ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன்.
இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில்
ஒரு பதிவை அல்லது பதிவின் ஒரு பகுதியை வாசிக்கும்
போது அல்லது ஏதேனும் ஒரு வரி போதும், நமக்கு ஏற்பட்ட அதே போன்ற அனுபவங்களை அல்லது அதை
ஒட்டிய அனுபவங்களை நம் மனதில் நினைவுப்பெட்டகத்திலிருந்து எழுப்பிவிடும்.
[எழுத முடியாததற்கு, கோர்வையாக எழுதவராதது உட்பட காரணங்கள் பல.. ஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம் என்பது போல்!]
எபி யில் புதன் கேள்வி பதில்களில்,
பானுக்கா ஒரு கேள்வி கேட்டிருந்தார். //உங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு பழக்கத்தை நண்பர்களும்,
உறவினர்களும் கேலி செய்தாலும், விமர்சித்தாலும், நீங்கள் ரசிப்பது உண்டா?//
என் நினைவுகளைத் தூண்டிவிட்ட கேள்வி.
கூட்டுக்குடும்ப வளர்ப்பு. என் தம்பி
தங்கைகள் [என் மாமா அத்தை குழந்தைகளையும் நான் அப்படித்தான் சொல்வது. ஒரே கூரைக்கு
அடியில ஒரு தாய் வயித்துப் பிள்ளைகளா இருந்ததால (வடிவேலு மாடுலேஷன்)] எதிர்த்துக் கலாய்க்கத்
தெரியாத என்னை ரொம்பவே கலாய்ப்பார்கள்.
சிறுவயதில் எனக்குக் கோபம் என்பதை
விட மனம் சுருங்கிவிடும் எனலாம். அதன் பின் மனம் பக்குவம் பெறத் தொடங்கியதும் அவர்களின்
நகைச்சுவைக் கலாய்த்தலை ரசித்தேன். ஆனால் அப்பவும் பதிலுக்குச் சொல்லத் தெரியாது.
ராத்திரி 8.30, 9 மணிக்கெல்லாம்
நான் சாமியாடத் தொடங்கிவிடுவேன். கைல புக் தலைகீழா இருக்கும். பாட்டியும் மெஷின் ராட்டை
ஓட்டிக் கொண்டு முழிச்சுருப்பாங்க யாரெல்லாம் படிக்கறாங்க, கொட்டாவி விடறாங்கன்னு பார்த்துக்கொண்டு.
“பாட்டி, கீதாக்கு நெத்தில முழைச்சுருக்கு”
இப்படி
ஏதாவது ஓரு வாண்டு, தான் படிக்கறோம்னு பாட்டிக்கிட்ட காட்டிக்க என்னைப் போட்டுக் கொடுக்கும்.
நான் சாமி ஆடுவதால் தலை கீழே பட்டு பட்டு நெத்தில அடியாம்! ஹூ கேர்ஸ்!
“கீதா பாத்து. எதுக்கும் முன்பக்கம் ஒரு தலைகாணி வைச்சுக்க” அப்படின்னு தலைகாணி எடுத்துக் கொடுக்கும் மற்றொரு வாண்டு.
“கீதாவ வரச்சொல்லு, வாசல்ல கோலம்
போடணும்” என்று காலையில் எங்க பெரிய மாமி வந்து கேட்டால்…
“நம்ம கீதா நெத்தி முழைக்க, நிலத்தில
விழுந்து விழுந்து உழைச்சு ரொம்பக் களைப்பா இருக்கா பெரியம்மா” என்று நமுட்டுச் சிரிப்பு
சிரித்துக் கொண்டே ஒரு வாண்டு சொல்லும்.
“டேய் ஏண்டா அப்படிச் சொல்ற கீதாவ?
அவ நல்ல புத்திசாலி தெரியுமோ”
ஹிஹிஹிஹி என்று சிரிப்புச் சத்தம்
பின்னணி இசையாக… ஹூ கேர்ஸ்!
“ஆமாமா நீங்க சொல்றது ரொம்ப சரி
பெரியம்மா. மார்க் எல்லாம் முக்கியமில்ல.. ஏன்னா அவ லேடி ஐன்ஸ்டீன். நோபல் லாரட் ஆக
எப்படி ஆராய்ச்சி எல்லாம் பண்ணுறா தெரியுமா” என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு
ஒரு வாலு சொல்லும்…
“அப்படியா”?
“ஆமாம் பெரியம்மா முன் நெத்தில முழைச்சா
ஃப்ரன்டல் லோப் வொர்க் ஆகுமா? பின்பக்கம் முழைச்சா மூளைக்கு என்ன ஆகும்? சைடுல பட்டா?
மூளை வொர்க் ஆகுமோ, மெமரி கூடுமோன்னு ப்ராக்ட்டிக்கலா எக்ஸ்பெரிமென்ட். தீஸிஸ் எழுதப்
போறா” என்று சிரிக்காமல் சொல்லும் மற்றொன்று.
“ச்சே என்ன மண் தூசி பாரு” என்று
சொல்லிக் கொண்டே ஒரு வாண்டு பெருக்கினால், மற்றொன்று தொடங்கும் முன் நானே முந்திக்
கொண்டுவிடுவேன்…
“பின்னே நேத்து ராத்திரி நான் எவ்வளவு
நேரம் எக்ஸ்பெரிமென்ட் பண்ணினேன் தெரியுமா?” என்று சிரிக்காமல் சொல்லிவிட்டுப் போவேன்.
மீண்டும் பின்னணி இசை ஒலிக்கும். ஹூ கேர்ஸ்!
வாலுங்க எல்லாம் படிப்பில் கெட்டி.
நான் ரொம்பவே சுமார். ரொம்பவே சுமார்னா வெளில சொல்லமுடியாத அளவுக்குச் சுமார்!! அதுவும்
கணக்கு, அறிவியல். மூச்! அதுக்கு மார்க் வரப்ப,
“நம்ம லேடி ஐன்ஸ்டீன் ஸ்கூல்
ட்ராப் அவுட் ஆயிடுவா சீக்கிரம்….”
ஹூ கேர்ஸ்!
பாடத்திட்டத்தில் இருப்பதைத் திரும்ப
திரும்பப் படிப்பது, எழுதுவது, மனனம் செய்து தேர்வு எழுதுவது என்பது எனக்குக் கடினமாக
இருந்தது. நல்ல மதிப்பெண்கள் பெறுவது என்றால் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் காரணம், கட்டுரை,
இலக்கணம். மனனம் செய்யாமல் எழுதுவதை ஆசிரியர்கள் ஊக்குவித்தார்கள். ஆனால் வாழ்க்கை உருண்ட போது இலக்கணம் மாறிற்றே, இலக்கியம் போனதே, பழைய கீதா என்ன ஆனாள்? எங்கே போனாள் எங்கே போனாள்?
ன்னு ஆகிப் போச்சு!!! போகட்டும்.
ஏதேனும் கதை, கவிதை, கட்டுரை, நாடகம், எழுதுவது பற்றி
யோசிப்பது, எழுதுவது என்று கொஞ்சம் கற்பனை உலகில் சஞ்சரிப்பதுண்டு. அதுவும் ஆழமான கருத்துகள், அனுபவத்தில் கற்றவை, மனித இயல்புகள், தத்துவங்கள் என்று (இப்பவும் உண்டு. அதன் பின்விளைவுகள் ஏராளம்.!!!)
அதனால் படிப்பில் கவனம் குறைவு. அப்படி யோசித்துக் கொண்டிருப்பதையும் கலாய்ப்பார்கள். ஹாஹாஹா. ஹூ கேர்ஸ்!
“அவ தூங்கி விழுந்தாலும், ‘நான்
தூங்கலை, யோசிக்கிறேன்னு’ சமாளிப்பா. தூக்கத்துல நேத்து கூட ஏதோ ஒரு கவிதை இங்கிலிஷ்ல
சொன்னாளே”
“போடா, ஐன்ஸ்டீனுக்கு கவிதை எழுத
வருமா என்ன?”
“அவ எழுதினது இல்லடா ஏதோ ட்ராமா
எழுதறா அதுல தாகூர் போயம் ‘வெயிட்டிங்க்’ னு ஏதோ…”
அப்படி எதுவுமே நடந்திருக்காது ஆனால்
அவர்களுக்கும் பொழுது போக நான் தான். ஹூ கேர்ஸ்!
என் நட்பு வட்டம் பெரிது. சுவாரசியமாகக்
கதை அளப்பேன். நாடகம், பாட்டு, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டி, மூன்று கேம்ஸ் டீமில்
செலக்ஷன் என்று இருந்ததால் சும்மானாலும் ஒரு கூட்டம் இருக்கும். ஆசிரியர்களின் செல்லப்
பிள்ளை.
இலக்கண விதிப்படியும், ஹைக்கூ வடிவிலும்
கவிதை எழுதியதுண்டு!! தமிழ் ஆசிரியை பாராட்டி ஊக்கப்படுத்தியதுண்டு. அது இறந்தகாலம். உங்களால
நம்பமுடியலை இல்லையா!! ஹிஹிஹி!! நிகழ்காலம் அப்படி! என்ன செய்ய? நம்ப முடியாத அளவு அப்படி
இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!!! போனா போகுது விடுங்க!
குடும்பம் மட்டுமல்ல, ஊருக்கே நாட்டாமை எங்கள் பாட்டி. மற்ற பெரியவர்களில் சிலர் ஆசிரியர்கள். வீட்டில் படிப்பு. படிப்பு. படிப்பைத்
தவர வேறொன்றுமில்லை. படிப்பு ஒன்றுதான் சோறு போடும் வேறு எதுவும் சோறு போடாது என்ற
அந்தக்காலத்து மத்தியதரக் குடும்பத்திற்கும் கீழான குடும்பத்து சித்தாந்தம்.
கேக்கணுமா?! வாண்டுங்க எல்லாம் ஸ்கூல்
விட்டதா வீடு வந்தமான்னு இருப்பார்கள். ராத்திரி முழிச்சிருந்து படிப்பாங்க. ரேங்க்
வேற. அதனால் வீட்டில் நல்ல பெயர்.
நாம அப்படியா? பெரும்பாலும், கேம்ஸ்,
அந்தப் போட்டி இந்தப் போட்டின்னு ஊரைச் சுத்திட்டு வீட்டுக்கு 6.40 பஸ்ஸைப் பிடிச்சு
7.15, 7.30 க்கு வந்தா….அப்பவும் பாருங்க நான் ரொம்ப சமத்தாக்கும். எத்தனை பிசியா இருந்தாலும்
6.40 பஸ்ஸை மிஸ் பண்ணாம வந்துருவேனாக்கும்! அப்புறம் நடக்கறது எல்லாம் கிட்டத்தட்ட
வடிவேலு காமெடி ஸ்டைல்.
“நீ போட்டிக்குத்தான் போனேன்னு சொல்ல வேண்டியதுதானே? பெரிசா உதார் விடுவியே தைரியசாலியாட்டம்"
“எவ்வளவு திட்டினாலும், அடிச்சாலும், சுரணை இல்லாத எருமை, சட்டம் பேசுற சட்டம்பி” ன்னு பாட்டியும், அம்மாவும் திட்டினப்ப இதுங்க எல்லாம், “கீதா நல்லவ. லேடி ஐன்ஸ்டீன்! அவ ஏதோ போட்டிக்குத்தான் போனா அதான் லேட்டு”ன்னு சப்போர்ட் பண்ணினாங்க" என்று நான் அப்பாவியாய் சொல்ல…….மீண்டும் சிரிப்பொலி கேட்கும். ஹூ கேர்ஸ்?!
எவ்வளவு வைச்சு வாங்கினாலும் நான் வழக்கம் போல் சாமியாடிடுவேன். இதற்காகவே, அம்மாவை ஐஸ் வைச்சு, பாட்டிக்குத் தெரியாம கட்டங்காபி வேற குடிச்சு ராத்திரி படிக்கறமோ இல்லையோ சும்மா முழிச்சிருப்போம்னு முயற்சி எல்லாம் கூட செஞ்சேன். ம்ஹூம். சாமியாட்டம்தான்! கலாய்த்தல்தான்.
இப்போதும் கூட அவர்கள் என்னை இரவு
9 மணிக்கு மேல் அழைத்தால் மிஸ்ட் காலாகத்தான் இருக்கும். “சாமியாடிட்டியா? கம்ப்யூட்டர்
பத்திரம்” ன்னு மெசேஜ் வேற. பெரும்பாலும் நானே என்னைக் கலாய்த்து முந்திக் கொண்டுவிடுவேன்!
சீக்கிரம் படுக்கச் சென்று காலையில் 4 மணிக்கு எழும் பழக்கம் அந்தச் சிறுவயதிலேயே வந்துவிட்டது. தொட்டில் பழக்கம்! பாட்டி என்னை 4 மணிக்கு எழுப்பிக் கோயிலில் கோலம் போட அழைத்துச் செல்வார்.
இத்தனை கலாய்த்தாலும் அத்தனைபேரும்
என்னிடம் மிக மிக அன்பு உடையவர்கள். I AM BLESSED! எனக்கு ஏதேனும் ஒன்று என்றால் உடனே
உதவிக் கரம் நீட்டிவிடுவார்கள்.
இன்னும் நிறைய உண்டு. ஆனால் எதுவும் என் தன்னம்பிக்கையைத் தளர்த்தியதில்லை. ரசித்து சிரித்துவிடுவேன். அதே வேளையில் நான் யோசித்தது, எல்லோர் மனதும் கலாய்த்தலை ஏற்கும் அளவு வலுவானதாக இருக்காது.
சிலர் நத்தை போல் ஓட்டிற்குள் சுருங்கி விடுவார்கள். அது மனச்சோர்வு, மனப்பிறழ்விற்கு இட்டுச் செல்லும்
ஆபத்துண்டு. எனவே கலாய்ப்பதிலும், வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுவே
அப்பாடம். நினைவுகள் தொடரலாம்!!!
(பி.கு. கல்வி, உளவியல் என்று வந்தா கருத்து கண்ணாயி ஆகிடுவோமே!!! (கருத்து கந்தசாமி ஆண்பால்!). அப்படி, மதுரைத் தமிழனின் சமீபத்தியஅருமையான பதிவு என்னைத் தூண்டியது. மதுரையும் நான் பதிவாகப் போடுவேனோ என்று சொல்லியிருந்தார். பதிவாக எழுதலாம் என்று நினைத்து எழுதத் தொடங்கி……கோர்வையாக எழுத வராததால் அதைக் கொஞ்சம் ஆறப் போட்டிருக்கிறேன். அதனால், அடுத்து எழுத நினைத்தவை இப்போது.)
-----கீதா
நினைவுகள் பகிர்ந்து கொண்டது உங்கள் பொறுமையை சொல்கிறது.
பதிலளிநீக்கு//இத்தனை கலாய்த்தாலும் அத்தனைபேரும் என்னிடம் மிக மிக அன்பு உடையவர்கள். I AM BLESSED! எனக்கு ஏதேனும் ஒன்று என்றால் உடனே உதவிக் கரம் நீட்டிவிடுவார்கள்.//
உங்களின் பொறுமையான அன்புக்கு கிடைத்த பரிசு அவர்களின் அன்பான நேசகரங்கள்.
//என் தன்னம்பிக்கையைத் தளர்த்தியதில்லை. ரசித்து சிரித்துவிடுவேன்.//
அதுதான் வேண்டும்.
//அதே வேளையில் நான் யோசித்தது, எல்லோர் மனதும் கலாய்த்தலை ஏற்கும் அளவு வலுவானதாக இருக்காது. சிலர் நத்தை போல் ஓட்டிற்குள் சுருங்கி விடுவார்கள். அது மனச்சோர்வு, மனப்பிறழ்விற்கு இட்டுச் செல்லும் ஆபத்துண்டு. எனவே கலாய்ப்பதிலும், வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுவே அப்பாடம்.//
ஆமாம், நீங்கள் சொல்வதும் சரிதான் .
கோமதிக்கா அத்தனை பேரும் இப்போதுவரை அத்தனை அன்புடன் இருப்பவர்கள். என்னிடம் இருந்து மெசேஜ் எதுவும் இல்லை என்றால் உடனே கூப்பிட்டுவிடுவாங்க.
நீக்குஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு மாதிரி. அதனால்தான்
இதற்கு முன் போட்ட கமென்ட் போகவே இல்லை அதனால் சின்னதாக அடித்து போடுகிறேன்
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
//சீக்கிரம் படுக்கச் சென்று காலையில் 4 மணிக்கு எழும் பழக்கம் அந்தச் சிறுவயதிலேயே வந்துவிட்டது. தொட்டில் பழக்கம்!//
பதிலளிநீக்குநானும் அப்படித்தான்.
//பாட்டி என்னை 4 மணிக்கு எழுப்பிக் கோயிலில் கோலம் போட அழைத்துச் செல்வார். //
ஆஹா! அது மிகவும் புண்ணியம்.
ஆஹா! அது மிகவும் புண்ணியம்.//
நீக்குஅக்கா நான் அப்படி நினைத்ததில்லை. என்னவோ புண்ணியம் என்றேல்லாம் நினைப்பதே இல்லை.
முதலில் கஷ்டமாக இருந்தது ஏனென்றால் படிக்க வேண்டும், ஹோம்வொர்க் என்று...ஆனால் சில நாட்களிலேயே ரொம்ப ஆர்வத்துடன் செல்லத் தொடங்கிவிட்டேன்.
இந்தத் தொடரில் இடையில் இடம் பெற்றாலும் பெறலாம்...கோலம் பற்றி..
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
மற்றவங்களை கலாய்த்தல், கேலி செய்பவர்களுக்கு உண்மையிலேயே தன்னம்பிக்கை குறைவு. அதனால்தான் மத்தவங்களைவிட தான் பெட்டர் என தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் விதமாக மத்தவங்களை கிண்டல் பண்றாங்கன்னு எனக்குத் தோணும்.
பதிலளிநீக்குஒருவரைக் கேலி பண்ணிக்கொண்டே இருந்தால் கேலி பண்ணப்படுகிறவருக்கு தன்னம்பிக்கை குறைந்துவிடும்.
சந்தடி சாக்குல 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல இரண்டாவதாக வந்தேன்னு ஒருத்தர் சொல்லிக்கிட்டே இருக்கற மாதிரி, சின்ன வயசுல நிறைய போட்டில கலந்து பரிசு வாங்கினேன்னு சொல்றீங்க. எனக்குக் கிடைத்ததுபோல சோப்பு டப்பா போன்றவைதானா?
ஒருவரைக் கேலி பண்ணிக்கொண்டே இருந்தால் கேலி பண்ணப்படுகிறவருக்கு தன்னம்பிக்கை குறைந்துவிடும்.//
நீக்குஉண்மைதான் நெல்லை ஆனால் அதுவும் அவர் மனதின் வலிமையைப் பொறுத்து. ரொம்ப உணர்சிவசப்படுறவங்க என்றால் டக்கென்று மனம் உடைந்துவிடும். ஒரு தடவை சொன்னாலே.
சந்தடி சாக்குல 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல இரண்டாவதாக வந்தேன்னு ஒருத்தர் சொல்லிக்கிட்டே இருக்கற மாதிரி, சின்ன வயசுல நிறைய போட்டில கலந்து பரிசு வாங்கினேன்னு சொல்றீங்க. எனக்குக் கிடைத்ததுபோல சோப்பு டப்பா போன்றவைதானா?//
ஹாஹாஹாஹா. நெல்லை சான்றிதழ்கள், மெடல் எல்லாம் சேர்ந்துதான்..இப்பவும் இருக்கு எல்லாம் பரணில்!!!
மிக்க நன்றி நெல்லை.
கீதா
இவைகளை நினைவில் வைத்து எழுதியது அருமை.
பதிலளிநீக்குசில நேரங்களில் பழையவைகள் மீண்டும் கிடைக்காதா ? என்று மனம் ஏங்கும்.
தொடர்கிறேன்...
சில நேரங்களில் பழையவைகள் மீண்டும் கிடைக்காதா ? என்று மனம் ஏங்கும்.//
நீக்குநான் அடிக்கடி ஏங்குகிறேன் கில்லர்ஜி!
கிராமத்து நினைவுகள் எனக்கு என்றுமே மறக்காது என் நினைவு இருக்கும் வரை. இருகோடுகள் தத்துவம் தான். அப்போது சில ச்சே என்றிருந்தது. ஆனால் இப்போது அது ரொம்ப இனிமை
மிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
நம்மைப் பற்றி பிறரின் கலாய்ப்பு, கோபம் / வருத்தம் வருவது இயல்பு... அவை உண்மையாக இருக்க பட்சத்தில், நாம் மாறுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைவதுண்டு... மாற முடியாமல் போகும் போது, நம்மை நாமே கலாய்த்து கொள்ள வேண்டியது தான்...!
பதிலளிநீக்குடிடி ஆம் கற்றுக் கொள்ள நல்ல வாய்புதான். ஆனால் மாற்ற முடியாததற்கு நீங்க சொல்வது போல் நம்மை நாமே கலாய்த்துக் கொள்வதுதான். நான் பொதுவாகவே என்னையே நான் கலாய்த்துக்குவேன் டிடி.
நீக்குமிக்க நன்றி
கீதா
திண்டுக்கல்லாரை வழி மொழிகின்றேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ
நீக்குகீதா
மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள் கீதா!
பதிலளிநீக்குசின்னஞ்சிறு வயதில் இந்த மாதிரி கேலிகள், கிண்டல்கள் எல்லாம் மனதில் அப்படியே பதிந்து விடும். அவரவர் வளர்ப்பிற்கு ஏற்ப பாதிப்பு வேறுபடும். மென்மையான மனது உடையவர்கள் சுருங்கி விடுவார்கள். இது யதார்த்தம். சிலருக்கு அனுபவங்கள் இந்த பாதிப்புகளை மாற்றி விடும். சிலருக்கு கடைசி வரை இந்த பாதிப்பு அப்படியே மனதினுள் உறைந்து போயிருக்கும். நீங்கள் இதையெல்லாம் அழகாய் எடுத்துக்கொண்டு அப்படியே தாண்டி வந்திருக்கிறீர்கள். அதனால் தான் இன்றைக்கு அவர்களைப்பற்றியும் அன்புடனும் அழகாகவும் பேச முடிகிறது!
ஆமாம் மனோ அக்கா சிறு வயது நினைவுகள் பல மனதில் பசுமையாக.
நீக்குசிலருக்கு அனுபவங்கள் இந்த பாதிப்புகளை மாற்றி விடும். சிலருக்கு கடைசி வரை இந்த பாதிப்பு அப்படியே மனதினுள் உறைந்து போயிருக்கும்.//
ஆமாம்.
அதனால் தான் இன்றைக்கு அவர்களைப்பற்றியும் அன்புடனும் அழகாகவும் பேச முடிகிறது!//
அவர்கள் அப்போதிலிருந்து இப்போது வரை அதே போல என்னிடம் அத்தனை அன்போடு இருக்கிறார்கள் நானும். எங்களுக்குள் நிறைய பேசிக்கொள்வோம். உதவிக் கொண்டும்...
எனக்குக் கிடைத்த அருமையான தம்பி தங்கைகள் அனைவரும்...இப்போதும் இறைவனுக்கு நன்றி சொல்வேன்.
மிக்க நன்றி மனோ அக்கா
கீதா
புதன் கேள்வி மகிமையோ? ஒவ்வொரு கேள்விக்கும் இவ்வளவு சின்ன பதிலளித்த தந்தாள் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்!
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஸ்ரீராம் அந்த மகிமைதான்!!
நீக்கு// ஒவ்வொரு கேள்விக்கும் இவ்வளவு சின்ன பதிலளித்த தந்தாள் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்!//
ஹாஹாஹாஹா சிரிச்சு முடில ஸ்ரீராம் கமென்ட் பார்த்ததும் சிரித்தேன் இப்பவும் சிரிச்சுட்டேதான் பதில்.
ஆமாம் நாம தான் கருத்து கண்ணாயி பெரிசா போடுறது என்பதால் ஒரு பதிவா தேத்தலாமே ன்னு தோன்ற அங்கு குறைத்துக் கொண்டு இங்கு ...
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
நினைவுகள் சுவாரஸ்யம். இளமைப் பருவம் என்பதே தனிரகம். அப்போது பொறாமை, வித்தியாசம் இல்லாமல் பழகும் விதங்கள் அலாதி.
பதிலளிநீக்குஇளமைப் பருவம் என்பதே தனிரகம். அப்போது பொறாமை, வித்தியாசம் இல்லாமல் பழகும் விதங்கள் அலாதி.//
நீக்குஅதே அதே ஸ்ரீராம். அது தனி தான். இப்பவும் அவரவர் குடும்பம் பொறுப்புகள் மற்றபடி எங்களுக்குள் அப்படியேதான் அதுவும் குறிப்பாகப் பெண்கள் கூடக் கொஞ்சம் க்ளோஸ்...
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
கணக்கு அறிவியல் மட்டுமில்லை, நான் எல்லாவற்றிலுமே ரொம்ப சுமார்தான்! பா சமயங்களில் மார்க் ஷீட்டை அகழ்ந்துதான் எடுக்கணும். ஸ்கூலில் அதை என்னிடமிருந்து திரும்ப வாங்குவதற்குள் நொந்து போவார்கள்.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ஸ்ரீராம் நம்ம கட்சிதான்!!!
நீக்குசிவப்பு கோடு வேற இருக்கும் சில சமயம் என் கார்டில்!!
ஸ்கூலில் அதை என்னிடமிருந்து திரும்ப வாங்குவதற்குள் நொந்து போவார்கள்.//
ஹாஹாஹாஹாஹா..நான் சிவப்புக் கோடு இருந்தால் வீட்டில் சைன் வாங்குவதற்குள்..ஹிஹிஹி...அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார் அவருக்கு சைன் போடும் வேலை மட்டும்தான். ஆனால் பல செக்போஸ்ட் கடந்து வரணுமே!
கீதா
நான் என் நண்பர்களால் எப்போதுமே விதம் விதமாக கலாய்க்கப்படுவேன். அப்போது பெரிதாக அதனால் கோபம் வந்ததில்லை.. அவர்களின் பல திறமைகள் என்னிடம் கிடையாது!
பதிலளிநீக்குநான் என் நண்பர்களால் எப்போதுமே விதம் விதமாக கலாய்க்கப்படுவேன். அப்போது பெரிதாக அதனால் கோபம் வந்ததில்லை.. //
நீக்குஓ! அதுவும் பெரிய விஷயம் தான் ஸ்ரீராம்.
அந்த வயதில் பெரும்பாலும் என் நட்பு வட்டத்தில், ஏன் கல்லூரியில் கூட பலரும் காய்விட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டுவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் அதென்னவோ தெரியவில்லை நட்புகள் என்னைக் கலாய்த்ததே இல்லை.
என் நட்புகளும் பலரும் ரொம்பத் திறமையானவர்கள். மாநில அளவில் மாவட்ட அளவில் பரிசு வாங்கியவர்கள். நோட்புக் எல்லாம் ரொம்ப அழகாக அட்டை போட்டு அவர்கள் அதைப் பிரித்துப் படிப்பார்களா என்று யோசிக்க வைக்கும் அளவு இருக்கும். ஆனால் நன்றாகப் படிக்கக் கூடியவர்கள்.
இப்பவும் வாட்சப் க்ரூப் இருக்கிறது ஆனால் நான் தான் அதில் இல்லை.
நன்றி ஸ்ரீராம்
கீதா
உங்கள் பால்ய கால நினைவுகளை மிகச் சிறப்பாக எழுதி இருக்கீங்க கீதா ஜி. நம்மால் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நல்லது தானே. அதில் நாம் மகிழ்ச்சி அடைய முடியும் என்பது சிறப்பான விஷயம். கூடவே நம்மிடம் இருக்கும் சில தேவையில்லாத விஷயம் (அப்படி என்று நமக்குத் தோன்றுவதை! அடுத்தவர்களுக்கு அல்ல!) விட்டு விடவும் வாய்ப்பாக அமையும்!
பதிலளிநீக்குதொடரட்டும் நினைவுகள்....
உங்கள் பால்ய கால நினைவுகளை மிகச் சிறப்பாக எழுதி இருக்கீங்க கீதா ஜி//
நீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி
நம்மால் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நல்லது தானே. – ஆமாம் அதே வெங்கட்ஜி
நிறைய கற்றுக் கொள்ளலாம் தான்.
மிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்கள் நினைவுகளை மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள். சிறுவயதில் கோபம் என்பதே தெரியாத அந்த வயதில் இந்த மாதிரி உடனிருப்பவர்களின் கிண்டல்கள் மனதை சுருங்கச் செய்து விடும். அப்புறம் நீங்கள் சொல்வது போல் மனம் பக்குவப்பட்டு விட்டால் கேலிகளை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் அதற்கு அனைவருக்கும் மனம் நல்ல பக்குவமடைய வேண்டுமே..! அதுவும் ஒரு கலைதான்.
/எல்லோர் மனதும் கலாய்த்தலை ஏற்கும் அளவு வலுவானதாக இருக்காது. சிலர் நத்தை போல் ஓட்டிற்குள் சுருங்கி விடுவார்கள். அது மனச்சோர்வு, மனப்பிறழ்விற்கு இட்டுச் செல்லும் ஆபத்துண்டு. எனவே கலாய்ப்பதிலும், வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுவே அப்பாடம்./
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சரியானவைதான். சிலரிடம் வனம குணங்களும் இவற்றால் பெருகி விடும். இதை விட பதிலுக்கு பதிலாக கலாய்த்து விட்டால் அந்த நிமிடத்தோடு அந்த பேச்சுக்கள் மறைந்து விடும்.
இப்பவும் தங்கள் பொறுமையான எதையும் விட்டுத் தந்த குணத்திற்கு மதிப்பளித்து உங்கள் உறவுகள் அன்பாக இருப்பதற்கு வாழ்த்துகள்.இதைத்தான் நாம் என்றும் வேண்டிக் கொள்வது. நல்ல எண்ணங்களாக பதிவு தொடர்ந்துள்ளது. இன்னமும் தாங்கள் தொடர காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எனக்கும் பக்குவம் வந்தபிறகுதான் கமலாக்கா. எல்லோருமே ரொம்ப கலகலப்பாக இருப்பவர்கள். என்னை அதிகம் கலாய்த்தாலும் ஒருவருக்கொருவரும் கலாய்த்ததுண்டு. அதைப் பற்றி எழுதுகிறேன். இது பானுக்காவின் கேள்வி எழுப்பிய நினைவுகள்.
நீக்குகமலாக்கா அவர்கள் கலாய்த்தார்கள் அவர்களும் எனக்காக விட்டுக் கொடுப்பார்கள். என்னிடம் ரொம்ப அன்பு மிக்கவர்கள் அப்பவும் சரி இப்பவும் சரி. இது ஒரு பகுதிதான் கமலாக்கா..
மிக்க நன்றி கமலாக்கா..
கீதா
அன்பின் கீதாமா,
பதிலளிநீக்குசின்ன வயது நிகழ்வூகள் அதிகம் பாதித்ததில்லை. நான் தான்
முதல் பேத்தி என்பதனால்
மற்ற சின்னதுகள் என் பேச்சைக் கேட்கும்.
என்னை விட வயதான உறவுகள் நிறைய பட்டம் வைத்து
அழைப்பார்கள்:)
உங்கள் சிறுவயது சுருக்கங்கள் இப்போது
சரியாகிவிட்டதற்கு உங்கள் சிந்தனைகளின் பதிவே சாட்சி.
சின்ன வயது நிகழ்வூகள் அதிகம் பாதித்ததில்லை. நான் தான்
நீக்குமுதல் பேத்தி என்பதனால்
மற்ற சின்னதுகள் என் பேச்சைக் கேட்கும்.//
ஜாலிதான் இல்லையாம்மா!!
என்னை விட வயதான உறவுகள் நிறைய பட்டம் வைத்து
அழைப்பார்கள்:)//
ஓ! அது வேதனையாக இருந்திருக்கும் இல்லையாம்மா. அதையும் நீங்கள் கடந்து வந்துவிட்டீர்களே. நிறைய பாடங்கள் கிடைத்திருக்கும்
கீதா
உங்கள் சிறுவயது சுருக்கங்கள் இப்போது
நீக்குசரியாகிவிட்டதற்கு உங்கள் சிந்தனைகளின் பதிவே சாட்சி.//
மிக்க நன்றி அம்மா. ஆனால் சுருக்கம் எதுவும் ஏற்பட்டதில்லை ஏனென்றால் எல்லாரும் என்னிடம் மிகுந்த அன்பு காட்டியவர்கள் அப்பொதும் சரி இப்பவும் சரி ரொம்ப அன்பு காட்டுபவர்கள். இது ஒரு பகுதி...மற்றவர்களையும் ஒருவருக்கொருவர் கலாய்த்ததுண்டு. ஆனால் ஏட்டிக்குப் போட்டியாகச் செல்லும் அது.
மிக்க நன்றி அம்மா
கீதா
இப்பொழுது அதே கஸின்ஸ்
பதிலளிநீக்குசுமுகமாகப் பழகுவதும் மிக மகிழ்ச்சி. சிறுவயது சீண்டல்கள் சில குழந்தைகளை
சுருங்க வைத்து விடும்.
நீங்கள் நல்ல படியாக வளர்ச்சி அடைந்திருப்பதுதான்
உண்மை. பெருமாள் நல்ல படியாகப்
பார்த்துக் கொள்வார்.
இப்பொழுது அதே கஸின்ஸ்
நீக்குசுமுகமாகப் பழகுவதும் மிக மகிழ்ச்சி.//
அப்பவும் ரொம்ப சினேகமாக அன்பாக இருப்பார்கள் அம்மா. இது ஒரு பகுதிதான். எல்லாரும் ஒரே வீட்டிற்குள் இருக்கும் போது சீண்டல்கள், கோபங்கள், கேலிகள் அதே சமயம் உதவி அன்பு என்றும் இருக்கத்தானே செய்யும் அப்படித்தான் பெரியவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் எங்களுக்குள் வந்ததே இல்லை அம்மா. அதுக்கு ப்ளெஸ்ட் நான்/நாங்கள்.
//சிறுவயது சீண்டல்கள் சில குழந்தைகளை
சுருங்க வைத்து விடும்.//
ஆமாம். ரொம்ப சுருங்கி விடும் அபாயம் உண்டு. ஆனால் எனக்கு கலாய்த்தல் அளவு அன்பும் கிடைத்தது என்பதால் நகைச்சுவைதான்...இப்பவும் அதில் மூவர் என்ன பேசினாலும் வரிக்கு வரி சிரிக்க வைத்துவிடுவார்கள். அந்த அளவு நகைச்சுவை...
நீங்கள் நல்ல படியாக வளர்ச்சி அடைந்திருப்பதுதான்
உண்மை. பெருமாள் நல்ல படியாகப்
பார்த்துக் கொள்வார்.//
அனுபவங்கள் நிறையக் கற்றுக் கொடுத்தது.
மிக்க நன்றி அம்மா
கீதா
நல்ல நினைவலைகள். எல்லோருக்கும் இந்த அனுபவங்கள் கிட்டி இருக்க வாய்ப்பில்லை. நாங்களும் பெரியம்மா, சித்தி குழந்தைகள், மாமா குழந்தைகள் எனச் சேர்ந்து வளர்ந்ததால் எங்களுக்கெல்லாமும் இத்தகைய அனுபவங்கள் உண்டு. யார் என்ன தப்பு செய்தாலும் கடைசியில் நான் தான் மாட்டிப்பேன். :) அதைக் கடந்தும் வந்திருக்கேன். உங்கள் அனுபவங்கள் எனக்கும் சின்ன வயசு நினைவுகளைத் தூண்டி விட்டன. கடந்த காலத்தை நினைக்காதே எனச் சொல்பவர்கள் ஒரு பக்கம். அதில் வாழாதே எனச் சொல்பவர்களும் உண்டு. அதையும் மீறிக்கொண்டு எல்லோருக்கும் கடந்த கால அனுபவங்கள் நிழல்களாய்த் துரத்துகின்றன. அப்புறமா இன்னொரு விஷயம் எனக்கும் கணக்கு எனில் வேப்பங்காய். பாரதியோட வம்சம். கணக்கு மணக்கு எனக்கு ஆமணக்கு! என்று போயிடுவேன்.
பதிலளிநீக்குயார் என்ன தப்பு செய்தாலும் கடைசியில் நான் தான் மாட்டிப்பேன். :) அதைக் கடந்தும் வந்திருக்கேன்.//
பதிலளிநீக்குஹைஃபைவ் கீதாக்கா!!! ஆனால் அந்த அனுபவங்கள் நம்மை நிறைய சிந்திக்க வைத்துப் பக்குவம் அடையவும் வைக்கும் இல்லையா...
//உங்கள் அனுபவங்கள் எனக்கும் சின்ன வயசு நினைவுகளைத் தூண்டி விட்டன. //
முடிஞ்சா எழுதுங்க கீதாக்கா..
கடந்த காலத்தை நினைக்காதே எனச் சொல்பவர்கள் ஒரு பக்கம். அதில் வாழாதே எனச் சொல்பவர்களும் உண்டு.//
சரிதான்...அது கசப்பான அனுபவங்களுக்குச் சொல்றது....ஆனால் இது எனக்குச் சுகமான அனுபவங்கள் தான் ஏனென்றால் அன்பு மிக்கவர்கள் அத்தனை பேரும். கீதா என்றால் சந்தோஷம் அடைபவர்கள். அத்தனை நெருக்கமும் உண்டு கீதாக்கா...
கசப்பான அனுபவங்கள் நமக்கு நிறைய பாடங்களைப் போதிக்கும்.
அப்புறமா இன்னொரு விஷயம் எனக்கும் கணக்கு எனில் வேப்பங்காய். பாரதியோட வம்சம். கணக்கு மணக்கு எனக்கு ஆமணக்கு! என்று போயிடுவேன்.//
ஹாஹஹாஹஹ் அக்கா அப்ப நம்ம கட்சிக்கு ஆட்கள் நிறைய இருக்காங்க!!! ஹிஹிஹி
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
அந்த காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் வசித்த உங்கள் நினைவலைகள் மிக சுவாரசியம். சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்ரி ரம்யா. கருத்திற்கு
நீக்குகீதா
இளமை நினைவுகளைப் பகிர்ந்தாலே இளமை திரும்பும். பகிர்வு மிக அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா
நீக்குகீதா
இளமை நினைவுகள் சிறப்பு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு