ஞாயிறு, 17 ஜூலை, 2022

அக்கரைச் சீமை அழகினிலே - மனம் மயக்கும் மலேசியா - பகுதி - 2

 

//பேருந்தில் என் மனதில் எழுந்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டே மலேசியாவையும்  சுற்றிப் பார்ப்போம். என்னுடன் நீங்களும் வாருங்கள். நாம் பேசிக் கொண்டே பயணிப்போம்.// பகுதி ஒன்றின் முடிவு. அப்பகுதியைப் பார்வையிட்ட, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

இப்பகுதியைத் தொடர்கிறேன்...

விமான நிலையத்தில் இருந்து  பேருந்தில் தங்கும் இடம் செல்லும் போது  தங்கும் இடத்தின் அருகில் இருக்கும் ‘புத்ரஜயா’ எனும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இந்த ‘புத்ரஜயா’ பற்றி சொல்வதற்கு முன் நாம் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று மலேஷியா உருவாகிய விதத்தையும்  பார்ப்போம். எனவே இந்த இரண்டாவது பகுதியில், ஊரின் வரலாற்றையும் (சுருக்கமாகத்தான். இணையத்தில் தகவல்கள் இருப்பதால்), அதனோடு தொடர்பாக என் மனதில் எழுந்த எண்ணங்களையும் பகிர்கிறேன்.  

நன்றி விக்கி

கடாரம் வென்ற சோழனை நினைத்துக் கொண்டே மலேஷிய மண்ணைப் பார்த்தேன். கிபி 1025 ல் கடல் வழியாக இம்மண்ணை சொந்தமாக்கிய முதலாம் இராஜேந்திர சோழனை மனக்கண்ணில் தரிசித்தேன். 1044ல் இம்மண்ணில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ஆர்க்காட்டிலுள்ள பிரம்ம தேசத்தில் உடல் எரிக்கப்பட்டதாகவும், மனைவி வீரமாதேவியார் உடன் கட்டை ஏறியதாகவும் சொல்லப்படுகிறது. வரலாறு எப்போதும் அப்படித்தான்.

வளைக்கப்படும்; திருத்தப்படும்; மறைக்கப்படும்; மாற்றப்படும். எப்படியோ 19 ஆண்டுகள் இராஜேந்திர சோழனின் ஆட்சியில் இருந்த கடாரம் இது. அதன் பின்னும் குலோத்துங்க சோழன் கிபி 1063 ல் இங்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. எப்படியோ 11-ம் நூற்றாண்டில் கடாரமும் ஸ்ரீ விஜயம் எனும் இன்றைய இந்தோனேஷியாவின் பாகங்களும் அதனுடன் கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளும் சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்திருக்கிறது என்பது உண்மை.

பரமேஸ்வரா எனும் இஸ்கந்தர் ஷா - நன்றி - கூகுள்
மலேஷியாவில் மன்னரான பரமேஸ்வரா (1344-1414) இஸ்லாம் மதத்திற்கு மாறி 'இஸ்கந்தர் ஷா' வாக 1424 வரை மலாக்கா சுல்தான் ஆக தன் நாட்டை விரிவுபடுத்தியிருக்கிறார்மலாய் அன்னல்ஸ்MALAY ANNALS - எனும் மலேஷியாவின் வரலாறு கிபி 1400லிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதில் முதல் சுல்தான் இஸ்கந்தர் ஷா தான். கேரளாவிலும் வைணவ மதம் ஏற்ற மார்த்தாண்டவர்மா 18 ஆம் நூற்றாண்டில் புதிதாய் எழுதிய சரித்திரம்தான் இன்றும் நம்பப்படுகிறது. அதன் முன்புள்ள சம்பவங்களை விவரிக்கும் எல்லா ஓலைகளையும் சேகரித்துத் தீக்கிரையாக்கி அழித்து  மறைத்தது போல 11,12,13,14 நூற்றாண்டு வரையிலான சம்பவங்களையும் 1612 ல் எழுதப்பட்ட மலாய் ஓரியன்டல்ஸ்MALAY ORIENTALSமறைத்திருக்கலாம்.

ஆனால், கிபி 1511 ல் கடாரம் வந்த போர்ச்சுக்கீசியர்கள் அவர்களது சுமா ஓரியண்டல்ஸ்SUMA ORIENTALSஎனும் புத்தகத்தில் அரிய பல தகவல்களையும் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக TOME PIRES – (1465-1524) என்பவர் மூன்றாண்டு காலம் மலாக்காவில் தங்கி ஆராய்ந்து அரிய பல வரலாற்று நிகழ்வுகளையும் எழுதியதால்தான் இஸ்லாம் மதம் மாறிய மன்னர் பெயர், மதம் மாறும் முன் பரமேஸ்வரா என்பதை அறிய முடிகிறது

அதன் முன், மதமாக பௌத்தமும், பிராமணீயமும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. (HINDUISM என்பது ஆங்கிலேயர்கள் உருவாக்கியதுதானே. அதுவும் 18, 19ஆம் நூற்றாண்டுகளில். சுமா ஓரியண்டல்ஸ் எழுதப்பட்டது 16 ஆம் நூற்றாண்டில்). சோழர்களின் சைவ மதம் 12, 13, 14, ஆம் நூற்றாண்டுகளில் வைணவத்திற்கு வழி மாறி சாதிகள் முளைத்திருக்கலாம். பிராமணர்களின் அதிகாரத்தில் மன்னர்கள் ஆள வேண்டிய சூழல்கள் ஏற்பட்டிருக்கலாம். இப்படி எல்லாம் ஊகங்கள். ஊகங்கள்தான் பல நேரங்களில் வரலாறாகவும் எழுதப்படுகிறது.

ஒவ்வொரு மதமும் அழியக் காரணம், மனித அழிவுக்குக் காரணமாகும், ஏதோ ஒரு புற்றுநோய் செல் உடலிலேயே தோன்றுவது போல், அம்மதத்திலேயே தோன்றுவதால்தானே.

மலேஷியாவின் முதல் பிரதம மந்திரி துங்கு அப்துல் ரஹ்மான் (Tunku Abdul Rahman) நன்றி - விக்கி

போர்ச்சுக்கீசியருக்குப் பின் 1641-ல் டச்சுக்காரர்களும், 1824 ல் பிரிட்டிஷ்காரர்களும் மலேஷியாவை ஆண்டிருக்கிறார்கள். அப்போதும் சுல்தான் 'இஸ்கந்தர் ஷா' வின் பின் வந்த தலைமுறையினரின் செல்வாக்கு குறையவே இல்லை. 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் மலேய மக்களுக்குக் கிடைத்த கல்வியறிவு, பிரிடிட்டிஷாருடன் பேசி கத்தியின்றி ரத்தமின்றி திரு. துங்கு அப்துல் ரஹ்மானின் (Tunku Abdul Rahman) தலைமையில் 31 ஆகஸ்ட் 1956 ல் சுதந்திரம் பெற உதவியானது. 

அப்படி மலேஷியா, 70% மலாய் மக்களும் 20% சைனா மக்களும், 7% இந்தியர்களும் (தமிழர்களும்) 3% மற்றவர்களும் அடங்கிய ஒரு இஸ்லாமிய நாடானது. எல்லோரும் மதங்களின் ஒற்றுமையை பேச்சளவில் மட்டுமல்ல செயலிலும் கடைப்பிடிப்பதை இங்குக் காணலாம். இங்குள்ள 9 மாநில சுல்தான்களும் 5 வருடம் மாறி மாறி மலேஷியாவை ஆளும் முறை நிலவுகிறது.

அதனுடன் மக்களவை தேர்ந்தெடுக்கப்படும். அரசவையும் உண்டு. பிரதமரும் மற்றும் அமைச்சர்களும் உண்டு. மலேஷியாவின் வளமும் இதன் செழுமையும் ஒரு முக்கியக் காரணம். முன்பு உலகில்டின்(Tin) அதிகமாகக் கிடைத்த இடம் என்றால் இன்று பாமாயில் மற்றும் ரப்பர் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு.

இயற்கை அன்னை எல்லா வளங்களையும் வாரி வழங்கியிருக்கும் நாடு. 3.3 கோடி மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் அரசு. அதற்கு நல்ல ஓர் உதாரணம், சாலைகள் தான். மேலை நாடுகளைப் போல் அருமையான சாலைகள், மேம்பாலங்கள், சாலையோர ஒடைகள். போக்குவரத்து சிக்னலில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாத நிலை. லஞ்சம் ஊழல் இல்லாததால் மொத்த பணமும் சாலைகளில் செலவிடப்படுவதும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம்.

இப்படிப் பல சிந்தனைகளில் மலேஷிய சாலைகளைப் பார்த்துக் கொண்டே வந்த போது கூடவே கேரளத்திற்கும் மலேஷியாவிற்கும் தொடர்பான வருத்தமான நிகழ்வும் நினைவுக்கு வந்து, திடீரென லீ சீன் பென்Lee Seen Ben - நினைவுக்கு வந்தார். குற்ற உணர்வால் மனது கனத்தது.

பாலக்காடு கொளப்புள்ளி சாலை உலக வங்கியின் நிதி உதவியுடன் 1613 கோடி செலவில் செய்யத் தயாரான PATI எனும் மலேஷிய நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளர் (Chief Project Manager). கேரளத்தில் உள்ள சாலைகளில் 16 ஆண்டுகளுக்குப் பின்னும் தரமாக இப்போது நிலை நிற்கும் அந்தச் சாலையை நிறுவியவர்தான் லீ சீ பென் – Lee See Ben.

லஞ்சம் ஊழல் பற்றித் தெரியாத காரணத்தால் (நிறுவனமும் அதை ஊக்கப்படுத்தாதுதான்) அரசிடம் இருந்து பணம் சரியான நேரங்களில் கிடைக்காமல் போனது. திட்டம் பாதியில் நின்று விட மனமுடைந்து மலேஷியா சென்று தன் நிறுவனத்திற்கும் தன் மனைவிக்கும் நிலைமையை விளக்கி (அவரது கடிதத்தில் ஊழல் செய்த பல அரசியல்வாதிகள் முக்கியப் புள்ளிகள் பலரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்திருக்கிறார்) கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டவர். இந்தச் செய்தி இணையத்தில் நிறைய இருப்பதால் நான் இங்கு அதிகம் விவரிக்கவில்லை. Actually he came and worked sincerely in a wrong place, in a wrong time. Mr. Ben, we are terribly sorry. We pray for your soul.

PATI போன்ற நிறுவனங்களும் லீ சீன் பென் போன்ற முதன்மை திட்ட மேலாளர்களும் உருவாக்கியிருக்கும் மலேஷியாவில் அருமையான சாலைகளிலும் மேம்பாலங்களிலும் பேருந்து அதி வேகத்தில் சென்றாலும் குலுங்கல் தெரியாமல் சென்று புத்ரஜயாஎனும் இடத்தில் நின்றது
புத்ரஜயா - பின்னில் இருப்பது பிரதமரின் அலுவலகம். அங்கு 9 மாகாணங்களின் கொடிகளும் கொடிக்கம்பத்தில்


600 ஆண்டுகளுக்கு முன்பு வைணவம் துறந்து இஸ்லாம் ஏற்ற மன்னரும் மக்களும் இப்போதும் சம்ஸ்கிருதத்தை தம் மொழியிலிருந்து துறக்கவில்லை என்பதன் அடையாளம்தான் இந்தப் பெயர். புத்ரஎன்பது இப்போதும் மன்னர்களின் பெயரில் உண்டு. அது போல் வெற்றியைக் குறிக்கும் ஜயாஎன்பதும். அதே போல் பல பெயர்களுடனும் இப்போதும் ‘Chulan’  (சோழன் என்பதுதான்) பயன்படுத்தப்படுகிறது. சோழனின் பின் தலை முறையினராக இருக்கலாம்.

ஆனால் மலேஷியாவிலுள்ள தமிழினத்தில் பெரும்பான்மையினர் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இது மட்டுமல்ல ஆங்கில மொழியையும் அவர்கள் ஒதுக்கவில்லை. ஆங்கில எழுத்துக்களைத்தான் தங்கள் மொழிக்கு எழுத்து வடிவமாக அவர்கள் இப்போதும் பயன்படுத்துகிறார்கள். இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள்தான் மலேஷியர்கள்.

கோலாலம்பூரின் நெரிசலுக்கு முடிவு கட்ட பிரதமர் மற்றும் அமைச்சர்களின் அலுவகங்களுடன், அரசு அலுவகங்களும், அரசு ஊழியர்கள் குடியிருப்புகளும் ஓரிடத்தில் அமைக்க முடிவு செய்து, அப்படி உருவாக்கப்பட்ட ஒரு நகரம்தான்புத்ர ஜயா’. மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூர். நிர்வாகத் தலைநகர் புத்ரஜயா. 

புத்ரஜயாவின் முன்புறம் - பிரதமர் அலுவலகத்திற்கும் மேலே உள்ள படத்தில் உள்ள புத்ரஜயா எழுத்துகள் உள்ள இடத்திற்கும் பிரதமர் அலுவலகப் பகுதிக்கும்  இடையில் உள்ள பகுதி - மலேஷியாவில் எங்களுக்கான பயண வழிகாட்டி நிர்மலா அவர்கள் - மேலே படத்தில் இருக்கும் 9 மாகாணங்களின் கொடிகளும் கொடிக்கம்பத்தில் இதிலும் தெரியும்

புத்ரஜயா மேம்பாலம்

புத்ர மசூதி - Putra Mosque - நன்றி - விக்கி

செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓரு ஏரியும் இங்கு உண்டு. பிரதமரின் மாளிகையும் தொழுவதற்கான ஒரு மிக பிரம்மாண்டமான மசூதியும் உண்டு

பசிபிக் எக்ஸ்பிரஸ் ஹோட்டல் - நன்றி - கூகுள்

அவற்றைப் பார்த்தபின் காலை சிற்றுண்டியும் உண்டுவிட்டு, நாங்கள் தங்கவிருந்த, சைனா டவுனில் உள்ள பசிபிக் எக்ஸ்பிரஸ் ஹோட்டலை அடைந்தோம். 25 பேருக்கு 13 டீலக்ஸ் அறைகளை ஸ்கைஹிண்ட் ட்ராவல்ஸ் பதிவு செய்திருந்தது. மனைவியும் மகளும் 8226 ஆம் எண் அறையிலும், நானும் இரண்டாவது மகனும் 8225 ஆம் எண் அறையிலும் பெரியவனும் மற்றும் கேரள மின்சாரவாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற திரு ஜேக்கப்பும் 8223 ஆம் எண் அறையிலுமாக எல்லோரும் ஓய்வெடுத்தோம்

மலேஷியாவில் தங்கவிருந்த 3 நாட்களில் நம் பதிவர் தம்பி ரூபன் ராஜாவை எப்படியேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அவர் இலங்கையில் இருப்பதாக அறிந்ததும் கொஞ்சம் வருத்தமாகிவிட்ட்து. அவரையும் சந்தித்திருந்தால் அவருடனான அந்த அரிய நேரத்தையும் இங்கு உங்களுடன் பகிர்ந்திருப்பேன். அவரும் மலேஷியா பற்றி மேலதிக விவரங்கள் தந்திருப்பார்.

அடுத்த பகுதியில் குழுவில் வந்திருந்த ஒரு குடும்பம் பற்றிய நெகிழ்ச்சியான சம்பவமும், குழுவினர் பற்றியும், அன்று மாலையில் சென்ற இடங்கள், மறுநாள் (இரண்டாவது நாள்) சென்ற இடங்கள், அன்று நடந்த பதற்றமான சம்பவம் அது என்ன என்பது பற்றியும் சொல்கிறேன்.

2.05 நிமிடங்கள்தான். முடிந்தால் பாருங்கள். நகரத்திற்குள் எங்களுக்கான பேருந்தில் சென்ற போது எடுத்த காணொளி 


-------துளசிதரன்

27 கருத்துகள்:

  1. தொடர்ந்து படிக்கிறேன். பரமேஸ்வர - இது வைணவப் பெயர் போலத் தெரியவில்லை. சோழர்கள் சைவர்கள் அவர்கள் வைணவக் கோயில்களுக்குப் பொருளுதவியும் கட்டுமானப் பணிகளும் செய்தபோதும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரமேஸ்வர - இது வைணவப் பெயர் போலத் தெரியவில்லை//
      ஆம். நான் அவரைப் பற்றிச் சொல்லி வந்ததில் அவர் பற்றி மட்டுமில்லாமல் பொதுவான ரீதியில், வாசித்த சிலவற்றிலிருந்து தெரிந்து கொண்டதைத்தான். மற்றும் எல்லாமே ஊகங்கள்தான்.
      சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் வந்திருக்கிறது. மலேஷியா மக்கள் மொழியில் அதுதான் அதிகம் இப்போதும் இருக்கிறது என்பது ஆச்சர்யம். சோழர்கள் தமிழ் மொழியை அங்கு ஏன் நிலை நாட்டவில்லை என்பதும் ஆச்சரியமாக இருந்தது. அது போல் சுமா அன்னல்ஸ் போன்றவற்றில் இஸ்லாம் மதத்திற்கு முன் பௌத்தமும், பிராமணீயமும் இருந்ததாகச் சொல்லப்படுவதால் ஒரு வேளை வைணவம் தலையோங்கி இருந்திருக்கும் என்ற ஊகங்கள்தான். பிறகு இந்தியாவிலிருந்து சென்ற சுஃபி மற்றும் அரபி வியாபரிகளின் ஆதிக்கத்தால் மன்னர் மத மாறியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு மதம் துறந்து வேறு மதம் ஏற்ற அசோகனுக்கு நேர்ந்தது போல் ஏதேனும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும். எப்படியோ இன்றும் அங்கு சமஸ்கிருதம் இருக்கிறது. அது போதுமே. நம் தேசத்தோடு தொடர்பை நிலைநாட்ட.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      துளசிதரன்

      நீக்கு
    2. உங்கள் அனுமானத்திலும் அர்த்தம் இருக்கிறது. தாய்லாந்து அரசரின் பதவியேற்பில், திருப்பாவை (தற்போது சிதைந்த நிலையில்) பாடப்படுகிறது. இது வைணவ பிரபந்தம். அதனால் பிராமணீயம் என்பது சைவமும் வைணவும் சேர்ந்து இருந்த நிலையாக இருந்திருக்கும். அதாவது சோழர்கள் சைவத்தைப் பின்பற்றியிருந்தாலும், வைணவத்தையும் புறக்கணித்திருக்க மாட்டார்கள். நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கிறது. தாய்லாந்தில், இந்தோனேஷியாவில் இராமாயணம் நன்கு எஸ்டாபிளிஷ் ஆகியிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

      நீக்கு
    3. ஆம் நெல்லைத் தமிழன்.. பிராமணீயம் சைவ, வைணவ கலவைக்கான பேராகத்தான் இருக்கும். எப்படியோ தமிழ்நாடு சார்ந்த பண்பாடு 4 நூற்றாண்டுகள் மட்டுமல்ல இப்போதும் உண்டு என்பது பெருமைக்குரிய விஷயமே.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன் மீள் வருகைக்கும் கருத்திற்கும்.

      துளசிதரன்

      நீக்கு
  2. காணொளி அருமை...

    தகவல்களை பட்டும் படாமல் சொல்லி விட்டீர்கள்... நல்லதே... மதம் அப்படி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தத் தகவலும் உறுதியாகத் தெரியாததால் அறிந்தவற்றை மட்டும்தானே சொல்லமுடியும், டிடி. சொல்லப்படுகிறது என்றுதானே சொல்லமுடியும்.

      மிக்க நன்றி டிடி.

      துளசிதரன்

      நீக்கு
  3. தகவல்கள் அருமை.
    நமது நாட்டில் லஞ்சம் ஒழிந்தால்தான் வளர்ச்சி என்பதை நினைக்கலாம்.

    ரூபன் இலங்கை சென்று மூன்று வருடங்கள் இருக்கும்.

    காணொளி கண்டேன் தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கில்லர்ஜி, லஞ்சம் இருக்கும் வரை நாட்டின் வளர்ச்சி சரியான பாதையில் இருக்காதுதான்.

      ரூபன் தம்பி இலங்கையில் இருப்பது தெரிந்தது. முகநூல் வழி அவருக்குச் செய்தி அனுப்பினேன். அவர் கொடுத்திருந்த பதிலில் தெரிந்தது. ஆனால் மூன்று வருடங்கள் ஆகியிருக்கும் என்பது உங்கள் கருத்து மூலம் தெரிகிறது. அவரை வலையிலும் காணவில்லையே என்று நினைத்தேன்.

      உங்கள் கருத்திற்கும், தகவலுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
    2. காணொளி கண்டதற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  4. ஒரு சிறிய மலேஷியா சரித்திர பாடம். பயண அனுபவங்களை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாடு கடந்து வெளியில் செல்வது இதுவே முதல்முறை. அந்த நாட்டைப் பற்றி அதுவும் நம் சோழர்கள் அங்கு சென்று ஆண்டிருப்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் வாசித்து தெரிந்ததைச் சொன்னேன்.
      தொடர்வதற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் ஐயா.

      துளசிதரன்

      நீக்கு
  5. வைணவம் துறந்து இஸ்லாம் ஏற்ற மலேசிய வரலாற்றை எளிதாக புரியும்வண்ணம் சுருக்கமாக தந்துள்ளீர்கள்... மேலும் மலேசியா பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை அறிய ஆவலாக உள்ளேன். நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலும் மலேசியா பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை அறிய ஆவலாக உள்ளேன். நன்றி!!!//

      மாற்றம் என்பதை விட அதன் மூலம் நன்மைகள் நடந்தால் நல்லதுதானே.

      தொடர்ந்து வாருங்கள் நாஞ்சில் சிவா. நன்றி

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நாஞ்சில் சிவா

      துளசிதரன்

      நீக்கு
  6. மலேசிய சரித்திரம் கவர்கிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எனக்கும் சில ஆச்சரியங்கள் ஆனால் எல்லாமே ஊகங்களின் அடிப்படையில்தான் இருக்கிறது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  7. //மேலை நாடுகளைப் போல் அருமையான சாலைகள், மேம்பாலங்கள், சாலையோர ஒடைகள். போக்குவரத்து சிக்னலில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாத நிலை. லஞ்சம் ஊழல் இல்லாததால் மொத்த பணமும் சாலைகளில் செலவிடப்படுவதும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம்.//

    ஏக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், ஸ்ரீராம்ஜி. நானும் காரிலும், இரு சக்கர வாகனத்திலும் பயணம் அடிக்கடி செய்ய வேண்டி இருப்பதால் எனக்கும் அந்த ஏக்கம் வந்தது. அதனால்தான் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

      ஆனால் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில், பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும், காத்திருக்க வேண்டிய அவசியமும் இருப்பதாகவும் கூட அறிந்தேன்.

      நீங்கள் தற்போது சென்னையில் அதிக தூரம் சென்று வர வேண்டியிருப்பதையும் கீதா மூலம் அறிந்தேன். சென்னை போக்குவரத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும் என்பதை உணரமுடிகிறது.

      நம் நாட்டில் அவ்வளவு விரைவில் போக்குவரத்து சரியாகிவிடுமா, சாலைகள் பராமரிக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  8. புத்ரஜயா, மற்றும் மலேஷியா வரலாறு அருமையாக இருக்கிறது.
    காணொளி பார்த்தேன்.
    தொடர்கிறேன்.‘

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு, உங்கள் கருத்திற்கும் காணொளியைப் பார்த்ததற்கும், தொடர்வதற்கும்

      துளசிதரன்

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. மலேஷியா வரலாறு பற்றியும், புத்ரஜயா நகரம் பற்றியும் அழகாக புரிந்து கொள்ளும்படி எழுதி உள்ளீர்கள். வரலாறு படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. சுத்தமான இடங்கள், அழகான மேம்பாலங்கள், லஞ்சம், ஊழல் ஏதுமில்லாத ஆட்சியின் கீழ் சுகாதாரமான சாலை விரிவாக்கங்கள், இவற்றை பற்றி தாங்கள் விளக்கியதை படிக்கும் போதும், காணொளியில் கண்கூடாக பார்க்கும் போதும் மனதுக்கு மகிழ்வாக உள்ளது. மலேஷிய நகரம் நன்றாக உள்ளது. மேலும் விபரங்கள் அறிய தங்கள் பயணத்தோடு தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தமான இடங்கள், அழகான மேம்பாலங்கள், லஞ்சம், ஊழல் ஏதுமில்லாத ஆட்சியின் கீழ் சுகாதாரமான சாலை விரிவாக்கங்கள், இவற்றை பற்றி தாங்கள் விளக்கியதை படிக்கும் போதும், காணொளியில் கண்கூடாக பார்க்கும் போதும் மனதுக்கு மகிழ்வாக உள்ளது. //

      ஊர் சுத்தமாக இருக்கிறது. நம் சென்னையில் இருப்பதைப் போன்ற கடைவீதிகளும் இருக்கின்றனதான்.

      மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் உங்கள் கருத்திற்கும், பதிவை ரசித்தமைக்கும், தொடர்வதற்கும்.

      துளசிதரன்

      நீக்கு
  10. தகவல்கள் அனைத்தும் அருமை!
    எழுத்தாளர் சாண்டில்யனின் ' கடல் புறா' நாவலில் ராஜேந்திர சோழனின் கடற்படை விஸ்தரிப்பு, ஸ்ரீவிஜயம், கடாரம் பற்றிய தகவல்கள் என்று விரிவாக அவர் பகிர்ந்திருப்பார்.
    தாய்லாந்தில் தெருக்கள் ' ராமா ' என்றே ஆரம்பிக்கும்.
    கம்போடியா சிற்பங்களும் கோவில்களும் பிரமிக்க வைக்கும். எனக்கு நம் ஊரில் தஞ்சை பெரிய கோவில் அருகே இருக்கும் உணர்வு தான் அப்போது ஏற்பட்டது.
    பல்லவ அரசர்களுக்கும் ராஜேந்திர சோழர்களுக்கும் கம்போடியாவிலும் நெடுங்காலம் ஆளுமை இருந்திருக்கிறது. ஆனால் சரித்திர வழிச்சான்றுகள் போதுமானவை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். சாண்டில்யன் கதையில் வாசித்த நினைவு இருக்கிறது. அந்த நாடுகளில் பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் அதை எல்லாம் மறைத்து ஒரு புது சரித்திரம் எழுதி அதை திணித்திருக்கலாம் இருந்தாலும் சும்மா ஓரியண்டல்ஸ் போல் ஏதாவது ஒன்றில் உண்மை ஒளிந்திருக்கும். ஆனால் அதும் நாளடைவில் மறைந்து
      போகும் என்பதும் உண்மைதான். என்ன செய்ய மாற்றம்ஒன்றே மாறாதது.

      மிக்க நன்றி சகோதரி மனோ சுவாமிநாதன் உங்கள் தகவல்களுக்கும் கருத்திற்கும்.

      துளசிதரன்

      நீக்கு
  11. மலேஷியாவிற்கும் நம்முடைய தமிழகத்துக்கும் இடையில் உள்ள உறவு அப்படியானது.. 25 ஆண்டுகளுக்கு முன்பு மலேஷியாவில் இரண்டு நாட்கள் இருந்திருக்கின்றேன்.. 1981- 84 சிங்கப்பூரில் 4 ஆண்டுகள் Ship Yard ல் வேலை.. ஆதியில் மன்னர் மதம் மாறிய செய்திகள் சரிதான் .. ஆனால் இன்றைய சூழலில் பொது வெளியில் பேசக் கூடாத விஷயங்கள் நிறைய உள்ளன..

    நமக்கு அருகில் உள்ள நகரம் ஒன்றில் மக்கள் மதம் மாறியதும் அவர்களைக் கொண்டே சிவ ஆலயத்தை இடிக்கச் செய்தார்களாம் அன்றைய பிரஞ்சுக்காரர்கள்.. அதைப் போலவே அங்கும் நடந்ததால் ஆதாரங்கள் பலவும் அழிக்கப்பட்டன..

    நல்ல தகவல்களுடன் பதிவு.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நடந்தவைகள் நடந்தவைகளே. காலச்சக்கரத்தில் திருப்பி அதை மாற்ற முடியாது. எல்லாமே இறைவனின் திருவிளையாடல்கள் ஆகவும் இருக்கலாம். அல்லது சம்பவங்கள் ஆகலாம். ஆம் பேசக் கூடாத விஷயங்கள் நிறைய உள்ளனதான். ஒவ்வொருவர் நம்பிக்கையும் ஒவ்வொன்று. தவறும் இல்லை. யார் மனதும் புண்படாமல் பேசுவதுதானே நல்லது இல்லையா.

      மிக்க நன்றி துரை செல்வராஜு சார் உங்கள் விரிவான கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  12. சோழர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பது குறித்து வருத்தமாக இருக்கிறது. ஆனால் திரு காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் இதைக் குறித்து ஆய்வு செய்திருப்பதாகச் சொன்னார். எப்படியோ உண்மையான வரலாறு எங்கேயுமே இல்லை என்பது தெளிவு. மலேசியாவின் வரலாறு நீங்கள் எழுதி இருப்பதே எனக்கு இப்போத் தான் தெரியும். சுருக்கமான ஆனால் அதே சமயம் சரியான தகவல்களுடன் கூடிய வரலாறு. தொல்பொருள் ஆய்வெல்லாம் அங்கே நடந்தால் ஒரு வேளை உண்மையான வரலாறு தெரியவரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோழர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பது குறித்து வருத்தமாக இருக்கிறது. //

      ஆமாம்.

      //ஆனால் திரு காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் இதைக் குறித்து ஆய்வு செய்திருப்பதாகச் சொன்னார்.//

      அதுவும் வரப் போவதாக எங்கள் ப்ளாகில் ஸ்ரீராம்ஜி சொல்லியிருந்ததன் மூலம் அறிந்தேன். அதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

      //எப்படியோ உண்மையான வரலாறு எங்கேயுமே இல்லை என்பது தெளிவு.//

      ஆமாம். இது பலவற்றிற்கும் பொருந்தும்தானே.

      //ங்கள் எழுதி இருப்பதே எனக்கு இப்போத் தான் தெரியும். சுருக்கமான ஆனால் அதே சமயம் சரியான தகவல்களுடன் கூடிய வரலாறு.//

      மிக்க நன்றி சகோதரி. நான் அறிந்ததை எழுதினேன்.

      //தொல்பொருள் ஆய்வெல்லாம் அங்கே நடந்தால் ஒரு வேளை உண்மையான வரலாறு தெரியவரலாம்.//

      ஆமாம், பார்ப்போம்.

      மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம், உங்களின் விரிவான கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு