நானும் என் சக ஆசிரியை மீராவும் போஸ்ட் ஆபீஸில் R.D.  பணம்
வாங்கக் காத்திருந்த போது, மீரா ஸ்டாம்ப் கொடுக்கும் கவுன்டரில் நின்றிருந்த
அந்தப் பெண்ணிடம் அவசரமாகப் போய்,
     “ஜானு நடந்ததெல்லாம் கேள்விப்பட்டேன்.  சம்பவம் நடந்தது தீபாவளி லீவுக்கு நடுவில
ஆனதுனால வரமுடியலை.  ரெண்டுமுறை ஃபோன் பண்ணியும்
நீ கிடைக்கல.  இப்படியொரு பேரிடி உனக்கு வரும்னு
எதிர்பாக்கவேயில்ல”
     கண்களில் நீர் கசிந்தாலும் ஜானகி, “இப்ப நான் எதைப் பத்தியும்
யோசிக்கறதுல்ல.  என் குழந்தைங்கதான்.  இது போலத்தான் நான் அந்த ஆளையும் கண்ணை மூடி
நம்பினேன்.  என் மனசில வேற எதுக்குமே
இடமில்லாத அளவுக்கு அந்த ஆளை மனசு முழுசும் வைச்சிருந்தேன்.  இப்ப எனக்கு அந்த ஆளோட பிரிவுல வருத்தமே இல்ல.
அந்த ஆளோட சாவும், சாவுக்கான காரணமும் ஒரே நேரத்துல தெரிய வந்ததுனால எனக்கு
உண்மையிலேயே கொஞ்சம் கூட வருத்தமில்ல. ஒரு வேளை அந்த ஆள் சாகாம இருந்துருந்தா
இதெல்லாம் தெரிஞ்ச பிறகு ஏதாவது ஒரு நிமிஷத்துல நான் சாகணும்ற முடிவு
எடுத்துருப்பேன். அப்படி நடந்திருந்தா என் குழந்தைங்க அனாதையா
போயிருந்திருப்பாங்க.  அந்த ஆள் அடுத்த
மாசமே யாராவது ஒருத்தி பின்னால போயிருப்பான். 
இப்படிப்பட்ட ஒரு விஷப் பாம்ப உயிருக்கு உயிரா நேசிச்சு நம்பி வாழ்ந்ததை
நினைக்கும்போது எனக்கு என் மேலயே அடங்காத கோபமும் வெறுப்பும் வருது.”  இப்படிப் பலதும் பேசி பிரிந்தனர்.
     “விஜயா, இப்ப போனது யார்னு உனக்குத்
தெரியுமா? P.M.H.S  டீச்சர் ஜானகி. 
இதே ஸ்கூல்ல +2 டீச்சர் வரதராஜன்தான் இவளோட புருஷன்.  போன மாசம் ஒரு பெண்ணைக் கற்பழிக்க முயற்சி
பண்ணி, பிறகு தற்கொலை செஞ்சுகிட்டார்னு பேப்பர்ல எல்லாம் நியூஸ் வந்துச்சே.  அதே ஆள்தான். 
ஜானுவைப் பாத்தல்ல.  அவளுக்கு என்ன குறைச்சல்?  இந்த ஆம்பளங்களே இப்படித்தான்.  கிளி மாதிரி ஒரு பொண்டாட்டி இருந்தாலும் ஏதாவது
ஒரு குரங்கு பின்னாடி போயி இப்படி செறுப்படி வாங்கி அசிங்கப்பட்டு கடைசில
ஆளுங்களோட முகத்தப் பாக்க பயந்துகிட்டு தற்கொலை செஞ்சுக்கிறானுங்க. அப்படி
என்னதான் சுகமோ?  எவ்வளவு
படிச்சிருந்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காம வாழ்க்கையையே பாழாக்கிக்கறாங்க.  அந்த ஆள் சாகர வரைக்கும் ரொம்ப நல்ல
மனுஷன்.  கௌரவமானவருதான்.  இதுவரை யாரும் அந்த ஆளைக் குத்தம் சொல்லிக்
கேட்டதேயில்ல.  இப அந்த ஆளோட சாவுக்கு
அவரோட சொந்த பொண்டாட்டியே கூட வருத்தப்படலைனா பாத்துக்கயேன். எப்படி ஒரு பரிதாபமான
சாவு.  ஒரு குடம் பாலுல ஒரு துளி விஷம்
விழுந்து அது முழுசுமே விஷமாறது போல, அந்த ஆளோட நல்ல குணம் எல்லாம் அந்தக் காமப்
பேய் விழுங்கி ஏப்பம் விட்டுருச்சே!. சே!”
     “யாரு அந்தப் பொண்ணு?  கூட வேல பாக்கற டீச்சரா?” - இது நான்.
     “அதெல்லாமில்ல பக்கது வீட்டுக்குப் புத்சா
குடித்தனம் வந்த ஒருத்தி, அந்த ஆளொட பழைய ஒரு ஸ்டூடெண்டாம்.  கல்யாணம் ஆனப்புறமும் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்
படிக்கிறாளாம்.  அந்த ஆளு ‘statistics’ எடுத்தாராம்.  சம்பவம் நடந்த அன்னிக்கு அவளோட புருஷன் இல்லாத
நேரம் பாத்து அவளோட வீட்டுக்குப் போய் கற்பழிக்க முயற்சி செய்ய, எதிர்பாராம அவ
புருஷன் வந்து அந்த ஆளை அடிச்சு, உதச்சு அண்டர்வெயரோட வெளியே தொரத்த, நேரா
வீட்டுக்குப் போன மனுஷன் கயித்துல தொங்கிட்டான். அந்தப் பொண்ணு அந்த அதிர்ச்சியில
மனநோயாளியாகி இப்ப ஆஸ்பத்திரியிலயாம்.”
           ***********************************************************
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்.  மெய் என்பது நாம் கண்ட கேட்ட சிலவற்றுடன்  கேட்காத, காணாத பல சம்பவங்களும்
உள்ளடங்கியதே.  அன்றைய தினம் காலக்
கண்ணாடியில் பிரதிபலித்த காலம் கடந்து  காணாமற்போன
உண்மைகள்.  உண்மை தேடும் ஊமை
நெஞ்சங்களுக்காக.
          
***********************************************************
     கையிலுள்ள துண்டுப் பேப்பரை
மீண்டும் பார்த்தார் வரதராஜன்.  அதில்
எழுதியிருந்தது 12 மணி.  கைகடிகாரத்தில்
மணி 11 a.m. தான் ஆகியிருந்தது.  இன்னும் 1 மணிநேரம் இருக்க, என்ன செய்ய என்று
யோசித்து, பழைய ஆல்பங்களை எடுத்து புரட்டுகிறார். 
கல்யாண ஆல்பம், குழந்தைகளின் தனி ஆல்பம், டூர் ஆல்பம், இப்படி
ஒவ்வொன்றாய்ப் புரட்டி அந்த இனிய நாட்களை அசை போட்டார். எல்லாம் முடித்த பின்
வாச்சைப் பார்த்தபோது மணி 11.45 a.m. ஆகியிருந்தது.  அமுதாவுடன் தனக்கு முன்பு கிடைத்த சுகமான நிமிடங்களை நினைத்தபோது உடலும்,
மனமும் சில்லிட்டது.  பொறுமையிழந்து
ஃபோனைக் கையிலெடுத்து அமுதாவின் வீட்டு நம்பரை அமர்த்தினார்.  எடுத்தது அமுதா.
     “அமுதா தாக்குப் பிடிக்க
முடியல.  இப்பவே வரட்டுமா”
     “நான் நினைச்சேன். நீங்க சொன்ன
மாதிரி ஒண்ணோ, ரெண்டு தடவையோட சமாதானப்படுவீங்கன்னு.  ஆனா, இப்படி நாளுக்கு நாள் ஆவேசம் உங்களுக்குக்
கூடுது. எனக்கென்னவோ பயமா இருக்கு, இது எதுல கொண்டு போய் விடுமோனு?”
     “இதுவரைக்கும் சமாதானமா நமக்கு ஒரு
அரை மணி நேரமாவது கிடச்சிருக்கா? இன்னிக்கு எந்த தொந்தரவுமில்லாம, என்னிஷ்டப்படி
நடந்துக்க எனக்கு ஒரு அரை மணி நேரம் மட்டும் தந்தால் போதும்.  அப்பத்தான் இந்த ஆவேசம் ஓரளவு தணியும்.  பிறகு நாம் ரெண்டு பேரும் பழையபடி டீச்சர்,
ஸ்ட்டுடென்ட் ஆயிக்கலாம்.  இப்ப மணி 11.50
ஆயிருச்சு.  கிளம்பட்டா”
     “வேண்டாம்னா கேக்கவா போறீங்க, எங்க
வீட்டுக்காரருக்குச் சின்ன சந்தேகம் போல. உங்க பார்வை சரியில்லன்னாரு.”
     “ஐய்யோ! பிரச்சினையாகுமோ அமுதா?
எப்படியோ இன்னிக்கு மட்டும்.  இனி இந்த
ஏற்பாட நிறுத்திக்குவோம்.  வீட்ல வேற
யாரும் இல்லையே?  கேட்டையும், முன்
கதவையும் திறந்தே வை.  யாராவது வீட்டுக்கு எதிர்பாராமல்
வந்திருந்தால், வெளிகேட்டைச் சாத்தி கொக்கி போட்டுடு.  நான் உள்ளே நுழையாமல் நேராக நடந்து போயிடறேன்.” என்றபடி ஃபோனை வைத்தார்.
     வரதராஜனின், ஸ்கூலில் 12 வருடங்களுக்கு
முன் படித்தவள் அமுதா.  அப்போதெல்லாம் அவளை
அவர் மாணவியாக அல்லாமல் வேறு கண்ணில் பார்த்ததேயில்லை.  எப்படியோ, போன வருடம் டெலிஃபோன்ஸில்  வேலை பார்க்கும் குடிகாரக் கணவன் ட்ரான்ஸ்ஃபர்
ஆகி அங்கு வந்ததும், குடும்பத்துடன் இரண்டு வீடு தள்ளி குடிவந்தாள்.  முதன் முதலாக பார்த்தபோதும் வரதராஜனுக்கு
ஒன்றும் தோன்றவில்லைதான். ஆனால், இடையிடையே வீட்டிற்கு வரும்போது அவர் கவனிக்காமல்
இருக்கும்போது வரதராஜனை பார்வையால் விழுங்கினாள். வரதராஜன் கவனிக்கத் தொடங்கியதும்
சிறிய ஒரு புன்முறுவல்.  பிறகு statistics tuition வேண்டும் என்றதும் வரதராஜன் சந்தோசத்தை வெளியே
காண்பிக்காமல், வேறு வழியின்றி சம்மதிப்பதுபோல் சம்மதித்தார். புத்தகங்கள்
கைமாறும்போது விரல்கள் தொட்டன.  40 வயது
வரதராஜனுக்கும் 28 வயது அமுதாவுக்கும் அனாவசியமாக ஷாக் அடித்தது. 
     ஃபோனை வைத்து வாசனைப் பாக்கை
வாயில் போட்டு மென்றபடி நடந்தார். 
பூசையறையில் ஏதோ சப்தம் கேட்க திரும்பிய அவர் சிறிய குத்து விளக்கு சரிந்து
கிடந்தது தெரிந்தது.  அதில் சிறிதாகக் கசிவு
இருந்ததால் ஒரு சிறிய தட்டில் வைப்பது வழக்கம். 
அதனால் எப்போதும் சிறிதாகச் சரிந்து நிற்கும் விளக்கு எப்படியோ விழுந்து
விட்டது.  எடுத்து நேராக வைத்தார்.  மீண்டும் சரிந்தது. பொறுமையிழந்து அதை வெறுமனே
கீழே வைத்து விட்டு விரைந்தார், அமுதாவின் வீட்டிற்கு. 
கேட்டும், கதவும் திறந்து கிடந்தன. உள்ளே சென்றார்.  அமுதா சிரித்தாள்.  கதவை மூடியபின் இருவரும் பெட்ரூமை அடைந்தனர்.
அடுத்த ஐந்து நிமிடங்கள் அவர்கள் இருவரும் உலகை மறந்தார்கள்.  திடீரென காலிங்க் பெல் அடிக்கும் சப்தம்.
திடுக்கிட்ட அவள் வரதராஜனை உதறிவிட்டு கதவை மூடிவிட்டு ஓடினாள்.  கதவைத் திறந்த அவள் திகைத்தாள்.  அவளது கணவன். 
“யாரோட செறுப்பு அது? 
வெளில?”
உடனே அழத் தொடங்கினாள். 
வரதராஜன் வாத்தியார் ஒரு புத்தகம் வாங்க வந்தார்.  எல்லா அறைகளிலும் சென்று நோக்கிய கணவன்,
அவர்களது பெட்ரூமில் பதுங்கியபடி நிற்கும் வரதராஜனைக் கண்டதும் பொறுமை இழந்து,
“உங்கிட்ட படிக்க வர்ர பொண்ணுங்களோட உனக்குப் படுக்கணும்
இல்லையாடா, நாயே!”
முகத்தில் அறைந்து அடித்து, உதைத்து உருட்டினான்.  இடையிடையே வரதராஜன்,
“ப்ளீஸ், வேண்டாம்...நீங்கத் தப்பா
புரிஞ்சுகிட்டீங்க...உங்கக் காலப் பிடிக்கிறேன்..ப்ளீஸ் சத்தம் போட்டு ஆளுகளக்
கூட்டாதீங்க”.
அவரது சட்டை, கைலியைக் கிழித்து உருவினான் அமுதாவின்
கணவன்.  அவள் அழுதபடி நின்றாள்.  பிறகு அவன் அமுதாவை உதைக்கவும், அடிக்கவும்
தொடங்க, அவள் கூச்சல் போட, எங்கிருந்தோ நான்கைந்து பேர் வீட்டிற்குள் நுழைய,
அமுதாவின் கணவன், 
“இந்த ராஸ்கல் யாரும் இல்லாத நேரத்தில் இங்க வந்து இவளைக்
கெடுக்கப் பாத்தான்” என்றான்.
வரதராஜன், “ஐயோ! அப்படியெல்லாம் இல்ல....அமுதாகிட்டயே வேணா
கேளுங்க”  என்றார். கீழே கிடந்த தன் கைலியை
இடுப்பில் சுற்றியபடி, ப்ரிதாபமாக எழுந்து நின்றார். 
அமுதாவின் கணவன், “சொல்லுடி, உண்மையை”  என்றதும்,
அழுதபடி தலையைக் குலுக்கினாள்.
“ராஸ்கல்! உனக்கு இனி என்னடா மானம்” என்றபடி கைலியை உருவிப் பிடித்து வெளியே தள்ள,
அங்கும் பத்து பதினைந்து பேர் இந்தக் காட்சியைக் காணக் காத்திருந்தார்கள்.
வரதராஜன் அவர்கள் முன் அண்டர்வெயருடன், தன்மானமிழந்து எப்படியோ நடந்து
வீட்டையடைந்தவர், கிணற்றில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து தன் பெட்ரூமில்,
குழந்தகளின் தொட்டில் கட்டப்படும் உத்தரத்தில் தொங்கினார்.  அவர் மனதில் கடந்த பத்து நிமிடங்களில் நடந்தவை
மட்டும் அனலாக எரித்தது.  தொங்கியதும்
குழந்தைகளின் முகம் அவர் மனதில் தோன்றியது. 
உடனே, “ஐயோ! அவசரப்பட்டுவிட்டேனே என்று நினைக்கத்தான்
முடிந்தது.  பிறகு ஒன்றும் நினைவில்லை.









 
வணக்கம்
பதிலளிநீக்குகதை நன்றாக உள்ளது.... வாழ்த்துக்கள் தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக மிக நன்றி! நண்பன் ரூபன் அவர்களே! உங்கள் பாராட்டிற்கும்,, தொடருதலுக்கும், முதல் வருகைக்கும் என் மனமார்ந்த நன்றி! இது போன்ற உங்கள் கருத்துக்கள் தான் எங்களுக்குப் புத்துணர்வு! மீண்டும் நன்றி!
நீக்குபடிப்பு சொல்லித் தரும் வாத்தியார்களுக்கு மட்டுமல்ல ,எல்லோருக்குமே படிப்பினை தரும் கதை அருமை !
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கு நன்றி சகோதரி!. உங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!. இது போன்ற கருத்துக்கள்தான் எங்களுக்கு ஊக்கம். நன்றி!
நீக்கு