புதன், 19 ஆகஸ்ட், 2020

டிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)

 

Buy Pilgrim at Tinker Creek Book Online at Low Prices in India ...

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான திருமதி ஆனி டில்லார்ட் (Annie Dillard) ஒரு பிரபலமான இயற்கை ஆர்வலர், இறையியலாளர், கொலாஜிஸ்ட் மற்றும் பாடகரும் ஆவார். அவருடைய கட்டுரைகளெல்லாம் கவிதை அழகையும், ஆழமான தத்துவக் கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டவை. அவர் சொல்லிக் கேட்கும் போது புரியாத புதிரெல்லாம் எளிதாகும், எளிதென்று நாம் நினைத்ததெல்லாம் புரியாத புதிராகும் என்றும் கருதப்படுகிறது. ‘பில்க்ரிம் அட் டிங்கர் க்ரீக்’ என்பது வெர்ஜீனியாவிலுள்ள டிங்கர் கிரீக்கிற்கு அவர் மேற்கொண்ட புனித பயணத்தைப் பற்றியதுதான். இயற்கை உலகினுள் அவர் செய்த ஆன்மீக யாத்திரை. ஒரு சன்யாசிக்குத் தேவையான நிதானத்துடனும், பொறுமையுடனும் நுண்ணோக்கித் திறன் வாய்ந்த கண்களுடனும் அவர் செய்த புனிதப்பயணத்தை அவர் எழுதி முடித்த போது இதைச் சில சன்யாசிகள்தான் வாசிப்பார்கள் என்று நினைத்திருந்தாராம். ஆனால், இது எல்லோரது வரவேற்பையும் பெற்று அவருக்குப் புலிட்சர் விருதைப் பெற்றுத் தந்தது.

ஒரு கோடை காலத்தில் டிங்கர் க்ரீக்கிலுள்ள ஒரு தீவில் நீர் நிறைந்த ஒரு புல்வெளியிப் பிரதேசத்தில் நடந்து கொண்டிருந்த போது, நீர்த்தவளைகள் அவர் முன்னிலும், பக்கவாட்டிலுமாகத் தாவிப் பறந்த வண்ணமாக இருந்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது. அத்தீவின் ஒரத்தை அடைந்த போது தண்ணீரின் மேல், பாதியும், மீதி நீரிலுமாக ஒரு பச்சை நிறத் தவளை கண்ணில் பட்டது. சத்தமின்றி நடந்து, அத்தவளையிடமிருந்து நான்கடி தூரத்தில், முட்டி போட்டு அமர்ந்து அதைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்.

அதன் பெரிய கண்கள், “எனக்கு நீரில் மட்டுமல்ல நிலத்திலும் வாழத் தெரியும்” என்ற இறுமாப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது, திடீரென எதிர்பாராத ஒரு மாற்றம் அத்தவளையின் மீது நிகழ்ந்தது. காற்றை இழந்த பந்தைப் போல் சிறிது சிறிதாக அதனுடல் சுருங்கிச் சிறிதாகி மெதுவாகத் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. கூர்ந்து கவனித்த போதுதான் அத்தவளையின் அடியில் ‘பெருநீர் நாவாய்ப்பூச்சி’ (giant water bug) எனும் ஒரு நீர் வாழ் உயிரினத்தைக் காண முடிந்ததது. அது தன் பலமான முன் கால்களால் தவளையை அசையவிடாமல் பிடித்த பின், ஒரு திரவத்தைத் தன் ஊசி போன்ற ஓர் அவயத்தினால் தவளையின் உடலில் செலுத்தி, அதன் சதை எலும்பு மற்றும் உடல் உறுப்புகள் எல்லாவற்றையும் உருக்கி உறிஞ்சிக் குடித்தே விட்டது. உருகாமலிருந்தது என்னவோ தவளையும் வெளித்தோல் மட்டும்தான். அவர் கண் முன் பாவம் அத்தவளை அந்த பெருநீர் நாவாய்ப்பூச்சிக்கு இரையாகிவிட்டது.

இது போன்ற நீர் நிறைந்த பிரதேசங்களில் அச்சம்பவங்களெல்லாம் மிகச் சாதாரணமாக நிகழ்பவைதான். மாமிசம் உண்ணும் எல்லா உயிரினங்களும் தங்களது இரையை இப்படி உயிரோடு உண்பவைதான். தவளை, பாம்பு போன்றவைகள் முழுதாக விழுங்கும் போது, சிங்கம், புலி போன்றவை சிறிது சிறிதாகக்  கடித்து உண்ணும். எறும்பு போன்றவை இரையை அப்படியே சூழ்ந்து சிறிது சிறிதாகச் சுரண்டி உணவாக்கிவிடும். இவ்வுலகிலுள்ள எல்லா உயிரினங்களின் வாழ்வும் இப்படி இரையாகும் முன் கிடைக்கும் தற்காலிகமான ஒரு சின்ன இடைவெளியில்தான். அப்போது மட்டும்தான் பாதுகாப்பு. இதுதான் இயற்கையின் நீதி.  ஒன்று மற்றொன்றுள் வளமாதல், உரமாதல், உணவாதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. சிறு உயிரினங்களை உணவாக்கியத் தவளை இப்போது பெருநீர் நாவாய்ப்பூச்சிக்கு உணவானது போல, இந்தப் பெருநீர் நாவாய்ப்பூச்சி வேறு ஓர் உயிரினத்திற்கு உணவாகத்தான் போகிறது. இவை எல்லாம் இறைவன் சித்தம்.

இது போன்ற சம்பவங்களில் இறைவனின் நிலையை விவரிக்க இங்கு டில்ஆர்ட் குர்ரானிலிருந்து ஒரு வாசகத்தை எடுத்துக்காட்டாய்க் கூறுகிறார். “சொர்கமும் பூமியும் உள்ளிட்ட சகலவற்றையும் நான் வீணாக ஒரு காரணமும் இன்றி படைக்கிறேன் என்று எண்ணுகிறாயா?”. இங்கு டில்ஆர்ட், நம்மை மனித மனதால் ஊகிக்கக் கூட முடியாத எண்ணிக்கைகளிலும், வகைகளிலும் படைக்கப்பட்ட உயிரினங்களையும், சூழல்களையும் பற்றி வியப்போடு எண்ண வைக்கிறார். இங்கு 17-ம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த கிறிஸ்தவ எதிர் வாதம் செய்பவரும், கணித மற்றும் இயற்பியல் மேதையுமான பிளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) இன் கருத்தையும் முன் வைக்கிறார்.

அவர் கருத்துப்படி மனித நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. நாம் கண்டும், கேட்டும் அறிந்து கொள்வதில் பெரும்பான்மையானவை ஏற்றுக் கொள்ள முடியாதாவைகளாகவும், மிகக் குறைந்த விசயங்கள் மட்டுமே ஏற்புடையாதாகவும் இருக்கின்றன. ஒருவேளை இறைவன் தன் படைக்கும் வேலைகளை முடித்த பின் என் வேலை முடிந்தது என்று முகம் திருப்பிச் சென்றுவிட்டாரோ? என்ற எண்ணம் சிலருக்கு வரலாம்.

இங்கு டில்ஆர்ட், ஐன்ஸ்டைனின் வார்த்தைகளை நினைவு கூர்கிறார். “இறைவன் புரியாத புதிர். ஆனால் தீங்கிழைக்காதவர். உண்மையிலேயே ஐன்ஸ்டைன் இறைவன் என்று குறிப்பிட்டது இயற்கையைத்தான். இறை எனும் இயற்கை தன் ரகசியங்களை மறைத்து வைத்திருப்பது அதன் பிரமிக்க வைக்கும் அற்புதத்தாலன்றி, மலிவான சூழ்ச்சி அல்லது தந்திரங்களாலல்ல. இறைவன் மறைந்திருக்கவில்லை. எங்கும் நிறைந்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் அவற்றிற்கான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றை வரையறை செய்திருக்கிறார். பொங்கி எழும் கடலிடமும், “உன் எல்லை இதுவரை. இதை மீறி வர வேண்டாம்” என்று கட்டளையிட்டிருக்கிறார். அதனால் தவளை, பெருநீர் நாவாய்ப்பூச்சிக்கு இரையானது பிரமிப்பூட்டும் இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகக் காணும் மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி இச்சம்பவத்தின் வாயிலாகக் குர்ரான் மற்றும் பைபிளை மேற்கோள் காட்டி மிக அருமையாக இயற்கையின் பிரமிக்க வைக்கும் அற்புதங்கள் எப்படி நமக்குப் புரியாதவைகளைப் புரிய வைப்பதுடன், புரிந்தவற்றை ஆழமாக முழுமையாகப் புரிய வைத்து நம் மனதை தெளிவுபடுத்துகிறது என்பதை விளக்குகிறார்.

இதை வாசிக்கும் போது உங்கள் அனைவரது மனத்திரையில் தோன்றும் அதே பாடல் என் மனத்திரையிலும் தோன்றத்தான் செய்தது. என் தமிழாசிரியை சுருளியம்மாவின் உருவம். செவியில் அவரது குரல்

உலகம்யாவையும் தாமுளவாக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கா

அலகிலா விளையாட்டுடை யாரவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!

இறுதியாக டில்லார்ட் கேட்கும் ஒரு கேள்வி. உண்மையிலேயே அது ஒரு பிரமிப்பூட்டும்கேள்விதான். அறியாமை இருளைக் கடக்க, காலமாம் கடலில் பயணிக்கும் நாம் கப்பலில் வசதியாக அமர்ந்து நம் முழு கவனத்தையும் நம் கைகளிலுள்ள சீட்டுகளில் செலுத்தி, கப்பலையும், கடலையும் நம் பயணத்தையும் மறந்து சீட்டு விளையாடி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பது முறையா? என்பதே அக்கேள்வி. அவர் கேட்பது சரிதானே?  

-----துளசிதரன்

 

36 கருத்துகள்:

 1. கடைசி கேள்வி நல்ல கேள்வி.  வாழ்வின் பொருளை உணர்ந்தவர் யார்?  யாரால் படைக்கப்பட்டது என்றுதான் யாருக்குத் தெரியும்?  நம் எண்ணங்கள் யாவுமே சரியா?  எதற்காவது நிரூபணங்கள் காண்பிக்க முடியுமா?  ஆன்மீகமும், விஞ்ஞானமும் ஒரே உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் எண்ணப்பபறவைகள்.  சமயங்களில் ஒன்று உயரும் ஒன்று தாழும்.  நல்லதொரு புத்தகம் பற்றிய பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அவரது கேள்வி நல்ல கேள்விதான். உங்கள் கேள்விகளும் அபாரமாக இருக்கிறதே!

   மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

   துளசிதரன்

   நீக்கு
 2. நல்லதொரு நூல் அறிமுகம் துளசிதரன் ஜி. வாசிக்க முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி.

   துளசிதரன்

   நீக்கு
 3. புத்தக அறிமுகம் சூப்பர் .கடைசிப் பாரா ரொம்பவே சிந்திக்க வைத்தது . முழு வாழ்க்கையையுமே சீட்டாடினா மாதிரி தோணுது இப்ப

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலருக்கும் இந்த எண்ணம் வரலாம் இல்லையா சகோதரி

   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி அபயா அருணா

   துளசிதரன்

   நீக்கு
 4. அருமையான அறிமுகம். இதுவரை வாசித்ததில்லை. வாசிப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா

   துளசிதரன்

   நீக்கு
 5. சிறப்பான கேள்வி...

  இதற்கு (எழுதி வைத்திருக்கும்) கேள்வி அதிகாரத்திலிருந்து :

  குறள் எண்ணை கவனித்தாயா...? காதுகளால் கேட்டு கேட்டறியும் பல சுவைகளை உணர்ந்து சிந்திக்க தெரியாதவன் ஒரு 420... அட குறள் எண்ணையும் சொன்னேன்... அவ்வாறு தெரியாதவன் வாயால் பல சுவை இன்பங்களை நுகருப்பவன், இருந்தாலும் ஒன்று தான்... இறந்தாலும் ஒன்று தான்...என்ன?

  செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
  அவியினும் வாழினும் என்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக அருமையான குறளையும் சொல்லிக் கருத்தையும் சொல்லியிருக்கிறீர்கள் டிடி

   மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 6. அடடே... சொர்க்கம் பூமி எல்லாம் சொல்லி உள்ளார்களே .. திருமதி ஆனி டில்லார்ட் மற்றும் பதிவில் குறிப்பிட்ட பலரும் திருக்குறளை படிக்கவில்லை போலும்...

  முதல் அதிகார தலைப்பில் கடவுள் எனும் சொல் ஒருமுறை (கடவுள் வாழ்த்து - இதிலும் முரண் உள்ளது) - மற்ற குறள்களில் தெய்வம் எனும் சொல் ஆறு முறை வந்தாலும், அதன் விளக்கங்கள் வேறு...

  எந்நேரமும் கடவுளை நினைத்துக் கொண்டிருக்கும் கடவுள் மறுப்பாளர்களுக்கும் குறள்களில் தகுந்த பதிலுண்டு... மற்றவர்களுக்குக் குறளின்படி → (1) பொன்னுடல் தன் பொருள் பூமி - பெண்டு புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும் - அன்னை பிதா இன்றி ஏது...? - மரம் ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது...? ∬ (2) மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்... அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்... தாயிற் சிறந்த கோயிலும் இல்லை... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை...

  ஆனால், ஐயன் இயற்கையை மட்டும் இறைவன் என்று சொல்லவில்லை... இன்னும் உள்ளன... பேசுவோம்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக அருமையான விரிவான கருத்துரை டிடி.

   மிக்க நன்றி உங்களின் விரிவான விளக்கமான கருத்துரைக்கு

   துளசிதரன்

   நீக்கு
 7. அறிமுகப்படுத்திய விதம் அருமை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி

   துளசிதரன்

   நீக்கு
 8. நூல் விமர்சனம் அருமை .
  கடைசி கேள்வி சிந்திக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு

   துளசிதரன்

   நீக்கு
 9. நல்ல புத்தக அறிமுகம்.

  பயணத்தின் நோக்கம் அறியாமல், விளையாட்டுத்தனமாக இருப்பவர்கள்தாம் உலகில் அதீதப் பெரும்பான்மையினர்.

  புத்தகம் சிந்திக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணத்தின் நோக்கம் அறியாமல், விளையாட்டுத்தனமாக இருப்பவர்கள்தாம் உலகில் அதீதப் பெரும்பான்மையினர்.//

   ஆம்! எப்பயணமாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றையும் ரசிக்கலாம். எல்லாமே இயற்கையின் படைப்பு எனும் போது நாம் அதன் முன் ஒன்றுமே இல்லை என்பதும் விளங்கும்.

   புத்தகம் சிந்திக்க வைக்கிறது//

   இது பாடத்திட்டத்தில் உள்ளது. இதை மொழி பெயர்த்துச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று தோன்றியதால் பதிவாக்கினேன். விருப்பமுள்ளவர்கள் வாசிக்கலாமே என்றும்.

   மிக்க நன்றி நெல்லைத் தமிழன் உங்கள் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 10. எல்லா உயிரினங்களின் வாழ்வும் இப்படி இரையாகும் முன் கிடைக்கும் தற்காலிகமான ஒரு சின்ன இடைவெளியில்தான்.

  மனித குணமும் இப்படித்தான் இருக்கிறது
  அருமையான விமர்சனம்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பர் கரந்தையார் உங்கள் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 11. அழகிய கட்டுரை வடிச்சிருக்கிறீங்கள் துளசி அண்ணன். உண்மைதான் பலவற்றைக் கூர்ந்து அவதானிக்கும்போது நிறைய விசயங்கள் நம் அறிவுக்குப் புலப்படும்.. இந்த உலகில் எல்லாமும் அநிச்சையே.... நாம் மனதில் நிறைய ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் வைத்திருப்பதனால் நமக்கு இப்படிச் சிந்திக்க மனம் இடம் கொடுப்பதில்லை, பொறுமையாக சிந்தனைக்கு நேரம் ஒதுக்கவும் முடிவதில்லை... ஒருவித ஞான நிலைக்கு வந்தோரால் மட்டுமே திருமதி அன்னி போல இப்படிச் சிந்திக்க முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி அதிரா.

   //நாம் மனதில் நிறைய ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் வைத்திருப்பதனால் நமக்கு இப்படிச் சிந்திக்க மனம் இடம் கொடுப்பதில்லை, பொறுமையாக சிந்தனைக்கு நேரம் ஒதுக்கவும் முடிவதில்லை...//

   ஆசைகள் ஒருபுறம், கவலைகள் பொறுப்புகள் மறுபுறம்.

   சில நாட்களாகக் காணவில்லையே. வேலைப் பளுவோ.

   வேலைப்பளுவிடையிலும் வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சகோதரி அதிரா

   துளசிதரன்

   நீக்கு
  2. அதிரா நீங்க வரப்ப நான் பிஸியாகிறேன். ஹா ஹா ஹா

   இப்ப வந்தாலும்..கொஞ்சம் கொஞ்சம் வேலை கூடி இன்னும் கொஞ்ச நாள் பிறகு கண்டிபாக ஒரு வாரமேனும் வர இயலாது போகும் அடுத்த மாதம்.

   கீதா

   நீக்கு
 12. இது நூலின் அறிமுகமா? வாழ்வின் அறிமுகமா? அருமையான பதிவு.
  ஒரு நாளும் வாழ்வது அறியார் என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூலின் அறிமுகம் என்பதை விட வாழ்வின் அறிமுகம் எனலாமோ? ஐயா

   கீதா

   நீக்கு
 13. இது நூலின் அறிமுகமா? வாழ்வின் அறிமுகமா? ஒருநாளும் வாழ்வது அறியார் என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது பாடத்திட்டத்தில் நூல். இங்கு பகிர்ந்தால் நன்றாக இருக்குமே என்றும் வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் வாசிக்கலாமே என்றும் மொழிபெயர்த்துப் பதிவாக்கினேன், ஐயா.

   மிக்க நன்றி ஐயா வள்ளுவரின் வாக்கும் சொன்னமைக்கு

   நன்றி ஐயா உங்களின் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  நல்லதொரு நூல் அறிமுகம். அந்த தவளையை முன்னுதாரணமாக காட்டி வாழ்கையின் இன்ப துன்பங்களை சமமாக பார்த்து, இயற்கையை இறைவனாக, வாழ்வில் வரும் எதையும் அந்த இறைவனின் கட்டளைகளாக எடுத்துக் கொண்டால் நம் மனம் அமைதியாக எதிலும் ஈடுபட்டு லயிக்கும் என்பதை அழகாகவும் ஆழமாகவும் எடுத்துக் கூறியுள்ளார் கதாசிரியர். பதிவு மிகவும் அருமையாக உள்ளது. இந்தப்பதிவுக்கு வர எனக்கு கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. நல்லதொரு நூல் அறிமுகத்துக்கு அன்பு நன்றி!

  பெருநீர் நாவாய்ப்பூச்சி [ தமிழாக்கம் அருமை!] தவளையை உறிஞ்சியதைப்படித்த போது, மனிதர்கள் வாழ்வும் இப்படித்தானே ஒரு நிமிடத்தில் திடீரென்று சுருங்கி விடுகிறது, அதற்கும் எத்தனை ஆட்டம், துரோகம், மாசுபட்ட எண்ணங்கள், வஞ்சகங்கள் என்று தோன்றியது!
  இறுதிக்கேள்வியும் அருமை!

  பதிலளிநீக்கு
 16. ஒரு வித்தியாசமான நூலை, வித்தியாசமாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். கடைசி கேள்வி அருமை!

  பதிலளிநீக்கு

 17. காரணமில்லாமல் எந்த படைப்பும் நிகழ்த்தப்படவில்லை என்பது நிச்சயம். எளிமையான நிகழ்ச்சியின் மூலம் ஆழமான சத்தியத்தை உரைக்கும் அருமையான படைப்பு.

  "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,

  நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,

  அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!

  அன்னவர்க்கே சரண் நாங்களே"

  பள்ளிக்கூட நாட்களில் படித்த கம்பனின் இறைவணக்க செய்யுளை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கும் மிக்க நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 18. பெருநீர் நாவாய்ப்பூச்சி முதலாளி வர்க்கமாகவும், அந்த தவளை தொழிலாளி வர்க்கமாகவும். என் சிந்தையில் தோன்றுகிறது ... இயற்கையே இறைவன் என்பது உண்மை. "தக்கெனப் பிழைக்கும்" என்பது இயற்கையின் மகா தத்துவம்...

  பதிலளிநீக்கு
 19. Annie Dillard-இன் புத்தகத்தை அறிமுகம் செய்திருப்பது நன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் வந்த அமெரிக்க non-fiction work. இதை இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள் என்பதே சந்தோஷத்திற்குரிய விஷயம்.

  ஆனியின் வீடு அமைந்திருந்த இயற்கைச் சூழல், குறிப்பாக அந்த சிறு ஓடை அருகிலேயே அமைந்திருந்தது அவர் செய்த புண்ணியம். இயற்கையோடு ‘இருந்தால்’தானே ’கவனிக்க’முடியும்? அது அவருக்கு நடந்து, புத்தகமாகவும் வெளிவந்துவிட்டது அவரது சின்ன வயதிலேயே. பூலிட்சர் வாங்கியது 1975-ல் !

  பதிலளிநீக்கு
 20. இப்ப எல்லாம் வாசிப்பு உணர்வு குறைந்துவிட்டது பொருளாதார நெருக்கடியால்!

  பதிலளிநீக்கு
 21. நல்ல விமர்சனம்;நூலறிமுகத்திற்கு நன்றி திரு.துளசிதரன் !!

  கட்டுரையின் கடைசி பாராவில் வரும் கேள்வியுடன் பொருந்திப் போகின்றபடி மிக சமீபத்தில் படித்த ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது:

  பிரபல மலையாள கதாசிரியர் K.R. மீரா அவர்கள் , சக எழுத்தாளர் எஸ். ஹரிஷ் அவர்களின் படைப்புகளைப் பாராட்டி பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் மேற்கோள் காட்டிய, ஹரிஷ் எழுதிய ஒரு வாசகம்....

  “பஸ் பிரயாணத்தின் போது ஒரு சாதாரண சுவாரசியத்துடன், புறக்காட்சிகளை பார்த்து ரசிக்கும்படி இருக்க முடியவில்லையெனில், வீடுகளும், மரங்களும், மனிதர்களும், எதனால் பின்னோக்கிச் செல்கின்றன என்று சிந்திக்க முடியவில்லையெனில், அந்த மனிதனுக்கு வாழ்ந்து சலித்து விட்டது என்றே அர்த்தம்!”

  ''ബസ് യാത്രയ്ക്കിടെ കൗതുകത്തോടെ പുറത്തേക്കു നോക്കിയിരിക്കാന്‍ കഴിയുന്നില്ലെങ്കില്‍ എന്തുകൊണ്ടാണ് വീടുകളും മരങ്ങളും ആളുകളും പുറകോട്ടോടുന്നത് എന്നു ആലോചിക്കാന്‍ പറ്റുന്നില്ലെങ്കില്‍ ഒരാള്‍ ജീവിച്ചു മടുത്തു എന്നാണ് അര്‍ത്ഥം. അയാള്‍ പോത്തിന്റെ പുറത്തുവരുന്ന ഒരാളെ കാത്തിരിക്കുകയാണ്.'

  பதிலளிநீக்கு
 22. அன்பின் இனிய
  தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...

  பதிலளிநீக்கு