நம் சகோ மதுரைத் தமிழன் இந்த மருந்தைக் குறித்த ஒரு நல்ல அறிமுகப் பதிவு போட்டிருந்தார். நீரிழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லும் நிலைக்கு
உள்ளான நம் நாட்டிற்குத் தேவையான ஒன்றுதான், நமது மத்திய அரசின் CSIR சமீபத்தில் வெளியிட்ட BGR 34 எனும் நீரிழிவு நோய்க்கான/ஆண்டி டயபட்டிக்
ஆயுர்வேத மருந்து. நல்ல மருந்தாகவே இருந்தாலும் அதற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.
இந்த மருந்தைப் பற்றி
அறிந்ததும் என் மகன் கேட்ட கேள்விகள். இதனை மனிதர்களிடம் உபயோகித்துப் பார்த்தார்களா? எத்தனை பேரின் சுகர் லெவல் குறைந்தது. ஆய்வு நடத்தப்பட்டதா?
எந்த ஒரு மருத்துவம் பற்றிய ஆய்வும் பல நிபுணர்களின் விவாதங்களுக்கு
உட்படுத்தப்பட்டப் பிறகே, அதுவும் வெளிப்படையாக அந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு
அது பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே வெளியிடப்பட வேண்டும். இதைப் பற்றிய ஆய்வுப்
பேப்பர்கள், விவாதப் பேப்பர்கள் இருக்கிறதா? என்றும் கேட்டான்.
நல்ல கேள்வி. நான்
கூகுளில் தேடியவரை நம்பள்கி, மதுரைத் தமிழனின் தளத்தில் கொடுத்திருந்த லிங்க் மட்டுமே
கிடைத்தது. தகவல்கள் இருந்தனவே அல்லாமல், ஆய்வுப் பற்றிய விரிவான குறிப்புகள்
எதுவும் இல்லை. ஒரு வேளை என் அறிவுக்கு எட்டவில்லையோ என்றும் தெரியவில்லை.
நம்பள்கி அவர்கள்
கொடுத்த லிங்கில் நான் அறிந்தவை, இந்த மருந்து ஒரு குளிகை ரூ 5 என்றாலும், 2
காலையிலும், 2 மாலையிலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
அப்படியானால் ஒரு நாளைக்கு ரூ 20 செலவாகும் இது மட்டும் எடுத்துக் கொண்டால்.
அலோபதி மருந்துடன் எடுத்துக் கொண்டால் இன்னும் ரூ 500 கூடலாம். அப்படிப்
பார்க்கும் போது இந்த மருந்து விலை குறைவு என்று சொல்வதற்கில்லை.
பக்க விளைவுகள்
இருக்காது என்று சொல்லுகின்றார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால், அலோபதியிலும்
பக்க விளைவுகள் என்று பெருவாரியாகச் சொல்லுவதற்கில்லை. மெட்ஃபார்மின் வகைகள் ஒரு
சிறிய வயிறு உப்பலை ஏற்படுத்துகிறது என்று பொதுவாகவே சொல்லப்படுகிறது. எனக்கும்
உண்டு.
முதலில் நாம் அறிய
வேண்டியது என்னவென்றால், குளுக்கோஸ் டாலரன்ஸ் GTT. ஒரு சில நீரிழிவு நோய்
மருத்துவமனைகள், மருத்துவர்கள் மட்டுமே இந்தச் சோதனையைச் செய்யச் சொல்லுகின்றனர். இதைக்
கண்டறிந்தால் சர்க்கரையை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் சக்தியைப் பெற்றிருக்கிறதா, எவ்வளவு,
நாம் நீரிழிவு நோய்க்காரரா, நாம் நீரிழிவு நோய் வரும் வட்டத்திற்குள் சிக்கி இருக்கிறோமா
என்பது தெரிந்துவிடும்.
ஆனால் பல மருத்துவர்கள், மருத்துவமனைகள்
வெறும் வயிற்றிலும், சாப்பாட்டிற்குப் பிறகு 1 ½ , 2 மணி நேரத்திற்குப் பிறகான பரிசோதனையைச்
செய்யச் சொல்லுகின்றனர். இந்தச் சோதனை தற்காலிகமானதே. இதை வைத்து ஒருவரை நீரிழிவு நோய்க்காரார்
என்று தீர்மானிக்க முடியாது. ஆனால், வரும் வாய்ப்பு உள்ளதா என்று ஓரளவு யூகிக்கலாம்.
நீரிழிவு நோய்க்காரார்கள் இந்தப் பரிசோதனையை நன்றாக டபாய்க்க வழி உண்டு. டபாய்க்கவும்
செய்கிறார்கள். இது தங்களையே தாங்கள் ஏமாற்றிக் கொள்வதாகும்.
அடுத்து 3 மாத சர்க்கரை அளவு. இதையும் ஒரு சிலர்தான் பரிந்துரைக்கிறார்கள். இதுவும்
முக்கியமான பரிசோதனை. நாம் மூன்று மாதங்களில் செய்த திருட்டுத்தனங்கள் தெரிந்துவிடும்.
ஆனால், இதையும் டபாய்க்கலாம் அதற்கான சூத்திரங்கள் இங்கு பொதுவெளியில் பேச முடியாது.
அது நல்லதல்ல. இதுவும் தங்களையே ஏமாற்றிக் கொள்வதாகும்.
ஒவ்வொருவருக்கும் இன்சுலின் சுரப்பும், மெட்டபாலிசமும் வேறுபடும். ஒரு சிலருக்கு என்னதான் இன்சுலினே எடுத்துக் கொண்டாலும், குறைந்து கூடி என்று வேரி ஆகும். இன்சுலின் டிப்பெண்டன்ட் ஆகாமல் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கே கூட ஒருவர் மூன்று வேளை, ஒரு சிலர் இரு வேளை, ஒரு சிலர் ஒரு வேளை என்று சாப்பாட்டுடன், சாப்பிட்ட பிறகு, சாப்பிடும் முன், 1/2 மணி நேரம் முன், பின் என்று எத்தனையோ இருக்கிறது.
ஒவ்வொருவரது வாழ்க்கை முறையும் கூட இதில் உட்படும். பலரும் எனர்ஜி பர்ன் செய்ய எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் வெறும் மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டு, உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல்,
இல்லை உடற்பயிற்சி செய்தாலும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், “நான் சர்க்கரை நோயாளி”
என்றும் "எனக்குச் சர்க்கரை குறையவே மாட்டேன் என்கிறது” என்றும் பெருமையாகச்
சொல்பவர்களையும் பார்க்க நேரிடுகிறது.
இப்படி இருக்க இந்த மருந்து எல்லோருக்கும்
பொதுவாக, ஒரே அளவாக எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படி எடுத்துக் கொண்டாலும், அதை நாம்
அலோபதியுடன் எடுத்துக் கொள்ளும் போது இதன் பலனை எப்படி அறிய முடியும்.?
நம்பள்கி கொடுத்த லிங்கில் பலரும்
இதை அலோபதியுடனே எடுத்துக் கொள்வதாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். 3, 4 மாதம் எடுத்தும்
பலன் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனென்றால் ஆயுர்வேத மருந்துகள்
அலோபதி போன்று உடனடி நிவாரணம் தராது. ஒரு சில காலம் கழித்தே அதன் பலன் அறிய முடியும்.
இந்த மருந்தைத் தனியாக எடுத்துக் கொண்டு பலன் அறிய வேண்டும். அதுவும் முழுமையான பலனைக்
குறைந்த காலத்தில் அறிய முடியாது. அந்தச் சுட்டியில் 1000 பேருக்குப் பரிசோதனை செய்து
பலன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த ஆயிரம் பேரில் எத்தனை பேர் இன்சுலின் டிப்பெண்டன்ட்?
இதைப் பற்றிய தகவல்கள் இல்லை. பொதுவாக “நீரிழிவு நோயாளிகள்” என்று சொல்லிவிட முடியாது.
சிலர் பார்டரில் இருந்தால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மட்டுமே பரிந்துரைக்கப்படும்.
மட்டுமல்ல 1000 என்பது மிகவும்
குறைவு. நீரிழிவு நோயே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் இருக்கும் பொது மேற்கொண்ட பரிசோதனைகளை,
முடிவுகளை விவரமாக வெளியிட வேண்டும்.
இங்கு ஒரு சிறு உதாரணம். நான்
சென்ற 20 வருடங்களுக்கும் மேலாக நான் நீரிழிவு நோயாளி. மாத்திரை மட்டுமே. 10 வருடங்களுக்கு
முன் என் இடது கண்ணில் ஒரு மிகச் சிறிய புள்ளி போன்ற இடத்தில் மட்டும் சிறிது நிழல்
போல மறைக்கும். பரிசோதனையில் தெரிந்தது டயபட்டிக் ரெட்டினோபதி என்று. ரெட்டினாவைப் பாதிக்கவில்லை. பார்வையில் கோளாறு
இல்லை.
எப்படி இது? என் எல்லா சர்க்கரை
அளவும் மிகவும் கட்டுப்பாட்டிற்குள்தானே இருக்கிறது? என்று மருத்துவரிடம் வினவிய போது
அவர் சொன்னது இதுதான். நாம் என்ன 24 மணி நேரமுமா சர்க்கரை
அளவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்? எப்போது அது ஏறுகிறது என்று நமக்குத் தெரிய
வாய்ப்பில்லை. நாம் இடையிடையில் விருந்துச் சாப்பாடும், இனிப்புகளும் சாப்பிடுவது இல்லையா?
அப்படி ஏதேனும் ஒரு சமயத்தில் கண்ணைப் பாதித்திருக்கும் வாய்ப்பு உள்ளது. (இப்போது
மேலை நாடுகளில் நம் உடம்புடன் பொருத்தப்படும் கைக்கடிகாரம் போன்று சர்க்கரை மானிட்டர் வித விதமாக இருக்கிறது. அமெரிக்காவில்
உள்ள என் கசின் வாங்கித் தரட்டுமா என்றான்? அதை அணிந்து கொண்டு டென்ஷனுடன் அட போடா என்றுவிட்டேன்)
3 வருடங்களுக்கு முன்
எனக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு முன் எடுக்கப்பட்ட ரத்தத்தில் எனது சர்க்கரை மூன்று மாத ஆவரேஜ் "நான் டயபடிக் ரேஞ்சில்" இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும், எனது சர்க்கரை அளவு மருந்து இல்லாமலேயே அப்படித்தான் இருந்தது. இந்தப்
பரிசோதனைகள் தற்காலிகமானவையே. எனக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் இல்லை என்பது
ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டதே. நானும் கள்ளத்தனங்கள் செய்வதுண்டு. ஆனால், அதற்கு
ஏற்றபடி அன்றைய உணவு முறை உடற்பயிற்சி எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டுவிடுவேன்.
நான் என் அனுபவத்திலிருந்து அறிந்தது
என்னவென்றால், இது என்னையே நான் பல முறை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுச் சொல்வது.
என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும்,
மனதை அமைதியாக வைத்துக் கொண்டு உணவிலிருந்து, உடற் பயிற்சி வரை, ஸிஸ்டமாட்டிக்காக இருந்தால், குறித்துக் கொள்ளுங்கள் மிக மிக
ஒழுங்கு முறையுடன் கள்ளத்தனங்கள் இல்லாமல், (ஒரு சிலர் நன்றாக வளைத்துக் கட்டி இனிப்பு,
ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்)
இருந்தால் சர்க்கரை அளவை நன்றாகப் பராமரிக்க முடியும்.
நீரிழிவு
நோய் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே. கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், பிற நோய்கள் வராமல்
பார்த்துக் கொள்ளலாம். வாழ்க்கையைக் கட்டுப்பாட்டோடு அனுபவியுங்கள்!
------கீதா
படங்கள் இணையத்திலிருந்து. (நான் மருத்துவரும் அல்ல நிபுணியும் அல்ல. இந்தப் பதிவு என் அனுபவத்தில் அறிந்ததைப் பகிர்ந்துள்ளேன்.)
படங்கள் இணையத்திலிருந்து. (நான் மருத்துவரும் அல்ல நிபுணியும் அல்ல. இந்தப் பதிவு என் அனுபவத்தில் அறிந்ததைப் பகிர்ந்துள்ளேன்.)
தங்களது அனுபவத்திலிருந்து பலரும் பயன் பெறும் வகையில் விரிவான விடயங்கள் தந்து இருக்கின்றீர்கள் நன்று
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
நன்றி கில்லர்ஜி கருத்திற்கு.
நீக்குஎனக்கும் மெயிலிலிம்மாதிரி மருந்துகள் குறித்த குறிப்புகள் நிறையவே வருகின்றன அவற்றை எல்லாம் நான் பகிர்ந்து கொள்வதில்லை. முதலில் நான் நம்பவேண்டும் இருந்தால் அல்லவா பகிர. மேலும் எனக்கு இந்த ஆயுர் வேத முறைகளிலேயே நம்பிக்கை இல்லை. அவர்கள் எந்த பரிசோதனையும் செய்யாமல் மருந்துகளைப் பகிர்ந்துரைக்கின்றனர் அல்லோபதியில் மருத்துவர்களுக்கு உதவ பல பரிசோதனைகள் உண்டு. நாம் காணும் ஆயுர்வேத மருத்ட்க்ஹுவமே மருத்துவரின் திறனில் இருக்கிறது என் தந்தைக்கு நீரிழிவு நோய் இருந்தது. அவர் பரிசோதனைக்காக எங்களில் யாருடையதாவது சிறு நீரை கொடுத்துவிடுவார் ...! அவரையே அவர் ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார் ....!
