இரு நாட்களாக ஒரு பணி செய்து கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டு கிராமங்கள், பஞ்சாயத்துகள், ஊராட்சிகள், துணை மாவட்டங்கள், மாவட்டங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் ஆங்கிலத்தில் பதியப்பட்ட Excell கோப்பு. ஊரின் பெயர்களைத் தமிழில் பதிய வேண்டும்.
ப்பூ! இவ்வளவுதானா? இது என்ன பெரிய கஷ்டம் என்று நீங்கள் நினைக்கலாம். அடுத்து வாசியுங்கள் புரியும்.
ஊர்களின் பெயர்களை ஆவணப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது தெரியவருகிறது. கூகுள், விக்கியில் நிறைய ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பதை சொல்லியே ஆக வேண்டும். என்றாலுமே பல சிறிய கிராமங்களைச் சரியாகப் பதிவது கடினமாக இருக்கும் போது இணையம் இல்லாத போது எப்படிச் செய்திருப்பார்கள்? என்ற யோசனையும் கூடவே வருகிறது. Herculean Task! எனக்கு
அதுவும் மக்கள் தொகை பெருகப் பெருக, ஊரக வளர்ச்சிகளால் ஏற்படும் மாற்றங்களினால் ஊர் பெயர்களில் சில மாற்றங்கள், மாவட்டங்கள் பிரிக்கப்படும்போது ஏற்படும் குழப்பங்கள், பல கிராமங்கள் விரிவடைவதால் ஏற்படும் சிக்கல்கள். ஏற்படும் மாற்றங்களை ஊரின் பெயர்களை ஆவணப்படுத்துதலில் உள்ள சிரமங்கள்.
சில ஊர்கள் Initial !!!!!! உடன் வரும்!!!!! உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் Ayanporuvai (கோப்பில் Ayamporuvai!!) இதை தமிழில் அயன்பொருவாய் என்று எழுத வேண்டும். அல்லது அ. பொருவாய் என்று கூகுள் சொல்லும். A. Vellalapatti இதை தமிழில் ஏ வெள்ளாளப்பட்டி என்று விக்கி சொல்வதை எழுதியாச்சு. அடுத்து கோப்பில் சற்று மேலே A. Vallalapatti என்று இருக்கிறது. இதை கூகுளில் ஏ வள்ளாளப்பட்டி என்று தட்டிப்பார்த்தால் ஏ வெள்ளாளப்பட்டி என்றுதான் வருகிறது!! ஆங்கிலத்தில் A, B என்று ஊரின் பெயர்களின் முன் இருப்பதை அப்படியே ஏ, பி என்று எழுதச் சொல்வார் நமக்கு வேலை தருபவர். ஆனால் அ, ஆ என்று சில ஊர்களின் பெயர்களின் முன் சில இடங்களில் இருப்பதை கூகுள் சொல்லும்! அதே போன்று வடக்கு, தெற்கு என்று.
சில ஊர்கள் Part 1 என்று இருப்பதை பார்ட் 1 என்று எழுத வேண்டும் என்பார் வேலை தருபவர். விக்கி மற்றும் செய்தித்தாள்களில் பகுதி 1 என்று இருக்கும். அவரிடம் விளக்கி அப்படித்தான் தமிழிலேயே இங்கு சொல்லப்படுகிறது என்று சொல்ல வேண்டும்.
சில ஊர்களின் பெயருடன் BIT என்று வரும். அதாவது இதுவும் பகுதி/துண்டு என்ற பொருள் என்றே நினைக்கிறேன். விக்கியிலும் அப்படித்தான் பதியப்பட்டுள்ளது. பிட் 1, பிட் 2 என்று ஊர்கள் இருக்கும். துண்டு போட்டே வாய்க்கா வரப்பு பிரச்சனை வந்துரும் போல!!!
சில ஊர்களின் பெயரின் முன்னால் "இனாம்" என்று வரும். எ. கா. இனாம் குளத்தூர். இனாம் என்பதற்கு நமக்குப் பொருள் தெரியும் என்றாலும் ஊர் பெயரின் முன்னால் வருவதன் பொருள் என்ன? சரியான பொருள் என்ன என்று அறிய ஆர்வம்!
அது போலவே கஸ்பா என்று ஊரின் முன்னில் வரும். உதாரணம் கஸ்பா அய்யம்பாளையம். கஸ்பா என்ற சொல் அரபு மொழியில் இருந்து வந்ததாம். Chief station or head-quarters of a district or division. கொஞ்சம் பெரிய ஊர், முதன்மையான என்றும் சொல்லலாம் போல.
கூடவே எல்லையில் இருக்கும் ஊர்களின் பிரச்சனைகள். எந்தப் பக்கம் ஊராட்சியில் சேர்ப்பது? பாண்டிச்சேரி/தமிழ்நாட்டு எல்லையில் பல ஊர்களின் திண்ணைகளில் ஒரு திண்ணை தமிழ்நாட்டிலும் மற்றொரு திண்ணை பாண்டிச்சேரியிலுமாக இருக்கும். இதை நான் நேரில் கண்டதுண்டு!!!!! இரு ரேஷன்கார்டுகள் வைத்திருப்பார்கள்!
சிவகங்கை மாவட்டத்தில் முடிகண்டம் ஊராட்சியில் முடிகண்டன் எனும் கிராமம். இது எனக்கு வந்த கோப்பில். கூகுளில் கிராமத்தைப் பற்றிய தகவல்களில் சரிபார்த்த போது ஆங்கிலத்தில் வந்தது. அதில் கோப்பில் உள்ளது போலவே சொல்லியிருந்தது. முடிகண்டம் ஊராட்சி – முடிகண்டன் கிராமம் என்று. ஆனால்…..
விக்கியில், முடிகண்டம் ஊராட்சி பட்டியலில் முடிகண்டம் கிராமம் என்றே உள்ளது. தமிழில் முடிகண்டன் என்று கூகுளில் தேடினால் முடிகொண்டான் என்றே வரும். இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊர். அது போல கீழ்வேளூர், கீழ்வேலூர் என்று சிறிய வித்தியாசத்தில் ஊராட்சி மற்றும் தொகுதி!! ஆங்கிலத்தில் ஒரே Spelling!
பாருங்க ஒரு எழுத்து மாற்றிப் போட்டாலும் குழப்பம். பின் கோடு வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்…ஆனால் பின் கோடு எழுதியிருந்தாலுமே…..
வேறு சில உதாரணங்கள்– Vengadampatti–வேங்கடம்பட்டி. வெங்கடாம்பட்டி ஊராட்சி, வெங்கட்டம்பட்டி, வெங்கடம்பட்டி என்று இருக்கும். தலைப்பில் வெங்கடம்பட்டி பஞ்சாயத்து தலைவர் என்று இருக்கும். செய்திக்குள் வெங்காடம்பட்டி ஊராட்சி என்று இருக்கும். ஆங்கிலத்தில் இரண்டிற்கும் ஒரே Spelling. இதில் சில கிராமங்களின் பெயர்கள் ஒரே போன்று ஒரே இடத்தில் பின் கோடுகள் மாறுபடும். விரிவாக்கத்தினால்.
கிராமத்தின் கீழ் MUTHANDIPURAM - பஞ்சாயத்தின் கீழ் Muthandiyapuram. ஆனால், ஏற்கனவே பதிவு செய்தவர் முதன்டிபுரம் என்று பதிவு செய்திருப்பார். விக்கி முதண்டியாபுரம் ஊராட்சி என்றுதான் சொல்கிறது என்றாலும் அதைப் பற்றிய விரிவான விளக்கங்களில் முத்தாண்டியாபுரம் என்றும், செய்திகளில் எல்லாம் முத்தாண்டியாபுரம் என்றே வருகிறது. இதில் வட்டம், ஒன்றியம் என்று பல பிரிவுகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு Spelling! வித்தியாசங்களுடன் பெயர்!!!
கூகுள் வரைபடத்தில் இருக்கும் பெயருக்கும் விக்கி சொல்லும் பெயருக்கும், செய்தித்தாள்களில் வரும் பெயருக்கும் வித்தியாசங்கள் இருக்கும். இத்தனைக்கும் ஒரே ஊர் பெயர்தான்.
எனக்கு வந்த கோப்பில் ஆங்கிலத்தில் இருந்ததை, ஆங்கிலத்திலும், தமிழிலும் என்று எப்படி மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்தாலும் சில கிராமங்களின் பெயர்கள் விக்கியில் ஏற்கனவே பதியப்பட்டிருக்கும் ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் பட்டியலில் இருப்பதில்லை. தமிழ் செய்திகளில் ஒரு சின்ன செய்தியிலும் கூட இருக்கவில்லை. கோப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலப் பெயரை கூகுளில் போட்டுப் பார்த்தால் ஊர், ஆங்கிலச் செய்திகளில் வரும். அதை வைத்து உச்சரிப்பின் அடிப்படையில் ஊகத்தின் அடிப்படையில் பதிய வேண்டியதாக இருக்கிறது.
சிலவற்றை விக்கியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஊராட்சி ஒன்றியங்களின் (இந்த ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் குழப்பும். ஒரு ஊர் சிற்றூர்/கிராமம் பட்டியலில் இருக்கும். அதே ஊர் அடுத்து ஊராட்சி என்று வரும், ஊராட்சி ஒன்றியம் என்றும் வரும். அதன் கீழ் சில கிராமங்கள் இப்படி….) கிராமங்கள் பட்டியல் இருக்கும் அதனுள் சென்று சரி பார்த்து பதிந்துவிடலாம். கோப்பில் இருப்பவை சில அதில் இருக்காது. வேறு ஒரு ஊராட்சியில் இருக்கும்.
சிவகங்கை, மதுரை இரு மாவட்டங்களிலும் மாத்தூர் எனும் ஒரே பெயரில் ஊராட்சிகள். அதே போன்று விளாங்குடி. இதில் ஸ்பெல்லிங்க் – விளாங்குடி, விலாங்குடி, விளங்குடி, விலங்குடி!!!
விக்கியில், கூகுளில் பார்த்த பெயரை வைத்து நீங்க கூகுள் வழிகாட்டியில் ஊர் பெயரைப் போட்டு போனீங்கன்னு வைங்க, உங்களைக் குழப்பிவிடும்!
நமக்கு வேலை தருபவர் வட இந்தியர். அவருக்குத் தமிழ்நாட்டுப் பெயர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாடு என்றில்லை எந்த மாநிலத்தின் எல்லா ஊர் பெயர்களும் எல்லாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை என்பதுதானே சரி! கோப்பில் ஆங்கிலப் பெயர்கள் பலவும் தவறாகப் பதியப்பட்டிருக்கும். எனவே, கூடியவரை கூகுளில் தேடி எடுக்கப் பிரயத்தனப்பட வேண்டும்.
கோப்பில் ஊத்துப்பட்டியை UTHUPPATTI - என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பாங்க. தமிழில் உதுப்பட்டி, உடுப்பட்டி என்று பதிவு செய்திருப்பாங்க.
ஆதித்தனேந்தல் ஊரின் பெயர். இதை ஆங்கிலத்தில் ATHITHNANENDAL – என்று தட்டச்சு செய்திருப்பார்கள்!!
கோப்பில் இருப்பது VALAVANDA PURAM – விருதுநகர். கூகுள் சொல்வது ஆங்கிலத்தில் Valavandalpuram. தமிழில் ஒரே ஒரு செய்தியில் வாழவந்தால் புரம் என்று இருந்தது. அதை வைத்து கூகுளில் தேடினால் வாழவந்தாள் புரம் என்று தேடுகிறீர்களா என்கிறது!!!!!! அதை அழுத்தினா ஒரு செய்தியில் வாழவந்தாள் புரம் என்று இருக்கிறது. ல்? ள்? வினோதமான பெயர் இல்லையா?!!!
ஊராட்சி ஒன்றியம் - நரசநாயகபுரம். அதன் கீழ் வரும் கிராமம் நரசநாயகிபுரம்!! (தஞ்சாவூர்)
அலக்குடி என்று கூகுள்வரைபடத்தில். ஆலக்குடி, அளக்குடி – என்று கூகுள் பக்கங்களில், விக்கியில். வலையம்பட்டு, வளையம்பட்டு, வலையாம்பட்டு, வளையாம்பட்டு…….இப்படி
Attupattukottaipunji – கோப்பில் இருக்கும் பெயர் - அட்டுபட்டுகோட்டைபுஞ்சி என்று கூகுள்மேப் காட்டுது. ஆனா கூகுள் பக்கங்களில் வேறு எங்கும் இல்லை. மாற்றி மாற்றிப் போட்டுத் தேடித் தேடி……..அப்புறம் பார்த்தா ஆட்டுபட்டிகோட்டைபுஞ்சை!!! என்று வருகிறது ஒரு செய்தியில்!!! ஓ கடவுளே!! ரட்சிப்பாய்!
Puvani / Poovani – இரண்டும் ஒரே ஊர். புவனி என்று கூகுள் வரைபடத்தில். ஆனால் விக்கியில் பூவாணி!!!
இப்படித்தான் வரலாறும் மறுவி மறுவி பல இடைசெருகல்களுடன் வருகின்றதோ! ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக வைத்த பெயர்களுடன், செவி வழி/Passing on the secret என்று விளையாடுவோமே, அப்படியும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வழக்கு மொழி என்றும் பெயர்கள் விதம் விதமாக…... (எங்க ஊர் நாரோயில், திருப்பியாரம் என்று சொல்லப்படுவது போல்)
நான் வியந்த வினோதமான பெயர்கள் பல. அதில் சில உங்களுக்கும்: ஜோஸ்யர் ஆலங்குளம், கோமாளி ஒத்த வீடு, Highways town - ஹைவேஸ் பேரூராட்சி, பொய்க்குணம் ஊராட்சி – கள்ளக்குறிச்சி அருகில்!!!! கீழராஜகுலராமன், நல்லான்பிள்ளைபெற்றாள், ஈகை வாழவந்தாள்/ல்புரம், நெருப்பெரிச்சல், ராசாத்திவளவு, சர்க்கார், திருப்பூர் சர்க்கார், மீளவிட்டான், படர்ந்தபுளி (அப்ப படரும்புளி, படராபுளி??!!!ன்னு வருமோ? ஊர் விரிவடையும் போது?), எழுவரைமுக்கி – ஹையோ அப்புறம் என்னாச்சோ?!!!
எனக்கு வந்த கோப்பில், தமிழ்நாட்டிலுள்ள எல்லா கிராமங்களும், பஞ்சாயத்துகளும், ஊர்களும், ஊராட்சிகளும், ஊராட்சி ஒன்றியங்களும் இல்லை. முழுமையான கோப்பு இல்லை. ஒரு வேளை வேறு கோப்பில் இருக்குமோ என்னவோ? வேறு யாரேனும் செய்வார்களோ? இப்படித் துண்டு துண்டா செய்தா எப்படி ஒருங்கிணைத்து ஒழுங்காகப் பதியப்படும்? தெரியவில்லை. சரி….போட்டும் நமக்கு வந்ததைச் சரியாகச் செய்து வைப்போம்!! அம்புட்டுத்தான்.
தமிழ்நாடு அரசின் கீழ் இதற்கென்று இருக்கும் துறையில் இதை முறையாக ஆவணப்படுத்தலாமே. ஆவணப்படுத்தி அதை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கலாமே. Outsourcing ஏன் வருகிறது? அதுவும் விக்கியில் நன்றாகப் பதியப்பட்டிருக்கும் போது? ஆனால் நாம் தேடும் போது தமிழில் பல வருவதில்லை. அதுவும் தமிழ்நாட்டிற்குத் தொடர்பில்லாதவர் மூலமாக வருவதால்? அங்கிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இதை சரிபார்ப்பார்கள் என்கிறார்கள். மிகச் சிறிய கிராமங்கள், கூகுளில் இல்லாதவற்றை எப்படிச் சரிபார்ப்பார்கள்? அது அந்தந்தப் பகுதிக்குப் பொறுப்பான அதிகாரிகளால் மட்டும்தானே செய்ய முடியும்? எனக்குப் புரியவில்லை
சரி, ஏன் இந்த ஆவணப்படுத்தல் முக்கியம்? அரசிற்கு வாக்காளர், தொகுதிகள், மக்கள் தொகை புள்ளியியல், ஊரகவளர்ச்சிப் பணித்திட்டங்கள் என்று அரசு கோப்புகளில் பதிவதற்கு எப்படி மிக மிக முக்கியமோ அது போல தனிமனிதர்கள்/குடும்பங்களுக்கும் மிக மிக முக்கியம்.
80-85 வருடங்களுக்கு முன்னர் மிகச் சிறிய கிராமத்தில் வாங்கப்பட்ட வீடு. வழி வழியாய் தலைமுறைகள் அதைப் பராமரித்து, ஆண்டு தற்போது விற்க நினைத்த போது உறவினர் ஒருவருக்கு எழுந்த சிக்கல்கள். நில ஆவண, சர்வே நம்பரில் குழப்பம். அப்போதைய சர்வேநம்பருக்கான ஆவணங்கள் பொருந்தவில்லை என்பதோடு சொற்கள் வித்தியாசம். ஊர் விரிவடைந்து ஏதேதோ விரிவாக்கங்களில், ஊரகவளர்ச்சியினால் மாற்றங்களினால், பெயர் மாற்றங்கள், எண்கள் மாற்றங்கள் என்று பல விஷயங்களை சட்டரீதியாக உறுதிப்படுத்த அவசியமாகிப் போனது. (இதில் தனிப்பட்ட பிரச்சனைகள் வேறு. முதல் மனைவி அவரது குழந்தைகள், முதல் மனைவி இறந்த பிறகு அடுத்த மனைவி, குழந்தைகள் என்று….) எனவே சொத்து இருந்தால் அதை முறையாகப் பதிவு செய்து, அப்பப்ப பேரு ஏதாச்சும் மாறுதான்னு பார்த்து சரியான ஆவணங்களை வைத்துக் கொண்டுவிடுவது நல்லது.
வந்திருக்கும் கோப்பில் ஏற்கனவே யாரோ கொஞ்சம் நிரப்பியிருக்காங்க. அதில் பாளையங்கோட்டையை பலையங்கோட்டைன்னு போட்டு வைச்சிருக்காங்க!!! கடவுளே! பழையகோட்டைன்னு போடலை! பழையகொட்டைன்னு மாறாம இருந்தா சரி….!!! எண்டே நெல்லையப்பனே ரட்சிக்கு!
இப்படி ஒவ்வொன்றும் தேடித் தேடி சரியாக இருக்கிறதா என்று பார்த்துப் பதிவதால் நேரம் எடுக்கிறது. கூடவே ஏற்கனவே உள்ளவற்றை சரிபார்க்க வேண்டும்!
என் விருப்பம் : எங்கள் கிராமத்தின் பெயரும் கோப்பில் இருந்தது திருப்பதிசாரம் என்று. நான் திருவண்பரிசாரம் என்று மாற்றிவிட்டேன! தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்தின் பெயரும் முறையாக அதாவது சைவத்திருமறை, பிரபந்தம், இன்னும் பல பழையவரலாறுகளில் நல்ல தமிழில் இருக்கும் பெயர்களை மாற்றாமல் அப்படியே பதிய வேண்டும் என்பது என் விருப்பம். திருவண்பரிசாரம் என்பது போல்.
இதோடு வீட்டு வேலைகள்! எனவே வலைப்பக்கம் இடையிடையே வருகிறேன். ஸாரி நட்புகளே!
(சிவகங்கை/மதுரை
பகுதியில் ஆங்கிலத்தில் தாறுமாறாகப் பதியப்பட்டிருந்த ஒருசிலவற்றை, கூகுளில்
தமிழில் சிக்காத ஊர் பெயர்களை நம்ம கில்லர்ஜியிடம் சரி பார்த்துக் கொண்டேன். நன்றி
கில்லர்ஜி!)
------கீதா
நல்ல திறமையானவரிடம் வேலை கொடுக்கப்பட்டு இருக்கிறது.கீதா நீங்கள் அதை மிக செம்மையாக செய்வீர்கள். நிறைய ஊர்களின் பேர் மக்கள் பேச்சு வழக்கில் மாற்றி அதுவே நிலைத்து இருக்கிறது.
பதிலளிநீக்குமதுரையில் எங்கள் வீட்டு தெருவின் பேர் பத்திரத்தில் எல்லாம் மகாகவி பாரதியார் தெரு. ஆனால் மக்கள் பாரதியார் தெரு என்றதாலும் அறிவுப்பு பலகையில் பாரதியார் முதல் தெரு, இரண்டாம் தெரு என்று இருக்கிறது. அதில் உள்ளது போல் முகவரி கொடுத்தால்தான் நல்லது என்று தபால்காரர் சொல்கிறார்.
//எங்கள் கிராமத்தின் பெயரும் கோப்பில் இருந்தது திருப்பதிசாரம் என்று. நான் திருவண்பரிசாரம் என்று மாற்றிவிட்டேன! தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்தின் பெயரும் முறையாக அதாவது சைவத்திருமறை, பிரபந்தம், இன்னும் பல பழையவரலாறுகளில் நல்ல தமிழில் இருக்கும் பெயர்களை மாற்றாமல் அப்படியே பதிய வேண்டும் என்பது என் விருப்பம். திருவண்பரிசாரம் என்பது போல். //
நீங்கள் ஊரின் பெயரை பழையபடி மாற்ற வேலை கொடுத்தவர்கள் ஒத்து கொள்வார்களா? கேட்டு விட்டீர்களா?
நீங்கள் எடுத்து கொண்ட பணி சிறப்பாக நடக்க வாழ்த்துகள். தேவகோட்டை ஜி ஊரின் பெயர்களை சொல்லி உதவியது மகிழ்ச்சி.
கோமதிக்கா,,,ஓ...நான் திறமைசாலின்னு எல்லாம் சொல்ல மாட்டேன். ..
நீக்குஉங்கள் தெரு போலவே, கீழெ ஸ்ரீராம் சொல்லியிருப்பது போலவும், எங்க ஊர் முன்ன திருப்பதிசாரம், கீழூர் அவ்வளவே. இப்போது திருப்பதிசாரம் தெற்கு, வடக்கு, கீழூர் என்று இருக்கு.
நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன் அக்கா இப்படி மாற்றியிருக்கிறேன் என்று. அவருக்குத் தமிழ் தெரியாது. ஹிந்தி. பார்ப்போம்...
அக்கா முடித்துவிட்டேன்
மிக்க நன்றி கோமதிக்கா.
கீதா
வித்தியாசமான பதிவு. Informative. இன்னும் உள்வாங்கிட்டு எழுதறேன் But i appreciate
பதிலளிநீக்குமிக்க நன்றி நெல்லை. உள்வாங்கினீங்களா இல்லையா!!!!
நீக்குகீதா
நீங்கள் சொல்வதுபோல ஆரம்பத்தில் சுலபமான வேலை என்று தோன்றினாலும், அப்புறம் உள்ளே உள்ள சிரமங்களை நீங்கள் எடுத்துச் சொன்னதும் நன்றாய்ப் புரிந்து கொள்ளமுடிகிறது. மிக மிகக் கடினமான வேலை. உண்மையில் இதைச் சரிபார்பபவர் கூட நீங்கள் எழுதி இருப்பது சரிதானா என்று சரி பார்த்துக் கொள்வது கூட முடியாது. எது சரியான ஆவணம் என்று தெரியாமல் அவர்தான் எப்படி சரி பார்ப்பார்?
பதிலளிநீக்குஒரு வழியா முடிச்சிட்டேன் ஸ்ரீராம். ஆமாம் முதல்ல சரி செஞ்சு முடிச்சிடலாம்ன்னு நினைச்சேன்..ஆனா வீட்டு வேலைகள்...அப்புறம் ஏண்டா எடுத்துக்கொண்டோம்னு ஒரு எண்ணம் வந்தது....அப்புறம் மனச தேத்திக் கொண்டு...இதிலும் நல்லது இருக்கிறதே...பாருங்க ஒரு பதிவு போட ஆச்சு....
நீக்கு//உண்மையில் இதைச் சரிபார்பபவர் கூட நீங்கள் எழுதி இருப்பது சரிதானா என்று சரி பார்த்துக் கொள்வது கூட முடியாது. எது சரியான ஆவணம் என்று தெரியாமல் அவர்தான் எப்படி சரி பார்ப்பார்?//
ஆமாம்! ஆனால் கீழே ஜெ கே அண்ணாவின் கருத்து பார்த்தா இது நில ஆவணங்களுக்கானதாக இருக்குமோன்னு...கேட்கிறேன் வேலை தந்தவரிடம்....
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
சில இடங்களின் பெயர்கள் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றனதான். ஆனால் யார் யார் எப்படி எப்படி மாற்றி அப்படி ஆனதோ!
பதிலளிநீக்குஇன்னும் நிறைய இருக்கு ஸ்ரீராம். ஆமாம் வழி வழியா பேச்சு வழக்கில் கூட மாறியிருக்கலாம்...
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
வத்திராயிருப்பு என்கிற ஊரில் நான் பணிபுரிந்திருக்கிறேன். அதைச் சுருக்கமாக வத்ராப் என்பார்கள். விருதுநகர் ஊரின் பெயர் எழுபதுகளுக்கு முன்போ அறுபதுகளுக்கு முன்போ விருதுபட்டி என்று இருந்ததாக சொல்வார்கள். வத்ராப் செல்லும் வழியில் மகாராஜபுரம் என்கிற ஊர் உண்டு. அது மகாராஜபுரமா, மகராஜபுரமா என்பது குழப்பம். வழியில் இன்னொரு ஊர் T. குன்னத்தூர். அது குன்னத்தூரா, குன்றத்தூரா யார் மாற்றினார்கள், குழம்பினார்கள் தெரியாது! அது ஏன் அதற்கு T என்கிற இனிஷியல்? தெரியாது. இதெல்லாம் நான் அலுவலகம் செல்லும் வழியில் யோசித்திருக்கிறேன்.திருச்சிராப்பள்ளியா, திருச்சினாப்பள்ளியா? ஸ்ரீவில்லிபுத்தூரா சில்த்தூரா? நிறைய உண்டு குழப்பங்கள்.
பதிலளிநீக்குவத்திராயிருப்பு - நினைவு இருக்கு நீங்க அங்கு வேலைபார்த்தது சொல்லிருக்கீங்க. ஆமா வாத்ராப்...ஆங்கிலத்தில் அப்படித்தான் ஆங்கிலேயர் உச்சரிப்புக்காக இருக்குமோ?
நீக்குஆமாம் மகாராஜபுரம். இருக்கு ...அதே டி குன்னத்தூர்....குண்ணத்தூர்னும் இருக்கு இதுல எது சரின்னு...நீங்கள் சொல்வது போல் ..ஆனால் குன்றத்தூர் தனியா இருக்கு...
நிறைய இருக்கு ஸ்ரீராம் குழப்பம். விக்கில போட்டாலும் அது பதியப்பட்டிருந்தாலும் எழுத்து முக்கியமாச்சே நாம் தட்டுவது எழுத்து மாறியிருந்தா வருவதில்லை....
அப்புறம் கிடைக்கும் போது நாம் யோசித்தே பாத்திருக்கமுடியாத அளவு பெயர் இருக்கும்!!!!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
எங்கள் வீடு இருக்கும் இடம் ஸ்ரீ கிருஷ்ணா நகர் இரண்டாம் குறுக்குத் தெரு. நிறையபேர் ஸ்ரீயை விட்டு விடுவார்கள். அல்லது குறுக்கு வார்த்தையை விட்டு விடுவார்கள். அல்லது கிருஷ்ணா தெரு என்பார்கள்!
பதிலளிநீக்குஹாஹாஹாஹா செல்லமா கிச்சநகர்னு, கிச்சா தெருன்னு நீங்க சொல்லிக்கோங்க!!! அதுவே அப்புறம் வந்துரும்!!
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
மாடரேஷன் எடுத்தாச்சா?
பதிலளிநீக்குஇப்ப கொஞ்சம் பிசியா இருக்கறதால எடுத்துருக்கேன் ஸ்ரீராம்.....
நீக்குஇன்று வேலை முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்...முடித்து வந்து பதில் தருகிறேன் எல்லோருக்கும்....மற்ற பதிவுகளையும் வாசித்துவிடுவேன்
கீதா
மிகவும் கடினமான வேலை. வினோதமான பெயர்கள் என்றதும் முதலில் நினைவுக்கு வந்தது நல்லான் பிள்ளை பெற்ராள்தான். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் ஊர்.
பதிலளிநீக்குதி.மலைக்கு முன் செஞ்சி என்று ஒரு ஊர் உண்டு.அதை ஆங்கிலத்தில் ஜின்ஜி என்று எழுதுவார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் ஜின்ஜி என்று குறிப்பிட்டிருக்கலாம், இன்னமுமா?
ஆமாம்...முடித்துவிட்டேன்...நல்லான்பிள்ளைபெற்றாள் திருக்கழுக்குன்றம் அருகில் இருக்குன்னு எனக்கு வந்த கோப்புப்படி. மற்றும் கூகுளிலும் தேடியபோது...
நீக்குஆமாம் இப்பவும் ஆங்கிலத்தில்தானெ ழுதியிருந்தாங்க இந்தக் கோப்பில். நான் தமிழ்ப்படி எழுதிவிட்டேன் அது போல திருவரங்கம் என்றுதான் போட்டிருக்கிறேன்.
மிக்க நன்றி பானுக்கா
கீதா
இது மிகவும் சிரமமான வேலை...
பதிலளிநீக்குகிட்.டத்தட்ட இதே போன்ற சிக்கல், திருக்குறள் சீர்களிலும் உள்ளது...! (முடியல)
ஆமாம் டிடி. இத்தனைக்கும் எனக்கு வந்த கோப்பில் தமிழ்நாடு முழுவதும் இல்லை அதாவது எல்லா கிராமங்களும் எல்லா ஊராட்சிகளூம் இல்லை....அதுவே இந்தப்பாடு அப்ப முழுசும்னா!
நீக்குட்.டத்தட்ட இதே போன்ற சிக்கல், திருக்குறள் சீர்களிலும் உள்ளது...! (முடியல)//
ஓ!! புரிகிறது!!
மிக்க நன்றி டிடி.
கீதா
இந்த வேலை மத்திய அரசின் ஒரு திட்டம் என்று தோன்றுகிறது. எப்படி ஆதார் என்ற centralised data base மாநில அரசின் வாக்காளர் பதிவு, மற்றும் ரேஷன் கார்டுக்கு மேலாக ஒரே ஆள் ஒரே அடையாளம் என்று திணிக்கப் பட்டதோ அப்படியே land records ஐயும் satellite மூலம் digitised சர்வே செய்து வருகிறார்கள். satellite longitude latitude மட்டுமே தரும். ஆனால் ஊர் பெயர் தராது. அதன் ஒரு பகுதியாக இந்த பெயர் மொழி பெயர்ப்பு என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குமாநில அரசுகள் விற்பனை வரி என்ற வருமானம் கிடைக்கும் உரிமையை இழந்தன. அடுத்ததாக வருமானம் கிடைக்கும் .registration துறையையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் அதன் முதற்படி தான் இது. கடைசியில் மாநில அரசுகள் வெறும் டம்மி பீஸ் ஆகிவிட மாநில கட்சிகளும் இல்லாதாகி விடும். கொஞ்சம் கொஞ்சமாக ஒரே இந்தியா ஒரே அரசு, ஒரே கட்சி ஒரே தலைவன் என்று முடியும்.சீனா போன்று.
நீங்கள் சரியாக செய்வன திருந்தச் செய் என்ற முறைப்படி செய்ய முயன்று இவ்வளவு கஷ்டங்களை மேற்கொள்கிறீர்கள். அதனால் தான் இந்தப் பாடு. சரியோ தவறோ எழுதியதை மெய்ப்பு பார்க்க வேறு யாரேனும் உண்டா?
ஓஹோ. ஜெகே அண்ணா இது புது தகவலாக இருக்கிறதே! அதாவது நில ஆவணங்களுக்காக என்பது.
நீக்குவேலை முடித்துவிட்டேன் எனக்கு வந்தவற்றை. சரிபார்க்க இருக்கிறார்கள் என்று சொல்கிறார் வேலை தந்திருப்பவர்.
அவரிடம் கேட்கிறேன் இது இப்ப மீண்டும் எதற்காக எடுத்திருக்கிறார்கள் என்று
மிக்க நன்றி ஜெகே அண்ணா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநல்லபடியாக தாங்கள் ஏற்றுக் கொண்ட வேலைகள் முடிந்து விட்டனவா சகோதரி. நீங்கள் எந்த வேலை செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், தங்களுக்கு வந்த வேலை. சிரமமான வேலை போலிருக்கிறது. பதிவின் மூலமும், கருத்துக்களின் மூலமும், புரிந்து கொள்ள முயல்கிறேன்.முயற்சித்து கொண்டிருக்கிறேன்.
ஊர்களின் பெயர்கள் பல வினோதமாக இருப்பதை, பேரூந்து பயணத்தைவிட ரயிலில் போகும் போது நிறைய கவனித்திருக்கிறேன். அப்போதைக்கு நினைவில் இருக்கும். காலப்போக்கில் மறந்து விடும். சில பெயர்கள் பேசுவதைப் போல இருக்கும். சில நகைச்சுவையாகவும் இருக்கும். நமது சகோதரர் கில்லர்ஜி அவர்கள் தன் பதிவில் கூட பல வினோதமான ஊரின் பெயர்களை குறிப்பிட்டிருபார். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆ....! அனுமதி பெறாமலேயே என் கருத்து வந்து விட்டதே..! இதுவும் ஊர்களின் பெயர்களைப் போல ஆச்சரியமூட்டுகிறது. :))
நீக்குவாங்க கமலாக்கா....ரொம்ப நாள் கழித்து இல்லையா...ஆமாம் கருத்து மட்டுறுத்தலை இப்போதைக்கு எடுத்திருக்கிறேண். கொஞ்சம் நேரப்பளு என்பதால்.
நீக்குஅக்கா, இந்த வேலை தமிழ்நாட்டு கிராமங்கள், பஞ்சாயத்து ஊர்கள், ஊராட்சிகள் பெயர்கள் மாவட்டப் பெயர்கள் என்று ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் கொடுக்க வேண்டும். ஆனால் பல ஊர்களின் பெயர்கள் சரியாக இருக்காது ஆங்கிலத்தில். எ கா...vella, valla இரண்டுமே வெள்ள என்பதற்கான எழுத்துகளாக இருக்கும். இதில் ஊர்களின் பெயர்களூம் வள்ள வெள்ள என்று தொடங்குவதாகவும் இருக்கும் எனவே எந்த ஊர் இந்த இடத்தில் என்பதைச் சரி பார்த்து போடுவது...ஆனால் கூகுள் இரண்டையுமே காட்டும்...விக்கியிலும் கூடா ஊராட்ட்சி சிற்றூர்களில் பல பெயர்கள் இல்லை. செய்திகள் ஏதாவதில் கிடைத்தால் உண்டு. பல ஊர்களின் தமிழ்ப்பெயர்கள் விக்கியின் ஊராட்சி ஒன்றியங்கள் ஊராட்சிகள் இவற்றில் இருந்தாலும் தமிழில் அடித்து தேடினால் வராது ஏனென்றால் ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் நாம் அடித்துத் தேடுவதால்....அதற்கான உதாரணங்கள்தான் பதிவில்கொடுத்திருக்கிறேன்.
இந்த வேலை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்லாதவரால் கொடுக்கப்பட்டிருக்கு. என் கருத்து, தமிழ்நாட்டு பஞ்சாயத்து அலுவலகர்கள் ஒவ்வொரு பஞ்ச்யாத்து கிராமங்களையும் பட்டியலிட்டு அடுத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் வருபவை என்று அந்த்ந்த பகுதியைச் சேர்ந்த அலுவலகங்களில் பதிந்துவிட்டால் பிரச்சனை வராதுதானே. முன்பு கிராமங்களின் பெயர்கள் ஒன்றுதான் இப்போது பகுதி 1, பகுதி 2 என்றெல்லாம் பிட் 1, பிட் 2 என்று வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என்றும், ஊரின் பெயருடன் விரிவாக்கம் என்றும் பெயரிடப்பட்டுள்ளன காரணம் ஊரகவளர்ச்சி, விரிவாக்கத்தினால்...இதை அந்தந்தப் பகுதி அலுவலகர்கள் பதிந்துவிட்டால் வசதியாக இருக்குமே எதற்கு outsourcing என்று தோன்றியது...இதில் பல சரியாகப் பதியப்படாமல் போகலாம்...
நீங்களும் பார்த்திருப்பீங்க வினோதமான பெயர்களை...ரசித்தும் இருப்பீங்க கமலாக்கா தெரியும்!!!!! உங்கள் ரசனை தெரியும் என்பதால்...
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
ஆங்கிலேயன் ஊரைக் கெடுத்த மாதிரி ஊர்ப் பெயர்களையும் கெடுத்து விட்டுப் போய் விட்டான்..
பதிலளிநீக்குஉதாரணமாக இன்றைய சென்னை.. சென்னைக்கும் மதராஸூக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்?..
தாலமி காலத்திலேயே மைலார்ப்ப என்று குறிக்கப்ப மயிலாப்பூர்.. இதெல்லாம் தாங்க முடியாமல் தான் கடற்கரையில் இருந்த கபாலீச்சரம் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே வேறொன்று முளைத்தது..
அன்றிருந்த சிவநேசச் செல்வர்கள் தற்போதுள்ள கோயிலைக் கட்டிய போது குளத்திற்கு இடம் நவாப்பு கொடுத்ததாம்.. நாடு பிடிக்க வந்த கும்பல் நல்லவர்களாக நாடகம் போடுகின்ற நேரம் இது..
இதைப் பேசினால நாம ஆளுங்களே நம்மை சங்கின்னு சொல்லுவானுங்க..
அது தொலையட்டும்..
வற்றா இருப்பு என்னும் பெயர் வெள்ளையனின் வாயில் நுழையாமல் போனதால் வட்ராப் என்று ஆனது..
டின்னவேலி, நாரோயில், டூட்டிக்கொரின், கேப் கமரின், டாஞ்சூர், டரிங்பார், டிரிச்சினா போலி, நகபடாம், கொல்ரூன் - இப்படி எத்தனை எத்தனையோ!..
நல்லவேளை
சீர்காழி, திருவீழிமிழலை விட்டு விட்டான்..அந்தப் பக்கம் பெயர் மாற்றத்துக்குப் போகவில்லை..
வாங்க துரை அண்ணா, ஆமாம் பல பெயர்கள் ஆங்கிலத்தில் இப்படித்தான். இப்போது மாற்றியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. நான் பல பெயர்களை முழுவதுமாக எழுதிக் கொடுத்துள்ளேன். பார்ப்போம்...
நீக்குஆமாம் கோயில் தலங்கள் பெயர்கள் எதுவும் க்மாறவில்லை அப்படியேதான் வைத்திருக்கிறார்கள்.
மிக்க நன்றி துரை அண்ணா
கீதா
அம்பிகாபதி என்பதை
பதிலளிநீக்குஅம்பிகபோதி என்பதும்
நேசமணி பொன்னையா என்பதை
நாஸ்மா நீ போனியா என்பதும் நகைச்சுவை..
ஹாஹாஹா ஆமாம் நேசமணி பற்றிய நகைச்சுவை தெரியும்...
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா
கீதா
என் பெயரில் துரை என்பதை
பதிலளிநீக்குdepartment என்று மாற்றித் தரும் கூகுள்..
ஹாஹாஹாஹா....
நீக்குதுரை அண்ணா லால்குடி ஊராட்சி ஒன்றியம் கீழ், அப்பாதுரை ஊராட்சி என்று இருக்கு!! எனக்கு நம் நண்பர் அப்பாதுரை நினைவுக்கு வந்து சும்மா அவரைக் கலாய்த்திருந்தேன்..குழுவில்.
மிக்க நன்றி துரை அண்ணா
கீதா
இங்கிருந்து கீழ்வேளூர் என்பதை எடுத்துக் கொள்கிறேன் ..
பதிலளிநீக்குபுதிய பதிவிற்காக!..
துரை அண்ணா ஓ இதுக்கு எதுக்கு அனுமதி!! ஊர் எல்லோருக்கும் சொந்தம்தானே!
நீக்குஅப்ப புதுப் பதிவு ஆஹா!.
மிக்க நன்றி துரை அண்ணா
கீதா
இலுப்பைக் குடிகாடு என்பது தான் லெப்பை குடிகாடு என்று ஆயிற்றாம்..
பதிலளிநீக்குஅதென்ன?..
லால்குடி!..
லால் என்பது தமிழா?..
பேச்சு வழக்கில் லெப்பை என்று மாறியிருக்கும். எங்க ஊர் நாரோயில், திருப்பியாரம்னு சொல்றாப்ல.......கில்லர்ஜி கூடச் சொன்னார் அவர் ஊர் இதம்பாடலை வழக்குமொழியில் வேறு மாதிரி சொல்வாங்கன்னு..
நீக்குஇப்ப இலால்குடி என்று கூகுளில் வருகிறது. ஆனால் லால்குடியின் பெயர் மிக அழகான பெயர்....அது வரலாறு பற்றி பதிவில் சொல்கிறேன். குறித்து வைத்திருக்கிறேன்.
கீதா
திருஞானசம்பந்தர் காலத்தில் திரு தவத்துறை எனப்பட்ட் ஊர் எதற்காக லால்குடி என்று ஆக வேண்டும்??..
நீக்குஆமா..காரணம் தெரியும் அதைத்தான் சொன்னேன் அழகான பெயர்!! திருதவத்துறை ஞானசம்பந்தர் வைத்த பெயர்!! லால்குடி என்று எப்படி மாறியது என்பதுதான்....அது பற்றித்தான் சொல்ல இருக்கிறேன் துரை அண்ணா குறித்து வைத்திருக்கிறேன். உங்களுக்குத் தெரியாதது அல்ல....என்றாலும் ஒரு பதிவில் சொல்லலாமே என்று...இப்ப கொஞ்சம் நேரப் பளு...மே மாதம் 12 வரை நேரப்பளு. என் பதிவு அதன் பின் தான் வரும்.
நீக்குஎன் ஆசை நம் ஊர் பெயர்கள் எல்லாம் முன்பு இருந்தது போல் மாற வேண்டும் என்று. திரு என்று சேரும்போதே மனதை ஈர்க்கிறது இல்லையா? அது போன்று மலையூர், தேனூர் வண்டுறையூர் அழகூர் என்றெல்லாம் சொல்லும் போது மனதில் ஏதோ ஒரு வசீகரம்...
மிக்க நன்றி துரை அண்ணா
கீதா
இது சாதாரண வேலை இல்லை. அரசு அதிகாரிகள் (சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரி என்றொரு ஊர் இருக்கிறது) செய்ய வேண்டிய வேலை.
பதிலளிநீக்குதங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் வினோதமான ஊர் பெயர்களை நான் பதிவு எடுத்து வருகிறேன்.
கில்லர்ஜி தேவகோட்டை
நீக்குசிவகங்கை மாவட்டத்தில் அதிகாரி என்றொரு ஊர்//
நீக்குஆமா எனக்கு வந்த பட்டியலில் இருந்தது.
அந்தந்த ஊரில் வேலை செய்யும் அதிகாரிகள் செய்துவிட்டால் உறுதியாகப் பதியலாம்.
நீங்கள் வினோதமான ஊர் பெயர்களை பதிவு செய்வீங்கன்னு தெரியும். அனுப்பிக் கொடுத்தாச்சு. எனக்கு வந்தவை கொஞ்சம்தான். மீதி யார் செய்யறாங்களோ தெரியலை
மிக்க நன்றி கில்லர்ஜி.
கீதா
ஆகா! எவ்வளவு பெரிய பணி! எவ்வளவு குழப்பம்! சரியாச் செய்யனும்னு நீங்கள் நினைப்பது போல மற்றவர் நினைக்க மாட்டார்களே ..கஷ்டம்
பதிலளிநீக்கு