இன்று குழந்தைகள் தினம். நாடெங்கும் "குழந்தை நேரு"கள் அடங்கிய ஊர்வலங்கள். முன்பு குழந்தையாக இருந்தவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போமே. அதுவும், 40 வருடங்களுக்கு முன் குழந்தையாய், ஏராளமான குழந்தைகளுடன் தமிழகத்தின் தென்னக மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்த என் தோழியும், இத்தில்லைஅகத்தில் என்னுடன் இணைந்து கருத்துக்கள் பகிர்ந்து சேர்ந்து எழுதும் கீதா எனும் பாவையின் (வயதான) மனதிற்குள் நுழைந்து தேவையில்லை என்றாலும் சேவை செய்வது எப்படி என்று இப்பூவையிடமிருந்து (பூவே வைக்காத) அறிய வாருங்கள்!
ஏய்! குமரி மாவட்டத்தின் குமரியே! பாவையே!
சுவையான மாவால் செய்யும் நாவில் நீர் ஊற வைக்கும் சேவை செய்யும் பூவையே! ஏராளமான
நம் தமிழ் நேயர்களுக்குத் தேவை இச் சேவை மட்டுமல்ல உன் “சேவை” இத் தில்லைஅகத்திற்கும் தேவை!! (எனதருமைத் தோழனின் ஜெகஜால, எதுகை, மோனைத் தமிழைப்
பாருங்கள்!! விட்டால் இதுவே ஒரு பதிவாகி விடும் போல!)
சேவை என்றத் தலைப்பைப் பார்த்ததும், ஏதோ நான்
நாட்டிற்கோ, இந்த சமுதாயத்திற்கோ சேவை செய்ததாகவோ, அதன் நினைவுகளைப் பற்றி
எழுதுவதாகவோ நினைத்து விட வேண்டாம்.
எனக்கு அந்த அளவிற்கு வயதும் ஆகவில்லை?, பெரிய அனுபவங்களும் இல்லை. இந்தச் சேவை எனக்குப் பிடித்த ஒரு உணவுப்
பதார்த்தம் அதைப் பற்றிய என் நினைவுகள்.
இப்போதெல்லாம், சென்னையில், பெரும்பாலான கல்யாணங்களில் இந்தச் சேவை, டிபன் மெனுவில் ஒன்றாகிவிட்டது. நன்றி: ரெடிமேட் சேவை ப்ரான்ட்ஸ். "இது நொடியில்
ரெடி" என்று எளிதாக்கப்பட்ட 5 நிமிடத்தில் தயாராகும் சேவை. ஏனென்றால், அக்மார்க்
ஒரிஜினல் சேவை செய்ய வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டமானதுதான். இதை அவ்வளவு எளிதாகப்
பெரும் கூட்டத்திற்குச் செய்து விடமுடியாது. அதனுடைய நல்ல மணம், குணம் இந்த
ரெடிமேட் சேவையில் இல்லவே இல்லை. இப்படிச் சொல்லுவதற்கு என்னை மன்னிக்கவும். நான் இங்கு குறிப்பிட விரும்பும் சேவை இதல்ல. கல்யாணங்களிலும்,
பல வீடுகளிலும் இந்தக் காலக்கட்டத்தில் செய்யப்படும் நொடியில் ரெடி சேவை, தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களிலும், கேரளாவில்,
திருவனந்தபுரத்திலும், பாலக்காட்டிலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே செய்யப்படுவது
போல் இல்லாமல், தேங்காய் சேவை, எலுமிச்சம்பழ சேவை என்று கலந்த சேவையாகப் பரிமாறப்படுகிறது.
அந்தப் பகுதிகளில் இது, புளிசேரியுடனும், பப்படத்துடனும் (கேரளாவில் பப்படம்
என்பது சிறிது ஈரப்பதத்துடன் உலா வருவது, தமிழ்நாட்டில் இது நன்றாகக் காய
வைக்கப்பட்டு அப்பளம் என்ற பெயரில் உலா வருகிறது.) பரிமாறப்படும் ஒரு சுவையுள்ள
பதார்த்தம். வெல்லம் கலந்த தேங்காய்
பாலுடனும் கூட பரிமாறப்படும். அது
ஒரு தனிச் சுவை. அந்த ரெடிமேட் சேவையைச் சாப்பிட்ட போது எனக்கு ஒரிஜினல் அக்மார்க்
சேவையைக் குறித்த என் இளமைக்கால நினைவுகள் மனதில் வந்தது. நிற்க,
இந்தச் சேவை சென்னையில் அவ்வளவு பாப்புலர்
இல்லை. இடியாப்பத்தையும், இதையும்
குழப்பிக் கொள்பவர்களும் உண்டு. இடியாப்பம்
என்பது பச்சரிசி மாவில் செய்யப்படுவது.
மாறாகப் புழுங்கல் அரிசியில் செய்யப்படுவதே நான் சொல்லுகின்ற சேவை.
இந்த டிபன் எனக்கு எப்போதுமே ரொம்பப் பிடித்த ஒரு டிபன்
ஐட்டமாகும். எப்பொழுதெல்லாம் எனது தாய் வழிப் பாட்டி இதைச் செய்ய நினைத்து புழுங்கல் அரிசியை ஊறப் போடுகிறார்களோ
அன்றேல்லாம் “ஏய் குட்டிகளா இன்னிக்கு டிபன் சேவை! எனக்குத் தேவை உங்கள் “சேவை” என்று ஏதோ நோட்டிஸ்
போர்டில் எழுதுவது போல் குறிப்பிடுவது வழக்கம். இங்கே குட்டிகள் என்பது நாங்கள்
தான். மாமா, அத்தை குழந்தைகள் என்று நாங்கள்
10 பேர். எல்லோரும் “ஹே!” என்று மகிழ்ச்சியில்
துள்ளிக் குதிப்போம். ஆனால் அதே சமயம்
பாட்டியின் “உங்கள் சேவை” என்பதைக் கேட்டு நாங்கள்
எல்லோரும் பதுங்குவதும் நடக்கும். ஏனென்றால், அந்தக் காலகட்டத்தில், 40
வருடங்களுக்கு முன், இந்தச் சேவையை செய்வது எவ்வளவு கஷ்டம் என்றும் அதைச் செய்யும்
முறையில் எங்களைத்தான் ஈடுபடுத்துவார்கள் என்பதும் எங்களுக்கல்லாவா தெரியும்!
அப்படியாகப்பட்டச் சேவையை எங்கள் வீட்டில் செய்யும்
நாள் ஏதோ விழா எடுப்பது போல இருக்கும்!. பெரும்பாலும் சனிக் கிழமையோ, ஞாயிற்றுக்
கிழமையோ தான் நல்ல முகூர்த்த நாளாகக் குறிக்கப்படும். அந்தக் கிழமைகளில்தானே நாங்கள் வீட்டில்
இருப்போம்!. இந்த இடத்திலே எங்கள் பாட்டியைப் பற்றிக் குற்ப்பிட்டாகவே வேண்டும்.
எங்கள் குடும்பம் பெரிசு. நாங்கள்
அனைவரும் ஒரே கூரையின் கீழ் கூட்டுக் குடுமபமாக, இந்தப் பாட்டியின் (என் அம்மா
வழி) அரசாட்சி, sorry அரசி ஆட்சியின் கீழ். உங்களுக்கே புரிந்திருக்கும், அரசி ஆட்சி
எப்படி இருந்திருக்கும் என்று! பாட்டியை இந்திராகாந்திப் பாட்டி என்றுதான்
அழைப்பது வழக்கம். ஊரே அவர்களுக்குப்
பயந்து மரியாதை கொடுக்கும் அளவு “She commanded respect and was a terrifying woman to
many”. இரும்பு மனுஷி! அவரது பிடியில் தான் எங்கள் எல்லோரது
குடும்பமும். எங்கள் குடும்பத்திலேயே மொத்தம் 18 பேர். அத்துடன் கொச்சியிலிருந்த பாட்டியின்
தங்கையும், அவர்களது சில குழந்தைகளும் சேர்ந்தார்கள் என்றால் மொத்தம் 25 பேர் போல
ஆகிவிடும். அதனால், பெரும்பாலும் 5 கிலொ புழுங்கல் அரிசியாவது - டொப்பி அரி என்று
சொல்லப்படும் ஒரு வகை அரிசி (IR20) – 4 ,5 மணி நேரம் ஊறப் போடுவார்கள். இப்போதுதான்
பிரச்சினையே ஆரம்பிக்கும்.
பெரியோர்களில் ஆண் மக்கள் யாரும் சமையலறைக்குள்
எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். பெண்களில்
வீட்டு மருமகள்கள் ஏதாவது காரணம் சொல்லி இதில் தலையிடாமல் வேறு வேலைகளுக்குப் போய்
விடுவார்கள். இறுதியில் என் அம்மாவும்,
பாட்டியின் தங்கையும் தான். அம்மா
பாத்திரம் கழுவும் வேலையிலும், பாட்டியின் தங்கை எங்களை மேய்ப்பதிலும், ஆக நாங்கள்தான்
சேவை செய்வதில் “சேவை” செய்ய வேண்டும்.
“ஏய்...லல்லூ இங்க வா கொஞ்சம் அரைக்கறதுல ஒரு கை
கொடு.” என் பாட்டியின் அதிகாரக் குரல் ஒலிக்கும். அப்போதெல்லாம் ஏது க்ரைண்டர்? கல்லுரல்தான்.
“பாட்டி எனக்கு நாளைக்குப் பரீட்சை இருக்கு பாட்டி. படிக்கணும்” என்று
சொல்லும் போதே அவளுக்கு கால் நடுங்கிக் கொண்டிருக்கும்.
அவள் கையில் இருக்கும் புத்தகம் தலை கீழாக
இருக்கும். அதாவது அவள் தலை கீழாகப்
படிக்கிறாள் என்று அர்த்தம். அவள் விடை எழுதினால் அது அச்சு அசலாக, ஒரு வார்த்தை
கூட பிசகாமல், அப்படியே புத்தகத்தில் உள்ளது போல இருக்கும். சரி அதை விடுங்கள்.
இப்போது எங்களுக்கும் அந்த பயம் தொற்றிக் கொண்டு காரணத்தை யோசிக்க ஆரம்பித்து
விடுவோம்.
“கேசவா, நீ வாடா இங்க” அடுத்த அழைப்பு.
இவனுக்கு கால் ஒருபோதும் நடுங்காது.
வாய் ஜாலத்தில் கில்லாடி!. “பாட்டி
உங்களுக்குக் கண்டிப்பா ஹெல்ப் பண்ணிருப்பேன். ஆனா, என்னச்சுனா உங்களுக்கேத்
தெரியும், இந்தத் தடவை நான் கணக்குல 100 மார்க் வாங்கணும்னு. அப்படி இல்லனா நீங்க என் ரிப்போர்ட் கார்டுல எங்க
அப்பாவ sign போட விட மாட்டேள். உங்களுக்கே உங்க வார்த்தை மறந்து
போச்சா பாட்டி. அதனால நான் கணக்கு போட்டுண்டு இருக்கேன்” என்று அருமையாக வெண்ணைத் தடவிய வார்த்தைகள் வரும்.
அவன் கணக்கு வேறு! அப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் மனம் வேறு யாரை
மாட்டி விடலாம் என்று கணக்குப் போடத் தொடங்கி விடும். அவனுக்குப் பதிலாகப் போவதற்கு வேறு ஒருவரைக்
கெஞ்சுவான்..
“என்னடா, என்ன மாட்டி விடப் பாக்கறியா, அஸ்கு
புஸ்கு. போனதடவ நான் Science ல, 38 மார்க்குதான் வாங்கிருந்தேன். பாட்டி sign போட விடமாட்டானு தெரிஞ்சு நான் அதை 83 ஆக்கின
ரகசியத்த நீ பாட்டிகிட்ட போட்டு உடைச்சைலயா!
முடியாது போ. வேற ஆளப் பாரு” இது மற்றொரு கஸினின் புரளி.
“ஆசை,தோசை, அப்பளம், வடை, என்னால முடியாது. நான் தான் பாட்டிக்கு நேத்திக்கு கால் பிடிச்சு
விட்டேன். அதனால வேற யாரையாவது கூப்பிடு” இது இன்னொரு கஸின்.
“பாட்டி, இவங்க எல்லாரும் வந்தா நானும்
வருவேன். இல்லனா நானும் இல்ல” இது என்னுடைய பதில்.
அவ்வளவுதான்.
பாட்டி கோபத்தின் உச்சிக்கே போய்விடுவார்.
இடுப்பில் கைககளை வைத்துக் கொண்டு, கண்களை உருட்டிக் கொண்டு, கத்திக்
கொண்டு கம்பு, விறகுக் கட்டையை எடுக்கச் செல்லும் போது, நாங்கள் எல்லோரும்
தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்று சேர்ந்து விடுவோம். Unity is Strength!!
உடனே, ஒரு எமர்ஜென்சி மீட்டிங்க் எங்களுக்குள் போடப்படும். ரகசியமாக ஒரு சில விஷயங்கள் பரிமாறிக்
கொள்ளப்படும். அதாவது, யாருக்கு அதிகமான பப்படங்கள், யார் யார் அவர்களது பங்கில்
சேவையை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும், எவ்வளவு சதவிகிதம், யாருடைய ட்ரெஸ்
யார் யார் ஒரு சில நாட்கள் அணிந்து கொள்ளலாம், ரிப்பன், குச்சி மிட்டாய், குச்சி
ஐஸ், நெல்லிக்காய், பஞ்சு மிட்டாய், மாங்காய், பொட்டு, மயில் இறகு (புத்தகத்தின் நடுவில்
வைத்து குட்டி போடும் இறகு), புத்தகத்தின் இடையில் மறைத்து வைத்துப் படிக்க கதை
புத்தகங்கள், அந்த ரசசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சத்தியப் பிரமாணங்கள், science ரெக்கார்ட் நோட்டில் யார்
யாருக்கு வரைந்து கொடுப்பது, இம்பொஸிஷன் எழுதுவது, ஹோம்வொர்க் செய்து கொடுப்பது, இரவு
ஒரே Fan னின் அடியில்தான் எல்லோருக்கும் படுக்கை என்பதால் யார் அதன் நேர் அடியில்,
யார் யார் எங்கு என்ற ஏரியா, பார்டர் பிரிவு என்று பலதும் பேசப்பட்டு, எல்லோரும்
ஒத்துக்கொண்டவுடன், கையில் சத்தியம் அடித்துவிட்டுப் பாட்டிக்கு உதவச் செல்வோம். இங்குதான்
ஊழலே ஆரம்பமாகிறதோ?!!
இதில் என் அம்மாவும், பாட்டியின் தங்கையும்
எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். “உங்களுடன் பெரியவங்களுமா? எதற்கு” என்று கேள்வி வரலாம். இவர்கள்
இருவரும் எங்களுக்கு தாராளமாக சேவையும், பப்படங்களும் தருவார்கள். “அம்பலப்புழா
பாயாசம்” மிகவும் பிரபலம். அதைச் செய்வதில் விற்பன்னர்களான இவர்கள்
இருவரும் ஸ்பெஷலாக பாட்டிக்குத் தெரியாமல் எங்களுக்குச் செய்து தருவது ‘போனஸ்’. அதற்குப் பதிலாக,
நள்ளிரவில், கோவிலுக்கு அருகில், திறந்த வெளி அரங்கில் சினிமா போடும்போது,
பாட்டிக்குத் தெரியாமல் ரகசியமாக இவர்கள் அங்கு போவதற்கு உதவ வேண்டும். இதில் என்ன வேடிக்கை என்றால், பாட்டி
எங்களுக்கு முன்னமேயே அங்கு போயிருப்பார்கள். “தில்லானா மோகனாம்பாளில்” வருவது போலத்தான் என்று
வைத்துக் கொள்ளுங்களேன். ஊழலிலிருந்து, இப்போது திரும்ப சேவைக்கு வருகிறேன்.
பாட்டியும் நாங்களும் அரைத்து முடித்தவுடன், பாட்டி
அந்த மாவை ஒரு பெரிய பித்தளை உருளியில் போட்டு வணக்குவார்கள். அதிலும் எங்கள் பங்களிப்பு உண்டு. அது திரண்டு வந்தவுடன் அதை பெரிய பெரிய
கொழுக்கட்டைகளாக “ஸ்..ஸ்ஸ் ஆஅ” என்று பிடித்து (சூட்டோடு), பெரிய பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க
வைத்து அதில் இந்தக் கொழுக்கட்டைகளைப் போட்டு மூடிவிடுவார்கள். அவை கொதிக்கும் போது ஒரு மணம் வீடு முழுவதும் வரும்
பாருங்கள்! அது தனிதான். அவை வெந்ததும் கடைசிப் பருவம், பிழிவது. அதுதான் உள்ளதிலேயே மிகவும் கஷ்டமான வேலை. இதைப் பிழிவதற்கென்றே சேவை நாழி என்ற ஒன்று
உண்டு. அது முக்காலி போல, நடுவில் மிக,
மிகச் சிறிய துவாரங்களுடன் ஒரு கிண்ணத்துடன், மேலே ஸ்க்ரூ ஜாக்கு போல (Screw
Jack) அமைப்புடன் இருக்கும். இரும்பினால் ஆனதாக இருக்கும். அந்தக் கிண்ணத்தில் வெந்தக் கொழுக்கட்டையை
ஒவ்வொன்றாகச், சூடாக இருக்கும்போதே போட்டு, ஸ்க்ரூ ஜாக்கின் ஒரு பக்கம் ஒருவர், இன்னொரு
பக்கம் இன்னொருவர் கை கொடுத்து, சுற்றி, ஒருவர் மாறி ஒருவராக, எல்லாக்
கொழுக்கட்டைகளையும் பிழிந்தெடுப்போம். பிழியும்போது
நூடுல்ஸ் போன்று ஆனால் மிக மிக மெலிதாக வெளியில் வரும். அப்படிப் பிழியும் போது
அந்த ஆவி பறக்க ஒரு மணம் வரும் பாருங்கள் அது இன்றும் இன் நினைவில் உள்ளது. இதைச் செய்யும் போது நாக்கு ஊரத் தொடங்கி
விடும். பின்னர் பிழிந்ததை பாட்டி ஒரு பெரிய தாம்பாளத்தில் பரப்பி அதில் தேங்காய்
எண்ணையைத் தெளித்து வைப்பார்கள். “நெற்றி
வியர்வை நிலத்தில் சிந்த” என்று சொல்லுவது போல, தீயாக வேலை செய்து முடிக்கும்
போது, அந்த சேவையைப் பார்த்ததும், “தோள்பட்டை வலியா” போயே போச்!.
போயிந்தி! போயல்லோ!. It’s gone! இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும்போது,
மறுபுறம் எங்களில் சிலர் 5, 6 தேங்காய்களை உடைத்துத் துருவி புளிசேரி செய்வதற்கு
உதவுவார்கள்.
என் கல்யாணத்திற்குப் பிறகு 8 வருடங்கள் திருவனந்தபுர
வாழ்க்கை. கல்யாணச் சீராக இந்தச் சேவை நாழியும் என்னுடன் வந்தது. எனது புகுந்த
வீட்டவர்கள் எல்லோரும் சென்னைவாசிகள். அவர்களுக்கு இந்தச் சேவை நாழியைப் பார்த்து
வியப்பு. அதனால் அவர்கள் எங்கள்
வீட்டிற்கு வரும் சமயம் எல்லாம் இந்த சேவை தவறாது இருக்கும். அப்போதெல்லாம்
க்ரைண்டர் வந்து விட்டதால் அரைப்பது எளிதாகி விட்டது. ஆனால் இவர்கள் யாராவது சொல்லாமல் கொள்ளாமல்
வந்தால் சேவை கிடைக்காது. அப்படி
இருக்கும் சமயம்தான் அந்த நல்ல இனிய செய்தி வந்தது. நாங்கள் குடியிருந்த கிழக்கே
கோட்டை ஏரியாவில், ஆனைவால் தெருவில் இருந்த ஒரு மெஸ்ஸில் சேவை, புளிசேரி,
பப்படமும் செய்து தருவதாக. அப்புறம் என்ன?
திடீரென்று வருபவர்களுக்கு அங்கிருந்துதான் சேவை வாங்கி வருவேன். இப்படிப் போகப்
போக, அந்த மெஸ்ஸில் என்னைக் கண்டதுமே அந்த மெஸ்ஸை நடத்தியவர் “டேய்! அம்பி “சேவை
மாமி” வந்திருக்கா கேட்டியா...ஒரு நாலு பார்சல்
சேவையும், புளிசேரியும், நாலு பப்படமும், பின்னே கூட ரண்டு பப்படமும் கூடி வச்சுக்
கொண்டுவா கேட்டியா” என்று கூவி என்னை “சேவை
மாமி” ஆக்கி விட்டார். என்னை
மாமி ஆக்கியதில் அந்த ஆள் மீது எனக்கு பயங்கர கோபம். இப்போதும்! வேறு வழி இல்லாமல்
சேவை வேண்டுமே அதனால் பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கி வருவேன்.
இப்போதெல்லம், இது செய்வது மிக எளிதாகி
விட்டது. Thanks to மிக்ஸி, க்ரைண்டர், ஸ்டீமர். வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு. புகுந்த
வீட்டில் உள்ள இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தி விட்டேன். அவர்களுக்கு சேவையை “boiled
rice noodles” என்றும் இடியாப்பத்தை “raw rice noodles” என்றும் அறிமுகப்படுத்தி
விட்டேன். அவர்கள் எல்லோரும் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும்
வளரும் குழந்தைகள். பேர் வேண்டுமானால் அவர்களுக்கு ஏற்றார் போல மாறலாம். ஆனால் சேவை சேவைதான்!!.
அப்படி இருந்த சமயம், 12 வருடங்களுக்கு முன்
கணவரின் வேலை நிமித்தம் அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்தம். சேவை நாழியும்
என்னுடன் அமெரிக்கப் பயணம். செக் இன் பாகில். நல்ல வேளை எந்த ஏர்போர்ட்டிலும் இதனை
ஏதோ ஒரு ஆயுதமோ என்று என்னைச் சந்தேகப்படவோ, அதை வெளியில் தூக்கி எறியவோ இல்லை.
அதுவும் ட்வின்டவர் தகர்க்கப்பட்ட நேரம். நாங்கள்
குடியிருந்த அபார்ட்மென்டில், சமையல் அறையில் Drainage பைப்பில் ஒரு சிறிய
ப்ராப்ளம் வந்தது. அதை ரிப்பேர் செய்ய வந்தவர் ஒரு மெக்சிகன். அப்போது அவர் கண்ணில் இந்த சேவை நாழி பட்டு
விட்டது. அவருக்கு இதைப் பார்த்ததும் ஒரே
வியப்பு! அதைப் பற்றி விசாரித்தார். அவர்
பேசிய ஆங்கில உச்சரிப்பு எனக்குப் புரிய கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எனக்கு
ஆங்கில அறிவு இருந்தாலும், அப்போது அவருக்கு ஏற்றார் போல சொல்ல எனக்கு அமெரிக்க
ஆங்கில உச்சரிப்பு பழகாததால் முதலில் கஷ்டப்பட்டாலும், பின்னர் எப்படியோ, இதன் புகழைப் பரப்பும் நோக்கம் என்னைத் தூண்டி விட, இந்தியாவின் தென்
கோடியில் வழக்கதில் இருக்கும் சேவையின் மகத்துவத்தைப் பற்றி உலகிற்கு அறிவிப்பது
போலவும் அதன் புகழைப் பரப்புவது போலவும் பெருமையுடன் “par boiled rice noodles” என்று நாமகரணம் சூட்டி
(அவரிடம் string hoppers என்றும் விளக்கம் அளித்து) அவருக்கு விவரித்து
விட்டேன். அவர் ஆர்வத்துடன், இடையில் எல்லாம் சந்தேகம் எழுப்பி, கேள்வி கேட்டு (students கூட இப்படி கேள்வி கேட்க மாட்டாங்க) எல்லாம்
முடிந்த பின் அவர் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி
“இப்போது எனக்கு அதை டெமோ செய்து காட்ட முடியுமா” என்று! நான் மயங்கி விழாத குறைதான்.
நான் அவரிடம் “நான் டெமோ என்ன சேவையே செய்து
தருகிறேன், ஆனால், நீங்கள் டெமோ பார்க்க வேண்டும் என்றால் ஒரு பாதி நாளாவது எங்களுடன்
செலவிட வேண்டி இருக்கும்” என்று சொன்னதுதான்
தாமதம், அவர் மயங்கியே விழுந்து விட்டார்.!
இருந்தாலும் எனக்கு என் சேவையின் மகத்துவத்தை
அமெரிக்காவில் பரப்பியதில் ஒரு சந்தோஷமே! வீட்டிற்கு வந்த அன்பர்களுக்கு எல்லாம்
சேவை செய்தே அதன் புகழைப் பரப்பிவிட்டேன். ஒரே வருடத்தில், திரும்பவும் இந்தியா
வரவேண்டிய நிர்பந்தம். வந்தாயிற்று. அமெரிக்க நண்பர்கள், என்னை மிஸ் பண்ணுவதை விட
சேவையை மிஸ் பண்ணுவதாகக் கூறினார்கள். சேவையின் புகழைப் பரப்பிய என் “சேவை” வாழ்க!!.
நான் இங்கு வந்த பிறகு இந்த சேவை புகழ் எப்படிப் பரவியதோ தெரியவில்லை! கோயம்புத்தூரில், இந்த சேவையை மிக எளிதாசச் செய்ய ஒரு புது “சேவை
மேக்கர்” அறிமுகப்படுத்தியிருப்பதாக
அறிந்தேன். உடனே என் அமெரிக்க நண்பர்களுக்கு அதைத் தெரியப் படுத்திவிட்டேன். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எத்தனை பேர் அதை வாங்கினார்களோ!! இப்போது, technology வளர வளர மார்கெட்டில் பல பல சேவை மேக்கர்கள் வந்து விட்டன.
இன்று என் வீட்டில் “இன்றைய டிபன் சேவை! எனக்குத்
தேவை உங்கள் “சேவை”! செய்வதற்கல்ல.
சாப்பிடுவதற்கு!!!
இவ்வளவு அருமையான இடுகைக்கு பின்னூட்டமே இல்லையா? என்ன கொடுமை கீதா ரங்கன்?
பதிலளிநீக்குரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நீங்க மீள் பதிவா இதை வெளியிடாம, புதிதாக சிறிய மாறுதல்களுடன் வெளியிடுங்க. கொஞ்சம் நீண்ட கட்டுரை, ஆனால் ரசமா இருக்கு (அரியலூர் அடுக்கு தோசை போல).
பதிலளிநீக்கு//எனக்கு அந்த அளவிற்கு வயதும் ஆகவில்லை?, // எனக்கு இதுநாள் வரை தெரியாது. சேவை/Service செய்யணும்னா குறைந்தபட்சம் 80 வயசாவது ஆயிருக்கணும்னு. ஹா ஹா
பதிலளிநீக்குநான் முதல் ஷிஃப்டிங்குக்கு சேவை நாழியை எடுத்துவைத்துவிட்டேன். இது பற்றி உங்கள்ட பிறகு சொல்றேன்.
நான் திருவனந்தபுரம் சில வருடங்களுக்கு முன் போயிருந்தபோது (மாலை 6 1/2 மணி), என் பெரியம்மா பெண் (நீங்க சொல்லும் தெருக்களில்தான் இருப்பார்) சேவை வாங்கிவரச் சென்று (நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க), தீர்ந்துபோய்விட்டது என்றார். எனக்கு சேவை சாப்பிட கொள்ளை ஆசை. அதுவும் வெறும் சேவை, புளிசேரி.... போனாப் போகுதுன்னா பொரித்த அப்பளம். நான்லாம் அவ்வளவு ரசித்துச் சாப்பிடுவேன்.
பதிலளிநீக்குசேவையை சாப்பிடத் தெரியாதவர்கள்தாம் அதில் எலுமி சேவை, பருப்பு உசிலி சேவை, இனிப்பு சேவை, எள் சேவை என்றெல்லாம் அதனைக் கொடுமைப்படுத்துவார்கள்.
என் பெண்ணுக்கு தடி சேவைல விருப்பம் கிடையாது (இடியாப்பம் ஓகே அவளுக்கு). சில சமயம் அவள் சேவைல தயிர் விட்டுக்கொண்டு மோர் சாதம் போல் சாப்பிடுவாள். (இன்னும் சிலர் அப்படிச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்). எனக்கு அவ்வளவு ஆற்றாமையாக இருக்கும் அதனைப் பார்ப்பதற்கே. அவ்வளவு உழைப்பு தேவைப்படும் சேவைக்கு, அதனை மோர்சாதம் போல் மரியாதை செய்வது அவமரியாதை இல்லையோ