பகுதி 5, பகுதி 4, பகுதி 3, பகுதி 2, பகுதி 1
விசாகப்பட்டினத்தில் பயணம் தொடங்கிய நாளில் காலை ஆர் கே கடற்கரையில் இருக்கும் காளி கோயில், ஆர்கே கடற்கரை, அதன் பின் சிம்மாச்சலம், அதன் பின் குருசுரா நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் பார்த்ததை கடந்த பதிவில் சொல்லியிருந்தேன். அங்கிருந்து 8.2 கிமீ தூரத்தில் உள்ள கைலாசகிரி எனும் சிறிய மலைக்குக் சென்றோம்.
ஆட்டோ, கார் அல்லது வண்டியில் சென்றால் கடற்கரைச் சாலையில் சிறிது தூரம் பயணித்து இடப்புறம் உட்புறம் சாலையில் திரும்பி மலைப்பகுதிக்குத் செல்ல வேண்டும். வண்டி செல்லும் மலைப் பாதை.
மலைப்பகுதியில் பூங்காவிற்கு நடந்து செல்லவும் வழி இருக்கிறது. 30 நிமிடம்தான் நடப்பதற்கு ஆகும் என்று தெரிகிறது. இத்தனையையும் நான் கூகுள் மேப், மற்றும் இணையத்தில் பார்த்து குறித்து வைத்திருந்தேன்.
மலைக்குத் திரும்பும் சாலை வரை செல்லாமல் அதற்கு சற்று முன்னேயே கடற்கரைச் சாலையிலேயே தொங்கூர்தி நிலையம் இருக்கிறது. அதுவரை செல்ல 7 கிமீ தூரம்தான். அதாவது ஆர்கே கடற்கரை குருசுரா அருங்காட்சியகத்திலிருந்து.
எல்லா வண்டிகளுக்கும், நடராஜா சர்வீஸாக இருந்தாலும் மலை ஏறும் போதே நுழைவுக்கட்டணம் உண்டு. தொங்கூர்தியில் சென்றாலும், பூங்காவின் உள்ளே செல்ல நுழைவுக்கட்டணம் தனி.
வெளிச்சம் இருக்கிறதே என்று எனக்கு நடந்து செல்ல ஆசை. போகும் போது மலையழகை ரசித்துக் கொண்டே நடந்து சென்றுவிட்டு வரும் போது தொங்கூர்தியில் வரலாமே என்று. ஆனால் எல்லோருக்கும் நடக்க முடிய வேண்டுமே. எனவே அது கைவிடப்பட்டது.
தொங்கூர்தியா அல்லது மலையின் மேல் இருக்கும் பூங்கா வரை வண்டியா என்று யோசித்து கடைசியில் தொங்கூர்தியில் சென்றால் கடலின் அழகை இன்னும் ரசிக்கலாமே என்று முடிவு செய்ததால் அருங்காட்சியகம் இருக்கும் ஆர்கே கடற்கரையிலிருந்து 4.15மணி அளவில் கிளம்பி இரண்டு ஆட்டோ வைத்துக் கொண்டு கடற்கரைச் சாலையிலேயே இருக்கும் தொங்கூர்தி நிலையத்தில் இறங்கிக் கொண்டோம். 15 நிமிடப் பயணம்.
இதோ இந்த இடத்தில் தான்...ஒரு ஆட்டோ தெரிகிறதா? (நாங்கள் சென்ற ஆட்டோ இல்லையாக்கும் இது) கடற்கரை சாலையில் தொங்கூர்தி (ரோப்வே பேஸ் ஸ்டேஷன்) அடித்தள நிலையம்....
எதற்கோ ஒரு கூட்டம் அங்கு...
தொங்கூர்திக்கான சீட்டு பெற்றுக் கொண்டு வரிசையில் நின்றோம். தொங்கூர்தி பெட்டி ஒன்றில் 6 பேர் அமர முடியும். நாங்கள் ஒருமித்துச் செல்ல வேண்டும் என்பதால் 10 நிமிடம் காத்திருக்க வேண்டியதானது. ஒரு நபருக்குப் போய் வர டிக்கெட்
விலை – அப்போது ரூ 60/70 என்று நினைவு.
டக்கென்று பார்ப்பதற்கு ...இப்படத்தில் இருப்பவர் கேபிள் கார் பெட்டியைத் தள்ளுவது போல் இருக்கு இல்லையா!!!!! கார் ஸ்டார்ட் ஆகத் தள்ளுவோமே அது போல!!!!
இடையில் குறுக்கிடும் மலைக்குச் செல்லும் சாலை...வண்டில நீங்க தைரியமா போலாம்...இடிக்காது!!!!
கேபிள் காரிலிருந்து நகரத்தின் காட்சி
மலை உச்சியில் 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் பூங்கா விசாகப்பட்டினத்தின் பெருநகர வளர்ச்சி ஆணையத்தால் (VMRDA) சுற்றுலாத்தலமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பூங்கா நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. வித விதமான பூக்கள், செடிகள். வித்தியாசமான மரங்கள். ஆங்காங்கே உட்கார்வதற்கு பெஞ்சுகள். பூங்காவை அழகூட்ட சில வடிவங்கள் செதுக்கப்பட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.
எங்கு பார்த்தாலும் தீனிக் கடைகள்தான்!
ஐஸ்க்ரீம், வேக வைத்த சோளம், பஜ்ஜி, டிஃபன்,
பிரியாணி, குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் அது இது என்று. நல்ல காலம் குப்பைகள் அவ்வளவாகக் கண்ணில் படவில்லை. சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான சறுக்கு மரம் ஊஞ்சல்,
Bபார் கம்பிகள், சீ சா, என்று பல வகைகள். (படங்கள்? உஷ்!!! கேட்கப்பிடாது!)
பூங்காவைச் சுற்றத் தொடங்கினோம். மிகவும்
பெரிய பரப்பளவு என்பதால் குழுவில் இருந்த மற்றவர்களால் அதிகம் நடக்க முடியவில்லை. எனவே
டாய் ரயில் இருப்பது பற்றி விசாரித்தோம்.
பூங்காவை மெதுவாகச் சுற்றி
வரும். பூங்காவில் பல பகுதிகளையும் கண்டு ரசித்துக் கொண்டே வரலாம். ஆனால் நாம் எந்தப்
பக்கத்தில் அமர்ந்திருக்கிறோமோ அந்தப் பக்கம் மட்டுமே ரசிக்க முடியும். அப்படிச் சென்ற
போது சில இடங்களை படம் எடுத்துக் கொண்டேன். பூங்காவிற்குள் மலர்க்கடிகாரம் (இந்தப்
புகைப்படம் எடுத்தும் சரியாக வரவில்லை) சங்கு சக்ர நாமம் (இது சும்மா…அலங்காரம். எனவே
ஈர்க்கவில்லை) என்று இருப்பவற்றை சும்மா க்ளிக்ஸ்.
கைலாசகிரியின் முக்கிய அம்சமே அதன் பெயர்க்காரணமான
40 அடி உயர சிவன் மற்றும் பார்வதி சிலைதான். அதனால்தான் இம்மலை கைலாசகிரி என்று பெயர் பெற்றிருக்கிறது.
மாலை மயங்கும் நேரத்தில் சிவனும் பார்வதியும் ஒளிர்வார்கள்!
சிலையின் கீழே தண்ணீர் ஓடும் வகையில் படிகளும்
கூழாங்கற்களும் இருபுறமும் பூஞ்செடிகளுமாக அழகாக இருந்தது இந்த இடம். ஆனால் தண்ணீர்தான்
இல்லை!
மாலை
6 மணிக்கு மேல் அதிகம் இருட்டு வரவில்லை (வெயில் காலமாச்சே) என்றாலும் என் மூன்றாவது விழிக்கு மாலைக்கண்ணாச்சே
அதனால் பல படங்கள் ஹோ கயா! இந்தப் படங்கள் எடுத்த பிறகு இருள் மெல்லக் கவிழத் தொடங்கியதால் மூன்றாவது விழியை மூடிவிட்டேன்.
வயிறு
கெஞ்சி மணியடித்தது. இருந்த உணவகங்களில் அதுவும் உணவு வகைகள் என்று கிடைத்த இரண்டில் ஒன்று
அசைவம் என்பதால் அதைத் தவிர்த்து சைவ உணவகம் ஒன்றில் நான் பேல்பூரி சொல்ல, மற்றவர்கள்
தோசை, பாவ் பாஜி, என்று சாப்பிட்டு, தொங்கூர்தி நிலையத்திற்கு நடந்து - ஒரு 5 நிமிட
நடை – தொங்கூர்தியில் ஏறி மலையின் கீழ் வரும் போது ஒளிர்ந்த அழகான விசாகப்பட்டின நகரையும்,
இரவுக் கடலின் கரு நீலப்புடவையின் கரை சேரா அலைகளின் பார்டர் போன்ற சுருண்ட வெள்ளை மடிப்புகளையும், தூரத்தில்
ஒளிப்புள்ளிகளாய்த் தெரிந்த கப்பலையும் கண்டு ரசித்துக் கொண்டே மலையடிவாரத்தை அடைந்தோம். சும்மா சொல்லப்டாது, Rollicking Evening!
பேருந்தா,
ஆட்டோவா என்று ஒற்றையா இரட்டையா போட்டு, பேருந்து என்று ஏகமனதாய் முடிவு செய்து அவ்வழி
ரயில் நிலையம் செல்லும் பேருந்தில் ஏறி 20 நிமிடப் பயணம்தான், நாங்கள் தங்கியிருந்த
இடத்தின் அருகில் இறங்கி அங்கிருந்து 7 நிமிட நடைதானே என்று நினைத்து இறங்கினால், அங்கு
கண்ணில் பட்டது பாருங்க, அன்று காலையில் நான் தெருவைச் சுற்றிப் பார்த்த போது கண்டு
குறித்து வைத்துக் கொண்ட புகழ்பெற்ற கராச்சி பேக்கரி!
விடுவோமா?
உள்ளே புகுந்தாச்சு. வித விதமான பிஸ்கட்கள், இனிப்பு வகைகள், கார வகைகள் என்று மயக்கின.
ஒரு சில வாங்கிக் கொண்டு, சுவையூட்டப்பட்ட பால் குடித்துவிட்டு அறைக்கு வந்த போது இரவு
9.30. ரிஃப்ரெஷ் செய்து கொண்டு படுத்ததுதான்
தெரியும். மறுநாள் எங்கு சென்றோம் என்று அடுத்த பதிவில்…(என்ன ஒரு மாசம் கழித்தா இல்லை
அடுத்த வருஷமா என்று யாருடைய?! குரலோ கேட்கிறது!!! பாருங்க!)
கடந்த பதிவுகளைப் (துளசியின் பதிவுகள், என் பதிவு) பார்த்த, கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
-----கீதா
படங்கள் நன்றாக இருக்கிறது. விபரங்கள் பயனுள்ளவை.
பதிலளிநீக்குமேலிருந்து எடுத்த ஆட்டோவின் பின்புறத்தில் எழுதியுள்ள வாசகம் அருமை.
தொடர்ந்து வருகிறேன் நன்றி.
கருத்திற்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்கு//மேலிருந்து எடுத்த ஆட்டோவின் பின்புறத்தில் எழுதியுள்ள வாசகம் அருமை.//
ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்!!! உங்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது என்று...
மிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
படங்கள் அழகாக வந்திருக்கின்றன. இரண்டாவது படத்தில் 3 கூரைகள் கடலில் மிதப்பது போல் ஒரு மாயை 3 வது படத்தில் சரியாக தெரிகின்றன. காமரா நிகான் p100 காமெரா போல் தோன்றுகிறது.
பதிலளிநீக்குபீச் படங்கள் எடுக்கும்போது 1/3 விதியை சரியாகப் பின்பற்றியிருக்கிறீர்கள்.
மொத்தத்தில் விசாகப்பட்டினம் பழமையும் புதுமையும் கலந்து ஒரு காணத்தக்க, போர் அடிக்காத ஊர் என்று உங்கள் பதிவுகள் வழி தெரிகிறது.
வெங்கட்ஜி விசாகப்பட்டினம் வழி அரக்கு பள்ளத்தாக்கு சென்றாலும் விசாகபட்டணம் குறித்து இத்தனை விரிவாக எழுதியதாகத் தெரியவில்லை.
Jayakumar
படங்கள் அழகாக வந்திருக்கின்றன//
நீக்குமிக்க நன்றி ஜெகேசி அண்ணா
இரண்டாவது படத்தில் 3 கூரைகள் கடலில் மிதப்பது போல் ஒரு மாயை 3 வது படத்தில் சரியாக தெரிகின்றன. //
ஆமாம் வேண்டுமென்றே எடுத்தேன் அண்ணா எனக்கு அது ரொம்பப் பிடித்திருந்தது. அலை கிட்டத்தில் வரும் போது அந்த கூரைகளை த் தொட எல்லாம் இல்லை.....அந்த ஆங்கிளில் அப்படித் தெரிந்ததும் வியூ பைண்டரில் பார்த்த போது , உடனே எடுத்துவிட்டேன். அடுத்த படம் கொஞ்சம் க்ளோஸப்.
காமரா நிக்கான் கூல் பிக்ஸ் சாதாரணம்தான் அதுவும் பயன்படுத்தப்பட்டு என்னிடம் வந்த ஒன்று. நிறைய பிரச்சனைகள் இருந்தது
பீச் படங்கள் எடுக்கும்போது 1/3 விதியை சரியாகப் பின்பற்றியிருக்கிறீர்கள். //
ரூல் ஆஃப் தேர்ட்ஸ் (Rule of thirds) அவ்வப்போது முயற்சி செய்வதுண்டு....மிக்க நன்றி அண்ணா.
நிஜமாகவே விசாகப்பட்டினம் போரடிக்காத நகரம்.
வெங்கட்ஜி எழுதியிருந்தால் என்னை விட மிகவும் சிறப்பாக எழுதியிருப்பார். அவரே சொல்லியிருந்தார் அவரது பயணம் அப்போது நகரத்திற்குள் அதிகம் இல்லை, அரக்கு பள்ளத்தாக்கு, போரா கேவ்ஸ், அன்னாவரம், கைலாசகிரி மட்டும் நகரத்திற்குள், அப்புறம் ஸ்ரீகாகுளம், என்று அப்படி சென்றது. அதைப் பற்றி அவர் விரிவான தகவல்கள் கொடுத்திருக்கிறார். நகரத்திற்குள் அதிகம் செல்லவில்லை என்று அவரே சொல்லியிருந்தார். சென்றிருந்தால் என்னைவிட இன்னும் நிறைய தகவல்கள் தந்திருப்பார்.
மிக்க நன்றி ஜெகே அண்ணா
கீதா
படங்களும் பதிவும் மிக அருமை. படங்கள் மிக அழகாக வந்துள்ளன.
பதிலளிநீக்குஆனால் ஒவ்வொரு பதிவுக்கும் இடையில் கைலாச பயணம் போய்விட்டு வருவது மாதிரி, சிலபல மாதங்கள் இடைவெளி கொடுப்பதால், இது எந்தப் பயணம், எப்போ போனது என்று எண்ணுவதைத் தவிர்க்க இயலவில்லை
படங்களும் பதிவும் மிக அருமை. படங்கள் மிக அழகாக வந்துள்ளன.//
நீக்குமிக்க நன்றி நெல்லை.
ஆனால் ஒவ்வொரு பதிவுக்கும் இடையில் கைலாச பயணம் போய்விட்டு வருவது மாதிரி, சிலபல மாதங்கள் இடைவெளி கொடுப்பதால், இது எந்தப் பயணம், எப்போ போனது என்று எண்ணுவதைத் தவிர்க்க இயலவில்லை//
ஹாஹாஹா...ஆமாம் நெல்லை தொடர்ந்து எழுத முடியவில்லை. மனம் ஒத்துழைக்க மறுக்கிறது. பல பிரச்சனைகள். வேலைகள்...ப்ளாகை நிறுத்திவிடலாமா என்றும் இடையிடையே தோணுது. ஆனால் மனதை எப்படியேனும் முழுவதும் எங்கேஜ்டாக வைத்துக்கொள்ளவும், நட்புகளோடு இப்படிப் பேசும் போதும் நீங்கள் கலாய்க்கும் போதும் ரிலாக்ஸ் செய்ய முடிகிறது.
1,2,3 என்று எண் கொடுக்கிறேனே.....தலைப்பையும் மாற்றவில்லை...அதிலிருந்து இது விசாகப்பட்டினம் தான்னு புரிஞ்சுக்கோணும் ஹிஹிஹிஹிஹி..
கீதா
//தொங்கூர்தியில் ஏறி மலையின் கீழ் வரும் போது ஒளிர்ந்த அழகான விசாகப்பட்டின நகரையும், இரவுக் கடலின் கரு நீலப்புடவையின் கரை சேரா அலைகளின் பார்டர் போன்ற சுருண்ட வெள்ளை மடிப்புகளையும், தூரத்தில் ஒளிப்புள்ளிகளாய்த் தெரிந்த கப்பலையும் கண்டு ரசித்துக் கொண்டே மலையடிவாரத்தை அடைந்தோம். சும்மா சொல்லப்டாது, Rollicking Evening!//
பதிலளிநீக்குஉங்களின் எழுத்து அருமை.
கருநீலப்புடவையை , சுருண்ட வெள்ளை மடிப்புகளை ரசித்தேன்.
படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
நீங்கள் சொல்வது போல அமைதியான அழகுதான். கடற்கரையின் எழிலை ரசித்து கொண்டே இருக்கலாம். சுற்றுலா பயணியரை ஈர்க்கும் அத்தனை விஷயமும் இருப்பதை படித்து மகிழ்ச்சி.
உங்களின் எழுத்து அருமை.//
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா. இப்படி ஒவ்வொரு பதிவிலும் எழுத மனதில் ஏதேனும் தோன்றினாலும் உடனே எழுத முடியாமல் போய்விடுகிறது. இப்படியான ஊக்கம்தான், நெல்லையின் கலாய்த்தல்கள் தான் இப்படியேனும் கொஞ்சம் எழுத வைக்கிறது.
நீங்கள் சொல்வது போல அமைதியான அழகுதான். கடற்கரையின் எழிலை ரசித்து கொண்டே இருக்கலாம். சுற்றுலா பயணியரை ஈர்க்கும் அத்தனை விஷயமும் //
ஆமாம் அக்கா. நிஜமாகவே விசாகப்பட்டினத்தில் வசிப்பவர்களுக்கு வார இறுதியில் நல்ல புத்துணர்ச்சி தரும் இடங்கள் அருகருகே நிறைய இருக்கின்றன.
மிக்க நன்றி கோமதிக்கா.
கீதா
படங்கள் அழகோ அழகு. தகவல்களும் அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ, உங்கள் கருத்திற்கும், பதிவை ரசித்தமைக்கும்
நீக்குகீதா
ஆகா... ஆகா... படங்களும் விவரங்களும் அட்டகாசம்...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி, உங்கள் கருத்திற்கும் பதிவை ரசித்தமைக்கும்
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகு. பயண விபரங்கள், அதற்கு ஆகும் செலவுகள் என நினைவாக குறிப்பிட்டு பதிவை அருமையாக்கி உள்ளீர்கள். சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பயணங்களின் பதிவிலும் இப்படித்தான் பலருக்கும் பயனுள்ள விஷயங்களை குறிப்பிடுவார். உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
கடற்கரைப் படங்கள் அனைத்தும் மிக அழகாக வந்திருக்கின்றன. கடற்கரை வர்ணிப்பும் உங்கள் எழுத்தில் நன்றாக உள்ளது. ரசித்தேன்.
பூங்கா மலர்களும், அதன் விவரிப்புகளும் மனதை கொள்ளை கொள்கின்றன 40அடி உயரமுள்ள சிவன் பார்வதியை தரிசித்து கொண்டேன். இங்கெல்லாம் செல்ல இந்தப் பிறவியில் நடக்குமா எனத் தெரியாது. ஆனால் தங்கள் பதிவின் மூலம் சென்று பார்த்த திருப்தி வருகிறது. அது போதும் என்றே மனதுக்கு தோன்றுகிறது. அடுத்துச் சென்ற இடங்களையும் படித்து ரசிக்க நான் காத்திருக்கிறேன்.
பதிவுகள் எழுத தாமதமாகிறதே என கவலை கொள்ளாதீர்கள். நமக்கு எப்போது சௌகரியபடுகிறதோ அப்போது எழுத வேண்டியதுதான். நமக்கென்று நம் நடட்புகளின் ஆதரவு இருக்கும் வரை நம் மனம் சோர்வடையாது என நான் நம்புகிறேன்...! என் நம்பிக்கை உண்மைதான் இல்லையா சகோதரி... தங்கள் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா மிக்க நன்றி விரிவான கருத்துரைக்கு. படங்களை ரசித்ததற்கும் மிக்க நன்றி. வெங்கட்ஜி போல எல்லாம் எழுத வராது கமலாக்கா. அவர் அருமையாக எழுதுவார்.
நீக்குஉண்மைதான் நமக்கு எப்போது சௌகரியப்படுகிறதோ அப்போது எழுத வேண்டியதுதான்....ஆம் நம் நட்புகளின் ஆதரவில்தானே ஓடுகின்றது!!
உங்கள் நம்பிக்கை உண்மைதான் கமலாக்கா...
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
சிறப்பான, மிகச்சிறப்பான படங்கள். சுவாரஸ்யமான விவரங்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம். படங்களையும் பதிவையும் ரசித்ததற்கு
நீக்குகீதா
///வெளிச்சம் இருக்கிறதே என்று எனக்கு நடந்து செல்ல ஆசை///
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பாதுகாப்பாக இருக்கிறதோ எனத்தான் முதலில் பார்த்து ஆசைப்படோணுமாக்கும்:)).. ஆனா ஒன்று பலர் சேர்ந்து போனால், சில விசயங்களுக்கு நல்லது, சில விசயங்களுக்கு நம் குடும்பம் மட்டும்போனால்தான் செளகரியம்:))
ஹாஹாஹா.....அங்கு பாதுகாப்பு உண்டு அதிரா. நிறையப்பேர் நடந்து செல்வார்கள். ஆமாம் ஒவ்வொரு குழுவிலும் ப்ளஸ் மைனஸ் இருக்கும்தானே...குடும்பத்தோடு போனாலும் சில சமயம் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் வருமே...எனவே ஒத்த அலைவரிசை உடய குழு என்றால் செம ஜாலிதான்..
நீக்குமிக்க நன்றி அதிரா.
கீதா
நீங்க தொங்கூர்தி என்றதும், நான் ஏதோ கோபுரமாக்கும் எனச் சினைச்சிட்டேன் கர்ர்ர்:)).. தொங்கும் + ஊர்தி = தொங்கூர்தியா ஹா ஹா ஹா.. கேபிள் கார்:)).
பதிலளிநீக்குகைலாசகிரி சிவன், சிவன் சிலைகளை பெரிசு பெரிசாப் பார்க்கும்போது ஒரு பரவசம்தான், வட இந்தியாவிலும் சிவன் சிலைகள் பென்னாம் பெரிசாக கட்டியிருந்ததைப் பார்த்ததும் எனக்குப் பக்திப் பரவசமாகிட்டேன், ஏனெனில் நான் வணங்குவதில் மெயின் தெய்வம், சிவன் அம்மன், வைரவர், ஆஞ்சனேயர்.. இப்படி வரும் என் லிஸ்ட்:))
ஹாஹாஹா ஆமாம்....துளசியின் மலேசிய பதிவை டைப்பும் போது, சும்மா சில தகவல்கள் விக்கியில் பார்த்த பொது கிடைத்தது.
நீக்குசிவன் பார்வதி ஆமாம் அழகு எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ஹைஃபைவ் உங்கள் லிஸ்ட்....பிள்ளையார் இல்லையா என் லிஸ்டில் அவரும் உண்டு...
மிக்க நன்றி அதிரா
கீதா
நெற்றிக் கண்ணைத் திறக்கினும், மூன்றாவது கண்ணை மாலையில் மூடியது குற்றம் குற்றமே:))..
பதிலளிநீக்குஉங்கட கண்ணுக்கு அசைவக் ஹோட்டேல் தெரிஞ்சிருக்குது:)).. நாங்க போன வட இந்தியாவிலெல்லாம் சைவக் ஹோட்டேல்கள்தான் அதிகம்:), அசைவக் ஹொட்டேல்கள் தேடித்தேடித்தான் போக வேண்டியதாப்போச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), டாபா எனப் பெரிய பெரிய பெயர்ப்பலகைகளுடன் இருந்ததைப் பார்க்க அங்கும் ஆசையாக இருந்தது.
ஹாஹாஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்...ஹையோ என் மூன்றாவது கண்ணு நல்லா இருந்துச்சுனா நான் ஏன் மூடப் போறேன்...சொல்லிருக்கிறேனே ஏற்கனவே அது பிரச்சனை பண்ணும் அதிலும் அதுக்கு மாலைக்கண்....வேறு...அதான் மூடிட்டேன்...
நீக்குவட இந்தியாவில் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் ஆனால் பஞ்சாபில் இருந்திருக்கும் அசைவ ஹோட்டேல்கள். ஆமாம் தாபாக்கள் நிறைய உண்டு. நன்றாகவும் இருக்கும் ஒரு சில தவிர....
மிக்க நன்றி அதிரா
கீதா
படங்களும் வர்ணனையும் நன்றாக இருக்கிறது.. அப்போ அடுத்த போஸ்ட் துளசி அண்ணனுடையதோ.. ஒன்றுவிட்ட ஒரு போஸ்ட் எனத்தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறீங்கள்போல இருக்கே ஹா ஹா ஹா.. தொடருங்கோ.. வர முயற்சிப்பேன் எப்பவும்.
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ஆமாம் ஏன்னா இருவருக்கும் எழுத நேரம் வேண்டுமே....ஒரு வர் போஸ்ட் ஒரு 4 நாள் போட்டும்னு அந்த நேரத்தில் அடுத்தவர் எழுதலாம்னு இப்படி நினைத்துப் பேசிக் கொண்டோம் ஆனால் என் பயணப் போஸ்ட்கள் ரொம்ப தாமதமாகிறது.....அடுத்த போஸ்ட் துளசியின் போஸ்டாகத்தான் இருந்திருக்கும் ஆனால் அவர் ரொம்ப பிஸி பயணம் அது இது என்று. எனவே எனது போஸ்ட்தான். அதற்கு அடுத்துதான் அவருடையது வரும், அவர் எழுதியிருந்தால்...
நீக்குவாங்க அதிரா எப்ப 'ரைம்' கிடைக்குதோ வாங்க!!!!
மிக்க நன்றி அதிரா...
கீதா
பிரசுரிக்கப்பட்ட அனைத்து படங்களும் நேரடியாக சென்று பார்ப்பதுபோன்ற அனுபவங்களை தருகின்றன. பூங்காக்களை அருகில்சென்று பார்த்தால்தான் அழகு என்றால் பூமியை தொலைவில் அதுவும் மேலிருந்து பார்த்தால்தான் அழகோ அழகு...
பதிலளிநீக்குமிக்க நன்றி நாஞ்சில் சிவா...பதிவையும் படங்களையும் ரசித்தமைக்கு. ஆமாம் மேலிருந்து பார்க்கும் போது அது இன்னும் அழகு அது ஒருவிதமான அழகு...ஈர்க்கும் அழகு,
நீக்குகீதா