இது தான்(னா)யா சுதந்திரம்!!??
- காலையில் எழுந்ததும் வாயிற் கதவை நீங்கள் திறக்கும்போது, நாய் வளர்க்கும் நாங்கள் எங்கள் செல்லங்களை ஓரமாக, ஏதாவது குப்பை மேட்டுக்கோ, வெற்று இடத்துக்கோ கொண்டு போகாமல் உங்கள் வீட்டு வாசலில், கக்கா, உச்சா போற டாய்லெட்டாக யூஸ் பண்ணுவோம். (நானும் 2 செல்லங்கள் வைச்சுருக்கேன்)
- ஏற்கனவே சின்னச் சின்ன தெருக்கள், இதில் நீங்கள் உங்கள் 4 சக்கர வாகனத்தை வெளியில் எடுக்க முடியாதபடி, நாங்கள் காரையும், கால் டாக்சிகளையும் நிறுத்தி வைத்திருப்போம். நாங்கள் மற்றவர்களின் கஷ்டத்தைப் பற்றிதான் யோசிக்கவே மாட்டோமே...நாங்கள் எங்கே வேண்டுமென்றாலும் நிறுத்துவோம்.
- நாங்கள் தலையைக் கூடக் காட்டாமல், வண்டியைக் கூட காட்டாமல் நோட்டு நீட்டி ஓட்டுநர் உரிமம் பெறலாம். இவ்வளவு ஏன், நாங்கள் சிறு வயதிலேயேயும், லைசன்ஸும் வாங்காமல் கூட வண்டி ஓட்டுவோம் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
- ட்ராஃபிக் சிக்னலில் சிவப்பு இருந்தாலும் சரி, பச்சை இருந்தாலும் சரி நாங்கள் போய்க் கொண்டே இருப்போம். நாங்கள் இண்டிகேட்டர் உபயோகிப்பதில் உங்களை நன்றாகக் குழப்புவோம். ட்ராஃபிக் ரூல்ஸ்? எங்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. உங்களுக்கு இருந்தால் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
- இந்த மாதிரிப் போகும் போதோ இல்லை சாதாரணமாக போகும் போதோ நாங்கள் எதிரில் வருகிறவர்கள், பக்கத்தில் வருகிறவர்கள் எல்லாரையும் கேடு கெட்ட நல்ல தமிழில் திட்டிக்கொண்டே போவோம், ஏன் என்றால் நீங்கள் ஒழுங்காக வண்டி ஓட்டினால் அதற்கு நாங்களா பொறுப்பு?!
- நாங்கள் மட்டும்தான் ரோட்டில் வண்டி ஓட்டலாம், ஓட்டுவோம், ஆம்புலன்ஸ் எல்லாம் எப்படி வரலாம்? அவர்களுக்கு அவசரம் என்றால் மேலே பறப்பது மாதிரி வண்டியை வைத்துக் கொள்ள வேண்டும், மேலே போவதற்கு ஈசியா ஃப்ரீ டிக்கட் கிடைக்கும்போது எதுக்கு ஆஸ்பத்திரி செலவெல்லாம்.? யோசிங்க....
- நீங்கள் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது, ரோட்டைக் கடக்கப் பாலங்கள் இருந்தாலும், ரோட்டில் நடக்க நடைபாதை, சுரங்கப் பாதை இருந்தாலும் நடு ரோட்டில் நாங்கள் திடீரென உங்கள் முன் தோன்றி ரோட்டைக் கடப்போம். ஓடுவோம், நிற்போம், உங்களைக் குழப்புவோம். நீங்கள் ப்ரேக் போடக் கஷ்டப்பட்டால் நீங்கள்தான் அதற்குப் பொறுப்பு.
- நாங்கள் எங்கு வேண்டுமானாலும் வண்டியை நிறுத்துவோம், “No Parking” இடத்திலும் கூட. போலீஸ் எடுத்துச் சென்றாலும் நோட்டு வெட்டினால் கிடைத்து விட்டுப் போகிறது.
- நாங்கள் மொத்தக் குடும்பமே ஒரு வண்டியில் பயணம் செய்வோம். 4 சக்கரம் அல்ல, 2 சக்கர வாகனத்தில்.
- நாங்கள் பொது இடங்களில் புகை பிடிப்போம். உங்களுக்கு அது தொந்தரவாக இருந்தால் மூக்கைச் சுற்றி மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பொது இடங்களுக்கு வராதீர்கள். Passive smoking is also equally injurious to health. எங்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.
- நாங்கள் “தண்ணி” அடித்துவிட்டு ரோட்டில் உருளுவோம், கத்துவோம், உங்களுக்குக் கூட தொல்லை தருவோம். இந்நாட்டின் “குடி” உரிமை பெற்ற சுதந்திரக் “குடி” மகன் நாங்கள். நீங்களும் வேணும்னா தண்ணி அடியுங்களேன்.
- நாங்கள் பொது இடங்களில் கக்கா போவோம். உச்சா போவோம். உங்களுக்கு நாறினால் அதற்கு நாங்களா மூக்கைப் பொத்திக் கொள்ள முடியும்?
- தெருவில் எத்தனைக் குப்பைத் தொட்டிகள் இருந்தாலும் நாங்கள் அதைச் சுற்றிதான் குப்பையைப் போடுவோம். கண்ட இடத்துல குப்பையை போடுவோம். எங்கள் வீட்டுக் குப்பையை உங்கள் வீட்டுக் காம்பவுண்டு சுவர் தாண்டி உங்கள் ஏரியாவில் போடுவோம்.
- பொது இடங்களில் கண்ட இடத்தில் துப்புவோம். வெத்தலை, குட்கா, பான்பராக் எல்லாம் குதப்பியும் துப்புவோம். சுவத்துல எல்லாம் துப்பி டிசைன் போடுவோம்.
- (இங்கு நான் திரு. சுஜாதா அவர்கள் “கற்றதும் பெற்றதும்” ஆனந்த விகடனில் எழுதி வந்த போது ஒன்றில் இதைப்
பற்றி எழுதியது எனக்கு நினைவுக்கு வருகிறது. எனக்கு அதே வார்த்தைகள் நினைவில்லை
ஆனால் அதன் அர்த்தம் நினைவுள்ளது. நம்மவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது ரோட்டில்
குப்பையை எறிவதோ, துப்பவோ செய்வதில்லை. டாலரில் அபராதம் கட்ட வேண்டிவரும். ஆனால், இங்கு விமானத்திலிருந்து இறங்கி,
செக்கிங்க் முடிந்து தாண்டியதுமே நம்மவர் குப்பையை எறிவார்கள், துப்புவார்கள்
என்று குறிப்பிட்டிருந்தார்.)
- பஸ்ஸில் செல்லும் போது ஜன்னல் வழியாகத் துப்புவோம். அது உங்கள் மேல் விழுந்தால் கழுவிக் கொள்ளுங்கள்.
- பொது இடங்களில் நாங்கள் வரிசையில் நிற்க மாட்டோம். நின்று பழக்கமில்லை. இடையில் நுழைந்து, நொண்டிச்சாக்கு ஏதாவது சொல்லி முந்திக்கொண்டு முதலில் போய் நிற்போம். இல்லையானால் தனியாக ஒரு வரிசை உண்டாக்கி குழப்பத்தை உண்டு பண்ணுவோம்.
- எங்கள் வீட்டு ஃபங்ஷன் என்றாலும், கோயில் திருவிழாவானாலும், அரசியல் மீட்டிங்கானாலும் நாங்கள் ஸ்பீக்கர் போட்டு அலற விடுவோம். பட்டாசு கொளுத்துவோம். கொட்டு அடிப்போம். உங்களால ஃபோன்ல கூட பேசமுடியாத அளவு. அவ்வளவு ஏன் உங்கள் வீட்டிற்குள் கூட பேசிக்கொள்ள முடியாத அளவு காதைக் கிழிப்போம். உங்கள் ஃபோன் செலவு அப்படியாவது குறைகிறது இல்லையா?
- பரபரப்புச் செய்தி கொடுக்க வேண்டி யாரைப்பற்றியும் தாறுமாறாக ஊடகங்கள் வாயிலாக எழுதுவோம், கிழிப்போம், ஏசுவோம், மேடை போட்டு பேசுவோம். எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம். (பேச்சு சுதந்திரம் இருக்கும்போது ஏனுங்க நமக்கு ஃபோன் பில் மட்டும் வருது?)
- டிக்கெட்டே வாங்காமல் without ல் கூட நாங்கள் பயணம் செய்வோம்.
- ரோட்டில் மேடு, பள்ளம், குண்டு, குழி எல்லாம் இருக்கும், ஏன் என்றால், மக்களுக்கு வாழ்க்கையில் மேடு,
பள்ளம் எல்லாம் இருக்கும், இதெல்லாம் சகஜமப்பா என்றத் தத்துவத்தை பின் எப்படி உணர்த்துவதாம்? Practical
Learning
- மழை பெய்யும் சீசன் என்று தெரிந்தாலும் ரோட்டில் தண்ணி பைப், கேபிள் போட, சாக்கடை, ட்ரெயினேஜ் என்று குழி வெட்டி, மூடாமல் போட்டு வைப்போம். ட்ரெயினேஜ் சரி பண்ணிவிட்டு அதை மூட மாட்டோம். அப்பத்தானே 4 பேரு அதுல விழுந்து பேப்பர்ல நியூஸ் வரும்.
- ரோடு போடுவோம். ஆனால், ஒரே மழையில் அந்த ரோடு பிச்சுக்கொள்வது மாதிரிதான் போடுவோம். அப்பத்தானே வருஷா வருஷம் ரோடு போட்டு சம்பாதிக்க முடியும்.
- நோட்டுக் கொடுத்தால் உங்கள் வேலை எளிதாக முடியும். இல்லை என்றால் என்ன, இழுபறிதான். உங்கள் சொத்து, நிலம் எல்லாம் சிலசமயம் உங்களுக்கே கூடத் தெரியாமல் காணாமல் போய்விட வாய்ப்புண்டு.
- பொது சுகாதார வாழ்கயைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எங்கள் வாழ்கையைப் பற்றியும், நலத்தைப் பற்றியும் யோசிக்கவே நேரம் செலவாகி விடுகிறது. இதில் ஊர் நலம் எங்கு வரும்?
- லாபம் பார்க்க உணவுப் பொருட்களிலும், காய்கறிகளிலும், பழங்களிலும் எப்படிப்பட்ட விஷத்தையும் தெளிக்கத் தயங்கமாட்டோம்.
- படிக்காமல், பரீட்சை எழுதாமலேயே நாங்கள் டிகிரி கூட வாங்கிவிடுவோம். ஏன் PH.D பட்டம் கூட வாங்கிவிடுவோம், வசூல் ராஜா M.B.B.S. போல.
- எங்கள் கையில்தான் கல்வியும். கல்வியும் வியாபாரம்தான். பணம் இருந்தால் கல்வி. பணம் இருந்தால் நல்ல ஆஸ்பத்ரியில் நல்ல ட்ரீட்மென்ட்.
- நாங்கள் சாதி அடிப்படையில்தான் கல்வி, வேலை எல்லாம் கொடுப்போம். உங்களுக்கு எந்தச் சாதி உங்களைக் காப்பாற்றும் என்று நினைக்கின்றீர்களோ எந்த ஜாதி வேண்டுமோ அதற்கு சான்றிதழ் பெற்று அதைப் போட்டுக் கொள்ளுங்கள்.
- நாங்கள் ஜாதியையும், மதத்தையும், தெய்வத்தையும் வைத்து எங்கள் மண், பெண், மற்றும் பொன் ஆசையையும் தீர்த்துக் கொள்வோம். நாங்கள் சாமியார்கள் என்போம். ஜாதி, மதம் எல்லாம் சொல்லி கலவரம் செய்வோம். கொலை கூடச் செய்வோம். கொலை செய்து விட்டு அங்கேயே கூட நிற்போம். எங்களை யாரும் பிடிக்க மாட்டார்கள். மேல்ஜாதி, கீழ் ஜாதி என்போம். மனித ஜாதி என்பதை மறப்போம். மனித நேயத்தை மறந்து விடுவோம். ஆனால் பேசுவது என்னவோ “Secular India” என்று.
- நாங்கள் போராட்டங்கள் நடத்துவோம். ‘ஹர்த்தால்’ என்போம். ‘பந்த்’ கடை அடைப்பு என்போம். வண்டிகள் ஓடாது என்போம்.
பல பொதுச் சொத்துக்களை எரிப்போம். பொது வாழ்க்கைக்கு ப்ரச்சினை பண்ணுவோம். எங்கள் சுதந்திரம்.
- பெண்களைக் கூட்டமாகக் கற்பழித்து, ஆயுதங்களால் குத்தி, உடல் உறுப்புகளை சிதைப்போம். சிதைத்து காமத்தை மாத்திரம் அல்ல ஆத்திரத்தையும் தீர்த்துக் கொள்வோம். அப்படியும் அப்பெண்கள் சாகாமல் எங்களுக்கெதிரே வழக்குத் தொடர்ந்தால் அவர்களை விலை மாதுக்கள் என்று நீதிமன்றத்தில் முத்திரைக் குத்தி நிரூபிப்போம். கைது செய்யப்பட்டால் போலி சான்றிதழகளை காண்பித்தும், மெட்சுர் ஆக வில்லை என்று காண்பித்தும், மிகப் பெரிய? வக்கீல்களை வைத்தும் வாதாடி கேஸ் ஜெயிப்போம். பெண் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. மிருகத்தனமான வெறியைத் தணிக்க 3,4 வயது பெண் குழந்தைகளையும் நாங்கள் பாலியல் பலாத்காரம் செய்வோம்.
- ரௌடியிஸம் பண்ணுவோம். கையில் துப்பாக்கி, கத்தி, கபடா, அறுவா, எல்லாம் தூக்குவோம், தலைவர்களையும் தூக்குவோம், சாதி சனங்களையும் வெட்டுவோம், பொது மக்களையும் குத்துவோம். கொள்ளை அடிப்போம். வெளிநாட்டவர்கள் தரும் பணத்தைப் பெற்று தாய்நாட்டை தகர்க்கக் கூடிய எதையும் செய்வோம். ஆனால், நாங்கள் சுதந்திரமா நடமாடுவோம். சட்டம் எங்கள் கையில்.
- நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பணம், சொத்து சேர்ப்போம் ஆனால், கணக்கு காண்பிக்க மாட்டோம், வரி கட்டமாட்டோம். கறுப்பாகத்தான் இருக்கும், எங்கள் மனது வெள்ளை என்போம் ஆனால் வெள்ளை கறையுடன்தான் இருக்கும். கறை நல்லது. எதற்கையா வரி? கட்டபொம்மன் வசனத்தைப் பேசுவோம்...
- நாங்கள் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்போம். அந்தப் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்வோம். ஊழல் பண்ணுவோம். உங்கள் பணம் அயல்நாட்டு வங்கிகளில் ரகசியமாக எங்கள் பேரில் தில்லு முல்லுவாக சௌக்கியமா இருக்கும்.
- நாங்கள் பொய் சொல்லி பாஸ்போர்ட், எல்லாம் வைத்துக் கொள்வோம். எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் பயணம் செய்வோம். கள்ளக் கடத்தல் செய்வோம். கள்ளப் பணம் அச்சடிப்போம். கள்ளப் பணம் புரளச்செய்வோம்.
- இலட்சக் கணக்கானவர்கள் கண்டு களிக்க விளயாடும் நாங்களே பந்தயக்காரர்களின் வேண்டுகோளையும், அவர்கள் தரும் பணத்தையும் பெற்று வெற்றி தோல்விகளை தீர்மானிப்போம்.
- சட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தாத சுதந்திர நாடு?! ஆனால், அதே நாடு நலிந்தோரை அதே சட்டத்தால் இறுக்கிவிடும். நிஜக் குற்றவாளிகள் வெளியில் ‘சுதந்திரமாக’ சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
- உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒரு பெண் நடு ராத்திரியில் தைரியமாக, நகைகளுடனோ, பணத்துடனோ நடமாட முடிந்தால் அன்றுதான் சுதந்திரம். பெண் என்ன? ஆணுக்கே உத்தரவாதம் இல்லையே.
- நமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா? நமக்கு சுதந்திரம் கிடைத்தது எப்போது? உங்களுக்கு நினைவு இருக்கிறதா?
- ஆம் சரிதான். நிஜமாகச் சொல்வதென்றால் நம்நாடுதான் மிக மிகச் சுதந்திரமான நாடு. இஷ்டத்துக்கு வாழ முடிகிறது. இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால், இந்தப் பதிவு பத்தாது.
- சுருங்கச் சொன்னால் நம் நாடு உருப்படப் போவதில்லை.
****************************************
இப்படி, நம் இஷ்டப்படி மற்றவர்களுக்குத் துன்பம்
உண்டாக்கும் காரியங்களைச் செய்யும்போது நாம் நம் இன்பத்தையும் சுதந்திரத்தையும்
பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். அடுத்தவர்களின்
சுதந்திரத்தையும் மதித்து அவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் எல்லாவற்றையும் செய்ய
வேண்டும் என்ற எண்ணம் கல்வி அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும்
இருக்க ஏண்டிய ஒன்றுதான். ஆனால், சுயநலம்
காரணமாக கல்வியறிவு உள்ளவர்கள் கூட அதிகமாக மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்காமல்
பல பிரச்சினைகளுக்கும் காரணமாகிறார்கள்.
எனவே எழுத்தாளர்களும், ஊடகங்களும், திரைப்படங்களையும் மற்றும் தொலைக்காட்சி
நிகழ்சிகளை உருவாக்குபவர்கள்ம், தங்கள் படைப்புகளில் மற்றவர்களின் சுதந்திரத்தைப்
பாதிக்காமல் நம் சுதந்திரத்தைப் பாதிக்காமல் நம் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான
அவசியத்தை வலியுறுத்த வேண்டும். அரசும்,
அதிகாரிகளும், நீதிமன்றங்களும், காவல்துறையினரும் சட்டத்தை மீறுபவர்கள் யாராக
இருந்தாலும் எந்தவித பாரபட்சமும் பாராமல் அவர்களைத் தண்டிப்பதில்
தவறக்கூடாது. பொதுமக்களும், சட்டங்கள்
மீறப்படும் சந்தர்ப்பங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு
ஆதரவு கொடுப்பதற்கும் தயங்கக் கூடாது.
‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’. பள்ளிகளில் சிறு வகுப்புகளில் இருந்தே பாடதிட்டத்தில்
நல்லொழுக்க வகுப்பை உட்படுத்தி கடமை, கண்ணியம், கட்டுப்பாடுதான் ஒரு
மனிதனுக்கு இன்றியமையாதது என்றும், அடிப்படை, தலையாய குடிமை உணர்வையும்,
அறிவையும் (‘civic sense’ ) மனதில் பசுமரத்தாணி போல பதியும்படி போதிக்க
வேண்டும். இது பள்ளிகளுக்கு மட்டுமல்ல,
ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவையான கடமை என்பதே என் கருத்து. இக்கருத்துக்களை எல்லாம் பாடம் போல் அல்லாமல்
இயல்பான முறையில், நல்ல கதைகள், நீதிக்கதைகளின் மூலம் வளர்க்கலாம். இங்கு, எழுத்தாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கதை சொல்லுதலின் அவசியம் பற்றி மிக அருமையாக அவரது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதை இங்கு பதிய விரும்புகிறேன். மேலும்,
கண்கள் காணும் காட்சிகள் மனதில் ஆழப்பதிவதால் இக் கருத்துக்களை சிறு சிறு
ஆவணப்படங்களின் மூலமாகவும் (Visual
Aids) சிறிய வகுப்புகளில்
இருந்தே கற்பிக்க வேண்டும். இவை எல்லாம், குழந்தைப் பருவத்திலிருந்தே சுயமாகச்
சிந்திக்கும் திறனையும், பகுத்தறிவுச் சிந்தனைத் திறனையும் வளர்க்கும் விதத்தில் இருக்க
வேண்டும். (Lateral Thinking).
ஒரு நாட்டின் வருங்காலச் சிற்பிகள் என்று
கருதப்படும் ஒவ்வொரு குழந்தையும், நாட்டின் நல்ல குடிமகனாக உருவாவதில்,
பெற்றோர்களுக்கும், பள்ளிகளுக்கும், ஏன் கல்லூரிகளுக்கும் பெரும்பங்கு இருப்பதோடு,
ஒரு தலையாய கடமையும் கூட என்பது எனது கருத்து.
இப்படி சமூகத்திலுள்ள அனைவரும் முயன்றால் முடியாதாது எதுவும் இல்லை. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரத்தானே
செய்யும்!
ஒரு இந்திய பிரஜைக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதென்று இப்பத்தான் புரியுது ,சுதந்திரக் காற்றை சுவாசிக்காமல் இருக்கிறோமேவென்று வருத்தமாய் இருக்கிறது !
பதிலளிநீக்குநன்றி! பகவான்ஜி!. அளவுக்கு மீறினால் அமுதும் விஷம்தானே! அது போலத்தான் இந்த சுதந்திரமும். அதுவும் கட்டற்ற, சட்டமற்ற சுதந்திரம். ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தைப் பாதிக்கும் அளவிற்கு. மது அருந்துபவன் எப்படி மனம் மக்கி கண்டதைச் செய்கிறானோ அது போல்தான் இதுவும். வாசித்த உங்களுக்கே இந்த சுதந்திரத்தை சுவாசிக்க ஆசை வந்து விட்டதா!!! சுதந்திரக் காற்றை சுவாசித்துத்தான் பாருங்களேன்!!!! வாழ்க! இந்திய சுதந்திரம்!! மிக்க நன்றி பகவான்ஜி ! உங்கள் பின்னூட்டத்திற்கு.
பதிலளிநீக்குதலைப்பும் தலைப்பைச் சார்ந்த இத்தனை விஷயங்களையும் படிக்கும் போதே மூச்சு முட்டுதே இப்படியான சமூகத்தில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது தான் சுதந்திரமா?
பதிலளிநீக்கு