செவ்வாய், 2 செப்டம்பர், 2014

என் கனவுக் கோட்டையைத் தகர்த்த அட்ரியானா, லியான்ரோ!...இன்று போல் என்றும் வாழ்க!!!


      ஒன்றா? இரண்டா?  29 வருடங்களாகப் பாதுகாத்து வந்த ஆசைகள் அடுக்கப்பட்டக் கோட்டை!  90% பணியும் முடிந்து விட்டது. இன்னும் 10% பணிதான்.  எப்படிச் செய்வது என்ற சிறு குழப்பம்.  நானும்தான் பெரிதாகி 29 வருடத்தை விழுங்கிவிட்டது.  சென்ற வருடம்தான் தோழி கீதா, “நான் செய்கிறேன் மீதமிருக்கும்  பணியை” என்று ஏற்றுக் கொண்டார்.  பெரும்பாலும் அடுத்த வருடம் பணி தீர்ந்து புதுமனை புகு விழாவிற்கு வழக்கம் போல் நம் பதிவர்கள் அனைவரையும் அழைத்து (அழைத்தாலும் வருவது வழக்கம் போல் அதே அளவு அன்பான பதிவர்கள் தானே!) அதிர வைப்போம் அல்லது புத்தகமாக வெளிக் கொணரலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த வேளையில், எதிர்பாரா விதமாகப் பிரேசிலைச் சேர்ந்த 39 வயதான அட்ரியானாவும், அவரது கணவர் லியான்ரோவும், ரேடியோ க்ளோபோவின் உதவியுடன் “காலம் செய்த கோலமடி” எனப் பெயரிட்டிருந்த அந்தக் கோட்டையை ஏவு கணை எய்தித் தகர்த்தெரிந்து விட்டார்கள்.  அப்படி, என் கதை “வானத்து நிலவைத் தண்ணீரில் சிறை வைத்த”க் கதையாகிவிட்டது.  இனி, இப்படிப் புலம்பி, அழத்தான் முடியும்.  அதற்கு முன் யார் இந்த அட்ரியானாவும், லியான்ரோவும்?  அவர்கள் எப்படி என் “காலம் செய்த கோலமடி”யை “காலம் சென்ற கோலமடி (காமடி?!)” ஆனதற்குக் காரணமாகிப் போனார்கள் என்பதைச் சொல்லி விடுகிறேன்! இதுதான் கேயோட்டிக் தியரி என்பதோ?!!!!

படம் இணையம்
      
     தென்னமெரிக்காவிலுள்ள பிரேசிலில், காணாமற்போன பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் சகோதர, சகோதரிகளைக் கண்டுபிடித்துச் சேர உதவும் நிகழ்ச்சியொன்று அங்குள்ள “ரேடியோ க்ளோபோ” நடத்துகிறது.  அதில் 39 வயதான அட்ரியானா பங்கெடுத்துத் தனக்கு ஒரு வயதாக இருந்த போதே தன்னை விட்டுப் பிரிந்த தன் தாயைக் கண்டு பிடிக்க முயன்றிருக்கின்றார்.  தாயை இழந்த அவர் தன் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து, லியான்ரோ என்பவரை ஏழு வருடங்களுக்கு முன்பு மணந்து ஒரு குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.  அட்ரியானவைப் போல் லியான்ரோவும் அவருக்கு 8 வயதாக இருந்த போதுத் தாயைப் பிரிந்தவர்தான்.  அவரும் அப்போதைய தாயின் புகைப்படத்தைப் பாதுகாத்து வைத்துத், தன் தாயை என்றேனும் காண முடியும் என்ற நம்பிக்கையில் தேடிக் கொண்டுதான் இருந்திருக்கின்றார்.

      எப்படியோ, அட்ரியனாவின் தாயை ரேடியோ க்ளோபோ கண்டு பிடித்துத், தாயும் மகளும் தொலைபேசியில் பேசி அதை ஒலிபரப்பவும் செய்தது.  அப்படி ஒலிபரப்பப்பட்ட போது, அட்ரியானா வின் தாய் சொன்ன செய்தி அட்ரியானாவிற்கு அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக இருந்தது.  அட்ரியானோவைப் பிரிந்தது போல், அதன் பின் அவருடன் வாழ்ந்து வந்த அவரது மூத்த மகனான லியான்ரோவையும் அவனுக்கு 8 வயதாக இருந்த போது பிரிய வேண்டியச் சூழல் ஏற்பட்டதைச் சொல்லி அத் தாய் வருந்தியிருக்கிறார்.  அப்போதே, அந்தத் தொலை பேசித் தொடர்பிலேயே இருவரும் பரிமாறிக் கொண்ட ஓரிரு கேள்விகளும், பதிலும், இருவருக்கும் அட்ரியானாவின் கணவரான  லியான்ரோதான் வருடங்களுக்கு முன்பு காணாமற் போன அந்த எட்டு வயதுச் சிறுவன் எனப் புரிய வைத்தது.  ஒரு வயதில் தன்னை விட்டுப் பிரிந்த தன் மகளது கணவன் எட்டு வயதில் தன்னை விட்டுப் பிரிந்த மகன் என்பதை அறிந்த போது அந்தத் தாய்க்கு எப்படி இருந்திருக்கும்? 

ஏழு வருடமாகத் தன்னை கண்ணின் இமை போல் காக்கும் கணவன் தன் சிறுவயதில் தன்னைப் பிரிந்த தன் சகோதரன் என்பதை அறிந்த அட்ரியானோவுக்கு எப்படி இருந்திருக்கும்? தனக்கும் அட்ரியானோவுக்கும் பிறந்த அன்புக் குழந்தையை தோளிலேற்றி இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் லியான்ரோவுக்கு எப்படி இருந்திருக்கும்?  இதையெல்லாம் விதியின் விளையாட்டென்றோ,  காலம் செய்த கோலமென்றோ தானே சொல்ல முடியும்!  இது போன்ற சில உண்மைகள் எப்போதும் உறங்கிக் கிடப்பதுதான், அந்த உண்மைகள் வெளிப்படும் போது வேதனைப்படவிருக்கும் மனிதர்களுக்கும் நல்லது.

இது அட்ரியனாவுக்கும், லியான்ரோவுக்கும் வேதனை ஏற்படுத்தியது போல் எனக்கும் வேறு ஒரு விதத்தில் வேதனை ஏற்படுத்தித்தான் இருக்கின்றது.  இது போன்ற ஒரு சம்பவத்தின் அடிப்படையில்தான் நான் “காலம் செய்த கோலமடி” என்ற தலைப்பில் ஒரு நாவலை , முப்பரிமாணப் பார்வையில் எழுதியிருந்தேன். முடிவு எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் 29 வருடங்கள் ஓடிவிட்டது. ஊமை கண்ட கனவாகிவிட்டது. இன்னும் ஐந்தே ஐந்து அத்தியாயங்கள் எழுதி நாவலை முடித்து வாரம் இருமுறை வலைத்தளத்தில் இட்டுக் காலத்தை ஓட்ட நினைத்த என் “காலம் செய்த கோலமடி” எனும் தயிர் தாளியில், தோழி கீதாவின் உதவியுடன் வெண்ணைய் திரண்டு வரும் வேளையில், ரேடியோ க்ளோபோ கொடுத்த தடியால் அட்ரியானாவும், லியான்ரோவும் அடித்து அதை உடைத்தே விட்டார்கள்.  என்ன செய்ய?   இப்படியாக இவர்களால் எனது காலம் செய்த கோலமடி காலம் சென்ற காமெடி ஆகிவிட்டது!  காலம் செய்த கோலம்தான் இதுவும்.  இச்சம்பவம் தங்களது இல்லற வாழ்வை பாதிக்காது என்றும், தங்களை மரணத்தால் மட்டுமே பிரிக்க முடியும் என்றும் சொல்லிய அட்ரியானாவும், லியான்ரோவும், “இன்று போல் என்றும் வாழ்க”  என்று வாழ்த்துகிறோம்.

-துளசிதரன் 

பி.கு.: 29 வருடமாகப் படுத்த படுக்கையில் இருந்த என் எழுத்தில் உருவான கதை, சோகக் கதை, இனியும் அப்படியே தொடரட்டும்!  வேறு வழி?....எல்லாம் காலம் செய்த கோலம்!

-

***************************************************************************************************************

      
    என் இனிய நண்பர் துளசி மிகவும் விரக்தியடைந்து விட்டார் என்றே தோன்றுகின்றது.

         ("துளசி! புலம்ப வேண்டாம்! அழவேண்டாம்! அதற்கு அவசியமில்லை! தயிர் தாளியில், ரேடியோ க்ளோபோ கொடுத்த தடியால் அட்ரியானாவும், லியான்ரோவும் அடித்து உடைக்கவில்லை".)  

     அந்தக் கதை இந்தப் பதிவில் சொல்லப்பட்டச் சம்பவத்தை சிறிது ஒத்து இருந்தாலும், அவரது கதையின் பயணம் வித்தியாசமானது. சம்பவங்களை முப்பரிமாணத்தில் சொல்லியிருக்கின்றார். மூன்று பரிமாணங்களும் ஒன்றின் முடிவில் அடுத்த பரிமாணம் ஆரம்பிக்கும் வகையில் எழுதியிருக்கின்றார்.  அவர் முடிவு எழுதாமல் அப்படியே கிடப்பில் இருந்ததை நான் தூசி தட்டி எடுத்து உயிர்ப்பிக்கலாம் என்ற நோக்கத்தில் அவருடன் விவாதித்து வருகின்றேன்.  முடித்துத் தருகின்றேன் என்ற வாக்குறுதி வேறு. 80 களில் இருந்த எழுத்து நடை.  எனவே அப்போது தொடங்கிய கதை இப்போது முடிவது போல் கொண்டுவர உத்தேசம். எழுத்தின் நடை சிறிது வித்தியாசப்படும்.  எனவே, அதற்கான விவாதம் நடந்தது/நடந்து கொண்டே இருக்கின்றது. அதில் மறைந்திருக்கும், அதிகம் பேசப்படாத ஒரு உளவியல் ரீதியிலானக் விஷயத்தைச் சொல்லலாம் என்பதைப் பற்றியும், அதற்கு எங்கள் இருவருக்குள்ளும் காரசாரமான விவாதம். முடிவு அட்ரியானா, லியான்ரோ போல் அல்ல.  எனவே நண்பர் விரக்தி அடையத் தேவை இல்லை.  படுத்த படுக்கையும் அல்ல.  சோகக் கதை  தொடரப் போவதுமில்லை.  “காலம் செய்த கோலம்”... புள்ளி வைத்தக் கோலம். புள்ளி வைத்தாகிவிட்டது. பெரிய புள்ளிக் கோலம் அல்லவா...எனவே புள்ளிகளை இணைப்பதில் சிறு சிக்கல் அவ்வளவே! சிக்கலை அவிழ்த்தால் கோலம் தயாராகி விடும்!  பார்வைக்கு! 

--கீதா 




50 கருத்துகள்:

 1. காலம் செய்த கோலத்தால்
  கலக்கல் தொடர் வரப்போகிறது...

  விவாதம் நன்கு முடிந்து வரட்டும்...
  வெற்றியாக நாவல் நடை போட வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்திற்கு! முதலில் வந்து சுடச் சுடக் கருத்து, தங்கள் வலையில் சுடச் சுட மெனு ரிசீப்பிஸ் போடுவது போல், இட்டமைக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 3. நண்பரே, தங்களின் நாவலை வெளிக் கொணருங்கள் .தயங்கவேண்டியதில்லை. நடந்த சம்பவ்த்தை வைத்து எழுதப்பட்ட கதை அல்ல தங்களது.
  தாங்கள் எழுதியது நடந்திருக்கிறது.
  அனாலும் நண்பரே வாழ்க்கையில் விசித்திரத்தைப் பார்த்தீர்களா,
  பிரிந்த சகோதரனும், சகோதரியும்,இன்று மணமக்கள்
  காலம் செய்த கோலம்தான் என்ன.
  அவர்களின் மன நிலையினை நினைத்துப் பார்க்கிறேன்.....

  தம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! வெளிக் கொணரவேண்டும்...தங்கள் உக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே! இப்போது கொஞ்சம் தைரியம் எட்டிப் பார்க்கின்றது!

   நீக்கு
 4. ஆச்சர்யம்தான், இதே போன்ற சம்பவம் ஏற்கெனவே நடந்திருப்பது. அதனால் என்ன, பார்வையும் கோணமும் வேறாக இருப்பதோடு, ஒரு நிரூபணமும், இன்னொரு முடிவின் விளைவுகளும் தெரிந்து விட்டால் நாம் எழுதியதை இன்னும் பண்படுத்தி எழுதி விடலாமே..

  அப்புறம் ஒரு சிறு குழப்பம். இந்தப் பதிவு எதிலிருந்து எது வரை நீங்கள் சொல்வது? எதிலிருந்து தோழி கீதா எழுதியது?

  //என் இனிய நண்பர் துளசி மிகவும் விரக்தியடைந்து விட்டார் என்றே தோன்றுகின்றது//

  இந்த வரியிலிருந்து அவர் எழுதியதை எடுத்துப் போட்டிருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார் மிக்க நன்றி! தங்களின் ஊக்கத்திற்கு! எழுதி விடலாம்.....நேரம் வேண்டும்....எனக்கும் சரி தோழிக்கும்....அவரும் முனைந்து கொண்டிருக்கின்றார்.

   பொதுவாகவே நாங்கள் இருவரும் சேர்ந்துதான் எங்கள் வலைத்தளத்தில் எழுதுகின்றோம். கலந்து ஆலோசித்து, விவாதித்து.

   சென்னைதான் எங்கள் வளைத்தளத்தின் தலைமைச் செயலகம்?! அங்கிருந்து தோழிதான் பதிவேற்றம் செய்வது எல்லாம். எனவே அவர் சேர்ப்பது, அவரே எழுதுவது எல்லாம் கலந்து பேசி, எடிட் செய்து சென்னையிலிருந்து பதிவேற்றம். இதுவும் அப்படித்தான். நான் இந்த இடுகை எழுதி அவருக்கு அனுப்பிய பின் அவர் அதில் இதைச் சேர்க்கலாம் என்று சொல்லி பேசிவிட்டுச் சேர்த்தோம்.

   நீங்கள் சொல்லுவது சரியே.....//என் இனிய நண்பர் துளசி மிகவும் விரக்தியடைந்து விட்டார் என்றே தோன்றுகின்றது// இதிலிருந்து தோழி எழுதியதுதான்....

   நீக்கு
  2. 23 அத்தியாயங்கள் அன்றே எழுதி முடித்துவிட்டேன். 28அத்தியாயங்களில் முடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தேன். அந்த 80 களில் இருந்த ஒரு எழுத்து நடை...அந்த கால கட்டத்தில் நிறைய எழுதி வைத்து, சிறு கதைகளும் கூட....சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டக் கதைகள், குறிப்புகள் எல்லாமே. பின்னர் இத்தனைக் காலம் எழுதாததால், இப்போது எழுத்தின் நடை மாறி உள்ளது. அப்போது தமிழ் ஊற்று. இப்போது மலையாள நாட்டில் 85 ற்கு பிறகு வாழ்க்கை என்பதால் மலையாள வாசனை, வார்த்தைகள் (அவருக்கும் மலையாளம் தெரியும் என்பதால்) என் எழுத்தில் தெரிவதாகத் தோழி சொல்கிறார். அதைத் திருத்தவும் செய்கின்றோம். அந்தக் குறிப்புகளைக் கதைகளாக மாற்றி தோழி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். நான் அப்போது எழுதிய கதைகளும் எடிட் செய்யப்பட்டு வலைத் தளத்தில் போடப்பட்டுள்ளது....இதெல்லாம் வலைத்தளம் ஆரம்பித்த புதிதில்....பின்னூட்டம் வராத நேரத்தில்......இப்போது அவற்றை மீண்டும் மீள் பதிவாக வெளியிடலாம் என்ற உத்தேசமும் உள்ளது....சார்!

   நீக்கு
  3. ஓ.... விளக்கத்துக்கு நன்றி.

   //இப்போது அவற்றை மீண்டும் மீள் பதிவாக வெளியிடலாம் என்ற உத்தேசமும் உள்ளது..//

   கலக்குங்க...

   நீக்கு
 5. தெரிஞ்சே பல பேர் கதைகளை சுட்டுட்டு இன்ஸ்பிரேஷன்னு சொல்ற காலம் இது.. எதேச்சையான நிகழ்வு தானே இது.. முடிச்சு வெளியிடுங்க..! படிக்க ஆவலோட இருக்கோம்.! முப்பரிமாண நாவல்னு வேற சொல்லிட்டீங்க.. இப்பவே எப்படி இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஆவி! முப்பரிமாண ....அதுவும் கூட பார்த்தீர்கள் என்றால், விருமாண்டி ஸ்டைலாகி விடுமோ என்ற யோசனையும் வருகின்றது.....மூன்று கதாபாத்திரங்கள் அவர்கள் கோணத்தில் சொல்லப்படுவது. அவர்கள் மூன்று பேரும் எப்படி சம்பந்தப்பட்டவர்கள், அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களும் மனிதர்களும் என்று...போகும்.......முடிக்க வேண்டும்.....

   நன்றி ஆவி ஊக்கத்திற்கு!

   நீக்கு
 6. blue lakoon என்ற ஆங்கிலப் படம் இதே சிக்கலான உறவின் அடிப்படையில் வந்த படம் என நினைக்கிறேன் ,காலம் செய்த கோலமடி வருவதில் எதற்கு இந்த தாமதம் ?
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Blue Lagoon கதையில் அவர்கள் கஸின்ஸ் ஆகத்தான் வருகின்றார்கள், தனியாக வாழ வேண்டிய சூழ்னிலை வருவதால் உறவு அப்படியாகிவிடுகிறது.....காலத்தின் கோலம் இன்னும் சிக்கலான உறவு ........தாமதத்தின் காரணம்.....இருவருக்கும் நேரம் நிறைய வேண்டும்.....இத்தனை வருடமாக கிடப்பில் இருந்ததால் எழுத்து நடையில் ஏற்பட்டுள்ள வித்தியாசங்கள் ....மிகவும் பார்த்து திரும்ப திரும்ப அதை வாசித்து நாவலை முடிக்க வேண்டும்.....அதனால் தான் தாமதம் ஜி! செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.....மிக்க நன்றி ஜி தங்கள் ஊக்கத்திற்கு

   நீக்கு
 7. ஒரே கதைகள் வெவ்வேறு பார்வைகளில் வருவது இல்லையா அது போலத்தான் இதுவும், துளசி மேடம் நீங்கள் வருத்தத்தில் இருப்பதால் சுஜாதா கூறிய கருத்து ஒன்றை கூற விளைகிறேன், இங்கு கற்பனைக் கதை என்று எதுவுமே இல்லை நாம் கற்பனை என்று நினைக்கும் ஒவ்வொன்றும் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன, நான் கூறவில்லை சுஜாதா கூறுகிறார்.

  ஆகவே வெற்றிகரமாக புத்தகதிற்கான அடுத்த வேலைகளில் இறங்குங்குங்கள். உதவி தேவைப்படின் வாசகர் கூடம் காத்திருக்கிறது :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீனு மிக்க நன்றி! ஆம் சுஜாதா சொல்லி இருப்பது வாசித்திருக்கின்றோம்....மிகவும் சரியே......இறங்க வேண்டும்.....முடிப்பதற்கு...கண்டிப்பாக உதவி தேவைப்படின் வாசகர் கூடத்தை அணுகுவோம்.....மிக்க நன்றி சீனு ஊக்கத்திற்கு...உங்கள் எல்லோரது ஊக்கமும் இருக்கும் போது தைரியம் வருகின்றது.

   சீனு....துளசி(தரன்)........மேடம்- கீதா

   நீக்கு
 8. விரைவில் முடித்து வெளியிடுங்கள் சகோதரரே..உங்கள் நாவல் இனியும் உறங்கவேண்டாம்.
  வாழ்வில் சந்தித்தவை பார்த்தவை என்று பலவற்றோடு ஒத்துப்போவதுபோல இருக்கும்..அதுதானே மனிதரின் வாழ்வில் உள்ள ஒற்றுமை..அதற்காக உங்கள் கதை தனித்துவம் இல்லாமல் போய்விடுமா?
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாகச் சகோதரி! தங்கள் கருத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம்....சரியே....தயக்கம் இருந்தது உண்மைதான்.....ஆனால் இப்போது சிறிது தைரியம் வந்துள்ளது......முடிக்க முயற்சிக்கின்றோம்....

   நீக்கு
 9. 29 வருடங்களாக எழுதிய கதையா..?இந்தக் கால கட்டத்தில் கருத்துகளும் வாழ்க்கையை அணுகும் முறைகளுமே மாறி இருக்குமே. நீங்கள்சொல்லாவிட்டால் கதைக்கும் வாழ்வுக்கும் உள்ள சிமிலாரிடி எப்படிப் புரியும் ? இத்தனை வருடங்களாக எழுதும் கதையில் மொழி நடை இவற்றை அது இருப்பதுபோல் வெளியிட்டால் சுவாரசியம் கூடும் என்பது எண்ணம். நானும் ஒருநாவல் எழுதி இருந்தேன் 1960 களில் அதை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் பதிவில் தொடராக எழுதி இருந்தேன் “நினைவில் நீ” என்ற தலைப்பில். ஒரு கனாக் காணும் இளைஞனின் கதை..விருப்பமிருந்தால் சொல்லுங்கள் அனுப்பித் தருகிறேன் எந்த எண்ணங்களின் அடிப்படையில் கதையின் கரு அமைந்ததோ அதை மாற்ற வேண்டாம் என்பது என் கருத்து. .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 29 வருடங்களாக எழுதியதில்லை சார். அப்போது எழுதி வைத்து முடிக்க முடியாமல் கிடப்பில் இருந்த கதை.....80 களுக்கும் இப்போதைய காலகட்டத்திற்கும் உள்ள வித்தியாசம்.....இடைப்பட்ட காலத்தில் எழுதவில்லை சார்.......

   கண்டிப்பாக சார்.....தங்கள் வலைத்தளத்தில் இருந்தால் நாங்கள் சென்று வாசிக்கின்றோம் சார்.....அதன் லிங்க் மட்டும் கொடுத்தால் போதும் சார். வலைத்தளத்தில் இல்லை என்றால் அனுப்பித்தரவும் சார்....மிக்க நன்றி

   கதையின் கரு மாறாது சார்......அது அப்படியேதான்.....காலம் மாறி உள்ளதால்.....அதை முடிப்பதில் சிறு சிறு குழப்பங்கள்......முடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது சார்.....மிக்க நன்றி தங்கள் ஊக்கத்திற்கு!

   நீக்கு
 10. வணக்கம்
  அண்ணா.

  கதையை படித்தேன் நன்றாக உள்ளது தொடக்கம் முதல் முடிவு வரை மிக அருமையாக உள்ளது. தங்களின் எழுத்து நடை ஒரு வித்தியாசமாக உள்ளது எடுத்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
  த.ம4வது வாக்கு

  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

  வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. உண்மைக்கதை என்பார்கள்.. இங்கோ காலம் செய்த கோலமாக கதை உணமைச்சம்பவத்தை காட்சியாக்குகிறதே..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! சகோதரி! இப்போதெல்லாம் பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி என்ற குடும்ப உறவுகளில் இருக்கும் அண்ணன், தங்கை உறவில் வரும் இளைய வயதினர் மணம் புரிந்துகொள்ளும் வழக்கமும் வந்து கொண்டிருக்கின்றது....

   மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு

 12. என்ன சார் கதை முழுவதையும் இங்கே சுருக்கமாக சொல்லிவீட்டீர்களே...இப்படி சொல்லிவுட்டு கதையை தொடராக படிக்கும் போது சிறிது இன்ரெஸ்டிங்க் குறைந்துவிடுமே அதை நீங்க மனதில் கொள்ளவில்லையா என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லைத் தமிழா! இது ஒரு புள்ளிதான். அது வேறு பரிமாணத்தில் வரும். அதுவும் மிகவும் நுணுக்கமான உணர்வுகள், சம்பவங்களுடன் வரும்....ஆனால் எழுதும் போது அது மனதில் தோன்ற வில்லைதான்........

   உங்கள் கருத்தை இனி நினைவில் கொள்கின்றோம்.....

   நீக்கு
 13. துளசி சார் நீங்கள் ஒரு பதிவை எழுதும் போது அதை உங்கள் பெயருடனும் கீதா அவர்கள் எழுதும் போது அவர்கள் பெயருடனும் நீங்கள் இருவரும் சேர்ந்து எழுதும் போது இருவர் பெயருடன் எழுதுங்கள் அப்ப்துதுதான் அது யாரின் கருத்து என்று தெரியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழா நம்பினால் நம்புங்கள்....நாங்கள் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போதுதான்...அதாவது....மதுரைத் தமிழன் வந்தால் கண்டிப்பாக இதைச் சொல்லுவார் என்று சொல்லிக் கொண்டிருந்து நாங்கள் பெயரைச் சேர்க்க நினைத்து ப்ளாகருக்குள் சென்றால் உங்கள் கருத்துரை.....ஆஹா நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது மதுரைத் தமிழன் முந்துக் கொண்டுவிட்டார்.....என்று நாங்கள் சிரித்து விட்டு....அப்படியே எங்கள் பெயரையும் சேர்த்து விட்டோம்....இனி அப்படியே செய்கின்றோம். நன்றி தமிழா!

   நீக்கு
 14. முப்பரிமாண நாவல் விரைவில் வெளி வரட்டும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. கற்பனைகள் நிஜமாவதும் நிஜமானவை கற்பனையாவதும் எழுத்துலகில் சகஜம்! வருத்தம்வேண்டாம்! தொடரை எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். முதலில் தயக்கம் இருந்தது. இப்போது அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயமாக சுரேஷ்! வெளியிடுவோம். மிக்க நன்றி தங்கள் ஆதரவிற்கு!

   நீக்கு
 16. சீக்கிரம் வெளியிடுங்கள் நண்பரே முதல்பிரதியை நான் வாங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! மிக்க நன்றி கில்லர் ஜி! தங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை சொல்லுங்கள்?!!!! தங்கள் ஊக்கத்திற்கும், அதரவிற்கும் மிக்க நன்றி ஜி! ஆமாம் என்ன கொஞ்சம் அமைதியாக இருப்பது போல் தோன்றுகின்றது?!!! ஸ்ரீபூவுஜி சாமிகள் உங்களுக்கு ஏதாவது மாய மந்திரம் போட்டு கட்டுப்படுத்திவிட்டாரா?!!!!!

   நீக்கு
 17. ஒருவேளை இதற்குப் பெயர்தான் விதியோ என்னவோ?

  பல சினிமாக் கதைகள் திரும்பத் திரும்ப ஒரே பார்முலாதான். அவர்கள் பல கதைகளை உல்டா செய்வதால் நமக்கு தெரிவதில்லை. வடிவேலு ஒரு காட்சியில் தனது தியேட்டரில் முதல் பாதி பாட்சாவையும் அடுத்த பாதி வேறொரு படத்தையும் இணைத்து சமாளிப்பார். நீங்களும் உங்கள் நாவலை கொஞ்சம் உல்டா செய்து பாருங்கள். இது மாதிரியான சிக்கலான பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று சொல்லுங்கள்.
  த.ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! நாங்கள் கொடுத்த பதில்கள் எல்லாம் எங்கே போயிற்று என்று தெரியோயவில்லை......மன்னிக்கவும் ....கொடுத்து அது பதிவாகி விட்டது என்று நினைத்து விட்டோம்....

   கண்டிப்பாக சார் மெருகேற்றி நாவலை வெளியிட ஆசைதான்...நேரம் துணியபுரிய வேண்டும் சார்.....

   மிக்க நன்றி!

   நீக்கு
 18. சிறந்த படைப்பு
  நல்ல கதைப் பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 19. நிச்சயம் எழுதுங்கள்..... Interesting Knot....

  ஒவ்வொரு கதைக்கும் வேறு வேறு கோணங்கள் இருக்க முடியும். அதனால் தயங்காது வெளியிடலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. இப்போது உங்கல் எல்லோரது ஊக்கத்தையும் கண்ட போது முயற்சி செய்து வெளியிட தயக்கம் குறைந்துவிட்டது!

   மிக்க நன்றி வெங்கட் ஜி! தங்கள் ஊக்கத்திற்கு!

   நீக்கு
 20. அய்யா,
  வணக்கம். இது போன்ற சம்பவங்கள் எல்லாப் படைப்பாளர்களுக்கும் நேர்வதுதான். நாம் எழுதி வெளியிடாமல் வைத்திருக்கும் கருத்தை கவிதை வரிகளை இன்னொருவர் சொல்லிப் போயிருப்பார்.
  மீண்டும் நாம் சொல்லும் போது அது கருத்துத் திருட்டு என்று கொள்ளப்படுமோ என்று நாம் தயங்குவது நியாயமானதே!
  இது வரை எவரும் சொல்லியே இராத, உலகில் நடந்தே இராத விஷயம் குறித்துக் கூற வேண்டுமென்றால் நாம் எப்படி ஒரு முழுமையான படைப்பைப் படைக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
  நீங்கள் குறிப்பிடும் சம்பவம் நாவலின் ஒரு புள்ளி . ஒரு வேளை அது நாவலின் மையமாக இருக்கலாம்.
  ஆனால் அதையும் நீங்கள் கையாளும் விதம், அதன் நடை, காட்சிப்படுத்தல் , விவரணை , பாத்திரப்படைப்பு, உத்தி .... என எவ்வளவோ இருக்கிறது.
  தங்களின் இருபத்தைந்து கால தவமுதிர்வு முடிந்து எங்களுக்குத் தங்கள் படைப்பைக் காணும் வரம் விரைவில் கிடைக்கட்டும்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 21. துளசி சார், சீக்கிரம் அந்த நாவலை பதிவிடுங்கள். படிக்க காத்துக்கொண்டிருக்கிறேன். என்னதான், கரு ஒன்றாக இருந்தாலும் கூட, நாங்கள் உங்களின் எழுத்து நடையை ரசிக்கிறோம். அதனால் கண்டிப்பாக எழுதுங்கள்.

  அப்புறம் , இவர்களது வாழ்க்கையை படிக்கும்போது, எனக்கு பாலச்சந்தர் சார் இயக்கும் படங்கள் தான் நியாபகத்துக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாகச் சொக்கன் சார்! ஆமாம் பாலசந்தர் சாரின் கதைகள் எல்லாம் சிக்கல் நிறைந்த உறவுகளைச் சொல்லும் கதைகளாகவும், அதில் பெண் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாகப் பதியபட்டிருக்கும். வசனங்கள் மிகவும் கூர்மையாக வித்தியாசமாக, உணர்வு, அறிவு பூர்வமாகவும் இருக்கும்! சிந்திக்கவும் வைக்கும்! சிகரம்!!!

   தங்களது ஊக்கம் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றாது. வெளியிட முயற்சி செய்கின்றோம்!

   நீக்கு
 22. ஆஹா! கேட்கும் போதே சுவாரஸ்யமா இருக்கே:) உலகம் முழுக்க காதல் கதை வந்துட்டு தான் இருக்கு, சொல்ற விதத்தில் வித்தியாசம் காட்ட நம்ம சகாக்களுக்கா சொல்லித்தரனும்:)) you! two people can make wonders:) and its your nature too:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா...சகோதரி...எங்கள் கதையில் காதல் என்பது மெயின் அல்ல.....இது சற்று மாறுபட்டது....பார்ப்போம்....வெளியிட முயற்சி செய்கின்றோம்.....எங்களின் மீது இத்தனை நம்பிக்கையும், எதிர்ப்பார்ப்பும், பெரிய படைப்பாளிகள் என்ற எண்ணமுமா? வைத்திருக்கின்றீர்களா? அதை நாங்கள் எட்ட வேண்டுமே.... We will try our best!

   நீக்கு
 23. மிக்க நன்றி விஜு ஐயா! தங்களது விளக்கமான கருத்திற்கும், ஊக்கத்திற்கும்! நிச்சயமாக தங்கள் சொல்லியிருக்கும் கருத்தை மனதில் கொண்டு முயற்சி செய்து, மெருகேற்றி முடித்து வெளியிடுகின்றோம்! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 24. கற்பனையை விட உண்மை கூடுதலான வியப்புக்குரியதாக இருக்கும் என்பார்கள். அஃது அப்படியே பலித்திருக்கிறது உங்கள் விதயத்தில்!

  தங்கள் தோழியார் கீதா அவர்கள் கூறுவது போல் நீங்கள் இவ்வளவு உளமுடையத் தேவையேயில்லை என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. சொல்லப் போனால், இஃது உங்கள் கதைக்கு மேலும் சுவை கூட்டத்தான் பயன்படும். நீங்கள் இதைக் கதையாக எழுதி முடித்து விட்டு, இறுதியில் இந்த உண்மை நிகழ்வையும் குறிப்பிட்டு, சரியாக இந்தக் கதையை முடிக்க 5 அத்தியாயங்களே மீதமிருந்த நிலையில் உங்களுக்கு இது தெரிய வந்தது எனக் குறிப்பிட்டால், படிப்பவர்களுக்கு அஃது இன்னும் சுவையூட்டக் கூடியதாகவே இருக்கும்.

  வரலாற்றில் இது போல் ஏற்கெனவே ஆங்கில எழுத்தாளர் ஒருவருக்கு நடந்திருப்பதாக எப்பொழுதோ வாரமலரில் படித்த நினைவு. ஆனால், அந்த எழுத்தாளர் கதையை எழுதியதற்கும் அந்த நிகழ்வு நடந்ததற்கும் இடையிலான காலவெளி 100 ஆண்டுகள்! ஆனால், நீங்களோ ஏறத்தாழ குறிப்பிட்ட நிகழ்வு நடந்த அதே காலக்கட்டத்தில் அதைக் கற்பனை செய்திருக்கிறீர்கள்! இது வரலாறு காணாத புதுமை! எனவே, இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் நீங்கள் இந்தக் கதையை எழுதி முடித்து வெளியிட வேண்டியது மேலும் கட்டாயமாகிறது என்பது என் பணிவன்பான கருத்து. முடிவையும் தாங்கள் இதுவரை தீர்மானிக்காததால், உண்மை நிகழ்வின் முடிவையே நீங்கள் கதைக்கும் கொடுத்துவிட்டால் சாலப் பொருத்தமாக இருக்கும்! நினைத்துப் பாருங்கள்! முழுக் கதையையும் எழுதத் தெரிந்த உங்களுக்கு முடிவு ஏன் தோன்றவில்லை? ஒருவேளை, இதற்காகத்தான் காலம் உங்களைக் காத்திருக்க வைத்ததோ!

  உங்கள் கற்பனையில் தோன்றிய கதை உலகின் இன்னொரு மூலையில், ஏறத்தாழ அதே காலக்கட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது ஒரு விந்தை! அதைப் பற்றித் தெரியாமலே நீங்கள் அதை இங்கே கதையாக வடித்துக் கொண்டிருந்தது இன்னொரு விந்தை! அந்தக் கதைக்கு முடிவு எழுதாமலே நீங்கள் இத்தனை ஆண்டுக்காலமாகக் காத்திருந்த நிலையில், எப்படியாவது முடித்து விடலாம் என்று துணிந்த நேரத்தில் கச்சிதமாக அந்த உண்மை நிகழ்வு பற்றியும், அதன் முடிவு பற்றியும் உங்களுக்குத் தெரிய வந்தது விந்தையிலும் விந்தை அல்லவா? இப்படியொரு கதை எழுதும் வாய்ப்பு வேறு யாருக்குக் கிடைக்கும்? இதைப் போய்த் தவற விடுதாகச் சொல்கிறீர்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! தங்கள் விரிவான, அழகான கருத்துள்ள பின்னூட்டத்திற்கு! அருமையான கருத்துரை! தங்கள் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி! தங்கள் கருத்துக்களைக் குறித்து வைத்துள்ளோம். நிச்சயமாக அதையும் மனதில் கொண்டு வெளிக் கொண்டுவர முயல்கின்றோம்! மிக்க மிக்க நன்றி தங்களது ஆதரவிற்கும்!

   தாமதமான பதிலுக்கு தாழ்மையுடன் மன்னிப்பு வேண்டுகின்றோம்!

   நீக்கு
 25. //தங்கள் கருத்துக்களைக் குறித்து வைத்துள்ளோம். நிச்சயமாக அதையும் மனதில் கொண்டு வெளிக் கொண்டுவர முயல்கின்றோம்!// - மிக்க மகிழ்ச்சி ஐயா!

  //தாமதமான பதிலுக்கு தாழ்மையுடன் மன்னிப்பு வேண்டுகின்றோம்!// - அட, பெரிய வார்த்தையெல்லாம் எதற்கு ஐயா!

  பதிலளிநீக்கு