வெள்ளி, 14 மார்ச், 2014

லேகா நம்பூதிரி, நீங்கள் தேவதையாகி விட்டீர்கள்.......நன்றி!.....நன்றி!......


இன்று (13.03.2014), உலக சிறுநீரகத் தினம். சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், அதை பழுதடையாமல் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தும் நாள்.  சிறுநீரக பாதிப்பால் இறக்க நேரிடும் எத்தனையோ பேருக்கு, குறிப்பாக இளம் வயதினருக்கு, இறைவன் தந்த ஆரோக்கியமுள்ள இரண்டு சிறுநீரகத்தில் ஒன்றைத் தானம் செய்வதால் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரையேனும் உயிர் பிழைக்க வைக்க முடியும்! என்ற உண்மையை உலகெங்கும் பரப்ப வேண்டும் எனும் நன் நோக்கமும் கூட, உகலகெங்கும் கொண்டாடப்படும் இவ்வுலக சிறுநீரக நாளுக்கு உண்டு! இன் நன் நாளில், லேகா நம்பூதிரி (31) எனும், ஆலப்புழா, மாவேலிக்கரையில் வாடகை வீட்டில் வாழும், இரண்டு குழந்தைகளின் தாய்க்கு நாம் எல்லாம் நன்றி சொல்லவும், அவருக்கு எல்லா நன்மைகளும் பயக்க, இறைவனை வேண்டி வழி படவும் கடமைப் பட்டிருக்கிறோம்!


     2010ல் வெளிவந்த மம்மூட்டி நடித்த “லௌடு ஸ்பீக்கர் (Loud Speaker) எனும் திரைப்படம் பார்த்த பின், திரையரங்கை விட்டு வெளியே வந்த லேகா நம்பூதிரியை, அத்திரைப்படத்தில் வந்த காட்சிகளும், மம்மூட்டியின் நடிப்பும், வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும்!  சில நாட்களுக்கு முன் நிலம்பூரில் நடந்த ஒரு கொலைக்குத் தூண்டுதலான “திரிஷ்யம் எனும் படத்தைப் பற்றி நான் ஒரு இடுகையில் குறிப்பிட்டிருந்தது உங்கள் நினைவுக்கு வரலாம்!  என்ன செய்ய!  அருகருகே வளரும் மாமரத்தில் மாங்கனியும், வேப்ப மரத்தில் வேப்பங்காயும் தானே உண்டாகும்!


 நல்லவர்கள் திரைப்படத்திலுள்ள நன்மையை உட்கொள்ளும் போது, தீயவர்கள் அதிலுள்ள தீமையை உட்கொள்ளுவது இயல்புதானே! அப்படி, நல்ல மனம் படைத்த லேகா நம்பூதிரியின் மனதில் அப்படம், சிறுநீரகத் தானத்தின் அவசியத்தையும், அதனால் தானம் செய்பவர்க்கு உடல் நலம் ஒருவிதத்திலும் பாதிக்கப்படாது என்பதையும், உயிர் வாழ இரண்டில் ஒரு சிறுநீரகமே போதும் என்பதையும் உணர்த்தியிருக்க வேண்டும்.  அதனால், சிறுநீரகத் தானம் செய்து ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதையும், சிந்தனையையும், முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியிருந்திருக்கிறது!


மறுநாளே செய்தித் தாளில் பட்டாம்பி, விளையூரைச் சேர்ந்த வைலச்சேரியில் ஷாஃபி நபாஸ்(33) எனும், லேகாவின் அதே ரத்த குரூப்பைச் சேர்ந்த ஒருவருக்கு, சிறுநீரகம் தேவை என்ற விளம்பரத்தைக் கண்டதும், இறைவன், தான் எடுத்த முடிவை ஆமோதித்து, தான் உதவ வேண்டிய ஒரு மனிதரைத், தன் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் என்பதை உணர்ந்து, அவருக்கு உதவத் தயாராகி இருந்திருக்கிறார்.  நபாஸுக்கு சிச்சையளிக்கும் பெரிந்தல்மன்னாவிலுள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்ற அவர், நபாஸ், நபாஸின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மருத்துவர்களையும் கண்டு, தான் நபாஸுக்கு தன் சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்யத் தயார், என்ற விவரத்தைச் சொல்லியிருக்கிறார். 


மருத்துவர்கள் சிறுநீரக தானம் செய்வதால் பிற்காலத்தில் அவருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பிரச்சைனைகளை எல்லாம் விவரித்திருக்கிறார்கள்.  அவையெல்லாம், ஒரு உயிரைக் காக்க துணிந்து இறங்கிய லேகாவை, அவர் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க்ச் செய்யவில்லை! மட்டுமல்ல, பரிசோதனைக்குப் பின் நபாஸின் அப்போதைய உடல் ஆரோக்கிய நிலை சிறுநீரக மாற்றத்திற்கு சாதகம் அல்ல என்றும், நபாஸின் ஆரோக்கியம் திருப்திகரமான பின் தான், சிறுநீரக மாற்றம் நடத்த முடியும் என்றும், அதற்கு ஒருவேளை லேகா ஓரிரு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் சொல்ல, லேகா தான் அதுவரைக் காத்திருக்கத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார். 


இதனிடையில், இவ்விவரமறிந்த எத்தனையோ பேர் லேகா நம்பூதிரியை அணுகி, சிறு நீரகம் தேவைப்படும் மற்றவர்களுக்கு சிறு நீரகத்தானம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார்கள்.  அதில் ஒருவர், 15 லட்சம் ரூபாய் சிறு நீரகத் தானத்திற்குத் தரத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.  அதைக் கேட்டும் கூட, லேகாவின் மனம் மாறவில்லை!  லேகா வறுமையில் வாடுபவர்தான். தன் இரு ஆண் குழந்தைகலையும் வறுமை காரணமாக அனாதைகள் இல்லத்தில் சேர்த்து கல்வி பயிலச் செய்யும் அவருக்கு, 15 லட்சம் ரூபாய் எவ்வளவோ அவசியாமான ஒன்றுதான்!  இருப்பினும், தன்னை நம்பி, எதிர்காலத்தைக் கனவு கண்டு கொண்டிருக்கும் நபாஸை, அவர் ஏமாற்றத் தயாராக இல்லை! பணத்திற்காக நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஏன் பிறந்த நாட்டிற்கே கூட துரோகம் செய்யத் தயங்காத எத்தனையோ மனிதர்கள் வாழும் இதேநாட்டில் தான் இப்படி ஒரு தேவதை! நினைக்கையில், மனதில் உண்டாகும் மகிழ்சியையும், பூரிப்பையும் விளக்க வார்த்தைகள் இல்லை!


     கடந்த 2013 நவம்பர் மாதத்தில், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், ஷாஃபி நபாஸுக்கு தன் இரு சிறு நீரகங்களில் ஒன்றைத் தானம் செய்து, நபாஸுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்! அவருக்காக வெரும் பிரார்த்தனை மட்டும் போதாது!  நல்ல மனம் படைத்தவர்கள் லேகா நம்பூதிரிக்கு எந்தெந்த வகையில் உதவ முடியுமோ, அந்தந்த வகையில் எல்லாம் உதவி, அவரது தியாகத்திற்கு மரியாதை செய்ய வேண்டும்!


34 கருத்துகள்:

  1. போற்றுதற் குரிய நபர் ! இறக்கும் போதும் ஏன் உயிரோடு இருக்கும்
    போது கூட இப்படித் தானம் கொடுத்து பிற உயிர்களையும் வாழ
    வைக்கும் உறவுகளைத் தான் தெய்வம் என்பார்களோ ! அருமையான
    பகிர்வு .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பாள் அடியாள் சகோதரி! மிக்க நன்றி!

      //இறக்கும் போதும் ஏன் உயிரோடு இருக்கும்
      போது கூட இப்படித் தானம் கொடுத்து பிற உயிர்களையும் வாழ
      வைக்கும் உறவுகளைத் தான் தெய்வம் என்பார்களோ !//

      சரிதான்! அவர்கள் கண்டிப்பாகத் தெய்வம்தான்! மிக்க நன்றி தங்கள் அழகிய கருத்திற்கு!

      நீக்கு
  2. கடவுள் இல்லை அவரை நேரில் காண்பித்தால்தான் நம்புவேன் என்று வாதிடுவோர்கள் முன்னால் இவரை கொண்டு நிறுத்துங்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல செய்தியை பகிர்ந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. லேகா தன்னிடம் இருந்த 2 கிட்னியில் ஒன்றைத்தான் கொடுத்து இருக்கிறார் ஆனால் நானோ என்னிடம் இருந்த ஒரு இதயத்தை என் மனைவிக்கு கொடுத்துவிட்டேன். அதை வாங்கி வைத்து கொண்டு என் மனைவி என்னை நோக்கி நீ இதயமே இல்லாத அரக்கன் என்று சொல்லி அடிக்கிறாங்க இதுக்கு நீங்கள்தான் நியாம் சொல்லி பதிவு போட வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை நியூஜெர்சி வரும்போது அவர்களிடம் நேரில் அறிவுரை கூறலாம் என்று எண்ணம் . அதுவரை பொறுத்திருங்கள். 911க்கு போன் செய்ய வேண்டாம் .

      நீக்கு
  5. நல்ல மனம் கொண்ட லேகா அவர்கள் நீடுழி வாழ எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அதிகாலை நேரத்தில் வாசிக்கக் கிடைத்த நல்ல பதிவு இது. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அடுத்தவர்களுக்கு பையில் இருக்கும் பணத்தைக் கூட கொடுக்க முன்வராத இக்காலத்தில், சிறுநீரகங்களில் ஒன்றினை, பணம் பெரிதல்ல, கொடுத்த வாக்கு பெரிது என்று எண்ணி, பணத்திற்கு அடிமையாகாமல், தானமாக அறித்த லோகா நம்புதிரி அவர்கள் போற்றப்பட வேண்டியவர்.

    பதிலளிநீக்கு
  8. லேகா நம்பூதிரி - மனிதத்துவத்தின் மகத்துவ உருவானவர் என்றே சொல்லலாம். பாருங்கள் சாதி, மதம் பாராது உதவியுள்ளார். அதுவும் பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் நம் தேசத்தில், எவ்வித பிரதியுபகாரமும் எதிர்பாராது, தம் சிறுநீரகத்தில் ஒன்றை தானமிட்டு இருப்பது மிக மிக அற்புதமான நிகழ்வு. எத்தனையோ மதங்கள், தத்துவங்கள் ஏற்படுத்தாத ஒற்றை விழிப்புணர்வை ஒரு சினிமா ஏற்படுத்தி இருப்பதும், அதன் வலிமையை காட்டுகின்றது. நல்லதைக் காட்டினால் நல்லது பெருகும் என்பதை இனியேனும் வியபாரத்துக்கு படம் பண்ணும் பலரும் உணரவும் வேண்டும். லேகா நம்பூதிரி போன்ற நல்ல உள்ளங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அவர்தம் விபரங்களையும் தந்திருப்பின் பயன்படுமே.

    பதிலளிநீக்கு
  9. இந்த நல்ல காரியம் சினிமாவினால் நடந்து உள்ளதா ,அதிசயம்தான் !
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்பால் கெல்வன் அவர்களே தங்கள் அழகானக் கருத்திற்கு மிக்க நன்றி! விவரம் தர முயற்சிக்கிறேன்! இது செய்தித்தாளில் வந்தது!

      நன்றி!

      நீக்கு
  10. லேகாவுக்கு நன்றிகள் . இதை எங்களுக்கு தெரிவித்த தங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான தகவலை உள்ளடக்கிய அற்புத பகிர்வு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  12. லேகா கோடியில் ஒருவர். வேறு எதனையும்விட உயர்ந்தவர். இவர் முன் கடவுள் எம்மாத்திரம்?

    பதிலளிநீக்கு
  13. லேகா மேச்சத்தக்கவர் சகோ!
    ஆனால் இப்படிப்பட்ட தானங்கள் இன்று ஏழைகளை சுரண்டும் மோசமான தொழிலாக மாறிவருவதாக சமீபத்திய மீடியா செய்திகள் தெரிவிக்கின்றனவே !
    இப்படியும் மனிதர்கள்!!

    பதிலளிநீக்கு
  14. கண்டிப்பாக இவரைப் போன்றவர்கள் ரூபத்தில்தான் தெய்வம் வலம் வருகின்றார்! மிக்க நன்றி மதுரைத் தமிழன் அவர்களுக்கு!

    பதிலளிநீக்கு
  15. மிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கு!

    பதிலளிநீக்கு
  16. மதுரைத் தமிழா இதயம் இல்லாமல் எப்படி வாழ்ன்றீர்கள்!!! நியாயம் சொல்லிவிட்டால் போச்சு!

    பதிலளிநீக்கு
  17. மிக்க நன்றி!! நண்பர் வெங்!கட் நாகராஜ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  18. லேகா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.. நல்ல உள்ளம் படைத்தவர்களை காண்பதே அரிதான இந்த நாட்களில் அவர் போற்றுதலுக்குரியவர்..

    பதிலளிநீக்கு
  19. மிக்க நன்றி ஜோதிஜி தங்கள் வருகஈக்கும், கருத்திற்கும்!

    பதிலளிநீக்கு
  20. மிக்க நன்றி கரந்தையாரே தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  21. மிக்க நன்றி ஸார்!! தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  22. காமக்கிழத்தன் ஸார், மிக்க நன்றி! //வேறு எதனையும்விட உயர்ந்தவர்// மிகச் சரியே!

    பதிலளிநீக்கு
  23. மைதிலி சகோதரி! ஏழைகளைச் சுரண்டும் மோசமானத் தொழிலாக மாறிவருவது உண்மையே! ஆனால் லேகா தானாகவே முன்வந்து தானே தானம் செய்திருக்கிறார்!
    மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  24. மிக்க நன்றி கோவை ஆவி! தங்கள் கருத்திற்கு!!

    பதிலளிநீக்கு
  25. லேகா நம்பூதிரி அவர்கள் நீண்ட நாள் பூரண நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  26. மிக்க நன்றி சுரேஷ்! தங்கள் பிரார்த்தனைக்கு!

    பதிலளிநீக்கு