வெள்ளி, 14 ஏப்ரல், 2023

பசுமை மாறா நினைவுகள் - 1


 அன்பு நட்புகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு-விஷு வாழ்த்துகள்!

********

1975 ல் வெளிவந்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தின் பொன்விழா, ‘எம் ஜி ஆர்’ முகநூல் நண்பர்களால், 11, மே 2023 அன்று கொண்டாடப்படுகிறது.

1940, 1950, 1960 களில் தமிழகத்தில் பிறந்தவர்களில் பெரும்பான்மையானோர், பாக்கியராஜ், பயில்வான் ரங்கநாதன், மறைந்த மயில்சாமி, போன்ற எம் ஜி ஆர் ரசிகர்கள், பக்தர்கள். இனி ஒரு நடிகர் அவரைப் போல் மக்கள் திலகமாக மாறி நாடாள முடியுமா என்று சந்தேகம்.

அன்றைய காலமும் மனிதர்களும் அப்படிப்பட்டவர்கள். அரசர்கள் ஆண்ட காலம் போய் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள் நாடாளும் காலம் வந்தது போல் மாற்றங்கள் சினிமாவிலும் ரசனையிலும் ரசிகர்களிலும் வந்திருக்கிறது. அதனால் இனி ஒரு சினிமா நடிகர் நாடாளுவது என்பது இயலாத ஒன்று. நடக்காத ஒன்று.

இருந்தாலும் பழைய காலங்கள் எப்போதும் நினைத்தாலே இனிக்கும் நாட்கள்தான். அவற்றை முழுதும் உணர்ந்தவர்களால் மட்டுமே அந்த நாட்களை மனத் திரையில் கண்டு பூரிப்படைய முடியும். அதைக் காணாத உணராதவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாது. அதன் அவசியமும் இல்லை என்றே தோன்றுகிறது.

எம் ஜி ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்துடன் தொடர்புடைய ஒரு நிகழ்வை இப்பொன்விழா நாளில் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. அந்த நாட்களில் எம் ஜி ஆரும், எம் ஜி ஆரின் திரைப்படங்களும் மக்கள் மத்தியில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். கரும்பு தின்னக் கூலி தரும் எம் ஜி ஆர் முகநூல் நண்பர்களுக்கு நன்றி.

…………………………

போடி ZKM பள்ளியில் 7 வது படித்துக் கொண்டிருந்த காலம் (1973) சென்ட்ரலில் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை நண்பர்களுடன் எப்படியோ பார்த்து பெருமிதப்பட்டு காட்சிகளை மனத்திரையில் எப்போதும் கண்டவனாய் பள்ளியிலிருந்து வகுப்புகள் முடிந்ததும் ராசிங்கபுரத்திற்கு டவுன் பேருந்தில் ஒரு மாலை பயணித்துக் கொண்டிருந்தேன்.

சில்லாமரத்துப்பட்டியில் வண்டி நின்றது. அங்கு எதிர்த்திசையில் போடிக்குப் போகும் டவுன் பேருந்து. ஆட்கள் ஏற சிரமப்பட்டுக் கொண்டிருக்க, அந்த வண்டியின் ஓட்டுநர் வண்டியை ஒதுக்கிக் காத்திருந்தார். தற்செயலாக அந்தப் பேருந்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்த என் கண்ணில் என் அம்மாவும் பக்கத்து வீட்டு லட்சுமி அம்மாவும், பின் இருக்கையில் அப்பாவும் இருப்பது பட்டது. நான் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை முன்பே பார்த்துவிட்டதால், என்னைத் தவிர்த்து திரைப்படத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.


NOW OR NEVER! மீண்டும் எம் ஜி ஆரையும், "சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" பாட்டையும், வெளிநாட்டையும் பார்த்தே தீருவேன் என்ற ஆர்வமிகுதியில், “ஆள் இறங்கணும்” என்று அலறிக் கொண்டே எழுந்தேன். பழக்கமான நடத்துநர் ஆனதால் கையைப்பிடித்து வண்டி நின்ற பின் இறக்கி விட்டார். இறங்கி ஓடி இரண்டு வாசலையும் பார்த்தேன். ஒவ்வொரு வாசலிலும் 10, 15 பேர் தொற்றிக் கொண்டும், தொற்றிக் கொள்ள முடியாதவர்கள் உள்ளே நின்றவர்களிடம் “கொஞ்சம் நகந்து நில்லுங்க….எல்லாரும் எம் ஜி ஆரைப் பாக்கத்தானே….கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

‘ம்.ஹூம்…என்னால் ஏறமுடியாது’. மறுபுறம் அழுது கொண்டே ஓடி, “அம்மா, அப்பா” என்று கத்த, பதறிய அம்மா “ஐயோ நீ எப்படி ஏறுவ? நீ ஏண்டா பஸ்ஸிலிருந்து இறங்கின? நேரா வீட்டுக்குப் போக வேண்டியதுதானே” என்றார்.

வண்டிக்குள் நின்றிருந்த ஒருவர், “எம் ஜி ஆர் படம் பாக்கணும்னா ஒரே வழி சைடு வழியே ஏறு” என்றார். புத்தகப் பையை அம்மாவிடம் கொடுத்து, தாவி சைடு கம்பியைப் பிடித்து தொற்றி ஏறினேன். ஒரு கை என்னைத் தூக்கி சைடு வழியாக உள்ளே என் தலை இடிக்காமல் தூக்கி அம்மாவின் மடியில் உட்கார வைத்தது. அப்படி இரண்டாவது முறையாக உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை சாகசம் செய்து பார்த்த நினைவு 62 வயதாகும் என் நினைவில் இப்போதும் பசுமையாக நிற்கிறது.

1960 களில் பிறந்த எனக்கு எம் ஜி ஆர், கொஞ்சம் இதயக்கனியேதான். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதை அவரது சொல்லிலும் செயலிலும் காட்டி அன்றைய தலைமுறையினரை வழி நடத்தி, 

எதிரிகளிடமும் அன்பு காட்டி அவர்களைத் திருத்த வேண்டும் என்பதை தன் வாழ்வின் மூலம் நிரூபித்தவர் (எம் ஆர் ராதா, கலைஞர், கவிஞர் கண்ணதாசன்…). அதனால்தான் அவர் எல்லோருக்கும் வாத்தியாராக இருந்தார்.

இரண்டாயிரத்துக்குப் பின்னால் வந்த தலைமுறைக்கு அவரது சிறப்பைப் புரிய வைப்பது சிரமம். “உலகம் சுற்றும் வாலிபன்” சரித்திரம் படைத்து புதிய தமிழகம் உருவாகக் காரணமான திரைப்படம். அதன் சிறப்பை, எம் ஜி ஆரின் பெருமைகளை இது போல் பேச 40, 50, 60களில் பிறந்த நமக்கு மட்டும்தான் தகுதியும் உரிமையும் இருக்கிறது.

எனவே பேசிப் பகிர்ந்து மகிழ்வோம். இது அதற்கான நேரம்தான். NOW OR NEVER!

பின் குறிப்பு : என் அனுபவத்தைப் பகிரும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த திரு வேலாயுதன் அவர்களுக்கும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் முகநூல் நண்பர்களுக்கும் நன்றி.


------துளசிதரன்

29 கருத்துகள்:

  1. தங்களது சிறப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கும் புத்தாண்டு வாழ்த்திற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு / விஷு வாழ்த்துகள்!

      துளசிதரன்

      நீக்கு
  2. //அன்பு நட்புகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு-விஷு வாழ்த்துகள்!//
    உங்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.


    //1975 ல் வெளிவந்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தின் பொன்விழா, ‘எம் ஜி ஆர்’ முகநூல் நண்பர்களால், 11, மே 2023 அன்று கொண்டாடப்படுகிறது.//

    வாழ்த்துகள்.

    ஓ அப்படியா! படம், பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.
    உங்கள் அனுபவ பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்ப் புத்தாண்டு, விஷு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      ஆமாம் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி.

      துளசிதரன்

      நீக்கு
  3. அப்படிப்பட்ட வெறித்தனமான ரசிகனாக இல்லை (காசு தந்தாத்தானே சினிமா பார்க்கமுடியும்?). ஆனால் 73ல்(?) எம்ஜிஆர் கட்சிக்கு தாமரை சின்னம் கிடைத்தது (ஏதோ ஒரு இடைத் தேர்தலா இல்லை ஆரம்பத்தில் அந்தச் சின்னமா நினைவில்லை). அதை பேப்பரில் நான் வரைந்து தர, பஸ்களின் பின்னால் ஒட்டினார்கள் (அப்போ என் வயசு 9-10). அந்த ஊரில், எம்ஜிஆருக்காக, 30 பைசா கரும்பை 15 ரூபாய் என்றெல்லாம் டிஸ்கவுண்டில் அவரது வெறித்தனமான ரசிகர்கள் விற்றாங்க. அந்த மாதிரி உணர்வுபூர்வமான ரசிகர்கள் இருப்பாங்களா என்று 2000க்குப் பிற்பட்டவங்களுக்குத் தெரியாது. எம்ஜிஆர் அபூர்வப் பிறவி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அன்றே படம் வரைந்து மறைமுக தேர்தல் பிரச்சாரமா! Great! அதும் 9, 10 வயதில். இப்போதும் கூட எழுத்து, வாசிப்பு, வரைதல் (நீங்கள் வரைந்த இறைவன் படங்கள், ஓரிரண்டு எங்கள் ப்ளாகில் பார்த்திருக்கிறேன்) என்று விடாமல் செய்து வருவது மகிழ்ச்சி!

      //அந்த ஊரில், எம்ஜிஆருக்காக, 30 பைசா கரும்பை 15 ரூபாய் என்றெல்லாம் டிஸ்கவுண்டில் அவரது வெறித்தனமான ரசிகர்கள் விற்றாங்க. அந்த மாதிரி உணர்வுபூர்வமான ரசிகர்கள் இருப்பாங்களா என்று 2000க்குப் பிற்பட்டவங்களுக்குத் தெரியாது//

      ஆமாம். உண்மைதான்.

      இடைத்தேர்தலில் மாயத்தேவர் திண்டுக்கல்லில் இருந்து மாசறு வெற்றி பெற்றிருக்கிறார் ....ஆம், நீங்கள் சொன்னது போல் எம் ஜி ஆர் அபூர்வப் பிறவிதான்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்!

      துளசிதரன்

      நீக்கு
  4. /7 வது படித்துக் கொண்டிருந்த காலம் (1973)// - இதைப் படித்தவுடன், எவ்வளவு பெரீய அக்கா என்று நினைத்தேன், கடைசி வரியில் உங்கள் பெயரைப் பார்க்கும் வரையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....நெல்லை, எம் ஜி ஆர் னு வாசித்ததுமே தெரிஞ்சுருக்கணுமே நம்ம தங்கச்சி பொறந்திருக்கவே மாட்டாளே அவளுக்கு எப்படி இப்படி எம் ஜி ஆர் நு எழுத முடியும்னு !!!

      சரி சரி துளசியே கருத்து கொடுத்திருக்கிறார்....அதை அடுத்தாப்ல தட்டச்சுகிறேன்!! ஆனா அவரைப் பாருங்க....என் வயச கூட்டிச் சொல்லி...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!! சொன்னாலும் கேக்க மாட்டாரு...

      கீதா

      நீக்கு
    2. 62 வயது பெரிய அக்காதான்!!! என் பதிவுகள், கருத்துகள் எல்லாம் நான் கொடுக்க அதை இங்குத் தட்டச்சு செய்து படங்கள், காணொளிகள் கோர்த்து என்று எல்லாம். எழுத்து இயக்கம் எல்லாம். உண்மையிலேயே பெரிய அக்காதான். பார்க்க நாலடியார் போல இருந்தாலும்!

      துளசிதரன்

      (நெல்லை, பாருங்க எல்லாம் என் நேரம்! காலக்கொடுமையடா! ஹூம்!! 62 வயசாம்...துளசியோட வயசு அது!! என்னைய பத்தி அவர் எழுதற கருத்தை நானே இங்கு தட்டி விடறதா இருக்கு...என்னத்த சொல்ல....நேரம்!

      கீதா)

      நீக்கு
  5. அந்தக் காலத்தில் எம் ஜி ஆர் ரசிகர்கள், சிவாஜி ரசிகர்கள் என்று இரண்டு கட்சி உண்டு.  நாங்கள் எல்லாம் சிவாஜி கட்சி!  ஆனாலும் எம் ஜி ஆரின் சில படங்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது பார்த்துவிடுவோம்.  எங்கள் ராஜேந்திரா டூரிங் கொட்டாயில் இந்தப் படம் வந்தாலும் பார்த்து விடும் தவ வேலையில் இருந்தோம்.  அப்படிப் பார்த்த படங்களில் ஒன்று மாட்டுக்கார வேலன்.  நான் ரசித்த முதல் எம் ஜி ஆர் படம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அப்ப எம் ஜி ஆர் மேஜிக் உங்களிடம் பலிக்கவில்லை இல்லையா!!! நடிப்பு என்றால் நடிகர் திலகம் தானே! இப்போதைய தலைமுறை ஓவர் ஆக்டிங்க் என்று குற்றம் சொன்னாலும் அவர் நடிப்பில் இமயம்! இருந்தாலும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் போல் மன்றத்துப் பிள்ளைகள் - சிவாஜி, ரசிகர்களை அப்படித்தான் அழைப்பார். அந்த பிள்ளைகளுக்காக ஒரு கட்சியே ஆரம்பித்தாரே) அவரை மக்கள் திலகத்தின் ரசிகர்களைப் போல் அவரை அரசியலில் முன்னேற துணை போகவில்லை. எம்ஜி ஆர், என் எஸ் கிருஷ்ணனைப் பின்பற்றி எல்லோருக்கும் உதவி, கொடை வள்ளலாகவும், மக்கள் திலகமாகவும் ஆனதால் அரியணை ஏறியே விட்டார். அதன் பின் தானே ஆந்திராவில் என் டி ஆர் ஆந்திராவில் அரியணை ஏறினார்!

      உங்களின் ரசனையான கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி! நிறைய சுவாரசியமான கருத்துகளைக் கொடுத்து புகுந்தி விளையாடிவிட்டீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சமீபகாலமாக வேலைப் பளுவினால் வலைப்பக்கம் வர இயலாமல் வாசித்துக் கருத்து அனுப்ப முடியாததால் என் பதிவுகளுக்கு யாரும் கருத்துச் சொல்ல வருவார்களா என்று நினைத்திருந்தேன். அப்படி இல்லை என்று உங்கள் கருத்துகளைப் பார்த்ததும் மனது மிகவும் மகிழ்கிறது. இன்னும் சில நாட்களில் வலைப்பக்கம் வர இயலும் என்று நினைக்கிறேன்.

      விரிவான சுவாரசியமான கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  6. உலகம் சுற்றும் வாலிபன் படத்தை ரிலீஸ் பண்ண விடக்கூடாது என்று எவ்வளவோ முயற்சித்தார்கள்.  மதுரை மேயர் முத்து 'படம் வெளியானால் நான் சீலை கட்டிக்கொள்கிறேன்; என்று சபதம் போட, படம் வெளியானதும் எம் ஜி ஆர் ரசிகர்கள் அவருக்கு புடைவை, வளையல்கள் அனுப்பி வைத்தனர்.  அவரே அப்புறம் எம் ஜி ஆர் கட்சியில் இணைந்தது தனிக்கூத்து!  படம் பிரம்மாண்ட வெற்றி.  அதே வருடம் வெளியான எம் ஜி ஆரின் பட்டிக்காட்டு பொன்னையா தோல்வி படம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், இதற்கும் இனி உள்ள உங்க கருத்துகளுக்கும் துளசி ஆடியோவாக அனுப்பியிருக்கிறார். நாளை அதைக் கேட்டு இங்கு போடுகிறேன். நேரமாகிவிட்டது இப்போது.

      கீதா

      நீக்கு
    2. ஆம் நீங்கள் சொன்னது போல் மதுரை முத்து சேலை கட்டிக் கொள்வேன் என்று சொன்னது எல்லாம் அந்தக்காலத்தில் பெரிய விவாதம். பிறகு அவர் அரசியலில் அதிமுக வில் சேர்ந்ததும் தீவிர அரசியலில் கற்றது எல்லாம் பலருக்கும் தெரிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. பட்டிக்காட்டு பொன்னையா தோல்விப்படமா? அது இப்போதுதான் தெரியவருகிறது. இருந்தாலும் எம்ஜிஆர் படங்கள் பெரும்பாலும் எடுப்பவர்களுக்கு, முதலாளிகளுக்கு ஒரு போதும் நஷ்டத்தை உண்டாக்கியதில்லை. அதனால்தான் அவருக்கு மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், கூடவே வசூல் தெய்வம் என்று பெரும்பாலும் இந்த போஸ்டர்களில் அடிப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒரு பட்டம் இந்த உலகில் யாருக்கும் கிடைத்ததாகவோ, உள்ளதாகவோ பெரிய வாய்ப்பில்லை. வசூல் தெய்வம் என்று சொன்னால் அவர்களது படங்கள் திரையரங்குகளுக்கு வந்தால் திரையரங்குகள் நடத்துபவர்களுக்கு அவர் ஒரு வசூல் தெய்வமாகவும் அறியப்பட்டிருக்கிறார்.

      உங்களின் விரிவான சுவாரசியமான தகவல்களுடன் கூடிய கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
    3. எம் ஜி ஆர் நடித்த படங்களை எடுப்பவர்களுக்கும், வெளியிடுபவர்களுக்கும் கூட நஷ்டத்தை ஏற்படுத்தியதில்லை என்றே அறிந்ததுண்டு.

      துளசிதரன்

      நீக்கு
    4. //இருந்தாலும் எம்ஜிஆர் படங்கள் பெரும்பாலும் எடுப்பவர்களுக்கு, முதலாளிகளுக்கு ஒரு போதும் நஷ்டத்தை உண்டாக்கியதில்லை//

      அப்படியும் சொல்ல முடியாது.  நேற்று இன்று நாளை அசோகன் சொந்தப படம்.  அசோகனுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படம்.  எம் ஜி ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை தொடங்கிய சந்திரபாபுவின் நிலை அனைவரும் அறிந்தது.

      நீக்கு
    5. ஆமாம் அகோகனுக்கு அந்தப் படம் ஒரு பிரச்சனை ஆனது. சந்திரபாபுவுக்கும் அந்த நிலை வந்ததுதான். ஆனால் சந்திரபாபுவிற்கும் பிரச்சனை வந்தாலும் வேறு பல காரணங்களும் உண்டு. எம் ஜி ஆருக்கு அவருடன் ஏதோ பிரச்சனை இருந்திருக்கும்.

      சந்திரபாபுவின் இறுதிக்காலங்களில் சிவாஜி பல படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அவருக்கு உதவியும் இருக்கிறார்.

      மீண்டும் வந்து கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி!

      துளசிதரன்

      நீக்கு
  7. வாலியிடம் எம் ஜி ஆர் சொன்னாராம்...  "மன்னிச்சுக்குங்க வாலி..   உங்களுக்கு இந்தப் படத்தில் நான் வேலை கொடுக்கலை"  வாலி சொன்னாராம்" பரவாயில்லை தலைவரே..  நான் இல்லா விட்டால் படமே இல்லை..  நன் டைட்டிலிலேயே இருக்கிறேன்" என்றாராம்.  எம் ஜி ஆர் கேள்விக்குறியுடன் பார்க்க, 'உலகம் சுற்றும் "வாலி"பன்'  வாலிபன் பெயரிலேயே நான் இருக்கிறேனே என்றாராம்.  வாலிதான் அந்த நேரம் தொடர்ந்து எம் ஜி ஆர் படங்களுக்கு பாடல் எழுதிக் கொண்டிருந்தார் அப்போது.  கண்ணதாசனுடன் பிணக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நீங்கள் சொன்னது போல் வாலியைப் பற்றிய செய்தியை, வாலியே ஒரு பேட்டியில் சொல்லியிருப்பதைக் கேட்டிருக்கிறேன்.

      கண்ணதாசனுடன் அவருக்கு ஒரு கருத்து வேறுபாடு இருந்ததுண்டு. அவருக்கல்ல, கண்ணதாசனுக்கு இருந்ததாகக் கேள்வி. இருந்தாலும் கண்ணதாசனுக்கு அவர்எதிர்பாராமல், அவரை ஆஸ்தான கவிஞராக அறிவித்து அவரைத் திக்குமுக்காட வைத்துவிட்டார். அது போலவே கவிஞர் மரணமடைந்த சமயத்தில், அந்த நேரத்தில் அவர் முதல்வரென்று தேவையான உதவிகளை எல்லாம் செய்து தக்க மரியாதையுடன் உடலடக்கம் செய்து உதவியதாக அவருடைய மகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எதிரிகளிடமும் அன்பு செலுத்தும் ஒரு மனப்பாங்கு அவருக்கு இருந்திருக்கிறது. அப்படித்தான் நன்மை செய்வதை தொடங்கிவிட்டால், பெரிய பெரிய நன்மைகள் செய்யும் நிர்பந்தத்திற்கும் ஆளாவோம். அது ஒரு அடித்தளம் அமைக்கிறது என்றே நினைக்கிறேன். அப்படித்தான் சிலர் நன்மைகள் செய்யத் தொடங்கி, பெரிய பெரிய அளவில் நன்மைகள் செய்து அவர்களின் மரணத்திற்குப் பிறகு எல்லோரும் அவர்களை மகான்களாக்கிவிடுகிறார்கள். அவர்களை ஒரு தெய்வப்பிறவி ஆக்கிவிடுவார்கள். அவர்களை என்றென்றும் மனதில் வைத்து ஆராதித்து பாராட்டவேண்டியவர்களாக்கிவிடுகிறார்கள்.

      தகவல்களுடன் கூடிய அருமையான கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி!

      துளசிதரன்

      நீக்கு
    2. கண்ணதாசன் வரமாட்டேன் என்று சொல்ல மாட்டார்.  அவரு வருமானம் எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருப்பவர்.  எம் ஜி ஆர் தான் வேண்டாம் என்று சொன்னவர்.  அப்புறம் உரிமைக்குரல் படத்தில் ஒரு பாடலுக்கு கண்ணதாசனை ஒரு பாடல் எழுதச் சொல்லி விட்டு பயந்து பயந்து எம் ஜி ஆரிடம் காட்டி அனுமதி வாங்கினார்.  (விழியே கதை எழுது)  அப்புறம் கண்ணதாசனுக்கு அவர் செய்ததெல்லாம் நீங்கள் சொன்னபடிதான்.

      நீக்கு
    3. //எதிரிகளிடமும் அன்பு செலுத்தும் ஒரு மனப்பாங்கு அவருக்கு இருந்திருக்கிறது//

      ஜெய்சங்கரிடமும், ரஜினியிடமும் கேட்கவேண்டும்!  எல்லோரிடமும் நல்ல குணமும் இருக்கிறது, கெட்ட குணமும் இருக்கிறியாது.  இவரிடம் நல்ல குணம் சற்று அதிகமாக இருந்தது!

      நீக்கு
    4. ஆம், சரிதான். விழியே கதை எழுது - அருமையான பாடல். அந்தப் படம் ஸ்ரீதருக்கு ஒரு மறுவாழ்வு கொடுத்தபடம் என்று அறிந்ததுண்டு. சிவந்தமண் என்று நினைக்கிறேன் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஒன்று. எம்ஜி ஆருக்கும் அப்படம் மாபெரும் வெற்றிப்படம், உரிமைக்குரல்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
    5. ஆமாம் ஜெயசங்கருடன் அவருக்கு ஏதோ பிரச்சனை உண்டு. ஜெயலலிதா காரணமாக என்று ஒரு வதந்தி இருந்தது. சரியாகத் தெரியாது. ஆனால் ரஜனியுடன் பிரச்சனை இருந்ததா?

      ரஜனி ஜெயலலிதா மோதல் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. எம் ஜி ஆருக்கு கமலிடம் ஒரு Soft corner இருந்ததோ? ரஜனி ஒரு தனிக்காட்டு ராஜாவாக அன்று திரிந்தவர். அவரது புவனா ஒரு கேள்விக்குறி, மூன்று முடிச்சு போன்ற படங்கள் அவருக்கு இன்றியமையாத படங்கள். அவரது நடிப்பும் கூர்ந்து நோக்கப்பட்டது அப்போது.

      அந்த நாளைய நிகழ்வுகளை எல்லாம் இவ்வளவு கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள் இல்லையா. ஆனால் அப்போது இப்போது போல் மீடியாக்கள் இல்லைதான். இப்படியான செய்திகள் கூட அதிகமாக வம்பு பேசப்படாதுதான். அன்று சின்னத்திரையோ முகநூல், யுட்யூப் போன்றவைகள் இல்லாததால் எல்லாம் இப்போது சீரிஸ் வழி கேட்டுவரும் போதுதானே உலகறிகிறது.

      அப்படிப் பார்க்கும் போது இன்றைய தலைமுறை அந்த வகையில் ஒரு வகையில் தெரிந்து கொள்கிறார்கள். படிப்பிற்கும் சரி பொழுதுபோக்கு அம்சங்களுக்கும்..

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி. மீண்டும் வந்து சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  8. படம் பொழுதுபோக்கு விருந்து.  பாடல்களோ தேனிசைச்சுவை.  ஜப்பான் எக்ஸ்போவை சுற்றிக் காட்டி இருப்பார் எம் ஜி ஆர்.  அப்போது வரும் பாடல் காதி ஒரு நகைச்சுவை.  அவ்வளவு ஏப்ரியா கண்காட்சியில் எங்கேயோ தம்பி எம் ஜி ஆர் ராஜு பாடம் பாடம் இன்னொரு மூலையில் இருக்கும் விஞ்ஞானி எம் ஜி ஆர் முருகன் காதில் விழும்!  "என் தம்பி குரல்" என்று அந்த திசையை நோக்கு செல்வார்கள், இணைவார்கள்!அந்தப் பாடல்.. "உலகம்..அழகுக்கலைகளின் சுரங்கம்.."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அன்று நடந்த ஜப்பான் எக்ஸ்போ அருமையாகக் காட்டியிருப்பார். நீங்கள் சொல்லியிருக்கும் காட்சி நினைவில் உண்டு.
      அது போலவே முருகனின் தம்பியான ராஜு வை வைத்து இரண்டாம் பகுதியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு எனும் படத்தை எடுப்பதற்காகத் தொடக்கம் இட்டிருந்தார். எப்படியோ அது நடக்காமல் போய்விட்டது.அவர் தீவிரமாக அரசியலில் இறங்கியது காரணமாக இருக்கலாம். அந்தப்படம் வெளிவராமல் எடுக்கப்படாமல் போயிருக்கிறது.

      பிறகு அவரது இரட்டை வேடங்கள் என்று சொன்னால், நடிகர் திலகத்தைப் போல் நவராத்திரி எனும் படத்தில் 9 வேடங்களில் நடித்தது போலவோ, தசாவதாரத்தில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடித்தது போலவோ எல்லாம் வித்தியாசப்படுத்த எம் ஜி ஆரால் முடியாது. இயலாது. இருந்தாலும் ஓரளவு செய்வார் அவ்வளவுதான்.

      எங்கள் வீட்டுப் பிள்ளை முதல் நாடோடி மன்னன், குடி இருந்த கோயில் நீரும் நெருப்பும், நாள்ளை நமதே போன்ற படங்களில் தாடி வைத்து ஒரு மச்சம் வைத்துக் கொண்டு அந்த வித்தியாசம் எளிதாகப் புரிந்துவிடும் அப்படி ஓரளவு சிறிய வித்தியாசங்களை ஏற்படுத்தி அவரால் இயன்ற சிறிய மாற்றங்களைக் கொண்டு வருவார். ரசிகர்களை எப்படியும் கவர்ந்துவிடுவார். அதெல்லாம் இப்போதைய தலைமுறைக்குப், பாருக்கும் போது மிகவும் கேலிக் கூத்தாகத்தான் இருக்கும்.

      சுவாரசியமான தகவல்களுடன் கூடிய கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  9. பதில்கள்
    1. ஆம். அப்போது பலராலும், பலமுறை ரசிக்கப்பட்ட படம்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி டிடி.

      துளசிதரன்

      நீக்கு
  10. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நாஞ்சில் சிவா.

      உங்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துகள்!

      துளசிதரன்

      நீக்கு