிட்டார். மாமா பெண் ஆங்கில வழிக் கல்வியில் வந்ததால் அவள் நன்றாகவும் படிப்பவள்
என்பதால் அவளுக்கு எளிதாக இருந்தது. ஆனால் நானோ அப்போதுதான் ஆங்கிலவழிக் கல்விக்கு
மாறியிருந்தேன்.
கண்ணில்
ஜூவலாஜியின் பூச்சிகள் பறந்தன. பாட்டனியில் தாவரங்கள் ஆடின. பௌதீகமும், வேதியியலும்
என் மூளையைக் குழப்பிக் கசக்கின.
தட்டித்
தடவி தடுமாறி 12 ஆம் வகுப்பு பாஸானேன். கல்லூரியில் என்னை அறிவியல் பிரிவில் சேர்க்க
ஆசைப்பட்டார் மாமா. ஆனால் எனக்கோ ஆசிரியை ஆகலாம் என்று இலக்கியம் அல்லது பொருளாதாரம்
சேரலாம் – இவை இரண்டும்தான் எனக்குக் கிடைக்கும் வேறு கிடைக்கும் வழியும் இல்லை. மாமாவுக்கு
நான் பொருளாதாரத்தில் சேர்ந்தது ரொம்ப வருத்தம்.
கோலம்
போடுவதிலும் கூட, டிசைன் டிசனாக என் கற்பனையில் போட்டுத் தள்ளுவேனே தவிர புள்ளிக் கோலங்களைத்
தொடமாட்டேன் என்றிருந்த நான் பொருளாதாரத்தில் துணைப்பாடம் புள்ளியியலில் டிசைன் கோலமா
போட முடியும்!!!? என்னைச் சிக்க வைத்தது. தடுமாறினேன்.
அப்போதே
“இதோ இந்த பேங்கு பரீட்சைக்கு கால்ஃபார் பண்ணிருக்கான், ஸ்டாஃப் செலக்ஷன் கூப்பிட்டுருக்கான்.
பாண்டியன் கிராம வங்கி கால்ஃபார் வந்திருக்கு. அப்ளை பண்ணணும்” என்று எங்களை ஒவ்வொரு
தேர்வுக்குமான புத்தகங்களை யாரிடமேனும் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்து தயார்படுத்தத்
தொடங்கினார் மாமா. புத்தகங்கள் வாங்கக் காசு செல்வழிக்க மாட்டார். நான் அதில் உள்ள
கேள்விகளைப் பயிற்சி செய்ய மிகவும் சிரமப்பட்டேன் என்றால் மிகையல்ல.
இங்கு
என் மாமாவின் மிகப் பெரிய நல்ல உள்ளத்தைச் சொல்லியே ஆக வேண்டும். தன் குழந்தைகள் தன்
தம்பி குழந்தைகள் தங்கை குழந்தைகள் எங்களை மட்டுமல்ல, ஊர்க் குழந்தைகளையும் தன் குழந்தைகளாகவே
நினைத்தவர். வங்கித் தேர்வுகள், ஸ்டாஃப் செலக்ஷன் தேர்வுகள் என்று ஒவ்வொரு தேர்வுக்கு
எங்களுக்குச் சொல்வது போலவே ஊரில் இருந்த மற்ற இளையவர்களையும் விண்ணப்பிக்க வைப்பார்.
ஊரே படித்து கல்வி அறிவுள்ள நல்ல கிராமமாக மாற வேண்டும் என்று உயரிய சிந்தனை உடையவர்.
ஜாதி,
மதம், ஏழை பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லாக் குழந்தைகளையும் படிக்க வேண்டும்.
நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்று ஊக்கம் அளித்தவர். படிப்பு படிப்பு. படித்தவர்கள்
என்றால் கைகூப்பி வணங்கி வரவேற்கும் அளவிற்குக் கல்வியின் மீது வெறி. கல்விதான் சோறு
போடும் என்ற சித்தாந்தம். ஊர்க்குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தவர்.
திண்ணையில்
படுக்கும் ஊர் பசங்களும் காலை 6 மணிக்கு மேல் தூங்கக் கூடாது. ஒவ்வொரு வீட்டுச் திண்ணையிலும்
எல்லோரையும் எழுப்பிக் கொண்டே செல்வார்.
திண்ணையில்
சீட்டு விளையாடக் கூடாது, புகைபிடிக்கக் கூடாது. விரட்டி விடுவார். சுறு சுறுப்பாக
ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய வேண்டும் எல்லோரும். நேரத்தை வீணாக்கினால் பிடிக்காது.
தினமும்
செய்தித்தாள் வாசிக்க வேண்டும். அதில் வரும் வார்த்தைகளைக் குறித்துக் கொண்டு அகராதி
பார்த்து பொருளுடன் வாக்கியம் அமைக்க வேண்டும். அதில் வேலைக்கான விண்ணப்பங்கள் வந்திருந்தால்
அதை ஊர் முழுக்கத் தெரிவிப்பார். 12 ஆம் வகுப்பு முடித்தவர்களை எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சில்
பதியச் சொல்வார், டிகிரி முடித்தவர்களை அப்டேட் செய்யச் சொல்லுவார்.
செல்லமணி
சார் (ஸ்ரீநிவாசன்) வருகிறார் என்றாலே மரியாதையும், பயமும் இருக்கும். எப்படி அவர்
அம்மா – என் பாட்டி ஊரை ஆண்டார்களோ அப்படி.
அப்படியானவரின்
பெண்கள் தேர்வாகி நல்ல வேலையில் சேர்ந்திட, தங்கையின் பெண், தன் ஏக மருமாள் நல்ல நிலைக்கு
வர வேண்டும் என்று நினைத்த வேளையில் எந்த வேலைக்கானத் தேர்விலும் பாஸாகாமல் இருந்தால்
என் மீது வருத்தமும் கோவமும் வரத்தானே செய்யும்!
வீட்டில் அடம்பிடித்து, உருண்டு பிறண்டு அழுது, நான் எம் ஏ படித்தேன். அப்போதும் நான் வேலைக்கானத் தேர்வுகளில் பாஸாகவில்லை, காரணம் கணக்கும், குழப்பி அடிக்கும் சமயோஜித, ரீஸனிங்க் கேள்விகளும். சரி திருமணத்திற்குப் பார்க்கலாம் என்று பார்க்கத் தொடங்கினார்கள். வேலை இல்லாத எனக்கு வரதட்சணை நிறைய கேட்பார்களே என்ற கலக்கம் மாமாவிற்கு.
என் மாமா என் சிறு வயதில் விதைத்ததுதானே என் மனதில் ஆழமாக இருக்கும். “பெண்கள் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது தன் காலில் நிற்க வேண்டும்” என்பது. வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் அதன் பின் தான் திருமணம் என்றிருக்க வீட்டில் பனிப்போர். என் மாமாவுக்கும் அம்மாவுக்கும் டென்ஷன் ஏறியது.
கடைசியில்
ஸ்டாஃப் செலக்ஷனில் வேலை கிடைக்கவும், என் மாமாவிற்கு அத்தனை மகிழ்ச்சி. அதே நேரத்தில்
திருமணம் நிச்சயம் ஆகவும் அதுவும் மாப்பிள்ளை நிறைய படித்திருக்கிறார் அறிவு ஜீவி என்பது
என் மாமாவின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. மாப்பிள்ளையின் மீது அபார மரியாதை பெரிய படிப்பு
என்று.
நல்ல
படிப்பு, நல்ல அரசு வேலை, பெரிய பொஸிஷன் இதுதான் மாமாவின் விருப்பங்கள். தன்னைச் சுற்றியிருந்தவர்கள்
எல்லோரும் நன்றாகப் படிக்க வேண்டும், நன்றாக இருக்க வேண்டும்.
ஆனால்
கடைசியில் நான் மத்திய அரசு வேலையில் சேரவில்லை என்றானதும் மாமாவுக்கு மிகப் பெரிய
ஏமாற்றம். என்னிடம் வருத்தம். என்னைப் பார்க்கும் போதெல்லாம் சொல்லிக் காட்டிக்கொண்டே இருந்தார்.
அதன்
பின் என் வாழ்க்கை உருண்டோடியது மேடு பள்ளங்களில் முட்டி மோதிச் சிதறிச் சென்றது. மாமாவுக்குத்
தெரிய வந்த போது மிகவும் வருத்தப்பட்டார். அவரது குடும்பத்திலும் ஏற்பட்ட சோதனைகள்
அவரை வாட்டியது. எல்லாம் ஒவ்வொன்றாகக் கடந்து மீண்டும் சென்னையில் நானும், மாமா குடும்பமும்
வந்த பிறகு அவ்வப்போது அவரைப் பார்த்துவிட்டு வருவேன். என் மாமா பெண்களும் மகனும்,
மாமாவின் பேத்தியும் (என் தோழி) கூட என்னோடு நெருக்கம். அன்பைப் பொழிபவர்கள்.
என்
மாமாக்கள் மூவருமே என் அம்மாவிடமும் என்னிடமும் காட்டிய பாசத்திற்கு நிகராக மாமாக்களின்
மனைவிகளுமே என் அம்மாவிடமும் மிகவும் ஒட்டுதலோடு இருப்பார்கள். என் அம்மாவும் அவர்களிடம்
அத்தனை அந்நியோன்யமாக இருந்தவர்.
இதில்
ஆச்சரியம் என்னவென்றால், என் மாமிகள் என்னோடும் மிகவும் நெருக்காமனாவர்களாக இப்போதும்
இருக்கிறார்கள் என்பது இறைவனின் ஆசிர்வாதம்.
சென்னையில்
இருந்தவரை மாமாவின் வீட்டுக்குச் சென்ற போதெல்லாம், நான் கஷ்டப்படுகிறேன் என்று எனக்குப்
பணம் வைத்துக் கொடுப்பதை நான் தீர மறுத்தாலும், “என் தங்கை இருந்தா கார்த்திகை, தீபாவளி,
பொங்கல்னு கொடுக்க மாட்டேனா அது போல என் ஏக மருமாள் உனக்கு. என் ஆசிர்வாதம்” என்று
கொடுப்பார். நான் சண்டை போட்டுக் கொண்டு, இனி வர மாட்டேன் என்று சொல்லிப் போகாமல் இருந்திருக்கிறேன்.
உடனே,
நான் ஏன் வரவில்லை என்று அவர் மகள், மகன், பேத்தி மூலம் ஃபோனில் செய்தி வரும். அல்லது
போஸ்ட் கார்டு வந்துவிடும். எனக்கு அடிக்கடி லெட்டர்கள் வந்துகொண்டே இருக்கும். எதுவும் தரமாட்டேன் என்று எனக்குப் பிராமிஸ் பண்ணினால்
வருவேன் என்று நானும் கண்டிஷன் போட்டதுண்டு.
பெங்களூர்
வந்த பிறகும் கூட, அவருக்கு வெளியில் சென்று வரும் அளவு தெம்பு இருந்த போது எனக்கு
மணி ஆர்டர் அனுபியிருந்திருக்கிறார். ஆனால் தவறுதலான முகவரி கொடுத்ததில் எனக்கு வரவில்லை.
அவரது மகன் மூலம் எனக்குச் சொல்லி வந்ததா என்று கேட்டிட, இல்லை என்றதும், நல்ல காலம்
பணம் அவர்களுக்குத் திரும்பக் கிடைத்துவிட்டது.
தன்
மகன் மூலம் வங்கிக் கணக்கைக் கேட்டிட, நான் கொடுக்காமல் ப்ளீஸ் என்று சொல்லி மறுத்துவிட்டேன்.
அதுதான் கடைசி அதன் பின் அவரால் வெளியில் செல்ல இயலவில்லை கொரோனா காலமும் தொடங்கியிருந்தது.
சென்ற வருடம்
செப்டம்பரில் அவரது 90 வது பிறந்த நாளை வீட்டு மட்டோடு கொண்டாடலாம் என்று அவர் மகன்
அழைப்பு விடுத்த போது நாங்கள் சென்று கலந்து கொண்ட போது, எல்லோரும், “மாமாவின்
செல்லமான ஏக மருமாள் நீதான் அவர் கை பிடிச்சு கேக் வெட்ட வேண்டும்” என்று சொல்லிட என்
மகிழ்ச்சியைச் சொல்லிட எனக்கு வார்த்தைகள் இல்லை.
நான் மாமாவின் கை பிடித்து கேக் கட் செய்கிறார்
மாமாவின்
கை பிடித்து அவரைக் கேக் வெட்ட வைத்துக் கொண்டாடிய அந்த அன்பான இனிய தருணங்கள் என்
வாழ்வின் பொக்கிஷம்.
மாமா
பேத்தி (என் தோழி) அவரைப் பார்க்கப் போகும் போது எனக்கு வீடியோ கால் செய்யச் சொல்லியிருந்தேன்
என்பதால் அப்படி ஒன்றறை மாதங்கள் முன் பார்த்துப் பேசினேன். அவருக்கும் செவி கேட்காது
ஆனால் அவர் பேசுவார் நான் சைகையில் பதில் சொல்லிட…. அதன் முன்னும் ஓரிருமுறைகள் அப்படிப்
பார்த்து பேசியதுண்டு.
இந்த வருடம் சுதந்திர தினத்தன்று தன் வீட்டு பால்கனியில் கொடி ஏற்றி சல்யூட் செய்கிறார்! 91 முடியும் தருணத்தில்
மாமாவுக்கு நினைவு மிக நன்றாகவே இருந்தாலும் உடம்பு படுத்தியது. மருத்துவமனையில் சேர்த்த போது மாமா மகனிடம்
“ஏண்டா
என்னிடம் சொல்லலை” என்ற போது, “சொன்னால் நீ அலைவ இங்க கொட்டற மழைல நீ ரிஸ்க் எடுத்து
வந்து உன்னை சிரமப்படுத்திப்பன்னு தெரியும் அதான் சொல்லலை” என்றதும் என் மனதில் நெகிழ்ச்சி
ஒரு புறம் வருத்தம் மறுபுறம்.
என்
அம்மாவைத் தன் தோளில் சுமந்த, அதன் பின் என்னைச் சுமந்த, அதன் பின் தன் பேத்தியைச்
சுமந்து என்னை எப்படித் தாங்கினாரோ அப்படித் தன் தோளிலும் மனதிலும் தாங்கிப் பிடித்த
அவர் பேத்தி, நேற்று (22-11-2023) காலையில் 10 மணி அளவில் அழைத்து, “தாத்தா போயிட்டா”
என்றதும் அதிர்ச்சி. வயது 91 முடிந்து 92ல் பயணத்தைத் தொடங்கிய மாமா இப்போது இறைவனிடம் சேர பயணம்.
என்
மாமாவின் மகன் அவரைக் கவனித்துக் கொண்ட விதத்தை இங்குச் சொல்லியே ஆக வேண்டும். அவருக்கு
ஷேவ் செய்து, தலைமுடி வெட்டி, சில சமயம் வயிற்றுப் போக்கின் போது கழுவி துடைத்து, எத்தனை
முறை வேட்டியில் ஆனாலும் அலுக்காமல் அவற்றைத் துவைத்து என்று அவரைக் குழந்தை போன்று
கவனித்துக் கொண்டான். அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அவன் மனைவி – மாமாவின் மருமகள்,
மாமாவின் பேரன், மகள்கள், பேத்தி என்று அனைவருக்கும் இறைவன் கண்டிப்பாகக் கூடவே இருப்பார்.
ஒருவர்
கூட முகம் சுளித்தோ, குறைப்பட்டுக் கொண்டதோ இல்லை. மாமாவின் நல்ல உள்ளம் அதற்கு ஏற்ப
குழந்தைகளும் என்று Blessed! இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இன்னும் ஆசிர்வதிக்கப்பட
வேண்டும்!
கடந்த
சில நாட்களாகவே மாமா மருத்துவமனையில் இருந்த போது எங்கள் ஊர் இறைவனான திருவாழ்மார்பனையும், தன்
அம்மாவின் பெயரைச் சொல்லியும் அழைத்து ‘என்னை அழைத்துக் கொண்டு போ, போதும் வலி தாங்கலை”
என்று அரற்றிக் கொண்டிருந்தவர், முந்தைய நாள் இரவு, மருத்துவமனையில் பேத்தியிடம் தண்ணீர்
கேட்டு அவள் கையால் தண்ணீர்க் குடித்தவரிடம், “தாத்தா நீங்க நன்னாயிட்டேள் நாளைக்கு
நாம ஆத்துக்குப் போயிடலாமா” என்றதற்கு, “நான் வரமாட்டேன். போதும் என்னால் வலி பொறுக்க
முடியலை,” என்றவர், சொன்ன சொல்லை மறுநாள் நிறைவேற்றியிருந்தார்.
ஊருக்கே
நல்ல ஆசிரியராக, தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்ற, ஊருக்கு நல்லது செய்து
அத்தனை பேருடைய மனதிலும் அவர்கள் வீட்டவர் போல நிறைந்திருந்த எங்கள் வீட்டைத் தாங்கிப்
பிடித்த எங்கள் வீட்டின் பிதாமகர் இதோ இறைவனை நோக்கிப் பயணப்பட்டுவிட்டார்.
நேற்று
மாலையிலேயே காரியங்கள் என்பதால் என்னால் உடனே செல்ல முடியவில்லை. மாமா பெண்ணிடம் மாமாவை வீட்டிற்குக் கொண்டு வந்ததும்
எனக்குக் கண்டிப்பாகக் காட்டு என்றிட அவளும் எனக்குக் காட்டிட துக்கம் நெஞ்சை அடைத்திட
அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் நான் அதிலிருந்து மீளவில்லை.
எங்கள்
வீட்டுப் பிதாமகரே நீங்கள் இறைவனடி சென்ற பிறகும், எங்களை, “இன்னிக்கு நியூஸ் வாசிச்சியா,
பாத்தியா, என்னென்ன சாதனைகள் பாத்தியா, சந்திராயன் நியூஸ் பாத்தியா, புது வார்த்தைகளை
நோட் பண்ணிண்டியா, அறிவுரை வாசிச்சியா கட் பண்ணி வைச்சுக்கோ” என்று துரத்துவீர்களா!
துரத்துங்கள்! அதைத்தான் அந்தக் குரலைத்தான் கேட்க விரும்புகிறோம்! எங்களை வழி நடத்துங்கள்!
.-----கீதா
நெகிழ்ச்சியான பதிவு..
பதிலளிநீக்குபெரியவரது ஆன்மா இறை நிழலில் கலந்திருக்கட்டும்..
நமஸ்காரங்கள்..
ஆம் அவரது ஆன்மா இறை நிழலில் அமைதியாக இருக்கட்டும்
நீக்குகீதா
மிகவும் வருந்துகிறேன் கீதா... நெகிழ்ச்சியான பதிவு. இந்த மாதிரி ஒரு மனிதரை இழந்து வாயும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் ஆறுதல்கள். அதற்கான தைரியத்தை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் கொடுக்கவும் , மாமாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஇந்த மாதிரி ஒரு மாமா அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். மொத்த குடும்பமும் அமைதியான, மிகவும் அன்பான குடும்பம் என்று தெரிகிறது. அவரை இழந்து வாடுபவர்கள் எப்படி உணர்வார்கள் என்றும் அறிய முடிகிறது. இறைவன் அவரது வலியைப் போக்கி தன்னுடன் சேர்த்துக் கொண்டான். மாறுதல்கள்.
பதிலளிநீக்குசிறு வயதிலிருந்து கூடவே, எனக்குத் திருமணம் ஆகும் வரை அதன் பின்னும் தொடர்ந்து தொடர்பில். சென்னைக்கு வந்த பிறகு அடிக்கடி சந்திப்பு...மரணம் என்றேனும் நிகழத்தான் செய்யும் வயதும் ஆனாலும் கூட ரொம்ப அவஸ்தைப்படாமல் போனதும் கூட ஒரு விதத்தில் இறைவன் சித்தம்.
நீக்குகீதா
அடுக்கடுக்காக எழும் அவர் பற்றிய நினைவுகள் அவர் மீது நீங்களும் எவ்வளவு அன்பு வைத்திருந்தீர்கள் என்பதைக் காட்டுகிறது. அவரும் எபப்டிப்பட்ட மாமனிதர் என்பதையும் காட்டுகிறது. அவர் அருவமாய் அருகில் நின்று உங்களை எல்லாம் வழி அண்டத்துவார்.
பதிலளிநீக்குஆம் ஸ்ரீராம் ரொம்பவே. ஊரிலும் அவர் அப்படித்தான் ஸ்ரீராம்.
நீக்குகீதா
நாகர்கோயில் பழக்கம் மகளை விட மருமகளை சீராட்டுவது. அவ்வகையில் உங்கள் மாமா சிறப்பாக சீராட்டியிருக்கிறார். கொடுத்து வைத்தவர். அவருடைய இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குஇது போன்ற தருணங்களில் எழுதுவது கோர்வையாக அமைவது கடினம். எண்ணங்கள் முட்டிமோதி வெளிவரும்போது ஒழுக்கு நஷ்டப்படும். ஆனால் பதிவு சீரான நடையில் செல்கிறது.
மாமாவின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.
Jayakumar
நாகர்கோவில் பழக்கமாகக் கூட இருக்கலாம். ஆமாம்...நான் அவருக்குச் செல்லம்.
நீக்குஅண்ணா, இது ஏற்கனவே மாமா இருந்த போதே கதையாக எழுதத் தொடங்கி, அவரது 90 வது பிறந்த நாள் வரை எழுதி வைத்திருந்தேன். ஆரம்பத்தைப் பரர்த்தாலே புரிந்திருக்கும் உங்களுக்கு. இடையில் உரையாடல்கள் பல பகுதிகளைக் கட் செய்து விட்டு இப்போது நிகழ்வைச் சேர்த்து பதிவை முடித்துவிட்டேன்...
கீதா
முழுமையாகப் படிக்க பிறகு வருகிறேன். நெகிழ்வான பதிவு. இதை அவர் இருக்கும்போதே எழுதியிருக்கலாம். நான் படத்தைப் பார்த்துவிட்டு அப்பா பற்றிய பதிவோ என நினைத்தேன். பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குஅவர் இருக்கும் போதே கதையாக எழுதத் தொடங்கியதுதான்....ஆரம்ப வரிகள் முன்னரே எழுதியிருந்தேன். ஆரம்பம் பார்த்தா கதை எழுதத் தொடங்கியது புரியும்.....போன வருடம் 90 வயது முடியும் போது அதைச் சேர்த்திருந்தேன்...கதையாகவே நேர்மறையாக முடிக்க நினைத்து அவரிடம் காட்ட நினைத்திருந்தேண்....அதன் பின் அப்படியே இருக்க, இப்போது இப்படி ஆனதும் இடையில் உள்ளவற்றை கட் செய்துவிட்டு இதை மட்டும் சேர்த்து போட்டுவிட்டேன்.
நீக்குகீதா
மிக அருமையாக எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை.
பதிலளிநீக்குஇந்த மாதரி உறவுகள், அந்நியோன்யம், கிராமத்தில் எல்லோரும் நல்லா வரணும் என நினைக்கும் ஆசிரியர், சைக்கிளில் மருமளுடன் பயணித்து அவள் வாழ்வு முன்னேற உழைக்கும் செயல், கிராமத்துச் சூழ்நிலை.... எல்லாவற்றையும் நன்றாகச் சொல்லியிருக்கீங்க.
இந்தக் காலங்களை நாம் இழந்தது இழந்ததுதான்.
இனி வரும் தலைமுறைக்கு இப்படிப்பட்ட காலங்கள் இருந்தது என்பதே தெரியாது.
உண்மைதான். கிராமத்து வாழ்க்கை தனிதான். ஆனால் இப்போதைய வாழ்க்கைச் சூழல் படிப்பு, சம்பாத்தியம்...கிராமத்திலும் கூட பள்ளிப் படிப்பு ஃபீஸ் அதிகமாக இருக்கிறதே.
நீக்குகீதா
நம் கடைமையைச் சிறிதும் வழுவாமல் செய்த ஆத்மா. அதனுடைய கர்மபலனைக் கழிக்க கடைசி நேரங்களில் சரீர உபாதை.. பிறகு திரும்பிவர்போவதில்லை என்னும்படியான திருநாடு. அவரது நல்ல குணங்களையும் சேவைகளையும் பண்புகளையும் சிலாகித்து மகிழும் உறவினர்கள்... வேறு என்ன வேண்டும் ஒரு ஆத்மாவிற்கு.
பதிலளிநீக்குஅவர் பேரன் பேத்தி எல்லாரும் செட்டில் ஆகும் வரை எல்லாம் பார்த்து மகிழ்ந்தவர்தான்...அவஸ்தைப்படாமல் போய்விட்டார். எல்லோர் மனதிலும் ஊரார் மனதிலும் இருப்பவர்.
நீக்குகீதா
இருக்கும்போதே இந்த மாதிரி ஒரு கட்டுரை எழுதி அவருக்குப் படிக்கக் கொடுத்திருந்தால் அவர் மனம் சந்தோஷப்பட்டிருக்கும் என்று தோன்றியது.
பதிலளிநீக்குஇறைவன் எல்லோரையும் அறிவாளியாகப் படைப்பதில்லை. இவரவர்களுக்கு இவ்வளவுதான் சரஸ்வதி கடாட்சம் என எழுதி வைத்துவிடுகிறான். அதைப்போல பணத்தையும். அதை யார் கேள்வி கேட்க இயலும்?
போன காலங்கள் போயின காலங்கள்தாம்.
கீதா மாமா அவர்களுக்கு என் வணக்கங்கள். அஞ்சலிகள்.
பதிலளிநீக்குஎன் மாமாவின் நினைவு எனக்கு வந்து விட்டது.
உங்கள் மாமாவின் அன்பு அதை நீங்கள் பதிவு செய்த விதம் எல்லாம் நெகிழ்வு.
அந்தக்கால மனிதர்கள்அன்பை கொட்டி கொடுப்பதில் கணக்கே பார்க்க மாட்டார்கள்.
சைக்கிளில் போகும் போது பேசிகொண்டு போனது , நல்லவைகளை எடுத்து சொல்லி வழி நடத்தியது எல்லாம் மனதை விட்டு நீங்காது.
//ஏக மருமாள்”//
என்று பெருமையுடன் அனைவருக்கும் அறிமுகபடுத்தியதில் எவ்வளவு வாஞ்சை, எவ்வளவு அன்பு! தன் ஊர் குழந்தைகளும் நல்ல நிலைக்கு உயரவேண்டும் என்று நினைப்பு நல் ஆசிரியர் குணம். நல்ல ஆத்மாவின் பிரிவு மனதுக்கு சங்கடம் தான்.
வலியில், வேதனையிலிருந்து இறைவன் அவருக்கு விடுதலை அளித்து விட்டார்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இறைவன் ஆறுதலை அருள வேண்டும்.
இருக்கும் போது எல்லோரும் நல்லபடியாக பார்த்து கொண்டது அவர் செய்த புண்ணியம்.
ஆமாம் அக்கா கடைசி வரை ஏக மருமாள் என்றுதான் சொல்லி வந்தார். அந்த நாளைய மனிதர்கள் இப்படித்தான்.
நீக்குஅவரது குழந்தைகளுக்கு இறைவன் துணை இருப்பார். அப்படிப் பார்த்துக் கொண்டார்கள், கோமதிக்கா
கீதா
//ஊருக்கே நல்ல ஆசிரியராக, தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்ற, ஊருக்கு நல்லது செய்து அத்தனை பேருடைய மனதிலும் அவர்கள் வீட்டவர் போல நிறைந்திருந்த எங்கள் வீட்டைத் தாங்கிப் பிடித்த எங்கள் வீட்டின் பிதாமகர் இதோ இறைவனை நோக்கிப் பயணப்பட்டுவிட்டார்.//
பதிலளிநீக்குமாமா அவர்கள் என்றும் எப்போதும் வழி காட்டி கொண்டு இருப்பார்கள் கீதா .
ஆமாம் கோமதிக்கா..அவர் வழி காட்டுவார்.
நீக்குகீதா
அவருடன் வாழ்ந்த காலங்கள் என்றும் மனதில் நிற்கும்.
பதிலளிநீக்குஇறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறட்டும்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
கண்டிப்பாக கில்லர்ஜி, அவருடனான தருணங்கள் ஒவ்வொன்றும் நினைவில் இருக்கும்.
நீக்குகீதா
இப்படியான நல்லவரை இழந்து வாடுகின்ற தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல்கள். இதனைத் தாங்கிக் கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கவும் , அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் வேண்டிக் கொள்கின்றேன்..
பதிலளிநீக்குஎல்லோருக்கும் இறைவன் துணை நின்று கடந்து வர ஆசிர்வதிப்பார், துரை அண்ணா,
நீக்குகீதா
எங்கள் வருத்தத்தில் பங்கு கொண்ட ஆறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குகீதா
அஞ்சலிகள்...
பதிலளிநீக்குநெகிழ்ச்சி....... உங்கள் மாமாவின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாரட்டும்...... அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல்கள்.....
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ்
புது தில்லி.