செவ்வாய், 7 நவம்பர், 2023

ஒன்று கூடல் நிகழ்வும், ஈஷா பயணமும் பகுதி – 2


மகிழ்ச்சி என்பது இயற்கை, ஆனால் துக்கம் என்பது செயற்கை அதாவது துக்கம் என்பது நாமாக உருவாக்கிக் கொள்வது - இது சத்குருவின் வாக்கு. அதனால்தான் இறைவனை துதித்துப் பாடி ஆடி ஆனந்தம் கொள்வது ஈஷா மையத்தில் நித்ய நிகழ்வாகிறது. - 1

“சிவ சிவ என்றிடத் தீவினை மாளும். சிவ சிவ என்றிட என்னச் சிவகதி தானே” எனும் சான்றோர் வாக்கும் அதுதானே. பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவன் திருவடி சேர்வதுதானே சைவ நெறி. அதைப் பின்பற்றும் சத்குருவின் ஈஷா மையத்தில் தூரத்திலிருந்து நம்மை அதிசயம் கொள்ள வைக்கும் பிறை சூடிய சிவரூபம் வரவேற்கிறது. - 2


சத்குரு சிவனை ஆதியோகியாகக் காண்கிறார். ஆதியோகியே யோகத்தின் மூலம். 15000 வருடங்களுக்கு முன்னே, மதங்கள் தோன்றுவதற்கு முன்பே முதல் யோகியான ஆதியொகி, யோக அறிவியலை தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு வழங்கினார். 112 அடி உயரமுள்ள இந்த ஒளி பொருந்திய திருமுகம், ஒருவர் நல்வாழ்வு வாழ்ந்து முக்தியடைய ஆதியோகி நமக்கு அருளிய 112 வழிகளைக் குறிக்கிறது. – 3

மட்டுமின்றி அங்கிருந்து மாட்டு வண்டியிலோ நடந்தோ மலை அடிவாரத்திற்குச் சென்றால் அங்கு நாம் கண்டு வணங்கி அருள் பெற வேண்டியவைகள், தியானலிங்கம், திரிமூர்த்தி சிற்பங்கள், நந்தி, நாகசந்நிதி, சூரிய குண்டம், சந்திர குண்டம் மற்றும் லிங்கபைரவி. – 4

இத்துடன் தியானலிங்கத்தில் அமையப்பெற்றுள்ள பெண் தெய்வமான வனஸ்ரீ, உண்மையிலேயே ஒரு அரசமரத்தின் சிற்பமே. அதன் மத்தியில் உள்ள தங்க இலை வளத்தையும் செழிப்பையும் குறிக்கிறது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இதன் தெய்வீகச் சூழலில் தியானம் செய்வது சிறப்பான பலன் தரும் என்று நம்பப்படுகிறது. – 5

திரிமூர்த்திகளான ருத்ரனும் ஹரனும் சதாசிவனும் வருவோர்களுக்கு அருள் புரிகிறார்கள். இங்கு மும்மூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு, சிவ சங்கல்பத்தில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. வைணவம் கலந்திடாத சைவ நெறியைப் பின்பற்றும் சத்குருவின் சங்கல்பத்தில், சிவ சக்தி திரிமூர்த்திகளாகச் சங்கல்பிக்கப்படுகிறது. உண்மையிலேயே எல்லா மதங்களிலும் உட்பிரிவுகள் உள்ளன. கிறித்தவர்களில் காத்தோலிக்க மற்றும் ப்ராட்டஸ்டான்ட் போல முஸ்லிம்களிலும் சுன்னிகள், ஷியாக்கள். இவை எல்லாம் அம்மதங்கள் தோன்றிய பின் பிரிந்தவை. அம்மதங்களின் மூலம் ஒன்றே. – 6

ஆனால் இந்துமதம் என்பது சைவ, வைணவக் கலவை. இவற்றின் மூலங்கள் வேறு. எனவே ஒட்டுதல் முறையில்தான் ஒன்று சேர்க்க முடியும். சைவம் கலந்த வைணவம் தான் இப்போதைய இந்து மதம். கேரளத்தில் இப்போதெல்லாம் சைவம் மறைந்தே போன ஒன்றாகிவிட்டது. குளியும் தேவாரமுமாக வாழ்ந்த மலையாளிகளுக்குத் தேவாரம் என்பது ஏதோ சந்தனம் அறைக்கும் கல் அல்லது கிண்டி என்றே ஊகிக்கும் நிலை. தேவாரமும் திருவாசகமும் சைவ மதம் விட்டு வைணவ மதத்துக்கு மாறிய மார்த்தாண்டவர்மன் 18 ஆம் நூற்றாண்டில்  தீக்கிரையாக்கியேவிட்டார். – 7

ஆனால், இந்நிலை கர்நாடகத்தில் இல்லை.  வைணவ மதத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட லிங்காயத்துகள் அவர்களை ஒரு ஜாதியாக மட்டுமல்ல ஒரு மதமாகவே மாற்ற வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் தாக்கம் ஒரு வேளை சத்குருவிற்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. – 8

எப்படியோ வைணவ மத ஆதிக்கம் அதிகமில்லாமல் ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தி இருக்கும் சத்குரு ஒரு விதத்தில் சைவத்தையும் சித்தர்களின் வழிபாட்டு முறைகளையும் புதிய காலத்திற்கு ஏற்ப மாற்றி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இளைஞர்களும் இளம் பெண்களும் இனம், மொழி, சாதி பாராது தியானத்திலும், காண வருவோருக்கு வழிகாட்டியும் இறையுணர்வை பேணுவது மனதுக்கு இதமளித்தது. – 9

தியானலிங்க தரிசனம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உண்டு. நாத ஆராதனை காலை 11.50 முதல் 12.10 மற்றும் மாலை 5.50 முதல் 6.10 வரையும் நடை பெறுகிறது. – 10

லிங்க பைரவி தரிசனம் காலை 6.30 முதல் மதியம் 1.20 வரையும், மாலை 4.20 முதல் இரவு 8.20 வரையும். அபிஷேகம் காலை 7.40க்கும் நண்பகல் 12.40க்கும். – 11

இலவச யோகா வகுப்புகள் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை என்று காலை 9.30 முதல் மாலை 4.00 மணி வரை நடை பெறுகிறது. - 12.

ஆதியோகி திவ்ய தரிசனம் இரவு 7 மணிக்கு. அந்த ஒலி ஒளி நிகழ்ச்சிதான் சுற்றுலா பயணிகளின் மனம் கவரும் ஒர் இடமாக ஈஷா மையத்தை மாற்றி இருக்கிறது. – 13

சூர்ய குண்டம் (ஆண்களுக்கு) சந்திர குண்டம் (பெண்களுக்கு) காலை 8.30 முதல் இரவு 8 மணி வரை. சூரிய குண்டம் மூன்று லிங்கங்களால் சக்தியூட்டப்பட்ட புனிதமிக்க நீர் நிலை. இதில் குளித்து தியான லிங்கத்தின் சக்தியை உள்வாங்க முடியும் என்று சொல்லப்படுகிறது. சந்திர குண்டம் இதே போல் பெண்களுக்கானது. – 14


எல்லா சிவராத்திரி நாட்களிலும் பஞ்சபூதகிரியா நடைபெறுகிறது. பஞ்சபூதங்கள் நம் உடலில் எப்படி செயல்படுகிறது என்பதைப் பொருத்துதான் உடல் நலமும், நலக்கேடும், மகிழ்ச்சியும், துயரமும், அமைதியும் குழப்பமும் ஏற்படுவதாக சத்குரு சொல்கிறார். எனவே பஞ்சபூதங்களோடு ஒன்றி இருந்து சக்தியை உணர வேண்டும் என்கிறார் சத்குரு. – 15

மட்டுமல்ல, ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தி மூலத்தைத் தன்னுள் உள்வாங்கிக் கொள்ள ஆதியோகியை வலம் வர வேண்டும் என்கிறார் சத்குரு. – 16

ஆதியோகியின் முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு வேப்பிலை மற்றும் நீர் அற்பணித்து அதன் சக்தியைப் பெறலாம். அதற்கு அங்கு கூட்டத்தைக் குறைக்கவும், தேவையில்லாதவர்கள் செய்யாமல் இருப்பதற்கும் ரூ 20 வசூலிக்கப்படுகிறது. அத்துடன் பௌர்ணமி தினங்களில் 10.30 முதல் 12 மணி வரை தரிசிக்கலாம். அமாவாசை தினங்களில் ஈஷா மையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக வந்து யோகேஸ்வர லிங்கத்துக்கு அற்பணிப்புகளை வழங்குவதுடன் கிராமிய இசை மற்றும் நடன அரங்கேறங்கள் நிகழ்த்துகிறார்கள். – 16

பக்தர்கள் ஆதியோகியை சுற்றியுள்ள திரிசூலத்திற்குக் கருப்புத் துணி கட்டி வேண்டிக் கொள்ளவும் செய்கிறார்கள். – 17

மாட்டுவண்டிகள் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாமல் இருக்க உதவுவதுடன் நந்திதேவன் பக்தர்களுக்கு உதவுவதையும் உணர்த்துகிறது. - 18

நந்தி, சூரிய குண்டம், நாக சந்நதி, லிங்க பைரவி, திரிமூர்த்தி சிற்பங்கள் மற்றும் தியானலிங்கத்தை தரிசனம் செய்து முடித்து வெளியே வந்தோம். ஆதியோகி ஒலி ஒளி காட்சி காண வேண்டிய ஒன்று. அது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். – 19

மட்டுமல்ல சத்குருவின் திரிமூர்த்தி சங்கல்பத்தின் வழியாக மனதின் மூன்று நிலைகளை உணர்த்துவதுடன் சிக்மன்ட் ஃப்ராய்டின் இட், ஈகோ, சூப்பர் ஈகோ எனும் Psycho analytic theory யுடன் அதை இணைப்பதால், வெளிநாட்டவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எளிதாக அதை உட்கொள்ளவும், தியானத்தின் மூலம் நம்முள் உறையும் இறைவனை உணரும் முறையும், அதன் மூலம் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்பதை எளிதாகப் புரிய வைக்கிறார் சத்குரு. - 20

2018ல் வெளியிட்ட, ‘காலம் செய்த கோலமடி’ எனும் என் நாவலில், நாவலை நிகழ்காலத்துடன் இணைக்க எனக்கு உதவிய தென் அமெரிக்கர்களான அட்ரியானாவும் லியான்ட்ரோவும் போல் பேருதவியாய் இருந்த 24-02-2017 அன்று பாரத பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட 112 அடி ஆதியோகி சிலையை நன்றியுடனும் அதிசயத்துடனும் பார்த்து கண்களை மூடிப் பிரார்த்தித்த பின் மனைவி மகனுடன் காரில் நிலம்பூர் நோக்கி இரவு 8 மணிக்குப் பயணமானேன். – 21.

பதிவை வாசிப்பவர்கள், கருத்திடுபவர்கள் அனைவருக்கும் நன்றி. 

நேரமிருந்தால் காணொளியைப் பாருங்கள். 11 நி 46 நொ. இதில், அங்கு எடுத்த காணொளிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

 

-----துளசிதரன்

 

 

 

25 கருத்துகள்:

  1. ஆதியோகியின் வரலாறும், படங்களும் காணொளியும் நன்றாக இருக்கிறது. பல வருடங்கள் முன்பு புதிதாக ஈசா தியனலிங்கம் மட்டும் இருந்த போது பார்த்து இருக்கிறோம். லிங்க பைரவி, மற்றும் ஆதியோகி வந்தபின் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதியோகி - இது என்னை ஈர்த்தது. தியானலிங்கம் பற்றி அறிந்த போது செல்லும் வாய்ப்பு அமையவில்லை. இதுதான் முதன் முறை நான் சென்று பார்த்தது. இப்போது சுற்றுலா மையம் போன்று எல்லா மதத்தினரும் வந்து செல்வதைப் பார்க்க முடிந்தது.

      மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு, உங்கள் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  2. ஈஷா மையத்துக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது? அல்லது உங்கள் வீட்டாருக்கு உருவானதா?

    அவர்களிடம் ஏதேனும் பயிற்சி பெற்றிருக்கிறீர்களா?

    சைவ சமயத்திற்கான முறைகளை ஈஷா மையம், ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர், தமிழகத்தின் சைவ மடாதிபதிகள் மற்றும் சங்கராச்சார்யார்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நெல்லைத் தமிழன். மற்றவர்கள் பற்றியும் பெயரளவில்அறிவேன். அவர்களைப் பற்றியும் இவரைப் பற்றியும் கூட கூடுதலாக அறிய முயன்றதில்லை. யாரையும் பின்பற்றுபவனும், பின்பற்றுபவர்களும் இல்லை. சைவம் - இவர் சிவனை ஆதியோகியாகப் பார்ப்பது வித்தியாசமாகத் தெரிந்தது. நாங்கள் யாரும் இவருடைய பக்தர்களோ, சிஷ்யர்களோ இல்லை அப்படிச் செல்லவில்லை. பயிற்சிகளும் பெற்றதில்லை. சும்மா எல்லோரும் சென்று பார்வையிடுவது போல் சென்று வந்தோம், குறிப்பாக அந்த ஒலி ஒளிக்காட்சி என்ன என்ற ஓர் ஆர்வம் இருந்தது. அவ்வளவே. அது நன்றாகவும் இருந்தது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி, நெல்லைத் தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  3. ஈஷா மையத்திலுள்ள பல கான்செப்டுகளைப் புரிந்துகொள்வது கடினம்.

    இறைவன் என்று நினைத்து எதை வணங்கினாலும் (படமோ இல்லை உருவமோ இல்லை பொருளையோ), அதில் இறைவன் குடிகொண்டுவிடுகிறான். நம் பக்தி உணர்வுதான் முக்கியம்.

    உங்கள் ஈஷா பயணம் நன்றாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் என்று நினைத்து எதை வணங்கினாலும் (படமோ இல்லை உருவமோ இல்லை பொருளையோ), அதில் இறைவன் குடிகொண்டுவிடுகிறான். நம் பக்தி உணர்வுதான் முக்கியம்.//

      உண்மை. இறை உணர்வுதான் முக்கியம். நம் நம்பிக்கைதான். இவருடைய சில நேர் காணல்களை, முகநூலில் யாராவது பகிரும் போது பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான்.

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  4. பலர், நடிகை நடிகர்களும் அங்கு வருகிறார்களே என்று நினைக்கின்றனர். அவர்களும் நம்மில் ஒருவர்தாம். அவர்கள் வருவதான் கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. means celebrities will influence more people.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நடிகை நடிகர்கள் வருவது பற்றி அறிந்ததில்லை. நானாகத் தேடிச் சென்றும் இந்த மையத்தைப் பற்றி அறிய முனைந்ததில்லை. முகநூலில் யாரேனும் என் நட்பு வட்டத்தில் பகிர்ந்தால் அதுவும் கூட மிக அரிதாகத்தான் பார்ப்பது உண்டு.

      மற்றொரு உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் இங்கு பகிர்ந்திருப்பவை எல்லாம் அங்கு போர்டில் ஆங்காங்கே இருந்தவற்றைத்தான் சொல்லியிருக்கிறேனே அல்லாமல் (ஒரு சில பகுதிகள்தவிர) எனக்கு இது பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. அதுதான் உண்மை.

      ஆதியோகி என்று சொல்வதும், திரிமூர்த்தி என்று சொன்னதும், மும்மூர்த்திகள் என்று நாம் வழக்கமாகச் சொல்வதிலிருந்து இந்த திரிமூர்த்திகள் என்பது எனக்கு வித்தியாசமாக, இது வரை அறியாத ஒன்றாகத் தெரிந்ததாலும் சும்மா எல்லோரும் போவது போல் சாதாரணமாகச் சென்று வந்தேன். ஒரு சுற்றுலா போன்று என்றும் சொல்லலாம்.

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன், உங்கள் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  5. சிவன் நிச்சயமாக உண்டு.
    ஆனால் ???

    இந்த ஈஷா மையம் குறித்து எனக்கு நிறைய முரண்பாடுகள் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இறைவன் நிச்சயமாக உண்டு. கில்லர்ஜி நீங்கள் நினைப்பது போல் இல்லை. வித்தியாசமாகச் சொல்கிறாரே என்ற ஆர்வத்தில் சென்று பார்த்தேனே அல்லாமல் அவர் பின்னால் ஓடுபவனும் இல்லை. சாதி மதம் வித்தியாசம் எல்லாமல் அங்கு வருபவர்களைப் பார்த்த போது ஆச்சரியமும் எழுந்தது. அவர் சொன்ன சில கருத்துகள் வித்தியாசமாக நன்றாக இருந்ததால் ஆர்வம் அவ்வளவே. மற்றவை எல்லாம் மேலே சொன்ன கருத்துகள்தான். என் அனுபவத்தை அங்கு தெரியவந்த கருத்துகளைச் சொன்னேனே அல்லாமல் ஆதரித்தெல்லாம் இல்லை. அந்த அளவுக்கு ஈடுபாடுகளோ நம்பிக்கையோ இல்லை. இறைவனை எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நாம் துதித்து வழிபடலாமே.

      மிக்க நன்றி கில்லர்ஜி உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  6. சாமியார் போர்வையில் அயோக்கிய வியாபாரிகள் மக்களை ஏமாற்றி பிழைக்க ஹிந்து ,மதத்தை உணராத படித்தவர்களே காரணமாக இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவரும் இறைவனை அவர்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையில் தங்கள் அனுபவங்களின் அடிப்படியில் எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதம் சொல்வதை எனக்கு எதிர்க்கத் தோன்றவில்லை. அதற்காக நான் இவரை பின்பற்றுபவன் என்றோ, சிஷ்யன் என்றோ அவர் சொல்வது மட்டும்தான் சரி என்றோ எண்ணுபவனும் இல்லை. ஆதரிப்பவனும் இல்லை. அவர் பின் புலத்தை ஆய்பவனும் இல்லை. எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் என்னவென்று பார்ப்பவன். அவ்வளவே. அவர் சொல்லும் சில கருத்துகள் பிடித்திருந்ததாலும் இறைவனை ஆதியோகி என்று சொல்வது வித்தியாசமாக இருந்ததாலும் ஆர்வத்தில் மையத்தைச் சென்று பார்த்துவந்தேன். அதைப் பகிர்ந்தேன். அவ்வளவுதான்.

      சக்ரா, உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  7. ஈஷா - இதில் எனக்கு ஈடுபாடு இல்லை..

    பதிவை வாசித்தேன்..
    நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஸார் உங்கள் கருத்திற்கு. நானும் ஈடுபாடு கொண்டு செல்லவில்லை. மேலே சொல்லியிருக்கும் கருத்துகள்தான். ஆர்வத்தில் சென்று பார்த்து வந்தேன் அவ்வளவே.

      துளசிதரன்

      நீக்கு
  8. ஈஷா மையம் பற்றி பல குற்றச்சாட்டுகள் உண்டு.  சில இடங்களில் சதகுருவின் பேட்டிகள் பார்த்து கேட்டிருக்கிறேன்.  அவர் ஆங்கிலமும் நன்றாய் இருக்கும், பேச்சும் நன்றாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் கீதா சொன்னார் பல குற்றச்சாடுகள் உண்டு என்று. அப்போதுதான் அறிந்தேன். ஆஸ்ரமம் என்றால் பரமஹம்ஸர், ரமணர் போலெல்லாம் இப்போது வருவது சிரமம் என்றே தோன்றுகிறது. உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. கபட பக்தி கரை ஏறாதுதான். குறுகிய காலத்தில் ஈஷா வளர்ந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

      ஆமாம் அவர் ஆங்கிலமும் பேச்சும் நன்றாய் இருக்கும். அதனால்தான் போய் பார்ப்போமே என்று பார்த்தேன். மற்ற என் கருத்துகள் மேலே சொல்லியது போலத்தான்.

      கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

      துளசிதரன்

      நீக்கு
  9. உங்கள் பயணம் பற்றிய தொகுப்பு சுவாரஸ்யம்.  ஆனால் ரொம்பச் சுருக்கி வித்திட்டது போல தெரிகிறது.  படிப்பபடியாக இன்னும் விளக்கமாக சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவத்தைச் சொல்ல அதிகம் இல்லை. ஒரே கூட்டம். மட்டுமல்ல அங்கு
      நான் சென்றது இதுவே முதல் முறை. விளக்கமான போர்டுகளைப் பார்த்து அறிந்ததுதான் அதை அப்படியே சொல்லி முடித்தேன். இது பற்றி இதுவரை யாரும் சொல்லி கேட்காததும் ஒரு காரணம். மட்டுமல்ல மையத்தைக் குறித்து வேறு எதுவும் இல்லை. தலவரலாறு என்று சொல்ல வேண்டும் என்றால் வெள்ளியங்கிரி சப்தகிரி மலைகளைப் பற்றிச் சொல்லலாம். ஆனால் அது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்பதாலும் பதிவு நீண்டுவிடுமே என்பதாலும் சுருக்கி விட்டேன்.

      உங்கள் அன்பான ஊக்கமிக்க கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

      துளசிதரன்

      நீக்கு
  10. பதில்கள்
    1. இருக்கலாம் டிடி. நான் சும்மா பார்க்கத்தான் சென்றேன்.

      கருத்திற்கு மிக்க நன்றி டிடி

      துளசிதரன்

      நீக்கு
  11. ஒன்று கூடல் நிகழ்வு - ஆகா... இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயம் தான். நான்கு வருடங்கள் முன்னர் கல்லூரியில் ஒன்றாக படித்த சிலர் பாண்டிச்சேரியில் குடும்பத்துடன் சந்தித்தோம். இரண்டு நாட்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. இன்றைக்கும் அந்த சந்திப்பின் நிகழ்வுகள் இனிமையாக மனதில் உண்டு.

    ஈஷா மையம் - சுமார் எட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே குடும்பத்தினருடன் சென்றிருக்கிறேன் - அப்போது ஆதியோகி சிலை இல்லை - தியான மண்டபம் மட்டுமே! அமைதியான அந்த தியான மண்டபம் மனதுக்குப் பிடித்திருந்தது.

    இரண்டு பகுதிகளையும் இன்றைக்கு ஒரு சேர வாசிக்க முடிந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் வலையுலகம் பக்கம் வந்தேன். அனைவரும் நலமுடன் இருக்க எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் வெங்கட்ஜி. நீங்களும் வலையுலகம் வருவது வெகுநாட்கள் கழித்து என்று தெரிகிறது. நானும் வர இயல்வதில்லை. பதிவுகளை கீதா வழியாகப் போட்டு கருத்துகளுக்கான பதில்களையும் அவர் வழியாகவே கொடுக்கிறேன்.

      உங்கள் நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த உங்கள் இனிய அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சியும் நன்றியும். ஆமாம் என் பழைய மாணாக்கர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

      அமைதியான அந்த தியான மண்டபம் மனதுக்குப் பிடித்திருந்தது.//

      அப்போது இவ்வளவு கூட்டமும் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். இதுதான் நான் முதன் முறையாகச் செல்வது.

      மிக்க நன்றி வெங்கட்ஜி உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
    2. நானும் அங்கு தியான மண்டபத்தில் அமர்ந்து தியானித்தேன்.

      துளசிதரன்

      நீக்கு
  12. இறைவழிபாட்டில் பக்தி,உணர்வுதான் முக்கியம்.


    இந்த மையம் பற்றி ஓரிருதடவை காணொளியில் சில நிமிடங்கள் பார்த்திருக்கிறேன்.

    ஆங்கிலமும் பேச்சும் நன்றாக இருக்கும் என்பதும் உண்மையே.

    எனக்கு இவற்றில் ஈடுபாடு இல்லை.

    பதிலளிநீக்கு
  13. இறைவழிபாடு மனதிற்கு இதம்தரும்.

    பதிலளிநீக்கு