புதன், 3 ஆகஸ்ட், 2022

அக்கரைச் சீமை அழகினிலே - மனம் மயக்கும் மலேசியா - பகுதி - 5

 

பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4 

மூன்று நாட்கள் தங்கியிருந்த அந்த பசிஃபிக் எக்ஸ்பிரெஸ் ஹோட்டல் அறைக்கு மறுநாள் காலை விடை சொல்ல வேண்டும், என்று 4 வது பகுதியில் சொல்லியிருந்தேன். இதோ நிறைவுப் பகுதி.

03-07-2022 விடிந்தது. காலை பசிஃபிக் எக்ஸ்பிரெஸ் ஹோட்டலில் காலை உணவை முடித்து அறையை காலி செய்து பேருந்தில் ஏறி பெர்ஜயா டைம் ஸ்கொயர் (Berjaya Time Square) ஐ அடைந்தோம். கோலாலம்பூரில் ஓரளவு கை அடக்க விலையில் பொருட்கள் வாங்க ஏற்ற இடம் என்று எங்கள் உள்ளூர் வழிகாட்டி நிர்மலா சொன்னார்.




மிகப் பெரிய விசாலமான மால்.  நல்ல தரமான பொருட்கள் இருந்தன. விலையும் பரவாயில்லை. நம் கைஅடக்கத்திற்குள். கையிலிருந்த 600 ரிங்கிட் போதாது என்பதால் அங்கிருந்த சூர்யா முஹபத் பணமாற்ற கவுன்டரில் ரூ 2000 ஐ ரிங்கிட் ஆக மாற்றினேன். 106 ரிங்கிட் கிடைத்தது. எங்கள் ஊராகிய எடக்கராவில் வங்கி மற்றும் யூனிமணியில் ரிங்கிட் ஆக மாற்ற முடியாததால் ஒரு முகவரிடம், ரூ 20,000 க்கு 1000 ரிங்கிட் மாற்றியிருந்தேன். (ஒரு ரிங்கிட்டிற்கு ரூ 20 வீதமாக 1 ரூபாய்க்கு .5 ரிங்கிட்). மலேஷியா வந்து மாற்றியிருந்தால் எனக்கு 1030 ரிங்கிட் கிடைத்திருக்கும். (1 ரூ க்கு .53 ரிங்கிட்).

ஆனால் என்ன செய்ய? இனி அதை எண்ணிப் பலனில்லை. மலேஷியா பயணம் மேற்கொள்பவர்கள் அங்கு சென்று மாற்றலாம். அதுதான் நல்லது என்பது என் அனுபவம்

பொருட்கள் வாங்குவதெல்லாம் முடித்து 4 மணியளவில் மலேஷியாவுக்கு விடை சொல்லி விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது பேருந்து

விமான நிலையத்திற்குச் சென்ற போது எடுத்த காணொளி

பார்த்த இடங்களெல்லாம் மனதில் காட்சிகளாய் ஓடியது

பின்னோக்கிய காட்சிகள்

இது கெந்திங் மலையில் - ஜென்டிங்க் ஹைலேன்ட்ஸில் (பகுதி 4 - இதில் இருக்கும் அந்த யானை (உருவச் சிலைதான்) ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும்
பெட்ரொனாஸ்/இரட்டைக் கோபுரம்
இது பெட்ரொனாஸ் கோபுரம் - இரட்டைக் கோபுரத்தில் ஒரு இடத்தின் காட்சி
பெட்ரொனாஸ் கோபுரம்/கோலாலம்பூர் இரட்டைக் கோபுரத்தில் உள்ள பகுதிகளுக்கு எத்திசையில் செல்ல வேண்டும் என்ற  வழிகாட்டி. இப்படி ஆங்காங்கே இருக்கும். Menara-மெனரா என்றால் கோபுரம். மெனரா 1 என்பது முதல் கோபுரம். மெனரா 2 என்பது இரண்டாவது கோபுரம்
இதில் தெரியும் கோபுரம் கோலாலம்பூர் கோபுரம்/கே எல் கோபுரம் - தொலைதொடர்பிற்காகக் கட்டப்பட்ட கோபுரம். அக்கோபுரத்தின் எதிரில் இருக்கும் ஒரு சாலையிலிருந்து எடுத்த படம்
இந்தக் கோபுரத்தின் காட்சிகள் காணும் தளத்தில் (Observation Desk) இருந்து எடுத்த மூன்றாவது பகுதியில் பகிராத வேறு சில படங்கள் கீழே. கோபுரங்கள் பற்றி எல்லாம் மூன்றாவது பகுதியில் சொல்லியிருக்கிறேன். 


விமானம் ஏறுவதற்கு முன்னான நடைமுறைகளுக்கு (Boarding Procedures) நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததுவழிகாட்டி நிர்மலா, எங்கள் அனைவருக்கும் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டு (Boarding Pass) கிடைக்கும் வரை காத்திருந்தார்.  நாங்கள் அனைவரும் ஒரு சிறிய தொகை சேகரித்து வழிகாட்டி நிர்மலாவுக்கும், ஓட்டுநர் சந்தோஷிற்கும் கொடுத்து, நன்றி கூறி விடை பெற்றோம்.
விமானத்தில் ஏறுவதற்காகக் காத்துக் கொண்டிருந்த போது ஒரு பேரிடி. 21.30க்குக் (இந்திய நேரம் இரவு 7 மணிக்கு) கிளம்ப வேண்டிய 'ஏகே 39 ஏர் ஏசியா கொச்சி விமானம்' ஒருமணி நேரம் - அதாவது மலேஷிய நேரப்படி 10.30 - இந்திய நேரப்படி 8 மணிக்கு - தாமதமாகத்தான் புறப்படும் என்ற அறிவிப்பு. ஏன் அது பேரிடி? கொச்சியில் விமானம் தரையிறங்கியதும் இரண்டாவது மகன் திருவனந்தபுரம் செல்ல வேண்டி குருவாயூர் - சென்னை ரயிலில் ஆலுவாவிலிருந்து ஏற பயணச் சீட்டு பதிவு செய்திருந்ததை முதல் பதிவில் என் பயணத்திட்டம் பற்றி சொல்லியிருந்த பகுதியில் சொல்லியிருந்தேன்.

இரவு 12.42 க்கு ஆலுவா ரயில் நிலையம் சென்றடைய வேண்டும். கவலைப்படத் தேவையில்லை. திரும்பும் அன்று இரவு 11 மணிக்கு விமான நிலையம் வந்து விடுவோமே. 1 மணி நேரம் 40 நிமிடங்கள் இருக்கிறதே என்ற சமாதானம்.

ஆனால் திரும்பிய போது விமானம் ஒரு மணி நேரம் தாமதமானதால், கொச்சி வந்தடைய 12 மணி ஆகிவிடும். இரண்டாவது மகனை ஆலுவா சென்று ரயிலில் ஏற்ற முடியுமா என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. இறைவன் விட்ட வழி என்று பிரார்த்தித்தேன். சொன்னது போல் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது.

11.50க்குக் கொச்சி விமான நிலையத்தை அடைந்தது. சிரமமின்றி கடவுச்சீட்டில்  நம் வரவைக் குறித்துப் பதிந்து, எங்கள் பைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த போது மணி 12. அவசர அவசரமாக மற்றக் குழுவினரிடம் விடை சொல்லி கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு ஓடி கவுன்டரில் சீட்டைக் காட்டி கையொப்பம் இட்டு என் காரை எடுத்து வந்து ஆலுவா நோக்கிப் பறந்தோம். விமான நிலையத்திலிருந்து ஆலுவா ரயில் நிலையம் தோராயமாக 12 1/2 கி மீ தூரம்

ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்று இணையத்தில் பார்த்த பொது, ரயில் 10 நிமிடம் தாமதமாக ஓடிக் கொண்டிருந்தது. அப்பாடா! ஒரு வழியாய் 12.30க்கு ஆலுவா ரயில் நிலையத்தை அடைந்து மகனை ரயிலில் ஏற்றிவிட்டோம்.

கொஞ்சமாக உணவும் உண்டோம்பின் நிலம்பூர், எடக்கரா நோக்கிப் பயணமானோம். நான் வண்டியை ஓட்டியதால், இடையில் வண்டியை நிறுத்திக் கொஞ்சம் தூங்கி ஓய்வு எடுத்துக் கொண்டேன். காலை 9 மணிக்கு வீட்டை அடைந்தோம். அப்படியாக இறையருளால் எங்கள் பயணம் நல்லபடியாக முடிந்தது.  

இது வரை என்னோடு பயணித்து, வந்தவர்களுக்கும், ரசித்து கருத்திட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

பின் குறிப்பு: டிடி அவர்கள் பயணச் செலவு குறித்துக் கடைசிப் பதிவில் சொல்லச் சொல்லியிருந்தார்இதோ.

பாக்கேஜில் ஒரு நபருக்கு ரூ37,500. காலை உணவு தங்கியிருந்த ஹோட்டல் அறை வாடகையில் அடங்கிவிடும். (எல்லா பன்னாட்டு ஹோட்டல்களிலும் இருப்பது போல்) எங்களுக்குக் கொடுத்திருந்த அறை டீலக்ஸ் அறை. உள்ளேயே மின்சாரத்தில் இயங்கும் கெட்டில், உடனடி (Instant) காப்பிப் பொடி, பால் பொடி இருக்கும். நாமே தயாரித்துக் குடித்துக் கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் கொடுக்கும் உணவிற்கு அப்பாற்பட்டு நாம் ஏதேனும் விரும்பிச் சாப்பிட நினைத்தால் அதற்குத் தனியாக நாம் கொடுக்க வேண்டும்.

மதியம் உணவு நமது செலவு.

அதே நேரம், இரவு உணவு பேக்கேஜில். அதற்கான தொகையை உட்படுத்தி மலேஷியாவில் பயண ஏற்பாடுகள் செய்யும் முகவர் நிறுவனமும் இங்குள்ள பயண ஏற்பாடு செய்யும் முகவர் நிறுவனமும் சேர்ந்து ஏற்பாடு செய்துவிடுவார்கள். அதனுடன் போக்குவரத்து, டிக்கெட் கட்டணம் எல்லாம் பேக்கேஜில் வந்துவிடும்.

காலை உணவு, இரவு உணவு அவர்கள் தருவது தவிர்த்து வெளியில் வேறு ஏதேனும் உண்ண விரும்பினால் அது நம் செலவு.

எங்கள் பேக்கேஜில் இல்லாத மீன் காட்சியகம் (Aqua World) குழுவினரில் 18 பேர் (நாங்கள் உட்பட) செல்ல விரும்பிச் சென்றதால் அதற்குத் தனியாக ஒரு நபருக்கு 70 ரிங்கிட் கட்ட வேண்டியிருந்தது. (எங்கள் 5 பேருக்கு 250 ரிங்கிட்). (வழிகாட்டி நிர்மலா பலருடன் தொடர்பு கொண்டு 5 ரிங்கிட் (75 ரிங்கிட்லிருந்து) குறைவாக, நபருக்கு 70 ரிங்கிட் க்கு எங்களில் போகத் தயாரான 18 பேருக்கு ஏற்பாடு செய்தார். இப்படி நாம் எதிர்பாராத சில செலவுகள் நேரிடலாம். மூன்றாவது பகுதி) 

எனவே பேக்கேஜ் தொகை தவிர குறைந்த பட்சம் ரூ3000-5000 ஒரு நபருக்கு வேண்டி வரும். (இதுவும் கூட பயணத்தில் உட்படுத்தப்படும் இடங்கள், அவர்கள் ஏற்பாடு செய்யும் தங்குமிடம், விமான நிறுவனங்கள் பொறுத்து மாறுபடலாம்) 

 

------துளசிதரன்

25 கருத்துகள்:

  1. செலவு விவரங்களுடன் அழகாக எழுதப்பட்டிருந்த பயணக்கட்டுரை. படங்களும் காணொளிகளும் அழகு சேர்த்தன. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  2. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது
    காணொளி கண்டேன்.

    செலவு விபரம் சொன்னீர்கள் இந்த 37500 ரூபாய் பாக்கேஜோடு நகை கடையில் இருபது பவுன் நகையை வாங்கி கொள்ளலாம் என்று இருந்தால் நல்லது. அப்படியொரு ஆஃபர் இருந்தால் சொல்லுங்கள்.

    காலையில் இட்லியைகூட தெருவோரம் நானே வாங்கி கொள்கிறேன். அவர்களுக்கு செலவு வேண்டாம்.

    அடுத்து சிங்கப்பூர் பயணம் எப்போ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செலவு விபரம் சொன்னீர்கள் இந்த 37500 ரூபாய் பாக்கேஜோடு நகை கடையில் இருபது பவுன் நகையை வாங்கி கொள்ளலாம் என்று இருந்தால் நல்லது. அப்படியொரு ஆஃபர் இருந்தால் சொல்லுங்கள்.//

      அங்கு வாங்கும் அளவு அப்படி விலை குறைவாகத் தெரியவில்லையே கில்லர்ஜி. தங்கம் என்றில்லை எல்லாப் பொருளுமே நம்மூரிலேயே அதே விலையில் அல்லது சற்றுக் குறைவாகவே கூடக் கிடைக்கின்றன என்பதே என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது.

      சிங்கப்பூர் பயணம் மலேசியப் பயணத்தைவிடக் கூடுதல் செலவாகும் என்று பயண ஏற்பாடுகள் செய்தவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டேன். குறிப்பாகத் தங்கும் இடம்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  3. மலேசிய பயணம் இனிதே முடிவடைந்தது. படங்கள் அழகாக வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நல்லபடியாக முடிவடைந்தது. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.

      துளசிதரன்

      நீக்கு
  4. உலகில் ஒரே ஒரு பொதுவான மதம் உதவியும் செய்து இருக்கிறது...! பதட்டத்தையும் குறைத்துள்ளது... அருமை...

    படங்கள் அனைத்தும் அருமை... சிறிய பெட்ரொனாஸ் கோபுர சிலையை தம்பி ரூபன் ஒருமுறை அனுப்பி இருந்தது, இப்போது ஞாபகம் வந்தது...

    செலவு விபரங்களையும் குறிப்பிட்டதற்கு நன்றி...

    பயணம் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தின் முதல் வரி புரியவில்லை.

      //படங்கள் அனைத்தும் அருமை... சிறிய பெட்ரொனாஸ் கோபுர சிலையை தம்பி ரூபன் ஒருமுறை அனுப்பி இருந்தது, இப்போது ஞாபகம் வந்தது...//

      மகிழ்வான விஷயம். இப்போது அவர் இலங்கையில் இருப்பதாகத் தெரிந்தது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி டிடி.

      துளசிதரன்

      நீக்கு
  5. பயணம் இனிதாக நிறைவு பெற்றது.
    காணொளி அருமை.
    மகனை நல்லபடியாக ரயில் ஏற்றி விட்டீர்கள்.
    பயண செலவு விவரங்கள் , பணம் மாற்றும் முறை எல்லாம் சொன்னது மிகவும் உதவியாக இருக்கும்.
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், மகனை, வேறு தடங்கல்கள் இல்லாமல் ஏற்றிவிட முடிந்தது.

      காணொளியைப் பார்த்ததற்கும், உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      துளசிதரன்

      நீக்கு
  6. முன்னரே விசாரித்தறிந்திருந்தால் பணம் அங்கு சென்று மாற்றி இருக்கலாம்.  சமயங்களில் இப்படி நிகழும்போது சற்றே ஏமாற்றமாகத்தான் இருக்கும்.  அடுத்த வாய்ப்பு எப்போதோ என்று தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் முன்னரே விசாரித்திருக்க வேண்டும். அதுவும் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். அடுத்த வாய்ப்பு என்பது பிள்ளைகளின் விருப்பப்படி, அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தின் படி.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  7. அதுசரி, என்னென்ன பொருட்கள் வாங்கினீர்கள் என்று சொல்லாமல் சட்டென பஸ்ஸில் ஏறி பறந்து விட்டால் எப்படி?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிதாகவோ, வித்தியாசமாகவோ, குறிப்பிடும்படியோ இல்லாததால் அதைக் குறிப்பிடவில்லை ஸ்ரீராம்ஜி.

      வாங்கியது எல்லாம் பிள்ளைகளுக்கு உடைகள் தான் அதிகமாக. ஒரு ஷூ, ஒரு கைக்கடிகாரம். எல்லாமே இங்கு கிடைக்கும் விலையில்தான். 3 பேரும் போட்டி போட்டுக் கொண்டு எடுக்க, 800 ரிங்கிட் பஞ்சாய் பறந்து போனது!

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  8. விமானம் புறப்பட தாமதம்...  ரயிலில் ஏறவேண்டும்..   இந்த மாதிரி பதட்டங்ககள் சட்டென ஒரு திகைப்பை உருவாக்கி விடுகின்றன..  நல்லவேளை, நல்லபடியாக ரயிலில் ஏறிவிட்டது நிமமதி.  அப்புறம்தான் சாப்பிடவே தோன்றி இருக்கிறது உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அப்போது ஒரு திகைப்பு ஏற்பட்டதுதான். எப்படியோ நல்லபடியாக மகனை ஏற்றிவிட்டு பயணம் நல்லபடியாக முடிந்துவிட்டது. ஆம் அதன் பின் தான் சாப்பிட்டு நாங்கள் எங்கள் ஊருக்குத் திரும்பினோம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி, உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  9. புகைப்படங்களும் விபரங்களும் அருமை! செலவு 37000 என்பது விமான பயணச்சீட்டும் சேர்த்துத்தானே?
    பொதுவாய் இந்த மாதிரி விமானப்பயணங்களில் அடிக்கடி தாமதங்கள் ஏற்படும். அதுவும் இப்போதெல்லாம் இது அதிகம். சமீபத்தில் மதுரையிலிருந்து துபாய் வந்த போது, விமானம் ஐந்து மணி நேரம் தாமதம். நல்ல வேளையாக நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் 24 மணி நேர செக் அவுட் என்பதால் ஹோட்டலிலேயே இருந்து கொண்டு தாமதமாகக்கிளம்பி வந்தோம். அடுத்த நாள் அந்த விமானம் வரவேயில்லை என்றும் பயணிகள் சிலர் கான்ஸல் செய்து விட்டு வெளியேறினார்கள் என்றும் படித்தேன். அதிலும் connecting flight, connecting train என்று பிரயாணம் திணறலாகி விடும்!! நல்ல வேளையாக நீங்கள் சமாளித்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் விமான பயணச்சீட்டும் சேர்த்துதான் செலவு பற்றி சொல்லியிருக்கிறேன். அந்த பேக்கேஜ்.

      //பொதுவாய் இந்த மாதிரி விமானப்பயணங்களில் அடிக்கடி தாமதங்கள் ஏற்படும். //

      அப்படியா? வெளிநாட்டுச் சுற்றுலா இப்படிச் செல்வது முதல் அனுபவம், மூத்த மகன் ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்தாலும்.

      //அதுவும் இப்போதெல்லாம் இது அதிகம். சமீபத்தில் மதுரையிலிருந்து துபாய் வந்த போது, விமானம் ஐந்து மணி நேரம் தாமதம். நல்ல வேளையாக நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் 24 மணி நேர செக் அவுட் என்பதால் ஹோட்டலிலேயே இருந்து கொண்டு தாமதமாகக்கிளம்பி வந்தோம்.//

      நல்ல காலம் ஹோட்டலில் இருக்க முடிந்ததே.

      //அடுத்த நாள் அந்த விமானம் வரவேயில்லை என்றும் பயணிகள் சிலர் கான்ஸல் செய்து விட்டு வெளியேறினார்கள் என்றும் படித்தேன்.//

      கஷ்டம்தான். அவர்களின் பயணத் திட்டம் எல்லாம் மாறி ஒரு விதமான பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.

      //அதிலும் connecting flight, connecting train என்று பிரயாணம் திணறலாகி விடும்!! நல்ல வேளையாக நீங்கள் சமாளித்து விட்டீர்கள்!//

      ஆமாம். எங்கள் பயணத்தில் நல்ல வேளையாக எப்படியோ சமாளித்துவிட்டோம்.

      உங்கள் கருத்திற்கும், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்.

      துளசிதரன்

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    மலேஷியா பயண அனுபவம் நன்றாக இருந்தது. ஒவ்வொரு இடத்தைப்பற்றி விபரமாக சொல்லியிருப்பதும், பல இடங்களை காணொளிகள் மூலமாக தெளிவாக காட்டியிருப்பதும், அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும். விமான பயணச் செலவுகள், மற்றும் இதரச் செலவுகள் பற்றி கூறிருப்பதற்கும் மிக்க நன்றி.

    தங்கள் மகனை குறிப்பிட்ட ரயிலில் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்றி விட வேண்டி நீங்கள் மனதளவில் பட்ட சிரமங்களை என்னால் உணர முடிகிறது. எல்லாம் நல்லபடியாக நடந்து பயணமும் இனிதாக அமைந்ததற்கு இறைவனுக்கு உங்களுடன் நானும் நன்றி கூறிக் கொள்கிறேன். இது வரை நீங்கள் பகிர்ந்த பயணக் கட்டுரை உங்களுடன் பயணப்பட்ட திருப்தியை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலேஷியா பயண அனுபவம் நன்றாக இருந்தது. ஒவ்வொரு இடத்தைப்பற்றி விபரமாக சொல்லியிருப்பதும், பல இடங்களை காணொளிகள் மூலமாக தெளிவாக காட்டியிருப்பதும், அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும். விமான பயணச் செலவுகள், மற்றும் இதரச் செலவுகள் பற்றி கூறிருப்பதற்கும் மிக்க நன்றி.//

      மிக்க நன்றி.

      ஆமாம், விமானம் தாமதம் என்றதும் கொஞ்சம் பதற்ற வந்ததுதான். அதன் பின் இறைவன் விட்ட வழி என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டேன். இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

      //நல்லபடியாக நடந்து பயணமும் இனிதாக அமைந்ததற்கு இறைவனுக்கு உங்களுடன் நானும் நன்றி கூறிக் கொள்கிறேன். இது வரை நீங்கள் பகிர்ந்த பயணக் கட்டுரை உங்களுடன் பயணப்பட்ட திருப்தியை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.//

      உங்களின் விரிவான கருத்திற்கும் பயணக் கட்டுரையை ரசித்து வாசித்ததற்கும் மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

      துளசிதரன்

      நீக்கு
  11. தாங்கள் பதிந்துள்ள புகைப்படங்களின் வாயிலாக... நாங்களே நேரில் மலேசியா சென்றுவந்தது போன்றதொரு உணர்வை எங்களுக்குள் ஏற்படுத்திவிட்டீர்கள். நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாஞ்சில் சிவா, உங்கள் கருத்திற்கும் என் கூடவே கட்டுரை வழியாகவும் படங்களின் வழியாகவும் பயணம் செய்ததற்கும் மிக்க நன்றி.

      துளசிதரன்

      நீக்கு
  12. வழக்கம் போல, தாங்கள் ஒரு திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஆளுமை என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். சரி, அடுத்த பயணம் எந்த நாட்டுக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இராய செல்லப்பா சார்.

      அடுத்த பயணம் என்று இப்போதே எதுவும் திட்டமிடல் இல்லை. பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் நேரம் சார்ந்திருப்பதால் அவர்களின் விருப்பப்படி அமையும்.

      துளசிதரன்

      நீக்கு