செவ்வாய், 18 அக்டோபர், 2022

இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 7 - அன்னவரம்

 



அன்னவரம் ஸ்ரீ வீர வெங்கட சத்யநாராயணா கோயிலின் முகப்புக் கோபுரம்

கைலாசகிரி பார்த்துவிட்டு அறைக்கு வந்த போது இரவு 9.30.  ரிஃப்ரெஷ் செய்து கொண்டு படுத்ததுதான் தெரியும். மறுநாள் எங்கு சென்றோம் என்று அடுத்த பதிவில்…// என்று சென்ற பதிவில் சொல்லி முடித்திருந்தேன்.

மறு நாள் காலை அன்னவரம் - ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அன்னவரம் என்ற சிறிய நகரத்தில் உள்ளது இந்த மலைக்கோயில்செல்ல முடிவு செய்யப்பட்டு, ரயிலில் சென்றால் ஒன்றே முக்கால்-இரண்டு மணி நேரப் பயணம்தான் என்பதாலும் ரயில் நிலையம் அருகில் என்பதாலும் ரயிலில் சென்று விடலாம் என்று முடிவு செய்தோம். காலை 6.10ற்கோ-6.20ற்கோ ரயில் என்ற நினைவு. விசாகப்பட்டினத்திலிருந்து லிங்கம்பள்ளி ஜன்மபூமி விரைவு வண்டி. ரயில் நிலையம் சென்றுதான் டிக்கெட் வாங்கிக் கொண்டோம்.  இரண்டாவது வகுப்பு இருக்கை. டிக்கெட் விலை ரூ 50-60 என்று நினைவு

கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றது. 8.04 ற்கு அன்னவரம் சென்றடைய வேண்டிய ரயில் 8.20க்குச் சென்றது.  ரயில் நிலையத்திலிருந்தே கோயிலுக்குச் செல்லும் பேருந்துகள் இருப்பதால் அங்கேயே ஏறிக் கொண்டோம். ரயில் நிலையத்திலிருந்து கோயில் 4-5 கி மீ தூரம்தான்.

நான் கூகுள் வரைபடத்தில் பார்த்த போது  அன்னவரத்திலிருந்து வங்காள விரிகுடா வெகு அருகில் இருப்பதாகத் தெரிந்தது. மற்றொரு புறம் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் ரத்னகிரி மலைத் தொடர். இடையில் கோயில். ஆஹா அழகான இடம், என் விழிக்கும், மூன்றாவது விழிக்கும் நல்ல விருந்து என்று நினைத்துக் கொண்டேன். 

இந்த மலை கடல் மட்டத்திலிருந்து ஏகதேசம் 300 அடி உயரத்தில் உள்ளது.  மலைக்குச் செல்ல வண்டிகள் செல்லும்படியாக மலைப்பாதையும், ஏறுவதற்கு ஏற்ப படிகளும் ஏகதேசம் 400 இருக்கும் என்று கூட வந்த உறவினர்களில் ஒருவர் (சித்தி) சொன்னார். அவர் சத்யநாராயண பூஜை செய்பவர். அவருக்கு இது இரண்டாவது முறை தரிசனம். முதல்  முறை படிகள் ஏறிச் சென்று தரிசித்திருக்கிறார்.

கோயில் தேவஸ்தானம் வரை 3-4கிமீ. அங்கிருந்து மலை மேல் உள்ள கோயிலுக்கு 1 கிமீ தூரம்தான். படி ஏறிச் செல்பவர்கள் அங்கு இறங்கிக் கொண்டுவிடலாம். இல்லை என்றால் தொடர்ந்து மலைக்குச் சென்று இறங்கிக் கொள்ளலாம். பேருந்தில் சென்றதால் கூட்டத்தினிடையே படம் எடுக்க முடியவில்லை.

அன்னவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் கோயிலுக்குச் செல்லும் பேருந்துகள் நிறைய உண்டு. பேருந்து நிலையத்திலிருந்தும் கோயில் மிக அருகில்தான்.

வேறொரு கோணத்தில் முகப்புக் கோபுரம்

கோயில் மிகப்பெரிய வளாகத்துடன் இருப்பதால், நாங்கள் சென்றிருந்த போது கூட்டம் இருந்தாலும் நெருக்கித் தள்ளியபடி இல்லை. விரைவில் செல்ல முடிந்தது. கோயிலின் முகப்புக் கோபுரம் உள்ளே சென்றதும் பரந்த வெளி. 

முகப்புக் கோபுரத்திலிருந்தே உள்ளே செல்லும் பகுதியை ஒரு க்ளிக்.

நேரே படிகளுடனும் க்ரில் கதவுடனும் இருப்பது கல்யாண மண்டபம். பரந்த வெளி. இங்கு நிறைய திருமணங்கள் நடக்குமாம்(வெங்கட்ஜியின் தளத்தில் கோயில் வளாகங்கள் படங்கள் அவர் எடுத்தவை இருக்கின்றன. அழகாக இருக்கும். பார்த்த நினைவு.) சைடில் நீலக் கூரை தெரிகிறதா? அப்பக்கமாகத்தான் போக வேண்டும்.

நம் உடைமைகளை வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதால் அதற்குப் பின் புகைப்படம் எடுக்க முடியாது என்பதால் கேமராவை கொடுக்கும் முன்னரே பக்கவாட்டை கிட்டப்பார்வையில் ஒரு க்ளிக்.  பக்கவாட்டில் நடந்து சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அப்படிச் சென்ற போது நம்முடன் வந்தவர் மேலே சொன்ன உறவினர் சித்தி சில கதைகளைச் சொல்லியபடி வந்தார்.

வருஷம் மறந்து போச்சு  சிலை கிடைச்சப்போ சும்மா ஒரு டென்ட் மாதிரி போட்டுருக்கா. அப்பறம் இங்குள்ளவா எல்லாரும் சேந்து கோயில் கட்டிருக்கா. அப்பறம் சமீபத்துல (நாங்கள் சென்ற வருஷத்தின் சமீபம்) புனரமைச்சு இப்ப பாரு எப்படி ஜே ஜேன்னு இருக்கு கோயில். எவ்வளவு பெரிசா இருக்கு பாரு.  திருப்பதி கோயிலுக்கு அடுத்தாப்ல ஃபேமஸ். திருப்பதி மாதிரி இதுக்கும் நல்ல வருமானம் 

இதென்ன கதை? சிம்மாச்சலத்தையும் இப்படித்தானே சொன்னீங்கஎன்றேன். அதுக்கென்ன இப்போ? ரெண்டு கோயிலுக்கும் நன்னா வரும்படின்னு வைச்சுக்கோயேன்!!!!!!” "அது சரி!!" நீ கதை கேப்பியே தவிர நம்பிக்கையே கிடையாது…..உள்ள போறப்ப பாரு உனக்கே தெரியும்….”

“ஹான் கோயில் கதை சொல்லலியே” என்று மீண்டும் தொடங்கினார். மலை ராஜா மேரு இருக்கானே (மேரு, நேரு ந்னு எழுதிடாதே!!!!) அவனும் அவன் தேவி மேனகாவும் பெரிசா தவம் செஞ்சா. அதென்னவோ அவாளுக்கு எல்லாம் தவம் செஞ்சா புத்ர பாக்கியம் கிடைக்கறது. நானும் சத்யநாராயண பூஜை காலம் காலமா பண்றேன்...ஹூம்...அவாளுக்கு பெருமாளோட கிருபையால ரெண்டு பிள்ளை கிடைச்சுது. ஒருத்தன் பேர் பத்ரா மத்தவன் ரத்னாகர். (B)பத்ராவுக்கு பெருமாள் மேல ரொம்ப பக்தி. தவம் எல்லாம் இருந்தான்…அவரும் அவன் தவத்தை மெச்சி, ராமாவதாரத்துல இவன் பக்திக்காக (B)பத்ராசலத்துல இங்கேயே இருக்கேன்னு இருந்துட்டார். அப்புறம் ரத்னாகர் விடுவனா? அவனும் தவம் எல்லாம் செஞ்சான். பெருமாள் அவனையும் மெச்சி வீர வெங்கட சத்யநாராயாணாவா இங்க வாசம். மலையோட பெயர் அவன் பேர்லயே ரத்னகிரின்னு ஆச்சு"

இந்தக் கோவில் தேர் போல அமைப்புல இருக்கும் தெரியுமா?  நாலு முக்குலயும் சக்கரம் உண்டு. சூரியன் சந்திரன்னு ஐதீகம். அதாவது காலச்சக்கரத்துல பகவான் ஓட்டறார்னு ஐதீகம். 

நாம் கேட்பதை ஆசிர்வதிக்கும் ஸ்ரீ சத்ய நாராயணர் என்பதால் அன்ன(விருப்பங்கள்)வரம் என்றும், அன்னதானம் இங்கு தொடர்ந்து நடைபெறுவதால் அன்னவரம்னும் சொல்வதாக அவர் சொல்லி, "வேண்டிக்கோ" என்றதும் நான் சிரித்துக் கொண்டேன். டொட்டொடெய்ங்க்னு கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள கொடுக்கற சினிமா கடவுளா என்ன? "எதுக்குச் சிரிக்கற?" அவரும் சற்று முன் தனக்குக் குழந்தை இல்லை என்பதைச் சொல்லி ஆதங்கப்பட்டது நினைவுக்கு வந்தாலும் நான் அவரைக் கேட்கவில்லை. "உனக்கு வேணா நம்பிக்கை இல்லையா இருக்கலாம்........பாரு நாம பேசிண்டே மெதுவா நடக்கறோம் போல அவன் (என் கணவர்) முன்னாடி ஓடியே போய்ட்டான், மத்தவாளும் அவன் கூடவே போய்ட்டா போல…. அவன் வேகத்துக்கு நம்மால ஈடு கொடுக்க முடியாதுப்பா….நீ எனக்காக இப்படி மெதுவா வரியா?என்று பேச்சு திசை திரும்பி என் கையைப் பிடித்துக் கொண்டார். “மலை கீழருந்தே படி ஏறி வந்த காலம் அதுஇப்ப பாரு உன் கைய பிடிச்சுண்டு..”. பாவமாக இருந்தது.

கோயில் இரு தளமாக அமைந்திருக்கிறது. தரைத் தளத்தில் ஒரு யந்திரம் (அவர் யந்திரத்தின் பெயர் சொன்னார் முதல் வார்த்தை அது என் மனதில் டக்கென்று பிடிபடவில்லை) வைகுண்ட மஹா நாராயண யந்திரமும், சத்யநாராயண பெருமாளின் தாமரைபாத பீடமும் இருக்கின்றன. யந்திரத்தின் நடுவில் பிள்ளையார், சூரிய நாராயண சுவாமி, பால திருபுரசுந்தரி, மகேஸ்வரர் என்று நான்குபேரும் உள்ளனர்.

நான் பிரமித்துப் பார்த்தேன். முழுவதும் தங்க நிறத்தில் ஜொலித்தது. அந்த இடமே தங்கத்தால், தீபங்களின் ஒளியிலும் மின்சார விளக்கிலும் ஒளிர்ந்தது. கண் கூசியது. மிகப் பெரிய விசாலமான தளம்.

பாத்தியா இப்பவாவது நம்பறியா? பாரு எப்படி ஜொலிக்கறது. இப்படி பணக்கார கோவிலானதுக்குக் காரணமே இந்த யந்திரம்தான்.  திருப்பதி பெருமாள் வாரி வழங்கறாப்ல இவரும் வாரி வழங்குவர் அதானலதான் இங்க கூட்டம்” 

அங்கு தரிசித்துவிட்டு முதல் தளம் சென்றோம். முன்னால் சென்றவர்கள் அங்கு காத்திருந்தார்கள். முதல் தளத்தில் சத்யநாராயண சுவாமி தன் இடப்புறம் தன் தேவி அனந்த லக்ஷ்மியுடனும், வலப்புறத்தில் அழகான சிவனுடனும் நடுநாயகமாகக் காட்சி தருகிறார். அட! நம்ம பார்த்தசாரதிப் பெருமாள் போல மீசையுடன். வீர என்பதாலோ? தாமரைப் பாதம் கீழ் தளத்தில் என்பதால் அதற்கு மேலான அவரின் திருஉருவக் காட்சி. மிக வித்தியாசமாக இருந்தது. மேல் தளமும் ஜொலித்தது.  

இங்க பெருமாள், ஹரிஹர ஹிரண்யகர்ப்ப த்ரிமூர்த்தியாத்மகா, அப்படின்னா மும்மூர்த்திகளும் சேந்த வடிவம். இவா மூணுபேரும் சேந்துதானே இந்த லோகம்சிவனும் பெருமாளும் இருக்கறதுனால எல்லாருமே (சைவ வைணவ)  வருவா" 

எனக்கு என் சுசீந்திரம் நினைவுக்கு வந்தது அங்கும் மும்மூர்த்திகள் உள்ள கோயில்தானே. என் பாட்டியின் நினைவும் வந்தது. 

தரிசனம் முடித்துக் கொண்டு, வெளியில் வந்தோம். மலையில் ராமர், வனதுர்கை, கனகதுர்கை கோயில்கள் இருக்கின்றன ஆனால் நாங்கள் செல்லவில்லை. இக்கோயில் தவிர மலையில் பார்க்க இன்னும் இருக்கின்றன. 

உடைமகளுக்கான சீட்டைக் கொடுத்து எங்கள் டைமைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வளாகத்தில் சுற்றிய போது அன்னதான கூடத்தின் அருகில் இப்பெருமாளும் லக்ஷ்மியும். அன்னதானக் கூடத்தில் பிரசாதம் கிடைக்குமா என்று பார்த்தால் அங்கு சமையல்  நடந்து கொண்டிருந்தது, ஆனால் வேறு ஏதோ விநியோகம் நடந்தது. ஆனால் குழுவினரில் சிலர் முன்னே சென்று விட பின் தங்கிய நாங்களும் அப்படியே நடந்துவிட்டோம்.  கீதாவின் விருப்பமான கோயில் சாப்பாடு, பிரசாதம்.  ஹூம் போயே போச் வாய்ப்பு.

அன்னதானக் கூடம் தாண்டி வந்த போது இப்படிப் பெருமாளும் தேவியும் இருப்பதைப் பார்த்ததும் ஒரு க்ளிக்

அன்னவரத்தின் புகழ்பெற்ற பிரசாதமான உடைத்த கோதுமை, பால், வெல்லம், சர்க்கரை, நெய், முந்திரி, ஏலக்காய், திராட்சை எல்லாம் போட்டுச் செய்த பிரசாதம் அத்தனை பிரமாதமாக இருக்கும். வாங்கிச் செல்லலாம் என்று உறவினர் ரொம்ப ஆசைப்பட பார்த்தால் இருந்த இரு Counter களும் மூடியிருந்தன. கோயிலில் விற்பனை 6 மணியிலிருந்து 9 மணி வரைதானாம்.

“மலைக்குக் கீழ படிக்கட்டுப் பக்கத்துல ஒரு Counter உண்டே அங்கயும், ஹைவேல அந்த இன்னொரு கோயில் இருக்கே அங்க Counter லயும் எப்பவும் கிடைக்குமே அங்க போய் வாங்கிக்கலாம். இந்த (B)பங்கி ப்ரசாதம் கெட்டியா இருக்கும் 15 நாளைக்குக் கெடாது” ஆனால் யாருக்கும் அப்படிச் சென்று வாங்க ஆர்வமில்லை. எனக்கும் என்னோடு நடந்த உறவினருக்கும் மட்டும் ஒரே ஆதங்கம். சரி போ கிடச்சது அவ்வளவுதான் சரி போனா போகிறது என்று முகப்புக் கோபுரம் வழியாக வெளியில் வந்தோம்.

வெளியில் வந்ததும் முகப்புக் கோபுரம் அருகிலேயே ஆறும் மலைகளும் பார்த்த பகுதியில் இப்படி ஒரு கிளிக்

ரத்னகிரி மலைத்தொடரும் பம்பா நதியும்

கோயிலின் இப்பக்கம் அழகான ரத்னகிரி மலைத்தொடர். "இதோ ஓடற நதி பம்பா நதி. உங்க ஊர் பம்பையான்னு கேக்கக் கூடாது. அது வேற இது வேற" நான் வியந்து கேட்கும் முன்னரே உறவினர் முந்திக் கொண்டார். “சித்தி, எங்க நதி?”. “இதோ இருக்கு பாரு… இதுதான்….நதி ஓடற தடம் இருக்கு பாரு…உன் கண்ணுக்குத் தெரியலியா”

தூரத்தில் தெரியும் பாலம். இது கோயிலின் பக்கவாட்டில் தூரத்தில்

தூரத்தில் தெரியும் பாலத்தைப் பார்த்தால் பெரிய நதி என்று தெரிகிறது. ஆனால் தண்ணீர் இல்லை. வெயில்காலம் – நாங்கள் சென்றது சித்திரை இல்லையா, அதனால் இப்படி இருக்கிறதோ.

தேங்கியிருந்த நதி?? தண்ணீரில் வெள்ளைக் கொக்குகள்

ஆனால் அழகு! தண்ணீர் நிறைந்திருந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருந்திருக்கும்! இரு பக்கமும் கரைகளைத் தொட்டுக் கொண்டு!

சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, கோயில் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று தயாராக இருந்த பேருந்தில் ஏறி அன்னவரம் பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்த ஒரு உணவகத்தில் டிஃபன் சாப்பிட்டுவிட்டு விசாகப்பட்டினத்திற்குப் பேருந்தில் ஏறினோம். ரயில் நிலைய நிறுத்தம் உண்டு என்றதும் நல்லதாப் போச்சு என்று அங்கு இறங்க டிக்கெட் எடுத்துக் கொண்டோம். 2.1/2 மணி நேரப் பயணம். ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் 2 மணியளவில் இறங்கி (ஒரு கிமீ தூரத்தில் உள்ள நாங்கள் தங்கியிருந்த அறை) ஒரு ஆட்டோவில் எங்கள் அறையை அடைந்தோம்.

3.30, 4 மணிக்கு அடுத்த இடத்திற்குச் செல்லலாம் என்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டோம். அன்று மாலை சென்ற இடமும், அதற்கு மறுநாள் சென்ற இடமும் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள். அடுத்தடுத்த பதிவுகளில்…

சென்ற பகுதிகளை வாசித்தவர்கள் கருத்திட்டவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

 பகுதி 6பகுதி 5,  பகுதி 4பகுதி 3பகுதி 2பகுதி 1


---கீதா



30 கருத்துகள்:

  1. அன்னவரம் ஸ்ரீ வீர வெங்கட சத்யநாராயணா கோயிலின் முகப்புக் கோபுரம் அழகாய் இருக்கிறது.
    எல்லா படங்களும், கோயிலின் விவரங்களும் மிக அருமை.

    சித்தி சில கதைகளைச் சொல்லியபடி வந்தார்//

    சித்தி சொல்லிய விதம் அருமை.(மேரு, நேரு ந்னு எழுதிடாதே!!!!) ரசித்தேன்.

    //“மலை கீழருந்தே படி ஏறி வந்த காலம் அது…இப்ப பாரு உன் கைய பிடிச்சுண்டு..”. பாவமாக இருந்தது.//

    வயதானால் எல்லோருக்கும் வரும் ஆதங்கம்.
    பெரிய நதி இப்போது ஓடை ஆகி விட்டதே! கொக்குகள் அதில் நிற்பது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதிக்கா....இன்று பதிவு போடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது கரன்ட் போய் போய் வந்து, அதனால் இணையம் சரியாக வேலை செய்யாமல்...இப்போதுதான் ஓரளவு வருகிறது,
      இப்பதான் உங்க பதிவு பார்க்கத் திறந்தேன். கொலு பார்க்க...

      சித்தியிடம் நான் வாயாடியபடியே வந்தேன்.

      //அன்னவரம் ஸ்ரீ வீர வெங்கட சத்யநாராயணா கோயிலின் முகப்புக் கோபுரம் அழகாய் இருக்கிறது.
      எல்லா படங்களும், கோயிலின் விவரங்களும் மிக அருமை.//

      மிக்க நன்றி கோமதிக்கா.

      //வயதானால் எல்லோருக்கும் வரும் ஆதங்கம்.//

      ஆமாம் கோமதிக்கா....

      ஆமாம் அக்கா பெரிய நதி ஓடை போல இருந்தது. ஆனால் அதிலும் கொக்குக்கள் ரொம்ப அழகாக இருந்தன. ஆனால் ஜூம் பண்ணி எடுத்ததில் அவை சின்ன உருவம் இல்லையா அதனால் ரொம்பத் தெளிவாக வரவில்லை என்றாலும் அழகுதான் இல்லையா...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  2. ரத்னகிரி மலைத்தொடரும் பம்பா நதியும் படம் அழகு நதியில் தண்ணீர் இருந்து இருந்தால் மேலும் அழகாய் இருந்து இருக்கும்.

    //கீதாவின் விருப்பமான கோயில் சாப்பாடு, பிரசாதம். ஹூம் போயே போச் வாய்ப்பு.//

    கேட்கவே கஷ்டமாய் இருக்கே!


    //அன்னவரத்தின் புகழ்பெற்ற பிரசாதமான உடைத்த கோதுமை, பால்,
    வெல்லம், சர்க்கரை, நெய், முந்திரி, ஏலக்காய், திராட்சை எல்லாம் போட்டுச் செய்த பிரசாதம் அத்தனை பிரமாதமாக இருக்கும்.//

    அதுவும் வாங்க முடியவில்லையா? கீதா அதை தயார் செய்து தர வேன்டும் என்பது பெருமாளின் நினைப்பாய் இருந்து இருக்கும் . கீதா சுவையாக செய்வார் இல்லையா?

    அடுத்து போன இடத்தை தரிசிக்க வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் கோமதிக்கா அங்கு பிரசாதச் சாப்பாடு கிடைக்கவில்லை என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது ஆனால் பரவாயில்லை என்ன செய்ய?...

    ஆமாம் அக்கா Bபங்கி பிரசாதமும் வாங்க முடியவில்லை.

    //கீதா அதை தயார் செய்து தர வேன்டும் என்பது பெருமாளின் நினைப்பாய் இருந்து இருக்கும் . கீதா சுவையாக செய்வார் இல்லையா?//

    ஹாஹாஹா நான் இது சில விசேஷ நாட்களில் இறைவனுக்குச் செய்வதுண்டுதான்....ஆனால் சுவையாகச் செய்வேனா என்பதெல்லாம் இறைவனுக்குத்தான் தெரியும்!! பாவம் அவர்!! ஹஹாஹாஹா

    அடுத்து போனவை ஜாலி இடங்கள், அக்கா...ஆமாம் இயற்கை தெய்வம்தானே....

    மிக்க நன்றி கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. கோயில் விபரங்கள் நன்று தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி ரசித்தமைக்கு. தொடர்ந்து வாருங்கள்.

      கீதா

      நீக்கு
  5. உங்கள் பயணப் பதிவின் சிறப்பே படமும் கட்டுரையும் ஒன்றுக்கொன்று பொருந்துவது தான். இத்தவணை படங்கள் குறைவு. 

    கட்டுரையும் கூட வந்தவரின் பேச்சால் வித்தியாசமாகி விட்டது. என்றாலும் பார்த்த விவரங்கள் போதிய அளவு உள்ளன. அடுத்த தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பயணப் பதிவின் சிறப்பே படமும் கட்டுரையும் ஒன்றுக்கொன்று பொருந்துவது தான். /

      மிக்க நன்றி ஜெகே அண்ணா...படங்கள் அதிகம் எடுக்க முடியவில்லை. அதான் சொல்லியிருக்கிறேனே பதிவில். உடைமைகளைப் பெற்றுக் கொண்ட பின் இன்னும் வளாகத்தைச் சுற்றியிருந்தால் எடுத்திருக்கலாம். ஆனால் சும்மா பிரசாதம் வழங்கும் இடம் பார்த்துவிட்டு வெளியில் வந்துவிட்டோம்.

      ஆமாம் கூட வந்தவர் பாவம் அவர் பேசியது புராணக் கதை எனவே அதை அப்படியே கொடுத்துவிடலாமே, நான் அவரிடம் கேட்ட கேள்விகளைத் தவிர்த்து அந்த உரையாடல்களைத் தவிர்த்து என்று...

      எனது அடுத்த பதிவு (அடுத்த பதிவு துளசியின் பதிவு.) பெரும்பாலும் படங்கள்தான் இருக்கும்...

      மிக்க நன்றி ஜெகே அண்ணா

      கீதா

      நீக்கு
  6. கூகுள் எல்லாம் பார்த்து ரொம்ப முன்னேற்பாடாக செல்கிறீர்கள்...  நான் இதுவரை இப்படி செய்ததில்லை!!  ஒரு இடத்துக்கு செல்லும் முன்னரே அந்த இடம்பெற்று இப்படி அறிந்துகொள்வது நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஸ்ரீராம் ஆமாம் அந்தப் பழக்கம் ரொம்ப உண்டு. அதாவது போகும் இடத்தை எப்படி நம் பாக்கெட்டிற்கு ஏற்ப முடித்துக் கொள்ளலாம் என்ற ஒரு எண்ணம். அதிகம் செலவில்லாமல்....அது போல தங்க வேண்டுமா இல்லை அப்படியே வந்துவிடலாமா போன்ற விவரங்கள் கிட்ட என்ன இருக்கு என்றால் எல்லாம் கம்பைன் பண்ணிக் கொள்ள முடியுமா என்றும்.

      அப்படிப் பார்க்கும் போது விசாகப்பட்டினத்தில் ஒரே இடத்தில் இருக்கும் அருகருகே இருக்கும் இடங்கள் நேரம் திட்டமிடல் இருந்தால் குழுவினர் ஒத்துக் கொள்ளும் இடங்கள் என்றால் நிறைய இருக்கின்றன. இதைப் பற்றி கடைசிப் பதிவில் சொல்கிறேன்.

      சும்மா ஒரு இடத்திற்குச் சென்று ரிலாக்ஸ் பண்ண என்றால் நான் அதிகம் திட்டமிடுவதில்லை அப்படியே ஜாலியா அதே சமயம் நம் பாக்கெட்டிற்கு ஏற்ப என்று.

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  7. ஏகதேசம்!!  ஏறத்தாழ!  சில வார்த்தைப்பிரயோகங்கள் சட்டென கண்ணில் பட்டு மனதில் மோதி விடுகிறது!  ரயிலிலேயே அந்த இடம் சென்று விட்டது சிறப்பு.  எங்கள் குழுவாயிருந்தால் வண்டி பேசி இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகதேசம்!! ஏறத்தாழ! சில வார்த்தைப்பிரயோகங்கள் சட்டென கண்ணில் பட்டு மனதில் மோதி விடுகிறது! //

      ஹாஹாஹாஹா...ஏகதேசம் ன்ற வார்த்தை நம்ம பிறந்த வீட்டில அடிக்கடி உபயோகிப்பது...

      அடுத்த வரிக்கு முதல் கருத்திலேயே சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன்...அதுதான் காரணம். குழுவினரும் ஒத்துக் கொண்டார்கள் என்பது நீங்கள் சொல்வது போல் நல்லதா அமைஞ்சுருச்சு. ஒரே ஒருவரைத் தவிர மத்தவங்க எங்களை விடச் சின்னவங்க.

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    2. மற்றொன்று குழுவினர் எங்களது நிலையையும் புரிந்து கொண்டவங்க. இதையும் சொல்லணுமே....

      கீதா

      நீக்கு
  8. எல்லாக் கோணங்களிலும் கோவில் கோபுரம் மிக அழகு.  அழகாக படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.  பெரிய கோவில் என்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது.  கோவில் கதைகள் என்பது வழக்கம்போலதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம். ஆமாம் பெரிய கோயில்....கொஞ்சம் கூட்டம் குறைவா இருக்கற நாளா பாத்துப் போங்க நீங்க ப்ளான் பண்ணினால்.

      ஹாஹாஹா ஆமாம் கோயில் கதைகள் வழக்கம் போலத்தான்...அந்த உறவினர் என்னை சொல்லிட்டே வந்தாங்க...நீ கதை கேட்டுப்ப ஆனால் நம்பிக்கையே கிடையாதுன்னு....!! ஹாஹாஹா...நான் அவங்களுக்குச் சொன்னது இதுதான்...கதையை நம்பலைனா நம்பிக்கை இல்லைனு ஆகிடுமான்னு!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. ஒருகாலத்தில் அங்கு நதி சலசலவென ஓடியிருக்கும்.  பசுமையாக இருந்திருக்கும்!  சுற்றுப்புறக் காட்சிகள் யாவும் அழகு.  பம்பா என்று முதலில் படித்ததும் என் புருவங்களும் உயர்ந்தன என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. அன்னவரம் ஸ்ரீ வீர வெங்கட சத்தியநாராயணா கோவிலின் கோபுர படங்கள் அனைத்தும் ஒவ்வொரு கோணங்களில் மிக அழகாக உள்ளது. கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன்.

    கோவிலைப் பற்றியும் அங்கு சென்று தரிசிக்கும் வழிகள், பயணம் செய்யும், ரயில், பேருந்து நிலவரங்கள் பற்றியும் நல்ல விபரமாக சொல்லுகிறீர்கள். நல்ல பயனுள்ள தகவல்களாக தருவது அங்கு செல்லும் சந்தர்ப்பம் வரப்பெற்று செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனமார்ந்த பாராட்டுக்கள்

    ஸ்தல வரலாறு கதை நன்றாக உள்ளது. வரலாறு சொன்ன தங்கள் சித்திக்கும் நன்றிகள்.

    அன்னதானகூடத்தில் இருக்கும் பெருமாள், தேவி படம் கண்களை கவர்கிறது. கொஞ்சம் காத்திருந்தால் பிரசாதம் பெற்றுக கொண்டு வந்திருக்கலாம்.

    கோவில் வாசலில் எடுத்தப் புகைப்படங்களும் மிக அழகு. காளைமாடு மரத்தில் வீரத்துடன் மோதுவது போல தோற்றமளிக்கும் படமும், குறைந்த நதி நீரில் கொக்குகளின் படமும் நன்றாக வந்திருக்கின்றன. நதி பெரிதாகத்தான் உள்ளது. மழைக்காலங்களில் நிரம்பி ஓடுமோ என்னவோ..?

    அடுத்து வரப்போகும் தங்கள் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்தமைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கமலாக்கா

      //கொஞ்சம் காத்திருந்தால் பிரசாதம் பெற்றுக கொண்டு வந்திருக்கலாம்./

      அன்னதானம் கிடைத்திருக்குமாக இருக்கலாம். ஆனால் எங்கள் திட்டத்தின் படி மாலை வேறு ஒரு இடம் போக வேண்டும், மறு நாள் செல்லுமிடத்திற்கு ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டும் கமலாக்கா அதனால்தான்....

      மழைக்காலத்தில் நதியில் நீர் நிரம்பி இருக்கும் படங்கள் பார்த்தேன் கமலாக்கா, நெட்டில்...

      மிக்க நன்றி கமலாக்கா விரிவான கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  11. //மறுநாள் எங்கு சென்றோம் என்று அடுத்த பதிவில்…// என்று சென்ற பதிவில் சொல்லி முடித்திருந்தேன்.//

    ஆமா ஆமா:) நல்லவேளை துளசி அண்ணன் குறுக்கே புகுந்து போஸ்ட் போடாததால், இது கரெக்ட்டா நினைவிருக்கே!!!:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா.....அவர் போஸ்ட் வரணும் அதுவும் தொடர்தான்....அவர் எழுதிமுடித்தாரா என்று கேட்டிருக்கிறேன். அவரும் ரொம்ப பிசி...

      மிக்க நன்றி அதிரா..

      கீதா

      நீக்கு
  12. மிக அழகான இடத்தில்தான் அமைஞ்சிருக்குது கோயில், சித்தி அழகாகக் கதை சொல்லியிருக்கிறா, அதை நீங்க ஒழுங்காக் கேட்க வேண்டாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா அழகான இடம்.

      //சித்தி அழகாகக் கதை சொல்லியிருக்கிறா, அதை நீங்க ஒழுங்காக் கேட்க வேண்டாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..//

      ஹாஹாஹாஹா அதானே.....அது பாருங்க நான் ஒழுங்கா கதை எல்லாம் கேட்பேனாக்கும்..ஆனா கீதா இடையில் சில கேள்விகள் கேட்பா பாருங்கோ அப்பத்தான் சித்தி சொல்லுவாங்க...பதிவில் சொல்லிருக்கேனே அது...

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  13. அப்போ ஆந்திரா மாவட்டம் எனில், திருப்பதிக்குக் கிட்டத்தானே இக்கோயிலும் வருகிறது.. திருப்பதிக்கும் போனீங்களோ இம்முறை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போக இல்லை அதிரா. விசாகப்பட்டினத்திலிருந்து திருப்பதிக்குச் செல்ல 15 மணி நேரம் ஆகும்....தூரம். திட்டத்தில் இல்லை. திருப்பதிக்குப் போகணும்னா முன்னரே அங்கு தரிசன டிக்கெட் எல்லாம் வாங்கணுமே....கூட்டம் வேறு....எனக்குக் கூட்டம்னா கொஞ்சம் அலர்ஜி!!

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  14. நம்ம ஊரு "தாணு மால் அயன்" (சுசீந்திரம்) அங்கும் இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்... ஓம் நமோ பரப்பிரம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சிவா நம்ம ஊர் தாணு மால் அயன் அது எங்கு போனாலும் நினைவுக்கு வந்துவிடும். இங்கு பெரிய ஆஞ்சனேயர் கோயில்கள் மற்றபடியும் நிறைய இருக்கின்றன எப்போதும் சுசீந்திரம் ஆஞ்சுதான் நினைவுக்கு வருவார்...அது தனி தான்

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா

      கீதா

      நீக்கு
  15. அன்னவரம் ஊர் பெயரெல்லாம் கேட்டதே இல்லை. முற்றிலும் புதிய அமைப்புடன் கூடிய கோவில் தரிசனத்துக்கு மிக்க நன்றி.அடுத்து நீங்கள் போகப் போகும் இடத்துக்காகக் காத்திருக்கேன். இங்கேயும் உத்தமர் கோயில் எனப்படும் பிச்சாண்டார் கோயில் மும்மூர்த்திகளும் சேர்ந்து இருக்கும் கோயில் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாக்கா. நீங்கள் அன்னவரம் கேள்விப்பட்டதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது கீதாக்கா....கோயில்கள் பத்தி நீங்க நிறைய எழுதுவீங்களே...கீதாக்கா...

      //இங்கேயும் உத்தமர் கோயில் எனப்படும் பிச்சாண்டார் கோயில் மும்மூர்த்திகளும் சேர்ந்து இருக்கும் கோயில் என்பார்கள்.//

      உத்தமர் கோயிலிலும் மும்மூர்த்திகள் சேர்ந்து இருக்கிறார்களா...இது தகவல்....உத்தமர் கோயில் கேட்டிருக்கிறேன்...ஆனால் சென்றதில்லை.

      மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு