புதன், 30 அக்டோபர், 2013

கல்லெறிபவர்களே பாவம் செய்யாதீர்கள்


29-10-2013 அன்று, திரு 18 பேர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது, கேரள முதல்வர் உம்மன் சாண்டியை கண்ணூரில், கல்லெறிந்து காயப்படுத்திய சம்பவத்திற்காக.  கேரளத்திலுள்ள எல்லா அரசியல் தலைவர்களும், சமூகத்தலைவர்களும், கல்லெறிந்து காயப்படுத்தியதை எதிர்த்து, கண்டனம் தெரிவித்திருந்தனர்.  வரலாற்றில் மிகவும் மனதை வருத்தும் ஒரு சம்பவமாக மாறிவிட்ட ஒன்று இது.  இதற்கு முன் இரண்டு முதல்வர்களுக்கு கேரளாவில் இது போல் நிகழ்ந்திருக்கிறது.  இப்போது மூன்றாம் முதல்வர்.  கேரளாவில் அரசியல் காரணமாக, குத்து, வெட்டு, வெடிகுண்டுவீச்சு போன்றவை தாராளமாக அடிக்கடி நிகழும் கண்ணூர் மாவட்ட்த்தில்தான் இதுவும் நிகழ்ந்திருக்கிறது.  மதம், இனம், அரசியல், இவை எல்லாம் மனதில் எதிர்சாரியில் இருப்பவர்களிடம், ஆத்திரம், விரோதம் வெறுப்பு இவற்றை வளரச் செய்யும்தான்.  என்றாலும், நாம் இந்தியர்கள் என்றும், மத, இன, அரசியல்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் Secular India வில் வசிப்பவர்கள் என்பதையும் மறக்கக் கூடாது.  இந்த எண்ணம் அதிகமாகத் தங்கள் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தாத பெரும்பான்மையான இந்தியர்களிடம் இருப்பதால்தான் இது போன்ற ப்ரச்சினைகள் எப்போதேனும் திடீரென எதிர்பாராமல் உருவானாலும், மற்ற அனைவருடைய சமயோசிதமான தலையிடல் மூலம் மோசமான நிலைமைக்கு இழுத்துச் செல்லப்படாமல் appaஅப்பிரச்சினையோடு முடிகிறது.

முகத்தில் இரத்தக் கறையுடன் தனக்கு இது போன்று நிகழ்ந்ததற்காக வன்முறை கூடாது என்று சொல்லும் முதல்வரைக் கண்டதும், இடது சாரி அரசு கேரளாவை ஆள வேண்டும் என்று எப்போதும் விரும்பும் எனக்கே அணிகளின் இந்த அறிவின்மையை எண்ணி அடக்க முடியாத ஆத்திரம் வந்தது. 
திடீரென, ஏறத்தாழ 40 வருடங்களுக்கு முன்பு, நான் பிறந்து வளர்ந்த, தேனியருகே உள்ள ராசிங்கபுரம் எனும் கிராமத்தில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

அது ஒரு தேர்தல் நேரம். புரட்சித்தலைவர் தலைமையில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தீவிரமான போட்டி.  கிராமத்திலிருந்து அனைத்து தி.மு.க. ஆதரவாளர்களும் (அட்வகேட் முத்துமனோகரன், எம்.ஜி.ஆர். சைக்கிள் கடை முன்பு நடத்தி வந்த ஒரு நபர், பெயர் ஞாபகம் இல்லை.  இப்படி விரலில் எண்ணக் கூடிய சில ஆட்கள் மட்டும் தி.மு.க.வில்) ஏறத்தாழ 90% பேர் அ.தி.மு.க வில்.  ஒன்றுக்கு, இரண்டு அ.தி.மு.க கிளைகள் ராசிங்கபுரத்தில். ஒன்று இளைஞர்களுக்கும், நடுத்தர வயதினர்களுக்கும். ம்ற்றொன்று 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்.  என் அப்பா கிளைக்காக ஒரு ரூமே கொடுத்துவிட்டார்.  மேலும் திரு. சுருளிமுத்து என்பவருடன் சேர்ந்து தினமலர் பத்திரிகை ஏஜன்சி ஒன்று எடுத்துவிட்டார். அதனால் சிந்துபாத்திற்கும், லைலாவிற்கும் என்ன நடந்தது என்று தினத்தந்தி கிடைக்காமல் சிறுவர்களாகிய நாங்கள் தவித்த தவிப்பு எங்களுக்குத்தான் தெரியும்.
ஒரு மாலை நேரம். அட்வகேட் முத்துமனோகரன் வீட்டிற்கு முன்னால் தோரணம், கொடிகள், ஒலிபெருக்கியில் பாடல்கள்.  ப்ள்ளியிலிருந்து திரும்பிய நாங்கள் அங்கு கூடினோம். 
அன்று “கலைஞர் எங்கள் கிராமத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்று சொன்னார்கள். பெரும் தலைவர்கள் யாரும் அப்படி அந்த நாட்களில் எங்கள் கிராமத்திற்கு வந்ததில்லை. அதன் முன் எப்போதோ ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு மாலையில் வந்தது போல் எனக்கு ஞாபகம்.

இரவு 7 மணிக்கு, மேல்பாகம் திறக்கக் கூடிய வேன் நடுவில் வர அதன் முன்னும், பின்னும் கார்களின் அணிவகுப்பு. வேனில் கலைஞருக்கே உரித்தான அந்த கறுப்புக் கண்ணாடியுடன், வணங்கியபடி எழுந்த அவர் தன் சுற்றிலும் கையை வீசினார்.  அப்போது கவனித்தேன். சுற்றிலும் நல்ல கூட்டம்.  அப்போதுதான் புரட்சித் தலைவரின் ஆதரவாளர்கள், தி.மு.க. ஆதரவாளர்கள் கூட எதிர்பார்க்காத அந்தச் சம்பவம் நடந்ததது. கலைஞர் பேச ஆரம்பித்தார். அவருக்கு இடப்பக்கம், கொஞ்ச நாட்களாக அடைத்திருந்த ஹோட்டல். முன்புபுறம் பூட்டியிருந்தாலும், பின்புறமாக உள்ளே நுழைய முடியும்.  அங்கிருந்து திடீரென ஒரு கல், பேசிக்  கொண்டிருந்த கலஞரின் மேல் வந்து விழுந்தது. தனது இடது கையை உயர்த்தி, பெரும் பதட்டத்துடன் திரும்பி, திடீரெனப் பேச்சை நிறுத்திய போதுதான் கூடி இருந்தவர்களுக்கு, அவரை யாரோ, அடைந்து கிடந்த ஹோட்டலிருந்து கல் எறிந்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.  கலைஞர் “அந்தப் பகுதியில் இருந்துதான் கல் வந்தது என்றார். அங்கிருந்த போலிஸ்காரர்கள் கல்லெறிந்தவர்களை ஓடிச் சென்றுப் பிடிக்கச் செல்லாததற்கு அவர்களைக் கண்டிக்கவும் செய்தார். பேச்சை முடித்து உடனே அங்கிருந்து கிளம்பியும் விட்டார்.  புரட்சித் தலைவரின் ரசிகனான எனக்கும் கூட அந்த நிகழ்ச்சி  மிகுந்த வருத்தத்தைத் தந்தது.  கலைஞர் வருவதற்கு முன்னர் சிலர் டார்ச் அடித்துக் கொண்டு அந்த ஹோட்டலின் பின்முறம் சென்றதை நானும் கவனித்திருந்தேன்.  அவர்களுக்கு கலஞரிடம் இவ்வளவு விரோதம் வரக் காரணம் செய்தித் தாள்களிலும், மேடைகளிலும் கலஞருக்கு எதிராக நடத்தப்பட்ட ப்ரச்சாரங்களாகத்தான் இருக்க முடியும். அரசியல் தலைவர்கள் இளைஞர்களுக்கு இது போல் ஆவேசம் உண்டாக்கக் கூடிய ப்ரச்சாரங்களைத் தவிர்த்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வதையும் தடுக்க முடியும்.  எப்படியோ அந்த சம்பவம் நடந்த பின்பு நான் கலஞரை விரும்பத் தொடங்கினேன்.  அவரது தமிழ், என்னை அவர் பால் கூடுதலாக ஈர்த்தது எனலாம்.  புரட்சித்தலைவரது உடல் ந்லிவும், மரணமும் என்னை வருத்தினாலும் கலஞருக்கு நாடாளும் வாய்ப்பும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரப்போகிறது என்று அப்போது எண்ணிய போது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. 

கலைஞர் கன்னியாகுமரியில் வள்ளுவருக்குச் சிலை வைத்த போது என் கண்களில் நீர் நிறைந்தது. அப்படிப்பட்ட இனிய தமிழனுக்கு என் கிராமத்தில் நிகழ்ந்த அந்த வேதனைக்குறிய சம்பவம் அவர் மனதில் முள்ளாக நிலை நிற்குமே என்பதை நினைக்கும்போது இப்போதும் எனக்கு மனதை வலிக்கிறது.  அது போலத்தான் திரு உம்மன் சாண்டிக்கும் கண்ணூரில் நிகழ்ந்த சம்பவமும்.  எந்தக் கட்சியினர் ஆனாலும் இது போன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க எல்லா அரசியல் தலைவர்களும் தங்கள் அணிகளுக்கு வேண்டிய அறிவுரைகளைக் கொடுக்க வேண்டும்.   பெற்றோர்களை அடிக்கும் பிள்ளைகளையும், ஆசிரியர்களை அடிக்கும் (கொல்லும்) மாணவர்களையும், நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும் பார்க்கும் போதும்,  அவர்களைப் பற்றிக் கேட்கும் போதும் உண்டாகின்ற வலியும், நடுக்கமும், இந்தச் சம்பவங்களைப் பற்றி கேட்கும்போதும், பார்க்கும் போதும் நம் மனதிற்கு  உண்டாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக