திங்கள், 17 ஆகஸ்ட், 2020

நினைவுகள் தொடர்கதை - அம்மா

  

நினைவுகள் தொடர்கதை என்ற தலைப்பைப் பார்த்ததும் கதையின் தலைப்பு போல இருக்கிறதோ? ஆனால் இது கதையல்ல நிஜம். இந்தத் தலைப்பில் ஒரு கதையும் என் ட்ராஃப்டில் முடிக்கப்படாத நிலையில்!

வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ஒரு பகுதியை  வாசிக்கும் போது நமக்கு ஏற்பட்ட கிட்டத்தட்ட அதே போன்ற அனுபவங்களோ அல்லது அதை ஒட்டிய அனுபவங்களோ நம் மனதில் நினைவுக்கு வந்துவிடும்.

எபி ஸ்ரீராம் சமீபத்தில் தன் கனவு பற்றி  -  கனவில் அப்பா புது வீட்டிற்கு வந்தது போலக் கண்டதாகச் சொல்லியிருந்தார். தன் அலுவலக நட்பு ஒருவரின் ஆச்சரியத்தக்க கனவு அனுபவமும் பகிர்ந்திருந்தார்.

ராத்திரி படுத்தால் ஆழ்ந்த உறக்கம் என்பதால் எனக்குக் கனவுகள் வருவதே வெகு வெகு அபூர்வம். அப்படியே வந்தாலும்  நினைவில் இருக்குமா என்றால் அதுவும் இல்லை. அப்படி நினைவில் வந்துவிட்டாலும் அதைத் தொடர்புப்படுத்திப் பார்க்கும் பழக்கமும் ஏனோ இல்லை.

அப்படியான எனக்குச் சில மாதங்களுக்கு முன் கனவில் யாரோ ஒருவரின் மரணம். மறுநாள் எழும் போதே கனவு கொஞ்சம் நினைவுக்கு வந்தாலும் அதை புறம் தள்ளினேன். அன்று அப்பாவிடமிருந்து அழைப்பு. மதுரை வில்லாபுரத்தில் இருந்த, அப்பாவின் மாமா/என் மாமாதாத்தாவின் மகன் என்னை விட 4 வயதே பெரியவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைச் சொன்னதும் அதிர்ச்சி. என்னால் நம்பவே முடியவில்லை. அப்போதும் கூட நான் கனவையும் இந்த மரணத்தையும் இணைத்துப் பார்க்கவில்லை.

அதற்கு 2 வாரம் முன்தான் அவர் எனக்கு வாட்சப்பில் அவரது மகனின் தற்போதைய நிழற்படம், அனுப்பி (ஏற்கனவே மகனின் ஜாதகம், வேலை விவரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது) பொண்ணு இருந்தா சொல்லுப்பா என்று சொல்லியிருந்தார். நல்ல வேலையில் இருப்பவன். நல்ல குணமுடைய பையன். பெண் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது என்றும் வருந்தியிருந்தார்.

ஸ்ரீராமின் பதிவை வாசித்ததும்தான் நான் இதைத் தொடர்புப்படுத்திப் பார்த்து ஒரு வேளை அப்படியும் இருக்குமோ என்று எண்ண வைத்து இங்கு எழுத வைத்தது.

என்றாலும் எனக்கு இக்கனவை விட, 20 வருடங்களுக்கு முன் நடந்ததை இப்போது நினைத்தாலும் மனது வேதனையடையும்.

பல நிகழ்வுகளையும், அதனால் இதோ, இதனால் அதோ என்று தொடர்பு படுத்தி பட்டர்ஃப்ளை எஃபெக்ட் கேயோட்டிக் தியரி என்று ஆராயாமல், இது அப்படி நடந்து போச்சு அவ்வளவுதான் என்று எளிதாகக் கடந்துவிடும் எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் எப்போது நினைத்தாலும் மனது கொஞ்சம் நேரமேனும் சங்கடப்படும்.

2000 மாவது ஆண்டு. சென்னையில் குடியேறி ஒரு வருடமே ஆகியிருந்தது. அம்மா, அப்பா, பாட்டி எல்லோரும் கிராமத்தில். அப்போதெல்லாம் தொலைபேசி எஸ்டிடி கட்டணம் வெகு அதிகம் என்பதால் எப்போதேனும்தான் பேசும் வழக்கம். ஒரு நாள் அம்மாவிடம் இருந்து எதிர்பாராத தொலைபேசி அழைப்பு.

எஸ்டிடி செய்தால் அப்பா கோபித்துக் கொள்வார் என்பதால் அப்பா வேலைக்குச் சென்றதும் அழைத்திருந்தார். சாதாரணமாக அம்மா தொலைபேசியில் அழைத்துப் பேசமாட்டார். காரணம் செவி கேட்காது. கேட்கும் கருவி போட்டிருந்தாலும் தொலைபேசி அழைப்பு எல்லாம் அத்தனை கேட்காது. பேட்டரி நெஞ்சில் தொங்குமே அப்படியான அப்போதைய கருவி. டிஜிட்டல் எல்லாம் வாங்க வசதி இல்லாத நிலை.

“குழந்தே உன்கிட்ட பேசணும் போல இருக்கு. உன் குரல் கேக்கணும் போல இருக்கு. அதான் கூப்பிட்டேன்” என்று சொல்லிட எனக்கு அழுகையே வந்துவிட்டது. பாவம். நான் பேசினாலும் அவருக்குக் கேட்காதே. கட்டணம் கூடிவிடுமே. அப்பா வேறு அம்மாவைக் கோபித்துக் கொள்வாரே என்ற கவலையில்,

“அம்மா நீ வைத்துவிடு நான் அழைக்கிறேன்” என்று நிறுத்தி நிதானமாகச் சொல்லியது அம்மாவின் காதில் விழவில்லை. நான் கட் செய்து விட்டு நான் அழைத்துப் பேசி அவருக்குக் கேட்கிறதா என்று முயற்சி செய்து பார்ப்போம் என்று அழைத்தேன்.  

பாட்டிக்குச் செவி செம ஷார்ப் என்பதால் தொலைபேசி ரிங்க் சத்தத்தை அம்மாவிடம் சொல்லுவாரே என்ற ஒரு நம்பிக்கையும்.  ஆனால் அம்மா எடுக்கவில்லை. ஃபோன் அவுட் ஆஃப் செர்வீஸ் ஆகியிருக்குமோ என்றும் நினைத்தேன். அப்போதெல்லாம் கிராமத்தில் இது ரொம்ப சகஜம். அப்போதுதான் பேசியிருப்போம் அடுத்து அழைக்கும் போது அவுட் ஆஃப் செர்வீஸாகியிருக்கும். பக்கத்தில் தொலைபேசியும் கிடையாது.

அப்பா மாலை வந்துவிடுவாரே அப்போது அழைத்துப் பேசலாம் என்று அழைத்தேன். எடுக்கவில்லை. ஃபோன் அவுட் ஆஃப் சர்வீஸ் என்று நினைத்தேன். அவர்கள் ஃபோன் பேசுவதும் எப்போதேனும் என்பதால் ரிங்க் சத்தமும் வரவில்லை என்றால் ஃபோன் அவுட் ஆஃப் சர்வீஸ் என்பது கூடத் தெரிந்திருக்காது. எனவே கிராமத்தில் இருந்த என் அத்தை மகனை அழைத்தேன். தற்காலிகமாகத் தொடர்பில்லை என்று சொல்லியது.  ஒவ்வொரு நாளும் ஃபோன் சரியாகிவிட்டதா என்று அழைத்துப் பார்த்தும் பயனில்லை. மூன்று வாரம் ஓடியிருக்கும்.

நான் மீண்டும் அழைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அன்று, நாங்கள் திருவனந்தபுரத்தில் இருந்த போது எங்களுக்கு நெருங்கிய நட்பான மாமி ஒருவர் சென்னையில் இருந்த தன் பெண் வீட்டிற்கு வந்திருந்தவர் அங்கு இறந்துவிட்ட செய்தியை அவர் மகள் தொலைபேசியில் சொல்லிட நாங்கள் அதிர்ச்சியாகிவிட்டோம். என் அம்மாவின் வயதுதான் 50 தான். நம்பமுடியாமல் மனவருத்தம், அதிர்ச்சி என்ற பல வேதனைகளுடன் அவர்கள் வீட்டிற்கு விரைந்தோம். 

மகன் சிறியவன். பள்ளியிலிருந்து வரும் முன் வந்து விடவும் வேண்டும். அவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்துவிட்டு மாலையில் வீடு வந்ததும் குளித்துவிட்டு மனம் கொஞ்சம் சமாதானம் அடைய டூ இன் ஒன்னில் ஏற்கனவே ஒரு ஒலிநாடா இருப்பது தெரியவும் ஆன் செய்தால் பஜகோவிந்தம். மனம் இன்னும் சோகமாகியது.

சட்டென்று அம்மா எப்போதோ என்னிடம் சொல்லியிருந்தது நினைவுக்கு வர வேண்டுமா? வந்தது. “குழந்தே உன் தம்பிக்கு 35 வயசுல கர்மா செய்ய வேண்டிவருமாம். நான் போயிடுவேனாம்”. மனதில் இது மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. தம்பியின் வயதை மனது கணக்கிட்டது. பேரதிர்ச்சி. அவன் வயது 35. மனம் தவிக்கத் தொடங்கியது. அதை நினைத்துப் பார்க்க மனம் அஞ்சியது. கடவுளே அப்படி எதுவும் இருக்கக் கூடாது என்று கண்ணில் நீர். நான் உடனே வீட்டிற்கு அழைத்தேன். யாரும் எடுக்கவில்லை. என்ன செய்ய என்று தெரியவில்லை. மீண்டும் இரவு அழைத்தேன். பதிலில்லை. என் மனம் தவித்தது. என் அத்தை மகனை அழைத்துப் பார்த்தேன். அவர்கள் ஃபோன் ரிங்க் போகவே இல்லை.  என்ன சோதனை!

அப்போதெல்லாம் வேறு என்ன செய்ய முடியும்? கிராமத்தில் வேறு யார் வீட்டில் ஃபோன் இருந்தது என்றும் தெரியாது. தவிப்புடனே படுத்தேன். தூக்கமும் இல்லை. 

அம்மாவைப் பற்றியே யோசனைகள். அம்மா சர்க்கரை நோயாளி, பிபி இருந்தது. இதயத்திலும் பிரச்சனை இருந்தது, இரு மாதங்கள் முன்தான்  கோமாவிற்கு முந்தைய நிலை வரை சென்று மீண்டு வந்தவர். கொஞ்சம் மனதை அலட்டிக் கொள்பவரும் கூட. என்னையும் என் சகோதரரைப் பற்றியும் அவருக்குப் பல கவலைகள் இருந்தது. மனதில் பிரார்த்தனைகளும் கூடவே.

இரவு 2 மணி. ஃபோன் அடித்தது.  வயிற்றில் கலக்கம். பயந்து கொண்டே எடுத்தேன். 

“அம்மா போய்ட்டாடி குழந்தே” என்று அப்பா.  “ஐயோ” என்னால் வேறு எதுவும் உடன் பேச இயலவில்லை. என் பாட்டியையும் அம்மா என்றே அழைப்பேன். எந்த அம்மா என்றாலும் என்னால் தாங்க இயலாது. என் பாட்டியிடம் அத்தனை பாசம்.

“அப்பா எந்த அம்மாப்பா?”

“உங்கம்மாடி”

அப்படியே அதிர்ச்சியில் உட்கார்ந்துவிட்டேன். அதன்பின் அப்பா சொன்னது எதுவும் காதில் விழவில்லை.

பின்னர் அறிந்தது. நான் அன்று மாலை அழைத்த போது ஆஸ்பத்திரிக்குப் போயிருந்திருக்கிறார்கள். அப்போது மொபைல் இல்லையே. நாகர்கோவிலிலும் அப்போதெல்லாம் இப்போது போன்று நவீன வசதிகள் உள்ள மருத்துவமனைகள் கிடையாது. வழக்கமாகச் செல்லும் மருத்துவரிடம்தான் சென்றிருந்திருக்கிறார்கள். கொஞ்ச நேரம் அப்செர்வேஷனில் வைத்துவிட்டு ஊசி போட்டு வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார். மருத்துவருக்கும் ஏதேனும் சந்தேகமோ தெரியவில்லை. வேறு இதய சிகிச்சை நிபுணரிடமேனும் அனுப்பியிருக்கலாம். ஆனால் காலம் வேறு ஒன்றை நிர்ணயித்திருக்கும் போது?

ராத்திரி வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அம்மா புரண்டு புரண்டு படுத்தாராம். அப்புறம் அப்பாவுக்குத் திடீரென்று முழிப்பு கொடுக்கப் பார்த்தால் அம்மா கவிழ்ந்து படுத்திருந்திருக்கிறார். தொட்டுப் பார்த்து அசைத்துப் பார்த்திட, கவிழ்ந்து படுத்திருந்தவர் அப்படியே தூக்கத்தில் போயிருந்திருந்தது தெரிந்திருக்கிறது.

மூன்று வாரம் முன் என்னோடு பேச நினைத்தது. அப்புறம் பேச முடியாமல் போனது, அந்த மாமியின் மரணத்திற்கு நான் சென்றிருந்த போது ஊரில் அம்மாவிற்கு ஏதோ செய்து தவித்திருந்தது, அன்று மாலை எனக்கு அம்மா என்றோ சொன்னது நினைவுக்கு வந்தது... தம்பியின் வயதைக் கணக்கிட்டது…எல்லாம் வியப்பான ஆனால் இப்போது நினைத்தாலும் மனம் என்னைக் கீறி என்னென்னவோ நினைவுகளுக்கு இழுத்துச் சென்றுவிடும் ஒரு நிகழ்வு. அம்மா கடைசியில் கூட என்னை நினைத்திருப்பாரோ? என்னோடு பேச முடியவில்லையே என்று தவித்திருப்பாரோ? நான் அருகில் இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பாரோ? 

அம்மா மிக மிகக் கஷ்டப்பட்ட ஜீவன். இன்று இருந்திருந்தால் என் மகன் படிப்பதைப் பார்த்து மகிழ்ந்து பூரித்திருப்பார். அம்மாவோடு நான் தினமும் பேசுகிறேன். பிரார்த்தனை வழியாக. ஸாரிம்மா என்று சொல்வதுண்டு.  

அன்று ஊரில், அம்மா தனக்கு என்ன செய்கிறது என்பதைச் சொல்லத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது சென்னையில் இருந்த எனக்கு, அவர் மரணத்தை நெருங்குகிறார் என்பதை ஏதோ ஒன்று குறிப்பால் என் மனம் உணர்த்தியதை இன்று நினைத்தாலும் வியப்பும் வேதனையும். இது வரை வேறு எந்த நிகழ்விற்கும் இப்படியானதும் இல்லை, நான் தொடர்புப்படுத்திப் பார்த்ததுமில்லை. அந்த அளவிற்கு அம்மா என்னோடு இருந்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது. 

ஆனால், பஜகோவிந்தம் பாட்டை எங்கேனும் கேட்க நேர்ந்தால் என் மனம் சிறிது நேரம் ஒரு மாதிரி ஆகிவிடும். அதைக் கேட்கும் அளவிற்கு என் மனம் இன்னும் அத்தனைப் பக்குவப்படவில்லை. 

--------கீதா

40 கருத்துகள்:

 1. ரொம்பத் தவிப்பான நிகழ்வு.  அப்போது மட்டுமல்ல...   இன்னும் மனதை அறுத்து கொண்டே இருக்கும் நினைவாகத்தான் இருக்கும்.  என்ன சொல்ல வந்தாரோ...   சில சமயம் குரலைக் கேட்கக் கூட ஆசைப் பட்டிருக்கலாம்.  அல்லது தன் குரலை மகளுக்கு பதிவு செய்திருக்கலாம் - தனக்கு காது கேட்காது என்று தெரிந்தததனால்.  என் அம்மாவுக்கும் காது கேட்காது.  பேட்டரி நெஞ்சில் ஆட, கதையும், பிட்டரியையும் சரி செய்து கொண்டே கேட்க முயற்சிப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம். ஆமாம் அன்று ரொம்பத் தவிப்பாகத்தான் இருந்தது. ஆமா நீங்க சொல்வது போல் இப்பவும் கூட. இதோ இன்னும் மூன்று நாட்களில் வருகிறது அத்தினம். ஆங்கிலத் தேதிப்படி.

   பதிவு செய்வது அப்போது எல்லாம் அத்தனை தோன்றியதில்லையே. அங்கு அப்படியானவையும் இல்லை அப்பா அம்மாவிடம்.

   என் அம்மாவுக்கும் காது கேட்காது. பேட்டரி நெஞ்சில் ஆட, கதையும், பிட்டரியையும் சரி செய்து கொண்டே கேட்க முயற்சிப்பார்//

   பாவம் அவங்க இல்லையா. அதே அதெ அந்த பாட்டரியைத் தட்டி தட்டி காதில் உள்ளதை சரி செய்து கொண்டே தான் இருப்பாங்க என் அம்மாவும். கேட்க முயற்சி செய்வார்.

   மிக்க நன்றி ஸ்ரீராம்!

   கீதா

   நீக்கு
 2. என் அம்மா கடைசி மூன்று மாதங்கள்  தன் நினைவின்றி இருந்து மறைந்தார்.  அதற்குமுன் என் மனைவியை அழைத்து கொஞ்ச நாட்கள் என்னோடு இரேன் என்று சொல்லி ஒரு வாரமோ பத்து நாட்களோ பாஸ் என் அம்மாவுடன் இருந்துவிட்டு வந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் அம்மா கடைசி மூன்று மாதங்கள் தன் நினைவின்றி இருந்து மறைந்தார். //

   ஓ! ரொம்ப மனசு கஷ்டமாக இருந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும்.

   அதற்குமுன் என் மனைவியை அழைத்து கொஞ்ச நாட்கள் என்னோடு இரேன் என்று சொல்லி ஒரு வாரமோ பத்து நாட்களோ பாஸ் என் அம்மாவுடன் இருந்துவிட்டு வந்தார்.//

   மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும் இருவருக்குமே. என் மாமியாரும் என்னிடம் அப்படிச் சொன்னதுண்டு முன்பு. இப்போது வயது ரொம்பவே ஆனதால் பேசுவதும் குறைந்துவிட்டது.

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 3. அம்மா எத்தனை காலம் சென்றாலும் அம்மா தான். என் அம்மாவும் 52,53 வயதில் தான் போனார். ஆனால் மரணம் முன் கூட்டியே எங்களுக்குத் தெரிந்திருந்தது. என்று எப்போது என்பது தான் தெரியாது. புற்று நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இருக்கும்போதும் பலவிதமான கஷ்டங்கள்! இறக்கும்போதும் கஷ்டப்பட்டார். எவ்வளவு வருஷங்கள் ஆனாலும் மறக்க முடியாத ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதாக்கா. அம்மா அம்மாதான்.

   //என் அம்மாவும் 52,53 வயதில் தான் போனார். ஆனால் மரணம் முன் கூட்டியே எங்களுக்குத் தெரிந்திருந்தது. என்று எப்போது என்பது தான் தெரியாது. புற்று நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார். //

   நீங்க சொல்லியிருந்தது நினைவு வந்தது கீதாக்கா.

   ஒரு வேளை அந்தக்காலத்து அம்மாக்கள் பெரும்பான்மையோர் கஷ்டப்பட்டிருப்பார்களோ என்றுதான் தோன்றுகிறது.

   எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாது ஆம் கீதாக்கா

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி

  பதிவை படிக்கையில் கண் கலங்க வைத்தது. கனவுகள் சில சமயம் சில உண்மை சம்பவங்களுக்கு அடையாள கற்களாக அமைந்து விடுவது இயல்புதான்.

  ஒவ்வொருவரின் வாழ்விலும் அம்மாவைப் பற்றி நினைக்கும் போது இப்படியான வருத்தம் தரும் நிகழ்வுகள் நடைபெற்று இருப்பதை தவிர்க்க முடியாது போலும்..! அதுவும் பெண்ணாக பிறந்து, நாம் ஓரிடம் அவர்கள் ஓரிடமாக இருக்கும் போது தீடிரென இப்படி ஏற்படும் அசம்பாவிதங்கள் நம் வாழ்நாள் முழுவதும் மனதை உறுத்திக் கொண்டேதான் இருக்கும். மிகவும் கஸ்டமான சூழ்நிலைகளில் தவித்த அந்த நாட்களின் நினைவு தரும் பாரம் மிகக் கொடுமையானது எனக்கும் உங்களின் மனக்கலக்கங்கள் புரிகிறது.

  இதைப்படிக்கையில் எனக்கும் எங்கள் அப்பா, அம்மாவின் இறுதி கால நினைவுகள் வருகிறது. என் அப்பா இறந்து போவதாக கனவு வந்த பதினைந்து நாட்களில் உண்மையிலேயே நடு இரவு நேரத்தில் அப்பாவின் இறப்பு குறித்து அண்ணாவிடமிருந்து தந்தி வந்தது. அப்போது இந்த மாதிரி வசதிகள் (ஃபோன் விமான வசதி) ஏதுமற்ற நிலைதானே .. அப்போது பட்ட மனக்கஸ்டங்கள் இன்னும் ஆறாத ரணமாக உள்ளேயே இருக்கிறது.

  இறப்பு என்பது தவிர்க்க இயலாதது. வாழ்வெனும் புத்தகத்தில் பிறப்புக்கு அடுத்த அத்தியாயம் இறப்புதான். நடுவில் இருக்கும் பக்கங்களில்தான் நாம் வாழும் வாழ்நாட்கள்..! இப்படி தத்துவமார்க்கமாக வாழும் வாழ்வை தொடர்ந்தாலும் வலிகளும், வேதனைகளும் நடுநடுவில் எட்டிப்பார்த்து சௌக்கியமா..?என்று விசாரித்தபடி கடந்து செல்லும் இயல்புடையவை.

  மனதை அமைதிபடுத்திக் கொள்ளுங்கள் சகோதரி. உங்கள் மனதின் கலக்கங்கள் குறைந்து, உங்கள் மகனின் வளமான எதிர்காலம் தரும் இன்பங்கள் அனைத்திலும் நீங்கள பங்கேற்று வளமுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுவும் பெண்ணாக பிறந்து, நாம் ஓரிடம் அவர்கள் ஓரிடமாக இருக்கும் போது தீடிரென இப்படி ஏற்படும் அசம்பாவிதங்கள் நம் வாழ்நாள் முழுவதும் மனதை உறுத்திக் கொண்டேதான் இருக்கும். மிகவும் கஸ்டமான சூழ்நிலைகளில் தவித்த அந்த நாட்களின் நினைவு தரும் பாரம் மிகக் கொடுமையானது எனக்கும் உங்களின் மனக்கலக்கங்கள் புரிகிறது.//

   ஆமாம் கமலாக்கா. மிக்க நன்றி கமலாக்கா

   இறப்பு தவிர்க்க இயலாததுதான். மனம் என்னதான் தத்துவமாக சமாதானப்படுத்திக் கொண்டாலும் இப்படிச் சில சமயங்களில் ஆகத்தான் செய்கிறது.

   //மனதை அமைதிபடுத்திக் கொள்ளுங்கள் சகோதரி. உங்கள் மனதின் கலக்கங்கள் குறைந்து, உங்கள் மகனின் வளமான எதிர்காலம் தரும் இன்பங்கள் அனைத்திலும் நீங்கள பங்கேற்று வளமுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

   நிச்சயமாக... மிக்க நன்றி கமலாக்கா உங்கள் பிரார்த்தனைகளுக்கு

   கீதா

   நீக்கு
 5. சோகப் பதிவு. கனவையும் அம்மா மரணத்தையும் தொடர்புபடுத்தியிருக்கீங்க. மனதைத் தொட்ட பதிவு.

  அவங்க ஆயுளையும் சேர்த்து நீங்க ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் வருத்தமான பதிவுதான் நெல்லை. அம்மாவின் மரணம் கனவாக வரவில்லை. அது எனக்கு அன்று மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது ஒரு குறிப்பாக. நடக்கப் போவது என்று அறிவுறுத்தியது. ரொம்பவே.. ஆனால் நான் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நடந்த பிறகுதான் தோன்றியது நெல்லை.

   //அவங்க ஆயுளையும் சேர்த்து நீங்க ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கணும்.//

   மிக்க நன்றி நெல்லை வாழ்த்திற்கும்

   கீதா

   நீக்கு
 6. உங்கள் பதிவு மறைந்த என் அம்மாவின் இறப்பை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்துவிட்டது.. என் மகளின் முதல் பிறந்தநாளுக்கு கூப்பிட்டு வாழ்த்து சொல்லிவிட்டு அன்றைய நாள் இரவில் மறைந்துவிட்டார்.... சைலண்ட் அட்டாக் வந்து தூக்கத்திலே போய்விட்டார்..... அவர் இறந்த தகவல் வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்ந்தது... அப்போதுள்ள சூழ்நிலையில் உடனடியாக கிளம்ப இயலாது அதுமட்டுமல்ல எங்கள் மத வழக்கப்படி இறந்த உடலை ஒரு நாளுக்கு மேல் வைத்திருக்கமாட்டார்கள் அதனால் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதுவும் நல்லதிற்குதான் என்று என் மனம் இன்னும் நினைக்கிறது.. காரணம் என்னை பொருத்தவரையில் அவர் இன்னும் உயிரோட இருப்பதாகவே கருதுகின்றேன் .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மதுரை. ஆமாம்ல எல்லோருக்குமே அவரவர் அனுபவங்களை நினைவுக்குக் கொண்டு வரும். நீங்கள் உங்கள் அம்மாவைப் பற்றிச் சொல்லியதை வாசித்த நினைவு இருக்கிறது.

   //அதுவும் நல்லதிற்குதான் என்று என் மனம் இன்னும் நினைக்கிறது.. காரணம் என்னை பொருத்தவரையில் அவர் இன்னும் உயிரோட இருப்பதாகவே கருதுகின்றேன் .....//

   இதுவும் ஒரு வகையில் நல்லதுதான் பாசிட்டிவ்...நமக்கு அம்மாவின் கடைசித் தருண முகத்தை விட அவரோடு மகிழ்ச்சியாக இருந்த முகம் மனதில் இருக்கும். எனக்கும் என் அம்மாவும் என் மகனும் அத்தனை பாசத்துடன் இருந்தது எல்லாம் நினைவுக்கு வரும்.

   மிக்க நன்றி மதுரை

   கீதா

   நீக்கு
 7. இந்நிகழ்வு என்றும் நினைவில் நிற்கும்படியான குற்றஉணர்வை தங்களுக்கு அமைத்து விட்டது காலம்.

  சில நேரங்களில் கனவு வந்து ஏதோவொரு நிகழப்போகும் மரணத்தை உணர்த்திச் செல்வது பலரது வாழ்வில் நிகழ்ந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கில்லர்ஜி. குற்ற உணர்வு கொஞ்சம் உண்டுதான். ஃபோன் அடிக்கடி வேலை செய்யாமப் போகும் அப்பா நாகர்கோவில் வந்து எஸ்டிடி பூத்தில் இருந்து பேசுவார். அம்மாவால் முடியாது. மேலும் அப்போதெல்லாம் டக்கென்று பிரயாணம் மேற்கொண்டிட முடியாதே. எவ்வளவோ சூழல்கள். கஷ்டங்கள். அம்மாவை அழைத்து வந்து எம் வி டயபட்டிஸ் செண்டருக்குக் கூடிப் போகவும் நினைத்திருந்த வேளையில்...

   //சில நேரங்களில் கனவு வந்து ஏதோவொரு நிகழப்போகும் மரணத்தை உணர்த்திச் செல்வது பலரது வாழ்வில் நிகழ்ந்து இருக்கிறது.//

   பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன் கில்லர்ஜி.

   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 8. பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா உங்கள் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 9. மனதைத் தொட்ட பகிர்வு. சில விஷயங்களை மறக்கவும் முடிவதில்லை. நினைக்காமல் இருக்கவும் முடிவதில்லை.

  உங்கள் அம்மா இறைவனின் நிழலிலிருந்து உங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார் - நீங்கள் நீடூழி வாழ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் வெங்கட்ஜி சில விஷயங்கள் மறக்க முடிவதில்லை. நினைக்காமல் இருக்கவும் முடிவதில்லை ஆமாம்.

   //உங்கள் அம்மா இறைவனின் நிழலிலிருந்து உங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார் - நீங்கள் நீடூழி வாழ!//

   மிக்க நன்றி வெங்கட்ஜி உங்கள் வாழ்த்திற்கு

   கீதா

   நீக்கு
 10. பதிவைப் பற்றி வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை... அழுகை தான் வருகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்று எனக்கும் இதே நிலைதான் டிடி. பல வருடங்கள் அது மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்போதும் தான் இருந்தாலும் மனது கொஞ்சம் சமாதானப்படுத்திக் கொள்கிறது. சாரி டிடி உங்கள் மனது கஷ்டமாகிவிட்டதை அறியும் போது..

   நன்றி டிடி

   கீதா

   நீக்கு
 11. // படுத்தால் ஆழ்ந்த உறக்கம் // இது தான் உண்மையான செல்வம் + திருப்தியான வாழ்வு...

  ஆனாலும் சிரமம் தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது தான் உண்மையான செல்வம் + திருப்தியான வாழ்வு...//

   நன்றி டிடி.

   கீதா

   நீக்கு
 12. //“குழந்தே உன்கிட்ட பேசணும் போல இருக்கு. உன் குரல் கேக்கணும் போல இருக்கு. அதான் கூப்பிட்டேன்”/

  கீதா, இந்த வரிகளை படித்ததும் என் அம்மா நினைவு வந்து விட்டது. அவர்களூக்கும் காது கேட்காது போனில் நான் பேசுவதை கேட்டுக் கொள் உன் நலனை தம்பியிடம் தெரிவி கேட்டுக் கொள்கிறேன் என்பார்கள். அடிக்கடி கடிதம் எழுது என்பார்கள். போன் வந்த பின் கடிதம் எழுத சோம்பல். நானும் ஒரு பதிவில் (நலம் நலமறிய ஆவல்) அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு இருப்பேன்.

  //குழந்தே உன் தம்பிக்கு 35 வயசுல கர்மா செய்ய வேண்டிவருமாம். நான் போயிடுவேனாம்”. மனதில் இது மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.//

  அதே மாதிரியே ஆச்சா?

  எனக்கு நிறைய வேதனைகள் கீதா . அப்பா 51, அண்ணன் 34, அக்கா 25 தங்கை 11 மாத குழந்தை இழப்பை எல்லாம் சின்ன வயதில் சந்தித்து விட்டேன். இப்போதும் வேறு விதமாக வேதனையை கொடுத்து இருக்கிறார். அத்தனையும் தாங்கி கொண்டு , அடித்தாலும் தாயின் காலை கட்டிக் கொண்டு அழும் பிள்ளை போல் அந்த இறைவனின் காலகளை கட்டிக் கொண்டு அழுவேன்.


  இந்த பதிவை படிக்கும் போது அம்மா இருந்தால் அடிக்கடி போன் செய்து பேசுவார்கள் இப்போது உறவுகள் போன் செய்யவே கஷ்டபடுகிறார்களே என்று நினைத்தேன், போன் மணி அடித்தது ஒரு கணம் உடல் சிலிர்த்து விட்டது அம்மா வருத்தபடாதே! என்று என் தங்கையை பேச வைத்தார்.
  இன்று காலை முதலே மனம் கஷ்டபட்டது , உங்கள் அம்மா பதிவு மீண்டும் அம்மாவின் நினைவுகளில் மிகவும் ஆழ்ந்து விட்டது. எவ்வளவு பேர் இருந்தாலும். அம்மாவின் அன்பு போல் ஆகாது.

  பஜகோவிந்தம் பாடல் தினம் ரேடியோ சிட்டியில் வைக்கிறார்கள்.
  சிறு வயதில் பாலவிஹாரில் (சின்பயாவிஷன்) கற்றுக் கொடுத்தார்கள் மனப்பாடமாக படிப்பேன்.






  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //குழந்தே உன் தம்பிக்கு 35 வயசுல கர்மா செய்ய வேண்டிவருமாம். நான் போயிடுவேனாம்”. மனதில் இது மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.//

   அதே மாதிரியே ஆச்சா?//

   ஆமாம் கோமதிக்கா அப்படியேதான் ஆச்சு. அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

   /அப்பா 51, அண்ணன் 34, அக்கா 25 தங்கை 11 மாத குழந்தை இழப்பை எல்லாம் சின்ன வயதில் சந்தித்து விட்டேன். //

   கடவுளே!.

   என் பாட்டி என் அப்பாவைத் தவிர எல்லோரையும் இழந்து 92 வயது வரை இருந்து மறைந்தார். அவர் புலம்புக் கொண்டே இருப்பார்.

   //இப்போதும் வேறு விதமாக வேதனையை கொடுத்து இருக்கிறார். அத்தனையும் தாங்கி கொண்டு , அடித்தாலும் தாயின் காலை கட்டிக் கொண்டு அழும் பிள்ளை போல் அந்த இறைவனின் காலகளை கட்டிக் கொண்டு அழுவேன்.//

   புரிகிறது கோமதிக்கா. ஒவ்வொருவருக்கும் தான் எத்தனைப் பிரச்சனைகள். அதைக் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்

   நன்றி கோமதிக்கா.

   கீதா

   நீக்கு
 13. மிகவும் உருக்கமான உணர்வுப் பூர்வமான பதிவு. பலருக்கும் தன் அம்மாக்களை பற்றி நினைக்க வைத்த பதிவு. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அருணா எல்லோருக்கும் அவரவர் அம்மாக்கள் நினைவுக்கு வந்துகொண்டே தான் இருப்பாங்க ஒவ்வொரு தருணத்திலும்.

   மிக்க நன்றி அருணா

   கீதா

   நீக்கு
 14. என் அப்பா இறக்கும் ராத்திரி என் கனவில் வந்து பேசிய்தை முன்பு எங்கள் ப்ளாக்கில் சொல்லி இருக்கிறேன்.

  அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்து இருந்த போது போய் கொஞ்ச நாள் கூட இருந்தேன் கொலு வைத்து இருந்தேன் உடம்புக்கு ரொம்ப முடியவில்லை உன்னை பார்க்க அம்மா ஆசைபடுகிறார்கள் என்று தம்பி போனில் சொன்ன உடன் நான் மட்டும் போய் விட்டேன் முதலில்
  கொலுவை அக்கம் பக்கத்தினர் வந்து பூஜை செய்து பார்த்து கொண்டார்கள்.

  கார்த்திக மாதம் என் மாமியாருக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்று போனில் சொன்னார்கள் அவர்களை பார்க்க கோவை போய் இருந்தோம்.
  அவர்களுக்கு நான்கு நாளில் உடல் நிலை சரியாகி விட்டது, நீ உன் அம்மாவை பார்த்து விட்டு போ என்றார்கள், மறு நாள் போகலாம் என்ரு இருந்தோம் அதற்குள் அம்மா இறந்து விட்டார்கள் என்று போன் வந்து விட்டது. அது மிக வருத்தம் மனதில் இன்னும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அப்பா பற்றியதை வாசித்த நினைவு இருக்கு கோமதிக்க்கா.

   //அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்து இருந்த போது போய் கொஞ்ச நாள் கூட இருந்தேன் கொலு வைத்து இருந்தேன் உடம்புக்கு ரொம்ப முடியவில்லை உன்னை பார்க்க அம்மா ஆசைபடுகிறார்கள் என்று தம்பி போனில் சொன்ன உடன் நான் மட்டும் போய் விட்டேன் முதலில்
   கொலுவை அக்கம் பக்கத்தினர் வந்து பூஜை செய்து பார்த்து கொண்டார்கள்.//

   மனதிற்கு கொஞ்சம் சமாதானம் ஆகியிருக்கும் இல்லையா இப்போதும் நினைத்துக் கொள்ள.

   நீ உன் அம்மாவை பார்த்து விட்டு போ என்றார்கள்,மறு நாள் போகலாம் என்ரு இருந்தோம் அதற்குள் அம்மா இறந்து விட்டார்கள் என்று போன் வந்து விட்டது. //

   மனதிற்கு கஷ்டமாக இருந்திருக்கும். இல்லையாக்கா. இன்னும் இருக்கும் தான்.

   அதனால்தான் நான் இப்போது சொல்ல முடிந்தவர்களிடம் சொல்வது கூடியவரை உங்கள் அம்மா அப்பாவை விசாரித்து பார்க்க முடிந்தால் பார்த்து கூட வைத்துக் கொண்டு அவர்களோடு பேசி உறவாடிவிடுங்கள் பின்னர் நினைத்து மனசு கஷ்ட்ப்படாதீங்க என்று.

   மிக்க ந்னறி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 15. தீராத சோகம் அம்மாவை இழப்பது.

  எனக்கு இன்னும் அம்மாவைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லையே
  என்ற வருத்தம் என்னை விட்டகலுவதில்லை.
  அவள் எப்படியெல்லாம் உழைத்து எங்களைக் கவனித்துக் கொண்டார் என்று
  இதயத்தை வலிக்கச் செய்யும் நினைவுகள்.
  உங்கள் அம்மா சின்ன வயதில் இறைவனடி சேர்ந்திருக்கிறார்.

  எத்தனை செய்திகள் கனவில் வருகின்றன.
  நமக்கு உணர நேரமாகிறது.
  பாட்டி என்னை கோந்தே என்று தான் சொல்வார்.
  எல்லாப் பழைய நினைவுகளும் அலை மோதுகின்றன மனதில்.

  பிறந்த வீட்டைப் பிரியும் போது
  எதையோ அங்கே விட்டு விடுகிறோம்.
  பாசம் இரண்டாகி விடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு இன்னும் அம்மாவைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லையே
   என்ற வருத்தம் என்னை விட்டகலுவதில்லை.//

   வல்லிம்மா இப்படி பெரும்பான்மையோருக்குத் தோன்றும் இல்லையா?

   //அவள் எப்படியெல்லாம் உழைத்து எங்களைக் கவனித்துக் கொண்டார் என்று
   இதயத்தை வலிக்கச் செய்யும் நினைவுகள்.//

   ஆமாம் அம்மா.

   பாட்டி என்னை கோந்தே என்று தான் சொல்வார்.//

   ஆமாம் வல்லிம்மா நம் வீட்டிலும் எல்லொருமே கோந்தே என்றுதான் அழைப்பார்கள். அதைத்தான் குழந்தே என்று எழுதும் போது எழுதியிருக்கிறேன். இப்போது சின்ன கஸின்களையும் கூட நான் அப்ப்டித்தான் கஸின் குழந்தைகளையும் அப்படித்தான் சொல்கிறேன். பழகிவிட்டது.

   பிறந்த வீட்டைப் பிரியும் போது
   எதையோ அங்கே விட்டு விடுகிறோம்.
   பாசம் இரண்டாகி விடுகிறது.//

   ஆம் சரியான வரிகள்.

   மிக்க நன்றி வல்லிம்மா

   கீதா

   நீக்கு
 16. மனம் கனத்தது .எனக்கும் இது போல் அப்பா அம்மா இருவருக்கும் அமைந்தது .அம்மா மறைவுக்குப்பின் லேண்ட்லைனுக்கு சும்மனாலும் கால் செய்து பார்ப்பேன்  எடுக்க மாட்டாங்களான்னு நப்பாசை நானும் அப்பா அம்மா இருவரிடமும் மன்னிப்பு கேட்டுட்டேதான் இருக்கேன் :(  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சல். ஓ உங்களுக்கும் இதே போன்று அம்மா அப்பா இருவருக்குமேவா!

   //அம்மா மறைவுக்குப்பின் லேண்ட்லைனுக்கு சும்மனாலும் கால் செய்து பார்ப்பேன் எடுக்க மாட்டாங்களான்னு நப்பாசை// மனதை என்னவோ செய்துவிட்டது. நான் என் மகனைப் பற்றிய செய்திகளை அம்மாவிடம் இப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறென்.

   //நானும் அப்பா அம்மா இருவரிடமும் மன்னிப்பு கேட்டுட்டேதான் இருக்கேன் :( //

   இங்கு பாத்தீங்களா நிறைய சொல்லிருக்காங்க!பெரும்பான்மையோருக்கு இருக்கும் என்றே நினைக்கின்றேன்.

   மிக்க நன்றி ஏஞ்சல்.

   கீதா

   நீக்கு
 17. எல்லோருக்கும் ஏதாவதுஅனுபவம் இருக்கும் என் தந்தையை மிலிடரி ஆஸ்பத்கிரியில் சேர்த்து இருந்தபோது அங்கிருந்து ஒருகார்ட் வந்தது அதிலவரை DL இல் வைதிருப்பதாக இருந்ததுஅந்தவயதில் அது என்னவென்றே தெரியவில்லைஅவர் இறந்தபின் மருதுவமனைக்கு சென்று சத்தம்போட்டேன் அவர்கள் dangerously ill listஇல் இருப்பஹாகக் கூரியதும் நினைவுக்கு வந்தது அந்த DIலிஸ்ட் செய்தி அதுஎனக்கு எப்போதும் ஒரு குற்ற் உணர்வைத் தரும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி எம் பி சார் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். நீங்கள் உங்கள் தந்தையைப் பற்றிச் சொல்லியது நினைவிருக்கு சார். உங்கள் பதிவிலும் எழுதியிருந்தீங்க.

   //அதுஎனக்கு எப்போதும் ஒரு குற்ற் உணர்வைத் தரும்//

   இது போன்ற உணர்வுகள் பலருக்கும் இருக்கிறது என்றே அறிகிறேன் சார்.

   மிக்க நன்றி ஜிஎம்பி சார்

   கீதா

   நீக்கு
 18. கீதா நலம்தானே? நீண்ட இடைவெளிக்குப் பின்பு வந்திருக்கிறேன், இங்கும் ஸ்கூலும் தொடங்கிவிட்டமையால தொடர முடியாமல் இருக்கிறது புளொக்குகளை... இருப்பினும் விடாப்பிடியாக வரத் தொடங்கி இருக்கிறேன்.

  இப்போஸ்ட் முந்தநாளே தலைப்புப் பார்த்தேன், ஏதோ கதை எழுதியிருக்கிறீங்கள், கொஞ்சம் ரைம் ஒத்துக்கிப் படிப்போம் என விட்டு விட்டேன். இன்று படிக்கலாமே எனத் திறந்தால்.. உண்மைச் சம்பவம்.... ஏன் தலைப்பை அப்படிக் கொடுத்தீங்கள்.. “உண்மைச் சம்பவம்- அம்மா”.. இப்படி ஏதும் போட்டிருந்தால் எல்லோரும் ஓடி வந்திருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா. ஹைஃபைவ். இன்று நான் எங்கே அதிரா என்று கேட்டு உங்க செக் கிற்கு மெயில் அனுப்ப நினைத்திருந்தேன் பார்த்தா உங்க கமெட்ன்ட். ஆமாம் நீங்களும் நலம்தானே.

   ஹா ஹா ஹா தலைப்பு பார்த்து கதை என்று நினைத்தீங்களா.!!!

   இல்லை அதிரா இது எழுத நினைத்து எழுதவில்லை. ஸ்ரீராம் தன் கனவு பற்றி எழுதி யிருந்தார். கூடவே எனக்கு கனவு எல்லாம் அப்படி வந்துவிடுவதில்லை ஆனால் அங்கு உள்ளுணர்வு சொல்லுவது பற்றியும் வாசித்த நினைவில் இதை எழுதினேன். இப்படி அடுத்து பள்ளி பதிவுகள் எல்லாம் வரும்.

   மிக்க நன்றி அதிரா உங்களை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நேற்றே செக் வந்ததும் நினைத்தேன் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்று ஓ மை காட்!!! யானை...ஓடுறேன் ஓடுறேன்...நானும் ஓடுவதில் ப்ரைஸ் எல்லாம் வாங்கியிருக்கேனாக்கும்!!!!

   கீதா

   நீக்கு
 19. கனவுகள் பலசமயம் சும்மாவும் சில சமயம் எதையோ சுமந்து கொண்டும் தான் கீதா வருகின்றன, எனக்குப் பெரும்பாலும் வரும் கனவுகள் பலித்திருக்கின்றன.

  கவலைப்படாதீங்கோ, நமக்கு என்ன நடக்கோணும் என எழுதியிருக்கோ அதை ஆராலும் மாற்ற முடியாது.. பகவத் கீதை உபதேசத்தை நினைத்து ஆறுதல் அடையுங்கோ.

  நான் ஊரில் இருந்தபோது, ஒரு உறவுக்கார அக்கா, அவவுக்கு அம்மா இருந்தா, அந்தம்மாவுக்கு அப்போ வெறும் 60-65 வயசுகளே இருக்கும், ஆனா அந்தக்கா சொன்னா என்னிடம், தான் எதைக் கவனிக்காவிட்டாலும், வயசானோரின் விசயத்தில் படு அக்கறையாக இருப்பேன், என் அம்மா எதை விரும்பினாலும் உடனே செய்து கொடுத்துவிடுவேன், தாமதித்தால் பின்பு அவவுக்கு ஏதும் ஆகிட்டால் தாங்க முடியாமல் போயிடும் என்றா... அது என் மனதில் பதிந்திருந்தது, இப்போ உங்கள் எழுத்துப் பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.

  நாங்கள் கனடா போய் நின்று நன்கு கொண்டாடி, புதன்கிழமை இரவு பிளேனில் வெளிக்கிட்டு வியாழன் விடிய இங்கு வந்தோம், அப்பா ஃபோன் பண்ணி, நலமாக போய்ச் சேர்ந்திட்டீங்களோ எனப் பேசினார்... வியாழன் இரவு அப்பா போய் விட்டார்... திரும்பவும் வெள்ளி பகல் பிளேன் எடுத்து சனிக்கிழமை போய்ச் சேர்ந்தோம்... எவ்வளவு கவலையாக இருந்தது, இருப்பினும் நமக்கு அளந்தது அவ்வளவுதான் என மனதை தேற்றிக் கொண்டேன்.

  விதியை மாற்ற முடியாது கீதா, அதனால கடந்த காலத்தை நினைக்கக்கூடாது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் என்ன நடக்க இருக்கிறதோ அதுதான் நடக்கும். இது கனவு கூட இல்லை அதிரா. அன்று மனதில் தோன்றிய ஒன்று.

   //நான் ஊரில் இருந்தபோது, ஒரு உறவுக்கார அக்கா, அவவுக்கு அம்மா இருந்தா, அந்தம்மாவுக்கு அப்போ வெறும் 60-65 வயசுகளே இருக்கும், ஆனா அந்தக்கா சொன்னா என்னிடம், தான் எதைக் கவனிக்காவிட்டாலும், வயசானோரின் விசயத்தில் படு அக்கறையாக இருப்பேன், என் அம்மா எதை விரும்பினாலும் உடனே செய்து கொடுத்துவிடுவேன், தாமதித்தால் பின்பு அவவுக்கு ஏதும் ஆகிட்டால் தாங்க முடியாமல் போயிடும் என்றா... அது என் மனதில் பதிந்திருந்தது, இப்போ உங்கள் எழுத்துப் பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.//

   உண்மைதான் அதிரா. நல்ல விஷயம். இதை நான் எல்லோருக்கும் சொல்வதுண்டு. பின்னர் நினைத்துப் பயனில்லை.

   //நாங்கள் கனடா போய் நின்று நன்கு கொண்டாடி, புதன்கிழமை இரவு பிளேனில் வெளிக்கிட்டு வியாழன் விடிய இங்கு வந்தோம், அப்பா ஃபோன் பண்ணி, நலமாக போய்ச் சேர்ந்திட்டீங்களோ எனப் பேசினார்... வியாழன் இரவு அப்பா போய் விட்டார்... திரும்பவும் வெள்ளி பகல் பிளேன் எடுத்து சனிக்கிழமை போய்ச் சேர்ந்தோம்... எவ்வளவு கவலையாக இருந்தது, இருப்பினும் நமக்கு அளந்தது அவ்வளவுதான் என மனதை தேற்றிக் கொண்டேன்.//

   ஓ! கவலையாக இருந்திருக்கும். ஆனால் மனதிற்குக் கொஞ்சம் சமாதானம் முந்தைய நாள் வரை அவரோடும் இருந்திருப்பீங்கதானே அந்த நல்ல நினைவுகள் மனதில் நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் வேறு என்ன சொல்ல இல்லையா? கடந்த காலத்தில் நல்லதை நினைக்கலாம். இது அம்மா பற்றியது கூடுதல் அன்று நினைவுக்கு வரக் காரணம் இன்று அம்மாவின் நினைவு நாள். இது போன்று மனதில் தோன்றும் உள்ளுணர்வு எச்சரிக்கை நடந்ததில்லை அல்லது நான் தொடர்பு படுத்திப் பார்த்ததில்லை. இப்படி மனதில் தோன்றி நடந்தது இதுதான் என்பதால்.

   மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு