செவ்வாய், 19 நவம்பர், 2013

சிவ சிதம்பரம்


தேதி : 18.11.2013
நேரம் : 10.30 a.m.
இடம் கன்ணூர் அருகிலுள்ள ஒரு சிறிய டவுண்



     மோஹன், அவன் மனைவி ராதா, தங்கள் 13 வயது நிரம்பிய மகன் சிவசிதம்பரத்துடனும்,  11 வயது மகள் மீனாட்சியுடனும், கண்ணூர் அருகே உள்ள முத்தப்பன் காவு கோயிலில், நெடுநாளாக முடிக்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த கடைசிப் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு, காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.  வழியில் ஒரு சிறிய டவுணில், பழக் கடையில், பழங்கள் வாங்குவதற்காக காரை நிறுத்தினர். 

கடையில் பழங்கள் வாங்கிக் கொண்டிருந்த போது கடைக்குச் சற்றுத் தள்ளி ஒரு கூட்டம் கூடி கூச்சல் இடுவதைக் கண்டனர்.  போலீஸ் ஜீப் ஒன்று வந்து ஒரு 5 வயதுச் சிறுவனை ஏற்றிச் சென்றதையும் கண்டனர்.  அச் சிறுவனின் உடலில் சில காயங்களும் இருந்தன. காலும் ஊனம்.  இவர்களின் முகத்தில் தோன்றிய கேள்விக்குறிகளைக் குறிப்பால் அறிந்த  பழக்கடைக்காரர்,


“இங்க ஒரு நாடோடிக் கூட்டம், எங்கேயோ வடக்கருந்து வந்து இங்க டென்ட் அடிச்சு, ஏதேதோ தினக் கூலி வேலை செஞ்சுகிடிருக்காங்க.  வேலை மட்டும் செஞ்சா ஏதோ பொழச்சு போட்டும்னு விட்ரலாம்.  ஆனா, திருட்டு வேற. இவங்க கூட்டத்துக்குச் சம்பந்தமே இல்லாத குழந்தைங்க எல்லாம் திடீர், திடீர்னு முளைக்கிறாங்க.  மறு நாள் பாத்தா அந்தக் குழந்தைங்க கையி, காலு ஏதாவது முறிஞ்சிருக்கும்.  உடம்புல காயம் இருக்கும்.  பிள்ளைங்க அழுதுகிட்டே இருப்பாங்க.  இதப் பத்தி போலீஸ்ல கம்ப்ளயின்ட் கொடுத்தோம் முதல்ல கண்டுக்கல. தெருவோர முருகன பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்க இல்ல.  நிறைய இந்த மாதிரி குழந்தைங்கள எல்லாம் காப்பாத்தி குழந்தைகள் காப்பகத்துல, இல்லன அவங்க அப்பா, அம்மாவத் தேடிக் கண்டுபிடிச்சு போலீஸ் உதவியோடு ஒப்படைக்கறது இப்படி சுயநலம் பார்க்காம செஞ்சுகிட்டு இருக்காரு. இப்ப இங்க இருக்கற இளைஞர் அமைப்பு அவர கான்டாக்ட் செஞ்சு அவரு இதுல தலையிட்டுதான் போலீஸ நேர கூட்டிட்டே வந்துட்டாங்க.  இப்ப நீங்க பார்த்தீங்கல்ல, அந்தப் பையனக் காப்பாத்தி, கூட்டத்துலருந்து ஆளுங்களை அடிச்சு போலீஸ் கூட்டிட்டுப் போறத...அந்தப் பையனுக்கும், இந்தா இங்க உக்காந்துருக்குதே வெத்தலய குதப்பிகிட்டு அந்த பொம்பளைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கறா மாதிரி இருக்கா பாருங்க... இப்படித்தன் இந்தக் கூட்டம் பிள்ளைங்கள எல்லாம் கடத்திக்கிட்டு வந்து தங்க கூட்டத்தோட கூட்டிட்டு போயி பிச்சை எடுக்க வைக்கறது.....நல்ல காலம் இந்தப் பையன் தப்பிச்சுட்டான் என்று அங்கு நடந்த கதையை சொல்லி முடித்தார்.

இந்தக் கதையைக் கேட்டதும், குழந்தைகள் இருவரும் ராதாவை இறுகக் கட்டிக் கொண்டனர். அவர்கள் காருக்குத் திரும்பியதும், சிவசிதம்பரம் ஜன்னல் கண்ணாடி வழியே அந்தக் கூட்டத்தையே ஒருவித பயத்தோடு பார்த்துக் கொண்டே, தன் அம்மாவிடம், “இப்படில்லாம் கூட பிள்ளைங்களைத் திருடுவாங்களாம்மா?  பாவம் இல்ல அந்தப் பையன்? அவன் அப்பா, அம்மா அவனத் தேட மாட்டாங்களாம்மா? என்று கேட்கவும், மோஹனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சிவசிதம்பரத்தை அணைத்து, உச்சி முகர்ந்து முத்தமிட்டு, 11 வருடங்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தனர்.  அதுவும் இதே தேதிதானே...

தேதி: 18.10.2002    நேரம் : 7.30 a.m.
இடம்:  பாலக்காடு அருகே உள்ள கொடுவாயூர்

     மோஹன் கொடுவாயூர் தட்சிணாமூர்த்தி கோவிலின் கொடிமரத்திற்கு அருகே நின்று இறைவனிடம் மௌனமாக வேண்டிக் கொண்டிருந்தான்.  வேண்டுதல் பட்டியல் மிகவும் நீண்ட ஒன்றுதான்.  அதில் அவனது transfer முதல், அவனுக்கு அடுத்து ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்பது வரையுண்டு.  அவனது மகன் சிவசிதம்பரத்தின் தேக சுகத்திற்கும், ஆடோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் வேண்டி பிரார்த்தித்தபோது திடீரென கூப்பிய கைகளில் சூடான டீ ஊற்றப்பட்டது போல் உணர்ந்து கைகளை உதறியபின் பார்த்த போதுதான் புரிந்தது, காக்கை இட்ட எச்சம் அது என்று.  சுற்றிப் பார்த்த மோஹன் கொஞ்சம் தொலைவில் தரையில் கிடந்த பழைய பேப்பரை எடுத்துக் கைகளைத் துடைத்தான்.  கோவிலுக்கு வெளியே சென்று பஞ்சாயத்துக் குழாயில் கை கழுவிய போது “குழந்தைக்காக வேண்டும் போதுதானே கையில் எச்சம் விழுந்தது. ஒருவேளை அவனுக்கு ஏதேனும் பிரச்சனை வருமோ என எண்ணிய மோஹன் உடனே தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான். ‘சே! அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது.  எல்லாம் “அவன் பாத்துக்குவான்.   பின் கொடிமரத்திற்கு அருகே சென்று கண்களில் கண்ணீர் கசிய வேண்டிக் கொண்டான்,

‘இறைவா! என் சிகம்பரத்திற்கு எந்த வித ஆபத்தும் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கோயிலைவிட்டு வெளியே வந்த மோஹன் P.H.C (Primary Public Health Centre) நோக்கி நடந்த போது, ஹார்ன் அடித்தபடி ஒரு ஸ்கூட்டர் அருகே வர திரும்பினான்.  ஹெல்த் இன்ஸ்பெக்டர் (Health Inspector) ஜோஸ்தான் அது.
“குட் மார்னிங்க் ஸார்என்றான்.  உடனே ஜோஸ், “மோஹன், அந்த ரங்கசாமி வேலைக்குப் போவதற்கு முன் எப்படியாவது பேசி அந்த ஆளோட கையெழுத்து வாங்கணும். வா போவோம் என்றார். மோஹன் பின்னால் ஏறி அமர்ந்தவுடன், ஸ்கூட்டர் வேகமாகப் பாய்ந்தது ரங்கசாமியின் குடிலை நோக்கி.

நேரம் : 7.30 a.m.   
இடம் : பாலக்காடு-கோழிக்கோடு ரோட்டிலுள்ள பெருந்தில்மன்னயில் “அல்-ஷிஃபா மருத்துவமனை


     ராதா தன் இரண்டு வயதான சிவசிதம்பரம் மற்றும் துணைக்கு வந்த ஆயிஷா உம்மாவுடன், ஸ்கானிங்க் ரூமுக்கு வெளியில் இடப்பட்ட பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள்.  மனமெல்லாம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்தவித பிரச்சனையும் இருக்கக் கூடாது என்ற வேண்டுதல்தான்.  டாக்டரிடம் பெண்குழந்தை தானா என்று கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். கதவைத் திறந்தபடி வெளியே வந்த நர்ஸ், கையிலிருந்த பேப்பரைப் பார்த்து “அடுத்து ராதா என்றாள்.  “தண்ணீ நிறைய குடிச்சீங்களா?  என்றதும், ராதா தலையாட்டியபடி, சிவசிதம்பரத்தை ஆயிஷா உம்மாவின் கையில் கொடுத்துவிட்டுச் சென்றாள்.  இனி ½ மணி நேரம் இல்லை ¾ மணி நேரத்திற்குப் பின் தான் வெளியில் வரமுடியும்.  உள்ளேயும் ஒரு ‘க்யூ இருக்கும்.  அதில் குறைந்தது 6 அல்லது 7 பேர் இருப்பார்கள்.  அவர்களுக்குப் பின் தான் அவளை டாக்டர் அழைப்பார்.

     அருகிலிருந்த பெண் தண்ணீர் குடிப்பதன் அவசியத்தைப் பற்றிக் கேட்டதும், ஆயிஷா உம்மா அவளிடம் “அப்போதுதான் டாக்டருக்குக் குழந்தையைத் தெளிவாகக் காண முடியும் என்று விவரிக்கத் தொடங்கினாள்.  திரும்பியபோது,  சிவசிதம்பரத்தைக் காணாமல் திகைத்து எழுந்து ஓடினாள்.  20 அடிக்கு அப்பால் உள்ள படிகளில் குழந்தை இறங்கிக் கொண்டிருந்தான்.  போய் வாரி எடுத்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.  அவனது கைகளில் 2 மிட்டாய்கள்.  “யார் தந்தது என்று கேட்டதும், அவன் கை நீட்டிக் காண்பித்த படிகளில் ஒரு நர்ஸ் ஒரு கைலி கட்டிய ஆளுடன் பேசிக் கொண்டிருந்ததை ஆயிஷா உம்மா கவனிக்கத் தவறவில்லை.  ஒருவேளை அந்த நர்ஸ் கொடுத்திருக்கலாம் என்று நினைத்தபடி நடந்த போது, சிவ சிதம்பரம் அதில் ஒன்றைப் பிரித்து ஆயிஷா உம்மாவின் வாயில் வைத்தான்.  விக்ஸ் மிட்டாய் போல் ஒரு வித்தியாசமான சுவை.  திடீரெனக் கண்கள் இருண்டு தலை சுற்றுவது போல் தோன்ற ஆயிஷா உம்மா, சிவசிதம்பரத்தைக் கீழே இறக்கியபடி சரிந்ததும், எதிரில் நடந்து வந்த நர்ஸ் “ஐயோ என்றபடி ஓடிவந்து தாங்கிப் பிடிக்க, ஆயிஷா உம்மாவுக்கு அதன் பின் வேறு ஒன்றும் நினைவில்லை.

நேரம் : 9.30 a.m. 
இடம் : கொடுவாயூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை.


     வாசக்டாமிக்காக (ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை) ஒரு ரங்கசாமி கிடைத்த சந்தோஷத்தை, ஃபார்மஸிஸ்ட் மேரி, PHN பத்மினி மற்றும் ப்யூனிடம், ஜோஸ் பகிர்ந்து கொண்டிருந்தார். 

“டாக்டர் இதுவரை வரலை. இதைக் கேட்டா அவருக்கு ரொம்ப சந்தோஷமாகும்.  நாளைய Conference-ல இனி தலை நிமிர்ந்து நின்னு குரல உசத்தி பேசலாம்.  ரங்கசாமியோட சம்மதம் வாங்க நானும், மோஹனும் எல்லா நாளும்  அவனைப் போய் பார்த்து பேசினோம். அரசோட பண உதவி மட்டுமில்லாம நானும், மோஹனும் ரங்கசாமிக்கு 500 ரூபாய் கொடுக்கறோம்னு சொன்னப்புறம்தான் ரங்கசாமி சம்மதிச்சான்.  எப்படியோ இனி ஆறு மாசம் வரை, வரப் போற கான்ஃபரஸ்கள்ல தைரியமா பங்கெடுக்கலாம். நர்ஸ் பத்மினியோட தயவிலதான் ரங்கசாமி கிடைச்சான். பத்மினியோட கோட்டா முடிஞ்சதால ரங்கசாமியோட மனைவிய பத்மினியோட லேப்பரோஸ்கோப்பி (Laparoscopy)  லிஸ்டிலருந்து நீக்கிட்டு அவ கணவனை வாசக்டமிக்கு, எந்தப் பிரச்சினையும் இல்லாம நாம வாசக்டாமி லிஸ்ட்ல சேத்துக்க உதவியா இருந்த பத்மினிக்குத்தான் மொதல்ல தாங்க்ஸ் சொல்லணும். என்றார் ஜோஸ்.

“தாங்க்ஸ் மட்டும்லாம் போதாது. ராத்திரி பத்துமணிக்கு ஜோஸ் சாரோட செலவுல ஒரு சின்ன “Refreshment Party”  வேணும் என்று ப்யூன் கேட்ட்தும், ஜோஸ் ஓ.கே என்றான்.

ஃபோன் அடித்தது.  ஃபார்மஸிஸ்ட் எடுத்ததும், ‘மோஹனுக்குப் ஃபோன் என்றாள்.  ஜோஸ் ரிஸீவரை எடுத்துப் பேசினான். ரிஸீவரை வைத்த ஜோஸின் முகத்தில் முன்பிருந்த சந்தோஷம் காணாமற் போயிருந்தது.

“நான் உடனே மோஹனைப் போய் பார்க்கணும். மோஹனோட நண்பர் தாமோதரனுடைய ஃபோன்.  குழந்தையைக் காணோமாம்.  2 மணி நேரத்துக்கு முன்னாடி பெருந்தில்மன்னயில ஒரு ஆஸ்பத்திரியிலருந்துதான் மிஸ்ஸிங்காம்..  மோஹன் உடனே பெருந்தில்மன்னைக்குப் போகணுமாம்.  டாக்டர் வந்த உடனே விபரத்தைச் சொல்லுங்க  என்றபடி ஜோஸ் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து பாலக்காடு பஸ் ஸ்டாண்ட் நோக்கிப் போனார்.  ரங்கசாமி வாசக்டாமிக்குக் கிடைத்த சந்தோஷத்தில் ஜோஸ், ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆன மோஹனை அப்போதே வீட்டுக்குப் போக அனுமதித்தார்.  டாக்டரிடம் மோஹன் வேறு எங்கேனும் ஃபீல்ட் வொர்க் செய்யப் போயிருப்பதாகச் சொல்ல முடிவு செய்திருந்தார். ஆனால், நடந்ததோ வேறு.  மோஹன் பஸ் ஏறும் முன் பாலக்காடு பஸ் ஸ்டாண்டில் பார்த்து விபரத்தைச் சொல்ல வேண்டும் என நினைத்து வண்டியை விரைவாக ஓட்டினார் ஜோஸ்.

நேரம் : 9.45 அ.ம்.
இடம் : அல்ஷிஃபா ஹாஸ்பிட்டல்


     ராதா அழுதபடி ஹாஸ்பிட்டல் வராந்தாவில் இடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள்.  அருகே பக்கத்து வீட்டு தாமோதரன், அவரின் மனைவி சாரதா, ஆயிஷா உம்மாவின் மகள் ரஹ்மத், எல்லோரும் ராதாவை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர். வருவோர், போவோரெல்லாம் வார்த்தைகளாலும் கண்களினாலும் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துப் போனார்கள். ஆயிஷா உம்மாவின் மகன்கள் மூவரும் அங்கில்லை.  ஹக்கிம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், ரஹீமும், சித்திக்கும், இரண்டு ஆட்டோ பிடித்து பெரிந்தல்மன்னா டவுணில்  ஓரிடம் பாக்கி இல்லாமல், சிவசிதம்பரத்தைத் தேடவும் போனார்கள்.  அப்போது அங்கு வந்த வார்ட் மெம்பர் மைமுனா, கொஞ்சம்பேர் ஜீப்பில் மலப்புரம், நிலம்பூர், பாலக்காடு, பட்டம்பி ரோடு வழியாகப் போயிருப்பதாத சொன்னார். “மோஹனுக்குப் ஃபோன் செய்தாகி விட்டதா? என்று கேட்ட்தும், தாமோதரன், தான் ஃபோன் செய்ததாகவும், மோஹன் கிடைக்காததால், ஆபீஸில் விவரம் சொன்னதாகவும் சொன்னார். எல்லோரும் ராதாவைத் தைரியமாக இருக்கச் சொன்னார்கள். 

“ராதா உன் வயித்துல இருக்கிற குழந்தையை நினைச்சாவது மனச தைரியமா வச்சுக்கணும்! சிவசிதம்பரம் எப்படியும் கிடைச்சுடுவான். போன மாசம் ஒரு 35 வயசு பொண்ணு ஒரு பெண் குழந்தையோட நடந்து போறதப் பாத்த ஆளுங்கச்  சந்தேகப்பட்டு விசாரிக்க, ஏதோ ஒரு L.P. ஸ்கூலில் இருந்து “வீட்டுக்குப் போகலாம் வான்னு கூட்டிட்டுப் போனாளாம்.  உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போனாங்களாம். அதனால, தைரியாமா இரு.  குழந்தைய எங்கேயும் தூரதேசத்துக்கெல்லாம் கொண்டு போயிருக்கமாட்டானுங்க. எப்படியும் ஆண்டவன் அருளால கண்டுபிடிச்சுரலாம். என்று மைமூன தைரியம் சொன்னார். 

ஆயிஷா உம்மா ஒரே அழுகை. ராதாவின் நினைவில் சிவசிதம்பரத்தின் சிரிப்பும், அழுகையும், கொஞ்சலும், கோபமும் ஒவ்வொன்றும் மாறி, மாறி வந்து இதயத்தை என்னென்னவோ செய்தது.  கடந்த நான்கு மாதங்களாக பால்குடி மறக்கச் செய்ய அவள் பாவம் குழந்தையை அவன் பாட்டியுடன் தான் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை எத்தனை நாள் அழுதிருக்கிறான், ராதாவுடன் தான் தூங்க வேண்டும் என்று.  “இபோது எங்கே யாருடனோ.... மனதில் ஒரு நீர் குமிழி பந்து போல் பெரிதாக, அவள் கதறி அழுதாள்.

நேரம் : 10 a.m.
இடம் : பாலக்காடு முனிசிபல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு ஹோட்டல்

     மோஹன் நெய் ரோஸ்டின் ஒரு பாதி பாகம் சாப்பிட்ட பின் திடீரென ஒரு “முடி தென்பட, அப்படியே அதை வைத்து விட்டு கை கழுவப் போனான்.  ஒரு வாசக்டமி கிடைத்த சந்தோஷம் அடியோடு போனது. மனதில் ஏதோ ஒரு சஞ்சலம், இன்று காலயிலிருந்தே. என்னவென்று சொல்லத் தெரியாத ஒரு உணர்வு. சரி, வந்த கஷ்டகாலம் அந்த பாதி தோசையுடன் போகட்டும் என்று நினைத்தபடி, தான் அமர்ந்திருந்த டேபிளுக்கு வந்ததும், அங்கே திடீரென முளைத்த இரண்டு பேரைக் கண்டதும், டேபிளின் மறுபக்கத்தில் அவர்களுக்கு எதிராக அமர்ந்தான்.  முன்னால் அமர்ந்த இருவரில் ஒரு ஆள் கையில் கண்டக்டர் பேக். டிரைவரும், கண்டக்டரும் ஆக இருக்கலாம். மோஹன், கொண்டுவந்து வைக்கப்பட்டக் காபியை சுவைத்துக் குடித்துக் கொண்டே, அவர்கள் பேசுவதைக் கேட்டான். 

“எனக்கென்னவோ அந்த ஆளு அந்தப் பையன எங்கேயிருந்தோ கடத்திட்டு வந்த மாதிரிதான் தோணுது.  பெரிந்தல்மன்னயிலருந்தே குழந்தை மயக்கம்தான். இடையில கண் தொறந்து அம்மா, அம்மானு பலவீனமா அழும் போதெல்லாம் ஏதோ ஒரு மிட்டாயை எடுத்து வாயில வைச்சானுங்க.  உடனே குழந்தை கண்களை செருகி மயங்கிப் போனான். யார் பெத்த பிள்ளையோ?......நான் வண்டியை விட்டு இறங்கியதும், ஓடிப் பொய், பார்க்கிங்க் கன்ட்ரோல் பண்ணும் டைம் கீப்பிங்க போலீஸ் கான்ஸ்டபிள் (P.C.) கிட்ட விவரத்தைச் சொன்னேன். அதுக்கு அவரு “அதெல்லாம் சும்மா நம்ம சந்தேகம்தான்,  விசாரிச்சுப் பார்த்தா வெங்காயத்த உரிச்சுப் பார்க்கற மாதிரி அதுல ஒண்ணுமே இருக்காது.  அங்க பாரு, .அவன், “அனஸ் 30 செகண்டு டிலே பண்ணிட்டு போகாம நிக்கிறான்......என்று சொல்லி விசில் ஊதிக் கொண்டே “அனஸ் வண்டியை வெளியேற்ற ஓடிவிட்டார்.  பிறகு நான் என்ன செய்ய...பார்த்த போது அவனையும் குழந்தையும் காணம்... நாம என்ன செய்ய?....அங்க பாரு.....அந்த ஆளு இங்க, இந்த ஹோட்டலுக்குத்தான் வர்ரான்.  குழந்தையோட கையில கிடந்த ஒரு தங்க வளையலக் காணோம்!. நான் நல்லா கவனிச்சேன்.  அவனோட மடியில படுத்திருந்தப்ப, வளையல் கையில இருந்திச்சு.  நீ அவன கவனிச்சுக்க நான் இப்ப வர்ரேன்...போயி P.C ய கூட்டிட்டு வர்ரேன்.

மோஹன் திரும்பிப் பார்க்க, கைலியுடுத்தியிருந்த ஒரு கறுத்த மனிதனும் அவனுடன் ஒரு குண்டு மனிதனும், கறுத்த மனிதனின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு 2 வயதுக் குழந்தையுடன் வந்தார்கள்.  பார்த்தாலே தெரிந்தது, குழந்தைக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. 

“என் சிதம்பரத்தின் உயரமும், தடியும் உள்ள குழந்தை.  முகம் தெரியவில்லயே.  குழந்தை அணிந்திருக்கும் சட்டையும், ட்ரவுசரும் என் சிதம்பரத்திற்கு உள்ள ஒரு ஜோடி போல இருக்கே!”  என்று மோஹன் நினைத்துக் கொண்டிருந்த போது, அவன் இருப்பிடத்தை அந்த மர்ம மனிதர்கள் கடந்து சென்றனர்.  குழந்தையின்  பாதிமுகம் கண்ட மோஹன் சிலையானான்.  “டேய் இது என் சிதம்பரம்! என் குழந்தை, என் மகன், என் சிதம்பரம் என்று கத்திக் கதறிகொண்டே ஓடிச் சென்று அவர்களிடமிருந்து குழந்தையைப் பிடித்து உயர்த்தி அவர்களிடமிருந்து பிடுங்கினான்.  திகைத்த அவர்கள் அங்கிருந்து ஓட முயல யாரெல்லாமோ அவர்களை விரட்டிப் பிடித்தார்கள். கூட்டத்தில் திகைத்து நின்ற அந்த டிரைவர் மற்றும் கண்டக்டருக்கும், கண்களில் நீர் மல்கத் தலையாட்டி நன்றி சொன்னான் மோஹன். மயக்கத்திலிருந்து தெளியாத சிவதிதம்பரத்தைக் கட்டிக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டான். பின்புறம் ஒரு கை தோளில் ஆறுதலாகப் படிந்தது போல் இருந்தது. திரும்பிப் பார்த்த போது கண்களில் நீர் மல்க ஜோஸ் ஸார்.


11 வருடங்களுக்கு முன், இதோ இப்போது அந்தச் சிறுவனுக்கு நடந்தது போலத்தானே சிவசிதம்பரத்துக்கும்? அந்தச் சம்பவத்தை இருவரும் நினைத்தபடி, இருவரின் கண்களும் அதைப் பேசிக் கொள்ள, மோஹன் பின் பக்கம் திரும்பி மகனின் தலையை வருடிக் கொடுத்தான்.  இருவரும் குழந்தையை அணைத்துக் கொண்டு “பயப்படாதடா கண்ணா அந்தப் பையன போலீஸ் அவங்க அம்மா அப்பாகிட்ட சேர்த்துடுவாங்கடா பயப்படாதடா செல்லம்.  என்று சிவசிதம்பரத்தைத் தேற்றி விட்டு, தங்களுக்கு மலை போல் வந்து பனி போல விலகியதை நினைத்து இறைவனுக்கு இருவரும் நன்றி கூறினர்.


2 கருத்துகள்:

  1. இது கதையாகவே மட்டும் இருக்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நீளமா இருக்கு. ஆனா அர்த்தமுள்ள கதை. இது அடிக்கடி நிகழ்கிறது.

    பதிலளிநீக்கு