புதன், 17 மே, 2023

மரம் ஒரு வரம்

 

“மரம் ஒரு வரம்”.  ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்ற வாசகங்கள் பயணத்தின் போதெல்லாம் முன் செல்லும் வாகனத்தின் பின்னால் எழுதியிருப்பதை நாம் எல்லோரும் எத்தனையோ முறை பார்த்திருப்போம். ஒரு மரம் எனக்கு எப்படி வரமானது என்பதைப் பற்றித்தான் இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.


“யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பதைப் போல், இருந்த போதும் தேனாய் தித்திக்கும் ஆயிரம் பலாச் சுளைகளைத் தந்ததோடு மட்டுமின்றி இறந்த போதும் வீட்டின் கதவின், ஜன்னலின் கட்டையின் பாங்களாயும், விறகாயும் மாறி எங்களின் பாகமாய் மாறிய ஒரு பலாமரத்தின் கதைதான் இது. 

இந்த மரம், இறைவனிடம் நான் கேளா வரமாய் எனக்கு, 2000 ஆம் ஆண்டில் நான் எடக்கரையில் ஒரு புதுவீடு கட்டிய போது வீட்டின் முன் முளைத்து வளர்ந்தது.

இதனிடையே நான் பல நர்சரிகளிலிருந்து கொண்டு வந்த மா, கொய்யா, ரம்பட்டான் இப்போதும் பூக்காமலும், பூத்தும் காய்க்காமலும், காய்த்தும் கைக்குக் கிடைக்காமலும் வீட்டைச் சுற்றி ஆங்காங்கே பிராணவாயு மட்டும் தந்து வரும் போது, கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் 25 முதல் 50 பலாப்பழங்கள் வரை தந்து வாழ்ந்தது. பேப்பர் போடும் மத்தாயி, பால் கொண்டு தரும் நண்பர்கள், மனைவியின் தோழிகளான ஆசிரியைகள் இப்படி எத்தனையோ பேரது வீட்டிலும் இனித்த பலா அது.

கடந்த ஐந்தாண்டு காலமாய் மாறிவரும் பருவமழை, காற்று, வீட்டின் முன் படர்ந்து நின்ற மரத்தை ஒரு அச்சத்துடன் பார்க்க வைத்தது. அதனாலேயே இடையிடையே அதன் கிளைகள வெட்டுவதுண்டு. அதனால்தானோ என்னவோ முடி முதல் அடி வரை பலா காய்த்துத் தொங்குவதுண்டு.

வெள்ளரிக்காயின் பருமனில் இருக்கும் போது அதை அரிந்து தோரன், அவியல் ஆக்கலாம்.ழுக்கும் முன் வேக வைத்து மிளகாய், தேங்காய் அரைப்புடன் சாப்பிடலாம். பழுத்தால் சுளையாக உண்பது மட்டுமல்ல, பழத்தை சர்க்கரைப் (வெல்லம்) பாகுடன் வேகவைத்து பலாப்பழ அல்வா செய்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவைப்படும் போது சாப்பிடலாம்.

அதையே அரிசி மற்றும் கோதுமை மாவுடன் சேர்த்து இலைகளில் பொதிந்து ஆவியில் வேகவைத்து இலையடையாக்கிச் சாப்பிடலாம்.

பலாக்கொட்டைகளைக் கொன்றை மர இலையில் வைத்து நீண்டகாலம் பாதுகாத்து பொரியல் செய்து சாப்பிடலம். பழுக்காத பலாச் சுளைகளை உளுந்துக்குப் பதிலாக அரிசியுடன் சேர்த்து அரைத்து பலமுறை தோசை சுட்டும் சாப்பிட்டிருக்கிறோம். அப்படி அந்தப் பலா எங்கள் வாழ்வில் நீண்ட காலம் எப்படியெல்லாமோ உணவாகி எங்களின் உடலின் பாகமாகியிருக்கிறது. 

எர்ணாகுளத்திலும், கண்ணூரிலும் உள்ள எங்கள் உறவுகள் மற்றும் நட்பு வட்டாரங்களின் வீடு சென்று அவர்களையும் மகிழ்வித்திருக்கிறது. எல்லாத் தொடக்கமும் முடிவடையத்தானே வேண்டும்! அப்படி ஒரு முடிவு கடந்த டிசம்பர் மாதத்தில் அதற்கும் ஏற்பட்டது. வீட்டின் முற்றம் கொஞ்சம் பெரிதாக்க வேண்டிய அவசியம். சக்தி கூடி வரும் சூறாவளிக் காற்றில் வீட்டின் மேல் விழுந்துவிடுமோ என்ற பயம். இப்படிப் பல காரணங்களால் விற்க முடிவு செய்தோம்.

தேக்கு

வீட்டின் முன்புறமுள்ள தேக்கு, பலா வேங்கை போன்ற மரங்களுக்குச் சாதாரணமாகக் கிடைக்கும் விலையில் பாதி கூடக் கிடைக்காது எனும் நிலை. 

வீட்டின் மேலே ஓரிரு அறைகளுக்குக் கதவுக்கும் ஜன்னலுக்கும் படியாக சிமென்ட் மற்றும் இரும்பு உபயோகித்தாலும் அவற்றுக்குச் சட்டமாக மரம் அவசியம் எனும் நிலை. எனவே, பலா உள்ளிட்ட பல மரங்களை வெட்டி மர அறுவை நிலையத்தில் தேவையான பாகங்களாக்கிக் கொண்டு வர முடிவு செய்தோம்.

இயந்திர கை ரம்பம் உபயோகிக்கும் Noufal - நௌஃபல் என்பவர் இரண்டு மரங்களை வெட்டி தேவையான நீளத்தில் துண்டுகளாக ஆக்க ரூ 3000 தேவை என்றார். பலாமரத்தை 6 அடி நீளத்தில் இரண்டும், 4 ½ அடி நீளத்தில் நான்கும், 3 அடியில் மூன்றும் ஆக வெட்டினோம். வேறு ஒரு மரம் இதுபோல் 6 அடியில் ஒன்றும், 4 ½ அடியில் மூன்றும் ஆக வெட்டினோம். 


சுப்பிரமணி எனும் ஆசாரியை அழைத்து வந்து கதவு, ஜன்னல், கட்டில், சோஃபா செட் இப்படித் தேவையானவைகளுக்கான துண்டுகளின் அளவை எழுதி வாங்கினோம்.

கேரளாவில் மரம் வெட்டி ஏற்றுவதற்கு அதற்கான சுமை ஏற்றும் (Loaders) வேலை ஆட்கள்தான் செய்ய வேண்டும். இல்லையேல் வீட்டார்கள் மட்டும் செய்யலாம். மற்றவர்களின் உதவி கூடாது எனும் நிலை.

06.12.2022 அன்று மில்லில் 9 மணி முதல் 12 மணி வரை என் மரங்களை அறுக்க சம்மதித்தார்கள். ஏறத்தாழ ஒரு 50 க்யூபிக் அடி என்று சொன்னதால் அதை ஏற்றிக் கொண்டு வர Jafar என்பவர் தன் Pick up வண்டியுடன் வர தயாரானார்.

காலை 7.30க்கு ஜாஃபர், சுமை ஏற்றும் ஆட்கள் பத்து பேருடன் Pick up வண்டியில் வந்தார். அவர்கள் வந்து கயிற்றால் கட்டியும், தோளில் சுமந்தும் வெட்டிய மர பாங்களை வண்டியில் ஏற்றினார்கள். 

ஒரு க்யூபிக் அடிக்கு ரூ 60 வீதம் 3000ரூ கூலியும் கொடுக்க வேண்டியதானது. (மரம் விலைக்கு எடுக்க வந்த மர வியாபாரிகள் மரம் எடுத்து விற்பதில் ஏராளமான செலவு உண்டு. முன்போல் இல்லை என்று சொன்னது நினைவுக்கு வந்தது). இப்படி ஏராளமான செலவுகள் உண்டு. அறுவை நிலையத்திற்குக் கொண்டு செல்லும் போது ஏற்றுபவர்களுக்கும், வாகனத்திற்கும் இதற்கெல்லாம் அதிகமான செலவாகும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நான், ஆசாரி தந்த அளவுப் பட்டியலுடன் அறுவை நிலையத்தை அடைந்தேன். அங்கும் இந்த மரத்துண்டுகளை இறக்கும் ஆட்கள் உண்டு. மரமிறக்க அவர்களுக்குத் ‘தட்டு கூலி’ என்று 500ரூ கொடுக்க வேண்டியதானது. அந்த மில்லில் மிகவும் திறமையான ஷிஹாப் எனும் மரம் அறுப்பவர் இருந்தார்.

என் கையிலிருந்த பட்டியலில் சோஃபா செட்டில் கை வைக்கும் hand rest இடத்தின் அளவு இல்லை. அதனால், “நான் எடுத்துக் கொள்கிறேன்” என்றார். அப்படிச் செய்யும் தொழிலில் கவனமும், ஈடுபாடும்  உள்ள அவரைத் தேடி தூர இடங்களிலிருந்தும் ஆட்கள் வருவதுண்டாம்.

பலா மரத்தின் இரண்டு அடிபாகங்களை முதலில், தரையில் உள்ள ஒரு இயந்திர ரம்பத்தில் 4 பகுதிகளாக அறுத்த பின், மேசை மேலே பொருத்திய இயந்திர ரம்பத்திற்கு அவை கொண்டு செல்லப்பட்டன.

ஆசாரி எழுதிய எல்லா அளவுகளிலும் அறுக்கப்பட்ட பலகைகளும் மற்ற பாகங்களும், அதன் அருகே உள்ள Plainer  எனும் இயந்திரத்தின் அருகே இடப்பட்டன. அளவில் வந்த பாகங்களுக்குப் பிறகு மீதமான மரத்தில் மற்ற உபயோகத்திற்கான பாகங்களும் அறுக்கப்பட்டது. மீதமுள்ளவற்றை விறகாக உபயோகிக்கலாம்.

Plainer எனும் இயந்திரம் எல்லா பலகைகள் மற்றும் படிகளின் நான்கு பாகத்தையும் சீவும் வேலையைச் செய்கிறது. அதாவது சிலும்புகள் இல்லாமல் மென்மையாக்குதல். எனவே இனி அவற்றை ராவ வேண்டிய கருவியால் சீவ வேண்டிய அவசியம் இல்லை.

அப்படி Plainer ல் இரண்டு மணி நேரமும், ஐந்து நிமிடங்களும் தேவையாக இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு 660 ரூ வீதம் Plainer க்கு ரூ 1370 ஆனது. மர அறுவை கூலி ரூ 5300 வந்தது. மர உறுப்புகளை வண்டியில் ஏற்ற உதவியவர்களுக்கு ரூ 300ம் ஆனது. மரத்தை காலை மில்லில் கொண்டு இறக்கி, மாலை 4 மணிக்கு அதை வீட்டிலும் இறக்கித் தந்த Pick up  வண்டி, ஓட்டுநர், Jafar க்கு ரூ 1500ம் கொடுத்தேன்.

அதிலுள்ள ஈரப்பதம் ஆவியாகிப் போக வேண்டும் என்பதற்காக இப்படி சரித்து வைக்க வேண்டுமாம். இப்படி வைப்பது நல்லதாம் 

அப்படி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் எனும் யானையைப் போல், இருந்த போது இனித்த, இப்போதும் இறந்த பின்னும் எங்கள் வீட்டில் கதவாய், ஜன்னலாய் இருந்து காக்க இருக்கும் சோர்ந்து அமரும் போதும் தூங்கும் போதும் தாங்க இருக்கும் பலாமரத்தின் பாகங்களை மரியாதையுடனும் பாசத்துடனும் வீட்டின் முன்பாகத்தில் சுவற்றில் சரித்து அடுக்கி வைத்தேன்.  இதை உணர்ந்த என் மனதில் அவை என்றும் நிலைத்திருக்கும்.

வீட்டின் முன்பாகத்து முற்றத்தை விசாலமாக்க, மரங்களை வெட்டிய பின் மண்ணின் அடியில் புதையுண்டு இருக்கும் வேர்களை அகற்ற இயந்திரம் வந்து வேர்களைத் தோண்டி அகற்றிய போது, திடீரென்று நான் இப்போது கல்லூரி மாணவர்களுக்குக் கற்பிக்கும் கீவ் பட்டேல் (Gieve Patel) எனும் இந்திய ஆங்கிலக் கவிஞரின் On killing a tree எனும் கவிதை நினைவுக்கு வந்தது.

Gieve Patel - Indian Poet

இறக்கும் எல்லா உயிரினங்களையும்  மண்ணின் அடியில் புதைக்கும் போது, மரங்களைக் கொல்ல மண்ணின் அடியில் ஒளிந்திருக்கும் அவற்றின் உயிர் வேர்களை மண்ணிலிருந்து தோண்டி எடுத்துக் கொல்வதாகச் சொல்லியிருப்பார். நமக்கு உதவும் மரங்களை இப்படிக் கொல்வது முறையா என்று கேட்டு, கீவ் பட்டேல் தன் ஆதங்கத்தை அக்கவிதையில் வெளிக் கொணர்ந்திருப்பார்.

எனக்கு அக்கவிதை நினைவுக்கு வந்தது. நானும் இங்கு எனக்கு உதவிய பலாமரத்தை ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொல்வதை எண்ணி வெட்கமாக இருந்தது.

நாம் மனிதர்கள் சுயநலவாதிகள். நாம் செய்யும் ஒவ்வொரு தவறையும் ‘வேறு வழியில்லை’ என்று சொல்லிக் கொண்டே தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்போம்.  ஆம் மரம் ஒரு வரம். இதை எல்லாம் பார்க்கும் போது அந்த வரிகளில் உள்ள உண்மையான பொருளை உணர முடிகிறது. ஆம் உண்மையிலேயே மரம் நம் எல்லோருக்கும் ஒரு வரமேதான்.

https://youtu.be/wjvcVW8OIEY

மர அறுவை நிலையக் காணொளிகள், விறகு வெட்டும் இயந்திரம் எல்லாம் காணொளியில் இருக்கின்றன. முடிந்தால் நேரமிருந்தால் பாருங்கள்

thillaiakathu clicks எனும் water mark இல்லாத படங்கள் எல்லாம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

(இப்படி வீட்டுப் பணிகள், வீட்டு மேம்பாட்டுப் பணிகள் நடப்பதால்தான் நட்புகள் உங்களின் பதிவுகளை வாசிக்க வலைப்பக்கத்திற்கு வர இயலவில்லை. பணிகள் முடிந்ததும் வருகிறேன்)


------துளசிதரன்

 


33 கருத்துகள்:

  1. அவ்வளவு பலன் தந்த மரத்தை வெட்டியது வருத்தமாகவும் இருந்திருக்கும்.  அது தரும் பழங்களால் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும்.  கலவையான உணர்வுகள். அதே போல பலாவிலிருந்து எத்தனை விதமான பதார்த்தங்கள் செய்ய முடிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், ஸ்ரீராம்ஜி. கலவையான உணவுகள்தான். பலாவிலிருந்து நிறைய பதார்த்தங்கள் செய்வதுண்டு. சக்கை பிரதமன் உட்பட. பதிவில் சொல்ல விடுபட்டுவிட்டது.

      கருத்திற்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  2. காணொளியில் புகைப்படங்கள் நிறைய இடம்பெற்றுள்ளன.  மனிதன் வேர்வை சிந்தி கைகளால் கஷ்டப்பட்டு வெட்டும் மரங்களை இரண்டு நொடியில் தேவையான இடத்தில, தேவையான அளவில் வெட்டித்தரும் இயந்திரங்கள் கொடைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரல் பதிவு 15 நிமிடங்களுக்கு ஆகிவிட்டது. எனவே சில படங்கள், காணொளிகளை மீண்டும் பயன்படுத்த வேண்டியதானது. இனி கவனமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறோம்.

      வெட்டித் தரும் இயந்திரங்கள் வரப்பிரசாதம்தான். கஷ்டப்பட்டு வெட்ட வேண்டிவரும் வெட்டுவதற்கு ஆட்களும் கிடைப்பதில்லை இப்போது அது இல்லாமல் நேரமும் குறைவாகவே ஆகிறது. தொழில்நுட்பங்கள் வளர வளர பல விஷயங்கள் எளிதாகிறதுதான்.

      கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  3. வெட்டி யாரோ எடுத்துக் கொண்டு போவதை விட, நாமே அதை உபயோகிப்பது நல்ல விஷயம்.  நீங்கள் சொல்லியிருப்பது போல அது நம்மோடேயே இருக்கும் உணர்வு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அதே உணர்வுதான், புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  4. சில இடங்களில் மரத்தை வேருடன் அகற்றி வேறு இடத்தில நடுகிறார்களே, அது போல செய்ய முடியவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன மரங்கள், தென்னை போன்றவைகளைச் செய்கிறார்கள். 90 செமீ க்கு மேல் சுற்றளவும், ஏறத்தாழ 30 அடி உயரமும் உள்ள மரங்களை மாற்றி நடுவது சிரமம். என்பதோடு பலகைகளும், சட்டங்களும் கதவு, ஜன்னல், செட்டி (சோஃபா செட்) போன்றவற்றிற்கு மரம் தேவைப்படுவதால் வேறு வழி இல்லை. எனவே இப்படிச் செய்ய வேண்டியதானது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  5. மரம் வெட்டியவுடன் உருப்படிகள் அறுப்பது உசிதமில்லை என்று சொல்வார்கள். மரத்தின் ஈரப்பதம் காய சில நாட்கள் ஆகும். அதன் பின்னரே அளவு வாரியாக அறுக்க வேண்டும் என்பார்கள். ஈரப் பதத்தோடு அறுத்தால் அறுத்த உருப்படி வளையும் என்பார்கள். நிலைக்கதவு மினிமம் 7 ஆடி உயரம் ஆகும். அப்போது 6 அடித்துண்டு போறாது. எப்படி சமாளித்தீர்கள்?

    வீடானாலும் மரம் வெட்ட வனத்துறை அனுமதி வேண்டும் என்பார்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வீடானாலும் மரம் வெட்ட வனத்துறை அனுமதி வேண்டும் என்பார்களே? //

      அது சந்தனம், தேக்கு போன்ற மரங்களுக்குதானே?

      நீக்கு
    2. வனத்துறை அனுமதி சந்தன மரம் வெட்டுவதற்கு மட்டுமே. கூறியது சரி.
      Jayakumar

      நீக்கு
    3. ஜெயகுமார் சார், மற்றும் ஸ்ரீராம்ஜி,

      மரம் வெட்டிய பின் 2 வாரங்களுக்குப் பின் தான் அறுவை நிலையத்திற்குக் கொண்டு போனோம். துண்டுகளாக்கிய பின் உலர்த்தல் இரு வாரங்கள். அதன் பின் தான் ஆசாரி வேலைகள்.

      நிலைகள் சிமென்ட் மற்றும் இரும்பு.......கதவும், ஜன்னல் ஃப்ரேம், கட்டில், ஏர்போர்ட் நாற்காலி இவை எல்லாம் தான் மரத்தால் செய்தவை என்பதால் 6 அடி போதுமானதாக இருந்தது. முன்பு, தேக்கு க்கும், ரோஸ் மரத்திற்கும் வன இலாகா அனுமதி வேண்டும். ஆனால் இப்போது அவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லை. காட்டின் அருகே buffer zone இல் இது போல் முடியாது.

      ஜெயகுமார் சார் உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. விஷயம் நிறைந்த நல்ல கேள்விகள்.

      துளசிதரன்

      நீக்கு
  6. நாம் நமது இடத்தில் வளரக்கும் மரமும் ஒரு குழந்தை போன்ற உணர்வைத்தான் தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! உண்மைதான் கில்லர்ஜி.

      உங்கள் உணர்வுபூர்வமான கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  7. இனிமையான பழங்களை தந்த மரத்தை வெட்டுவது வருத்தம்தான்.
    ஆனால் அதை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தியது மகிழ்ச்சியே!
    நல்ல இனிமையான நினைவுகள் எப்போது நம்முடன் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நம்முடன் வாழ்ந்து மறைந்தவர்கள் போல் நமக்குப் பலன் தந்து நம் நினைவில் வாழும் செல்லப் பிராணிகள் போல் இருக்கும் மரம் செடி கொடிகள் சில நம் மனதில் பசுமையாய் நிற்கும்தானே.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு

      துளசிதரன்

      நீக்கு
  8. மரத்திற்கு ஈடு இணை மனிதன் கூட கிடையாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். டிடி, உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

      துளசிதரன்

      நீக்கு
  9. //பலாக்கொட்டைகளைக் கொன்றை மர இலையில் வைத்து நீண்டகாலம் பாதுகாத்து பொரியல் செய்து சாப்பிடலாம்.//

    மேலே நீங்கள் சொல்லியுள்ள தகவல் எனக்கு புதிய தகவலாக உள்ளதே!!!...

    கொன்றை மர இலையில் வைத்து பலாக்கொட்டைகளை பாதுகாத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்குமா???!!!....

    கொஞ்சூண்டு விளக்கம் கொடுத்தால் புதிய விஷயம் ஒன்றை தங்கள் வாயிலாக தெரிந்து கொண்டதில் மகிழ்வேன்... நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொன்றை என்பது இங்கு படத்தில் உள்ள மஞ்சள் பூ பூக்கும் கனிக்கொன்றை என்று சொல்லப்படும் கொன்றை இலைகள். அதில் பொதிந்து வைத்தால் 7, 8 மாதங்களுக்குப் பின்னும் கெடாமல் பலாக்கொட்டை இருப்பதுண்டு. இது தவிர வேறு இலைகள் உண்டா என்று தெரியவில்லை.

      உங்கள் கருத்திற்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் சிவா.

      துளசிதரன்

      நீக்கு
  10. எனக்கு சிறு வயதாக இருக்கும் போது செங்கோட்டையில் வசித்துதோம் டில்லி செங்கஓட்டை அல்ல கேரளா பார்டரில் உள்ள செங்கோட்டையில் அப்போது அங்கு பலாப்பழ்த்திலிருந்து பலவிதமான உணவு வகைகளை செய்து சாப்ப்பிட்டு ருக்கிறோம் மதுரை வந்த பின்னும் பாட்டி வீட்டிற்கு போகும் போதெல்லாம் நிறையவே சாப்பிட்டு இருக்கிறோம். பலாக் கொட்டையை வறுத்து சாப்பிடுவோம் அது போல அந்த கொட்டையை வைத்து சாம்பார் புளிக் குழம்பு செய்து சாப்பிடும் வழக்கம உண்டு அது போல பலாச்சுளையை அது பழுக்கும் முன்பு நீங்கள் சொன்னபடி தோங்காய் பச்சமிளகாய் அரைத்து அதில் சேர்த்து சாப்பிடும் வழக்கமும் உண்டு சிப்ஸ்யும் செய்து சாப்பிடுவோம் பலா சுளையை தேனில் ஊற வைத்து சாப்பிடும் பழக்கம் உண்டு நாங்கள் கேரளா பார்ட்டரில் உள்ள ஊரில் வாழ்ந்ததால் எங்கள் வீட்டு சமையைல் எப்போதும் கேரளா பாணியில்தான் இருக்கும்..



    நமக்கு பலன் கொடுத்த மரம் என்பதால் சூழ்நிலை காரணமாக வெட்டும் போது மனம் வருத்தம் ஏற்படத்தான் செய்யும் இயற்கை நேசிக்கும் நல்ல மனதுடையவருக்கு நிச்சயம் வருத்தம்தான் வரும்


    நான் இப்போது வேலை செய்யும் இடத்தில் நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் வீடு கட்ட உதவும் மரப்பலகைகள் கட்டைகள் வீணாகுவதைமுதலி பார்த்த போது மனம் மிகுந்த வேதனைகுள்ளாகும் ஆனால் சில மாதங்கள் கழித்து பழகி போய்விட்டது. மரம் நடுவோம் பூமியை காப்பாற்றுவோம் என்று சொல்லும் போது இப்போது எல்லாம் எனக்கு சிரிப்புதான் வருகிறது அமெரிக்காவிம் மரங்களை அதிகம் நடுகிறார்கள் என்ற போதிலும் அதனை வேஸ்டாக்குவது அதிகமாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்கனிகளில் ஒன்றான பலா நம் எல்லோர் வாழ்விலும் இன்றியமையாத ஒன்றேதான். நீங்கள் சொன்ன, தேனில் ஊற வைத்தல் - அதை பதிவில் சொல்ல மறந்தே போனேன். பலா சுளைகளைச் சின்னதாக வேக வைத்து சர்க்கரைப் பாகு ஊற்றி வைத்தால் கெட்டுப் போகாது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நீண்ட நாட்கள் சாப்பிடலாம். பலாவுடன் தொடர்புடைய நல்ல நினைவுகளைப் பகிர்ந்ததற்கு நன்றி மதுரைத் தமிழன்.

      துளசிதரன்.

      நீக்கு
  11. எனக்கு சிறு வயதாக இருக்கும் போது செங்கோட்டையில் வசித்துதோம் டில்லி செங்கஓட்டை அல்ல கேரளா பார்டரில் உள்ள செங்கோட்டையில் அப்போது அங்கு பலாப்பழ்த்திலிருந்து பலவிதமான உணவு வகைகளை செய்து சாப்ப்பிட்டு ருக்கிறோம் மதுரை வந்த பின்னும் பாட்டி வீட்டிற்கு போகும் போதெல்லாம் நிறையவே சாப்பிட்டு இருக்கிறோம். பலாக் கொட்டையை வறுத்து சாப்பிடுவோம் அது போல அந்த கொட்டையை வைத்து சாம்பார் புளிக் குழம்பு செய்து சாப்பிடும் வழக்கம உண்டு அது போல பலாச்சுளையை அது பழுக்கும் முன்பு நீங்கள் சொன்னபடி தோங்காய் பச்சமிளகாய் அரைத்து அதில் சேர்த்து சாப்பிடும் வழக்கமும் உண்டு சிப்ஸ்யும் செய்து சாப்பிடுவோம் பலா சுளையை தேனில் ஊற வைத்து சாப்பிடும் பழக்கம் உண்டு நாங்கள் கேரளா பார்ட்டரில் உள்ள ஊரில் வாழ்ந்ததால் எங்கள் வீட்டு சமையைல் எப்போதும் கேரளா பாணியில்தான் இருக்கும்..



    நமக்கு பலன் கொடுத்த மரம் என்பதால் சூழ்நிலை காரணமாக வெட்டும் போது மனம் வருத்தம் ஏற்படத்தான் செய்யும் இயற்கை நேசிக்கும் நல்ல மனதுடையவருக்கு நிச்சயம் வருத்தம்தான் வரும்


    நான் இப்போது வேலை செய்யும் இடத்தில் நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் வீடு கட்ட உதவும் மரப்பலகைகள் கட்டைகள் வீணாகுவதைமுதலி பார்த்த போது மனம் மிகுந்த வேதனைகுள்ளாகும் ஆனால் சில மாதங்கள் கழித்து பழகி போய்விட்டது. மரம் நடுவோம் பூமியை காப்பாற்றுவோம் என்று சொல்லும் போது இப்போது எல்லாம் எனக்கு சிரிப்புதான் வருகிறது அமெரிக்காவிம் மரங்களை அதிகம் நடுகிறார்கள் என்ற போதிலும் அதனை வேஸ்டாக்குவது அதிகமாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    நலமா? தங்களின் பாசம் மிகுந்த மரத்தினைப்பற்றி சொல்லியிருக்கும் பதிவை படிக்கையில் தாங்கள் அந்த மரங்களின் மேல் எத்தனை அன்பாக இருந்திருக்கிறீர்கள் என்பது புரிந்தது.

    மரம் ஒரு வரந்தான். தங்களின் நினைவுகளை போற்றும் விதத்தில் அந்த மரம் தங்களுடனேயே மறுபடியும் வாழ வந்திருப்பதும் மகிழ்ச்சி தரும் விஷயம். அந்த விஷயத்தில், மரமும், தாங்களும் ஒரு வரமாக அதை பெற்றிருக்கிறீர்கள்.

    இப்படி நாம் வாழும் வீட்டிற்காக, அதன் பாதுகாப்பிற்காக , வீட்டை சுற்றியுள்ள அந்த மரங்களை இருக்கும் இடத்தை விட்டு அகற்றுவது மக்கள் எல்லோருடைய இயல்புதான் என்றாலும், நீங்கள் அது மறுபடியும் தங்கள் வீட்டிற்குள்ளேயே வந்து வாழ வழிவகுத்து அதற்குரிய மரியாதையை தந்து விட்டீர்கள்.தங்களுக்கு வாழ்த்துகள்.

    பலாபலாத்தின் பயனுள்ள இனிப்புகள், செய்முறைகள் மரம் அகற்றும் வேலைப்பாடுகள் குறித்து விபரமாக சொல்லியிருக்கிறீர்கள். தெரிந்து கொண்டேன். இடையிடையே அந்த மரங்கள் அந்த இடத்தை விட்டு பிரிந்த ஒரு சோகம் தங்கள் எழுத்துக்களில் பிரதிபலிப்பதை நானும் உணர்கிறேன். அனைத்தும் ஒரு முடிவை நோக்கித்தானே செல்ல வேண்டும். உண்மையான வார்த்தைகள். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடக் கணக்காகப் பழகிய மரம் மட்டுமின்றி எல்லோருக்கும் இனிப்பான சுளைகளையும் கொட்டைகளையும் கொடுத்த பலா. உணர்வுகளோடு கலந்த ஒன்று.

      //அந்த மரம் தங்களுடனேயே மறுபடியும் வாழ வந்திருப்பதும் மகிழ்ச்சி தரும் விஷயம். அந்த விஷயத்தில், மரமும், தாங்களும் ஒரு வரமாக அதை பெற்றிருக்கிறீர்கள்.//

      ஆம். இப்போது ஜன்னலாய், கட்டிலாய், கதவாய் எங்களோடு இருக்கின்றது.

      //இப்படி நாம் வாழும் வீட்டிற்காக, அதன் பாதுகாப்பிற்காக , வீட்டை சுற்றியுள்ள அந்த மரங்களை இருக்கும் இடத்தை விட்டு அகற்றுவது மக்கள் எல்லோருடைய இயல்புதான் என்றாலும், நீங்கள் அது மறுபடியும் தங்கள் வீட்டிற்குள்ளேயே வந்து வாழ வழிவகுத்து அதற்குரிய மரியாதையை தந்து விட்டீர்கள்.தங்களுக்கு வாழ்த்துகள்.//

      மிக்க நன்றி சகோதரி.

      //இடையிடையே அந்த மரங்கள் அந்த இடத்தை விட்டு பிரிந்த ஒரு சோகம் தங்கள் எழுத்துக்களில் பிரதிபலிப்பதை நானும் உணர்கிறேன். அனைத்தும் ஒரு முடிவை நோக்கித்தானே செல்ல வேண்டும். உண்மையான வார்த்தைகள். //

      விரிவான உணர்வுபூர்வமான, புரிந்துகொண்ட கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கமலாஹரிஹரன்

      துளசிதரன்

      நீக்கு
  13. நான் போட்ட கருத்தைக் காணோமே.

    பலா மரம் போன்றவைகளை வெட்டுவது வருத்தத்துக்குரியதுதான். பலா மா போன்றவைகளை வெட்டினால் திரும்ப வளர்க்க பல வருடங்களாகும். வாழை அப்படி இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து இதோ வந்திருக்கிறதே, நெல்லைத்தமிழன்.

      ஆமாம் நீங்கள் சொல்லியிருப்பது போல் பலாமரம் மாமரம் எல்லாம் வளர வருடங்களாகும். வாழையும் வீட்டில் இருக்கிறதுதான். மாமரமும் உண்டு. வாழை வெகு சீக்கிரம் பலன் தரும்.

      கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  14. கீதா, துளசி அண்ணன் நலம்தானே?.. எவ்ளோ காலமாச்சு எல்லோரையும் இங்கு பார்த்து. கீதா அப்பப்ப என் யுடியூப் ஷனலுக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறா மறக்காமல்.. அனைத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா அம்பாணி அதிராக்கு வெல்கம்!!!! இந்தியா பக்கம் வந்தீங்கனா போட்டி ஆகிடுமாக்கும்!!

      இடையில் ய்ட்யூப் லைக் மட்டும் போட்டேன் கமென்ட் போடணும் இடையில் கொஞ்சம் பிசியாகிட்டேன். வலைப்பக்கமும் வரலை இப்பத்தான் வாரென்.

      நன்றி அம்பானி அதிரா!!!!!!!

      கீதா

      நீக்கு
  15. எந்தாப்பெரிய பலாமரம், இப்படி நான் கண்டதில்லை எங்கும், ஊரில் பொதுவாக பலா மரம் கிளை விட்டுப் பர்ந்து வளர்வதைத்தான் கண்டிருக்கிறேன், இது உயர்ந்து நிற்கிறது, முடிவில் பிரயோசனப்பட்டிருக்கிறது நல்ல விசயம்தான்.

    படங்களோடு போஸ்ட்டை ரசித்தேன். கேரளாப் பகுதியில் மரங்கள் சோலையாகவே இருக்கும் என்பதால், இப்படி இடைக்கிடை வெட்டுவதில் தப்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரடியைப் பற்றி நாகள் இடையில் பேசிக் கொள்வதுண்டு. இடுகை மற்றும் கருத்துகள் பத்தியும். அம்பானியானதும் அதிரடிதான்!

      கேரளாவில் வீட்டு பாகங்களாக பலா தான் மெயின். கதவு, ஜன்னல், கட்டில், டேபிள், மட்டுமல்ல ஓட்டு வீடுகளுக்கு, விட்டம், சட்டம், இப்படி முன்பெல்லாம் இன்றியமையாத ஒன்று.

      இப்போது எல்லாம் காங்க்ரீட் கட்டிடங்கள் ஆகிவிட்டதால் கொஞ்சம் உபயோகம் குறைவு. வீட்டின் மிக அருகே வளர்ந்து நிற்கும் பலா காற்றில் வீட்டின் மேல் விழ வாய்ப்புள்ளதால் அப்படிப்பட்ட பெரிய மரமானதால் இதை வெட்ட வேண்டியதானது. அதான் வெட்டப்பட்ட வேர் பாகத்தின் படமும் உண்டு நீங்கள் சொல்வது போல் எங்கும் மரங்கள். எனவே சிலவற்றை வெட்டினால் நிலப்பகுதிக்கும் சூழலுக்கும். வழக்கம் போல் புத்துணர்ச்சியுடன் தரும் கருத்து போல்l நெடுநாளைக்குப் பிறகு இங்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி அம்பானியாகிட்ட அதிரா சகோதரி! mikka nantri ambaniyaagivitta athira sagothari!

      துளசிதரன்

      நீக்கு
    2. ஒ என்னை மறக்காமல் இடையிடை நினைத்துப் பேசியிருக்கிறீங்கள் நன்றி துளசி அண்ணன். ஊரில் பலாமரத்தில் தளபாடமோ கதவோ செய்து நான் கேள்விப்பட்டதில்லை, வேம்பு தேக்கு முதிரை இப்படியானவற்றில்தான் செய்தது அறிந்திருக்கிறேன், பனையில் வளைமரம் [வீட்டுக்கு] போடுவார்கள்.

      பலாமரத்தில் செய்வது, நீண்டநாள் இருக்குமோ?? இதுதான் ஒரு டவுட்.

      நீக்கு
    3. ஆமாம் பேசுவதுண்டு. சகோதரி ஏஞ்சலையும் சொல்லுவதுண்டு. நீங்களும் மீண்டும் வந்ததற்கு மிக்க நன்றி.

      ஒவ்வொரு பிரதேசத்திலும் எங்கும் அதிகம் காணப்படும் மரங்களில் எளிதில் சேதமாகாத மரங்களை அந்தந்த பகுதி மக்கள் உபயோகிப்பதுண்டு. அப்படி கேரளாவில் பலா அதிகம் உபயோகப்படுகிறது. தேக்கோடு ஒப்பிடும் போது விலையும் குறைவு. அதுவும் ஒரு காரணம். பலாவில் கதல் என்று சொல்லப்படும் நடுப்பகுதிதான் கரையான் போன்ற சிறு உயிரினங்கள் சேதமாக்காமல் நீண்டு நாள் நிலைக்கும்.

      //பனையில் வளைமரம் [வீட்டுக்கு] போடுவார்கள்.// இது அறிந்திருக்கிறேன்.

      மீள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி அதிரா!

      துளசிதரன்

      நீக்கு