செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

விசாலிப் பாட்டியும் எபோலாவும்

சென்னை விமான நிலையம்  படம்-கூகுள்

இனிய காலைப் பொழுதின், வழக்கமான பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது அந்த வீடு.  சமையலறையில் அந்த வீட்டு நிதி மந்திரி,  விஜயா, கௌசல்யா சுப்ரஜா....என்று சுப்ரபாதம் சொல்லிக் கொண்டு பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தாள், ஆனால் அந்த வீட்டு கடைக்குட்டித் தேவதை சுப்ரஜாவை, நித்ராதேவி இன்னும் விடுவிக்கவில்லை. கல்லூரியில் இரண்டாம் வருடம் அமைதியான படிப்பு....அதாங்க பிகாம்.....படிக்கும் அந்த தேவதை கனவில் தன் நாயகனுடன் பனிச்சருக்கு விளையாடிக் கொண்டிருந்ததை அடுப்பிலிருந்த குக்கர் மாமி எப்படி அறிந்தாளோ தெரியவில்லை, விசில் அடித்தாள். வழக்கமாகக்  கரகரப்ரியாவில் கீதம் இசைக்கும் மிக்சி மாமிக்கு என்ன ஆயிற்றோ, அன்று கொரகொரப்ரியாவில் இசைத்துக்  கொண்டிருந்தாள்.

“ம்ம்ம்மா....காஃபி.....”  இது அந்த வீட்டு இரண்டாவது மகன் கிருஷ்ணா, சுருக்கமாகக் கிச்சு. வருங்காலத்தில் எஞ்சினை ஓட்டும் - எஞ்சினீயரிங்கில் இறுதிவருடம். அம்மா சுப்ரபாதத்தில் இருப்பதைக் கண்டு,

“ம்மா நேத்திக்கு ராத்திரி முழுசும் யாரும் தூங்கவே இல்ல...பக்கத்து கோயில் அம்மன் கோயில் கொட்டு...வேட்டு சத்தம்...அதுக்கு அப்புறம்......செம மின்னல்....இடி..நம்ம தலைல வந்து விழறா மாதிரி......அப்புறம் எதுக்கு சுப்ரபாதம்?”

“டேய்! இது ஸ்வாமிக்கு...உங்களுக்கில்ல.......”

“நான் சுப்ரஜாவுக்குனு நினைச்சேன்.....அய்யயோ...!!. 24 ஹவர்ஸ் நான் ஸ்டாப் செர்வீஸ் செய்யற உம்மாச்சி கூட அசந்துட்டாரா....அடப் பாவமே....சூப்பர் மேன் நம்ம பண்ற அட்டகாசத்துனால டயர்டாயி தூங்கிட்டார் போல...ஸோ பேட்...ஸோ பேட்...அவர் பாவம்மா...கொஞ்சம் தூங்கட்டும்மா”

“ஏய்! கிச்சு...போறும் உன் நக்கல், நையாண்டி....இந்தா காஃபி......குடிச்சுட்டு ஒழுங்கா கிரிக்கெட் ப்ராக்டீஸ் போற வழிய பாரு....”

இத்தனை சப்தங்களின் நடுவில், ஹாலில் அலைபேசிக் குயில் கூவினால் விஜயாவுக்குக் கேட்குமா என்ன? ஆனால், பூஜை அறையில், கண்களை மூடிக்கொண்டு, கைகளை புடவைத் தலைப்புக்குள் வைத்துக் கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தாலும், பக்கத்து வீட்டில் ரகசியமாய் பேசப்படும் பேச்சுகள் காதில் விழும் அளவு செவிப்புலன் வாய்க்கப் பெற்றிருக்கும், 80 வயதை நெருங்கும் விஜயாவின் மாமியாரான, விசாலிப் பாட்டிக்குக் கேட்காமலா போகும்! உடனே எழுந்து சென்று அலைபேசிக்கு உயிர் கொடுத்தார்.

“ஹலோ, குட்மார்னிங்க். விசாலி ஹியர்”. (பாட்டிக்குத் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை).

“ஹை பாட்டி, நான் விச்சு பேசறேன்”.......விஜயாவின் மூத்த மகன் விச்சு. அவன் அடுத்தது சொல்ல வருவதற்குள்,

“டேய் விச்சு, கோந்தே நன்னாருக்கியாடா? சேச்சு (அவரது மகன், விஜயாவின் கணவர்) வாக்கிங்க் போயிருக்கான்....உன் தம்பி கிச்சு வழக்கம்போல கிரிக்கெட்.....சுப்ரஜா எழுந்துருக்கல....ஆவணியாவட்டம் அன்னிக்கு உன் அழுக்குப் பூணலை மாத்தினியோ?...உன் ஃப்ரெண்டு பாச்சாக்கு......” என்று இழுக்க

“ஐயோ பாட்டி கதை எல்லாம் நாளைக்கு அங்க வந்தப்புறம் கேக்கறேன்..... அம்மாகிட்ட கொஞ்சம் ஃபோனைக் கொடேன்....”

“டேய்! நீ நாளைக்கு இங்க வரியா!!! ஓ! அப்போ நீதான் நாளைக்கு வந்துடறியே....நாளைக்கு வந்து அம்மாகிட்ட பேசிக்கோயேன்....நீ வர்ரத அம்மாகிட்ட சொல்லணும் அவ்வளவுதானே நான் சொல்லிக்கறேன்...”

“ஐயோ பாட்டீ...ப்ளீஸ்...அம்மாகிட்ட கொடு....”

“ஹூம்...போடா போ” என்று அலுத்துக் கொண்டு கையில் மொபைலுடன் சமையலறையை நோக்கி, “விஜயா...விஜயா....உன் அருமை பிள்ளாண்டன் விச்சுட்டருந்து ஃபோன் என்று சொல்லிக் கொண்டே சென்றார்.

இந்த வீட்டில், விஸ்வநாதன் என்றால் விச்சு, சேஷாத்திரி என்றால் சேச்சு, கிருஷ்ணா என்றால் கிச்சு/கிச்சா, பார்த்தசாரதி என்றால் பாச்சு/பாச்சா, என்று எல்லா பேர்களையும் “உச்சு”க் கொட்டுவார்கள் இல்லையென்றால் “ச்சா” கொடுப்பார்கள். அஸ்வின் “அச்சு”  ஆகிவிடுவான். பாச்சா என்றால் கரப்பான் பூச்சி என்றோ, ரஜனிகாந்தின் பா(ட்)ச்சா என்றோ நீங்கள் நினைத்தால் அது உங்கள் இஷ்டம். அப்போ மூர்த்தியை “ச்சா” போட்டு அழைப்பார்களா, ”ச்சு” போட்டு அழைப்பார்களா என்று என்னைக் கேட்கப்படாது.

இந்த விச்சு நைஜீரீயாவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன் ஆஃபீஸ் ப்ராஜெக்ட்டுக்காக அனுப்பப்பட்டவன். என்ன வேலை, என்ன ஆஃபீஸ் என்றெல்லாம் கேட்கப்படாது. எல்லாம் ஐடி சம்பந்தப்பட்ட மொழிகள்.. தற்போது நமக்கு வேண்டாம். 

ஃபோனை விஜயாவின் கையில் கொடுத்த விசாலிப் பாட்டி காதை தீட்டி வைத்துக் கொண்டார்.

“விச்சு சொல்லுடா......என்னடா இந்த நேரத்துல...உனக்கு இப்ப அங்க ராத்திரி 1.30 மணிலியோ.....என்னடா பண்ணற.....?”

“அம்மா, நான் இப்ப அவசர அவசரமா கிளம்பிண்டுருக்கேன்......இன்னிக்கு இங்க லாகோஸ்லருந்து கார்த்தால 9.20 க்கு ஃப்ளைட்.  நாளைக்கு அங்க (சென்னை) விடிக்காலம்பற 3.50 க்கு ஃப்ளைட் லாண்ட் ஆகும். அபுதாபி வழியா.  மத்த ஃப்ளைட் டிடெய்ல்ஸ் எல்லாம் அப்பாவுக்கு மெயில் பண்ணறேம்மா”

“ஐயோ டேய் கண்ணா....என்னடா...சொல்லற...இப்ப அங்க எபோலா ப்ரேக் அவுட் ஆயிருக்கேடா.........அப்போ எபொலாவோட வரீயா....நேக்கு பயமா இருக்குடா...”

“என்னம்மா நீ...என்ன அம்மா நீ...உன் பிள்ளைம்மா நான்.... 2 வருஷம் கழிச்சு வர்ரேன்... சந்தோஷமா கேப்பியா......எபோலா பத்தி நீ இப்படி பயந்தா எப்படிம்மா.....அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.....எப்படிருந்தாலும் இங்கயும் சரி...அங்கயும் சரி ஏர்போர்ட்ல செக் பண்ணித்தான் உள்ள விடுவா.....அப்புறம் என்னம்மா.”

“டேய் கண்ணா....உனக்கு ஒண்ணும் இல்லியே......நேக்கு பயமா இருக்குடா.”   மறுபுறம் பதில் இல்லை.  ஃபோன் கட் ஆகிவிட்டது.

விசாலிப் பாட்டியின் காதில் “அப்போ எபோலாவோடு வர்ரியா” என்பது மட்டும் காதில் வடிகட்டப்பட்டது. பாட்டியின் மண்டைக்குள் ரத்த ஓட்டம் அதிகரித்தது. மூளை அதி வேகமாகச் சிந்திக்கப் பல காட்சிகள் விரிந்தன.

 “ஓ! என்னவோ எபோலாவாமே...அவனோடு வரதாமே! என்ன பிள்ளாண்டன் இவன்...சேச்சு என்ன சொல்லப் போறானோ? கண்றாவி...எபோலானா.....ஆப்பிரிக்கா பொண்ணோ?....கறுப்பா...இந்த தலை முடி எல்லாம் பின்னி பின்னி என்னமோ கண்றாவியா எல்லாம் பண்ணிண்டுருப்பாளே...அப்போ...அந்தப் பொண்ணு என்ன பாஷை பேசும்?  குயா..முயானா? அது புடவை கட்டிக்குமோ?  இல்ல அரை டிராயர்தான் போட்டுக்குமோ.....ஐயோ! ஆப்பிரிக்கா காரால்லாம் மாமிசம்னா சாப்பிடுவா...என்ன எழவோ...ஈஸ்வரா.....பக்கத்தாத்துக் கோமு கிட்ட இத டிஸ்கஸ் பண்ணியே ஆகணும்” என்று நினைத்தவாறே வாசல் பக்கம் அதி வேக நடையில் சென்றார், பூஜைக்கு லீவு! அன்றைய ஜெபம் எபோலாவாகியது!

“கோமு...கோமு...”  அவரது வீட்டு வராண்டாவில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் கோமு பாட்டி.

“என்ன விசாலி என்னாச்சு இப்படி ஒரு வேகம்...பாத்து வா...” கோமுப்பாட்டிக்கும் 75 வயதாகின்றது. இருவரும் நல்ல தோழிகள். 

“கோமு, நாளைக்கு என் பேரன் விச்சு ஆப்பிரிக்காவுலருந்து வராண்டி...என்னவோ எபோலான்னு ஒரு பொண்ணாம் அவளோடு வரானாம்...” என்று தன் ஊகங்களை எல்லாம் சொல்லிவிட்டு, “என்ன எழவோ... போ..இந்த வயசான காலத்துல இந்தக் கண்றாவி எல்லாம் பாத்துத் தொலைக்கணும் போல...அந்த ஈஸ்வரன் ஏன் என்ன இன்னும் விட்டு வைச்சுருக்கான்னு தெரில..” என்று புலம்பினாள்.

கோமுப் பாட்டிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பெரிதாகச் சிரிக்கவும், விசாலிப் பாட்டிக்குக் கோபம் வந்துவிட்டது.

“ஏண்டி கோமு நான் இத்தனை சீரியஸா சொல்லிண்டுருக்கேன்...நீ என்னன்னா இப்படி விழுந்து விழுந்து சிரிக்கறயே”

“ஐயோ விசாலி...அந்த எபோலாங்கறது பொண்ணு இல்ல...அது ஒரு பயங்கரமான தொத்து வியாதி....இப்போ டிவில, பேப்பர்ல எல்லாம் அதானே நியூஸு.....அலறிண்டுருக்கு  நீ பாக்கலயா டிவில....”

“ஹும்...சுப்ரஜா...ம்யூசிக் சானல்....அதுல எல்லாம் அரைகுறையா டான்ஸ் ஆடிண்டுருக்கும்...நேக்குப் பிடிக்காது....பேரன் கிச்சு...கிரிக்கெட் இல்லனா...இங்கிலிஷ் படம்......விஜயா உக்காந்தானா சீரியல்....பாவம் என் பிள்ளை சேச்சு...அவனுக்கு நியூஸ் பாக்கணும்னா கூட இதுகள் எங்க கொடுக்கறது....நேக்கும் இதுகள் என்ன பாக்கறதோ அதானே...நோக்கு பரவால்லடி....உன் பிள்ளாண்டன் நியூஸ் பாக்கறதுனால லோக விஷயம் எல்லாம் அத்துப்புடி...ஹூம்”

“சரி பரவால்ல விசாலி இப்ப தெரிஞ்சுக்கோ. ஆப்பிரிக்கவுல எபோலானு ஒரு தொத்து வியாதி பரவ ஆரம்பிச்சுருக்காம். வைரஸ் நால பரவர விஷக் காய்ச்சல்டி அது.....அது ரொம்ப பயங்கரமன காய்ச்சல்டி.. வந்துதுனா. உசுர வாங்கிடும்...அதுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கலயாம்.... அதான் அங்கருந்தும், மத்த வெளிநாட்டுலருந்தும் வர்றவாள எல்லாரையும் டெஸ்ட் பண்ணி அந்த வியாதி இல்லனா தான் நம்மூர்ல, உள்ள விடுவா...இருந்துதுனா...அவாள தனியா வைச்சு ட்ரீட்மென்ட் கொடுப்பா...யாரும் பக்கத்துல போக முடியாது...அவா, வியர்வை, எச்சல், எதுனா நம்ம மேல பட்டுதுனா பரவிடும்...அதனால அவாள ட்ரீட் பண்றவா கூட உடம்பெல்லாம் மறைச்சுண்டு கண்ணக் கூட மறைச்சுண்டுதான் ட்ரீட் பண்ணுவா....சரி.....அப்போ நாளைக்கு விச்சு வரான்னா அங்கயே அவா டெஸ்ட் பண்ணிட்டுதான் அனுப்புவா இங்க வந்தப்புறமும்.....ஏர்போர்ட்ல அவா டெஸ்ட் பண்ணிட்டுதான் அனுப்புவான்னு நினைக்கறேன்”

இப்போது விசாலிப் பாட்டிக்கு அடி வயிற்றில் பயம் கவ்விக் கொண்டது.

“அதான் விஜயா அப்படி டென்ஷன் ஆனா போலருக்கு....பாவம்டி..அவளயும் தேத்தணும். ஈஸ்வரா, குழந்தைக்கு ஒண்ணும் இல்லாம வந்து சேரணும்...கோமு நீயும் விச்சுக்காக வேண்டிக்கோடி........நான் ஆத்துக்குப் போறேன்...சேச்சு வாக்கிங்க் போய்ட்டு வந்துருப்பான்...அவன்கிட்ட பேசணும்....” என்று சொல்லிவிட்டு, மனதில் வேறு ஏதோ சிந்தனைகளுடன் நடந்தார்.

வீட்டிற்குள் நுழைந்ததும், சேச்சுவின் ஷூ இருந்தது.  சேச்சு வந்தாச்சு. “டேய், சேச்சு, விச்சு நாளைக்கு வரானாம்,தெரியுமோன்னோ.”

“ம்.ம்... விஜயா சொன்னா.”

“நாளைக்கு நீ ஏர்போர்ட் போம்போது என்னையும் கூட்டிண்டு போ”

“அவன் ஆத்துக்குத்தானே வரான்....நீ எதுக்கும்மா அங்க எல்லாம் வந்துண்டு”

“இதப் பாரு என்ன நீ கூட்டிண்டு போயே ஆகணும்”  அம்மாவின் பிடிவாதம் தெரிந்த விஷயம்.  எனவே சேச்சுவிடமிருந்து மௌனம்தான் பதிலாகியது.

“குழந்தைக்கு திருஷ்டி சுத்திப் போடணும். ஆஃபீஸ்ல யாருமே ஆப்பிரிக்காவுக்குப் போக மாட்டேனுட்டா. இவன் மட்டும்தான் சரின்னு போனானோல்லியோ, இங்க உள்ளவா எல்லாரும் அவன் மேல திருஷ்டி போட்டுட்டா.”

சேச்சு தலையில் அடித்துக் கொண்டார்.  கிச்சு வீட்டுக்கு வந்ததும், அண்ணா வரப்போவதை அறிந்த அவன், அண்ணன் கொண்டு வரப்போகும் கிரிக்கெட் மட்டையால் விளையாடுவதைக் கனவு காண ஆரம்பித்தான். சுப்ரஜா, அண்ணன் வாங்கி வருவதாகச் சொன்ன, ஆப்ரிக்கப் பழங்குடி மக்களின் பாரம்பரிய உடையான “ஃபுலானி” உடையில், தன் தோழிகள் முன்னும், காதலன் முன்னும் வலம் வருவதாகக் கனவு காண ஆரம்பித்தாள். அம்மா எபோலா கவலையில், அப்பாவிற்கும் கவலை ஒருபுறம் இருந்தாலும், அவன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்க, பாட்டி வேறொரு விதமாகத் தயாராகிக் கொண்டிருந்தார்.

“டேய், கிச்சு இங்க வா” என்று கூப்பிட்டு ரகசிய குரலில் பேச ஆரம்பித்தார். 

“கிச்சு, நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்”.

“பாட்டி, என்ன வேணாலும் பண்ணறேன்.  ஆனா எனக்கு நீ ஒரு 500 ரூபா தருவியா?  பாக்கெட் மணி.”

“தந்து தொலைக்கறேண்டா. நான் ஒரு லிஸ்ட் தருவேன்.  நீ அத வாங்கித் தரணும்.” என்று சொல்லி, பர்தா உடை, க்ளவ், மஞ்சள் பொடி பாக்கெட், கல் உப்பு பாக்கெட், எலுமிச்சம் பழம், மிளகு பாக்கெட், வெத்தலை, சூடன், சிவப்பு மிளகாய், வேப்பிலை என்று எழுதிக் கொடுக்கவும்,

“என்ன பாட்டி இது லிஸ்ட்?  எதுக்கு இதெல்லாம்...என்னவோ மந்திரவாதி லிஸ்ட் போலருக்கு”

“டேய் சத்தம் போடாத...500 ருபா....ஞாபகம் இருக்கட்டும்.  பேசாம போய் வாங்கிண்டு வா....ரகசியமா எங்கிட்ட தரணும்.....அதுக்கப்புறம் உன் ஹெல்மெட்டும், ஷூ, சாக்ஸ் எல்லாம் கொஞ்சம் நேரம் வேணும்.......வெளில யாருக்கும் தெரியக் கூடாது......500 ரூபா......” என்று 500 ருபாயை அவன் கண் முன் ஆட்டிக் காட்டினார்.

“ம்ம்ம் என்ன செய்ய...என் பொழப்பு இப்படி.....வாங்கிண்டு வரேன்...”

அடுத்த நாள் ஏர்போர்டிற்கு, சேச்சு காரோட்ட, பாட்டியும் உடன் சென்றார்.  விஜயாவும் வந்தால் மூன்று பேராகப் போகக்கூடாது என்பது பாட்டியின் சென்டிமென்ட்.  அப்படிப் போவதாக இருந்தால் சென்டிமென்ட் இடமாகிய 4 வது இடத்தை யாராவது நிரப்ப வேண்டும்.  டாமியைத் தவிர வேறு யாருக்கும் அந்த அதிகாலை நேரத்தில் நித்ரா தேவியைப் பிரிய மனமில்லை.  எனவே சேச்சுவும், பாட்டியும்.

ஏர்போர்ட் போனதும், பாட்டி, சேச்சுவை, டிக்கியைத் திறக்கச் சொல்லி, முதல் நாள், பாட்டி கிச்சுவின் உதவியுடன் காரின் டிக்கியில் யாருக்கும் தெரியாமல் ஏற்றியிருந்த தன் மூட்டையை எடுத்துக் கொண்டார். சேச்சுவுக்கு ஆச்சரியம் ஒரு புறம், கோபம் ஒரு புறம்.

“என்னம்மா இதெல்லாம்?  ஏர்போர்ட்டுக்கு எடுத்துண்டு வந்துருக்க?” என்று கேட்டவர்தான்....பாட்டியின் முறைப்பில் மௌனம் சாதித்தார், ஏர்போர்டில் ரகளை வேண்டாம் என்று. சிறு வயதிலிருந்தே அம்மாவின் வார்த்தைகளுக்கு இரண்டாவது முறை மறுத்துப் பேசிய பழக்கம் இல்லாததால்.

ஃப்ளைட் சரியாக 3.50க்கு லான்ட் ஆகி ¼ மணி நேரம் ஆகி இருந்தது. விச்சு வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகிவிடும் என்றாலும் சேச்சு பயணிகள் வெளி வரும் வாயிலையே பார்த்துக் கொண்டு எபோலா பற்றிய கவலையிலும் இருந்த வேளையில், 5 மணி ஆனதும்,

“சேச்சு, நான் கார் பக்கத்துல போய் இருக்கேண்டா. என்னைத் தேடாதே”

என்று சொல்லிவிட்டு, இன்னும் விடியாததால், பாட்டி மெதுவாகக் கொஞ்சம் தள்ளிக் கூட்டம் இல்லாத, ஏர்போர்ட் வெளிச்சம் சற்றுக் குறைவாக இருந்த கார் இருந்த இடத்திற்குச் சென்று, தன் மூட்டையைப் பிரித்து தன் சாமான்களை எல்லாம் வெளியில் எடுத்துத் தனது வேலையைத் தொடங்கினார். கார் மாருதி ஈக்கோ ஆதலால், டிக்கியே தன் வேலைக்கு வசதி என பாட்டி தீர்மானித்தார். அங்கு பக்கத்தில் நின்றிருந்த கார்களின் ஓட்டுனர்கள் சிலர் பாட்டியை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.

“ஒரு வேளை ஏதாவது ஷூட்டிங்கா இருக்குமோ.... ஔவை சண்முகி 2 வது பார்ட் ஏதாச்சும் எடுக்கறாங்களோ” என்று அவர்களின் மனதில் எண்ண ஓட்டங்கள், பக்கத்தில் கேமரா ஏதாவது இருக்கிறதோ என்ற தேடல் வேறு.

5 மணி தாண்டும் சமயம் விச்சு தன் செக்கின் பாகேஜுடன் வெளியில் வர, சேச்சு அவனைக் கூட்டிக் கொண்டு காரின் அருகே வந்தார். அங்கு பர்தா உடையில், கையில் க்ளவ், காலில் சாக்ஸ், ஷூ, தலையில் தலைக்கவசம் என்று ஏதோ விசித்தரமக ஒரு உருவத்தைப் பார்த்ததும், இருவரும் சற்றுப் பயந்து, அருகிலும் வேடிக்கைப் பார்ப்பவர்கள் இருப்பதைப் பார்த்துக் குழம்பி,

“யார் நீ? உனக்கு இங்க என்ன வேலை” என்று கேட்டுக் கொண்டே விசாலிப் பாட்டியைத் தேட,

“டேய் விச்சு, என்னையா தேடற?  நாந்தாண்டா இது, எப்படிடா இருக்கே கோந்தே?” என்று அந்த பர்தா உருவத்திற்குள் இருந்து குரல் வரவும், சேச்சுவும், விச்சுவும் ஆச்சரியமாகவும், குழப்பத்துடனும் பார்த்து, ஏதோ சொல்ல ஆரம்பிக்க, விச்சுவின் அலைபேசி கூவியது. 


அலைபேசி கூவியது எதற்கு?  நாளை......    தொடர் நாளை நிறைவுபெறுகின்றது   

27 கருத்துகள்:

  1. ஹா....ஹா... ஒருவேளை பாட்டிக்கு எபோலா பயமோ... முன்னெச்சரிக்கையோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் கொள்ளலாம்.....நாளை இரவு வந்தால் என்ன என்று தெரிந்துவிடும்....எபோலாவுக்கு பயப்படாமல் முதலில் வந்து சுட சுட விசாலிப் பாட்டிக்கு கமென்ட் போட்டதற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  2. மூச்சாஆனா மூர்த்தியையும் எபோலா அழகியையும் ரசித்தேன் .கடைசியில் அலைபேசி வழியா ,அடுத்து என்னான்னு எங்களுக்கு காய்ச்சல் ஏற்படுத்தி விட்டீர்களே !
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை காய்ச்சல் தொடரும் ஜி! நாளை இரவு வந்து விடுங்கள். எபோலாவிற்கு பயப்பட வேண்டாம். விசாலிப் பாட்டி இருக்கையில்.....

      நீக்கு
  3. வர்ற விச்சு எபோலாவை அபுதாபியில ஊதிவி்ட்றாம நான் வேற ஏர்போர்ட் பக்கமாத்தான் இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயப்படாதீங்க கில்லர் ஜி! விசாலிப் பாட்டிய அனுப்பி வைக்கறோம்...ஏன்னு கேக்காதீங்க ....இன்னிக்கு ராத்திரி வாங்க காரணம் புரியும்....

      நீக்கு
  4. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான, தங்குதடை இல்லாத, ‘அவாள்’ வீட்டு மொழியில் நகைச்சுவை ததும்பக் கதை சொல்லியிருக்கிறீர்கள். மிக நன்றாகக் கதை எழுத வருகிறது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! மூன்று கதைகள் அந்தக் காலத்திலேயே தாங்கள் எழுதி வெளிவந்த பெருமை உடைய நீங்கள் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கண்டு மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  6. வணக்கம்
    நிகழ்வை படிக்கும் போது மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது நன்றாக உள்ளது கதையின் நகர்வு.. தொடருங்கள் அடுத்த பகுதிக்கு காத்திருக்கேன்.த.ம2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி! இரண்டாவது வெளியிட்டாகிவிட்டது!

      நீக்கு
  7. த.ம 3

    கதை நன்றாக இருக்கிறது. அடுத்து என்ன...? என்ற ஆவல் அதிகரித்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! 2 வது பகுதி வெளியிட்டாகிவிட்டது!

      நீக்கு
  8. அருமை
    அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! அடுத்தபகுதியும் பதிவாகிவிட்டது!

      நீக்கு
  9. இப்போதெல்லாம்கதையின் கடைசியில் தொடரும் போட்டு எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார்கள். உங்கள் கதையும் அப்படியே. மூர்த்திக்கு ச்சா- வா, ச்சு- வா, ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார், கதை கொஞ்சம் பெரியதானதால் இரண்டாகப் போடுகின்றோம். மிக்க நன்றி சார் ரசித்ததற்கு! அடுத்த பகுதியும் உள்ளது சார்!

      நீக்கு
  10. என்ன ஆச்சு விசாலி பாட்டிக்கு....?
    காத்திருக்கின்றேன்.
    த.ம. 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் தாங்கள் பதில் கொடுத்துவிட்டீர்களே...நாங்கள் தான் தாமதமாக வந்திவிட்டோம் இதற்கு பதில் உரைக்க! மிக்க நன்றி1

      நீக்கு
  11. அண்ணா !! FANTASTIC காமெடி அண்ணா! ஒவ்வொருவரியா மென்ஷன் பண்ணமுடியலை. மொத்தமா செம இருக்கு! தேர்ந்த நடை ! நல்ல நகைச்சுவை! விசாலி பாட்டி கலக்குற:)) பாக்கியம் ராமசாமி கதை படித்தது போல் உணர்வு!!! வாழ்த்துக்கள் சகாஸ்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசாலிப் பாட்டிக்குக் கிடைத்த பாராட்டிற்கு மிக்க நன்றி! அப்போ பாட்டியிடம் சரக்கு இருக்குன்றீங்க!!!

      உண்மைதான், இதை எழுதும் போது பாக்கியம் ராமசாமியின் பாட்டிதான் நினைவுக்கு வந்தார்......தாத்தா இல்லை இதில்.....அதன் பாதிப்பு தெரிகின்றதோ?! நல்லதா கெட்டதா என்று தெரியவில்லையே! ம்ம்ம்ம் மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

      தாங்க்ஸ் தாங்ஸ்!

      நீக்கு
    2. இல்ல அண்ணா சீதே போல் சீரியஸ் பாட்டி இல்லை நம்ம விசாலி :)) so தொடர்ந்து கலக்கலாம்:))

      நீக்கு
  12. முதலிலி சீரியஸாகத் தொடங்கி பின்னர் ஒவ்வொரு வரியியையும் ரசித்துச் சிரிக்கும் படி அமைத்துள்ளீர்கள்!
    அதற்குள் முடிகிறதா எனப்பார்த்தால் தொடரும்............
    தொடர்கிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி விஜு ஐயா! தங்கள் பாராட்டிற்கு! அடுத்த பகுதியும் பதிவாகிவிட்டது!

      நீக்கு
  13. அட, அட, என்னமா எழுதுறீங்க சார்.

    நகைச்சுவை டாப் கியர்ல போக ஆரம்பிக்கும்போது, இப்படி தொடரும்னு போட்டுட்டீங்களே!!! இது உங்களுக்கே அடுக்குமா, நியாயமா????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....சார் அடுத்த தொடர் இடுகையும் இருக்கே சார்! அல்ரெடி போட்டாச்சு சார்......பாருங்க...

      மிக்க நன்றி சார் பாராட்டிற்கு!

      நீக்கு