பதிலளிநீக்குசார் நீங்கள் நம்பினால்தான் பகிர வேண்டும் என்றில்லை. எந்த ஃபார்மசிகாரருக்கும் ஒரு மருந்து எவ்வளவு வேலை செய்யும் என்று சரியாகச் சொல்ல முடியாது. எல்லாமே ட்ரையல் அண்ட் எரர் ப்ராசசில்தான் மார்க்கெட்டிற்கு வருகின்றன. ஒருவருக்கு ஒத்துக் கொள்ளும் ஒருவருக்கு ஒத்துக் கொள்ளாது. மருத்துவர்கள் தங்களிடம் வந்து மார்க்கெட் செய்யும் மெடிக்கல் ரெப்ரெசென்டேட்டிவ் குறிப்பிடும் மருந்துகளைத்தான் பரிந்துரைக்கிறார்கள் இதில் எத்தனை தில்லுமுல்லுக்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களும் நம்பித்தான் பரிந்துரைக்கின்றார்கள் என்று நினைக்கின்றீர்களா சார்?
நீக்குநீங்கள் எதற்கும் ஆதர்வும் தர வேண்டாம் எதிர்த்தும் எழுதாமல் ஜஸ்ட் லைக்தேட் இதுவும் இருக்கிறது என்று சொல்லலாமே.
உங்கள் அப்பாவைப் போல பல பெரியவர்கள் செய்து பார்த்ததுண்டு. ஏமாற்றிக் கொளல்..
மிக்க நன்றி சார்
ஹூம் என் கருத்தையும் எப்படிச் சொல்ல வேண்டும் என்று இன்னும் தெரியாமல் இருக்கிறேன்இப்படித்தான் இருக்க வேண்டும் என்றில்லையே உங்கள் கருத்து சரி இல்லையோ என்று தோன்றுகிறதுஜஸ்ட் லைக் தட் என்று சொல்லத் தெரியவில்லை.
நீக்குஉங்கள் கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டேன் என்று நினைக்கின்றேன் சார். நீங்கள் சொல்லுவதில் தவறு எதுவும் இல்லையே சார்.
நீக்குமிக்க நன்றி சார்
விரிவான தகவல்கள்! மூன்று மாத சர்க்கரை அளவு எனக்குக் குறைவாகவே இருந்தது. ஆனால் பிபி(சாப்பாடுக்குப் பின்னர்) சர்க்கரை அளவு கூடுதலாகக் காட்டியது! ஆகையால் மருத்துவர் மாத்திரை கொடுத்துவிட்டார். ஒரு வாரம் கழித்துப் பார்த்ததில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்து விட்டது. யோகாசனமும், நடைப்பயிற்சியும் செய்து வருகிறேன். ஜிடிடி பார்த்ததில் எனக்குச் சர்க்கரையே இல்லை என்று வந்தது! :(
பதிலளிநீக்குகீதாக்கா எல்லா பரிதோனைகளுமே 100% சரி என்று சொல்லுவதிற்கில்லை. ஹூமன் எரர் வருவதற்கு நிறையவே சான்ஸ் கள் இருக்கின்றன. இங்கு சென்னையில் சில பரிசோனை நிலையங்கள் ..அளிக்கும் ரிப்போர்ட்..ம்ம்ம் சொல்லுவதற்கில்லை பின்னூட்டம் ரொம்பவே பெரிதாகிவிடும்.
நீக்குஒரு வேளை உங்கள் சாப்பாடு இல்லை அன்று உங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் கூட காரணமாக இருக்கலாம். இல்லை பரிசோதனைச் சாலை. இன்னும் நம்மூரில் பல பரிசோதனை நிலையங்களிலும் எரர் வர சான்ஸ் இருக்கிறது அந்த அளவிற்கு அட்வான்ஸ்ட் எக்யுப்மென்ட்ஸ் வைத்துக் கொள்ளவில்லை.
ஜி டிடி ஆச்சர்யமாக இருக்கிறது. இல்லை என்றால் சாப்பாட்டிற்குப் பின் சர்க்கரை கூடியிருக்கக் கூடாது. எங்கேயோ பிசகல். அது சரி நீங்கள் எப்போது ஜிடிடி செய்து கொண்டீர்கள்?
மிக்க நன்றி கீதாக்கா
உங்கள் வயதையும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். ஒரு வயதிற்கு மேல் ப்ரிஸ்க் வாக்கிங்க், கடுமையான யோகாசனங்கள் அதாவது நம் கலோரி பர்ன் செய்யும் அளவிற்கான ஆசனங்கள் செய்ய முடியாது. எனவே அதற்கு ஏற்றாற் போல உணவுப் பழக்கத்தைக் கொள்ள வேண்டும் என்றுதான் மருத்துவ உலகம் சொல்லுகிறது...
நீக்குநல்லதொரு ஆலோசனை கட்டுரை! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் கருத்திற்கு.
நீக்குவிரிவான மிகுந்த அக்கறையுடன்
பதிலளிநீக்குஅனைவருக்கும் உதவும்படியான பதிவினை
பகிர்தமைக்கும் தங்களுக்கும்
பதிவனைத் தந்த
கீதா மேடம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
மிக்க நன்றி ரமணி சார். கருத்திற்கு
நீக்குநல்லதொரு பகிர்வு. அனுபவத்திலிருந்து சொல்லியிருப்பதால் இன்னும் பலம் கூடுகிறது.
பதிலளிநீக்குதம +1 !!!
மிக்க நன்றி ஸ்ரீராம். ஆனால், என்னதான் அனுபவத்திலிருந்து என்றாலும் மருத்துவம் பற்றி எழுதும் போது நாம் லே பெர்சன் தான். டாக்டர் நம்பள்கி முன்பெல்லாம் மருத்துவக் கட்டுரை எழுதிய போது வந்து பாராட்டி அல்லது கருத்துகள் அவரது கருத்துகள் தவறு அல்லது சரி என்று சொல்லிவிட்டுப் போவார். நான் மருத்துவக் கட்டுரைக்கேனும் அவர் கருத்திட்டால் நன்றாக இருக்குமே நாமும் தெரிந்து கொள்ளலாமே தவறு இருந்தால் திருத்திக் கொள்ளலாமே என்று நினைப்பதுண்டு. இன்றும் நினைத்தேன்...
நீக்குநல்ல அலசல் கட்டுரை !இதற்கு மதுரை தமிழன் பதில் தருவாரா :)
பதிலளிநீக்குபகவான் ஜி முதலில் மதுரைத்தமிழனின் பதிவிற்கு எதிர்க்கருத்துடையது அல்ல. அவரும் அந்த மருந்தை அறிமுகம் என்று வந்திருப்பதைத் தெரிவித்திருந்தாரே அல்லாமல் த்னது கருத்து எதையும் முன்வைக்கவில்லை மட்டுமல்ல தான் அதை இன்னும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்லியிருந்தார். எனவே அவர் இதற்குப் பதில் தரும் அவசியம் இல்லையே ஜி. இது எனது கருத்துகள் மட்டுமே ஜி. நான் இதைக் குறித்துப் பதிவு போடுகின்றேன் என்று அவருக்குக் கொடுத்த பின்னூட்டத்திலேயே சொல்லியிருந்தேன்.
நீக்குஅவர் பயணத்தில் இருக்கிறார். மிக்க நன்றி பகவான்ஜி
பயனுள்ள பதிவு சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
மிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு
நீக்குநல்ல தகவல் ... நன்றிங்கமா
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீ கருத்திற்கு
நீக்குஎப்படியோ...
பதிலளிநீக்குஎனக்கு பர்சனலா தேவைப் படும் பதிவு
நன்றி
உங்களுக்குத் தேவைப்படும் பதிவா மிக்க நன்றி மலர்...
நீக்குமுதலில் உங்கள் பதிவின் தலைப்பே வேறுவிதமான அர்த்தத்தைக் கொடுக்கிறதோ என்று தோன்றுகிறது. நீரிழிவு நோயைத் தடுக்கும் என்று போட்டிருக்கலாம். எதிரான என்றால் anti என்பதற்கு பதில் against என்கிற பொருள் கிடைக்கிறது. anti-diabetic என்றால் நீரிழிவு நோயைத் தடுக்கும் என்று தானே பொருள். எதிரான என்ற பொருள் வராதே. ஆங்கிலத்தில் சரியான பொருள் வருகிறது. தமிழில் அப்படியில்லையே. இது என் தாழ்மையான கருத்து. தவறாக எண்ணவேண்டாம்.
பதிலளிநீக்குஎல்லா நீரிழிவு நோயாளிகளின் உடல்தன்மை ஒரேபோல இருப்பதில்லை.வேறுபடுகிறது. அதுபோல சிலருக்கு அலோபதி சரியாக இருக்கும். சிலருக்கு ஆயுர்வேதம். மாற்று மருந்துகளில் அலோபதி அளவிற்கு ஆராய்ச்சிகள் குறைவு என்று தோன்றுகிறது. அதனால் அவற்றை பயன்படுத்த தயக்கமாக இருக்கிறது.
மாவுச்சத்து அதிகம் இருக்கும் தானிய உணவுகளை நன்றாகக் குறைத்து (ஒரு கரண்டி சாதம் நிறைய காய்கறிகள் என்று சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்) நம்மைப் போல சாதமே மூன்று வேளையும் சாப்பிடுபவர்களுக்குத் தான் சர்க்கரை நோய் வருகிறது. கோதுமையும் அரிசியும் ஒரே அளவு தான் மாவுச்சத்து அடக்கத்தில். ஒரு இட்லி/ அரை கிலோ காய்கறி போட்டு கூட்டு/பொரியல்/குருமா போல செய்துக்கொடுங்கள் என்று எங்கள் டாக்டர் கூறுகிறார். சர்க்கரை, வெல்லம், தேன், பழங்கள் என்று சர்க்கரை எந்த வடிவிலும் சேர்க்கக்கூடாது என்கிறார். சர்க்கரை இருப்பவர்களுக்கு சாப்பாடு பிரச்னை தான். அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் 'போய்விட' வேண்டும் என்பவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். கள்ளத்தனம் செய்வதனால் வரும் வேதனையை அவர்கள் மட்டுமின்று நெருங்கிய உறவினர்களும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டால் கள்ளத்தனம் செய்யத் தோன்றாது.
ரஞ்சனி அக்கா ஆம் நீங்கள் சொன்னதும்தான் அது உரைத்தது. மாற்றிவிட்டேன் தலைப்பை. புரிந்தது. இதை எப்படித் தவறாக நினைப்பேன். நல்ல விஷயம் ஆயிற்றே. இது போன்று சில அல்ல பல சமயங்களில் ஏற்படுகிறது. பொதுவாக மொழி பெயர்க்கும் பொது தமிழ் க்யூபில் சென்று அர்த்தம் பல அர்த்தங்களைப் பார்த்து எது பொருந்துகிறதோ அதைத்தான் போடுவது வழக்கம். இது என் மூளைக்கு உரைக்காமல் போனது.( மூளையைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருப்பதாலோ ஹிஹிஹிஹி அப்ப்டி ஒரு மொக்கைப் பதிவு போட்டிருந்தேன்...)
நீக்குமிக்க நன்றி அக்கா தவறைச் சுட்டிக் காட்டியதற்கு.
//அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் 'போய்விட' வேண்டும் என்பவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். கள்ளத்தனம் செய்வதனால் வரும் வேதனையை அவர்கள் மட்டுமின்று நெருங்கிய உறவினர்களும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டால் கள்ளத்தனம் செய்யத் தோன்றாது.// மிக மிக உண்மை. அதனால்தான் நான் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கின்றேன். அதற்கும் மீறி வந்தால் ம்ம் ஒன்றும் செய்ய இயலாது. மிக அழகான கருத்துரை. மிக்க மிக்க நன்றி...
>>> நீரிழிவு நோய் என்பது நோயல்ல. ஒரு குறைபாடு தான்!..<<<
பதிலளிநீக்குஆனாலும், மருத்துவ செய்திகளைத் தாங்கி வரும் ஊடகங்கள் செய்யும் அலம்பல்கள் - அடேங்கப்பா!..
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நானும் இதனால் தாக்குண்டேன்..
காலை நேர உணவைத் தவிர்த்த காரணத்தால் ஏற்பட்ட கோளாறு..
சித்த மருத்துவம் என்னை கைதூக்கி விட்டது..
இப்போது உடல் நலம் சீராக இருக்கின்றது..
ஆமாம் ஐயா பயமுறுத்தல்கள் அதிகம்தான். நாம் நமது உடலைக் கணித்து அதர்கு ஏற்றாற் போல் ஒழுந்துமுறைகளைக் கையாண்டாலே போதும் ஐயா. ஆம் காலை நேர உணவைத் தவிர்க்கக் கூடாது.
நீக்குஓ சித்த மருத்துவம் பயனளித்ததா...மிக அருமை.. மகிழ்ச்சி ஐயா...
என் மகன் மிகவும் விரும்பித் தேடித் தேடி போகர் 7000 நூலை இணையத்திலிருந்து தரவிறக்கி வைத்திருக்கிறான். சித்த மருத்துவத்தில் நிறைய தீர்வுகள் உள்ளதாகத் தெரிகிறது ஆனால் அவை பல ரகசியங்களாகவே இருக்கின்றன.
நல்ல சித்த மருத்துவர் அமைந்தால் நல்லதே ஐயா..
வெந்தததை தின்று விதி வந்தால் சாவது என்ற மனநிலையில் இருக்கும்எனக்கு பதிவில் கூறப்பட்டு இருப்பவையெல்லாம் சிஜீப்பி.........
பதிலளிநீக்குமிக்க நன்றி வலிப்போக்கன் தங்கள் கருத்திற்கு
நீக்குநல்லதோர் அனுபவப் பகிர்வு.....
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குமருத்துவ ஆலோசனைகள் நோயாளியைப் பார்க்காமல் கொடுப்பது சரியில்லை என்பது என் கருத்து! Because there is a phenomenon called Idiosyncrasy, I am little cautious. பொதுவாக நீரிழிவு பற்றியும், உணவு முறை பற்றியும் எழதலாம். இரண்டு பகுதிகளாக எழுதாலம்: அதுவும் பொதுவாக நீரிழிவு பற்றி என் opinions...ஏன் ஆயுர்வேதத்தை நான் நம்புவதில்லை என்றும், உணவே மருந்து, உணவே விஷம் என்றும் இரு பகுதிகளாக எழுதலாம். முயற்சி செய்கிறேன்!
பதிலளிநீக்குஇதை இதைத்தான் எதிர்ப்பார்த்தோம் நம்பள்கி!!!! ஆம் நம்பள்கி சரிதான். உங்கள் முதல் வரியின் கருத்தை என் பதிவில் கடைசிப் பாராவில் சேர்த்திருந்தேன், என் அனுபவத்திலிருந்துதான் எழுதியிருந்ததால் அந்த வரியைச் சேர்த்திருந்தேன். காப்பி பேஸ்ட் செய்யும் போது விடுபட்டிருக்கிறதை இப்போதுதான் பார்த்தேன். உங்கள் கருத்தைக் கண்டதும்...
நீக்குஎழுதுங்கள் நம்பள்கி அதைத்தான் எதிர்ப்பார்க்கின்றோம். மிக்க நன்றி நம்பள்கி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
நீரிழிவுக்கு எந்த மருந்தும் வரலாம்
பதிலளிநீக்குஉடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் என்ற
மருந்தே சிறந்தது - ஏனையவை
அதற்குத் துணையாகலாம்!
மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு
நீக்குபயனுள்ள விஷயங்கள். நன்றி
பதிலளிநீக்குமிக மிக அருமையான கட்டுரை.
பதிலளிநீக்குஎனக்கும் 11 வருடங்களாக மாத்திரைகளில் வண்டி ஓடுகிறது.
பசி வரும் வேளையில் சாப்பிட்டு விடவேண்டும். அப்பொழுது தப்பித் தவறி வீட்டில் இருக்கும் பிஸ்கட்,இல்லை மிக நல்ல ஸ்விஸ் சாக்லட் கண்ணில் பட்டால் போச்சு. மனம் தடுமாறிவிடும்.
காய்கறிகாளில் உ.கிழங்கு ஒத்துக் கொள்வதே இல்லை. அமெரிக்க வைத்தியர் வாழைப்பழம் ஆப்பிள் எல்லாம் சாப்பிடுங்கள் என்கிறார். நம் வைத்தியரோ பப்பாளியுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் என்கிறார்.
முற்பிறவியில் யாரைப் பட்டினி போட்டேனோ இப்போது இந்த அளவு கட்டுப்பாடு வந்திருக்கிறது.
பல பயணம் மேற்கொள்ளும்போது மருந்துக்குத்தான் முக்கியத்துவம்.
இருக்கும் வரை குழந்தைகளுக்குத் தொந்தரவு இல்லாமல் இருக்கணும்.
உங்கள் கட்டுரைக்கு மிக நன்றி. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி வல்லிம்மா....ஆமாம் அமெரிக்க வைத்தியர்கள், மேலை நாட்டு மருத்துவர்கள் சொல்லுவதும் இங்குள்ளவர்கள் சொல்லுவதும் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை அது வாழ்க்கை முறை கால நிலை மாற்றங்களினால் இருக்குமோ தெரியவில்லை. ஆனால் நான் இனிப்புகளைக் கூட தவிர்த்துவிடுவேன் ஆனால் பழங்களை மட்டும் தவிர்ப்பதில்லை,,,தவிர்க்க முடியவும் இல்லை...
நீக்குநீங்கள் சொல்லுவது சரிதான் பயணம் மேற்கொள்ளும் போது மருந்த்துக்குத்தான் முக்கியம்...
மிக்க நன்றிம்மா..
அருமையான அலசல்கள்! நானும் நீரிழிவைப்பற்றி சென்ற வருடம் 4 பகுதிகள் என் வலைத்தளத்தில் எழுதினேன்.
பதிலளிநீக்குஒரு முறை சிறுநீரகத்தொந்தரவிற்காக அதற்கான மருத்துவரை சென்று பார்த்தபோது அவர் கேட்ட முதல் கேள்வியே நீங்கள் ஆயுர்வேதம் அல்லது சித்தா மருந்துகள் எடுத்துக்கொண்டீர்களா என்பது தான்! நான் அதற்கு முன் ஒரு வருடம் இதய படபடப்பிற்காக சித்த மருந்துந்துகளை உட்கொண்டிருந்திருக்கிறேன். அந்த விபரம் சொன்னதும் மருத்துவர் சொன்னார், ' பொதுவாய் சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் மிக நுண்ணிய அளவில் துத்தநாகம், தாமிரம், செம்பு கலப்பார்கள். அவை சீரணீக்கப்படாது சிறுநீர்த்தாரையில் மெல்லிய மணல் போல படிந்து கடைசியில் அந்தப்பாதையையே அடைத்து விடும். பொதுவாய் சித்த ஆயுர்வேத மருந்துகள் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மேல் எடுக்கக்கூடாது' என்றார். இதை நான் தொடர்ந்து கவனத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன்.
பொதுவாய் மெட்ஃஃபோர்மின் மாத்திரைகள் அனைத்துமே வயிற்றுக்கோளாறுகளை வரவழைப்பவை தான். என்ன, கொஞ்சம் குறைச்சல் அல்லது கொஞ்சம் அதிகம் என்பது தான். இதையும் ஒரு பிரபல இதய மருத்துவ நிபுணர் தான் என்னிடம் சொன்னார்.
சமீபத்தில் ஒரு ஆயுர்வேத மருத்துவ நண்பர் வயிற்றுக்கோளாறுகளுக்கு 'கரிசாலை கற்பம் ' என்ற சித்த மருந்தை [ மாத்திரைகளை] தினமும் இரு வேளை எடுத்துக்கொள்ள சொன்னார். கரிசலாங்கண்ணி மற்றும் பல மூலிகைகளால் உருவாக்கப்பட்ட இந்த மருந்து கல்லீரலையும் கணையத்தையும் பாதுகாப்பதோடு அதன் செயல்திறனை அதிகரிக்கும் என்றார். இந்த மருந்து சாப்பிடத்தொடங்கி 20 நாட்களில் எனக்கு சர்க்கரை குறைய ஆரம்பித்தது. மேலும் சர்க்கரை குறைய ஆரம்பித்ததால் இப்போதைக்கு மருந்தை நிறுத்தி விட்டேன். இப்போது அலோபதி மருந்தை குறைவாகத்தான் எடுக்கிறேன். [500mg]
இதில் எந்த வித உலோகமும் கலக்கவில்லை என்று நண்பர் உறுதியாகச் சொன்னார்.
இன்னொரு பெரியவர்[ சித்தா ஹெர்பல் மருத்துவர்] சொன்னார், பொதுவாய் தோசை சாப்பிடுவது நல்லதில்லை என்று! அவர் சொன்ன காரணம் அசத்தலாக இருந்தது! அவர் சொன்னார்' பொதுவாய் தோசை சுடுவதற்கு நீங்கள் அதிகமான தீயைத்தான் உபயோகிக்க வேண்டும். அது எண்ணெயில் வறுப்பதற்கு சமம். இப்படி சுடும் தோசை உங்கள் சர்க்கரையை மிகவும் அதிகரிக்கும் 'என்றார். இன்னொன்றும் இருக்கிறது. தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியோ அல்லது சாம்பாரோ உபயோகித்தால் நிச்சயம் சர்க்கரை அதிகமாகும். அதுவே இட்லிப்பொடியோ அல்லது தக்காளி சட்னி என்றால் சர்க்கரை அதிகரிக்காது!