காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். காதல், சாதி, மதம், இனம், மொழி பாராமல் உருவாகி ஆட் கொள்ளும் திறன் வாய்ந்தது. உண்மையான காதல் உயிரினும் மேலாகக் கருதப்படும் ஒன்று. காதலுக்காக உயிர் நீத்த எத்தனையோ காதலர்களை நம் வரலாறு இப்போதும் போற்றிப் பாடிக் கொண்டுதான் இருக்கிறது. காதல் மற்றும் கல்யாண ஆசை இளைஞர்களிடம் குறைந்து வருகிறது என்பதை அறிந்த ஜப்பான் அரசு, அதை நிலைநாட்ட எடுக்கும் தீவிரமான நடவடிக்கைகளிலிருந்து மனித இனத்திற்குக் காதல் எவ்வளவு இன்றிமையாதது என்பது தெளிவாக நம் ஒவ்வொருவருக்கும் புரிகிறது.
இருப்பினும் இப்போது நிகழும் பல நிகழ்வுகளைப் பார்க்கும் போது, இளைஞர்களிடையே தீவிரமாகப் பரவி வரும் போதைப் பழக்கம் காதலையே புரட்டிப் போட்டு அதன் மேல் சம்ஹாரத் தாண்டவமாடுகிறதோ என்ற ஐயம் பலமாகத்தான் செய்கிறது.
கடந்த வாரம் கேரளாவில் தொடுபுழ எனும் இடத்தில் உள்ள ஒரு விடுதியில் அக்ஷயா ஷாஜி (22) யூனுஸ் ரசாக் (25) எனும் இருகாதலர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பிடிபட்ட போது அவர்களிடமிருந்து எம்டிஎம்ஏ எனும் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
ரசாக், அதை சின்ன கண்ணாடிக் குடுவையில் சூடாக்கி அதிலிருந்து எழும் புகையை இழுக்க முயலும் போது பிடிக்கப்பட்டிருக்கிறார்.
அக்ஷயா கதறி அழுதபடி போலீசாருடன் நடக்கும் காட்சி நெட்டில் வைரலாகியிருக்கிறது
அவரது நடையும் கதறலும் நடிப்பு என்று பலரும் குற்றம் சாட்டினாலும், சிலர் எம்டிஎம்ஏ போன்ற போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் இயல்பு அதுதான் என்கிறார்கள். எலும்பும் தோலுமாக நடக்க முடியாமல் நடக்கும் அந்த அக்ஷயாவின் வாழ்க்கை சில மாதங்களுக்கு முன்பு வரை சீராகத்தான் சென்று கொண்டிருந்திருக்கிறது.
கொத்தமங்கலம் அருகே நெல்லிக்குழி இடநாடு எனும் இடத்தைச் சேர்ந்த அக்ஷயா ப்ளஸ் டு வில் நல்ல மதிப்பெண்களுடன் தேறி, எம் ஏ கல்லூரியில் இளம் கலை பட்டப்படிப்பில் சேர்ந்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்.
ஓவியம் வரைவதும், பாடுவதிலும் முதலிடம் பெற்று பல விருதுகள் பெற்ற நல்ல மாணவியாகத் திகழ்ந்தவர். பட்டப்படிக்குக்குப் பின் எர்ணாகுளத்தில் 6 மாத கால அக்கவுண்டிங்க் படிப்பில் சேர்ந்து ஏதேனும் ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும் என்ற ஆர்வத்தைக் கண்டதும், கூலி வேலை செய்யும் தந்தையும், சிறு கடை ஒன்றை நடத்தும் தாயும் அதற்குத் தடை சொல்லவில்லை.
இதனிடையே, எர்ணாகுளத்தில் இருக்கும் போது மொபைலில் தொடர்பு கொண்ட யூனுஸ் ரசாக்குடனான காதல், 4 மாதத்திற்கு மேல் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த தந்தை ஷாஜி அக்ஷயாவின்
மொபைலை எறிந்து உடைத்தார். காதலனுடன் தொடர்பு கொள்ள முடியாததால் அக்ஷயா பூதத்தான் கெட்டு எனுமிடத்திலுள்ள அணைக்கட்டின் மேலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயலவும் செய்திருக்கிறார்.
ஒரு ஆட்டோ ஓட்டுநர் உயிரைப் பணயம் வைத்து அவரைக் காப்பாற்றியிருக்கிறார்.
அதன் பின் அக்ஷயாவின் பெற்றோர் யூனுஸ் ரசாக்கின் வீட்டார்களைக் கண்டு திருமணம் பற்றிப் பேச, அவர்களுக்கு அந்தத் திருமணத்தில் சம்மதமில்லை என்று தெரியவந்ததும், அக்ஷயா, யூனுஸ் ரசாக்கை மறந்து வாழ்கிறேன் என்று உறுதி மொழி கூறியிருக்கிறார்.
அதன் பின் அருகிலிருந்த ஒரு துணிக்கடையில் விற்பனைப் பகுதில் வேலைக்குச் சென்றிருக்கிறார்,
அக்ஷயா.
இதனிடையே எப்போது என்று தெரியவில்லை, எம்டிஎம்ஏ எனும் போதை மருந்து அவர்கள் காதலுடன் வளர்ந்து, காதலையே விழுங்கி அதற்காக அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றாகத் தீர்மானித்திருக்கிறார்கள்.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வாயில் போட்டுக் கடிக்கும் ஒரு நீல நிற திரவம் தான் Crystal Methamphetamine.
எம்டிஎம்ஏ, பார்ட்டி ட்ரக் என்றெல்லாம் அழைப்படும் இந்தக் கொடிய போதை மருந்து நைஜீரியாவைச் சேர்ந்த போதைப் பொருள் மாஃபியைவைச் சேர்ந்தவர்கள், எம்டிஎம்ஏ வின் பல வகைகளை உணவு தயாரிக்கும் இடங்களில் தயாராக்கி தென்னகத்தின் பல பாகங்களுக்கு அனுப்புவதுண்டாம்.
ருசியோ, மணமோ இல்லாத இதை பழரசங்களில் கலந்து கொடுத்தால், குடிப்பவர்களுக்குக் குடிக்கும் போது தெரியாதாம். ஒருகிராம் எம்டிஎம்ஏ உள்ளே சென்றால் 12 முதல் 16 மணி நேரம் போதை உச்சத்தில் இருக்குமாம். ஒரு முறை பயன்படுத்தியவர்கள் இதன் அடிமையாகிவிட வாய்ப்பும் அதிகமாம். ஒரு முறை பயன்படுத்திவிட்டால் இதை இடையில் விடவே முடியாது, அப்படி முயன்றால் மனநிலை தவறுதல், கொலை முயற்சி, தற்கொலை முயற்சி இப்படி ஏதேனும் நிகழலாமாம்.
இதைப் பயன்படுத்துபவர்களது பற்கள் ஒரே வருடத்தில் சேதப்படும். இதயமும், சிறுநீரகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு
5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் மரணம் உறுதி. இதைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையோர் இடையில் யாரையேனும் கொலை செய்து கைதாவது, தற்கொலை செய்து கொள்ளல் போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றனவாம்.
இப்படி, எப்போதோ யாராலோ இரையாக்கப்பட்ட யூனுஸ் ரசாக் விரித்த வலையில் சிக்கிய அக்ஷயா இப்போது போலீசாரால் கைது செயப்பட்டிருக்கிறார். போலீசாருக்குக் கிடைத்த விவரப்படி, ஒரு பெண், கல்லூரி வளாகத்தில் போதைப் பொருள் விற்கும் நோக்குடன் சுற்றுவதாகச் செய்தி கிடைக்க, சில நாட்களாக அக்ஷயாவைக் கண்காணித்தார்களாம்.
விடுதிக்கு வந்த பின் தான் அக்ஷயாவுடன் யூனுஸ் எனும் இளைஞனுக்கும் இதில் பங்கிருப்பது தெரிந்ததாம். இவர்களைப் போல் நாடெங்கும் போதைப்பழக்கத்திற்கு அடிமையான பல ஜோடிகள் போதைப் பொருட்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களை வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
இது தெரியவரும் பொது மக்கள் உடனே இதுபற்றி விவரங்களைப் போலீசாருக்குத் தெரியப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம் என்று அறிவித்தும் இருக்கிறார்கள்.
இதனிடையே அக்ஷயாவின் தொடர்பைப் பற்றியும், போதைப் பழக்கத்தைப் பற்றியும் அறிந்த பெற்றோர், தற்கொலை செய்துகொள்ளவும் தீர்மானம் எடுத்திருந்தார்களாம். அக்ஷயாவின் தங்கையை நினைத்து எப்படியோ அதிலிருந்து பின் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.
ஆம்!
இது ஒருவர் செய்த தவறு. அதற்கு மொத்தக் குடும்பமும் பலியாக வேண்டிய அவசியம் இல்லைதானே?
போதை மருந்து பயன்படுத்துபவர்களுக்கு அது தேவை. அதற்குப் பணம் தேவை. பணத்திற்கு அதையே விற்று பணமாக்குவது என்ற முடிவை அவர்கள் சீக்கிரமாகவே எடுத்துவிடுவார்கள். இவர்கள்தான் விற்பனையாளர்கள். இப்படித்தான் இது போன்ற போதை மருந்து பயன்பாடு காட்டுத் தீயாய் நாடெங்கும் படர்கிறது.
வேண்டாம் என்பவர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே பழரசத்திலோ, ஐஸ்கிரீமிலோ,
மிட்டாய்களிலோ கலந்து கொடுத்து அவர்களை அடிமையாக்கி,
அவர்கள் வழியாகப் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
திருச்சூர் அருகே இது போல் ஒரு 17 வயதுப் பெண் போதைக்கு அடிமையாகி இடையிடையே காணாமல் போவதும், திரும்ப வீட்டுக்கு வருவதுமாக ஒரு செய்தி கடந்த மாதம் வந்திருந்தது. இது போன்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருக்கிறது. வாகன ஓட்டுநர்கள், பிற மாநிலத்திலிருந்து வந்து வேலை செய்பவர்கள், இப்படி நாம் தினமும் சந்திப்பவர்களிலும் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இவற்றை எல்லாம் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் அரசின் வேலை, போலீசாரின் வேலை என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. அரசியல் கட்சித் தொண்டர்கள், சாதி சங்கங்கள், நடிகர் ரசிகமன்றங்கள், மகளிர் அமைப்புகள், பெற்றோர் உள்ளிட்ட பலவித கூட்டமைப்புகளும் மற்றும் ஒவ்வொருவரும் தனியாகவும், குழுக்களாகவும் இதற்கு எதிரான விழிப்புணர்வுக்காகவும்,
இவற்றை ஒழிக்கவும் போராட வேண்டும். குறைந்தபட்சம் நம் கண் படும் இடங்களிலேனும் போதைப் பொருட்கள் பயன்பாடு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
காதலுக்குக் கண் வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட வேண்டும். அந்தக் கண் சாதி, மதம், இனம், மொழி இவை எதையும் பார்க்காவிட்டாலும் குறைந்தபட்சம், தான் காதலிப்பவர் போதை பழக்கத்திற்கு அடிமையில்லை என்பதை மட்டுமேனும் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு ஒரு போதும் போதைப் பழக்கத்தை மேற்கொள்ள மாட்டேன் என்று காதலிப்பவரிடம் உறுதியும் வாங்கிக் கொண்டுதான் காதலைத் தொடர்வேன் என்று காதலிப்பவர்கள் உறுதியாகவும் இருக்க வேண்டும்.
காதலர்களுக்கு மட்டுமல்ல, நாமும் வெளியில் உணவோ, பழரசமோ, ஐஸ்க்ரீமோ கூடியவரை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அல்லது கவனமாகத் தரமான உணவகங்களில் சாப்பிடுவது நல்லது. பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும். உலகம், குறிப்பாக இளைஞர் உலகம் மிகவும் மோசமாகப் பாதுகாப்பற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
------துளசிதரன்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஜப்பான் அரசு அப்படி முயற்சி எடுத்திருக்கிறதா? புதிய தகவல். வித்தியாசமான அரசு!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்ஜி. அப்படித்தான் இடையில் ஒரு செய்தி வாசித்தேன். அரசு சர்வே எல்லாம் எடுக்கிறதாம். அங்கும் கடந்த வருடங்களில் பெண்களும் நன்றாகச் சம்பாதிக்கத் தொடங்கியதால் கொஞ்சம் குறைவான சம்பளம் வாங்கும் ஆண்களை மணம் முடிக்கத் தயங்குகிறார்களாம். மணம் ஆகாத பெண்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்களாம். ஆண்களும் தான். முன்பெல்லாம் அதாவது ஜப்பானின் பபிள் எக்கானமி எனும் பொருளாதார காலத்தில் கல்யாணத்தில் காதல் முக்கியமாக இருந்தது என்றும் இப்போது இருக்கும் சூழலில் இல்லை என்றும் எனவே கல்யாணம் குடும்பம் என்ற கலாச்சாரத்தைப் பற்றிய ஆய்வுச் செய்தி. ஆமாம் வித்தியாசமான அரசு.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
திரைப்படங்களில் எதெதையெல்லாம் அகட்டித்த தொலைக்கிறார்கள். 5, 10 வருடங்களில் மரணம் உறுதி என்றால் கமல் கஷ்டப்பட்டு விஜய் சேதுபதியை அப்படி கொன்றிருக்க வேண்டாம்!
பதிலளிநீக்குஅது சரி... அவனால் அதற்குள் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்களே.. பேசாமல் குரங்கு பொம்மை பட க்ளைமாக்ஸ்தான் சரி
நீக்குஹாஹாஹா நெல்லை இதைத்தானே விக்ரம் பட விமர்சனத்துல சொல்லியிருந்தேன்...கல்யாணத்துல பார்த்தும் மூலக்காரணத்தைக் கொல்லாம ஏதோ ஒரு அரசியல்வாதிய பிடிச்சுட்டுப் போய் கொல்வாங்களாம்..க்ளைமாக்ஸ்லதான் கொல்வாங்க அதுக்குள்ள எத்தனையோபேர் பலியாயிருப்பாங்க....கதை திரைக்கதை எழுதுபவர்கள் நல்லா..காதுல பூ சுத்துறாங்க நல்லா....இதுல 50 வது நாள் வெற்றின்னு வேற ...ஹூம்...
நீக்குஅதென்ன குரங்கு பொம்மை படம்? புதுசு புதுசா சொல்றீங்களே!!!
கீதா
ஸ்ரீராம்ஜி, நெல்லைத்தமிழன் சொல்வது போல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அது படத்தில் மேஜர் ஃப்ளா என்றே தோன்றியது.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
தியூட்டும் பதிவு என்றும் சொல்லலாம். விழிப்புணர்வுப் பதிவு என்றும் சொல்லலாம். துரை அண்ணா பதிவைப் படித்து விட்டு இந்தப் பதிவைப் படித்தால் வெளியில் எதுவும் வாங்கிச் சாப்பிடவே பயமாகத்தான் இருக்கும் போல..
பதிலளிநீக்குமுதல் வரி பீதி. முதல் எழுத்து விட்டுப்போச்!
நீக்குநிஜமாகவே படத்தில் பார்த்த போது கூட எதுவும் தோன்றவில்லை ஆனால் அதே இப்போது இங்கு பரவி வருகிறது எனும் போது பயம் தோன்றுகிறதுதான்.
நீக்குஆமாம் நானும் துரை செல்வராஜு சார் அவர்களின் பதிவைப் பார்த்தேன். அது சமீப காலங்களாக உணவகங்களும் வியாபாரமும் பெருகியதால் இருந்துவருகிறது. இந்தப் போதைப் பொருள்தான் மிகவும் பயமுறுத்துகிறது.
துளசிதரன்
இனி ஜிகர்தண்டா சாப்பிடவும் யோசனையாக இருக்கு. பழரசம் போன்றவை சாப்பிடுவதில்லை, அவை ஆரோக்கியக்கேடு என்பதால் (கடைகளில் தயாரிப்பது). நெல்லை பழரசம் போன்றவற்றிர்கு அழுகிய பழங்கள்தாம்.
பதிலளிநீக்குமதுரை ஜிகர்தண்டாவை நினைவுபடுத்துகிறது. தற்போது வெளியில் எதுவும் சாப்பிடாமல் இருப்பதே மேல்.
நீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
ஏனோ எனக்கு ஜிகர்தண்டா மேல் காதலில்லை!
நீக்குஹஹாஹாஹா ஸ்ரீராம் நான் சாப்பிட்டிருக்கிறேன், ஓவரா தித்திப்பு என்பதால் நான் மீண்டும் அதன் பக்கம் போனதில்லை. இத்தனைக்கும் பல வருடங்களுக்கு முன்னரே. நான் இனிமையானவள்னு தெரியும் முன்னரே!!!! மதுரையில்தான். அதுக்கப்புறம் வீட்டில் திகட்டாத தித்திப்பில் செய்ததினால் வெளியே ஜிகரும் சரி ஃபெல்லூடாவும் சரி...சாப்பிட்டதில்லை.
நீக்குகீதா
ப்ளாகர் படுத்திக் கொண்டு வருவதால், கருத்து மட்டுறுத்தலை நான் எடுத்துவிட்டதால், மின்னஞ்சல் பெட்டியில் கருத்துகள் வராது என்பதால், துளசியால் கருத்துகள் வருவதைப் பார்க்க இயலவில்லை. நான் அவ்வப்போது பதிவுகளின் சுட்டியை அனுப்பிக் கொண்டே இருப்பேன். கருத்துகள் வர வர அப்படித்தான் அவர் கருத்துகளைப் பார்த்து பதிலை எனக்கு அனுப்பி வந்தார். ஆனால் மின்னஞ்சலில் வந்தால் சௌகரியமாக இருக்கும் என்று சொன்னதால் மீண்டும் கருத்து மட்டுறுத்தலை தேர்ந்தெடுக்கிறேன். நட்புகள் ப்ளீஸ் பொறுத்துக்கோங்க. நான் கருத்துகள் வந்ததும் அவ்வப்போது வெளியிட்டுவிடுகிறேன்.
பதிலளிநீக்குகீதா
காதல் மற்றும் கல்யாண ஆசை - காரணம் செலவு பிடிக்கும் விஷயம் என்பதால்தான்
பதிலளிநீக்குஜப்பானில் காரணம் இப்போது பெண்கள் அதிகம் சம்பாதிப்பதாலாம். பொதுவாக ஆண்களின் சம்பளம் மிகவும் குறைந்து குடும்பம் நடத்தும் அளவில் இல்லாமல் இருப்பதால் விகிதம் குறைவால் என்று செய்தி.
நீக்குமற்றபடி காதல் கல்யாணம் என்பது வீட்டில் சம்மதத்துடன் என்றால் பெரும்பாலும் செலவில் எந்தக் குறையும் இல்லை. வீட்டை எதிர்த்து என்றால் அப்படி இருக்கலாம்.
மிக்க நன்றி நெல்லைத்தமிழன் உங்கள் கருத்திற்கு
துளசிதர்ன்
நம்ம வெங்கோலன் மாநிலத்தில் இருந்து தான் 'ஹிந்தியா' முழுவதும் போதைப் பொருள் பரவுகிறது...
பதிலளிநீக்குகருத்து புரியவில்லையே டிடி.
நீக்குமிக்க நன்றி டிடி
துளசிதரன்
நம்ம வெங்கோலன் மாநிலம் தான் போதை பரப்புவதில் முதன்மை...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி
நீக்குதுளசிதரன்
திகிலான விடயங்கள் அடுத்த சந்ததிகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆம். கில்லர்ஜி. இனி வரும் சமுதாயத்தின் நிலை என்னாகுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதைப் பார்க்க நாம் இருக்க மாட்டோம். இறைவன் விட்ட வழி.
நீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி
துளசிதரன்
வேதனை
பதிலளிநீக்குஆம். வேதனையான சம்பவம் தான்
நீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கரந்தையார்
துளசிதரன்
பதிவு கண்டு மனம் கனத்தது கீதாக்கா...பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்...விழிப்புணர்வை நாம் அனைவரும் சேர்ந்து ஏற்படுத்துவோம் அக்கா...பதிவுக்கு நன்றி .
பதிலளிநீக்குகாயத்ரி, பதிவு எழுதியது நானில்லை, நண்பர் துளசிதரன். பதிவின் கீழ் பெயர் இருக்குப்பா. இந்த வலைத்தளமுமே அவரோடதுதானே. நான் அதில் எழுதுபவள் அவ்வளவுதான். சமீபத்தில் பெரும்பாலும் நான் எழுதறதுனால குழப்பம் ஏற்பட்டிருச்சோ?!!!! ஹாஹாஹாஹா....பரவால்ல...இருந்தாலும் நான் சொல்றது என் கடமைல்லியா?
நீக்குஅவர் பதில்கள் இனிதான் வரும். கொஞ்சம் தாமதமாகும். அவர் பேப்பர் கரெக்ஷன் அதில் பிஸியாக இருப்பதால்.
கீதா
படிக்கவே மனது கஷ்டமாய் இருக்கிறது.
பதிலளிநீக்குயாரை நம்புவது ! கவலையாக இருக்கிறது.
ஆம். ஒரு மருத்துவர் பேசும் காணொளி கூட இருக்கிறது அதில் அவர் சொல்வது கேரளத்தில் 40 விகிதத்திற்கு மேலும், குறிப்பாக ப்ரொஃபஷனல் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான். அதுவும் இளைஞர்களைக் குறிவைத்துத்தான் இந்தப் பொருட்கள் விற்கப்படுகின்றன பரப்பப் படுகின்றன என்றும் சொல்கிறார்.
நீக்குமிகவும் பயமாகத்தான் இருக்கிறது. அதுவும் நமக்கு அறியாமலேயே கலப்பதும் நடப்பதால்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.
துளசிதரன்
அதிர்ச்சி தான்.. ஆனால் அந்த அளவுக்கு இல்லை..
பதிலளிநீக்குசில ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் பழச்சாறுகளில் ஆண்மை குறை வு ஏற்படுத்தும் இரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக சில செய்திகள் ஓடிக் கொண்டிருந்தன.. பிறகு அவை அடங்கி/ அடக்கப்பட்டு விட்டன..
10/15 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பிராய்லர் கோழிக்கான உணவுகளால் கோழியின் உடலில் கலக்கின்றன நஞ்சு இருபாலருக்கும் அந்தரங்க பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றார்கள்.. கோழி விற்பனை வீழ்ந்தது..
உடனே நம் நாட்டில் வீணாய்ப் போன அரிதாரப் பூச்சிகள் சில கோழி மேளா என்று கூத்தடித்து விற்பனையை தூக்கி நிறுத்தினார்கள்..
நஞ்சு விஷயம் உண்மை தான் என்பது ஊருக்கு ஊர் திற்க்கப்படும் நவீன கருவூட்டும் மையங்களால் தெரிய வருகின்றது..
ஏனென்றால் டமிளனின் உணவே இறைச்சியும் கோழியும் என்று மாற்றப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன..
30/40 வருடங்களுக்கு முன்பெல்லாம் மாதம் இருமுறை புலால் உணவு என்பதே மிகப் பெரிய விஷயம்..
இன்றைக்குத் தடுக்கி விழுவது புலால் உணவுக் கடைகளில் தான்..
குடும்ப விஷேசங்கள்/ உறவு முறை வருகை அனைத்தையும் புலால் உணவுகள் தான் தீர்மானிக்கின்றன..
இன்றைய சூழலில்
ஒருவன் சிறுநீர் கழித்து விட்டு வந்தால் கூட ட்ரீட்..
பீர், பரோட்டா, கோழிக் குழம்பு, , Mutton madalaa, Beef fry, Shawarma - இப்படியாகப் போகின்றார்கள்..
நம் மீது யாரோ திட்டமிட்டு தாக்குதலைத் தொடங்கி இருக்கின்றனர் என்பது மட்டுமே நிச்சயம்..
எனக்கு பிரச்னை இல்லை.. எங்கள் குடும்பம் சிவநெறியைச் சார்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகின்றன..
மிகவும் அதிர்ச்சிதான் சார். இப்போது போதை மருந்தின் தாக்காம் கூடியிருக்கிறது. போலீஸ் ஆஃபீசரும், மருத்துவரும் பேசும் காணொளிகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் போலீஸ் ஆஃபீசர் சொல்வதைக் கேட்கும் போது மிகவும் பயமாகத்தான் இருக்கிறது அவர்களது அனுபவத்தைச் சொல்கிறார்கள்.
நீக்குஉங்களின் நியாயமான ஆதங்கக் கருத்துகள் அனைத்தும் புரிகிறது. நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றிச்சொல்லியிருக்கிறீர்கள். கேரளத்திலும் இதே கதைதான்.
நம் மீது யாரோ திட்டமிட்டு தாக்குதலைத் தொடங்கி இருக்கின்றனர் என்பது மட்டுமே நிச்சயம்..//
உங்களுடைய இந்தக் கருத்தைப் பார்த்த பிறகு, அப்படியும் இருக்கலாம்தான் என்று எண்ண வைக்கிறது.
//எனக்கு பிரச்னை இல்லை.. எங்கள் குடும்பம் சிவநெறியைச் சார்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகின்றன..//
மிக நல்ல விஷயம் சார். மகிழ்ச்சியாக இருக்கிறது
மிக்க நன்றி துரை செல்வராஜு சார் உங்களின் விரிவான கருத்துகளுக்கு
துளசிதரன்
ஆம் கேரளத்தில் போதை பழக்கம் பரவி வருகிறது. காரணம் தவறு செய்தாலும் அரசியல் வாதிகளின் உதவியுடன் சட்டத்தில் இருந்து தப்ப முடியும் என்ற இளைஞர்களின் போக்கு மற்றும் நம்பிக்கை. அந்த தைரியம் எதையும் (கொலை உட்பட) செய்ய இன்றைய இளைஞர்களுக்கு போதையூட்டுகிறது. கடவுள் தான் சிறார்களை காப்பாற்ற வேண்டும்.
பதிலளிநீக்குவேறு ஒரு தகவல். வட மாநிலங்களில் போதை பொருட்கள் புழங்குவதை போலீசார் அதிகம் கண்டு கொள்வதில்லை. கஞ்சா சர்வ சாதாரணம்.
ஆம் ஜெயகுமார் சந்திரசேகரன் சார், என் மூன்று குழந்தைகளில் இரு குழந்தைகள் கேரளத்தில்தான் மருத்துவம் பயில்கிறார்கள். மகள் கண்ணூரிலும், மகன் திருவனந்தபுரத்திலும், போலீஸ் அதிகாரியும், மருத்துவரும் சொல்வது பெரும்பாலும் கல்லூரி மாணவ மாணவியர்தான் குறியாம். அதுவும் அவர்கள் அறியாமலேயே கலக்கவும் படுகிறது என்பதுதான் பயத்தைக் கிளப்பிவிட்டது.
நீக்குநீங்கள் சொல்லியிருக்கும் கருத்து மிகவும் சரியே. நானும் இறைவனைத்தான் துதிக்கின்றேன். இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.
துளசிதரன்
இன்று தினமலர் இணைய நாளிதழில் வந்திருக்கும் செய்தி..
பதிலளிநீக்குகரூர் அருகே அரை பிளேட் பிரியாணி 0. 50 காசு என்ற விளம்பரத்தின் பேரில் பெண்கள் உட்பட பலரும் மதில் சுவரைத் தாண்டிக் குதித்து இருக்கின்றனர்..
ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதன் பேரில் காவல்துறையினர் வந்து எச்சரித்திருக்கின்றர்..
இந்த நிலையில் இருக்கின்றது பிரியாணியின் மீதான மோகம்...
ஆம் நானும் அறிகிறேன். பிரியாணியின் மீது ஏன் இத்தனை மோகம் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நம் வீட்டில் செய்து சாப்பிடலாமே. ஒரு வேளை வெளியில் அவர்கள் ஏதேனும் ஈர்க்கும் பொருள் சேர்க்கிறார்களோ? அதனால்தான் மீண்டும் மீண்டும் மக்கள் அதன் மீது மோகம் கொள்கிறார்களோ?
நீக்குஉங்களின் தகவலுக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி துரைசெல்வராஜு சார்
துளசிதரன்
//..காதல் மற்றும் கல்யாண ஆசை இளைஞர்களிடம் குறைந்து வருகிறது என்பதை அறிந்த ஜப்பான் அரசு, அதை நிலைநாட்ட எடுக்கும் தீவிரமான நடவடிக்கைகளிலிருந்து மனித இனத்திற்குக் காதல் எவ்வளவு இன்றிமையாதது என்பது தெளிவாக நம் ஒவ்வொருவருக்கும் புரிகிறது.//
பதிலளிநீக்குஜப்பானிய இளைஞர்களிடம் காதல் ஆசை குறைந்துவருகிறதா! யார் விட்ட புருடா இது?இல்லவே இல்லை. அவர்கள் காதலில் திளைத்தவாறுதான் இருக்கிறார்கள்.
ஜப்பான் அரசின் கவலை அதுவல்ல. அங்கே கிழடுகளின் ஜனத்தொகை அதிகமாகிவருகிறது. இளம் தலைமுறையினர் மிகவும் கம்மி. காரணம் காதல் செய்து சுற்றி சுற்றி வருகிறார்களே தவிர, கல்யாணப் பேச்சே எடுக்கமாட்டேன் என்கிறார்களே.. பிள்ளை எப்படி பிறக்கும்? பாப்புலேஷன் எப்போது வளரும்.. இதுதான் ஜப்பானிய அரசின் கவலை. அதற்கேற்ப கல்யாண வாழ்வின் முக்கியத்துவம், குழந்தைகள் வளர்ப்பு என்றெல்லாம் போதிக்கப் பார்க்கிறது ஜப்பான் -இளைய தலைமுறைக்கு. அதன் பொறுப்புணர்ச்சி அதுக்கு!
ஜப்பானில் காதல் காதலாகவே நின்று (அதைக் காதல் என்று சொல்ல முடியுமா? அதனால்தான் காதல் ஆசை குறைவு என்று சொன்னேன்) கல்யாணம் குழந்தைகள் குடும்பம் என்று போகாத கவலை. இங்கு நமக்கு காதல் போதைப் பழக்கத்தால் விழுங்கப்பட்டு, வழி மாறிச் செல்வதால் கவலை. எப்படியோ காதல் கருகுகிறது.
நீக்குஜப்பானின் கவலை உங்கள் கருத்திலிருந்தும் தெரிந்துகொண்டேன்
மிக்க நன்றி ஏகாந்தன் சார் உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
போதைக்கு எதிராக எச்சரிக்கும் விவரமான கட்டுரை. சமீபத்தில் கோவாவில் இறந்த (அல்லது கொல்லப்பட்ட) கட்சி பிரமுகர், முன்னாள் (ஹிந்தி) பிக்பாஸ் நடிகைக்கு அனேகமாக இதைத்தான் சதிகாரர்கள் பானத்தில் சேர்த்து பருகவைத்ததாக சந்தேகப்பட்டு, தீவிர விசாரணையில் அங்கே காவல்துறை...
பதிலளிநீக்குஆமாம் போதைக்கு அடிமையாக்கப்படும் நிலை நிலவுவது பேரச்சத்தை ஏற்படுத்துகிறது.
நீக்குநீங்கள் சொல்லியிருக்கும் தகவலும் பயங்கரமாகத்தான் இருக்கிறது.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஏகாந்தன் சார்
துளசிதரன்