வியாழன், 7 ஜூலை, 2022

நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப்பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 6

 ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் - ராமகிரி - தொடர்ச்சி

இத்தொடரின் முந்தைய பகுதிகள் - 1 , 234, 5

நீரோடை/கால்வாய்ப் படங்கள் போட்டு கோயிலின் முன் ஓடுகிறது நடந்து வந்த களைப்பு நீங்க அமர்ந்து ரசித்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி முடித்திருந்தேன். வழக்கமாக ஆமை வேகத்தில்தான் அடுத்தது வரும். இப்போது உடனேயே கோயிலுக்குள் சென்று பார்த்துவிடலாம் என்று பதிவு வியப்பு! இல்லையா? ஒரு வேளை அடுத்து நீங்கள் எல்லோரும் விமானத்தில் ஏற வேண்டிவரலாம்! அது பற்றி கடைசியில்... இப்போது பதிவினுள்...

கோயில் வளாகத்தின் வெளியே இடப்புறம் ஒரு புஷ்கரணி இருக்கிறது. ஆனால் உள்ளேயும் ஒரு புஷ்கரணி இருக்கிறது. அதுதான் நந்தி தீர்த்தம் என்கிறார்கள். இப்போது கோயில் வளாகத்திற்குள் செல்வோம். கோயிலுக்கு கோபுரம்/ராஜ கோபுரம், த்வஜஸ்தம்பம் (கொடி கம்பம்) எதுவும் இல்லை.

இப்படித்தான் கோயில் வளாகத்திற்குள் செல்ல வேண்டும்

அனுமன், சிவலிங்கத்தை தன் வாலால் கட்டி இழுப்பது போன்ற சிலை கோயிலின் மேல் - நடுவில் தெரிகிறதா? அதனால்தான் இங்கு ஈசன் வாலீஸ்வரர். இடப்புறம் சிவப்பு வெள்ளைப் பட்டை அடித்த சுவர் தெரிகிறதா நந்தி தீர்த்தத்தின் சுவர்

நந்தி தீர்த்தம். இப்படத்தில் அந்த பாழடைந்த கோயில் தெரிகிறது இல்லையா..இதுதான் கீழே தனியாக

நந்தி தீர்த்தம்

இதோ தெரிகிறதா நந்தியின் கழுத்துவரை உள்ள பகுதியும் அதன் வாய் வழியாக நீர் வந்து கொண்டிருப்பதும். இந்த நீர் வற்றிப் பார்த்ததே இல்லை, வற்றவே வற்றாது என்று அங்கிருந்த மக்கள் சொன்னார்கள். சுற்றுப்பட்டுக் கிராமங்கள் அனைத்திற்கும் இது குடிநீராகவும் சமைப்பதற்கும் பயன்படுகிறதாகச் சொன்னார்கள். ஆச்சரியமாக இருந்தது. ஆந்திர அரசும் அனுமதி அளித்துள்ளதாம். 

அந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை ஆனால் பின்புறம் உள்ள ராமகிரி மலையிலிருந்துதான் என்று சொன்னார்கள். இக்குளத்தில் மக்கள் எல்லோரும் குளிக்கவும் செய்கிறார்கள்.

நந்தி வாயிலிருந்து விழும் தண்ணீரைப் பிடித்துக் கொண்டிருந்தவர் நீரைச் சுவைத்துப் பார்க்கச் சொன்னதும் சுவைத்துப் பார்த்தால் மிகவும் சுவையாகவும் தணுப்பாகவும் இருந்தது.

முந்தைய பதிவில் புராணக் கதையில் ஒரு வரியை நினைவு வைத்துக் கொள்ளச் சொல்லியிருந்தேன். அது இதுதான்..கீழே

[காளிங்க மடு எனும் நீர்நிலை இருந்த இந்த இடம் அங்கு ஓடிய காரி ஆற்றின் கரையில் இக்கோயில் இருந்ததால் திருக்காரிக்கரை (‘காரிக்கரை உடைய நாயனார்என்று அங்குள்ள கல்வெட்டுகளிற் குறிப்புகள் உள்ளதாம்) - என்ற பெயரில் இருந்ததாகவும் வரலாற. (சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இத்தலத்தை வழிபட்டுச் சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது. நன்றி சைவம் தளம்) 

புராணக் கதையில் அனுமன் கோபத்தில் சிறு குன்றினை எடுத்து அந்தக் காளிங்க மடுவின் மீது போட்டு மறைத்தார் என்றும் கதை செல்வதால், அந்த ஆற்றின் ஒரு பகுதி இப்போது மலைகளுக்கு அடியில் நீரோட்டமாக இருக்குமோ அதுதான் அடி வழியாக இப்படிக் குளத்தில் வந்து விழுகிறதோ என்று எனக்குத் தோன்றியது.

புராணக் கதையை விடுங்கள் எவ்வளவோ வருடங்கள் ஆகிவிட்டதே! காலப்போக்கில் இப்படியான மாற்றங்கள் இயற்கைச் சீற்றங்களால் அந்த மடு/ஆறு பூமிக்கடியில் இருக்கலாமோ? என்பது என் ஊகம்.  எங்கிருந்து எப்படி வருகிறது என்று தெரியவில்லை என்று சொன்னதால்.....என் ஊகம்.

குளத்தின் கரையில் ஒரு சிவலிங்கம் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

இந்த நந்தி தீர்த்தத்தின் அருகில் பக்கவாட்டில் இடிந்து போன கோபுரத்துடன் ஒரு கோயில் இருக்கிறது. இதுதான் முதலில் இருந்த கோயிலாக இருக்குமோ என்றும் தோன்றியது. விஜயநகர அரசர் இதைச் செப்பனிட்டுக் ராஜகோபுரம் அமைக்கும் பணியில் தடை ஏற்பட்டிட அப்படியே விடப்பட்டு பின்னர் சிதைந்து இப்படி இருக்கிறதாம்.  கோயிலின் சன்னதி மூடியேதான் இருந்தது. 

எவ்வளவு அழகான தூண்கள் உடைய முன் பகுதி

அழகான முன்பகுதி தூண்களில் மிக அழகான சிற்பங்கள் இருந்ததும் தெரிகிறது ஆனால் இப்போது பாழடைந்து பராமரிப்பு இல்லாமல் இருப்பது வேதனை.

இதுதான் இப்போதைய பிரதான கோயிலுனுள் செல்லும் முகப்பு. உள்ளே நேரே காலபைரவர் சன்னதி.  முகப்பினை ஒட்டி பைக் இருக்கும் பகுதியில் இருக்கும் அந்த இடம் ஒரு பெரிய மண்டபம்.  கோயிலின் பின்னில் தெரியும் மலை ராமகிரி

கோயில் வளாகத்தினுள் இப்படி பூஜைக்கான பொருட்கள் விற்பனை. என் தங்கை வாங்கிக் கொண்டாள். 

அடுத்து கோயிலுக்குள் செல்வோம். கோயிலுனுள் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஆனால் பாருங்க ஏகப்பட்டபேர் இணையத்தில் கோயிலின் உள் படங்களையும், காணொளிகளையும் போட்டிருக்காங்க.

இறைவன்/இறைவிவாலீஸ்வரர்-மரகதாம்பிகை. (சுருட்டப்பள்ளியிலும் இறைவி மரகதாம்பிகை). ஈசனின் 5 முகங்களானஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம் மற்றும் அகோரம் என்று பிரதிபலிக்கும் 5 மிகப் பழமையான சிவன் கோயில்கள் கொசத்தலை ஆற்றின் (இது கோயிலில் இருந்து சற்று தூரத்தில் திருப்பதி சாலையில் குறுக்கிடும். பிச்சாட்டூரில்) கரையில் இருப்பவற்றுள் இது சிவனின் ஈசான முகத்தைப் பிரதிபலிக்கும் கோயில்.

சிவனும், மரகதாம்பிகையும் வீற்றிருக்கும் கோயில் என்றாலும் கோயிலின் பிரதான மூர்த்தி ஸ்ரீ கால பைரவர்சந்தான பிராப்தி பைரவர். இங்கு குழந்தை வரம் வேண்டிக் கொண்டு பிறந்ததும்  குழந்தையை பைரவருக்குக் கொடுத்து கல்லில் செய்த பைரவர்களை(நாய்களை) அளித்து, விலைக்கு வாங்குவது போல குழந்தையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு வேண்டுதலை நிறைவேற்றும் பழக்கம் உண்டாம்.

மற்ற சிவன் கோயில்களில் பைரவர் பிராகாரத்தில் இருப்பது போல் இல்லாமல் இங்கு, ஸ்ரீ கால பைரவர் ஒரு தனி சன்னதியில் இருக்கிறார், சிவனை தரிசனம் செய்வதற்கு முன் அவரை முதலில் தரிசிக்க வேண்டும். அப்படித்தான் செல்லவும் முடியும்.

நின்றகோலத்தில் காலபைரவர். அவருக்கு எதிரே அவருடைய  வாகனமான நாயின் உருவம் பெரிய அளவில் இருக்கிறது. சன்னதியின் முன் பைரவர் (சிவன் முன் நந்தீஸ்வரர், பெருமாள் முன் கருடன் இருப்பது போல்) சுற்றிலும் சின்ன அவிலும் பைரவர்கள்/நாய்கள்இருக்கின்றன. காலபைரவரை வணங்கி திருச்சுற்றில் பக்கவாட்டில் உள்ள வாயில் வழியே மூலவர் வாலீஸ்வரர் சந்நதியை அடையலாம்.

எனவே கோயில் உட்புறம் இரு பிரிவுகளாக இருக்கிறது.

இங்கு இன்றும், அனுமனின் வாலால் இழுக்கப்பட்ட சிவலிங்கம் வடக்கு நோக்கி சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த சிவலிங்கத்தின் மீது வாலின் அடையாளங்கள் உள்ளனவாம். அதனால்தான் இங்கு ஈசன் வாலீஸ்வரர் ஆனார்!

இக்கோயிலின் மற்றொரு தனிச்சிறப்புசிவன் எதிரில் நந்திஸ்வரர் தானே இருப்பார்? ஆனால் இக்கோயிலில் ஆஞ்சநேயர் சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்யும் வடிவில் ஈசனுக்கும், நந்தீஸ்வர்ருக்கும் இடையில் இருக்கிறார். இப்படிப்பட்ட சிவன் கோவில் வேறு எங்கும் காணப்படவில்லையாம்.

சுப்பிரமணியர் கோயில்

விநாயகப் பெருமானுக்கான சந்நிதியும் உள்ளது. விநாயகர் கோயிலுக்குப் பின்னால், மலை உச்சியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் படிகளுடன் கூடிய வழி உள்ளது. நாங்கள் செல்லவில்லை.

இங்குள்ள சிவலிங்கம் காசியிலிருந்து ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்டதால், இங்குள்ள ஸ்ரீ வாலீஸ்வரரை வழிபட்டால், காசி சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இங்கு நிறைய சோழ கல்வெட்டுகள் மற்றும் பல்லவர் பற்றிய குறிப்புகளும் உள்ளதாக அறிந்தோம். அனால் பார்க்க இயலவில்லை.  இந்த அழகிய கோவில் தற்போது ஆந்திர பிரதேசத்தின் தொல்லியல் துறையின் கீழ் உள்ளது.

பைரவர் கோயில் என்று சொல்லி அவரது வாகனத்தைப் போடாமல் போனால் பைரவர் என்னைக் கோபித்துக் கொள்ள மாட்டாரோ?!! கோயில் வளாகத்தில் நிறைய பைரவர்கள் இருந்தார்கள்

கோயில் தரிசின நேரம்

அடுத்து இன்னும் ஒரே ஒரு கோயில் – நாராயணவனம் - ஒரே நாளில் நான்கு கோயில்களைத் தரிசிக்கலாம் என்று சொன்ன இத்தொகுப்பில் அது மட்டும் இருக்கிறது. அதையும் தாமதிக்காமல் போட்டு விடுகிறேன். அடுத்து துளசியின் அக்கரைச் சீமை அழகு வரும். அவர் எழுதி ரொம்ப நாளாகிவிட்டதே! அதனால்தான் இப்பதிவையும் உடனே போட்டுவிட்டேன். அடுத்து நாராயணவனம் பதிவு விரைவில்!

முந்தைய பதிவைப் பார்த்த, வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. 


-------கீதா

28 கருத்துகள்:

  1. படங்கள் அழகாக உள்ளன. ஆஞ்சநேயர் இருப்பது அவர் கொண்டு வந்த சிவலிங்கம் என்பதால் இருக்கலாம். பிரதிஷ்டை ஆன லிங்கத்தை அவர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஞ்சநேயர் இருப்பது அவர் கொண்டு வந்த சிவலிங்கம் என்பதால் இருக்கலாம். பிரதிஷ்டை ஆன லிங்கத்தை அவர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.//

      ஆமாம் ஜெகே அண்ணா அதே காரணம்தான்.

      //படங்கள் அழகாக உள்ளன. //

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  2. அழகான படங்கள் தலவரலாறு நன்று.
    சிதிலமடைந்த கோயில்களை அரசுதான் பராமரித்தல் வேண்டும் என்ன செய்வது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிதிலமடைந்த கோயில்களை அரசுதான் பராமரித்தல் வேண்டும் என்ன செய்வது....//

      ஆமாம். இன்னொரு படம் போடவில்லை. போட்டிருந்தால் அந்தக் கற்கள் தற்போதைய கற்கள் என்று தெரியும். ஆனால் அதுவும் சிதைந்து இருக்கிறது. கோயில் படங்கள் தொகுப்பு காணொளியில் அது இடம் பெறும்.

      அழகான படங்கள் தலவரலாறு நன்று.//

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  3. புஷ்காரனி நவீனமாக இருக்கிறது!  உள்ளே செல்லும் வழியில் கோபுரங்களை இடித்து கற்களைத் திருடி விட்டார்கள் போல..   அரைகுறையாய் நம்ம அரசியவாதிகள் கட்டிய பஸ்ஸ்டான்ட் போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், இருக்கலாம் அங்கு நிறைய ஸ்லாப் போன்ற கற்கள் அந்த வெளிப்பக்க புஷ்கரணி பக்கத்தில் கிடந்தன. அது புதிய தற்போதைய கற்கள் போன்று இருந்தன. படம் இங்கு போடவில்லை. தொகுப்பில் வரும்.,

      அரைகுறையாய் நம்ம அரசியவாதிகள் கட்டிய பஸ்ஸ்டான்ட் போல இருக்கிறது!//

      ஹாஹாஹாஹா...முதலில் என்னடா இது கோயில் இப்படி உள்ளதே என்று தோன்றியது.

      இதில் உங்கள் கருத்து இப்படி வரலாம் என்று கொஞ்சமும் ஊகம் இல்லை கேட்டேளா!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. எல்லோரும் குளிக்கும் தண்ணீரை எப்படி குடிநீராக பயன்படுத்துவது!!!  வற்றாத நீர்வரத்து என்பது வியப்பு.  சில மர்மங்கள் சுவாரஸ்யமானவை - மர்மங்களாகவே இருக்கும்வரை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் குளிக்கும் தண்ணீரை எப்படி குடிநீராக பயன்படுத்துவது!!! //

      இது இது எதிர்பார்த்தேன்!!!!

      ஸ்ரீராம் நந்தி வாயிலிருந்து விழும் நீரைத்தான் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். குளத்தில் உள்ள நீர் அல்ல.

      என்றாலும் குளத்தில் சோப் எல்லாம் போட்டுக் குளிப்பது நீரை அசுத்தப்படுத்துமே என்று தோன்றியதுதான்.

      //வற்றாத நீர்வரத்து என்பது வியப்பு. சில மர்மங்கள் சுவாரஸ்யமானவை - மர்மங்களாகவே இருக்கும்வரை!//

      ஆமாம். அதான் என் யூகத்தைச் சொல்லியிருக்கிறேன் ஸ்ரீராம்.

      மிக்க நன்றி.

      கீதா

      நீக்கு
  5. பாழடைந்த கோவில் ஒரு சுவாரஸ்யம்.  உள்ளே புதையல் இருக்குமோ...   இறைவன் அங்குதான் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பாரோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாழடைந்த கோவில் ஒரு சுவாரஸ்யம். //

      ஆமாம் அதைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டதுதான். அதுவும் அழகான சிற்பங்கள்.

      உள்ளே புதையல் இருக்குமோ... //

      ஹாஹாஹா இதை யாராவது 'பெரியவங்க' வாசித்து ஆராய்ச்சி செய்து நோண்டிடப் போறாங்க!!!!! ஆனால் நல்ல காலம் அது ஆந்திராவில் இருக்கு.!!!

      இறைவன் அங்குதான் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பாரோ...//

      ஆமாம் ல...இதில் யாரும் வந்துகண்டுக்க மாட்டாங்க. நிம்மதியா இருப்பார்!!!
      நான் தான் அன்று கொஞ்சம் தொந்தரவு செய்தேன் என்று நினைக்கிறேன்!!! புகைப்படம் எடுத்து..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. படங்களும் பகிர்வும் அருமை. நந்தி தீர்த்தம் வியப்பினை அளிக்கிறது

    பதிலளிநீக்கு
  7. கோவில் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். சேகரிக்க ரொம்ப உழைத்திருப்பீர்கள். இந்த இடத்தில் நான் ஒரு வரியை சேர்க்காமல் விடுகிறேன். சேர்த்தால் எதிர்பார்த்தேன் என்று சொல்லி விடுவீர்கள்!

    ஸ்ரீராம்

    ஸ்ரீராம் உங்கள் கமென்ட் ஸ்பாமில் இருந்தது அதுஇங்கு பப்ளிஷ் ஆகாமல் இப்ப சேர்த்துவிட்டேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நிச்சயமாக ஊகிக்க முடியவில்லை!!! ஆனால் மேலே உள்ள ஒரு கருத்தில் எதிர்பார்த்தது வந்துவிட்டது!! அங்கு சொல்கிறேன்!!!! ஹாஹாஹா

      கொஞ்சம் தகவல்கள் கோயிலில் பெற்றவை. மற்றவை இணையத்தில். இரண்டும் கலந்து.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. நேரில் சென்றதால் கோயில்ல என்ன எல்லாம் இருக்கு என்று தெரிந்தது ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  8. ஒவ்வொரு பகுதியையும் படம் எடுத்து, விளக்கம் கொடுத்து அருமை அருமை...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை படங்கள் வழக்கம் போல தெளிவுடன் நன்றாக உள்ளது. கோவிலைப்பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். ஹனுமான் தன் வாலினால் இறைவனை கட்டி இழுத்தினால் ஏற்பட்ட காரணப் பெயர் பொருத்தமாக உள்ளது. நிறைய பழங்கால கோவில்கள் முக்கால்வாசி கற்கள் சிதிலமடைந்தும் செதுக்கிய சிற்பங்கள் பொலிவிழந்தும் இருக்கின்றன.பாராமரிப்பு நன்றாக இருந்தால் நல்லது.

    நந்தி தீர்த்தம் பார்த்துக் கொண்டேன். குடி நீர் என்றால் குளத்தில் இறங்கிதான் பிடித்துச் செல்ல வேண்டுமா? குளத்திலும் வடிகால் அமைப்பு இருந்தால் மக்கள் குளிக்கும் போது அசுத்தம் ஆகாமல் இருக்கும். அதற்கான வசதி உள்ளதா? நீர் நந்தியின் வாயிலிருந்து வற்றாத வந்து கொண்டேயிருக்கும் போது கண்டிப்பாக அதை வெளியேற்ற குழாய்கள் அமைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.இப்படி வற்றாது அந்த காளிங்க மடுவிலிருந்து நீர் வருவது ஒரு ஆச்சரியந்தான். புராண கதைகள் சில இப்படித்தான் நம்மை நம்ப வைத்து விடுகிறது . ஹனுமான் சிரஞ்சீவி இல்லையா? அவர்தான் எங்கும் இருந்து இப்படி ஆசிர்வதித்து வருகிறார்.

    கோவிலுக்குள் கோவிலாக மலை மீது சுப்பிரமணிய ஸ்வாமி இருக்குமிடம் இயற்கை வனப்புடன் அழகாக உள்ளது. குன்றிருக்கும் இடமெல்லாம் அவன் சொந்தமல்லவா?

    பைரவரை பார்த்துக் கொண்டேன். நன்றாக புகைப்படத்திற்கு போஸ் தந்துள்ளார்.

    முதலில் குறிப்பிட்ட விமான பயணமென்பது அடுத்து விரைவில் வரவிருக்கும் சகோதரர் துளசிதரன் அவர்களின் "அக்கரை சீமைக்கா?" காத்திருக்கிறோம். இன்றைய அழகான கோவில் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. குடி நீர் என்றால் குளத்தில் இறங்கிதான் பிடித்துச் செல்ல வேண்டுமா? //

    ஆமாம் அக்கா ஆனால் படிகள் இருக்கின்றன. நான் படிகளில் இறங்கித்தான் தண்ணீரில் நின்றுதான் நந்தியை அருகில் இருந்து புகைப்படம் எடுத்தேன்.

    // குளத்திலும் வடிகால் அமைப்பு இருந்தால் மக்கள் குளிக்கும் போது அசுத்தம் ஆகாமல் இருக்கும். அதற்கான வசதி உள்ளதா?//

    இருக்கிறதாகத்தான் சொன்னார்கள். நீச்சல் குளங்களில் இருப்பது போல். சுத்தமும் செய்வார்களாம், அதனால்தான் தண்ணீர் சுத்தமாகத்தான் இருந்தது.

    ஆனால் கோயில் வளாகத்திற்கு வெளியில் உள்ள குளம் புதியதாக இருந்தது அல்லது சீரமைக்கப்பட்டிருக்கிறது ஆனால் அதில் தண்ணீர் சுத்தமாக இல்லை குப்பையாக இருந்தது. படத்தில் தெரிகிறது இல்லையா? இருகுளங்கள் இருக்கு ஒன்று வெளியில். உள்ளே இருப்பதுதான் நந்தி தீர்த்தம்.

    //பைரவரை பார்த்துக் கொண்டேன். நன்றாக புகைப்படத்திற்கு போஸ் தந்துள்ளார்.//

    ஹாஹாஹா ஆமாம் அவங்க போஸ் கொடுப்பதில் பெரிய ஆட்கள்!!!

    //முதலில் குறிப்பிட்ட விமான பயணமென்பது அடுத்து விரைவில் வரவிருக்கும் சகோதரர் துளசிதரன் அவர்களின் "அக்கரை சீமைக்கா?" காத்திருக்கிறோம்.//

    ஆமாம் கமலாக்கா. அவர் எழுதிக் கொண்டேஏஏஏஏஏஏஏஏ இருக்கிறார். ஹாஹாஹா ஆனால் நான் அவரை விட ஆமை. அடுத்து சட்டுபுட்டுனு நாராயணவனம் பற்றி போட வேண்டும் நான்.

    மிக்க நன்றி கமலாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. படங்கள் எல்லாம் அருமை. நந்தி தீர்த்தம் பார்க்க அழகாய் இருக்கிறது.
    கோயில் தல வரலாறு நன்றாக இருக்கிறது.
    வெளி பக்கம் இருக்கும் குளமும் அழகு. கோவில் வளாகத்தில் பைரவர் வாகனம் நிறைய இருந்ததா? அல்லது பைரவர் நிறைய இருந்தார்களா?
    சில கோயில்களில் இரண்டு மூன்று பைரவர் சிலைகள் இருக்கும்.மலை மேல் இருக்கும் முருகன் கோவிலுக்கு படிகள் நிறைய இருக்கிறதா?

    அடுத்து நாராயணவனம் பார்க்க வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் வளாகத்தில் பைரவர் வாகனம் நிறைய இருந்ததா? அல்லது பைரவர் நிறைய இருந்தார்களா?//

      ஹாஹாஹா கோமதிக்கா....பைரவ வாகனர்கள் தான் கோமதிக்கா....அது நான் அவர்களையும் பைரவர் பைரவர் என்று சொல்லிப் பழகியதால் பைரவர் என்று எழுதினேன்...

      ஆமாம் இரண்டுமூன்று பைரவ சிலைகள் இருக்கும். இக்கோயிலிலும் பைரவ சன்னதியின் திருச்சுற்றில் சுவற்றில் பலவித பைரவர்கள் இருந்தார்கள். பெயர்கள் எனக்குச் சொல்லத் தெரியவில்லை அதனால் சொல்லாமல் விட்டேன்.

      மலைமேல் இருக்கும் முருகன் கோயிலுக்குப் படிகள் கண்டிப்பாக 100 - 120 இருக்கும் ஆனால் செங்குத்தாக இல்லை. எனவே ஏறுவது கஷ்டமாக இருக்காது. எங்களுக்கு நேரமும் இல்லை. நாங்கள் மூன்றுபேர் பெண்கள் மட்டும் என்பதால் தனியாகச் செல்லவும் வேண்டாம் என்றும் அன்று கூட்டமும் இல்லை. மக்கள் விசேஷ தினங்களில்தான் செல்வர் என்றும் தெரிகிறது. அதிகம் கோயில் பற்றி தெரியவில்லை கோமதிக்கா.

      நாங்கள் சென்றது என் தங்கையின் பரிகார வேண்டுதல் என்பதால் அதை மட்டும் முடித்துக் கொண்டு வந்தோம். அதன் பின் சென்ற போதும் கூட கோயில் மூடிவிட்டார்கள் எனவே செல்ல முடியவில்லை.

      ஆமாம் கோமதிக்கா அடுத்து நாராயணவனம் இன்னும் இரு நாளில். பதிவு எழுதவில்லை இன்னும். பணிகள் பல ...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  12. நல்ல தல வரலாறு. அறியாத கோயில். அரிய தகவல்கள். குளம், அதன் புராணம் எல்லாமும் சிறப்பு. இந்தக் கோயில் எல்லாம் போனதே இல்லை சொல்லப் போனால் ஆந்திரா, கேரளா அதிகம் சுற்றாத மாநிலம். ஆந்திராவில் திருமலை/திருப்பதி, அஹோபிலம் தவிர்த்து எங்கும் போனதில்லை. கேரளாவில் குருவாயூர், திருவனந்தபுரம் தவிர்த்து எங்கும் போனதில்லை. இந்தப் பக்கம் எல்லாம் போகும் வாய்ப்புக் கிடைப்பதும் அரிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா. இக்கோயில்கள் சின்ன கோயில்கள் ஆனால் அதிகம் அப்போதெல்லாம் தெரியாத கோயில்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் போடும் அளவு பிராபல்யம்.

      நான் போன போதெல்லாம் வெளியில் மட்டுமே புகைப்படங்கள் எடுக்க அனுமதி அளித்தார்கள். இப்போது பலரும் காணொளியே போடுகிறார்கள்.

      ஒரு வேளை வாய்ப்பு கிடைத்தால் போய்வாருங்கள் கீதாக்கா.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  13. சுருட்டப்பள்ளி போயிருக்கேன். மதுரை தவிர்த்து சுருட்டப்பள்ளி கோயிலில் தான் பிரதோஷ பூஜையும் பார்த்தேன். அப்போ அம்பத்தூரில் இருந்தோம். இங்கே போய்விட்டு வந்து எழுதினது தான் பக்திச் சுற்றுலாக்களில் என் முதல் பதிவு என நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா சுருட்டப்பள்ளி போயிருக்கீங்களா அப்படினா இந்தக் கோயில் அங்கிருந்து ரொம்பக் கிட்ட. அரை மணிநேரப் பயணம்தான்.

      ஓ நீங்களும் சுருட்டப்பள்ளி பத்தி எழுதியிருக்கீங்களா! அட! அப்போதுகோயில் எப்படி இருந்ததோ?

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  14. ஆழமாகவும் அகலமாகவும் விவரிக்கிறீர்கள். படங்கள் மூலமும் பேசுகிறீர்கள். நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார் உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும்!

      எழுத்தாளர் உங்களிடமிருந்து இப்படிக் கிடைப்பது மகிழ்ச்சி!

      கீதா

      நீக்கு
  15. விரிவான தகவல்கள். படங்களும் சிறப்பு. தலம் குறித்த தகவல்களை உங்கள் பாணியில் சொல்லி இருப்பது நன்று. தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.

    பதிலளிநீக்கு
  16. மிக்க நன்றி வெங்கட்ஜி. எல்லாப்பதிவுகளும் வாசித்துக் கருத்திட்டமைக்கு. உங்கள் பதிவுகள் இல்லாதது வெறுமையாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு