வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?


கேரளத்தில், சாதி, மத, இனம் பாராது ஒட்டு மொத்த கேரளாவே கொண்டாடும் ஓணப் பண்டிகை இதோ இந்த வருடமும் வந்து முடிந்து விட்டது. கேரளத்தின் மெகா நட்சத்திரமாகிய மம்முக்காவையும், லாலேட்டனையும், இப்போது அங்கு உச்சியில் டாப் கியரில் இருக்கும் நட்சத்திரம்  முதல் புதிதாக அரும்பியுள்ள நட்சத்திரங்கள் வரை எல்லா நட்சத்திரங்களையும் மலயாளத் தொலைக்காட்சிச் சானல்கள் எல்லாம் போட்டி போட்டுத் தோன்ற வைத்து கேரள மக்களுக்கு ‘ஓணாம்ஷதங்கள் பறையவைச்சு, பறைன்ஞ்ஞு’ கொண்டாடியாயிற்று. ஓணப் பண்டிகையின் வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பொத்தாம் பொதுவாக சொல்லப்படும் கதையிலிருந்து சிறிது மாறு பட்டதாக, சென்ற வருடம் ஓணப் பண்டிகை அன்று முதன் முதலாக தமிழில் வெளியான ‘தி இந்து’ தமிழ் நாளிதழில், இந்தப் புராணத்தின், ஓணப் பண்டிகையின் கதா நாயகனான மகாபலி சக்கரவர்த்தியின் கதை வந்தது. இப் புராணத்தின் கதாநாயகன் மகாபலிச் சக்கரவர்த்திதான், மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லப்படும் வாமனன் அல்ல, என்றுதான் தோன்றுகின்றது.  இந்தக் கதையைப் படித்தால் தெரியும் நான் சொல்ல வருவது என்னவென்று.

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் இருந்து - நன்றி “தி இந்து” தமிழ் நாளிதழ் - புராண காலத்தில் மகாபலி என்ற மன்னன் கேரளாவை ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக்காலத்தில் மக்கள் ஒரு குறையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். மகாபலியின் புகழால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று இந்திரன் அஞ்சினான். அவன் மகாவிஷ்ணுவிடம் வேண்ட அவரும் மகாபலியை தான் அழிப்பதாக உறுதிகொடுத்தார். இதன்படி வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, மகாபலியிடம் தனக்கு மூன்று அடி நிலம் தானமாக வழங்குமாறு கேட்டார். வள்ளலான மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க ஒப்புக் கொண்டார். போக்குவரத்தைப் பெற்றுக் கொண்டதும் மிக பிரம்மாண்டமாக விஸ்வரூபமெடுத்த மகாவிஷ்ணு முதல் அடியாக பூமியையும், இரண்டாவது அடியாக வானத்தையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று அவர் கேட்க, தன் தலையின் மீது அளந்துகொள்ளுமாறு மகாபலி கூறினார்.  இதைத் தொடர்ந்து மகாவிஷ்ணுவும் மகாபலியின் தலை மீது கால்வைத்து அவரை பூமிக்குள் தாழ்த்தினார்.  மகாபலி நல்லவர் என்பதால் அவருக்கு வேண்டிய வரத்தைக் கேட்குமாறு மகாவிஷ்ணு கூறினார்.  அதற்கு மகாபலி, “நான் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கேரளாவைச் சுற்றிப்பார்க்க வருவேன்.  அப்போது என் மக்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க வேண்டும்.” என்று மகாவிஷ்ணுவை வேண்டினார்.  மகாபலி அப்படி வருவதாக கருதப்படும் 10 நாட்களில் அவரை வரவேற்க மக்கள் உற்சாகமாக ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இந்தப் பண்டிகையில் முக்கியமான நாளாக திருவோண நட்சத்திரம் வரும் நாள் கொண்டாடப்படுகிறது. சரி இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கிறீர்களா?  இதோ வருகிறேன் விஷயத்திற்கு..


இதே கதையைத்தான் தனது, பார்வையில், தான் வாசித்ததின், அறிந்ததின், கேட்டதின், ஆராய்ந்ததின் அடிப்படையில், அந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டுத், தனது கற்பனையையும் இழைத்து, ‘மஹாமுடி த க்ரேட் (Mahamudi The Great) என்ற பெயரில், எளிமையான ஆங்கிலத்தில் தானே எழுதி, தயாரித்து, இயக்கி, குழந்தைகளுக்கான குறும்படமாகவும், புத்தகமாகவும் 4 வருடங்களுக்கு முன்பு வெளியிட்டவர் எனது நண்பர் திரு.துளசிதரன். எனது நண்பரின் பார்வை என்னை மிகவும் யோசிக்க வைத்தது.  நிறைய கேள்விகள் என் மனதில் தோன்றியது.


      மிக மிக நல்ல மன்னராக மக்களால் கொண்டாடப்பட்ட மகாபலியை எதற்காக மகாவிஷ்ணு அழிக்க வேண்டும்? இந்திரன் பொறாமைப்பட்டான் என்பதாலா? இந்திரன் பொறாமைப்பட்டால் அது அவன் தவறல்லவா? அவன் விஷ்ணுவிடம் முறையிட்டால் விஷ்ணு அவனைத்தானே திருத்த வேண்டும்? பொறாமைப்பட்ட இந்திரனை விட மிகச் சிறந்த மகாபலி மன்னன் மோசமானவன் என்றா இந்தப் புராணம் சொல்லவருகிறது? அப்படியென்றால் மிக அடிப்படையான வாழ்வியல் தத்துவத்தையே இப்புராணக்கதை அடித்து நொறுக்கிவிடுகிறதே! புராணங்கள் மக்களுக்கு நல்லதைத் தானே போதிப்பதாகச் சொல்லப்படுகிறது?

சரி, அடுத்ததாகப் புராணங்களில், விஷ்ணு காக்கும் கடவுளாகத் தானே சித்தரிக்கப்பட்டுள்ளார்?  கடவுள், அதுவும் காக்கும் கடவுள் என்பவர் நீதி, நியாயம், தர்மம், நேர்மை ஆகியவற்றைக் காப்பவர் என்று தானே அர்த்தம்?  அப்படி இருக்கும் போது காக்கும் கடவுள் ஏன் அழித்தல் தொழிலை மேற்கொண்டார்?  தேவர்களின் தலைவனாகிய இந்திரனைக் காக்க என்று அர்த்தம் கொள்ள வேண்டுமா?  அப்படி எடுத்துக் கொண்டாலும் காக்கும் கடவுள் அநீதிக்குத் துணை போவதாகத்தானே அர்த்தம், அதாவது இந்திரனின் பொறாமைக்கு! எல்லோரும் ஒரே இனம், ஒரே சாதி, ஒரே கடவுள் என்று மக்களை வாழச்செய்து, அமைதி தவழும் நாடாக, மலநாட்டை ஆண்டுவந்த மஹாபலிச் சக்கரவர்த்தி அசுரனா? மக்களைக் காப்பவர்தானே கடவுள்? அப்படிக் காக்கும் கடவுள் என்றால் விஷ்ணு சிறந்த மன்னனாக, மக்களின் தெய்வமாகத் திகழ்ந்த மகாபலியைப் போற்றி அவருக்குச் சிறந்த வரங்களை அருளி இன்னும் நீடூழிவாழ ஆசிர்வதித்திருக்க வேண்டும் இல்லையா?  ஆகவே என் நண்பர் அவர் தனது புத்தகத்தில் எழுதி இருப்பது போன்று, மகாபலி சிவ பக்தன் ஆதலால், தத்துவ வேறுபாடுகள் எழுந்த சமயத்தில்,  இடைச் செறுகலாகத், தங்களுக்குச் சாதகமாக ஒரு சிலர் இந்தப் புராணக்கதையின் உண்மையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியிருக்கக் கூடுமோ?  இல்லை என்றால் அவர் கூறுவது போல திராவிடர்களினூடே ஆரியரின் நுழைவை சுட்டிக் காட்டுகிறதோ? 

      இப்படியாகச் சொல்லப்படும் இந்தப் புராணக்கதை இப்போதுள்ள அரசியலுக்கும் பொருந்துவது போல் உள்ளது! நல்ல ஆட்சியாளரோ, மக்கள் விரும்பும் ஒரு நல்ல தலைவரோ இருந்தால், அவரைப் பொறாமை மிக்க அரசியல்வாதிகள் தன் அடியாட்களின் மூலம், இப்போது வழக்கில் உள்ள தமிழ் வார்த்தைப்படி, போட்டுத் தள்ளுவது தானே வழக்கமாக இருக்கின்றது? இல்லையென்றால் அவரை ஆட்சி அமைக்கவிடாமல் கவுக்கத்தானே செய்கிறார்கள்?  அப்படிப்பட்ட நல்ல அரசியல் தலைவர் யாராவது இருக்கிறார்களா என்ன என்று நீங்கள் யோசித்து விடை தெரியாமல் விழிப்பதும் தெரிகிறது!  அதுவும் சரிதான். 

அப்படியென்றால் விஷ்ணு இந்திரனின் அடியாளா? அவருக்கும் இப்போதுள்ள அடியாட்களுக்கும் என்ன வித்தியாசம்? இக்காலக்கட்டத்து அடியாட்களும், அவர்களது தலைவரும் நல்லவர்களா?  அவதாரங்களா? காக்கும் கடவுள் விஷ்ணு, மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும் இல்லையா?  விஷ்ணு, அதுவும் வேறு ஒரு வேடம் பூண்டு மகாபலியை ஏமாற்றுவது போலத்தானே இருக்கிறது?  அதை அவதாரம் என்று எப்படிக் கூறமுடியும்?  ஒரு புராணக் கதை மக்களுக்கு நல்லது அல்லவா எடுத்துரைக்க வேண்டும்? இடைச்செறுகல்ளா? இந்தக் கதை கூறும் நீதி யாது?  அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லுகிறீர்களா.  அதுவும் சரிதான்.

பொதுவாகவே, தசாவதாரக் கதைகளிலும், பெரும்பாலானப் புராணக் கதைகளிலும் வரும் அசுரன்கள் சிவ பக்தர்களாகவும் அவர்களை விஷ்ணு அழிப்பது போலவும் தான் சித்தரிக்கப்பட்டுள்ளது! இராவணனும் சிவ பக்தனே!.  அப்படியென்றால் சிவபக்தர்கள் மோசமானவர்களா? இது முரண்பாடல்லவா? இதைக் கூர்ந்து நோக்கினால், இந்தியாவிலிருந்த திராவிடர்களை, அதாவது சிவனை வழிபட்டவர்களை, ஆரியர்கள் அதாவது விஷ்ணுவைத் தெய்வமாக வழிபட்டவர்கள் புறந்தள்ளி மேலோங்கியது போல் அல்லவா தெரிகின்றது! 

      இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில்? பல புராணக் கதைகளை வாசிக்கும் போது எழுந்த கேள்விகள் தான் இங்கு சொல்லப்பட்டுள்ளன. அல்லாமல் எந்த ஒரு மதப் பிரிவையும் உயர்வாகவோ தாழ்வாகவோ கருத்தில் கொண்டு அல்ல என்பதை இங்குத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.  இதை வாசிப்பவர்கள் யாராவது இதற்கு பதில் கூறினால் மிகுந்த மகிழ்சியுடன் வரவேற்கபடுவர். மறு கேள்விகள் கேட்டாலும் சரி, அதற்கு எனது அருமை நண்பர் விடை பகர்வார். 

46 கருத்துகள்:

 1. மகாபலிக்கு கிடைத்துள்ளது வரமா சாபமா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

   நல்ல கேள்வி! வரம் கிடைத்திருக்க வேண்டியது சாபமாகிவிட்டதோ?

   தொடர்கின்றோம் தங்களை!

   நீக்கு
 2. புராணத்தையும் நடைமுறை அரசியல்வாதிகளையும் பிண்ணியிருப்பது அருமை நண்பரே, இந்தபதிவை தாங்கள்தானே இட்டீர்கள் பிறகு ஏன் ?

  ''எனது நண்பர் திரு.துளசிதரன். எனது நண்பரின் பார்வை என்னை மிகவும் யோசிக்க வைத்தது. நிறைய கேள்விகள் என் மனதில் தோன்றியது''

  என்று பதிவில் வருகிறது ? அடுத்து மலையாள வார்த்தையை (பறைன்ஞ்ஞு) மிகச்சரியாக எழுதியுள்ளீர்கள் நான் இவ்வளவு நாளாக இதை தமிழில் எழுதமுடியாதோ ? என்றுதான் நினைத்திருந்தேன் காரணம் பரைஞ்சு என்றுதான் எழுதி படித்திருக்கிறேன்.
  மலையாளத்தில் அதேவார்த்தை പറഞ്ഞു
  நானும் தங்களுக்கு നന്നി പറഞ്ഞു

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர் ஜி தங்களுக்குத் தெரியும் தானே எங்கள் வலைத்தளத்தில் நாங்கள் இருவர் சேர்ந்து எழுதுகின்றோம் என்று? ஒன்று துளசிதரன், மற்றொருவர் அவரது தோழி கீதா. இப்போது இதை வாசித்துப் பாருங்கள்! யாரென்று தெரியும்! ஹாஹாஹ்...

   மிக்க நன்றி நண்பரே! ஆஹா நிங்கள்கு மலையாளம் அறியாந் அல்லே

   நீக்கு
  2. எனக்குத்தெரியும் இருப்பினும் இப்பொழுது முழுமையாக தெளிந்து (?) விட்டேன் ஸ்விஸ் வந்தமைக்கு நன்றி நண்பரே கூடுதல் புகைப்படங்கள் அடுத்தபதிவில் காணவும்,

   கடைசியாக கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்க ஒரு பதிவு தயார் செய்கிறேன் தங்களுக்காக...

   நீக்கு
  3. அட எங்களுக்காக ஒரு பதிவா...மிக்க நன்றி கில்லர் ஜி!

   நீக்கு
 3. கதை என்பதை எப்போதும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சரியே ஜோதிஜி நண்பரே! கதைகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளக் கூடாதுதான். அது நடந்த சம்பவங்களாகவும், வரலாறாகவும் மாறி அது இறை இச்சை என்றெல்லாம் சொல்லப்படும்போது, அதன் பின் சென்று அதில் ஏதேனும் உண்மை இருக்குமா...தர்மத்தின் வாழ்வு தனை ஏதேனும் சூது கவ்வி இருக்குமா என்றெல்லாம் அறிய ஆவல் உண்டாகும்.....எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் மெய்பொருள் காண்பது அறிவு என்பதுதானே வள்ளுவன் வாக்கு....வரிகளுக்கு இடையே வாசிக்கும் போது தானே எழுதுபவரின் நோக்கம் புரியும்.
   இந்தியன் பீனல் கோடுக்கு வடிவம் தந்த டாக்டர் அம்பேத்கார் இந்திய அரசியல் அமைப்பு எழுதிய சிற்பி என்று சொல்லப்ப்டும் வரலாற்று ஏடுகளில் அவர் மனுஸ்மிர்தியை ஏன் தீக்கிரையாக்கினார் என்று சொல்லப்படவில்ல. லட்சக்கணக்கான ஆதரவாளகர்களுடன் புத்த மதம் தழுவ காரணம் என்ன என்ற உண்மையும் அதிகம் பேசப்படவில்லையே. இதெல்லாம் கடந்த நூற்றாண்டுகளில் நடந்தவைகள். அந்த உண்மைகள் கூட எதெல்லாமோ சாக்கு போக்கு கொல்லி மறைக்கப்படும்பொது எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த்தற்காக்ச் சொல்லப்படும் சம்பவங்களைப் பற்றி நம் அறிவுக்கு எட்டிய மட்டுமான ஆராய்சி செய்தாலென்ன என்ற எண்ணம் தான் இதன் பின்னில்....ஆயிரக்கணக்கான வருடங்கள் செழித்தோங்கி நின்ற திராவிட பண்பாடு உயிரிழக்கிறதே என்ற வேதனைதான் இது போன்ற எண்ணங்கள்.

   நீக்கு
  2. //கதை என்பதை எப்போதும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது// - ஏன்??????

   நீக்கு
 4. இந்த பதிவை எழுதிய சகோதரி கீதா அவர்களுக்கு,
  பாவங்க துளசிதரன் சார் - நீங்க பாட்டுக்கு ஒரு பதிவை போட்டு, உங்களுக்கு தோன்ற கேள்விகளையும் கேட்டுட்டு, அப்புறம் வேற யாருக்காவது கேள்வி இருந்தா கேளுங்க, எல்லாத்துக்கும் என் நண்பர் துளசிதரன் சொல்லுவாருன்னு சொல்றீங்களே!!! இதெல்லாம் நியாயமா?

  நேதாஜி அவர்கள் சொன்னதுபோல், கதைகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள கூடாது.

  துளசிதரன் சார் - உங்களுடைய திறமைகளுக்கு பாராட்டுக்கள்.

  "மஹாமுடி த க்ரேட்" - இதை தமிழில் எழுதினால், என்னை மாதிரி ஆட்கள் படிக்க வசதியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொக்கன் சார் நாங்கள் இருவரும் சேர்ந்துதான் எழுதுகிறோம் என்பது தெரியும்தானெ சார்!!? இந்தப் பதிவை எழுதி அவருக்கு அனுப்ப்யவுடன், அவர் "நான் மனதில் நினைத்தவற்றை, சொல்ல நினைத்தததை, மஹாபலியை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்தேனோ, என் லட்சியத்தை, நீ நிறைவேற்றி விட்டாய்" என்று சொன்னதால் தான் நான் இந்தப் பதிவை வெளியிட்டது சார்.

   அவரும் நானும் அவர் எழுதிய புத்தகத்தை (அவர் புததகத்திற்கு நான் ரிவ்யூ கூட எழுதி உள்ளேன். கூகுள் + ல் உள்ளது சார்) விவாதித்து பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் சார் இவை.

   என்னை விட அவருக்குத்தான் இது போன்ற விடயங்களில் ஆழம் கூடுதல் சார். அதுவும் சைவ சித்தாந்தத்தில் ஊறியவர் அவர். அதனால்தானே தனது பெயரையும் முதலில் கல்லூரிக் காலத்தில் துளசிதரன் என்று இருந்த தனது பெயரை இப்போது துளசிதரன் தில்லை அகத்து என்று சொல்லிக் கொள்பவர். எங்கள் வலைத்தளத்தின் பெயரையும் அப்படி வைத்தவர். எனவே அவரது அனுமதி இல்லாமல் வெளியிடவில்லை சார். அவர் பதில் உரைப்பேன் என்று சொன்னதால் தான் வெளியிட்டேன் சார், எனது சிறு வயது முதல் தோன்றிய கேள்விகளை.....

   நாங்கள் இருவருமே இறையுணர்வு மிக்கவர்களும் கூட.

   சார் நீங்கள் சொல்லுவது போல் அவரது புத்தகத்தை நான் தமிழில் எழுதி முடித்துவிட்டேன் சார். அதற்கு ஒரு முன்னுரை அவர் எழுதி பாதியில் இருக்கின்றது. அதை முடித்துவிட்டால் அதை எங்களது மற்றொரு தளமாகிய "thillaiakathu" வில் போடுவோம் சார்.

   மிக்க நன்றி சொக்கன் சார்....

   நீக்கு
  2. சொக்கன் சார், ஜோதிஜி நண்பருக்கு துளசி கொடுத்துள்ள பதிலை கொடுத்திருக்கின்றேன் சார்! பார்க்க முடிந்தால் பாருங்கள்.

   நீக்கு
  3. அடாடா, நான் சும்மா கலாய்ச்சதுக்கு, நீங்க பெரிய விளக்கமே கொடுத்துவிட்டீர்களே சகோதரி.
   தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

   தமிழாக்கத்தை எதிர்ப்பார்க்கிறேன்.

   துளசி சார் கொடுத்துள்ள பதிலை படித்துவிட்டேன். மிக ஆழமான சிந்தனை.

   நீக்கு
  4. சகோதரரே! ஹாஹா...தவறாக எடுத்துக் கொள்ளவில்லை தங்களையா?!!!!! தாங்கள் தவறைச் சுட்டிக்காட்டினாலும் அதையும் வரவேற்பேன் ...போம்....அப்படித்தானே கருத்துக்கள் நல்ல விதத்தில் பரிமாறிக் கொள்ள முடியும்?!!.....அதுதானே எழுத்துக்களுக்கு முக்கியம்......இதுவும் ஒரு சான்ஸ் துளசியைப் பற்றிச் சொல்ல என்றுதான் ......

   அவரைத் தூண்டி முன்னுரையை எழுத வைத்து முடிக்க வேண்டும் சார்....முடித்துவிட்டால் போட்டு விட்டு உங்களுக்கும் தகவல் தருகின்றோம்.

   இருவருமே சைவ சித்தாந்தத்தில் பற்று உள்ளவர்கள்....தமிழையும் வளர்த்தது அல்லவா.....தங்கள் அழகிய சித்தாந்தத் தொடரை படித்து வருகின்றோம்.

   மிக்க நன்றி சகோதரரே! இது போன்ற அன்புடனான நட்புதான், கருத்துப் பரிமாற்றங்கள் மிகவும் முக்கியம் சகோதரரே!

   நீக்கு
 5. துளசிதரன் , கீதா, கேள்விகள் கேட்கத் துவங்கி விட்டால் நம் புராண மற்றும் அவதாரக் கதைகள் எல்லாமே சிற்ந்த கற்பனைகள் என்று புரிந்து விடும் கதைகளை கதைகளாக மட்டும் பார்க்காமல் நம்பிக்கையின் அடித்தளமாகக் கருதுபவர்கள் . உங்களை பயமுறுத்தக் கூடும் “சாமி கண்ணைக் குத்தும்”கதைகளின் சாரத்தை அறிந்து கொள்வோம் அண்மையில் ஒரு நண்பர் சொன்னார். கேள்விகள் கேட்டால் பதில் வராது என்று. எதையும் கேட்டுத்தெரிந்து கொள்ளாமல் நம்புபவரே இங்கு அதிகம். ஏன் கேள்வி கேட்பது தவறு என்று நினைப்பவர்களும் அதிகம் சாக்ரடீஸ் சொன்னபடி அறிவாயுதத்தால் அறியாமையையும் தவறான நம்பிக்கைகளையும் தகர்த்தெறியுங்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. மிக மிக நன்றி சார்! தங்களது விரிவான கருத்திற்கு! சி/ரு வயதிலிருந்தே சாமி கண்ணைக் குத்தும் என்று தான் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றார்கள். சாமியை ஏதோ பயங்கரமான ஒரு உருவமாகத்தான் சித்தரிக்கின்றார்கள். அது அன்பின் வடிவம் என்பதிலிருந்து விலகி, ஏதேதோ கதைகள் சொல்லி சமூகத்தின் பெரும்பான்மையானோரை அப்படித்தான் ஆக்கி வைத்திருக்கின்றார்கள். இளைய தலைமுறையினரின் கேள்விகளுக்கு முறையான ரீதியில் பதில் சொல்பவர்களும் இல்லை. கண்மூடித்தனமாக நம்புபவர்களே இங்கு அதிகம் தாங்கள் சொல்லியிருப்பது போல்.

  மிக்க நன்றி சார் புரிந்து கொண்டு கருத்திட்டதற்கு.

  பதிலளிநீக்கு
 7. அய்யா,
  வணக்கம். தேவர் அசுரர் என்பது ஆரிய திராவிடப் பாகுபாட்டின் புராண மேற்பூச்சென்றும், தம்மை உயர்ந்தோரென்று கற்பித்துக்கொண்டு, அரசமைப்பின் பால் உள்ள செல்வாக்கால்,
  புராண இதிகாசங்களைக் கற்பித்து, மன்னனை இறைவனின் அங்கமாக்கிக் கொண்டு மக்களிடையே செல்வாக்குற்ற ஆரியரின் கற்பிதம் இதென்றும், இருபதாம் நூற்றாண்டின் திராவிட முன்னோடிகளால் முணுமுணுக்கப்பட்டுப் பெரும் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கும் கருத்து இது.
  அதற்கான மூலங்கள் புராணங்கள் பலவற்றுள் பொதிந்து கிடக்கின்றன.
  நியாயப் படுத்த முடியாத பல தர்மங்கள்!
  அசுரர் ( திராவிடர்) உடற்பலம் வாய்ந்தவர்கள்,
  தேவர் ( ?????? ) அறிவு (சூழ்ச்சி) மிக்கவர்கள்,
  இறைவன் இதில் பேரரசன்.
  எனவே பேரரசனை அசுரர்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் தேவசூழ்ச்சியின் முன் அசுரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
  வைணவர்களின் தெய்வமாகக் கொண்டாடப்படும் கிருஷ்ணன் அவரோடு ஒட்டிய செய்திகள் பலவும், வடநாட்டை மையம் கொண்டவை. அவர் வடவோர் கடவுள்.
  அவர்கள் தென்னாட்டிற்கு வந்த போது இங்குத் தொன்மைக்குடியினரின் சைவ வழிபாட்டுடன் தந்தெய்வத்தை உறவாக்கிக் கொண்டனர்.
  இவ்வுறவு சங்ககாலத்திற்கு முற்பட்டது.
  இடையர் குலத்தானை இங்கு வாழ்ந்த முல்லை நிலத்தார்க்கும்
  ஓரின ஒப்புமை கற்பித்து தெய்வமாக்கி நிலைபெறச் செய்ததும் அச்சூழ்ச்சி தான்!
  வட வேங்கடமே முருகன் கோயிலாய் இருந்து திருமால் கோயிலாக மாற்றப்பட்டதே என்று சான்றுகள் காட்டிய ஆய்வொன்றைப் படித்திருக்கிறேன்.
  முருகன் திராவிடர் தெய்வம். அவர் பற்றிய கதைகளால் அவரும் புராணத்தின் உள்ளிழுக்கப்பட்டுப் போனார்.
  இராவணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டும் இராமனை எதிர்நிலைக் கதைமாந்தனாகக் கொண்டும் எழுதப்பட்டு ஒருகாலத்தில் தடைசெய்யப்பட்ட புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியத்தைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது.
  எந்த மதமுமே, ஆளப்படுகிறவர்களின் சொந்த மதமாய் இருக்கும் போது, அது தூய்மையும், புனிதமும் மிக்கதாய், உயர்ந்ததாய் இருந்துள்ளதை வரலாறு காட்டுகிறது.
  அந்த சமயங்களில் அந்த சமயங்களின் தெய்வமும் வலிமை வாய்ந்தவராய் மாறிவிடுகிறார்.
  அவரின் வாள்முனைமுன் சாமானியர் பலரும் மண்டியிட்டுத்தான் ஆக வேண்டி இருக்கிறது.
  தங்களின் பதிவு பல சிந்தனைகளைத் தூண்டுகிறது .
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் விஜு ஐயா! நீங்கள் சொல்லியிருப்பது போல், பழைய பாரதம் முழுவதும் இருந்த திராவிடர்களை, ஆரியர்கள் வந்து, திராவிடர்களை அசுரர்களாகவும், ஆரியர்கள் தேவர்களாகவும் கொண்டு, திராவிடர்களை அப்படியே ஒடுக்கி, தென்னகத்திற்கு விரட்டி, இங்கும் ஊடுறவி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சூழ்ச்சிதான். கிருட்ணன் வட இந்திய நிலத்தைச் சார்ந்தவர்தான். ராமரும் அப்படித்தான்...ஆம் முருகன் பற்றியது சரியே. தாங்கள் இங்கு சொல்லியிருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் இடுகையில் குறிப்பிட விரும்பினோம். ....ஆனால் இடுகை நீண்டுவிடும் என்பதால் சொல்லாமல் விட்டுவிட்டோம்...

   மிக அழகான விரிவான பின்னூட்டம் ஐயா. மிக்க மிக்க நன்றி எங்கள் இடுகையை புரிந்து கொண்டு கருத்திட்டமைக்கு...

   நீக்கு
  2. ஐயா ,

   //இராவணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டும் இராமனை எதிர்நிலைக் கதைமாந்தனாகக் கொண்டும் எழுதப்பட்டு ஒருகாலத்தில் தடைசெய்யப்பட்ட புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியத்தைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது.// இதே போன்றுதான் இராவணனைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருக்கின்றோம். பார்ப்போம் முடிகின்றதா என்று....

   நீக்கு
 8. சரியான கேள்விகள் தான். அதைப் படிக்கும் போது எனக்கும் இவை எழுந்தவை தான். இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம், ஒன்று புராணங்களின் பாட்டுடைத் தலைவர்களை நியாயப்படுத்தும் பாங்கு, ஆரிய திராவிட வேற்றுமைத் திணிப்பு, இன்னொன்று புராணங்களின் நம்பகத் தன்மையையே கேள்விக்குரியாக்கும், உங்களுக்கு தெரியாததில்லை, விரிவான கட்டுரைக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 9. மிக்க நன்றி திரு ஜெய சீலன். தங்களின் முதல் வருகைக்கும், கருத்திற்கும். புராணங்களின் இடைச் செருகல்கள்தான் பல நம்பகத் தன்மையை இழக்கச் செய்தன....மிக்க நன்றி தங்களின் விரிவான கருத்திற்கு.

  பதிலளிநீக்கு
 10. நல்லவனான மகா பலி மன்னனை விஷ்ணு மகாபலி கொண்டது ஏன் என்று கேட்பது நியாயமான கேள்வி !ஆனால் நியாயமான பதில் கிடைக்காது ...பல மூடத்தனமான கற்பனைகள் நிறைந்தவை புராணங்கள் .கல்வி அறிவு இல்லாத காலத்தில் மக்கள் அதை கொண்டாடி இருக்கலாம் .இப்போ அதைப் படிப்பது கூட வேஸ்ட் !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி பகவான் ஜி தங்கள் கருத்திற்கு. ஆனால் கல்வி அறிவு இல்லாத காலம் என்று சொல்ல முடியாது ஜி! அப்போது கல்வி அறிவு இப்போது உள்ளதை விட அதிகம்தான்....

   நீக்கு
 11. நேதாஜி அவர்கள் சொன்னதுபோல், கதைகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள கூடாது.
  என்பதே எனது கருத்தும் நண்பரே

  பதிலளிநீக்கு
 12. மற்றவர்களின் பின்னூட்டங்களே சுவாரஸ்யமாக இருப்பதால் எனது பின்னூட்டம் வேறு எதற்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன சார் உங்கள் பின்னூட்டத்தையும் தந்திருக்கலாமே. அதுவும் அந்த வித்தியாசமான சுவாரஸ்யத்துடன் இருந்திருக்குமே சார்.

   நீக்கு
 13. மிக நல்ல பார்வை . வரவேற்கிறேன் சகாஸ்.
  இதுபோன்ற பதிவை எழுதி சிந்தனைகளை தூண்டி இருக்கீங்க.
  சிவபக்தர்கள் ரொம்ப பாவம் என்றெல்லாம் எண்ண வேண்டாம். அன்பே சிவம் என்று சொல்லிக்கொண்டு நூற்றுக்கணக்கான சமண முனிவர்களை அவர்கள் கொன்று குவித்த வரலாறும் உண்டு . மொத்தத்தில் சைவமோ, வைணவமோ ஆதிக்க சாதியினர் சிறுபான்மையினரை கொடுமை படுத்துவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதெல்லாம் பார்த்து , நொந்து தான் பெரியார் கடவுளை மற, மனிதனை நினை என்கிறார் பெரியார். ( அப்பா ! சைக்கில் கேப்பில் ஆட்டோ ஓடியாச்சு:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கைச்சிள் காப்புல ஆட்டோவா....நீங்க ரோடே போட்டு,,,,,ரோட் ரோலரே ஓட்டிட்டீங்க.....ஆமாங்க...நீங்க சொல்றதும் சரிதான்.....நல்ல கருத்து. மிக்க நன்றி சகோதரி.....

   நீக்கு
 14. புராணக்கதைகளை மேலோட்டமாக படிப்பது நல்லதோ? ஆழ்ந்து சிந்தித்தால் இப்படி பல குழப்பமான கேள்விகள் எழுமோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படிக்கூட இருக்கோ....படித்து நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை........ம்ம்ம்..சரிதான் அதுவும்......

   நீக்கு
 15. சிந்திக்க தூண்டிய பதிவு! புராணங்கள் பல இப்படி மாறுபட்ட சிந்தனைகளை கொண்டிருக்கிறது! நன்றி!

  பதிலளிநீக்கு
 16. சகாஸ்! இந்த போஸ்ட்டை கொஞ்சம் படிச்சுபாருங்க ப்ளீஸ்:)
  http://makizhnirai.blogspot.com/2014/09/award-thanks.html

  பதிலளிநீக்கு
 17. அருமையான பதிவு! மகாபலி சார்பில் எழுப்பப்படும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும், முதன் முதலாக இந்தக் கோணத்தைப் பதிவு செய்தமைக்கு இருவருக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

  ஆனால், இங்கு பலரும் கதைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடாது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருப்பது ஏன் எனப் புரியவில்லை. தொன்மங்களும் (புராணங்கள்), இதிகாசங்களும் மக்கள் வாழ்விலும் நம்பிக்கைகளிலும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவை பற்றிக் கேள்வியெழுப்பக்கூடாது என்பது ஏற்க முடியாதது. இது பற்றி ஐயா ஜோசப் விஜு அவர்களின் கருத்து சரியான பதிவு! அறிஞர்கள் பலர் அப்படித்தான் கூறுகிறார்கள். எனவே, அதுதான் சரியானதாக இருக்க முடியும். அதாவது, இப்படிப்பட்ட கதைகளெல்லாம், உண்மையில், ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையில் நடந்த போர்களைக் குறிப்பவையே! இதற்குச் சான்று இதோ!

  கொடும் குற்றங்கள் செய்ததற்காக வட இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட விஜயனும் அவன் நண்பர்களும் கப்பலில் வந்து கொண்டிருந்தபொழுது அவர்களுக்கு இலங்கையின் அன்றைய தமிழ் அரசர் அடைக்கலமளித்து, தன் மகளையும் விஜயனுக்கு மணம் செய்வித்தார் என்றும், அப்படி குடியேறிய வட இந்தியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் பிறந்தவர்கள்தாம் சிங்களர்கள் என்றும் வரலாறு கூறுகிறது. ஆனால், விஜயனுக்கும் நண்பர்களுக்கும் இலங்கையிலிருந்த அரக்கர்கள் அடைக்கலமளித்ததாகவும், விஜயன் அங்கிருந்த அரக்கி ஒருத்தியை மணந்து கொண்டதாகவும், இப்படி வட இந்தியர்களுக்கும் அரக்கர்களுக்கும் பிறந்தவர்கள்தாம் சிங்களர்கள் எனவும் சிலர் இன்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். (இணையத்திலேயே உண்டு!). ஆக, தமிழர்களை அரக்கர்கள் எனச் சித்தரிக்கும் வழக்கம் உண்டு என்பதற்கு இதுவே சான்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி! நண்பரே! ஹப்பா எவ்வளவு தகவல்கள்! நிறைய தெரிந்து கொண்டோம் நண்பரே! மிக மிக நன்றி! இத்தனை அழகிய கருத்துமிக்கப் பின்னூட்டத்திற்கு!

   நீக்கு
 18. ஆரியனாகிய இந்திரனுக்குப் பரிந்து கொண்டு, அவன் சார்பில் திருமால் வந்து தமிழ் அரசனாகிய மகாபலியை (அத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் கேரள நாடு சேர நாடாகத்தானே இருந்திருக்க முடியும்?) அழித்திருப்பது போல, தன் அமைப்பில் பிறந்தவனான அசுவத்தாமனுக்குப் பரிந்துகொண்டு வந்து, அறத்தின் சார்பில் நின்றவர்களைச் சிவபெருமான் அழித்ததும் உண்டு!

  துரியன் தொடை பிளக்கப்பட்டுக் குருதி வெள்ளத்தில் கிடக்க, அவன் உற்ற தோழனான அசுவத்தாமன் அவனுக்காகப் பழிவாங்கத் தன் விருப்பக் கடவுளான சிவபெருமானை வருவித்து, சிவபெருமான், பூதகணங்கள் உதவியுடன் அந்த ஒரே இரவில் பாண்டவர்களின் மொத்தப் படையையும், பாண்டவர்களின் பிள்ளைகளையும் கொன்று குவித்து விடுகிறான். ஆக, கடவுள் என்பது ஒருபொழுதும் அறத்தைக் காக்கவோ, தீயதை அழிக்கவோ முன்நிற்பதில்லை; அது கடவுளின் குணமும் இல்லை; கடவுள்கள் எப்பொழுதும் தன்னை வணங்குபவர்களின் வேண்டுதலுக்கு ஏற்பவே நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இவையே சான்றுகள். இவற்றின் அடிப்படையில் கடவுளின் உண்மைத் தன்மை பற்றியும், நம் தற்பொழுதைய வேண்டுதல் முறைகளிலும் வழிபாட்டு முறைகளிலும் உள்ள முரண்பாடுகள் பற்றியும், பழந்தமிழர் இறைவழிபாட்டு முறைகள், கொள்கைகள் ஆகியவற்றில் உள்ள சிறப்புக்கள் பற்றியும் ஆய்வுக் கட்டுரை ஒன்றைத் திட்டமிட்டிருக்கிறேன். நாத்திகனான நான் இவற்றையெல்லாம் எழுத வேண்டியிருப்பது என் தலையெழுத்தா, கடவுள்களின் தலையெழுத்தா, மக்களின் தலையெழுத்தா என்பது போகப் போகத் தெரியும்! ;-P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய தகவல்கள் பல அறிந்து கொண்டோம்! நண்பரே! மிக்க நன்றி! தங்கள் பாராட்டிற்கும்!

   தங்கள் ஆய்வுக் கட்டுரையைச் சீக்கிரமாக எழுதிப் பதியுங்கள் நண்பரே! வாசிக்கக் காத்திருக்கின்றோம்!

   மிக்க நன்றி!

   நீக்கு
  2. மிக்க நன்றி ஐயா / அம்மணி! ஆய்வுக் கட்டுரையில்லை, தொடர்!! எழுத முடியுமா எனத் தெரியவில்லை, ஆனால், எழுத வேண்டும்! உங்களைப் போன்றவர்களின் ஊக்கமும் பாராட்டும் எனக்கு யானை வலிமையை அளிக்கின்றன. அவை என்னை எழுத வைக்கும் என நம்புகிறேன்.

   நீக்கு