வெள்ளி, 30 டிசம்பர், 2022

இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 11 - அரக்கு பழங்குடி மக்கள் அருங்காட்சியகம்

பகுதி 10, பகுதி 9பகுதி 8பகுதி 7பகுதி 6,  பகுதி 5,  பகுதி 4பகுதி 3பகுதி 2பகுதி 1

பத்மாபுரம் தாவரவியல் பூங்காவைப் பார்த்த பிறகு, அடுத்து பழங்குடி மக்கள் அருகாட்சியகம் சென்றோம். அதைப் பற்றி அடுத்த பதிவில்//

என்று சொல்லியிருந்தேன். இடையில் அன்பினால் பொறுப்புகள் சில. பதிவைத் தொடர இயலாமல் போனது.  தொடர்ந்து எழுத முடியவில்லை என்றாலும் என் பதிவுகளை வாசித்துக் கருத்திடும் நட்புகள், பார்த்துவிட்டுக் கடந்து செல்லும் அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இதோ பதிவு தொடர்கிறது.

அரக்கு பழங்குடி மக்கள் அருங்காட்சியகம், பத்மாபுரம் தாவரவியல் பூங்காவிலிருந்து ஏகதேசம் 2.5 கிமீ தொலைவுக்குள் இருக்கிறது. ரயில் நிலையத்திலிருந்தும் தோராயமாக 2.5 கிமீ தூரத்திற்குள்தான் இருக்கிறது. அரக்கு பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் எட்டினாற்போல் இருக்கிறது. 

பத்மாபுரம் தாவரவியல் பூங்காவிலிருந்து நடக்கும் தூரம்தான் என்றாலும் நேரம் மிச்சப்படுத்துவதற்காகவும், கூட வந்தவர்களுக்கு மீண்டும் நடக்க சிரமம் என்பதாலும் அங்கிருந்து இரு ஆட்டோக்கள் வைத்துக் கொண்டு அருங்காட்சியகத்தை அடைந்தோம்.

இந்த அருங்காட்சியகத்தைப் பற்றிச் சொல்வதென்றால், அரக்கு பள்ளத்தாக்குப் பகுதியில் வாழும் பல பழங்குடி மக்களைப் பற்றிய காட்சியகம். (19 வகை என்று சொல்லப்பட்டது) இனப் பெயர்கள் எல்லாம் எங்களுக்கு முன்னர் சென்ற குழுவுக்கு ஒருவர் விளக்கிக் கொண்டு வந்தார். பெயர்கள் எதுவும் டக்கென்று மனதில் பதியவில்லை. 

இப்பழங்குடி மக்களின் வாழ்வியல் கலாச்சாரம், உணவு, உடை, நடனம், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை எல்லோரும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டி, ஆந்திர சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 1996 ஆம் ஆண்டு இதை வடிவமைத்திருக்கிறது.

நுழைவு வாயில்

நுழைவு வாயில் வழி நுழையும் போது, திடீரென்று சில பழங்குடிப் பெண்கள் எங்கள் முன் சென்ற குழுவினைச் சூழ்ந்து கொண்டனர், எங்கள் அருகிலும் ஓரிருவர் வந்தனர். எதற்காக இருக்கும் என்று நான் சிந்தித்துக் கொண்டே அவர்களிடம் பேசி ஃபோட்டோ எடுக்கலாமா என்று நினைப்பதற்குள் கூட வந்தவர்கள், அவர்கள் பைசா கேட்பார்கள் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிட எனக்குப் புஸ் என்று ஆனது. 

பைசா கேட்டல் என்ன? ஃபோட்டோ எடுத்துக்கொண்டு, பேசி விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே என்பதற்கும் ஆப்பு வைக்கப்பட்டதால் புகைப்படம் எடுக்க  முடியவில்லை. இதுக்குத்தான் நான் தனியாகச் செல்ல விரும்புவது!!!!! அப்பெண்கள் அப்படி வந்ததும் கூட இப்படிப் புகைப்படம் எடுக்க விரும்புபவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பது பின்னர் தெரியவந்தது!! டூ லேட்!

இப்படங்களிலேயே பெயர்கள், விவரங்கள் இருப்பதால் தனியாக நான் கொடுக்கவில்லை. கீழே உள்ள பாராவில் மேலோட்டமாகச் சொல்லியிருக்கிறேன்

நுழைவு வாயிலைக் கடந்து காட்சியக அரங்கினை நோக்கிச் செல்லும் போது அரக்கு பள்ளத் தாக்கிற்கு வரும் ரயில் தடம், குகைகள், பள்ளத்தாக்கில் உள்ள பார்க்க வேண்டிய இடங்கள் எல்லாம் அழகாக வடிவமைக்கப்பட்டு  zone 1, zone 2 என்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் 4 படங்கள் மேலே. 

காட்சியகத்தின் பின் புறம்

வளாகத்திற்குள் நுழைந்ததும் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட சிறிய குளம் இருக்கிறது. காட்சியக அரங்கு இரண்டு தளங்களாக அழகான வட்ட வடிவக் கட்டிடமாக மிக நேர்த்தியாக இருக்கிறது. அரங்கினுள் நுழையும் போதே அம்மக்களின் திருமண நிகழ்வுகள் படங்களாக இருக்கின்றன. 

அதைக் கடந்து உள்ளே சென்றால் பிரமிப்புதான். நிஜமாகவே மனிதர்கள் உள்ளனரோ என்று நினைக்கும் அளவு காட்சிக் கூடங்கள், தத்ரூபமாக மனித உருவங்கள் வடிவமைக்கப்பட்டு, குடில்களாகவும் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடில்களிலும் அவர்களது உடைகள், அணிகலன்கள், பயன்படுத்தும் பாத்திரங்கள், கருவிகள், இசைக் கருவிகள் என்று மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.   

பின்புறச் சுவர்கள் நல்ல அரக்கு (அதான் அரக்கு என்ற பெயரோ??!!!!) வண்ணத்தில் இருக்க, அதில் வெள்ளை நிறத்தில் கோலங்கள், வெள்ளை வண்ணத்தில் கதவுகள் ஜன்னல்கள் என்று குடில்களுக்கு அமைத்திருப்பது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது எனலாம். தினசரி வாழ்வியல் முப்பரிமாணக் காட்சிகளாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அடுக்களை, கூடம், திண்ணை, தொழில் கூடங்கள், சந்தை, வேட்டையாடும் கருவிகள் என்று பல.

அங்கு வாழும் பழங்குடியினரின் நடனமான திம்சா மற்றும் மயூர் எனும் இரு வகை நடனக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

அரங்கிற்குள் நான் இவற்றை முதலில் படம் பிடிக்கத் தொடங்கினேன். என்னுடன் வந்தவர் 'அங்க பாரு என்ன எழுதியிருக்குன்னு' என்று சொல்லவும் பார்த்தால் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று மிகச் சிறிய அளவில் எழுதிய அறிவிப்பு கண்ணில் பட, என் மூன்றாவது விழி கண்ணை மூடிக் கொண்டது! கூடவே, நான் கவனிக்காததற்கு எனக்கு அர்ச்சனையும் விழுந்தது என்பது வேறு விஷயம்! ஹூம் எல்லாம் என் ஆர்வக் கோளாறு.

நிறுத்தி நிதானமாகப் பார்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இரண்டு மணி நேரம் தேவைப்படும். குறிப்பாக என் போன்றவர்களுக்கு. என்னதான் தகவல் பலகைகள் அங்கு இருந்தாலும் நமக்கு விளக்கிச் சொல்லப் பணியாளர்கள் யாரும் இருக்கவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும். ஆந்திரா சுற்றுலா மேம்பாட்டுத் துறை கவனத்தில் கொள்ளலாம்.  

எங்கள் முன்னால் சென்ற குழுவை பின்பற்றிச் சென்றிருந்தாலேனும் தகவல்கள் காதில் விழுந்திருக்கலாம். ஆனால் எங்கள் குழு விரைவு வண்டிக் குழு!!! எனவே முன்னோட்டுச் சென்றுவிட்டது. நானும் அதி வேக விரைவு வண்டிதான் ஆனால் இப்படியான இடங்களில் ஸ்லோ கோச்! ஹூம் ஊர் சுற்றிப் பார்க்கவும் கொடுப்பினை வேண்டும். இந்த அளவாவது கிடைத்ததே என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்!

பழங்குடி மக்களே நடத்தும் கடைகளும், வெளியாட்கள் நடத்தும் கடைகளும் மரத்தினால் ஆன பொம்மைகள், கைவினைப் பொருட்கள் எல்லாம் விற்பனைக்கு இருக்கின்றன என்றாலும் எல்லாமே நம் பட்ஜெட்டிற்கு அதிகமான விலை.  உணவுக் கடைகளும் இருக்கின்றன. எதுவும் பரிசோதித்துப் பார்க்கலை. போன இடத்தில் எதற்கு வம்பு!!!

அவர்களின் கைவினைக் கலைஞர்களின் கைவினைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் மட்பாண்டம் செய்தல், நெய்தல் போன்றவற்றிற்குப் பயிலரங்குகளும் இருக்கின்றன. 

ஒரு சிறிய குளம் இருக்கிறது. அங்கு குழந்தைகள் படகில் சவாரி செய்யலாம். படம் இல்லை.

பார்வையாளர்களுக்காகப் பழங்குடிப் பெண்கள் திம்சா நடனம் ஆடிக் காட்டும் நிகழ்வும் இருக்கிறது. நாமும் அவர்களோடு படம் எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் சிறு அன்பளிப்பையும் பெற்றுக் கொள்வார்கள். என்றாலும் நாங்கள் அதைக் காணச் செல்லவில்லை. நேரமின்மை. என்றாலும்

திம்ஸா நடனம் உருவ பொம்மை வடிவம் - காட்சியக அரங்கின் வெளியே

திம்ஸா நடனம் பற்றிய தகவல். படத்தைப் பெரிது செய்து பார்த்தால் வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன்

என்றாலும் திம்ஸா நடன உருவ பொம்மைகள் வடிவங்கள் 6 பெண்கள் இடுப்பில் கை இட்டு அணைத்துக் கொண்டு இருப்பது போன்று வளாகத்தினுள், காட்சி அரங்கின் வெளியில் உள்ளதால் அதன் நடுவிலும் நாம் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். நிறையப் பேர் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள்  யாரும் இல்லாத போது ஒரு க்ளிக்!

மேலும் (மேலே அரக்கு பள்ளத்தாக்கு வடிவங்களின் படங்கள் இருக்கிறதே அது போன்று)  பழங்குடி மக்களின் வழக்கங்களைச் சொல்லும் உருவங்கள், கள்ளு எடுத்தல், தலையின் மேல் பல தண்ணீர்ப் பானைகளை வைத்துக் கொண்டு செல்லுதல் போன்ற உருவங்கள். இவற்றை எல்லாம் படம் எடுக்கத் தடையில்லை. 

அருகில் இரும்புக் கம்பிகளிள் வடிவங்களை சுவற்றில் இப்படிப் பதித்திருக்கிறார்கள்.  

ஒரு திறந்தவெளி அரங்கமும் இருக்கிறது. சுற்றிலும் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி. அழகான வடிவமைப்பு!

அருங்காட்சியக நேரம் - காலை 10 மணி - மாலை 6 மணி 

நுழைவுக்கட்டணம் - பெரியவர்களுக்கு - ரூ 10 : சிறியவர்களுக்கு ரூ 5

அங்கிருந்து வெளியில் வந்து ஒரு கார் ஏற்பாடு செய்து கொண்டு (பேருந்து நிலையத்தின் அருகிலேயே நிறைய கிடைக்கின்றன) போரா குகைகள் பார்க்கப் பயணித்தோம். 36.5 கிமீ. வழியில் சில இடங்கள் பார்த்தோம். அதை அடுத்த பகுதியில் சொல்லிவிட்டு அதற்கும் அடுத்த பதிவில் போரா குகைகள் பற்றிச் சொல்லி விசாகப்பட்டினப் பதிவை முடித்துவிடத் திட்டம்.  

'கீதா அடுத்த பொறுப்பு வருவதற்குள் முடித்துவிடு' என்று உள்ளே எச்சரிக்கை மணி அடிக்கிறது. 

அடுத்த பதிவில் விரைவில் ??!!! பார்ப்போம். 


------கீதா




33 கருத்துகள்:

  1. பழங்குடி மக்கள் அருகாட்சியகம் /

    வெங்கட் பதிவு போட்டு இருந்தாரோ!
    பழங்குடி பெண்கள் ஆடிய புகைப்படம் அவர் பதிவில் பார்த்தது போல இருகிறது.
    படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.

    //6 பெண்கள் இடுப்பில் கை இட்டு அணைத்துக் கொண்டு இருப்பது போன்று வளாகத்தினுள், காட்சி அரங்கின் வெளியில் உள்ளதால் அதன் நடுவிலும் நாம் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். //

    வெங்கட் நண்பர் அவர்களுடன் எடுத்த படம் பார்த்த நினைவு இருக்கிறது.


    நுழைவு வாயில் சிற்பங்கள் , மற்றும் காட்சியகம் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா கோமதிக்கா வெங்கட்ஜி பதிவு போட்டிருந்தார். அரக்கு பள்ளத்தாக்கு பற்றி. விசாகப்பட்டினம் அருகே பார்த்த இடங்கள் பற்றி போட்டிருந்தார்.

      ஆமாம் வெங்கட்ஜி அப்பெண்களின் உருவ பொம்மைகளின் நடுவில் நின்று புகைப்படம் எடுத்திருந்தார்.

      அந்த பழங்குடி பெண்களின் புகைப்படங்களும் எடுத்திருந்தார்.

      மிக்க நன்றி கோமதிக்கா பதிவையும் படங்களையும் ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  2. அடுத்த பதிவு போரா குகையை பார்க்க ஆவல்.
    விரைவில் பதிவிட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போரா குகைகள் செல்லும் முன் பார்த்த இடங்கள் அடுத்த பதிவு.

      அதன் பின் போரா குகைகள். வெங்கட்ஜி யும் போரா குகைகள் பற்றி போட்டிருந்தார்.

      விரைவில் பதிவிட நினைத்துள்ளேன் கோமதிக்கா

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  3. கைவினைக் கலைஞர்களின் கைவினைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் மட்பாண்டம் செய்தல், நெய்தல் போன்றவற்றிற்குப் பயிலரங்குகளும் இருக்கின்றன//

    ஆமாம், இப்போது நிறைய தங்கும் விடுதிகளில் இப்படி வைத்து இருக்கிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் எல்லாம் ஆர்வமாக பார்வையிட்டு ஏதாவது செய்ய பழகி கொள்கிறார்கள் அதற்கு தனியாக கட்டணம் கட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா நான் ஒரு 15 வருடங்களுக்கு முன் பூனா சென்றிருந்த போது அங்கும் இப்படி மட்பாண்டங்கள் செய்யும் இடம் பயிற்சி இருந்தது என் மகன், அவன் சித்தப்பா குழந்தைகள் எல்லோரும் அதில் ஒரு சிறிய பானை செய்தார்கள். அப்போது மூன்றாவது விழி என்னிடம் இல்லையே அதனால் எடுக்க முடியலை.

      முதலில் அவங்க சும்மா ஆர்வத்தில் செய்ய அவர்கள் கட்டணம் எதுவும் வாங்கவில்லை.....ஆனால் நாங்கள் கொடுத்துவிட்டு வந்தோம்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  4. அப்பாடா. மியூசியம் பார்த்தாச்சு, அடுத்து காரில் போனாலும் போரா குகைகளை பற்றிய விவரம் அடுத்த வருடம் தான் வரும். 

    படம் எடுக்க பயந்ததால்,கோணம் செட்டப் முதலியவற்றில் கவனம் செலுத்த முடியவில்லை. என்றாலும் நன்றாக உள்ளன. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா....ஆமாம் ஜெ கெ அண்ணா ஆனால் பாருங்க புதுவருடம் இதோ வந்தாச்சு...டக்புக்குனு போட்டுவிடுவேன்

      அண்ணா காட்சியக கூடத்திற்குள்தான் பயந்து எடுத்தேன் அவை தெளிவாக இல்லை என்பதாலும் பொது வெளியில் பகிர்ந்தால் பிரச்சனை வருமோ என்று அப்போதே அழித்துவிட்டேன். ஒரு வேளை யாரேனும் செக் செய்தாலோ என்று....
      நம்ம கூட குழு ஆள் ஒருவர் ரொம்பவே கறார் பேர்வழி!!!!

      இங்கு பகிர்ந்தவை எல்லாம் வெளிப்புறத்தில் எடுத்தவை வளாகத்தினுள்...அதுவுமே பயந்து கொண்டுதான் எடுத்தேன்...

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  5. இதில் பல படங்களை வெங்கட் தளத்தில் வாசித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.

    புகைப்படம் எடுக்க யார் அனுமதியும் கேட்கக்கூடாது. கடகடவென எடுத்துடணும். பல படங்களில் ஒரு சில நன்றாக அமையும். ஒருவேளை யாரேனும் சத்தம் போட்டால், புகைப்படம் எடுக்கக்கூடாதுன்னு தெரியலை, சாரி என ஜகா வாங்கிடணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை, வெங்கட்ஜி பகிர்ந்திருந்தார்.

      //புகைப்படம் எடுக்க யார் அனுமதியும் கேட்கக்கூடாது. கடகடவென எடுத்துடணும். பல படங்களில் ஒரு சில நன்றாக அமையும். ஒருவேளை யாரேனும் சத்தம் போட்டால், புகைப்படம் எடுக்கக்கூடாதுன்னு தெரியலை, சாரி என ஜகா வாங்கிடணும்.//

      ஹாஹாஹாஹாஹா ஆனா அப்படி எடுத்த படங்களையும் அழிக்க நேர்ந்ததௌ வெளியில் வரப்ப யாராவது பார்த்து செக் பண்ணிட்டான்னு நம்ம கூட வந்த கறார் பேர் வழி அழிக்கச் சொல்ல அழித்துவிட்டேன்.....என்ன கொடுமைடா சரவணா!!!!! ஹூம்...

      அதனால அதுக்கப்புறம் முதல்லயே பார்த்துவிடுகிறேன் அறிவிப்பு இருக்கான்னு...இல்லைனா அனுமதிவாங்க பேசிப் பார்ப்பேன்....அதுவும் கிடைக்கலைனா எடுக்காமல் வந்துவிடுவது வழக்கம்....

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. திருநாவாய் கோவிலில் ஐபோனை வாங்கி ஒவ்வொன்றாக அழிக்கச் சொன்னார்கள். அழித்து வீட்டுக்கு வந்தவுடன் ரெஸ்டோர் செய்துவிட்டேன். பொதுவா கேரளா கோவில்களில் அனுமதி இல்லை. நெல்லை

      நீக்கு
    3. ஹை நெல்லை எப்படி ரிஸ்டோர் செஞ்சீங்க? கேமராவுல அந்த ஆப்ஷன் இருக்கா? என் கேமராவில் இல்லைன்னு நினைக்கிறேன்...கேமரா போன்றது கைல வந்தாச்சுன்னா நான் தான் நோண்டி நோண்டி என்னென்ன இருக்குன்னு எல்லாம் செஞ்சு பார்க்கும் ரகமாச்சே!!! தெரிந்துகொள்ளும் ஆர்வம்..

      கீதா

      நீக்கு
    4. ஆமாம் கேரளா கோயில்களில் அனுமதி இல்லை...

      கீதா

      நீக்கு
  6. இந்தத் தடவை கிருஷ்ணாபுரத்தில் சிற்பங்களை வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுத்தேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை (அபூர்வமாக)

    ஒரு கோயிலில் சிறிது மங்கிய வெளிச்சத்தில் (காலை 5:45) ஒரு சிலையைப் படம் எடுத்தேன். எந்த திசையிலும் அது என்னையே பார்த்தது. மனைவியிடம் பயந்துகொண்டே காண்பித்தேன். அவர், இந்தச் சிலையில் கண் திறந்திருக்கிறது, பொதுவாக கண்ணைத் திறக்கமாட்டார்கள் என்றார். அது ஒரு அமானிஷ்யமான உணர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தடவை கிருஷ்ணாபுரத்தில் சிற்பங்களை வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுத்தேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை (அபூர்வமாக)//

      சூப்பர் நெல்லை.....எனக்கும் வாய்ப்பு கிடைச்சா அம்புட்டுத்தான் வளைச்சு வளைச்சு....ஹிஹிஹி

      இப்ப சமீபத்தில் ஒன்று எடுத்திருக்கிறேன். இயற்கை எதுவும் இல்லை. பல இயற்கை இடங்கள் உண்டு ஆனால் செல்லவில்லை. அதற்கு என் அலைவரிசையுள்ள மக்கள் வேண்டும். எடுத்தவை இன்னும் கேமராவில் இருந்து எடுத்து கம்ப்யூட்டரில் மாற்றவில்லை.

      //ஒரு கோயிலில் சிறிது மங்கிய வெளிச்சத்தில் (காலை 5:45) ஒரு சிலையைப் படம் எடுத்தேன். எந்த திசையிலும் அது என்னையே பார்த்தது. மனைவியிடம் பயந்துகொண்டே காண்பித்தேன். அவர், இந்தச் சிலையில் கண் திறந்திருக்கிறது, பொதுவாக கண்ணைத் திறக்கமாட்டார்கள் என்றார். அது ஒரு அமானிஷ்யமான உணர்வு//

      வாவ்! சூப்பர் அனுபவம் நெல்லை. படங்கள் எல்லாம், இந்தச் சிலை உட்பட எபி ஞாயிறு அன்று வரும் என்று நினைக்கிறேன்.

      உங்க ஹஸ்பன்ட் சொன்னது போல....சிலையின் கண் திறந்திருந்தால் அப்படி இருக்கும்..(வழக்கமாக மூடித்தான் வைத்திருப்பாங்க) ஆனால் சில தெய்வச் சிலைகளில் எல்லாச் சிலைகளிலும் அப்படிச் செய்வதுண்டா என்று தெரியவில்லை ஆனால் கண் திறப்பது என்பதே நேரம் பார்த்து சாஸ்திரம் உண்டு அதன்படிதான் திறப்பாங்க.

      அப்படி நான் பார்த்ததுண்டு. அந்த நுட்ப வடிவு அமையும் விதத்தில் இப்படி எல்லாப் பக்கமும் பார்ப்பது போல் இருக்கும் நாம் எங்கு நின்றாலும். அது ஒரு டெக்னிக். கற்சிலை என்றில்லை வேறு பொருட்களில் சிலை வடித்தாலும்....அப்படி அது வடிவமைக்கும் விதத்தில் என்பது என் புரிதல்.

      எனக்கும் இப்படி நேர்ந்ததுண்டு. ஆனால் அமானுஷ்ய உணர்வு எதுவும் எனக்கு வரவில்லை. மங்கிய வெளிச்சத்தில்தான்....

      கீதா

      நீக்கு
  7. பழங்குடி பெண்கள் அவர்களே வந்தும் கூட விவரங்கள் விசாரிக்க முடியாமல் போனது துரதிருஷ்டம்.  வழிகாட்டிகளுக்கே வழி தெரியவீல்லை, அல்லது எதையோ மறைக்கிறார்கள், அவர்கள் 'எதையோ' சொல்லி விடுவார்கள் என்று பயப்படுகிறார்களோ என்னவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், அது ஒரு ஏற்பாடு அங்கு என்பது பின்னர்தான் தெரிந்தது. என்னைத் தடுத்தது எங்கள் குழுவினர். கறார் பேர்வழி.

      முன்னே சென்ற குழு அது அவர்கள் எங்கிருந்து வழிகாட்டி பிடித்தார்கள் என்று தெரியவில்லை. பெங்காலி பெரிய குழு......

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. நீங்கள் கைட் வைத்துக் கொள்ளவில்லையா, அல்லது அவர் முன்னே சென்ற குழுவின் வழிகாட்டி அளவு விவரம் சொல்லவில்லையா?  அறிவிப்பைப் பார்க்கும் முன் எடுத்த ஒன்றிரண்டு போட்டோவையாவது வெளியிட்டிருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸ்ரீராம் வழிகாட்டி எவரையும் வைத்துக் கொள்ளவில்லை. அங்கு வழி எல்லாம் தெரிவது சிரமமில்லை. ரொம்ப எளிது மற்றும் அதற்குத் தகவல் பலகைகள் எல்லாம் நன்றாகவே இருந்தன. யாரேனும் தெரிந்தவர் என்றால் அங்கு என்னென்ன நடக்கும் போன்ற விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

      முன்னே சென்ற குழு திடீரென்று கண்ணில் படவில்லையே.....நாங்கள் முன்னேறிச் சென்றுவிட்டோமே....அதான் சொல்லிருக்கேனே விரைவு வண்டி...ஏனென்றால் அடுத்து போரா குகைகள் போய், அங்கிருந்து ரயில் பிடிக்க வேண்டுமே....இங்கேயே மணி 1.30 ஆகியிருந்தது. போரா குகைகள் செல்ல 1.30 மணி நேரத்திற்குள் ஆகும் வழியில் சில இடங்கள் பார்க்க என் தேர்வு, மற்றும் போரா குகைகள் பார்க்க ஒரு மணி நேரமேனும் வேண்டும்....அப்புறம் ரயில் 5 மணிக்கோ 5.15 க்கோ என்று நினைவு

      அறிவிப்பைப் பார்க்கும் முன் எடுத்தவை ஒரு சிலதான் ஓரளவு தான் வந்திருந்தது என்றாலும் நம்ம கறார் பேர்வழி அதை அழிக்கச் சொல்லிட அழித்துவிட்டேன் ஸ்ரீராம். வெளியில் வரும் போது செக் பண்ணினால் கஷ்டம் என்று.....

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. படத்தைப் பார்க்கையில் இவ்வகை நடனங்களை திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம் என்று தோன்றும்.  குறிப்பாக, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடலில் கூட..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...அது போல ஆசைய காத்துல தூது விட்டு பாட்டுல கூட இப்படித்தானோ?

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. திறந்தவெளி ரேஞ்சில் அமர்ந்து எதைப் பார்ப்பது?  அவர்கள் வினா வழக்க நடனத்தையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அப்படித்தான் சொன்னாங்க அங்கு பழங்குடி மக்களின் விழாக்கள், போட்டிகள் நடக்கும் என்று சொல்லப்பட்டது.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. அவர்கள் விழக்களில் வித விதமான பொம்மை மாஸ்க் எல்லாம் அணிந்து கொள்வதுண்டு என்று அங்கு விற்பனைக்கும் இருந்தன கடைகளில். அதான் விரைவு வண்டி நம்ம குழு....எங்க ஃபொட்டோ எடுக்க? வெங்கட்ஜி போட்டிருந்தாரா என்று பார்க்க வேண்டும்....

      கீதா

      நீக்கு
  11. அழகிய படங்கள் மிகவும் அருமையாக எடுத்து இருக்கிறீர்கள்.

    விவரிப்பு அழகு.

    பதிலளிநீக்கு
  12. பதிவை படிக்கும்போதே பழங்குடிமக்கள் அருங்காட்சியகத்தை ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டும் என்னும் எண்ணம் மேலோங்குவதை தவிர்க்கமுடியவில்லையே!!...
    அருங்காட்சியகத்தை அறிய தந்ததற்கு நன்றி!!!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையா இருக்கும் நாஞ்சில் சிவா. வாய்ப்பு உருவாக்கிக் கொண்டு போய்ப் பார்த்துவிடுங்கள்...

      வெங்கட்ஜியும் பதிவு போட்டிருக்கிறார் முன்பு. அவர் தளத்துல இன்னும் தெரிந்து கொள்ளலாம், சிவா

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா...

      கீதா

      நீக்கு
  13. அனைவருக்கும் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மதுரை தமிழன்!

      எங்கள் இருவரிடமிருந்தும் உங்களுக்கும் எங்கள் அன்பார்ந்த வாழ்த்துகள்

      நீக்கு
  14. பார்க்கவேண்டிய இடம். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது.

    பதிலளிநீக்கு