செவ்வாய், 29 அக்டோபர், 2013


பட்டாஸு வாங்க நீ(ங்க) ஓட, சத்தம் கேட்டு நாய் ஓட, எல்லோரும் கொண்டாடும் தீபாவளி



இதோ, தீபாவளி நெருங்கியாச்சு. நம்ம தமிழ் தொலைக்காட்சி சானல்கள் தயாராயாச்சு.  தீபாவளி சிறப்பு நிகழ்சிகள் அப்படினு “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்குவந்து சில மாதங்களே ஆன..(பெட்டியை விட்டு வெளியே கூட வராத, இல்ல வெளிய வந்தாலும் ஓடாத, இதையும் கூட சேர்த்துக்கலாமேங்க) புத்தம் புது திரைப்படம்னு ஏதோ யாருக்கும் காதுல கேக்காம போயிடக் கூடாதுனு செம டெசிபல்ல அரைகூவ ஆரம்பிச்சாச்சு. வெள்ளித்திரைல வந்து கொஞ்சமே நாட்களும்/மாசங்களும் ஆன, ரேஸில முந்திக்கிட்ட, முந்திக்கிட்டு இருக்கற நடிகருங்க, ஒரே ஒரு படத்துல முகம் காட்டின தமிழ் தெரியாத நடிகைங்க, எல்லோரும் கையில மத்தாப்பு, பட்டாஸுனு பிடிச்சுகிட்டு டி.வி.ல வந்து “தமில் மக்கல்கு திவாலி நல்வால்துகல்/வாத்துகல் அப்படினு கொஞ்சு தமிழில கொஞ்சிச் சொல்ல, அவங்க எல்லோரும் சின்ன வயசுல எப்படி பட்டாசு வெடிச்சாங்கனு, அந்த அனுபவத்த எல்லாம் சொல்ல, தமிழ் நாட்டு இளைஞர்களும், இளைஞிகளும் ஏக்கத்தோட, ஏதோ காணக்கிடைக்காத தெய்வம், பாக்கியம் வீட்குக்குள்ளயே வருதுனு ஜொள்ளொழுகப் பார்த்து பரவசமடைய ஒவ்வொரு பண்டிகைக்கும், ஒவ்வொரு வருஷமும் இதுதான் வழக்கம். உங்காத்து வழக்கமா?  எங்காத்து வழக்கமா?


வடக்கில் ராமரும், லக்ஷ்மியும், தீபாவளிக்கு ரெடியாகி விட்டார்களா என்று தெரியவில்லை.  தென்னகத்தில் கிருஷ்ண பகவான் ரெடியாகிவிட்டார், வடக்கே ராமரின் 14 வருட வன வாழ்க்கை முடிந்து வருவதையும், இலங்கை வெற்றியையும் கொண்டாட அவரை வரவேற்கும் பண்டிகையாகவும், வீடு முழுவதும் விளக்கு ஏற்றி வைத்து, புதுவருட தொடக்கமாக லஷ்மி பூஜையும், கொண்டாடுவது வழக்கம்.  பார்த்து, நம்மூர்ல பகல் கொள்ளைக்காரங்க நிறைய இருக்காங்க.  அதனால, லக்ஷ்மியிடம், ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீனு, தீபாவளி ஆஃப்ராக, கொட்டும் பணத்தை பாதுகாக்க செக்யூரிட்டி கார்டயும் அனுப்பச் சொல்லி வேண்டலாம். இது இலவச ஆலோசனைதான். No consultation fee charged. அதுக்கப்புறம், ராமர் வெற்றியை தீபாவளியாக கொண்டாடுறது இன்னும் சர்ச்சையாகவேதான் இருக்கு. தசாவதாரத்தில், (கமல் ஸார், இது உங்க படம் இல்லைங்க. உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விவகாரம். உங்க அவதாரங்களுக்கும் விமர்சனம் வந்துச்சு, அது வேற விஷயம்.) ராமாவதாரத்துக்கு அப்புறம்தானே கிருஷ்ணாவதாரம்? கிருஷ்ணர்தானே நரகாசுரனைக் கொன்னாரு?  அப்படி இருக்கும் போது அதுக்கு முன்னாடியே பிறந்த ராமர் எப்படி தீபாவளி கொண்டாடி இருப்பார்?  நியாயமான கேள்வி. வைணவ சமய சொற்பொழிவு ஆற்றுபவர்கள், ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதற்கு ஏதாவது ஒரு சானலில் விளக்கம் கொடுத்து சந்தேகத்தைத் தீர்த்து நம்ம தமிழ் மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தலாம்.  தனுஷ்கோடி கோதண்டராமர் அருள்வாராக.


தென்னகத்துல, கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றதைக் கொண்டாட தீபாவளி.  ஆனா இதுல ஒரு சின்ன வழக்கு இருக்கு.  கொன்றது கிருஷ்ணரா, இல்ல அவர் மனைவி சத்யபாமாவானு.  இன்னும் அந்த வழக்கு முடிவுக்கு வரல. அதனால, நம்ம தமிழ் சானல்களுக்கு ஒரு சஜஷன். ராமர் விவகாரத்தையும், கிருஷ்ணர் விவகாரத்தையும் எடுத்துகிட்டு பட்டிமன்றம் நடத்தலாம்.  சாட்சிக்கு அந்த குருவாயூர் கிருஷ்ணன கூப்பிட்டுக்கலாம். சாலமன் பாப்பையா ஐயாவையோ, லியோனி ஐயாவையோ ஏன் நம்ம ராமரையே கூட நடுவரா போட்டுக்கலாம்.  ராமர் சத்யசீலர், எந்த புறமும் சாயாதவர்.  தன் மனைவியையே கற்பு, சத்திய, சோதனைக்கு உட்படுத்தியவர். அப்புறம் எவனோ ஒருத்தன் சொன்னான்னு, மனைவிய வீட்டை விட்டு வெளியே அனுப்பியவர்.  ஸோ அவர் ஒரு நல்ல நடுநிலையாளர்.  அப்புறம், ராமரும், கிருஷ்ணரும் எப்படி தீபாவளி கொண்டாடினாங்கனு, அதுவும் தலை தீபாவளி கொண்டாடினாங்கனு ஒரு ஷோ, நேரடி நிகழ்சி பண்ணலாம். பகவான் ராமரும், கிருஷ்ணரும் தமிழ் நாட்டு மக்களுக்கு சின்னத்திரை மூலமாக காட்சியளித்து, அவர்களோடு தீபாவளி கொண்டாடி அருள் பாலிக்கலாம்.  ராமர் கிட்டயும், கிருஷ்ணர்கிட்டயும் அப்பாயின்மென்ட் வாங்க மறந்துடாதீங்க.  அவங்க ரொம்ப ‘பிச்சி....

ஆரம்பிச்சுட்டாங்கய்யா...ஆரம்பிச்சுட்டாய்ங்க.....எல்லா சானலும் போட்டி போட்டுகிட்டு, ‘தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்னு ஒவ்வொரு ½ மணி நேரத்துக்கும் கூவ ஆரம்பிச்சுட்டாங்க.  தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள டைரெக்டர், ஹீரோ, ஹீரோயின், ம்யூசிக் டைரெக்டர் இப்படி எல்லாரையும் கூப்பிட்டு திரைல அலசுவாங்க.  நிறைய கதை கேக்கலாம்.  தீபாவளி அன்னிக்கு ஏதோ நம்ம சாதி, சனங்கள, இப்படி வருஷத்துல எப்பவாவது தானே பாக்கறோம்னு பாக்க போனா, சின்னஞ் சிறுசுகள்ல இருந்து, பெரிசு வரை எல்லாம் டி.வி.லயே தலைய விட்டுருப்பாங்க. சரி நடுல விளம்பரம் வருமே அப்பவாது தலைய வெளில எடுத்துப் பேசுவாங்கனு பார்த்தா, வேற சானல் மாத்தி, இப்படி மாத்தி, மாத்தி... நம்மளும் அவங்க கூட உக்காந்து டி.வி.ய பாத்துட்டு கடைசில போய்ட்டு வரோம்னு கிளம்பற டையத்துலதான், நம்ம மர மண்டைக்கு உறைக்கும். நம்ம வீட்டுலயும்தான் டி.வி. இருக்குது, பெட்ரோல் விக்கிற விலைல இம்புட்டு தூரம் வந்து டி. வி. பாக்கறதுக்கு, இதுக்கு நம்ம வீட்டுலயே உக்காந்து பாக்கலாம்லனு தோணும்....என்ன சொல்றீங்க?


சரி, அது ஒரு பக்கம்.. இந்தப் பட்டாஸு வெடிக்கறது இருக்கு பாருங்க.  ஊதுபத்திய கைல வைச்சுக்கிட்டு பசங்க அலையும் போது, ரோட்டுல நடக்கக் கூட முடியாம, எந்தப் புத்துல என்ன பாம்ப் இருக்கோனு பயந்துகிட்டே நடக்கணும்.  டூவீலர்ல போனாலும் பயம்தான்....நாமதான் தொடர் குண்டுவெடிப்புக்கு பழகின ஆளுங்கதானே..இதென்ன மாட்டரு...சப்ப மாட்டரு....இந்த பாம்ப் எல்லாம் ஜுஜுபி  அப்படினு தோணுதோ அதுவும் சரிதான்.  எத்தனை காது ரப்சர் ஆன கேஸு வருதோ... இந்தப் பசங்க கையில வைச்சுக்கிட்டே பட்டாஸத் தூக்கி ஏதோ பந்து எறியரா மாதிரி இல்லன பம்பரம் எறியரா மாதிரி ஸ்டைலா போடுவாங்க பாருங்க எங்கேயாவது நம்ம மேல விழுந்துருமோனு வேற பயமா இருக்கும்.  முன்பு, நம்ம இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பற ராகெட் எல்லாம் கடல்ல விழுந்தா மாதிரி, எங்க வீட்டு பால்கனில, மொட்டைமாடில நிறைய ராக்கெட் வந்து விழும் பாருங்க.. சில சமயம் அங்க காயற துணில கூட பட்டு எரிஞ்சு ஓட்டை விழுந்துடும்னா பார்த்துக்கங்க. அவங்க கிட்ட போயி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட சட்டத்துல ஏதாவது ஓட்டை இருக்கானு பாத்து வைச்சுக்கணும். 


வீட்டுல வளரும் செல்லப் பிராணிங்க, அதுவும் நாய்கள் இருக்கு பாருங்க வெடிச் சத்தத்துல பயந்து படற பாடு ரொம்ப பரிதாபம். பட்டாஸு சத்தம் கேட்டா போதும் எங்க வீட்டுல இருக்கற டைகரும், கீசரும், என் நண்பர் வீட்டுல இருக்கற கண்ணழகியும், ப்ரௌனியும் ரொம்ப அங்கயும், இங்கயும் அலைஞ்சு, தண்ணி, தண்ணியா குடிச்சு, சாப்பிடாம அலஞ்சு படற பாடு.... ‘நாய் மாதிரி அலையுது பாருனு சொல்லுவமே அது இதப் பாத்துதானோ?! இந்த பட்டாஸு சத்தம் நமக்கே டெஸிபல் அதிகம்.  அவங்களுக்கு கேக்கவே வேணாம். பட்டாஸோடு தீபாவளி இலவசமாக ரெண்டு காதுக்கு ரெண்டு கவசமும், மூக்குக்கு ஒரு கவசமும் (ஸ்வாசிக்க சிறு ஓட்டை மட்டும்) கொடுத்தா பட்டாஸு கடைக்காரர்களுக்கு புண்ணியம்.  மோக்ஷம் உறுதினு பகவான் கிருஷ்ண பரமாத்மா சொல்லி இருப்பதாகக் கேள்வி.

 பிராணிகளைக் காப்போம், பூமியைக் காப்போம்,  சுறுப்புறச்சூழல் அப்படினு எல்லாம் மேடை, மேடையா வாய் கிழிய பேசுவது, நாளிதழ், மாத இதழ், வலைத்தளம், ஏன் T-ஷர்ட் கூட விட்டு வைக்காம எல்லாத்துலயும் ஒரு பேனா விட்டு வைக்காம எழுதறது இல்லனா நைட்டெல்லாம் முழிச்சிருந்து கம்ப்யூட்டர்ல அடிக்கறது, ஸ்கூல்ல எல்லாம் டான்ஸும், ட்ராமாவும் போடறது எல்லாமே நாம ப்பளிசிட்டிக்கும், போட்டில ஜெயிக்கறதுக்கும்தானே செய்யறோம்? எல்லாமே ஏட்டுச் சுரைக்காய்தான். கேடுகெட்ட ஜென்மங்கள். திருந்தப் போவதில்லை.

தீபாவளி அன்னிக்கு ‘தலபடம் “ஆரம்பம், கார்த்தியோட படம் “ஆல் இன் ஆல் அழகு ராஜா,


டைரக்டர் செல்வராகவனின் “இரண்டாம் உலகம்,

விஷாலின் “பாண்டியநாடுரிலீஸ்.
  ஸோ ரசிகர்கள் எல்லாரும் இப்பவே முதல் ஷோவுக்கு புக் பண்ணிருப்பாங்க....இந்த சினிமாக்களூம், டி.வி. நிகழ்சிகளும், ஏன் மழையும் கூட எல்லாரையும் பிசியா வைச்சிடுச்சுனா பட்டாஸு புஸ்ஸுல!!? ஆனா ‘தல படம் ‘ஆரம்பம் ஆரம்பத்துக்கு பட்டாஸ் இல்லாம ரசிகர்கள் ஆரம்பிக்க மாட்டாங்களோ?!!

பி.கு - (இப்படி நடந்தா நான் குருவாயூருக்கு வந்து துலாபாரம் கொடுக்கறதா வேண்டியிருக்கேன். இல்லனா பங்களூர் இஸ்கான் கோவில்ல “பிட்ஸா ப்ரசாதம் தருவதாக வேண்டியிருக்கேன்.)

கொசுறு செய்தி - சென்னையில் எல்லா ஜவுளிக் கடைகளும், அதுவும், தி,நகரில் ரங்கநாதன் தெருவும், பாண்டிபஜாரும், பனகல்பார்க் ஏரியாவும் மக்கள் பிதுக்கம். அல்லோகலம். அபிமன்யு சக்கரவ்யூகம்.  உள்ளே போனால் வெளியேவரமுடியாது. பெண்களுக்கு கொண்டாட்டம்.  ஆண்கள் பாவம், பரிதாபம். உள்ளே போன மனைவியையும், பெண்ணையும் காணவில்லையாம், என் நண்பரின் SMS. தீபாவளிக்குள் திரும்பி வந்து விடுவார்கள் என் பதில் SMS.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக