ஞாயிறு, 27 அக்டோபர், 2013

திருடாதே பாப்பா (தம்பி) திருடாதே/ஹாட்ஸ் ஆஃப் டு (குருவாயூர்) போலீஸ்

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே – பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை (பெற்றோர்) வளர்ப்பதிலே
-கவிஞர் புலமை பித்தன். படம்: நீதிக்குத் தலை வணங்கு

23-10-2013 அன்று, குருவாயூர் பகுதியில் உள்ள கோவில்களில் ஒரு வாரமாக போலீஸுக்கு சவாலாக இருந்த உண்டியல் திருடும் குற்றவாளிகள் பிடிபட்டனர். குற்றவாளிகள் யாரென்று அறிந்தால் அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் இல்லையேல் இதெல்லாம் இப்ப சகஜமப்பா என்றும் இருக்கலாம். 
ஆனால், ஆசிரியனாக இருக்கும் எனக்கு அது அதிர்ச்சி. குற்றவாளிகள், 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். ஐந்து பேர் அடங்கிய குழு.  பகலில் கோயிலுக்குச் சென்று, உண்டியல்களைப் பார்த்து வைப்பது, இரவில் சென்று, திருட்டுக் கலையில் கைதேர்ந்தவர்களுக்குக் கூட ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்திலான திருட்டு நடத்துவது.  கையிலுள்ள பணம் தீரும் வரை, அவர்களுக்குப் பிடித்ததெல்லாம் வாங்குவது. பெரும்பாலும் புதிய மொபைல்கள் வாங்குவதுதான். வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் ஒரு நண்பன் தந்தது என்று சொல்வார்கள். பிடிபட்டவர்களை விசாரித்தப் போது, அவர்களில் அப்பா இல்லை, அப்பா வெளியூரில் வேலை செய்பவர், அப்பா இந்தியக் குடி மகன், அப்பா ஓடிப்போனவர்,. இப்படிப் பல குடும்பச் சூழலில் இருக்கும் பையன்கள்.  பிடிபட்டதும், அவர்களின் பெற்றோர் வரவேண்டிய காவல் நிலையத்திற்கு வந்தவர்கள் 10 மாதம் சுமந்து பெற்று வளர்த்தத் தாய்கள் மட்டுமே. அவர்களெல்லாம் தங்கள் குழந்தைகள் செய்த குற்றத்தையும் அதன் காரணத்தையும் அறிந்தவுடன் மனம் தளர்ந்து, மிகவும் கூனிக் குறுகி அழுத நிலை மிகவும் வருத்தத்திற்குறியது.  அப்படி என்னய்யா காரணம் என்று கேட்கிறீர்களாஎல்லாம் இந்த மொபைல் ஃபோன்தாங்க.  நவீன புது மாடல் மொபைல் ஃபோன் வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்தத் திருட்டு.


நான் காரணங்களை ஆராயத் தொடங்கினேன். எனது மாணவர்களும் கூட அதி நவீன மொபைல் ஃபோன்கள் உபயோகிப்பதைப் பார்க்கிறேன்.  பருவ வயதில் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் கவனிக்கத் தவறுவதை இதற்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம்.  பெரும்பான்மையானப் பெற்றோர்களில், இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் இது போன்றவை நடந்தாலும், மற்றச் சூழலிலும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.  தந்தை வெளியூரிலுள்ள சூழலில், தாயின் கவனிப்பில் வளரும் பிள்ளைகளின் மாற்றங்கள், நடவடிக்கைகள் சில சமயம் தாயின் கண்ணில் படாமல் போவதற்கு வாய்ப்புண்டு.  மட்டுமல்ல பிள்ளைகளும் தாய்/பெற்றோர்கள் நம்பும்படியான பல பொய்களைச் தாங்கள் செய்த குற்றத்தை மறைக்க சொல்வதுண்டு.  தாய் தன் மகனை நம்பத்தானே செய்வாள். ஏன் தகப்பனும்தான். “பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்றுதானே பழமொழி!

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் இடைவெளி,  பருவ வயதில் ஏற்படும் புதிய நட்புகள், நண்பர்கள் உபயோகிக்கும்  அதிநவீன மொபைல் ஃபோன்களால் ஏற்படும் ஈர்ப்பு, ஊடகங்களின் வாயிலாக காண நேரும், ஈர்க்கும் விளம்பரங்கள், நன்றும், தீதும் ஆராயத் தெரியாத, பெற்றோர்களின் பொருளாதார நிலைமையை எண்ணிப் பார்கத் தோன்றாத முதிர்ச்சியின்மை, ஆடம்பர வாழ்கையின் மேல் ஏற்படும் மோகம் போன்றவையும் இங்கே காரணங்களாக அமையலாம்.  எதுவாக இருந்தாலும் இதில் பெற்றோரின் பங்குதான் அதிகம் எனலாம். அவர்கள் கவனிக்கத் தவறுவதால் தான் இவற்றில் பலதும் நிகழக் காரணம்.

இந்தச் செய்தியை படித்த போதுஎனக்கு, என் நண்பர் ஒருவரது குடும்பத்தில்  நடந்த  நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.  நண்பரின் மனைவியும் குழந்தைகளும் ஒரு இடத்திலும், நண்பர் வேறு ஒரு இடத்திலும் வேலை நிமித்தம் இருக்கின்றனர். மனைவி பள்ளி ஆசிரியை.  மனைவியின் பள்ளியிலேயே குழந்தைகளும் படிக்கின்றனர்.   மனைவி குழந்தைகளைப் பள்ளிக்குக் காரில் அழத்துச் செல்வார். இவர்களுடன் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் வருவதுண்டு.  பள்ளியில்  பேருந்து கட்டணம், மற்ற பல நிகழ்சிகளுக்காக  சேகரிக்கபடும் பணம் இவரது மனைவி சேகரித்து தன் கைவசம் வைப்பது வழக்கம்.   அப்படி, தன்னிடம் வரும் பணத்தை அவர் தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வருவது வழக்கம்.  ஒரு தினம் அப்படி அவர் கொண்டுவரும் போது சிறிய தொகை குறைந்தது தெரியவில்லை.  ஆனால்  மறு நாள் ரூ.2000 குறைந்தது தெரிய வந்தது.  எங்காவது கை மாறி வைத்திருக்கலாம் என்று நினைத்தார்.  இரண்டு தினம் கழித்து ரூ. 3,500 காணாமல் போனது.  பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு காணவில்லை. அதிர்ச்சி.  ரூ.2000 காணாமல் போன பிறகு அவர் மிகவும் கவனமாகத்தான் கையிலுள்ள பணத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார்.  இருந்தாலும் பணம் காணாமல் போனது அவருக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தந்தது. அடுத்தா நாளே, மறுபடியும் ரூ.2000 காணாமல் போனது. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் தான் காணாமல் போயிருக்கிறது என்று தெரிய வந்ததும் தன்னுடன் வரும் மற்ற குழந்தைகள் மீது சந்தேகம் வரவே  தன் குழந்தைகளுடன்  அதைப் பற்றிப் பேசினார்.  எனது நண்பரின் மூத்த மகன் 9 ஆம் வகுப்பிலும்,  கூட வரும் பெண் குழந்தைகள்  இரண்டு பேர் 10 ஆம் வகுப்பிலும் படிப்பவர்கள்.  அந்தப் பெண்களில் ஒரு பெண் கைப்பையை தனது மடியில் வைத்திருந்து அப்புறப்படுத்தியதை தான் பார்த்ததாகவும் ஒருவேளை அவள் எடுத்திருக்கலாம் என்றும் மகன் கூறினான்.  இவர் அந்தப் பெண்ணைப் பற்றி சக ஆசிரியைகளிடம் விசாரித்தார்.  அவர்களின் கருத்துப் படி அந்தப் பெண் குழந்தைக்கு ‘ரூ 6000, ரூ 7000 க்கு என்ன அவசியம்.  எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றனர்.  இவர்களது மகனின் கையில் ஒரு நவீன மொபைல்.  தனது நண்பன் தந்ததாகக்  கூறியுள்ளான்.  என் நண்பருக்கு விஷயம் சொல்லப்பட்டது.  அவர் உடன் தன் மகனை சந்தேகம் எழாதவாறு விசாரித்தார்.  தான் ஒரு புது மொபைல் வாங்கித் தருவதாகவும் அவன் அந்த மொபைல அவன் நண்பனிடம் கொடுத்துவிடவேண்டும் என்றும் சொன்னார்.  மகன் பேசியதிலிருந்து அவருக்கு சின்ன சந்தேகம் வந்தது.  அவன்  தனது குற்றத்தை மறைக்க நிறைய அடுக்கடுக்காகப் பொய்கள் சொல்லுவது போல் அவருக்குத் தோன்றியது. அவன் பலமுறை அவரிடம் தனக்கு ஒரு மொபைல் வேண்டுமென்று சொன்னபோதெல்லாம், தான் மொபைல் வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லியதால் அவன் இப்படி நடந்து கொண்டுவிட்டானோ என்று வருந்தினார்.  அவரது மகன்தான் பணம் காணாமல் போனதற்குக் காரணம் என்று தெரிந்ததும் மனம் மிகவும் தளர்ந்து துடித்து விட்டார்.  அவர் மனம் துடித்ததைப் பற்றி  இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.


அவர் உடன் தன் ஆஃபீஸிற்கு லீவு போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.  அவனை, மிகவும் அன்பாக, அவன் மனம் நோகாதபடி, அன்புடன் அவனை எப்படித் திருத்துவது என்பதை யோசித்து அவரும் அவரது மனைவியும் மகனை  ஒரு அமைதியான இடத்திற்கு அழைத்துச் சென்று அவனை அடிக்காமல், கடும் சொற்கள் உபயோகிக்காமல்  அன்புடன் பேசி அவன் தான் காரணம் என்பதை அவன் வாயிலிருந்து  அறிந்தார்கள்.  மிகவும் உடைந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். எனது நண்பர் தன் கையோடு கொண்டுவந்திருந்த புது மொபைலை மகனுக்குக் கொடுத்தார். 
அவனுக்கு மிகுந்த குற்ற உணர்வு உண்டாயிற்று.  அவன் தான் இனி  இப்படிச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தான்.  நண்பர் அவனை அந்தக் குற்ற உணர்விலிருந்து வெளியே கொண்டுவர இதமாகப் பேசி, எல்லோருமே சிறு வயதில்அறியா வயதில் இது போன்ற தவறுகளைச் செய்ய நேரலாம்.  ஆனால் அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று அன்புடன் பேசிய போது அவனுக்கு சமீப காலத்தில் கிடைக்கப்பெற்ற புதிய நண்பர்களின் சகவாசம் தெரியவந்தது.  நண்பர் அவனிடம் ஒரு நண்பனைப் போல பேசி அந்த சகவாசம் நல்லதல்ல என்று புரிய வைத்து அவனை மெதுவாக அதிலிருந்து மீட்டு வந்துவிட்டார்.  இப்போது அவன் அந்த நண்பர்களிடமிருந்து விலகி தனது தவறை உணர்ந்து நல்லவிதமாக மாறி விட்டான்.  நண்பர் மற்ற குழந்தைகளையும் அழைத்து நடந்த சம்பவங்களைப் பற்றி பேசி அவர்களும் இது போல் செய்யக் கூடாது என்றும், அவர்களது தேவை எதுவாக இருந்தாலும் தங்களிடம் கேட்க வேண்டும் என்றும் அன்புடன் சொல்லி, அவர்களது அண்ணனைப் பற்றி ஒருபோதும் தவறாகவோ, கேலி செய்தோ பேசக் கூடாது என்றும் சொல்லி அறிவுறுத்தினார். செய்த தவறை உணர்ந்த ஒருவரை அதன் பிறகும் அவரை அவர் செய்த தவறைப் பற்றி பேசி அவர் மனதைப் புண் படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார். அப்படி அந்தக் குழந்தைகள் எல்லோரும் நல்ல குழந்தைகள் ஆனார்கள்.


முதலில் நடந்த, செய்தித் தாளில் வெளியான சம்பவத்தில், போலீசாரின் நடவடிக்கையும் என் ந்ண்பர் செய்ததுபோல மிகவும் பக்குவமான, இதமான ஒரு நடவடிக்கைதான் என்பது இங்கு நம் எல்லோருக்குமே மிகுந்த மகிழ்சியைத் தருகின்ற ஒன்றுதான். குற்றம் செய்த மாணவர்களை குற்றப் படுத்தாமல், குற்றவாளிகளைப்போல் கருதிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல், அவர்களது பெற்றோர்களை அழைத்துப் பேசி, அந்த மாணவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பாமல்
அவர்களுக்கு நல்ல விதமாக, மன ஆலோசகரைக் கொண்டு கவுன்சலிங்க் கொடுத்து, கருத்துரை வழங்கி, பின்னர்  பழையபடி அவர்கள் படித்த அதே பள்ளியிலேயே படிப்பைத் தொடர வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.  சமூகம் இந்த மாணவர்களை புறம்தள்ளாமல்,
அவர்களும் தங்களது தவறைத் திருத்தி மறு வாழ்வு வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை, போலீசாரின்  இந்த முடிவு தெரியப்படுத்துகிறது.  மிக மிக வரவேற்கப்படவேண்டிய ஒரு நல்ல முடிவு. போலீசாரைப் பற்றி பல தவறானக் கருத்துகளையும், நையாண்டியையும், நகைச்சுவகளையும் நாம் அள்ளித் தெளித்து உலா வரச் செய்யும் இந்நேரத்தில், இப்படிப்பட்ட நல்ல மனம் உள்ள போலீசாரும் இருக்கின்றனர் என்பதை, நாம் இச் சம்பவத்திலிருந்து அறிய முடிகிறது. மனதுக்கு இதமாக இருக்கிறது. போலீசாருக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.  ஹாட்ஸ் ஆஃப்  டு  குருவாயூர் போலீஸ்.!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக