வியாழன், 25 ஆகஸ்ட், 2016

போருக்குத் தயாராகும் தெரு நாய்கள்

Image result for STREET DOGS BITING PUBLIC IN KERALA
படம் இணையத்திலிருந்து

சமீபத்தில் திருவனந்தபுரம் அருகே கடற்கரையை ஒட்டிய புல்லுவிளா எனுமிடத்தில், பெண்மணி ஒருவர் வீட்டில் கழிப்பிடம் இல்லாததால் இரவு 8.30 மணியளவில் வெளியிடத்திற்குச் சென்ற போது, 20 க்கும் மேற்பட்ட தெருநாய்க் கூட்டம் அவரை விரட்டிக் கடித்துக் குதறிவிட்டன. சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் கண்டதோ மயக்கமடைந்து கிடக்கும் தன் தாயை. நாய்கள் கடித்துக் குதறும் காட்சி. சத்தம் போட்டுக் கத்தி அவற்றை விரட்ட முயன்ற மகனை நாய்கள் கூட்டம் விரட்ட ஆரம்பித்தது. துரத்தும் நாய்களிடமிருந்து தப்பிக்க அவர் ஓடிக் கடலில் குதித்து உயிர் தப்பியிருக்கிறார். அலறல் கேட்டு ஓடி வந்த ஒரு சிலரை நாய்கள் விரட்டிக் கடித்தன. அதன் பின் அப்பகுதி மக்கள் எல்லோரும் திரண்டு கற்கள் மற்றும் கம்புகளுடன் வந்து நாய்களை விரட்டி, பாதிக்கும் மேற்பட்ட உடல் பகுதியை நாய்களிடம் இழந்த அப்பெண்மணியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். மருத்துவமனை செல்லும் வழியிலேயே பாவம் அப்பெண்மணி உயிரிழந்தார்.

கேரளத்தை உலுக்கிய இச்சம்பவம் புதிதல்ல. 2012 முதல் இதுவரை நாய் கூட்டங்கள் கடித்து 50 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். (வெளியில் தெரியவராமல் இறந்தவர்கள் எத்தனையோ?) இதில் வீட்டுத் திண்ணையில் கிடந்தவர்கள், பள்ளி சென்று திரும்பிய குழந்தைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களுடன் வந்தவர்கள் இப்படிப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அச்சம்பவங்கள் எல்லாம் நடந்த மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் அதுதான் முக்கியச் செய்தி. அடுத்த நாள், சிலர் அப்பகுதியில் அந்த நாய்களில் சிலவற்றைக் கொன்றதாகவோ, கொல்ல முயன்றதாகவோ சொல்லப்படும் செய்தி. 

அதற்கு அடுத்த நாள் அப்படித் தெருநாய்களைக் கொல்ல முயன்றவர்களுக்கு, கொன்றவர்களுக்கு எதிராக தெருநாய்களின் நலன் காப்போர் இயக்கம் புகார் கொடுத்த செய்தி. அதன் பின் ஓரிரு நாட்கள் பிரமுகர்கள், மத்திய அமைச்சர் மேனகா காந்தியை எதிர்த்தும், ஆதரித்தும் விடும் அறிக்கைகள். ஆனால், அடுத்த நாள் ஏதேனும் இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டதோ, ஏதேனும் அமைச்சர் வாய் உளறித் தவறாகப் பேசியதோ, ஏதேனும் மார்க்சிஸ்ட் அல்லது ஆர் எஸ் எஸ் ஆதரவாளரான இளைஞர் கொல்லப்பட்டதோ, சரிதா நாயரின் மிரட்டல்களோ நாளிதழ்களில் முக்கியச் செய்தியாகும்.

மீண்டும் தெரு நாய்களைப் பற்றிய செய்தி வர ஏதேனும் ஒருவர் நாய்களால் கடித்துக் கொல்லப்படும்வரை பேசப்படமாட்டாது. இப்படி ஆவன செய்யப்படாமல் கொல்லப்பட்ட 50 வது நபர்தான் இந்தப் பெண்மணி. அடுத்த நாளே கொட்டாரக்கரையைச் சேர்ந்த, கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனையில் நாய்கடிக்கான சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரழந்தார்.

நேற்று பாலக்காடு குத்தனூரைச் சேர்ந்த 60 வயதுள்ள ஒரு பெண்மணி நடந்து செல்லும் போது வழியோரத்தில் குவிக்கப்பட்டிருந்த மாமிச மற்றும் உணவுக் கழிவுகளைத் தின்று கொண்டிருந்த ஒரு தெரு நாய் அவர் மீது தாவி அவரைக்  கடித்துக் குதறி இருக்கிறது. அவரது அலறலைக் கேட்டு ஓடி வந்தவர்கள் அந்நாயை விரட்டி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவர் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

வீணாக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கோழி மற்றும் மாடு மற்றும் மீன் கழிவுகள் எல்லா சாலையோரத்திலும் அலட்சியமாகக் கொட்டப்படுகிறது. அவற்றைத் தின்று வளரும் தெருநாய்கள் கூட்டமாகக் கூடும் போது கண்ணில்படுவோரைக் கடித்துக் குதறத் துணிகின்றன. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, வானொலிச் செய்தி. கொல்லம் அருகே வீட்டுத் திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தச் சிறுவனைத் தெரு நாய் கடித்ததாம். கீழுதடைக் கடித்துத் துண்டித்து தொடையிலும் கடித்ததாம். காப்பாற்ற ஓடிவந்த அச்சிறுவனின் அம்மாவையும் கடித்திருக்கிறது. (http://thillaiakathuchronicles.blogspot.com/2015/07/If-The-Meek-Get-Angered.html) இருவரும் இப்போது கொல்லம் மருத்துவமனையில்.

கேரளாவில் ஏறத்தாழ 2 ½ இலட்சம் தெருநாய்கள் உள்ளதாம். எல்லா பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் தெரு நாய்களைப் பிடித்து ஏபிசி (அனிமல் பர்த் கன்ட்ரோல்) செய்ய வேண்டும். இனியும் தாமதிக்கக் கூடாது. ஏபிசி செய்யப்படும் நாய்கள் சற்று அடங்கிக் கிடக்குமாம். ஆபத்தான சில தெரு நாய்களைக் கொன்றே தீர வேண்டுமெனில், அதற்கும் தயங்கக் கூடாது. (நடிகர் மோகன்லால் இப்படிச் சொல்லித்தான் முன்பு மாட்டிக் கொண்டார். ஹும் அது மோகன்லால். அவர் எங்கே நாம் எங்கே. நமக்கெல்லாம் பிரச்சனை வராது)

நாய் பிடிப்பவர்கள் இல்லை என்று கடந்த 10 வருடமாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், மக்களில் விலங்குப் பிரியர்களுக்குக் கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் அதற்கான பயிற்சி அளித்து இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க முயற்சி எடுக்காதது வியப்பளிக்கிறது. கொல்லப்பட்டவர்களின் வீட்டினரோ, உறவினரோ, நண்பர்களோ ஆத்திரத்தில் ஓரிரு நாய்களைக் கொன்றால், உடனே காவல்துறையிலும், நீதி மன்றங்களிலும் புகார் கொடுக்கும் தெருநாய்களின் நலன் விரும்பிகள் ஒவ்வொரு பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு எதிராகப் புகார் கொடுத்து தெருநாய்களுக்கு ஏபிசி செய்ய ஏன் நடவடிக்கை எடுக்க உதவுவதில்லை? 

அது போல் உணவுக் கழிவுகளை வழியில் எறிவோர்களும், நாம் செய்யும் இந்தத் தவறு எவ்வளவு பெரிய ஆபத்திற்குக் காரணமாகிறது என்பதை உணர்ந்து, உணவுப் பொருட்களை வீணாக்காமல் இருக்க முடிவெடுத்தால் அது சமூகத்திற்கு நன்மை பயப்பதுடன் அவர்களுக்கும் பொருளாதார ரீதியாகவும் நன்மை ஏற்படுத்தும் என்பதை ஏன் உணர்வதில்லை.

அரசும் இதற்கு முன் செய்தது போல் தற்காலிகமாகப் பிரச்சனைகளில் இருந்து தப்ப, நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சளவில் சொல்லி நில்லாமல், தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்தே ஆக வேண்டும்.


சென்னையில் ப்ளூக்ராஸ் செய்யும் சேவை இது போல் நல்ல மனம் படைத்த பலரது முயற்சியால்தான் தொடங்கியது. இப்போதும் தொடர்ந்து நடக்கிறது. அதுபோன்ற இயக்கங்கள் கேரளாவில் ஓரிரு இடங்களிலேனும் துவங்க தெருநாய் நலன்விரும்பிகளும், அரசும், அதிகாரிகளும் முயல வேண்டும். சில மாதங்களுக்கு முன் நண்பர் ஸ்ரீராம் தன் வீட்டருகே உள்ள நாயின் வேதனையை ப்ளூக்ராஸ் உதவியுடன் போக்கியிருக்கிறார். அவர் அவ்வப்போது இப்படிச் செய்தும் வருகிறார். 

அது போன்று சென்னையில் இவைகளுக்கானக் காப்பகங்களும், பேணுபவர்களும் கணிசமான அளவில் இருப்பதாக ஸ்ரீராம் அவர்களின் பாசிட்டிவ் செய்திகளிலிருந்து அறிய முடிகின்றது. அது போல் கேரள மக்களும் தெருநாயைக் காணும் போது பயந்து ஓடும் அல்லது கல்லெடுத்து எறியும் நிலை மாறி, அவற்றைக் கருணை தவழும் கண்களால் நோக்கும் ஒரு காலம் வருமா?....காத்திருப்போம். 

படம் இணையத்திலிருந்து - சமீபத்தில் கொச்சியில் ஒரு சில நடவடிக்கைகள், ரோட்டரி சங்கத்தினரால் எடுக்கப்பட்டதாகச் செய்தி




18 கருத்துகள்:

  1. நாய்களுக்கு ஏபி சி ஆப்பரேஷன் செய்தால் அவற்றின் எண்ணிக்கை வளராமல் தடுக்க முடியும் ஆனால் இருக்கும் நாய் தொந்தரவு தீராதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கும் நாய் தொந்தரவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விலங்கு ஆதரவாளர்கள்...

      நீக்கு
  2. >>> வீணாக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கோழி ஆடு , மாடு மற்றும் மீன் கழிவுகள் எல்லா சாலையோரத்திலும் அலட்சியமாகக் கொட்டப்படுகிறது. அவற்றைத் தின்று வளரும் தெருநாய்கள் கூட்டமாகக் கூடும்போது கண்ணில் படுவோரைக் கடித்துக் குதறத் துணிகின்றன..<<<

    >>> அதுபோல் உணவுக் கழிவுகளை வழியில் எறிவோர்களும், நாம் செய்யும் இந்தத் தவறு எவ்வளவு பெரிய ஆபத்திற்குக் காரணமாகிறது..<<<

    இங்கே தஞ்சாவூரிலும் பழைய மார்க்கெட்டின் அப்புறமாக தனியார்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கோழி இறைச்சிக் கடைகளின் கழிவுகளை அப்படியே தெரு ஓரத்தில் கொட்டி விடுகின்றனர்..

    மக்கள் நடமாட்டமுள்ள தெருக்கள் அவை.. ஆனால் அந்த சமுதாயத்தினரை கேட்க முடியாமல் எதற்கு வம்பு என ஒதுங்கி விடுகின்றனர்..

    நாய்களின் கூட்டமும் பெருங்கூட்டமாக இருக்கின்றது..

    நாய்களின் வளர் இயல்பு கெடுவதற்கு மனிதர்களே காரணம் என்கின்றார்கள்..

    எப்படியோ - மக்களின் பாதுகாப்பு அவசியம்..

    பதிலளிநீக்கு
  3. ஆட்டைக் கடித்து மாட்டைக கடித்து , இப்போ மனிதனையும் கடிக்க ஆரம்பித்து விட்டனவா நாய்கள் :)

    பதிலளிநீக்கு


  4. முதலில் தெரு நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அதன் பின் தெரு நாய்களாக இருந்தாலும் அது வெறி நாய்களாக இருந்தால் கொன்றுவிட வேண்டும் நான் நாயை மனிதர்களைவிட அதிகம் நேசிப்பவனாக இருந்தாலும் நாய் போன்ற விலங்குகாளாலும் அல்லது மனிதர்களாலும் மற்றோருவருக்கு தீங்கு ஏற்படுகின்றது என்றால் அதை முதலில் கட்டுபடுத்த நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும் இப்படி நாய்களை கொல்ல கூடாது என்று வாதிப்பவர்கள்தான் தங்கள் வீட்டில் ஆடு மாடு கோழி மற்றவைகளை வெட்டி தின்று கொண்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  5. தெரு நாய்களின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்குக் காரணம், நம்இந்தியாவில் தெருக்களில் கிடைக்கும் அபரிமிதமான உணவுதான். நாம் ஒவ்வொருவரும் தெருவில் வீரும் மிஞ்சிய உணவுப் பொருட்களைத் தின்றே தெரு நாய்கள் தங்களின் இனத்தினை அபிவிருத்தி செய்துவாழ்கின்றன.
    தெருக்களில் உணவுப் பொருட்களை வீசாமல் இருப்போமேயானால், ஒரு சில ஆண்டுகளிலேயே நாய்களின் எண்ணிக்கை விரைவாகக் குறைந்து விடும்

    பதிலளிநீக்கு
  6. பேசாம இந்த நாய்களைப் பிடித்து, இதனை ஆதரிக்கும் புளூ கிராஸ், மேனகா காந்தி இவர்கள் வீட்டில் விட்டு வளர்க்கச்சொன்னால் என்ன? யார் யார் இதனை ஆதரிக்கிறார்கள் என்று பார்த்து, அவர்கள் வீட்டுக்கு 10 நாய்கள் வீதம் பார்சல் அனுப்பினால், தெருவில் 'நாய்களின் தொல்லை இருக்காது என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  7. கருணை தவழும் கண்களால் நோக்கும் ஒரு காலம் வருமா?.....எப்படி வரும்....???

    பதிலளிநீக்கு
  8. நானும் ஒருமுறை இப்படி தெரு நாய்களிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன். இரவு ஒரு மணிக்கு வெளியூரில் இருந்து மார்க்கெட் பக்கம் வந்தபோது 15 நாய்கள் என்னை சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷமாக குறைத்தன. அதிலிருந்து விடுபட பெரும் பாடுபட்டேன். ஒரு நாய் கடித்திருந்தால் கூட அத்தனையும் சேர்ந்து குதறியிருக்கும். இன்று நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். மரணத்தை கண்முன் பார்த்து திரும்பியது போல் இருந்தது.
    தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம்.
    நல்ல விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள்.
    த ம 2

    பதிலளிநீக்கு
  9. எங்கள் பகுதியிலும் இந்தத் தொல்லை உண்டு
    எங்கள் தொடர் வற்புறுத்தல் மூலம்
    தற்சமயம் மா நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது
    நாங்களும் தெரு நாய்களை தேவையில்லாமல்
    உணவிட்டு வளர்க்கவேண்டாம் என
    பிரச்சாரம் செய்தும் வருகிறோம்
    விரிவான அருமையான தெளிவைத் தரும்
    பகிர்வுக்குமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. நான் கூட பிஸ்கெட் போடுகிறேன். இருந்தும் வாக்கிங் அவ்வளவாகப் போகாததின் காரணம் இது தான் .

    பதிலளிநீக்கு
  11. கட்டுரையைப் படித்தவுடன், கட்டுரையாளரின் இருபக்கக் கொள்ளி நிலை தெரிந்தது. நானும் நாய்களை, பூனைகளை நேசிப்பவன்தான். இவற்றைப் பற்றிய எனது பதிவுகளும் உண்டு.

    பொதுவாக தெருநாய்கள் வயிற்றுப்பசி தீர்ந்தால் ஓரிடம் போய் படுத்து விடும். யாரும் சீண்டினால் திருப்பி தாக்கவே செய்யும். ஒரு தெருநாயை முதன் முதல் பார்க்கும்போதே எதிரியாகவே பலரும் பாவிக்கின்றனர். ஐந்து நாய் இருக்க வேண்டிய இடத்தில் ஐம்பது நாய் இருந்தால் எல்லா பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். இதற்கு முக்கிய காரணம் கோழி இறைச்சி கடைகளின் பெருக்கம்தான். அவற்றின் கழிவுகள் ஓரிடத்திலேயே கொட்டப்பட்டு நாட்கணக்கில் கிடந்தால், அங்கு வரும் நாய்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் மனிதர்களும் சிக்கி விடுகிறார்கள். தெரு நாய்களின் பிறப்பு விகிதத்தை குறைத்தாலே போதும். எல்லாம் சரியாகி விடும்.

    பதிலளிநீக்கு
  12. தவிர்க்கமுடியாத தொல்லைகளில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  13. இது ஒரு பெரிய பிரச்சனை தான். எங்கள் பகுதியிலும் அடிக்கடி இந்த மாதிரி பிரச்சனைகள் - இது வரை யாரும் கடிபடவில்லை என்பதில் கொஞ்சம் நிம்மதி.

    பதிலளிநீக்கு
  14. வீட்டில் நாய்களை நேசித்து வளர்க்கிறோம்...
    தெருநாய்களைப் பிடித்து இனப்பெருக்கம் செய்யாமல் ஊசி போட்டு விடுவார்கள்...
    ஆனால் இப்போது தெருநாய்களின் தொந்தரவு எங்கள் பகுதியிலும் இருக்கத்தான் செய்கிறது...
    ஆனால் மனிதர்களைக் கடித்துக் கொள்ளும் அளவுக்கு.... வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. இந்த நாய்கள் தொல்லைகளுக்கு அரசும் ,மக்களும் இணைந்தே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாயும் மனிதனை அழிக்கத்தொடங்கிவிட்டது போல!

    பதிலளிநீக்கு

  16. இது ஒரு பிரச்னைதான். நாய்களை சாதுவாகப் பார்க்கும் வரை அவற்றை நேசிக்கலாம். அவையே நம் உயிருக்கு ஊறு விளைவித்தால் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்தான். இவ்வளவு வெறி பிடித்த நாய்கள் - அதுவும் ஒரே இடத்தில் கூட்டமாக - இருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறார்களோ?

    எங்கள் காம்பவுண்டில் கூட 9 நாய்கள் உள்ளன. ஆனால் அவை இப்படி வெறித்தனங்கள் செய்வதில்லை. செய்தால், அப்புறப்படுத்தத் தயங்க மாட்டோம். எல்லாம் என் நண்பர்கள்!

    ரேபீஸ் நோயினால் ஏற்படும் கொடூர மரணத்தைப் பார்ப்பவர்கள் நாயின் அருகே கூட போகமாட்டார்கள். நான் பார்த்திருக்கிறேன். எனினும், நான் நாய் நேசன்தான்!

    பதிலளிநீக்கு
  17. ஹூம்! நாய் வளர்ப்புப் பிடிக்கும் என்றாலும் அத்து மீறினால் கவலையும், பயமும் தான் வருகிறது. என் அம்மாவை, என்னை, என் மாமனாரை மூவரையும் முறையே ஓர் முறை நாய்கள் கடித்திருக்கின்றன. அம்மா 45 நாட்கள் மருத்துவம் பார்த்துக் கொண்டார். மாமனாரும்! எனக்கு லேசான கீறலோடு நின்று விட்டதால் ஒரு வாரம்!

    பதிலளிநீக்கு