வியாழன், 21 நவம்பர், 2013

உயிரா? மானமா?



சிந்திக்க வைத்த ஒரு பூதம்!.நம்பள்கி திறந்துவிட்ட பூதம்.  நம்பள்கி சில நாட்களுக்கு முன்பு தன் வலைப்பூவில், ஒரு பாட்டிலில் இருந்து ஒரு பூதத்தைத் திறந்து விட்டது நினைவு இருக்குமே எல்லோருக்கும்? துப்பாக்கி முனையில் நீங்கள். நீங்கள் ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம்.  படு இல்லையேல் சாவு.  Yes or No.  இந்தக் கேள்விக்கு பதில் சொல்பவர்கள், பலவிதமான சிந்தனைகளை மனதினில் ஓடவிட்டாலும் கேள்வி ஒன்றுதான். வாழ்வா? சாவா?  சாகத் தயாராகும் ஒருவர் என்னதான் நியாயங்கள் சொன்னாலும் அவர் தன் உடலை முழுவதுமாக உதறிவிட்டுத்தான் சாகிறார். ஆனால், அதற்காக அவர் சொல்லும் காரணமோ? என் உடலை என் சம்மதத்துடன் தரமாட்டேன் என்பது. கற்பழிக்கப்படும் பெண்களில் பலரும் உயிருக்குப் பயந்த நிலையிலோ, போராடி வலு இழந்த நிலையிலோ, அடியும் உதையும் பட்டு மயங்கிய நிலையிலோதான் ஆணுக்குக் கீழ் படுக்கிறார்கள்.  இங்கு தவறு செய்பவன் ஆண்.  அவனுக்கு இல்லாதக் குற்ற உணர்வு, அவனுக்கு வர வேண்டியக் குற்ற உணர்வு அவசியம் இல்லாமல் பெண்ணுக்கு வர வேண்டுமா?  தன் சம்மதமின்றி, வலுக்கட்டாயமாக தன் வாழ்வில் ஒரு காமப் பிசாசு அதன் உமிழ் நீரைத் துப்பி விட்டது. உடனே அதை வெளியேத் துப்பி, வாயைப் பலமுறைக் கழுவியாகி விட்டது.  என்றாலும் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.  உடலும்தான். ஏதோ குடலைப் புரட்டி வாந்தி வருவது போல். “வேண்டாம்!  அவனுடைய எச்சிலில் ஒரு துளியின் ஒரு சின்ன அளவாவது என் உடலுக்குள் சென்று விட்டது.  இனி இந்த உடல் வேண்டாம்.  இந்த சமூகம் என்னை ஏற்கவும் செய்யாது.  இந்த வாழ்க்கை வேண்டாம். என் அப்பா வேண்டாம். ஏன் அம்மா வேண்டாம். கணவர் வேண்டாம். குழந்தைகள் வேண்டாம்.  இதோ நான் உயிரை விடுகிறேன். இது தான் நடக்கிறது. இதுதான் நடக்க வேண்டும் என பெரும்பான்மையான ஆணகளும் பெண்களும் எதிர்பார்க்கிறார்கள்.
நான் என் இளம் வயதில், உடலுறவை அனுபவ ரீதியில் அறியாது இருந்த கல்லூரி நாட்களில் ஒரு கதை எழுதினேன்.  எங்கள் வலைப்பூவில் இட, தூசி தட்டி எடுத்த சில பழைய கதைகளில் அதுவும் இருந்தது.  வாசித்த நான் அதைக் கிழித்தே போட்டு விட்டேன். கதை சுருக்கம் இதுதான். ஹனிமூன் போகும் கணவனும், மனைவியும். வழியில் கார் பஞ்சராகிறது.  இருள் படரும் நேரம். டயர் மாற்றிக் கொண்டு இருந்த போது வந்த ஒரு ஜீப்பிலிருந்த சிலர் மனைவியைக் கற்பழிக்க முயல, காப்பாற்ற பல வழிகளில் முயன்றும் முடியாத கணவன் வேறு வழி இன்றி, “சுதா மன்னிச்சிரு, என்று மனைவியின் தலையில் ஒரு பெரிய கல்லைப் போட்டுக் கொன்று விடுகிறான். (இச் சிறு துரும்பும் இப்படி பல் குத்த உதவும் என்று நினைக்கவே இல்லை!)  இந்த ஐம்பது வயது வரை நான் கண்டதும், கேட்டதும், வாசித்தவைகளும், புரிந்து கொண்டவைகளும், என்னை, அந்தக் கணவன் சுதாவைக் கொலை செய்ய இப்போது அனுமதிக்க வில்லை. 






சில வருடங்களுக்கு முன்.  காசரகோடு அருகே பேக்கல் கோட்டை( Bekal Fort).   இளம் கணவனும் மனைவியும்.  மாலை நேரம். இருவரும் இருட்டு வரும் வரை கோட்டைக்குள்ளே பல இடங்களையும் சுற்றிப் பார்த்துத் திரும்பும் நேரம். 


திடீரென்று நான்கைந்து இளைஞகள் முன்னால்.  எவ்வளவோ கூச்சல் போட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை.  இருவர், கணவனை அடித்து உதைத்து அவன் கை கால்களைக் கட்டி போட்ட பின் ‘இருவரையும் கொன்று கடலில் எறிந்து விடுவோம் என்று அச்சுறுத்தி அந்தப் பெண்ணைக் கற்பழித்து விட்டார்கள்.  நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலை பாவம் அந்தப் பெண்ணிற்கு.  எனவே இருவரும் தங்களை அன்று இரவு தங்க ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலிலாவது கொண்டு சென்று விடவேண்டும் என முறையிட ‘கல்லுக்குள் கொஞ்சம் ஈரம் இருந்திருக்க வேண்டும். கயவர்கள், பாதிக்கப் பட்டவர்கள் காரிலேயே டவுணில் உள்ள லாட்ஜுக்குக் கொண்டு சென்றனர்.  தந்திரமாகக் கயவர்களை அறைக்குக் கூட்டிக் கொண்டு போய் (இரவு மீண்டும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கூட அந்தக் கயவர்களுக்கு இருந்திருக்கலாம்) அவர்களை அறையில் ஆக்கிய பின், வெளிக் கதவைப் பூட்டி அந்தப் பெண் கூச்சல் போட்டு ஆட்களைக் கூட்டினார். போலீஸ் வந்தது.  கையோடு கயவர்கள் பிடிபட்டார்கள்.  நாளிதழ்கள் பாதிக்கப்பட்ட்வர்களின் பெயரை வெளியிடாம்ல் அவர்கள் கண்ணியத்தை வெளிப்படுத்தினார்கள்.  பாதிக்கப்பட்ட அந்த கணவனும் மனைவியும் இன்றும் அந்தப் பயங்கரமான நாளை மறக்க முயற்சி செய்து வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.


அதுபோல் சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த மற்றொரு சம்பவம்.  பகல் 1 மணி.  பரபரப்பான தெருவில் உள்ள ஒரு துணிக் கடை. திடீரென ஷட்டர் இறக்கப் படுகிறது.  கத்தியுடன் 4 பேர் உள்ளே.  வெளியே ஒருவன். யாரையும் உள்ளே விடாமல் இருக்க ஏதாவது காரணம் சொல்வதற்காக.  கடையில் இருந்த பத்து பதினைந்து பேரில், ஒரு இளம் பெண்ணின் கையைப் பிடித்து கடைக்குள்ளேயே மறைவான ஒரு இடத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். கூச்சல் போட்டவர்களை கத்தியால் மிரட்டியும் அடித்தும் மௌனமாக்கினார்கள்.  ஆனால், ஒரு 45 வயதுள்ள தாய், அழுவதை நிறுத்தாமல் அந்தக் கயவனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள். (வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் பேரிடி.) கெஞ்சினாலும் பலனில்லை என்று தெரிந்ததும் “என்னை உபயோகித்துக் கொள் என் குழந்தையை விட்டு விடு என மன்றாட, அந்தக் 'கல்லுக்குள்ளும் கொஞ்சம் ஈரம்' இருந்த்திருக்க வேண்டும்.  அவனது காமப் பேய்க்கு அந்தத் தாய் தீனி போட்டாலும் போதும்னு நினைத்திருப்பான் போலும்.  அந்த சம்பவத்தைப் பற்றி வாசித்த போதும், இப்போதும்  நான் இறைவனிடம் வேண்டுகிறேன், “இறைவா அவர்களுக்கு விபரீத சிந்தனைகள் ஏதும் வராமல், நடந்ததெலாம் ஒரு பெரும் விபத்து என்று எண்ணி வாழச் செய். விவரிக்கப்பட்ட இரு சம்பவங்களிலும், பெண்கள் எடுத்த முடிவு அந்தச் சந்தர்பத்தில் எடுக்கப் படவேண்டிய முடிவுதான். 

வாகன விபத்தில் காயமடையும் போது ஒருவரை எப்படியேனும் காப்பாற்றி அவர் மனதுக்கும் உடலுக்கும் தெம்பேற்றி அவரை மீண்டும் அவரது வாழ்க்கையைத் தொடரச் செய்வது போல்,  இது போன்ற சம்பவங்களையும் ஒரு விபத்தாக நினைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் இந்தத் தவறு செய்யும் கயவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுக்க முடியும்.  இது போன்றத் தவறுகளைச் செய்யும் கயவர்களுக்கு, துணிச்சல் தருவது, அவர்களுக்கு இறையாகும் பெண்கள், ஒன்று, தற்கொலை செய்து கொள்வார்கள் இல்லையேல் வெளியே சொல்லாமல் நான்கு சுவர்களுக்கு இடையே வாழ்வை வாழ்ந்து தீர்ப்பார்கள் என்ற எண்ணம் தான்.  நம்பள்கியும் தன்னுடைய பதிவின் மூலம் சொல்ல வருவது ஒருவேளை இந்தக் கருத்தாக இருக்கலாம். உயிரா, மானமா என்றக் கட்டம் வரும் போது உயிர்தான் பெரிது என்ற யாதாத்தமான முடிவை எடுக்கத் தயங்கக் கூடாது.


6 கருத்துகள்:

  1. 'ரேப்பை தடுக்க முடியாவிட்டால் என்ன செய்யவேண்டும்' என்ற என் இடுகையை உடனே வெளியிட்டால் கொஞ்சம் சலிப்பா இருக்கும் என்று போடவில்லை. அடுத்த பதிவு அதான். உங்கள் பதிவுடன் ஓரிரு கருத்துக்கள் ஒத்துப்போனாலும் என் இடுகை இந்த திசையில் இல்லை! வேறு மாதிரி இருக்கும்.
    நல்ல பதிவு!
    த.ம.+1

    பதிலளிநீக்கு
  2. நன்றி! நன்றி! வாசிப்பிற்கும், வோட்டிற்கும். உங்கள் வித்தியாசமான, of course சிந்திக்க வைக்கும், இடுகையை மிக மிக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் !

    பதிலளிநீக்கு
  3. # உயிரா, மானமா என்றக் கட்டம் வரும் போது உயிர்தான் பெரிது என்ற யாதாத்தமான முடிவை எடுக்கத் தயங்கக் கூடாது.#
    இதுதான் எனக்கும் சரியாகப் படுகிறது ...உங்களுடன் நானும் நம்பள்கியின்அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்
    த.ம +1

    பதிலளிநீக்கு
  4. #உயிரா, மானமா என்றக் கட்டம் வரும் போது உயிர்தான் பெரிது என்ற யாதாத்தமான முடிவை எடுக்கத் தயங்கக் கூடாது.#
    எனக்கும் இதுதான் சரியென்று படுகிறது !
    த ம +1

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும், வோட்டிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி பகவான்ஜி! என்னுடன் எழுதும் எனது நண்பர் பெண். அவருமே இது தான் சரி என்ற கருத்தை உடையவர்!! அப்படி யதார்த்தமாக இல்லையென்றால் பெண் population குறைந்து விடுமோ?!!! இது எப்படி?!!

    பதிலளிநீக்கு
  6. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

    பதிலளிநீக்கு