சனி, 30 ஜூலை, 2022

அக்கரைச் சீமை அழகினிலே - மனம் மயக்கும் மலேசியா - பகுதி - 4

பகுதி 1பகுதி 2 பகுதி 3

மறுநாள் – 02-07-22 அன்று சுவாரசியமான பகுதிகளுக்குச் சென்றோம், அதை அடுத்த பகுதியில் சொல்கிறேன், என்று சொல்லி முடித்திருந்தேன். அதன் பின், வலைத்தளத்தின் விடுமுறை ஒருவாரம். அதன்  பின், போட வேண்டிய படங்கள் காணொளிகள், அவற்றை இணைத்தல், காணொளிகள் சிலவற்றில் குரல் பதித்தல் என்று நாங்கள் கலந்துரையாடி முடிக்க தாமதமாகிவிட்டது. இப்பகுதி வெளிவர. இதோ நான்காவது பகுதி. 


அடுத்த நாள் (02-02-2022) காலை Pacific Express-பசிஃபிக் எக்ஸ்ப்ரெஸ் ஹோட்டல் உணவகத்தில் காலை உணவு - பழங்கள், நூடுல்ஸ், ரொட்டியும் வெண்ணையும், சாதம், சப்பாத்தி போன்ற ஏதோ ஒரு பதார்த்தம், கட்லெட் போன்ற சில பதார்த்தங்கள். கூடவே தேநீரும், காபியும், பழரசமும். நாமே தேவையான அளவு பால் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலந்து எடுத்துக் கொள்ளலாம். 

காலைச் சிற்றுண்டியை முடித்த பின் சந்தோஷ் எங்களுக்கான பேருந்தில் ஏற, கோலாலம்பூரிலிருந்து ஏறத்தாழ 58 கிமீ தூரத்தில் உள்ள Genting Highlands - கெந்திங் மலை - இது ஒரு மலைவாசஸ்தலம் - நோக்கி வண்டி விரைந்தது. மலைப்பாதை என்றாலும் எளிதில் பழுதடையாதவிதம் உருவாக்கப்பட்ட அருமையான அகலமான சாலைகள்.
கெந்திங் மலை - Genting Highlands  எழுத்துகள் ஆங்கிலத்தில் இருக்கிறது
Genting Highlands  Resort பகுதி

வருடங்களுக்கு முன்பு Pahang – பஹாங்க் – மாநிலத்தில் லிம் கோஹ் டோங்க் – Lim Goh Tong – என்பவரால் உருவாக்கப்பட்டதுதான் மேலே சொல்லப்பட்ட Genting Highlands - Resort World Genting. மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகவும் உள்ளது. ஏராளமான ஹோட்டல்களும், Casino - சூதாட்ட விடுதிகளும், Amusement Parks – பொழுது போக்குப் பூங்காக்களும் (கெந்திங் குழுமத்திற்குச் சொந்தமானது) உள்ளிட்ட இந்த இடம் Mount Ulu Kali எனும் மலை உச்சியில் 12,000 ஏக்கரில் விரிந்து கிடக்கிறது. 

அதன் பின் கெந்திங் மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்ல3.38 கிமீ நீளமுள்ள Awana Skyway - Cable car – அவானா ஸ்கை வே – தொங்கூர்திச் சேவையும்/கேபிள் கார் -  நிறுவப்பட்டது. உலகிலேயே மிகவும் வேகமாகச் செல்லும் இந்தத் தொங்கூர்திச் சேவையில் பல தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. 
ஸ்கைவே கேபிள்கார்/தொங்கூர்திக்கான சீட்டு எடுக்கும் இடம். எங்களுக்கு பேக்கேஜில் உட்பட்டது என்பதால் தனியாக எடுக்க வேண்டியிருக்கவில்லை
தொங்கூர்தி/கேபிள் காரில் ஏறும் இடம்

தொங்கூர்தி/கேபிள் கார் 

தனது 19 வது வயதில் சைனாவிலிருந்து வந்து இவ்வளவு பெரிய சாதனை செய்த Lim Goh Tong இப்போது உயிருடன் இல்லை. அதனால் அவரது பிள்ளைகள் இப்போது மலேஷியாவில் உள்ள செல்வந்தர்களில் 9 வது இடத்தை வகிக்கிறார்கள். அப்படி மலேஷியா வந்தாரை வாழ வைத்துத் தானும் உலகில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

Genting Highlands கேபிள் காரில் மேலே செல்லும் போது எடுத்த வீடியொவிலிருந்து பிரித்து எடுத்த படங்கள் 


Awana Skyway தொங்கூர்திப் (கேபிள் காரிலான) பயணம் பிரமிப்பூட்டும் ஒன்று. தொங்கூர்தியிலிருந்து/கேபிள் காரிலிருந்து கீழே வளைந்து, நெளிந்து செல்லும் சாலைகளும் அவற்றில் ஊர்ந்து செல்லும் வாகனங்களும், மலை உச்சியில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களும் காண்போரை அதிசய உலகிற்குக் கொண்டு செல்லும். கேபிள் கார் மற்றும் ஹைலேன்ட் காட்சிகளை காணொளி எடுத்திருக்கிறேன்.  கீழே காணலாம்.


தொங்கூர்தியில்/கேபிள் காரில் கெந்திங் மலை உச்சிக்குச் செல்லும் காணொளி

7351 அறைகள் உள்ள World Hotel-ன்  Lobby – முகப்பு அறையைக் கொஞ்சம் சுற்றிப் பார்த்தோம்.  

7351 அறைகள் உள்ள Resorts World Genting ன்  Lobby
Lobby - முகப்புப் பகுதி

கீழேயும் மேலேயும் சென்ற வண்ணம், வண்ணங்கள் மாறிக் கொண்டே ஒளிரும் பலூன்கள் காட்சி - LCD DISPLAY - எல் சி டி காட்சி

இதில் வலது புறம் இருக்கும் பூங்கா போன்ற திரை அமைப்பில்  பறவைகள் வண்ணத்துப் பூச்சிகள், கார்ட்டூனில் வருவது போன்று பறந்து கொண்டே இருக்கும். எல்லாமே எல் சி டி காட்சிகள்.  
இதன் காணொளி இதோ கீழே

https://youtu.be/Wpoh6OusfuU
எல் சி டி காட்சி

அதன் பின் சூதாட்ட விடுதியின் உள்ளேயும் சென்றோம். சூதாட்ட விடுதியில் ஒளிப்படக் கருவி (Camera) அனுமதிக்கப்படாததால் அதன் காணொளிகள், படங்கள் எடுக்க முடியவில்லை. சூதாட்ட விடுதியில் பலவிதமான சூதாட்டங்கள். அங்கு எல்லா வயதிலும் உள்ளவர்களின் ஆவேசத்தைப் பார்க்க முடிந்தது. எல்லோரது வாயிலும் சிகரெட்டும், சுருட்டும், பைப்பும், போதாததற்குப் பல இடங்களிலிருந்து புகை வெளியேற்றப்பட்டுக் கொண்டும் இருந்தது. எனவே அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நாங்கள் ஐவரும் வெளியேறிவிட்டோம்.

பொழுது போக்குப் பூங்காக்களில் இப்போதும் வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் அங்கு போக இயலவில்லை. கேபிள் காரிலிருந்து அதன் பல பாகங்களையும் காணவும் செய்ததால் அது போதும் என்று முடிவும் செய்தோம். நான்காம் மாடியில்தான் கேபிள் கார் நிலையம். கீழே உள்ள ஒவ்வொரு மாடியிலும் எல்லாவித வியாபார நிறுவனங்களும் உண்டு என்றாலும் விலை அதிகம்தான்.

கேபிள் காரில் கீழே இறங்கும் போது

2 மணியளவில் Genting Highlands ற்கு விடை சொல்லி கேபிள் காரில் எங்கள் பேருந்து காத்திருந்த அடித்தள நிலையத்திற்குப் பயணமானோம். திரும்பும் போது நிதானமாகக் காட்சிகளைக் கண்டு ரசித்தோம்.

கேபிள் காரில் கீழே செல்லும் போது எடுத்த காணொளி 

எங்களைச் சுமந்த பேருந்து அடுத்து பத்து மலை குகை (Batu Caves) அருகே உள்ள ஒரு ஜப்பான் கடிகாரத் தொழிற்சாலையில் நின்றது. சிலர் அங்கு பொருட்கள் வாங்கினார்கள்.

ஜப்பான் கடிகாரத் தொழிற்சாலையின் முன்பிருந்து பத்து மலை குகை தூரத்துக் காட்சி

அரை மணி நேரத்திற்குப் பின் பத்து மலை குகையின் (Batu Caves) சிங்கார வேலன் எங்களை வரவேற்றார். இது முருகப் பெருமானின் பத்தாம் மலை. அறுபடை வீடுகள் தமிழகத்திலும், நான்கு மலேஷியாவிலும் உள்ளது. மலேஷியாவிலுள்ள மற்ற மூன்று கோயில்கள் கல்லுமலை, தண்ணீர் மலை, சன்னாசி மலை என்பதாகும். (Kallumalai, Thanneer malai and Sannasi malai)

(Batu Caves) பத்து மலை குகை

பல வண்ணத்தில் படிக்கட்டுகள் தெரிகின்றதா

272 படிக்கட்டுகள் ஏறி 40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்தச் சுண்ணாம்புக்கல் குகைக்குள் சென்றால் அங்கு முருகன், வள்ளியுடன் அருளாசி புரிவதைக் காணலாம்.  கோவிலுக்குள் மேலே ஆகாயம் தெரியும்படியாக இருக்கும் அந்தக் காட்சி வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. காணொளி கீழே.

ஏறிய பின் (Batu Caves) பத்து மலை குகை உள்ளில்
https://youtu.be/14o1GPSGzBY
பத்து மலை குகை - Batu Caves

1890-ல் மலேஷியாவில் வாழ்ந்த வியாபாரி தம்புசாமிப் பிள்ளைதான், அங்கு குகையில் வேல் வடிவ வாயில் கண்டதால் இந்தக் கோயிலை நிறுவியவர். 2006-ல் 140 அடி உயரமுள்ள முருகப் பெருமானின் உருவச் சிலை நிறுவப்பட்டது.


மலையிறங்கி வந்த நாங்கள் கீழே உள்ள கோயில்களில் சுந்தரேசரையும் மீனாட்சி அம்மனையும் விநாயகப் பெருமானையும் தரிசித்து, அருகிலிருந்த, தமிழர் ஒருவர் நடத்தும் உணவகத்தில் இட்லியும், தோசையும் உண்டுவிட்டு வண்டியேறினோம். அறையை அடைந்து, குளித்து கொஞ்சம் புத்துணர்வு பெற்ற பின் சிலர் மீண்டும் பொருட்கள் வாங்கப் போனார்கள். மறுநாள் காலை பொருட்கள் வாங்க என்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால், சோர்வில் நான் கட்டிலில் சாய்ந்தேன்.

மூன்று நாட்கள் தங்கியிருந்த அந்த பசிஃபிக் எக்ஸ்பிரெஸ் ஹோட்டல் அறைக்கு மறுநாள் காலை விடை சொல்ல வேண்டும். மலேஷியாவிலிருந்து இந்தியாவுக்கு நாங்கள் வரும் முன்னான கடைசி ராத்திரி அது. பார்த்த காட்சிகளை மனத்திரையில் கொண்டு வந்ததுடன், காண வாய்ப்பு தந்த இறைவனுக்கும் நன்றி கூறி உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

மறுநாள் (நான்காவது நாள்) - 03-07-22 அன்று மலேஷியாவிற்கு விடை சொல்லி, நம் ஊருக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்த நிகழ்வுகளோடு மலேஷியப் பயணம் அடுத்த பதிவில் நிறைவுறுகிறது.

வாசிப்பவர்கள், கருத்து சொல்பவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


-----துளசிதரன்



24 கருத்துகள்:

  1. எளிதில் பழுதடையா வண்ணம் உருவாக்கப்பட்ட சாலைகள்...  ஹ்ம்ம்...   இங்கும் போடுகிறார்களே...   சென்னைச் சாலைகளை வந்து பாருங்கள் ஜி...   ரொம்ப மோசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைச் சாலைகள் பற்றி அங்கு வந்த போதெல்லாம் கண்டதுண்டே. இங்கும் உண்டுதான். தற்போது போடப்படும் நாலு வழிச் சாலைகள், பெரிய சாலைகள் நன்றாக இருந்தாலும் அதுவும் போக்குவரத்து நெரிசல்கள் கூடுதலாக இருக்கிறது இங்கு, மற்றும் சாலைப்பராமரிப்பு தேவை.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  2. தொங்கூர்திக் பயணம்!  நல்ல மொழிபெயர்ப்பு.  அதிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் அழகாய் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொங்கூர்தி - ஆம். கீதாதான் அதைச் சொன்னார். அவர் மொழிபெயர்ப்பு வேலைகள் சில செய்கிறாரே.

      நானும் அதை சரி பார்த்துக் கொண்டேன். மலேசியா பற்றி எழுதுவதால் நிச்சயமாகத் தமிழில் அது பற்றி இருக்கும் என்று கூகுளில் பார்த்த போது Genting Highlands தமிழில் கெந்திங் மலை என்றும் அதைப் பற்றிய விக்கி தகவலில் தொங்கூர்தி என்றும் இருந்தது.

      காட்சிகளை ரசித்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  3. நிறைய காணொளிகள் இருக்கின்றன.  ஒவ்வொன்றாய் பார்க்க வேண்டும்.  பின்னர் மொபைலில்தான் பார்க்க வேண்டும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவாகப் பாருங்கள். இணையத்தில் இருக்குமே.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  4. துளசி அனுப்பிய வீடியோக்களில் சிலவற்றை கட் செய்து சேர்த்து பின் அதில் குரல் பதிவு செய்ததில் இங்கு முதல் வீடியோ மலைக்கு ஏறிச் செல்லும் வீடியோ மட்டும் மட்டும் குரல் பதிவை சேர்த்த பின் பாதிக்கு மேல் வீடியோ வேலை செய்யவில்லை. அதை சரி செய்துவிடுகிறேன்...சரி செய்து விட்டு அதன் சுட்டியை இணைக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க ப்ளீஸ்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் காணொளியை சரி செய்து புதிய சுட்டியையும் இணைத்துவிட்டேன். இனி சரியாக இருக்கும்.

      கீதா

      நீக்கு
  5. காணொளிகள் அருமை... குரல் இணைப்பு பிரமாதம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி, ரசித்ததற்கும் கருத்திற்கும்.

      துளசிதரன்

      நீக்கு
  6. காணொளிகள் எல்லாம் கண்டேன் சிறப்பாக வர்ணனை செய்து இருக்கிறீர்கள்.

    புகைப்படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி, காணொளிகள் கண்டு ரசித்ததற்கும், கருத்திற்கும்.

      துளசிதரன்

      நீக்கு
  7. படங்களும், காணொளிகளும் மிக அருமையாக இருக்கிறது.
    உங்கள் குரலும் நன்றாக இருக்கிறது.
    முருகன் கோவில் காணொளி அருமை.
    ஒளிரும் பலூன் காட்சி அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்துக் கருத்து சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு உங்கள் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  8. வார்த்தைகளால் விவரிப்பதைக் காட்டிலும் படங்களால் அழகுற விவரித்து உள்ளீர்கள். படங்களும் காணொளியும் சிறப்பாக உள்ளன. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பவர்கள், சுற்றுலா பற்றிய பதிவுகளில் ஊரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள விருப்பபட்டாலும் அவ்வூரின் காட்சிகளைக் காணவே அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால்தான்.

      மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் ஐயா, ரசித்ததற்கும், கருத்திற்கும்.

      துளசிதரன்

      நீக்கு
  9. எது எப்படியோ, மலேசியா செல்லும் ஆர்வத்தை தங்களின் பதிவுகள் வாயிலாக மனதில் ஆழமாக விதைத்துவிட்டீர்கள்!!!... வருங்காலங்களில் மலேசியா செல்லும் வாய்ப்பு கிடைத்தால்,.. மலேசியா பற்றிய தங்களின் ஐந்து பதிவுகளும் ஐயமில்லாமல் மனத்திரையில் வந்துபோகும் என்பது மட்டும் உண்மை... நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் நாஞ்சில் சிவா.

      //எது எப்படியோ, மலேசியா செல்லும் ஆர்வத்தை தங்களின் பதிவுகள் வாயிலாக மனதில் ஆழமாக விதைத்துவிட்டீர்கள்!!!.//

      என் பதிவுகள் அந்த ஆர்வத்தை உங்களுக்குத் தந்திருப்பது மிக்க மகிழ்ச்சிய்.

      //மலேசியா பற்றிய தங்களின் ஐந்து பதிவுகளும் ஐயமில்லாமல் மனத்திரையில் வந்துபோகும் என்பது மட்டும் உண்மை... நன்றி!!!//

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா, ரசித்ததற்கும் கருத்திற்கும்

      துளசிதரன்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களின் தொகுப்பும், பதிவின் அழகும் உங்களுடனேயே எங்களையும் மலேஷியாவை சுற்றிப் பார்க்க வைக்கிறது. படங்கள், காணொளிகள் அனைத்தும் அற்புதமாக உள்ளது. அந்த ஊரின், ஒவ்வொரு இடங்களின் பிரம்மாண்டத்தை காணொளிகள் மூலமாக கண்டு ரசித்தேன். பத்து மலை முருகன் கோவில் நன்றாக உள்ளது. ஒவ்வொன்றையும் ரசித்து எழுதியுள்ளீர்கள். விரிவான ரசனையான பதிவுக்கு பாராட்டுக்கள். அடுத்தப் பதிவையும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நான் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளேன். நேற்று பதிவு வெளிவந்த உடனே வர இயலவில்லை மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு அருமை. படங்களின் தொகுப்பும், பதிவின் அழகும் உங்களுடனேயே எங்களையும் மலேஷியாவை சுற்றிப் பார்க்க வைக்கிறது. படங்கள், காணொளிகள் அனைத்தும் அற்புதமாக உள்ளது. அந்த ஊரின், ஒவ்வொரு இடங்களின் பிரம்மாண்டத்தை காணொளிகள் மூலமாக கண்டு ரசித்தேன்.//

      மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். எல்லோரும் படங்கள் காணொளிகளை விரும்புவார்கள் என்பதால்தான் கூடியவரை பகிர்ந்தேன்.

      ஒவ்வொன்றையும் ரசித்து எழுதியுள்ளீர்கள். விரிவான ரசனையான பதிவுக்கு பாராட்டுக்கள். அடுத்தப் பதிவையும் தொடர்கிறேன். //

      மிக்க நன்றி சகோதரி. நீங்களும் ரசித்ததற்கும் உங்களின் விரிவான கருத்திற்கும்.

      பரவாயில்லை சகோதரி.தாமதமாகப் பார்த்தாலும்...உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது பார்க்கலாமே. இணையத்தில்தானே இருக்கிறது. நானும் பல பதிவுகளுக்குச் செல்ல முடியாமல் மிகவும் தாமதமாகத்தான் வாசிக்கிறேன்.

      மிக்க நன்றி.

      துளசிதரன்

      நீக்கு
  11. நிறைய தகவல்கள், படங்கள், காணொளியோடுகூடிய பதிவு. உபயோகமாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத்தமிழன் உங்களுக்கும் உபயோகமாக இருந்ததை அறிந்து மகிழ்ச்சி.

      துளசிதரன்

      நீக்கு
  12. காணொளி எதுவுமே வரவில்லை. அதோடு இதற்கு முந்தைய பதிவுகளையும் படிக்கணும். படித்தவரையிலும் இங்கு உங்கள் சுற்றுலா சிறப்பாக அமைந்திருப்பது புரிந்தது. நல்ல விபரமான தகவல்கள். சாலைகள் சிறப்பாக இருப்பது அந்த நாட்டின் நிர்வாகத்திறமையைச் சுட்டிக்காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு வேலை செய்யவில்லை என்றால் காணொளிச் சுட்டி வழியாக ய்ட்யூப் சென்று பார்க்கலாம்.

      முந்தைய பதிவுகளைப் படித்துக் கருத்தும் இட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி சகோதரி.

      //சாலைகள் சிறப்பாக இருப்பது அந்த நாட்டின் நிர்வாகத்திறமையைச் சுட்டிக்காட்டுகிறது.//

      ஆமாம், அதை உறுதியாகச் சொல்லலாம்.

      மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம், பதிவுகள் அனைத்தும் வாசித்ததற்கும் ரசனையான கருத்திற்கும்.

      துளசிதரன்


      நீக்கு