திங்கள், 28 ஜூன், 2021

மர்மம் – துப்பறிவாளினி – செல்லம்

 

மர்மம்

வீட்டில் ஒரு மாதமாக மர்மம். சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில தினங்கள் காலையில் அடுக்களையிலிருந்து ஓடுவதையும் கண்ணால் கண்டோம். உறுதியானது. நேரில் பார்த்த சாட்சி.

இது ஒரு மாதம் முன்பு. அப்போது கண்ணழகி காலையில் அடுக்களையில் மோப்பம் பிடித்து அந்தப் பாதையை அப்படியே நூல் பிடித்து குளியலறை வரை மோப்பம் பிடித்துக் கொண்டே சென்று அங்குமிங்கும் ஓடிப் பிடிக்க முயன்றாள் ஆனால் பொருட்கள் அவளுக்குத் தடையாக இருந்தன. ராத்திரி கூட ஓடியிருக்கிறாள் என்று சில தடயங்கள் அறிவித்தது.

சில பொருட்கள் அல்லது இடங்களின் முன் காவல் இருப்பாள். தலைமறைவான எலியார் எப்போது வெளியில் வருவார் என்று ஆனால் கொஞ்ச நேரத்தில் அவள் இலக்கு மாறிவிடும். இதுதாம் பூஸாருக்கும் பைரவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

அது ஒரு காலம்! நம் வீட்டுச் செல்லம் போட்டுத்தள்ளிவிட்டுக்  காவல் காப்பாள். அவர்களின் சட்டத்தில் போட்டுத் தள்ள இடம் உண்டு. பாவ புண்ணியக் கணக்கு உண்டா என்று தெரியவில்லை! இப்போது அவள் ஓடி சாகசம் செய்யும் நிலையில் இல்லை. ஏன்? தகவல் கீழே. தலைப்பு செல்லம்.

என்கௌண்டர் தொடங்கலாம் - விஷம் வைக்கலாம், ஒட்டிக் கொள்ளும் அட்டை வைக்கலாம் என்று உள்துறையில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

என்கௌண்டருக்கு நான் எதிரி.  போட்டுத்தள்ள நமக்கு என்ன அதிகாரம்? எலியாருள்ளும் உயிர்தான். வெளித்தோற்றம்தான் வேறு. மனிதர்கள் யாரேனும் நமக்குத்  தொந்தரவு கொடுத்தால் சட்டத்தைக் கையில் எடுத்து நாம் என்ன போட்டுத் தள்ளுகிறோமா? அவர்கள் உலகச் சட்டம் வேறு.  என்று லா பாயின்ட், தத்துவம் எல்லாம் பேசினேன்.

அதுவும் இது உள்வீ(நா)ட்டு விவகாரம். நாம் அவரைப் பிடித்து துரத்திவிட்டு மீண்டும் உள்நுழையாமல் எல்லைப் பாதுகாப்பு போடுவோம். பார்த்துக் கொள்வோம் என்று அரசியல் பேசினேன். பொறி எங்கு கிடைக்கிறது என்று பார்த்தால் அருகில் எங்கும் இல்லை. சந்தையில் கிடைக்கும் ஆனால் சந்தை இப்போது இல்லை. இந்த கோவிட் சமயத்தில் அலைய தயக்கம்.

ஸ்காட்லாந்து யார்ட், லண்டன், ஆரேகன் என்று வெளிநாட்டு நிபுணர்களை ஏற்பாடு செய்யலாமா என்றும் யோசித்தேன்! அவர்கள் எல்லோரும் அப்பாயின்ட்மென்ட் கொடுப்பது கடினம்.

துப்பறிவாளினி

நான் தான்!!! தடயங்கள் கிடைத்தன. அதை வைத்து அவர் எங்கெங்கு செல்கிறார் எங்கு தலைமறைவாகிறார், என்னென்ன பொருட்களைத் திருடுகிறார், சாப்பிடுகிறார் என்று ஆராய்ந்தேன்.

காணாமல் போனவை : சுவாமி முன் அரிசி மாவில் போடும் கோலம் (நான் வாசலிலும் அரிசிமாவுதான். கோலமாவு என்று விற்பது வாங்குவதில்லை). விளக்குத் திரி, சுவாமிக்கு வைக்கும் வீட்டில் பூத்த மல்லிப் பூக்கள், தவறிப் போய் பீன்ஸ் காரட் ஏதேனும் ஒன்றிரண்டு வெளியில் இருந்தால் பீன்ஸ் காணாமல் போயிருக்கும். காரட் துருவப்பட்டிருக்கும். காணாமல் போனவை ஏதேனும் டப்பாவின் பின்னால் இடுக்கில் இருக்கும்.

அஹிம்சை வழியில் முதலில் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று அலசியபோது அவருக்கு வெங்காயம், பூண்டு பிடிக்காது. வெட்டி அவர் வரும் இடங்களில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தால் வரமாட்டார் என்று ஒரு தகவல். ஒரு சந்தேகம் முளைத்தது. வெங்காயம் பூண்டு போட்ட மசால் வடைக்கு ஆசைப்பட்டு வந்துதானே பொறியில் சிக்குவார்! ஒரு வேளை பூண்டும் வெங்காயமும் பச்சையாகப் பிடிக்காது போலும்! சரி வந்தது வரட்டும். அதையும் வெட்டிப் போட்டுப் பார்த்தேன்.

முதல் நாள் வெற்றி. குறிப்பாகப் பொருள்கள் எதுவும் கலைந்திருக்கவில்லை. காணாமல் போகவில்லை, கோலம் உட்பட. அவரது கக்காவும் இல்லை. ஆனால் இதில் ஒரு சங்கடம். வெங்காயம் பூண்டு மணம் ஓரிரு நாள்தான். பின்னர் மீண்டும் வருகை இருக்கும். இதற்காகக் கிலோ கிலோவாக வெங்காயம், பூண்டு வாங்க முடியுமா? நிதித் துறை பின்வாங்கியது.

சரி அடுத்த அஹிம்சை நடவடிக்கை. கடலைமாவு, பாராசிட்டமால், (எலியாருக்கும் ஜுரம் வருமா அல்லது ஜுரம் வரவழைக்குமோ?!!) தக்காளிச்சாறு என்று ஏதோ சில குறிப்பிட்ட அளவு கலந்து உருட்டி மணிக் கொழுக்கட்டை சைசில் லட்டு பிடித்து வைக்கச் சொல்லி ஒரு தகவல். உங்களுக்குக் கூட லட்டு பிடித்து தந்ததில்லை ஆனால் எலியாருக்கு லட்டு பிடித்தேன். ஹூம் நான் செய்த லட்டு பிடிக்கவில்லை போலும் எலியார் சீண்டவில்லை. அவருக்கும் நம்ம டெக்கினிக்குகள் தெரியாமல் இருக்குமா என்ன?! தப்பித்துத் தலைமறைவானார்.

இத்தனைக்கும் வீட்டிலுள்ள ஒட்டைகள் எல்லாம் அடைத்தாயிற்று. நாங்கள் ஒவ்வொரு செக் ஆக வைக்க வைக்கத் தடயங்கள் மாறிக் கொண்டே இருந்ததால் எப்படி வந்து எங்கு சென்று ஒளிகிறார், தலைமறைவாகிறார் என்று ரொம்பக் குழப்பமாக இருந்தது. மூளையில் பளிச். கண்ணழகி குளியலறை வரை நூல் பிடித்துச் சென்று முகர்ந்தது நினைவுக்கு வர…

குளியல் அறையில் இருக்கும் அந்தக்கால முறையில் சுடுதண்ணீர் போடும் சிமென்ட் தொட்டி உட்புறம் ஒரு பானை இருக்கும் (பானை இன்பில்ட் போன்று வெளியில் எடுத்துக் கழுவி எல்லாம் செய்ய முடியாது) அடியில் விறகு வைக்க வெளியிலிருந்து ஒரு பெரிய ஓட்டை இருக்கும். அதற்குள் லைட் அடித்துப் பார்த்தால் சாம்பல் மண் என்று ஒரு பக்கத்தில், ஓட்டையும் இருப்பதாகத் தெரிந்தது. ஓ! இதுதானா! என்று வெளிப்புற ஓட்டையை தகரம், கல் என்று மூடி கம்பிகள் இல்லா  சிறையாக்கினோம்.

இரவு குளியலறைக் கதவின் தாழ்ப்பாளைச் சரிசெய்து நன்றாக மூடி விட்டோம். மறுநாள் குளியலறையைத் திறந்த போது எலியாரின் துவம்சம் தெரிந்தது. துடைப்பக்கட்டை, மாப்பர் எல்லாம் கீழே விழுந்து குவளை எல்லாம் புரண்டு இருந்தது. அவரது கக்கா வேறு. அடப்பாவி! சிறைக்கதவை உடைத்து தப்பித்துவிட்டாரா? ஆராய்ந்தால் அவை எல்லாம் சரியாகத்தான் இருந்தன.

குளியலறையில் இருக்கும் பரண் கண்ணில் பட, அதில் வீட்டு உரிமையாளர் கச்சடா சாமான் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார். சரி அதில்தான் தலைமறைவாகி இருக்க வேண்டும் என்று ஒரு யூகம்.

மறுநாளும் இதே போல் பாதுகாப்பு செய்ய எலியார் உள்ளே துவம்சம் செய்திருக்க சுவாமி முன்னான கோலம் அழிந்திருக்கவில்லை. சரி அவர் ராஜ்ஜியம் குளியலறையோடு என்பது தெரிந்திட, எப்படியாவது வெளியேற்றலாம் என்று நினைத்து வழக்கம் போல சுவாமி முன்  கோலம் போட்டுவிட்டு  மொட்டைமாடி சென்று வந்து பார்த்தால் சுவாமி முன்  போட்டிருந்த கோலம் அழிந்திருந்தது.

எனக்கு ஆச்சரியம். என்னடா இது ஒரு 10 நிமிடத்தில் இப்படியா என்று தோன்றிட கணவர் சொன்னார் ஒரு வேளை பல்லியாக இருக்கலாம். அரிசிமாவைச் சாப்பிட்டது பல்லியாரா? எலியாரா? எனக்கோ, குளியலறைக் கதவு திறந்திருந்ததால், “இரண்டு நாள் என்னை அடைத்து வைச்சீங்கல்ல. பாருங்க நான் இப்ப அடுக்களையில் புகுந்துட்டேன் என்று கோபத்தில் எலியார் சவால் விடுவது போல் இருந்தது.

மீண்டும் இரவு குளியலறைக் கதவை மூடி வைத்துப்படுத்தோம்.  மறுநாள் பொருட்கள் எல்லாம் அப்படியேதான் இருந்தது. அவரது கக்காவும் இல்லை. அப்போ அடுக்களையில்தான் தலைமறைவு.

உன் அஹிம்சை செல்லாது, மறைமுக என்கௌண்டர் தான் சரி என்று எலியாருக்கான விஷ கேக்குகள் – பச்சைக்கலரில் எள்ளு கடலைமிட்டாய் போல இருப்பது - வாங்கிவந்து வைத்தார் கணவர். நானோ, “பிள்ளையாரப்பா எலியைப் பிழைக்க வைத்துவிடு. உனக்கு தேங்காய் உடைச்சு கொழுக்கட்டை, மோதகம் எல்லாம் செஞ்சு தரேன்” என்று!!! வேண்டுதல் வைத்தேன்! எலிக்காக வேண்டிக் கொண்டவர் யாரேனும் இருந்தால் என் குழுவில் இணையலாம்!

விஷக் கேக்கில் ஒரு முனை மட்டும் மிஸ்ஸிங்க். அதுவும் மிகச் சிறிதளவே. என் பிரார்த்தனை பலித்ததோ? அந்தச் சிறிய அளவை ஒரு வேளை பல்லியார் சாப்பிட்டிருப்பாரோ? இல்லை எலியாருக்கு விஷக் கேக்கும் பழக்கமாகி சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் ஆகிவிட்டாரா, அல்லது தெரிந்து சீண்டவில்லையா?

குளியலறையில் எந்தத் தடயமும் இல்லை. கோலம் மட்டும் அழிந்திருக்கிறது. ஆனால் அரிசி மாவு வைத்திருக்கும் கிண்ணத்தில் மாவில் எந்தத் தடயமும் இல்லை. கக்கா கூட இல்லை. பல்லியார்தான் கோலத்தைக் கலைத்திருப்பாரோ? எலியார் பரணில் இருக்கிறாரா? ஒரே மர்மமாக இருக்கு.

தலைமறைவாகிய பெண். வயது 6 மாதம். கொழு கொழு உடம்பு. கண்டால் துப்பறிவாளினி எனக்குத் தகவல் சொல்லிடுங்க!  அடையாளம் - அவர் வால் நுனியில் ஒரு சிறு வெட்டுக்காயம் இருக்கும்.

செல்லம்:

செல்லத்திற்கு வயது 12 முடிந்து 4 மாதங்கள். 10 நாட்களுக்கு முன் தொடங்கியது மூச்சுவிடச் சிரமப்படுகிறாள். பலசமயங்களில் முகத்தை உயரே தூக்கிக் கொண்டு மூச்சு விடுகிறாள். மார்புப் பகுதி பெரிதாகி வீங்கியது போல் இருக்கு. பல்மொனரி எடிமா. நுரையீரல் உள்ளே அல்லது வெளியே நீர் கோர்த்திருக்கலாம். மருத்துவரை வீட்டிற்கு வந்து பார்க்கச் சொல்லி மகன் அவரோடு பேசினான். ஹார்ட் ஃபெயிலியர் என்றான் மகன். இசிஜி, எக்ஸ்ரே எடுக்கச் சென்றால் செல்லம் ஒத்துழைக்கவில்லை. மகனும், பரவாயில்லை விடு என்று மாத்திரை சொன்னான். கொடுத்து வருகிறோம்.

இவளை ரெஸ்டில் இருக்க வை என்று சொல்கிறான்!! எப்படி?

மகனிடம் சொன்னேன். “என்னடா இவளுக்கா ஹார்ட் ஃபெயிலியர்? என்ன டயக்னாசிஸ் செய்யற? மாடி ஏறுகிறாள், தெருவில் செல்லங்கள் போனா ஒடிச் சென்று குரைக்கிறாள் வம்பு வளர்க்கிறாள்! உள்ளே வந்ததும் தலையைத் தூக்கி வைத்துக் கொண்டு மூச்சு விடச் சிரமப்படுகிறாள்! 

அவன் சிரித்துவிட்டான். “ம்மா ரொம்ப முடியலைனாதான் அடங்கி ஒடுங்கி இருப்பாங்க இல்லைனா கடைசி வரை அப்படித்தான் இருப்பாங்க. எனிவே அவள் காலம் முடியப் போகிறது. அவளை நிறைய கொஞ்சு, தடவிக்கொடு, சந்தோஷமாக இருக்கட்டும் என்றான்.

அவள் கஷ்டப்படாமல் தன் இறுதி மூச்சு வரை சந்தோஷமாக இருக்கட்டும்!

(சில காரணங்களினால் (செல்லம் காரணமல்ல) மீண்டும் இணையம் பக்கம் வரமுடியுமா என்று தெரியவில்லை. முடிந்தால் நேரம் கிடைத்தால் இடையில் வருகிறேன். )

-----கீதா

28 கருத்துகள்:

  1. துப்பறிவாளினியின் முன்னெடுப்புகள் வியக்க வைத்தன...!

    செல்லத்திற்கு ஒன்றும் ஆகாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா டிடி அத்தனை வியப்பாக இருக்கிறதா எல்லாரும் செய்யக் கூடியதுதான் நான் சும்மா பில்டப் கொடுத்தேன்.

      மிக்க நன்றி டிடி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அமர்க்களமாக நகைச்சுவையாக மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.

    இறுதியில் செல்லத்தைப்பற்றி கூறியது மிகவும் வருத்தத்தை தருகிறது. அதன் ஆரோக்கியம் நன்றாக இருக்க நானும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    எனக்கொரு சந்தேகம்.. உங்கள் செல்லத்தின் தேடுதல் வேட்டையில் அதன் மூச்சுக்காற்று பட்டு ஸ்வாமி முன் மாவுக்கோலம் கலைகிறதோ..? அந்த இடத்தில் வேறு எந்த பிராணியும் அந்த வேலையில் ஈடுபடவில்லையென நினைக்கிறேன். ஏதோ என் (இந்த துப்பறிவாளினியின்) கண்டுபிடிப்பு... அது சரியா என நீங்கள்தான் உடனிருந்து கண்காணிப்பு செய்ய வேண்டும். :) பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு அருமை. அமர்க்களமாக நகைச்சுவையாக மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.//

      மிக்க நன்றி கமலாக்கா. நகைச்சுவையாக இருக்கிறதா?!!! எழுத முயன்றேன் ஆனால் முன்பு போல் முடியவில்லை கமலாக்கா...

      விரிவாக பதில் கொடுக்க முடியவில்லை கமலாக்கா..ஸாரி ஓகேவா..

      //எனக்கொரு சந்தேகம்.. உங்கள் செல்லத்தின் தேடுதல் வேட்டையில் அதன் மூச்சுக்காற்று பட்டு ஸ்வாமி முன் மாவுக்கோலம் கலைகிறதோ..? அந்த இடத்தில் வேறு எந்த பிராணியும் அந்த வேலையில் ஈடுபடவில்லையென நினைக்கிறேன். ஏதோ என் (இந்த துப்பறிவாளினியின்) கண்டுபிடிப்பு... அது சரியா என நீங்கள்தான் உடனிருந்து கண்காணிப்பு செய்ய வேண்டும். :) //

      ஹாஹாஹாஹா

      பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி//


      மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  3. நல்லதொரு பதிவு. துப்பறியும் நிபுணியாக மாறி விட்டீர்களே!

    செல்லம் - நல்லதே நடக்கட்டும். கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது கடினம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்ஜி . ஆமாம் செல்லம் கஷ்டப்ப்டுவது மனதிற்கு ரொம்ப வருத்தம்...ஆனால் வேறு சில கடைமைகளும்...

      மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  4. அடக் கடவுளே! கண்ணழகிக்கும் வயதாகி விட்டதா? என்ன தான் இயற்கை மரணம் என்றாலும் நம்மால் எல்லாம் தாங்க முடியுமா? என்னவோ போங்க. மறுபடி இணையத்துக்கும் வர முடியாதுனுட்டீங்களே! அதுக்கு வருந்தறதா? செல்லத்துக்காக வருந்தறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா கண்ணழகிக்கும் வய்தாகிவிட்டது.

      ஆனான் தாங்க முடிவதில்லை கீதாக்கா.

      வேறு கடமைகள். எனவே இடையில் நேரம் கிடைக்கறப்ப வரேன்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  5. இந்த எலியார், பூனையார், நாயார் முக்கியமாய்ச் சுப்புக்குட்டியார் எனப்படும் பாம்பார் எல்லோருடனும் எங்களுக்கு அதீதமான நட்பு! எல்லோருமே நம்ம வீட்டில் வந்து இஷ்டத்துக்குக் கும்மாளம் போட்டிருக்காங்க. இதிலே மூஞ்சுறுவும் உண்டு. எல்லாமும் அப்போது எழுதினேன். தேடிப் பார்த்துச் சுட்டி தரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://sivamgss.blogspot.com/2007/10/blog-post_02.html நம்ம வீட்டில் கொட்டம் அடிச்ச எலிகளைப் பத்தி இங்கே எழுதி இருக்கேன். இன்னமும் பெருச்சாளிக் குஞ்சுகளை எல்லாம் வளர்த்திருக்கோம். பாம்புக்குட்டிகள், குட்டி நாய்கள், குட்டிப் பூனைகள்னு வளர்த்திருக்கோம். எல்லாத்தோடயும் நெருங்கிய பழக்கம். :)

      நீக்கு
    2. ஆமாம் கீதாக்கா இதுங்களோட உங்க நட்பு பற்றி சொல்லிருக்கீங்க .

      உங்க சுட்டியும் பார்க்கிறேன். நேரம் கிடைக்கும் போது. நோட் செய்துகொண்டே ந்.

      எனக்கும் இதுங்க எல்லாருடனும் நட்பு உண்டு. எதையும் கொல்ல மாட்டேன்

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  6. கடைசிவரை எலியார் சிக்கவில்லை பாருங்கள்.  அதைப் பிடிக்க விதம் விதமான வழிகள் யூடியூபில் பார்த்தேன்.  அதில் ஒன்று பாட்டிலைத் திறந்து வைத்து உள்ளே உணவுப்பொருள் வைத்து படுக்கை வாட்டில் வைத்து விடுவது.  உள்ளே ரிங்கிய எலி மீண்டும் வெளியே வர வந்தால் வெயிட் அடித்து பாட்டில் வாய்ப்பக்கம் சுவரில் சாய்ந்து மூடிக்கொள்ளும்.  நல்ல வழியாகத் தெரிந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஆமாம் ஸ்ரீராம் இப்போது ரூமிற்குள் புகுந்திருப்பதாகத் தகவல். ஒட்டும் மேட் அதில் மசால் வடை வைத்தும் பார்த்தாயிற்று ஆனால் எலியார் அதிலும் சிக்கவில்லையாம்.

      நான் வேண்டிய பிள்ளையார் கைவிடுவாரா என்ன!!!!!!!

      கீதா

      நீக்கு
  7. கண்ணழகியின் கடைசிக்காலங்கள் படிக்கக் கஷ்டமாய் இருக்கிறது.  என் மடியில் வந்து அமர்ந்து உயிர் நீத்த சாத்தியின் நினைவு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். மனது அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறது.

      பல சங்கடங்கள். அதனால்தான் கொஞ்சம் சிரித்து மனதை லைட்டாக்கிக் கொள்ளப் பார்க்கிறேன்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. என் மடியில் வந்து அமர்ந்து உயிர் நீத்த சாத்தியின் நினைவு வருகிறது.//

      ஹையோ அது இன்னும் ரொம்ப வருத்தமாகிடும் ஸ்ரீராம். புரிந்து கொள்ள முடிகிறது

      கீதா

      நீக்கு
  8. ஆனால் இப்போதெல்லாம் பூனைகள் எலியைப் பிடிப்பதில்லை.  பேசாமல் விட்டு விடுகின்றன.  அல்லது பயந்து ஒதுங்கி விடுகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை பூனையாரெல்லாம் அதிகமாய் டாம் அன்ட் ஜெரி பார்க்குதுங்களோ! அப்படித் தான் இருக்கும்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் இது புதுசா இருக்கிறதே. அப்படியா? அதுவும் பயந்து!!!!

      கீதாக்கா ஹாஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  9. எலியார் எப்படியாவது தப்பித்து உங்கள் வீட்டுக்கு வந்து தொந்திரவு கொடுக்காமல் வேறு எங்காவது போய்விடட்டும்.
    கண்ணழகி செல்லத்திற்கு வயது ஆகி விட்டதா?
    மகன் சொல்வது போல் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கட்டும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா....எலியார் வீட்டிற்குள் வந்தாலும் எதையும் வாய் வைக்காமல் பிய்த்துப் போடாமல் இருந்தால் சரிதான் ஹாஹாஹா..

      ஆமாம் அக்கா கண்ணழகி அவளது இறுதி நாட்களில் இருக்கிறாள். இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கட்டும்...

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. கஷ்டப்படாமல் தன் இறுதி மூச்சு வரை சந்தோஷமாக இருக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  11. இரண்டு பகுதிகளையும் இன்றுதான் படிக்க நேர்ந்தது. நன்றாக எழுதியிருக்கீங்க.

    நாங்கள் பழுத்த பலாப்பழத்தை பால்கனி கதவிற்கு அருகில் வைத்திருந்தோம். வீடு முழுவதும் பலாப்பழ வாசனை வந்துவிடப் போகிறதே என்று கண்ணாடிக் கதவை மூடாமல் மெஷ் கதவை மட்டும் மூடி வைத்ததில் இரவில் மெஷ் கதவில் பெரிய ஓட்டை. எலி என நினைத்தோம். எங்கள் ஆராய்ச்சி அது அணிலாக இருக்கும்னு சொல்லுது.

    பதிலளிநீக்கு
  12. எலி ஒட்டிக்கொள்ளும் அட்டை வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இரு முறை அடையாறில் அட்டை வைத்து எலி மாட்டியிருக்கு. அது கருணை இல்லாத கொலை.

    கண்ணழகி....ம்...வருத்தம்தான்

    பதிலளிநீக்கு
  13. சுவையான பதிவு. கண்ணழகியின் கடைசி காலத்தில் நீங்கள் அவளருகில் இருக்க முடியாமல் போனது வரமா? சாபமா?

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரி

    உங்கள் செல்லம் கண்ணழகியின் முடிவு தெரிந்து மனம மிகவும் வேதனைபட்டது சகோதரி. உங்களுக்கும் அவள் நினைவுகளை தாங்கும் சக்தியை இறைவன் தர வேண்டும்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. கண்ணழகியின் பிரிவிற்கு அனுதாபங்கள் அவள் சாந்தி அடையட்டும் தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்கவும் அன்புடன்

    பதிலளிநீக்கு