திங்கள், 4 ஆகஸ்ட், 2014

கல்லுக்குள் ஈரம்....கள்வனுக்குள் கருணை உள்ளம்.....காப்பாற்றப்பட்டதோ நான்கு உயிர்கள் !!!!


     ஒளிவிளக்குத் திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், தான் திருடப் போன இடத்தில், மனிதாபிமானமில்லாதச்    உதறப்பட்டு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் சௌகார் ஜானகியைக் காப்பாற்றும் காட்சியைக் கண்ட போது திருடர்கள் இப்படிக் கருணையுள்ளவர்ளாக இருந்தால் எவ்வளவு நல்லது என்று நான் இண்ணியதுண்டு.  கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த அது போன்ற ஒரு நிகழ்வு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது.

     குணம்நாடிக்  குற்றமும்  நாடி  அவற்றுள்
     மிகைநாடி மிக்க கொளல்
எனும் வள்ளுவன் வாக்கின்படி, குணங்களும், குற்றங்களும் கலந்துள்ள மனிதர்களின் ஒரு சில நல்ல குணங்கள் அவர்கலது குற்றங்களை, தீய குணங்களை மறக்கச் செய்து அவர்களைப் போற்றிப் புகழ வைக்கும் என்பதை உண்மையிலேயே என்னால் உணர முடிந்தது.

       கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில், “மொட்டை ஜோஸ்” எனும் திருடன் மிகவும் பிரபலமான ஒரு திருடன்.  விழித்திருக்கும் போதே விழிகலைத் திருடும் திறமை படைத்தவன்.  எனவே, பொது மக்கள் அவர் பெயரைக் கேட்டாலே உறக்கமின்றித் தவிப்பார்கள்.  போலீஸோ அவரது பெயரைக் கேட்டாலே நிம்மதி இழந்துத் தவிப்பார்கள்.  கடந்த வாரம், கிளிக்கொல்லூர் உதவி ஆய்வாளரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பொது, “மொட்டை ஜோஸ்”, ஐந்து வருடங்களுக்கு முன்பு, ஓரிரவு, ஒரு வீட்டின் சன்னலை உடைத்து உள்ளே நுழைந்த போது, ஒரு அறையில் நல்ல உடல் நிலை உள்ள ஒரு மனிதர், தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் நிற்பதைப் பார்த்து பயந்தே போனானாம்.

அந்த மனிதரின் மனைவி ஜோஸைப் பார்த்து “நீ யார்?  எப்படி உள்ளே வந்தாய்?  ஏன் உள்ளே வந்தாய்?”  என்று கேட்க, ஜோஸ், தான் திருடன் என்றும், சன்னலை உடைத்துத் திருட வந்ததாகவும் சொல்ல, அந்த மனிதர் சிரித்துக் கொண்டே, “ இரண்டு நாட்களாய் அடுப்பில் புகை வராத இந்த வீட்டில் உனக்குத் திருட ஒன்றுமே இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.  ஜோஸின் கல் நெஞ்சம் உருக ஆரம்பித்துவிட்டது.  கடன் தொல்லையாலும், வேலை போனதாலும், வாழ வழியின்றி நால்வரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டி, வாழைப்பழத்திற்குள் சயனைடைத் தேய்த்துச் சாப்பிடப் போன போதுதான் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து அப்படியே நின்று விட்டதாக அவர்கள் சொல்ல, ஜோஸ் சயனைட் தேய்க்கப்பட்ட அந்த வாழைப் பழங்களை எடுத்து வெளியே எறிந்திருக்கின்றார். இங்கிருந்து “ன்” “ர்” ஆவதைக் கவனிக்கவும்.  தன் கையிலிருந்த, தான் திருடிய ரூ 4,500 ஐ அந்த மனிதரிடம் கொடுத்து, உடன் வருகின்றேன் என்று சொல்லி வெளியே சென்றாராம் ஜோஸ். 

இரண்டு வீடு தள்ளியிருந்த, மரச்சீனிக் கிழங்குத் தோட்டத்திலிருந்துச் சில மரச்சீனிக் கிழங்குகளைப் பறித்துக் கொண்டு வந்து, அக்குடும்பத்தாரிடம் கொடுத்து அதை வேகவைத்துச் சமைத்து, அவர்களுடன் அதை உண்ட பின் அங்கேயே சில நாட்கள் அவர்களுடன் தங்கி, சில வீடுகளில் திருடி, அதில் ஒரு விகிதத்தை அவர்களுக்குக் கொடுத்து, “இனிமேல் இது போன்றுத் தற்கொலை செய்ய முயற்சிக்க மாட்டோம்” என்று எல்லோரிடமும் சத்தியம் வாங்கிச் சென்றாராம்.  ஐந்து வருடங்களில் இடையிடையே பல முறை அவ்வீட்டுக்குச் சென்றதாகவும், இப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் நல்ல நிலையில் வாழ்வதாகவும் சொல்லக் கேட்ட, உதவி ஆய்வாளருக்கும், மற்ற காவலர்களுக்கும் மிகவும் வியப்பாக இருந்ததாம்.

150 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் “மொட்டை ஜோஸ்”, அடூரில் தலை மறைவாய் தங்கியிருந்த போது “Mr. Fraud” (மிஸ்டர் ஃப்ராட்) எனும், நடிகர் மோஹன்லால், ஹைடெக் திருடனாக வரும் படத்தைப் பலமுறை பார்த்து பரவசமடைந்ததாகவும் கூறியிருக்கிறார்.  தான் திருடும் பணத்தைத் தீரும் வரை நல்ல உணவு உண்டு, நல்ல உடை உடுத்து, நல்ல விடுதிகளில் தங்கி செலவு செய்வதுடன், தன் தோழிகளுக்குப் பணமாகவும், பரிசுப் பொருளாகவும் கொடுத்ததுண்டாம்.  அவர்கள் உதவியுடன் பணம் மற்றும் நகைகள் உள்ள வீடுகளைப் பற்றிய விவரம் அறிந்து, இரவில் அவ்வீடுகளில் சென்று திருடுவாராம்.  கடந்த வாரம் கிளிக் கொல்லூரில் தனியே தங்கியிருக்கும் ஒரு பெண்ணின் வீட்டில், ஓரிரவு யாரோ, வீட்டின் வெளியிலிருக்கும் குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்க, அப்பெண்மணி மறுநாள் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய, காவல்துறையினர் விரித்த வலையில், அடுத்த நாளும் இரவு குளிக்க வந்த “மொட்டை ஜோஸ்” பிடிபட்டிருக்கிறார். அப்படிப் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டேவிட்டார்.


அவரை விசாரிக்கும் போது காவல்துறையினருக்குத் தெரிய வந்ததோ, மிகவும் வியப்பளிக்கும் வித்தியாசமான அனுபவங்கள். இதையெல்லாம் வாசித்த போது, “மொட்டை ஜோஸ்” தன் வாழ்க்கை அனுபவங்களைப் புத்தகமாக்கினால், அது அமோக விற்பனையில் முதலிடத்தைப் பிடிப்பதுடன் பல விருதுகளும் அவருக்குப் பெற்றுத் தர வாய்ப்பிருக்கிறது.  அவர் 150 வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், உடனடியாக சிறை வாசத்திலிருந்து வெளிவர வாய்ப்பில்லாததால், சிறைக்குள் இருந்தே தன் சுவாரசியமான வாழ்க்கை அனுபவங்களை எழுதத் தொடங்கலாம்.  திருடனாக இருந்த வால்மீகி, திருந்தி, இராமாயணம் எனும் காவியத்தை உலகிற்கு அளித்தது போல், இந்த “மொட்டை ஜோஸும்” ஒரு காவியமே படைத்தாலும் படைக்கலாம்!  வியப்பில்லை!  யார் அறிவர்?! அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், நாங்களும், அவரது அனுபவங்களைக் கேட்டுத் தமிழில், புத்தகமாக படைக்கலாமோ?!

படங்கள் : இணையம்

15 கருத்துகள்:

  1. நீங்கள் அதை கேட்டு எழுதப் போகிறீர்களா சகோ வாழ்த்துக்கள் ! ரொம்ப சுவாரஸ்யமாகவே உள்ளது. கொள்ளை அடித்து ஏழைகளுக்கு உதவுவது போல் நிறைய திரைப் படங்கள் வந்துள்ளன இருந்தாலும். அது திரைப் படம் தானே இது நடை முறையில் சாத்தியம் என்றால் நிச்சயம் மகிழ்ச்சி தான் சகோ. நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா மிக்க நன்றி சகோதரி! வாய்ப்புக் கிடைத்தால் எழுதலாம் தான்!

      நீக்கு
  2. வணக்கம்
    அண்ணா.
    இந்த தகவல் வியப்பளிக்கும் வகையில் உள்ளது. தங்கள் இறுதியில் சொல்வது போல..இவரைப்பற்றிய புத்தகம் வந்தால் சாதனைபடைப்பார் என்பதில் ஐயமில்லை. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    த.ம 1வதுவாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக அவர் எழுதினால் வெற்றி அடையும்....திருடுவதை விட நிறையவே சம்பாதிப்பார்...நல்ல விதமும் கூட!

      நீக்கு
  3. கல்லுக்குள் ஈரம்..... படிக்கும் போதே மகிழ்ச்சி... சூழ்னிலைக் கைதிகள் தானே பலரும்.....

    அவரது வாழ்க்கையை புத்தகமாக்கினால் - நல்ல ஆசை தான்! சினிமாவாக எடுத்தாலும் நல்லது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா யாராவது சினிமா எடுப்பார்கள்....எடுக்கலாம்...புத்தகம் வெளிவந்தாலே நன்றாகத்தான் இருக்கும்!

      மிக்க நன்றி வெங்கட் தங்கள் கருத்திற்கு

      நீக்கு
  4. வெங்கட் சார் சொல்லுவது போல், அவருடைய வாழ்க்கையை படமாக எடுத்தாலும் எடுப்பார்கள் நம்மூர் சினிமாக்காரர்கள்.

    கொள்ளைக்காரர்கள் மனதிலும் ஈரம் இருப்பதை காட்டுகிறது. பார்ப்போம் அவர் புத்தகம் கித்தகம் ஏதாவது எழுதுகிறாரா என்று!

    சில வருடங்களுக்கு முன்பு, ஜூனியர் விகடன், திருநெல்வேலியை சேர்ந்த பிரபல தாதாவின் வாழ்க்கையை ஒரு தொடராக எழுதியிருந்தார்கள். நீங்கள் அதனை படித்தீர்களா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா சாரி! கதையைக் கேட்டால் கண்டிபாக திரைப்படம் வரலாம்.....அவர் புத்தகம் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும்....ஆனால் எழுதுவாரா?

      ஆம்...எழுதினார்கள் என்று தெரியும்...ஆனால் முழுவதும் வாசிக்க வில்லை சார்!

      நீக்கு
  5. என்னதான் நன்மைகள் செய்தாலும் அந்த stigma போகுமா.? செய்யும் தொழிலுக்குப் பிராயச்சித்தமா?. வாழ்த்துக்கள். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்மந்த ஸ்டிக்மா போகுமா போகாதா என்பது சமூகத்தின் பார்வையிலும் அவர் தனது எண்ணங்களை விரிவாக்கி, நல்ல பாதையில் போவதிலும் தான் இருக்கின்றது சார்...

      நீக்கு
  6. “மொட்டை ஜோஸும்” ஒரு வால்மீகி தானோ ? திருடர்களிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. திருடுபவர்கள் எல்லோருமே மோசம்னு சொல்ல முடியாது ஜி! வெங்கட் சார் சொன்னது போல எல்லாருமே சூழ்னிலைக் கைதிகள் தான்.....அப்படிப்பாத்தா...நாமளும் தினமும் நிறைய பொய் சொல்லி நடித்துக் கொண்டுதானே இருக்கோம்.....

    பதிலளிநீக்கு
  8. கல்லுக்குள் ஈரம்...
    கள்வனுக்குள் கருணை உள்ளம்...
    சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. இரக்கமுள்ள திருடன் போல! உண்மைதான் இவருடைய அனுபவங்களை புத்தகமாக எழுதினால் நன்கு விற்கும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. சில நேரங்களில் நல்லவன் போல் நடந்து கொண்டாலும் அடுத்தவர் உழைப்பினால் சம்பாதித்ததை ,திருடுவதை ஏற்றுகொள்ள முடியவில்லை !
    பறிகொடுத்தவர் நிலையில் இருந்து பார்க்கும் போது,இப்படிப்பட்ட திருடர்களை பொது இடத்தில் சுட்டுவிட தோணுதையா எனக்கு !
    த ம 3

    பதிலளிநீக்கு