செவ்வாய், 12 நவம்பர், 2013

ஹலோ! தில்லைஅகத்தான்! ஹலோ! கீதா!

என் தோழியிடமிருந்து ஃபோன் கால். அவ எப்ப வேணாலும் நினச்சா ‘கால் பண்ணிடுவாங்கறதுதான் உண்மை...ஸோ ஆச்சரியப்படறதுக்கு இல்ல...  இருந்தாலும், ஏதோ ஒண்ணு அவளுக்கு இப்ப ஒரு மேட்டர் கிடைச்சுருக்கும் போல.

ஹலோ! தில்லைஅகத்தானே! எப்படி இருக்கீங்க?!

ஹல்லோ! கீதா! நலம்தானா? நலம்தானா?  உடலும் உள்ளமும் நலம் தானா....

ஐயோ! ஏன் இந்தக் கொலைவெறி!? உடம்பு நல்லாத்தான் இருக்கு...நீங்க இப்படிக் கர்ண கொடூரமா பாடி ஏற்கனவே கொஞ்சம் டல்லடிக்கிற என் மனச இன்னும் டல்லாக்கிடாதீங்க..

உங்ககிட்டத்தானே இந்த மாதிரி பாடிக் காட்டி என் ஆசையைத் தீத்துக்க முடியும்!  இளையராஜா கிட்டயா போயி நான் பாட முடியும்? அது போகட்டும் என்ன விஷயம்? மனசு டல்லடிக்க?

“ஹேய்! இங்க பாருங்க...சென்னைல என்னோட ஃபேவரிட் ஷாப்பிங்க் ஏரியா பாண்டிபஜார், அதுலயும் ப்ளாட்ஃபார்ம் கடைகள்னு உங்களுக்குத் தெரியும்ல. அந்தப் பாண்டி பஜார் கடைகள்லாம் காணாமப் போயிடுச்சுங்க......

“காணாமப் போயிடுச்சா?  கடையெல்லாம் யாருப்பா தூக்கிட்டு போக முடியும்......ஹை! ஜாலிதான்... இனி நீங்க ஊர் சுத்த மாட்டீங்கனு சொல்லுங்க...ஊர் சுத்தர சான்ஸ் போயே போச்...உங்க பர்ஸும் ஒல்லியாகாது (ஃபோன பொத்திக்கிட்டு இப்ப உங்ககிட்ட பேசறேன். என் தோழிய நான் எப்ப கூப்பிட்டாலும் “நான் பாண்டிபஜார்ல மேய்ஞ்சுட்டு இருக்கேன் அப்படிம்பாங்க.  காதுல விழுந்துச்சுனு வையுங்க, என் கதி அம்போ)

“ஹேய்! என்ன? நக்கல்ஸு?!! ஆமா, அங்க என்ன பின்னாடி ஏதோ யார்கிட்டயோ பேசறா மாதிரி இருக்கு? என்னைய கிண்டலா?

ஐயோ!  அதெல்லாம் இல்லங்க....உங்கள நான் கிண்டல் பண்ண முடியுமா?  அப்புறம் நீங்க என்னைய சுண்டல் பண்ணிடுவீங்களே!!

உங்களுக்கென்னத் தெரியும்...பாண்டிபஜார் ப்ளாட்ஃபார்ம் கடைகளைப் பத்தி....அதுவும் அங்க பாலக்காடு, நிலம்பூர்னு உக்காந்துகிட்டு நக்கலடிக்க வேண்டியது....என்னை மாதிரி எத்தனை பேருக்கு இந்தக் கடைங்கல்லாம் ஃபேவரிட் தெரியுமா?  இங்க டெய்லி காலைல 11 மணிக்கு ஆரம்பிச்சுதுனா.. நைட் 10 மணி வரைக்கும் கூட.. மக்கள் ஷாப்பிங்க் தான்...அதுவும் ஞாயிற்றுக் கிழமைனா கூட்டம் அள்ளும்....பாருங்க....நாங்க பேரம் பேசிப் பேசியே வாங்கிடுவோம்ல. அது என்ன ஒரு ஜாலி தெரியுமா...அண்ணே..என்னண்ணே இப்படி இந்த வெல சொல்லுறீங்களே.....கம்மி பண்ணிக் கொடுங்கண்ணே...கம்மி பண்ணிக் கொடுதீங்கன்னா உங்கக் கடைக்குத் திரும்பவும் வருவேன்ல  தம்பி என்ன தம்பி...இது உங்களுக்கே நியாயமா இருக்கா?  இப்படி ஒரே போடா போட்டா..நாங்க என்னத்த வாங்கறதாம்...அதெல்லாம் முடியாது இந்த விலைதான்....இந்த வெலைக்குக் கொடுத்தீங்கன்னா கூட 2 டாப்ஸ் வாங்குவேன் இப்படிப் பேரம் பேசி வாங்கறதுல உள்ள சுகம் இருக்குப் பாருங்க.....அதுவும், டி.வி. ல காம்பியர் பண்றவங்க, நடிகை கீதா கூட இங்க வந்து ஷாப்பிங்க் பண்ணுறதப் பாத்துருக்கேன். இங்க ட்ராஃப்பிக் ஜாம், பார்க்கிங்க், நடக்கறவங்களுக்குத் தொந்தரவு எல்லாம் இருந்ததுனால இப்ப அந்தக் கடைங்கள்லாம் இங்கயே ஏதோ கார்ப்பரேஷன் வளாகமாம் அதுக்குள்ள போடச் சொல்லி ஆர்டர் வந்து, சைட்ல இருக்கற பெரிய கடை ஆளுங்க எல்லாம் இந்தக் கடைகளை அப்புறப்படுத்தணும்னு கோரிக்கை வைச்சு, கடை ஆளுங்கள்லாம் நல்ல விதமா ஒத்துழைச்சு, கடைசில இப்ப கடைங்க எல்லாம் வளாகத்துக்குள்ள போயிருச்சு போல....

அதான் கார்ப்பரேஷன் வளாகத்துக்குள்ள இருக்குல அப்புறம் என்ன புலம்பல்?

பொதுமக்களுக்கு இடைஞ்சல் வராம இருக்கத்தான் அப்படி செஞ்சுருக்காங்க.. தெரியுது....வயசானவங்களுக்கு இப்ப வசதியா ரோட் அகலமா, நிறைய இடம் இருக்கறது போல ஆகிடுச்சு. ஆனா, என்னை மாதிரி இளம் வயது பொண்ணுங்களுக்குத்தான் கொஞ்சம் கஷ்டமாகிப் போச்சு. ஏன்னு கேட்டீங்கனா, நான் இங்க வண்டிலயோ, நடந்தோ போகும்போது, கண்ணுல கலர் கலரா துணிகள் எல்லாம் தொங்குற அழகைப் பார்க்கணுமே..போற போக்குல அப்படியே லுக் விட்டுகிட்டு... அழகு மட்டும் இல்ல, என்ன புதுசா டாப்ஸ் வந்துருக்கு, ஸ்கர்ட் வந்துருக்கு, லேட்டஸ்ட் ஃபாஷன்ல என்ன பான்ட் வந்துருக்குனு எல்லாம் தெரிஞ்சுரும்...அப்புறம் என்ன....... போய் பேரம் பேசறதுதான்....இப்ப வெறிசோடிக் கிடக்குது...உள்ள இருக்கறதுனால என்ன புதுசா வந்துருக்குன்னு, போற போக்குல பாக்க முடியாம போயிருச்சு ...அதான்....களையிழந்து இருக்காப்ல இருக்கு......மனசும் கொஞ்சம் டல்லாகிடுச்சு.....அது போகட்டும் அங்க என்ன சூடான விஷயம்?

இங்கயா...ம்ம்...இருக்கு. எல்லாம் நாம எப்பவும் நியூஸ் பேப்பர்ல வாசிக்கறதுதான். வேலியே பயிரை மேயர கதைதான். முன்னாடி கேரளாவுல கஸ்டம்ஸ் அசிஸ்டென்ட் கமிஷனரா இருந்த C.மாதவனும், ஃப்யாஸ், அப்படின்ற கடத்தல் பேர்வழியும் சேர்ந்து தங்கம் கடத்தி பிடிபட்டுட்டாங்க.  இப்ப உள்ள கம்பி எண்ணிக்கிட்டு இருக்காங்க. அந்தப் பயிரையே மேஞ்ச வேலிய பிடுங்கி எறிஞ்சாக் கூட வேலியில மீந்துப் போற சில வேலிக்காலுங்க பயிரை மேயத்தான் செய்யுது.  நேத்து, 6 கிலோ தங்கம் கடத்தறதுக்கு உடந்தையா இருந்த ஏர் ஹோஸ்டஸ் ஹிரோமாஸா செபாஸ்டியனும், அவங்க தோழியும், கடத்தல் பேர்வழியுமான ரஹிலா ஷிராயியும் கைதானதுதான் இப்ப சூடான விஷயம்.

6 கிலோ தங்கமா?  யம்மாடியோவ்...

இதுக்கே வாயப் பொளக்கறீங்களா! பாத்து ஏதாவது வாயில விழுந்துடப் போகுது....இதக் கேளுங்க....ஜனவரிலருந்து, நவம்பர் வரை கேரளா ஏர்போர்ட்ல இது போல பிடிக்கப்பட்டத் தங்கம் 130 கிலொவாம்.  அப்ப எப்படியும் ஒரு 1000 கிலோ தங்கமாவது பிடிக்கப்படாம போயிருக்கும்ல?.....ஹலோ........ஹலோ........என்ன............சத்தத்தையேக் காணோம்........என்னாச்சு ........மயங்கிட்டீங்களா!!..

இல்ல...வாயடைச்சு நிக்கறேன்.!  ஆச்சரியமா இருக்கு.  படத்துல வரா மாதிரி பொண்ணுங்க கூடவா கடத்தல்ல அப்படின்னு.... 

ஹப்பா மயங்கல இல்ல... இன்னுரு கதைய கேளுங்க..2 நாளுக்கு முன்னால ஃப்ளைட்ல வந்து இறங்கின ஒரு ஆளோட பேக்ல 4 ஸ்பூனும், 3 கப்புகளும்.

சரி இதுல என்ன இருக்கு?

முழுசும் கேளுங்க...குறுக்கப் பேசப்படாது. சந்தேகம் வந்த கஸ்டம்ஸ் அதிகாரிங்க செக் பண்ணிருக்காங்க.  அது எல்லாமே வெள்ளி முலாம் பூசின தங்க ஸ்பூன்களும், கப்புகளுமாம். இப்படிக் கூட கடத்தறாங்க பாருங்க...அந்த ஆளு முகமது நவாப் போலீஸ் பிடில இப்ப. 

சரி அந்த முதல் கேஸு என்னாச்சு அதுக்கப்புறம்? அதச் சொல்லாம அடுத்த நியூஸ் போய்கிட்டு இருக்கீங்க..

அதுவா அது வந்து.....துபாயில 2 லட்சம் சம்பளத்தோட ஒரு IT  கம்பெனில வேலை செய்யற (அப்படினு சொல்லிக்கறாங்க) ரஹிலா எப்படியோ பேசிப் பேசி ஏர் ஹோஸ்டஸ் ஹிரோமாஸாவ கள்ளக் கடத்தலுக்கு உடந்தையாக்கிட்டாங்களாம். ஏர் ஹோஸ்டஸ்னா சந்தேகப்பட மாட்டாங்கல்ல...அதான்.  கடத்தறதுக்குக் கமிஷன் என்னனு தெரியுமா...1 கிலோ கடத்தினா 1 லட்சம்.  போன 3 மாசத்துல ஹிரோமாஸா ஏறத்தாழ கமிஷனா 20 லட்சம் அடிச்சதா சொல்லிக்கறாங்க.  கமிஷன்ல ஒரு பைசா வீட்டுக்கு இல்லையாம்..எல்லாத்தையும் காஸ்ட்லியான துணி, நகை, செருப்பு இப்படி வாங்கி செலவு செஞ்சுருக்காங்க.  கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தப்ப ஹிரோமாஸாவோட அம்மே ஒரே புலம்பல் “ பாவி, உன்னைய நான் மாடு மேய்ச்சு, பால் கறந்து வித்துத்தானே படிக்க வைச்சேன்.  நீ ஏண்டி இப்படியானே.

ஒண்ணு நல்லாத் தெரியுது. அந்த மாடு, வீடு எல்லாத்தையும் வித்தாத்தான் கேஸ் நடத்த முடியும்னு சொல்லுங்க...ஏன் தன்மானத்தையும் பறக்க விட்டுத்தான்..

தங்கம் கடத்தறவங்களுக்கு இப்ப கமிஷன் உயர்த்தி இருக்காங்களாம்ல.  முன்னடிலாம் 1 கிலோவுக்கு 50,000.  இப்ப அது 1 லட்சம் ஆகியிருக்காம்.  எனக்குக் கூட கொஞ்சம் பேங்க் லோன் இருக்கு.  பேசாம லீவு போட்டுட்டு துபாய்க்கு, குடும்பத்தோட போயி, சுத்திப்பாத்து ஒரு 5 கிலோ கடத்தினா எப்படினு யோசனைல இருக்கேன்....

என்னது?  கடத்தலா? தில்லைஅகத்தானே! சிறைஅகத்தான் ஆகணுமா? அங்க போயி கம்பி எண்ண ஆசையா இருக்கா?!  பேசாம டீச்சரா இருந்தமா, ரிட்டையர் ஆனமா, பென்ஷன் வாங்கினமா, வயசான காலத்துல நிம்மதியா ஈசிசேர்ல படுத்து லொக்கு லொக்குனு இருமினமா, நம்ம தில்லைஅகத்து Blog  ல ஏதோ நாலு வார்த்தை எழுதி ஆளுங்களக் கஷ்டப்படுத்தினமானு இல்லாம (நாலு பேருதானே பாக்கறாங்க நம்ம ஜோக்காளி உட்பட)  நல்ல கும்மி அடிக்கற யோசனை.  இந்த மாதிரி பேசறதா இருந்த ஃபோன கட் பண்ணிடுவேன்........ஆமா...

கோச்சுக்காதீங்க...உங்க கோபம் தெரியாதா...அம்மாடியோவ்...சும்மாதான் சொன்னேன்...இருங்க இருங்க கட் பண்ணிடாதீங்க...

சரி சரி பொழச்சுப்போங்க.  ஆமா தங்கம் துபாய விட இங்க விலை கூடுதலா? அது ஏன் அப்படி?  அவ்வளவு Tax ஆ? என்ன?

தங்கம்னா உங்களுக்குத்தான் ஒண்ணுமே தெரியாதே!  உங்களுக்கும் அதுக்கும்தான் சம்பந்தமே கிடையாதே! அதெல்லாம் வாங்கற ஆளுங்களுக்குத்தான் தெரியும்!   பெட்ரோல் வெலையிலேயே ஏகதேசம் 40% Tax தானே.  அப்படி இருக்கும் போது 1 கிலோக்கு 1 லட்சம் கமிஷன்னா அப்ப தங்கத்துக்கும் Tax  இங்க கூடுதலாதானே இருக்கும் . துபாய்ல இங்க விட வில ரொம்ப கம்மியாதன் இருக்கும் போல அதான் இப்படிக் கடத்தறாங்க. போல...ஆனா மாட்டிக்கிட்டா மானம் கப்பலேறி, அசிங்கப்படுவோமேனு ஏன் நினைக்க மாட்டேன்றாங்கனுத் தெரியல......
வேற ஏதாவது நல்ல விஷயம்?


இருக்குது....இப்ப நவம்பர் 16 ஆம் தேதிலருந்து ஐயப்ப மண்டலம் ஆரம்பிக்குது இல்லியா அதனால கேரள அரசு ஹோட்டல்ல எல்லாம் உணவுப் பொருட்களோட விலைப் பட்டியல் தமிழ்லயும், கன்னடத்துலயும் எழுதப்பட்டு இருக்கணும் அப்படின்னு சொல்லியிருக்குது. அப்படி எழுதாத ஹோட்டல் மேல நடவடிக்கை எடுப்பாங்களாம். 

ஓ! ரொம்ப ஒரு நல்ல விஷயமா இருக்குதே.  நம்ம தமிழ் மக்கள் மலையாளம் தெரியாதவங்களுக்கு இது ரொம்ப வசதியா இருக்கும் போல.  கூடுதல் விலை கொடுத்து ஏமாற வழி இல்லனு சொல்லுங்க...


இருங்க இதுலயும் ஒரு தில்லு முல்லு நடக்க வாய்ப்பு இருக்கு.  ஹோட்டல் ஆளுங்களும், அரசு அதிகாரிங்களும் கலந்து இந்தத் தீர்மானத்துக்கு வில்லங்கம் வராமாதிரி செய்யாம இருக்கணும்.....ஐயப்ப ஸீஸன்ல அந்த ஐயப்பன் வழி செய்யட்டும்.....சுவாமியே....ய்...சரணம் ஐயப்பா!!!!!

சரி சரி இப்பவே முக்கா மணி நேரம் ஆகுது.  அப்புறம் நம்ம BSNL , ¾ மணி நேரம், 1 மணி நேரம் ஆனா லைன கட் பண்ணிவிட்டுருவாங்க.  நமக்குதான் அந்த அனுபவம் உண்டே...ஸோ...நாளைக்குப் பேசுவோம்.  பை! பை! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக